- ஜீவ கரிகாலன்
அந்த யானைப் படம் போட்ட புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு 10 மணிக்கு உண்ட உணவு செரிக்கும் வரை வாசித்து வருவான் என் தம்பி ஒருவன். அவனிடமிருந்து மற்ற தம்பிகளும் அதை உருட்ட ஆரம்பித்தனர், என்னடா சும்மா சும்மா ஒரு புக்கை கையிலெடுத்துப் படிக்கிறிங்க என்று கேட்டால் அதற்கு பதிலாக ஒரு நாள் “உங்க நண்பர் வா.மவும் அதைப் பத்தி தான் இன்னிக்கு ப்ளாக் எழுதியிருக்கிறார்” என்று சொன்ன பின்பு தான் அந்த ஆறெழுத்து வார்த்தை மனதில் நின்றது. “Hadoop”, இந்த சொல் தினமும் டி.எல்.அஃப் பார்க்கை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் நிறைய போஸ்டர்களைப் பார்த்ததுண்டு, இதைப் படித்தால் உடனே வேலை என்று கோச்சிங் சென்டர்கள் பிளிறிக் கொண்டிருக்கின்றன. எனது ஃபேஸ்புக்கிலும், ஈமெயிலிலும் கூட விளம்பரம் வந்து கொண்டிருக்கின்றன மானாவாரியாய்.
ஆனால், எனக்கும் வேறு சில நண்பர்கள் இருக்கின்றார்கள், முழுநேரம் விவசாயமும், சில்லறை வணிகமும் செய்யும் நண்பனின் வீட்டிற்கு சென்ற பொழுது, புது சிஸ்டமென்று ( Assembled PC) ஒன்றைக் காட்டியபோது சற்று மிரண்டு தான் போனேன். அவனிடம் கேட்டதற்கு, “இருந்தாலும் பழசுன்னா அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா, ஆளாளுக்கு எத்தனை FLOPPY வாங்கி வச்சுருப்போம். நான் இன்னுங்கூட எல்லாத்தையும் பத்திரமா வச்சுருக்கேன்” என்று புதிதாய் வாங்கிய கம்ப்யூட்டரில் நச்சரித்து வாங்கிய FLOPPY DRIVEனையும் காண்பிக்கும் போது அவை ஓட்டைக் காலணவுக்கான முன்னோர்களின் பெருமிதமாய் இருந்தது. இவனைக் குற்றம் சொல்லவில்லை, நான் வேலை செய்யும் நிறுவன்ம் மத்திய அரசாங்கத்தின் கலால் மற்றும் சுங்க அலுவலகங்களோடு தொடர்புடையது 2012 வரை FLOPPY பயன்பாட்டில் இருந்தது என்பது எத்தனை பேருக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது இப்போது என்னால். ஏதோ முந்தைய தலைமுறை ஆளினைப் போல் என் நண்பன் கண் முன்னே தோன்றினான்.
இத்தனை வேகமாக தன் தோலினை சட்டையாக உரித்துவிடும் சர்பமாக உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இழப்பதன் மதிப்பீடுகள் குறித்துக் கவலை கொள்வாரில்லை. ஸ்மார்ட் போனுக்கு மாறாதவர்கள் வேற்று கிரக வாசிகளாகத் தான் பார்க்கப்படுகிறார்கள். இன்னுமாடா நீ வாட்ஸப்பிலில்லை என்று சென்ற தீபாவளி வரை என்னை எத்தனை பேர் வெறுப்பேற்றி இருந்தனர் என்பது திரிபுர சுந்தரியின் (மிஸஸ் .காமேஸ்வரன்) மளிகைக் கடை லிஸ்ட் போல் மிகப் பெரியது. “ஃபாக்ஸ்புரோ” கோர்ஸ் முடித்து விட்டதற்காக மிகப்பெரிய ட்ரீட் கொடுத்த என் நண்பன், அதை உபயோகப் படுத்த முடியவில்லையே என்று மிகவும் வேதனையுடன் வருத்தப்பட்டப் பொழுது நான் சிரிப்பது குரூரமாய் எனக்குத் தெரியவில்லை.
