வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பஜ்ஜி -சொஜ்ஜி 81- மிச்சம் வைக்கப் பிடித்திருக்கிறது.




சென்ற சனிக்கிழமை மாலை உருவாக்கித் தந்த அற்புத வாய்ப்பினால் நிகழ்ந்த அப்பயணம் ஒன்றில் மனிதர்களை வைத்து அனுபவத்தின் வழியே கோட்பாடுகளை INSTALLATION செய்யும் ஒரு கலைஞனைப் பற்றி அறிவதற்கு மேலும் ஒரு பெரிய வாய்ப்பு கிட்டியதை ஹைவேயில் இருக்கும் அந்த ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி – ஒன்லி காஃபி மேல் சத்தியம் செய்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

இப்படியாக ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் போதே மிஸ்டர் வேல்கண்ணன் அவர்கள் முதல் பத்தியிலேயே கோபம் கொண்டு வாசிக்காமல் போய்விடுவார் என்று நம்பியபடி இவ்வரிகளைத் தொடர்கிறேன். ஆம் இந்தப் பயணம் வேல்கண்ணனுக்கானது. அவ்வாறே இது எனக்கானதாகவும், எல்லோருக்குமானதாகவும் இருந்தது, ஒருவரைத் தவிர.

இன்னும் நிராகரிக்கப்படாத படைப்புகளை ட்ரெங்குப் பெட்டியில் போட்டு வைத்துக் கொண்டு, தர தரவென இழுத்துச் சென்று கொண்டிருக்கும் எனக்கு இது போன்ற கரிசனமான வாய்ப்புகள் இன்னும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதில் ஒரு நிம்மதி. காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்று சொல்வதைப் போலே காலம் என்பதே ஒரு வாய்ப்பு தான் என்று கருதுவதும் உண்மையானதே.

காலையில் தனியாக ஒரு அறுபது கிலோ மீட்டர் தந்த உற்சாகம் இல்லாதிருந்தால், அப்போது உண்ட உணவுக்கு மரியாதை கொடுத்து தூங்கச் சென்றிருக்கலாம். ஆனால் அதிகாலை தனியாகவேனும்  மாமல்லை போகவேண்டும் என்று தீர்மானித்து தான் கூடுதலாக ஒரு சட்டை ஒன்று எடுத்து வைத்திருந்தேன். ஃபலூடாவை சாப்பிடுவதற்கு அலுத்துக் கொண்டிருந்த க்ருஷ்ணப் பிரபுவோடு விளையாடிப் பார்க்கலாமே என்று தான் விளையாட்டாகக் கேட்டேன்.

“ஜீ போலாமா”
“நீங்க பைக்க நிறுத்திட்டு, நடந்து வாங்க நாங்க வெயிட் பண்றோம்”

திட்டம், ஆலோசனை, ஐடனரி, பவர் பாய்ண்ட் பிரசண்டேசன் எல்லாமுமே பயணத்துக்கானவை தான். ஆனால் பயணம் இவைகளால் தீர்மானிக்கப்படுபவையல்ல. அவருடன் ஆரம்பித்த எங்கள் பயணம் சௌகரியமாகத் தான் தொடங்கியிருந்தது, கால்நடையாகவே தன் சௌகரியங்களை இழப்பதில் வருத்தமேதுமில்லாமல் இலக்கியத்தின் பிடிமானங்களில் இருக்கும் துருக்களில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருப்பதை FUNஆகவும் செய்யாமல், பிரதிபலனும் எதிர்பார்க்காத உயிரி ஒன்றுடனும், அநேகமாக இன்னும் பத்தாண்டுகளுக்குள் 296 பருத்திவீரர்களாலும், தாமதமாய் எங்களுடன் வந்து சேர்ந்த அசல் பருத்திவீரன் ஒருவனாலும் அதிகம் வெறுக்கப் படப்போகின்ற வேல்கண்ணனுடனும் பயணம் தொடங்கியிருந்தது சௌகரியம் தான்.

புன்னகைகளும், லேசான ‘களுக்’ சிரிப்புமாய் மட்டுமே இருந்து கொண்டிருந்த அந்த ஓ.எம்.ஆர் பயணம் மாமல்லையை நோக்கித் தான் என நானும் அது வரை நம்பிக்கொண்டிருந்தேன். வெண்டோவின் ஸ்டியரிங்கைப் போலவே.

ரமேஷ் ரக்சனின் நினைவு வந்த கணம் – யூ டர்ன் அடித்திருந்தோம், யூகித்து வைத்த ஒரு மணி நேர கால் டாக்ஸி பயணத்திற்கு தோதாக, பங்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய மண்மேட்டில் ஒதுங்கிக் கொண்டோம். க்ருஷ்ணப் பிரபுவுடன் நான் அப்போது பேசிய ஒரு விஷயம் தான் முதல் பத்தியாக மாறும் என்பதை உணரும்போது ஃபேஸ்புக்கின் விநோத ஸ்டிக்கர் கமெண்டுகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

தொடங்கினால் முடிக்கத் தெரியாத ரமேஷ் எனும் பாலகன், சிக்னலைத் தாண்டுவதற்கு எங்கள் நால்வரையும் ஏக காலத்தில் வைய ஆரம்பித்திருந்தான். மாமல்லை என்றால் அர்ஜுனன் தபசு மட்டுமே இருக்கிறது என்று அறிந்திருந்த ரமேஷ், கூகிளில் சென்று கடற்கரைக் கோயிலைத் தேடப் போவதில்லை என்பதும் சாஸ்வதம். ஒருவேளை துரிதமாக கிழக்குக்கடற்கரைச் சாலை சரிசெய்யப்படிருந்தால் மாமல்லையைத் தாண்டி பாண்டிச்சேரிக்கே சென்றிருக்கலாம். ஆனால் ஓ.எம்.ஆரில் சென்று கொண்டிருந்த எங்களுக்கு ஹைவேயில் உள்ளே ஏதேனும் ஒரு கும்பகோணம் காபி கடை போதுமானதாக இருந்தது. மழை சற்றே தூரத் தொடங்கியிருந்த கணத்திலே அது உத்திரமேரூராக மாறியிருந்தது. அதிகாலைக்குள் வேல்கண்ணனையும், கிபியையும் வீடு சேர்ப்போம் என்று நம்பிக் கொண்டு அப்பாவிகளாய் தெரிந்தார்கள்.

நட்சத்திரங்களின் சுவடுகள் கூட இல்லாத அந்த மேகம் சூழந்த இரவின் ஒளியை சுற்றிலும் மலைகளுக்கு நடுவே இருந்த கணத்தில், ரமேஷ் தன் சிறுதுரும்பில் படங்கள் எடுக்க ஆரம்பித்திருந்தான். உத்திரமேரூருக்கு செல்லும் வழியிலேயே திசை மாறிச் சென்று கொண்டிருந்த எங்களை ஒரு தெருக்கூத்து ஒன்று சற்று நேரத்திற்கு நிறுத்தி வைத்திருந்தது. புதிதாய் ஊருக்கும் வந்திருக்கும் அந்நியர்களின் விவரங்களை கேட்காத ஊர்ப்பெரியவர்கள் வாழும் கிராமம் எவற்றையெல்லாம் தொலைத்திருக்கிறது என்று கூத்துக்காரர்களின் படைப்பு “கடல்” படம் பார்த்த சலிப்பாக மாறியது. அங்கிருந்து திரும்பும்போது, உத்திரமேரூர் பக்கம் சாதிக் கலவரம் நடந்து கொண்டிருப்பதாக ஒரு காவலர் தெரிவித்த தகவல், உத்திரமேரூர் தான் செல்ல வேண்டும் என்று ஜீயை, அவர் உறுதியைத் தூண்டியிருக்கும். மனதிற்குள் லேசான கிலி இருந்தாலும், காஃபிடே நிறுத்தம் ஒன்றில் போதிய அளவு பண்டங்களை நிரப்பிக் கொண்டு கிளம்பலானோம். டீசல் பற்றிய சிந்தனையே இல்லாமல்