மாட்டுக்கறி குறித்த செய்திப் பரபரப்பில், மாடுகளுக்கு பதிலாக ஆஜராகி வாதாடிக் கொண்டிருப்பவர்களில் அநேகம் பேர் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது அதனை ஆதரித்தவர்கள் தான் என்பதில் சமூல/அரசியல்/வியாபாரக் கணக்கு ஒன்று உண்டு. ஜல்லிக்கட்டுத் தடை உறுதி செய்யப்பட்ட நேரத்திலேயே வீரமாக சாதிப்பெயர் சொல்லி அழைக்கப்படும் காளைகளும், அவர்களின் முதலாளிகளும் உடனடியாக தங்களுக்கிடையான சிலவாயிரமாண்டு பந்தத்தை உடனேயே முடித்துக் கொண்டு, கேரளாவுக்கு லாரிகளில் ஏற்றிய சம்பவங்கள் பற்றிக் கேள்வி பட்ட போது இருந்த வலி இன்னும் நினைவில் இருக்கிறது. எத்தனை பிசகான அளவீடுகள் நம்மிடம் இருக்கின்றன. அரசும், சட்டமும் கூட வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்குமளவுப் பழக்கப்பட்டிருந்த யானைகளை காட்டு விலங்கு என்கிற பட்டியலில் இருந்து நீக்கியும், காளைகளை அந்தப் பட்டியலிலிருந்து நீக்காமல் வைத்திருப்பதனாலேயே அதனைத் துன்புறுத்துவது (ஜல்லிக்கட்டு எனும் பெயரில்) சட்டப்படிக் குற்றமாகி விடுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் ஏதாவது ஒரு இடத்திலாவது ஜல்லிக்கட்டு நிகழ்ந்திருந்தால் இன்றளவும் அந்த வழக்குகள் ஒரு முடிவை நோக்கி சென்றிருக்காது தானே.
சோழ மண்டலத்தில் முரளிதரன் அழகர் வைத்திருந்த அவரது தனிநபர் கண்காட்சி அந்த மதிப்பீடுகளின் பிரதிபலிப்பு தான். சின்னாளப்பட்டியைச் சேர்ந்த இம்மனிதர் மதுரை பாஷையை விழுங்கி மறைத்துக் கொண்டு வரவேற்றுப் பேசினார். வெவ்வேறு வகையான காளைகளில் இருக்கும் வித்தியாசங்களையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருந்த முரளியின் draughtmanship, “அவ்ய்ங்க” என்று சொல்வதற்கும் முன்பாகவே அவர் மதுரைக்காரர் தான் என்று முடிவெடுக்க உதவி புரிந்தது.
“THE GAME BEGINS” என்கிற டைட்டில் கொடுக்கின்ற உற்சாகத்திற்கு எதிரான மனநிலையில் தான் அரங்கத்திற்குள்ளேயே செல்ல முடிந்தது. அரங்கின் வெளியேவே இந்த CONCEPTUAL வேலைப்பாடுகள் பற்றிய போஸ்டரில், “ஜல்லிக்கட்டு நின்று போன பின்பு” என்கிற வாசகம், சட்டத்தின் வழிகாட்டுதலால் வரலாற்றில் நிகழ்ந்தஅந்த மிக மோசமான முன்னுதாரங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடை என்கிற நினைவின் வலி – தலைப்பிற்கான முரண்பாடு தான்.
ஆனால் முரளி, அங்கு வந்திருந்த பல நண்பர்களுக்கு ஜல்லிக்கட்டு நின்று போனதே தெரியாது என்று சொன்னதன் ஆச்சரியம் எனக்கு TRANSFORM ஆகவில்லை, வானகத்திற்கு அடுத்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்த என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பனொருவன் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவனாயிருந்தும், வானகத்தில் அத்தனை சாதனைகள் செய்து வந்த நம்மாழ்வாரை யாரென்று அறிந்திடாத வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறான் என்பதும், அவன் இயல்பாகத் தான் இருக்கிறான் என்பதும் அவனைத் தேடி வரும் செய்திகள் அவனுக்கு CUSTOMIZE செய்யப்பட்டு தான் அவனைச் சென்றடைகின்றன என்று சமூக அமைப்பினை, STRUCTURALஆகவே விளக்கிட நேரம் கூடிவரவில்லை. ஆனால் அந்தக் கண்காட்சிக்கு வந்திருக்கும் பல வெளிநாட்டினரும் “ஜல்லிக்கட்டுத் தடையை” நன்றாக அறிந்திருக்கின்றனர் என்று சொல்லும் போது அவர்கள் இந்திய ஆட்டோக்காரர்களின் மனநிலையைத் தவிர எல்லாவற்றையும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல வந்தும் சொல்லாமலிருந்தேன்.