உத்திரமேரூர் சாலையைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ரமேஷுக்கும் விவாதம் வந்தது. ஆம், இப்படி ஒவ்வொருவராக வம்பிழுக்கும் ரமேஷ் வராவிட்டால் இத்தனை சுவாரஸ்யமான பயணமாக அமையாது என்பது உண்மை தான் என்றாலும். அவனோட நேரடி டார்கெட்டில் இருப்போர் நிலைமை பரிதாபம் தான். வேல்கண்ணன் கைகளில் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலையும், கி.பி தமக்கென தாமாக வடிவமைத்துக் கொண்ட ஒரு மந்திரம் ஒன்றை ஓதி அவனைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். பல நேரங்களில் அஹிம்சை காலாவதியாகிவிட்டது என்கிற தத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் தூதுவனாகிய ஆர்.ஆர், கடைசி வரை பயணத்தை மிகச் சௌகரியமாகக் கழித்தவன் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த மொபைல் போனில் எடுத்த போட்டோக்கள் தான் பலருக்கு புரொஃபைல் போட்டாவாக இருக்கும் என்கிற காரணத்தால் தான் நட்பு பாராட்டுகிறோமோ என்கிற எண்ணமும் எழாமலில்லை.

இராஜராஜனின் குடவோலை சாஸனம் இருக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு இருக்கும் மண்டபத்தின் வெளிவாயிலில் நின்று கொண்டிருந்தோம். காலை வேளையிலேயே அந்த மண்டபத்திற்கு அனுமதியில்லை என்கிற நிலையில் ASIன் டெம்பிளேட் போர்டுக்கு அருகில் செல்ஃபி எடுத்துக் கொள்ளாமல், அத்தனைக் கொசுக்கடிக்கும் மதிப்பு கொடுக்காமல் சோடியம் வேப்பர் விளக்கொளியில் ஒரு போட்டோ ஷூட். இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எதிரெதிர் துருவங்களாய் வாழ்வியல் முறை, வாசிப்பு, எழுத்து, குணம், பழக்கவழக்கங்களில் இருக்கும் கிபிக்கும் ரமேஷுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி என்னென்ன விளைவுகளை உண்டாக்குமோ என்கிற ஆச்சரியம் ஒருபுறம், குறுநகையோடு சிகரெட்டின் கடைசிப் புகையை விடும்போது, வெடிச்சிரிப்பு எழும்பியது. இந்த ஊரிலும் யாரும் எங்களை எதுவும் விசாரிக்கவில்லை, எல்லா ஊர்களும் மெட்ராஸாக முயன்று கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

உத்திரமேரூர் – காஞ்சிபுரம் சாலையை நாங்கள் பார்த்த கணத்திலேயே “காஞ்சிபுரம் இட்லி சாப்பிட்டு இருக்கிறீர்களா” என்று ஒலித்த கேள்வியின் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்துவிட்டது. பயணத்தில் மீண்டும் மாறுதல் என்றதும்,  கி.பி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அடுத்த நாள் மாலையிலாவது வீடு சேர்த்தால் சரி என்று ஒப்புக் கொண்டார். வேல்கண்ணனுக்கு தலைவலி ஆரம்பித்து இருக்க வேண்டும். “பேபிமா பிலிவ் மி” என்று வடிவேல் சொல்லும் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது. காஞ்சிபுரம் வரை நாங்கள் சிரிப்பதற்காக மட்டுமே காரிலிருந்து ஆறு முறை இறங்கியிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது, எல்லோரும் அவரவர் பிரச்சினைகளையும் கைப்பையில் சுமந்துக் கொண்டு தான் அந்தச் சனிக்கிழமை மாலையிலும் சந்தித்தோம். ஜீ-யின் ஒரு கண முடிவில் 24 மணி நேரத்திற்கு அவற்றை வென்டோவின் டிக்கியில் போட்டு வைத்ததால் தான் அப்படிச் சிரிக்க முடிந்தது. ரமேஷோ தன் பிரச்சினைகளை பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்திருப்பவன், ஜீ அவனை “ஒழுங்கா வேட்டி கட்டிட்டு வா” என்று சொன்னதால் அவன் தன் பிரச்சினைகளை வீட்டிலேயே வைத்துவிட்டான். கிண்டலும், நையாண்டியுமாக கட்டுப்பாடற்ற  சிரிப்பில் இரவு உண்ட Heavyஆன உணவும் வேகமாகச் செரித்தது. அதுவும் சிரிப்பென்றால் ஒரு கிராமத்தின் மக்களை ஒட்டுமொத்தமாக எழுப்புமளவு சிரிப்பு.


அதிகாலை நான்கு மணிக்கு வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு முன்னர் வண்டி நிறுத்தப்பட்டிருந்த சமயம். மழை தன் வீரியத்தைக் கூட்டியிருந்தது. காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும் இடம் அது தானாம். எல்லோரும் தூங்க ஆரம்பித்திருந்தோம். அது பூனைத் தூக்கம், மீண்டும் ஒரு லாட்ஜைத் தேர்ந்தெடுத்து குட்டித்தூக்கம் போடலாம் என்று தீர்மானித்திருந்தார்கள் போலும், என்னை எழுப்பும் போது நகரின் வேறு எங்கோ ஒரு மூலையில் இருந்தோம். அறைக்கு செல்லும் போதே, ரமேஷை ஜீயுடன் தங்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இல்லாவிட்டால் அந்த சொற்ப நேர தூக்கமும் “மிஸ்டர் வேல்கண்ணன்” எனும் அவனின் நாமாவளியில் கெட்டுப் போயிருக்கும், எப்படியோ கதவை சாத்திவிட்டு காலை எழுந்தாகிவிட்டது.

கோயில்களின் நகரத்தில் ஏதாவது நான் ஆசைபட்டபடி கோரிக்கை வைத்திருந்தால் மூன்றுபேரின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமென்பதால், வாயை மூடிக்கொண்டேன். வேல்கண்ணன் ஏதாவது பேருந்திலாவது ஏற்று விடுங்கள் என்று கோரிக்கை, வேண்டுகோள், கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல் என்று தொனியை மாற்றிக் கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் ஒரு ஓவியர் ஒருவர் இருக்கிறார் என்று ஜீ சொன்னார். கிபி – ஜீகேவை தான் பார்க்க வேண்டும் என்று மனு கொடுத்தார். ரமேஷ் ஸ்டார் பிரியாணி என்று முடிவாய்ச் சொன்னான். ஏற்கனவே தன் நண்பனுக்கு கொடுத்த வாக்கு ஒன்றை நிறைவேற்றாமல், ஒரு ஆர்டிகள் ஒன்று எழுதுவதாய் பொய் சொன்ன பாவத்துக்கு அவனது கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன், பொய்க்கவில்லை.

வேல்கண்ணனிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஜீ நீட்டிய ஒரு விரல் கண்ணாடி அணிந்த வேல்கண்ணனுக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்குமே மூன்று விரல்களாய் தெரிந்தது. ஜீ.கே என்கிற ஜீ குப்புசாமி அவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். பத்து நிமிடம் மட்டுமே இருப்போம் என்று முன்னமே சொல்லி வைத்திருந்தோம். எங்கள் எல்லோரையும் விடவும் இளமையாகத் தெரிந்த மனிதராகக் காணப்பட்டார், எங்களை வரவேற்ற நர்மதா குப்புசாமி அவர்கள் பிரியாணி போட வேண்டும் என்கிற அக்கறையும் அவ்வப்பொழுது சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த வண்ணமே மும்முரமாயிருந்தார். சைவப்பட்சியான என் நாசியையும் துளைத்தது பிரியாணி வாசம். நான் சாப்பிடப் போறதில்லை என்றால் இந்த உலகத்தில் எனக்காக யாரும் வருத்தப்படப் போவதில்லை என்பது வரம் தான். சுவையான தேநீரைக் குடித்து முடிப்பதற்கு ஜெமோ பற்றிய பேச்சு உருவானது. நான்கு எழுத்தாளர்களுக்கும் மேல் சந்தித்துக் கொண்டால் – ஜெமோ எப்படி வராமல் போவார்.



கிபி அங்கேயும் ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்தார், க்ரூப் போட்டோ எடுத்தாலே அந்த அமர்வு நிறைவுபெறுகிறது போலும். எல்லோரிடமும் விடைபெறும் போது தான் ஜீகே எங்களை மொத்த கணையாழிக்கும் விருந்தளித்ததாகச் சொன்னது ஞாபகம் வந்தது. நாங்கள் எந்த ஒரு திட்டமும் இல்லாது கிளம்பிய பயணம், எங்களை ஏதாவது ஒரு வகையில் ஒருங்கிணைக்கிறதா என்று யோசித்தேன். சற்றைக்கெல்லாம் தீவிரமாக இலக்கியம் பக்கம் மாறிய பேச்சு அதை உர்ஜிதப் படுத்தியது.