வாட்டர் கலர் & சார் கோல், அக்ரலிக், மிக்ஸ்ட் மீடியா என்று ஜல்லிக்கட்டினை ஆவனப்படுத்தியிருக்கும் முரளி – சிலவற்றில் செய்திருக்கும் DRIPPING முயற்சிகளின் OUTCOME நன்றாக இருந்தது. அதில் இரண்டு அக்ரலிக் ஓவியங்கள் மட்டும் ஜல்லிக்கட்டுக் காட்சிகளாக அல்லாமல் மனித உடலும் காளையின் தலையுமாக இருந்ததை அவள் பார்வையாளர் ஒருவரோடு விளக்கிக் கொண்டிருக்கையில், PERSONIFIED என்று சொன்னதும், காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 2014க்குப் பின்பான அவரது படைப்புகளில் ஏதேனும் ஒன்றின் இருந்து அரசியலை எடுத்துக் கொள்ள முடிகிறதா என்று கவனித்தேன். அந்த வாய்ப்பினை காவியும் வெண்மையும் பின்புலத்தில் ஆக இருக்கும்படி வரைந்த ஓவியத்தைத் தெரிவு செய்தது. இத்தகைய CONCEPTUAL PRESENTATIONகளில் படைப்பாளி அவன் நம்புகின்ற அரசியலைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஒன்று வந்துவிடுகிறது. பசுவும், காளையும் தான் கவலைக்குரிய இனங்கள் என்கிற கற்பிதங்கள் ஒருபுறமிருக்க, எங்கள் ஊரூக்கு அருகிலுள்ள ஏதோ ஒரு கோயிலில் ஆயிரக்கணக்கான எருமைக் கிடாக்களை வெட்டி இறைச்சிக்குக் கூடப் பயன்படுத்தாமல் செய்யும் சடங்குகளுக்குப் பின்புலமாக, அதாவது ECOLOGICAL BALANCE முயற்சியாக அறிவியல் பூர்வமாக வாய்ப்பிருக்கின்ற போதும். இன்றையத் தேவை என்ன என்பதே நமக்கிருக்கும் TOP PRIORITY கேள்வி.
இனி இது போன்ற கண்காட்சிகளில் தான் இவற்றைக் காண முடியும் என்று உணர்த்திய முரளியிடம் விடைபெற்றுச் செல்லும்போது, ஓவியரும் நண்பருமான சீனிவான் ஜி அவர்களின் கருத்துகளை கண்ணதாசனோடு பரிமாறிக் கொண்டே அவனோடு பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.
TRADITIONAL DATA என்று பலவற்றிட்கும் EXPIRY கொடுத்த BIGDATA போன்ற அதிநவீனத் தொழிற்நுட்பங்கள் வழியாக இந்தியாவில் கட்டடக் கலை, கவின்கலைகள், அழிந்து கொண்டிருக்கும் எல்லா கலாச்சார, பண்பாட்டு அம்சங்களையும் இந்த தொழிற்நுட்பங்கள் வழியே பதிவு செய்யவேண்டுமென்கிற அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் கருத்துகள் அவை. கலை கலைக்கானது என்று தன்னுள்ளேயிருந்து சொல்லும் கலைஞன் காலத்தில் எத்தனை முன்னோடியாகவும், மக்களுக்குச் செயல்படுபவனாகவும் இருக்கிறான் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.ஆனால் HADOOP போன்ற தொழிற்நுட்பங்கள் வெறுமனே தகவல் தொழில்நுட்பப் புரட்சியன்று என்றும் அதற்கான பல்வேறு வகையான பயன்பாடுகளை அவர் பட்டியலிட்டது நம்பிக்கை தரும் நாளாகத் தான் இருந்தது. அவர் சொல்வது போல ஜல்லிக்கட்டினை வேறு மாதிரியான இன்ஸ்டலேஷன்களில் காட்சிப்படுத்த முடியும் என்று மனதில் தோன்றியது (Facebookஆல் மட்டுமே நிறைய VISITORS சோழமண்டலத்திற்கு முதன்முறையாக வந்துசென்றது எல்லாம் டிஜிட்டலால் சாத்தியமானவையே).
அயற்சியின் மிகுதியில் சீக்கிரமாகவே இரவில் படுக்கச் சென்று கண் மூடிய அடுத்த நிமிடமே ஜல்லிக்கட்டுக் காளையின் பெருமூச்சு சப்தமும் அவற்றை லாரிக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கும் கிழிந்த ட்ரவுசர் க்ளீனரின் முகமும் கண்களில் தோன்றியது. இது நான் பார்ப்பதா அல்லது என் நண்பர் காட்டிக் கொண்டிருக்கும் LASER BEAM DOCUMENTARYஆ என்று உறுதியாகத் தெரியவில்லை, இந்த குழப்பங்களெல்லாம் காளிதாசனின் கனவிற்குள் இன்னொரு கனவு கண்டுகொண்டிருக்கும் ஜீவ கரிகாலனின் கனவு தான். காளிதாசனுக்கு எந்தச் சிக்கலும் இல்லை ஏனென்றால் அவனுக்கு HADOOP பற்றி ஒன்றும் தெரியாது.
(yaavarum.com வலைதளத்திலிருந்து - யாழி பேசுகிறது பாகம் 10)
நன்றி
ஜீவ கரிகாலன்