இமயத்தின் ”எங் கத” குறித்த விவாதம் தீவிரமாகப் போக, அதை வாசிக்காத நானும் ஜீயும் அதைக் கொஞ்ச நேரம் கவனித்துக் கொண்டே இருந்தோம். அந்த ஒரு புத்தகம் குறித்த விமர்சனம், ஜீயின் கேள்விகளுக்குப் பின்னர் விமர்சனக் கோட்பாடுகள் பற்றிய பொதுமைப் பண்புகளைப் பேசும் தீவிரமான அமர்வாக மாறியது. இவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்தபடி இருந்த நான் ஒரு முருக்கு பாக்கெட்டை காலி செய்து முடித்த நொடி , என்னையும் இழுத்துப் போட்ட போது தான் உணர்ந்தேன்.

ஜீ இந்த விவாதத்திற்கான மனநிலையை  காலையில் இருந்தே உருவாக்கிக் கொண்டிருந்தார் என்பது தாமதமாகாத்தான் விளங்கியது, பார்க்கிங் டோக்கனுக்கு வசூல் செய்த ஒருவனோடு வம்பிழுத்ததிலிருந்து, சரவணபவனில் செய்த வாதங்கள், என்னையும் கிபியையும் இணைக்கின்ற புள்ளி ஒன்றில் இருக்கின்ற எங்கள் மனநிலையை கீறி விட்டது, பின்னர்  ஜீகே வீட்டிற்கு சென்றது என மாறிவிட்ட மனநிலை எப்படி வெறுமனே எப்படி களிப்புடன் மட்டும் ஒரு பயணத்தை நிறைவுபெற வைக்கும்.

ஆடிக்காற்றில் இலகுவாகிப் போன புழுதி மண்ணில் விதை தூவுவது எளிமை தானே.

அதற்குப் பின்னர் எங்கள் பயணம் அதிகம் மௌனமாகவே இருந்தது. எல்லோர் மனதிலும் ஜீயுடன் விவாதித்த கோட்பாடுகள் வேறு வேறு பரிமாணங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் ஒரு வெற்றிடம் கண்ணில் தெரிந்தது நிச்சயம், யார் அங்கே ஆக்கிரமிக்கிறார்கள் என்பது காலத்தின் கைகளில்.

கொஞ்சம் கருப்பு வெள்ளை காலத்திய இந்திப் பாடல்களும், தமிழ்ப் பாடல்களும் இதமாகியிருந்தது. வேல்கண்ணன் வீட்டிற்கும் முன்னரே என் வீடும் இருந்தது, எனினும் பயணத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்று மனதில் இருந்த ஆசைக்கு வெகுமதியாக A2Bயில் ஒரு மெதுவடையும், காஃபியும் கிடைத்தது.

சுமார் 500 கிலோ மீட்டர்களாவது கடினமான பயணம் செய்திருப்போம். இதெல்லாவற்றிட்கும் காரணம் ஜீ தான்.

அன்றிரவு பாண்டவர்கள் அனைவரையும் க்ருஷ்ணன் வண்டியில் ஏற்றிச் செல்வதாக கனவு ஒன்றைக் கண்டேன். எங்கள் நால்வரில் யார் அர்ஜுனன்?, யார் தர்மர்? என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஐந்தாவதான ஒரு சகோதரன் இல்லாமல் போனதில் வருத்தம் தான். அவர் யார் என்று உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.



மனிதர்களை வைத்து INSTALLATIONகள் உருவாக்கும் கலைஞன் என்று சொன்னேனில்லையா? அதை விளக்குவது மிகக் கடினம் தான் எனினும் அதற்கு இன்னும் சில பிரயாணங்கள் பற்றியும் சொல்ல வேண்டும், சில இனிமேல் தான். இதற்கு முந்தைய பயணங்கள் பற்றியும் சொல்லலாம் தான் – ஆனால் எனக்கு இன்னும் மிச்சம் வைக்கப் பிடித்திருக்கிறது.

- ஜீவ கரிகாலன்


(  24 மணி நேரம் - சுமார் 500 கி.மீ பயணத்தை சாத்தியப்படுத்திய அவர் கேட்டதெல்லாம் - “ இதைப் பதிவு பண்ணிட வேண்டும் ” என்று, நண்பர்களோடு செய்த ஒரே பயணம், எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை. இதை வாசிப்பதோடு மட்டுமல்லாது நண்பர்களின் வலைப்பூக்களையும் பாருங்கள் 1. http://thittivaasal.blogspot.in/2015/08/blog-post.html 2.http://rvelkannan.blogspot.in/)

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

யாளி பேசுகிறது

யாளிக்கும் இது போதாத காலம் என்று தான் தோன்றுகிறது. அகண்ட வாயிலிருந்து தொங்கும் நாவானது, அரசினை எதிர்த்துப் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் வெளியே வந்திருக்குமோ என்னவோ, ஒருவேளை நெல்லையப்பர் கோயில் அம்மன் மண்டபத்தில் உள்ள குரங்கினைப் போல் உடலில் சேதம் விளைவித்து அதை மறைப்பதற்கு ஏதுவாய் வேறெதுவும் கூட கட்டித் தொங்கவிடப் படலாம்.

சமகாலக் கலை எது?
1970களோடு நின்று போய்விட்ட நவீனக் காலத்திற்குப் பின்னே உருவான எல்லாப்படைப்புகளும் சமகாலக்கலை என்கிற பார்வையை ஒரு நண்பரிடமிருந்து கேள்விப்பட்டேன், அவர் படைப்புகள் என்கிற இடத்தில் மிக அழுத்தம் தெரிவித்து இருந்தார் என்பதையும் இங்கே சொல்லிவிடுதல் உத்தமம்.
சென்னை தமிழ்நாடு அரசு இசைப் பல்கலைக்கழகத்தில் CONTEMPORARY ART EXHIBITION என்கிற தலைப்பு உள்ளே சென்று வரப்பணித்தது. நண்பர் ஒருவரிடம் கேட்ட போது, இது முக்கியமான கண்காட்சி தான் ‘போய்ப் பாரு’ என்று புன்னகைத்தார். வழக்கமான புன்னகைதான்.
“உள்ளே சென்ற எனக்குப் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது” என்பது அநேக துப்பறியும் கதைகளில் நடந்ததைச் சொல்லும் ஒரு அபலையின் குரல் தான். இப்போது நானும் அப்படியே சொல்கிறேன், SG வாசுதேவ், RM பழனியப்பன், அச்சுதன் கடலூர், கே. முரளிதரன் , நரேந்திர பாபு, டக்ளஸ், கே.பாலசுப்ரமணியன் என பலரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மெட்ராஸ் ஸ்கூலின் படைப்பாளிகளை ஒரு சேர பார்ப்பது என்பது உற்சாகமூட்டும் விஷயம் தான் என்று உங்களிடம் நான் சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு ஊரின் பெரிய கோயிலுக்கான தேர்த்துனியை, ஒரு கண்மட்டுமே இருக்கின்ற தன் அப்பா ஒருவராகவே அளந்து, வெட்டி, படம்வரைந்து உருவாக்கினார் என்று சொல்லியபடி, அந்த தேர் இழுக்கப்படும் உற்சவத்தில் “இந்தத் தேர் பனிரெண்டாவது முறையாக அணிந்திருக்கிறது” என்று நிழற்படத்தைக் காட்டி மகிழும் முகத்தில் அசலான ஒன்றை கண்டு ரசிக்க முடிந்தது.
ஒரு நள்ளிரவில் - ஓ.எம்.ஆரில், முன்னதே கேள்விப்பட்டிருந்தும் தலைவலி மாத்திரை கூட வாங்காமல் அந்த பிரம்மாண்ட இயக்குநரின் படத்தைப் பார்த்துவிட்டு வந்த தலைவலியைப் போக்கிட ஒரு தேநீர் தேடி அலையும் நேரத்தில் மூன்று முறை காவலர்களின் கெடுபிடி சோதனைகளுக்கு ஆளாக நேர்ந்திருந்தது. ஆனால் ஒரு சைக்கிளில் தேநீர் சிகரெட், பன், பழம் என வைத்துக்கொண்டு நடுநிசியில் பயமில்லாமல் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்ய ஒருவனால் எப்படி முடிகிறது என்பதற்கு பதில், அவனது வெள்ளைச் சட்டையின் பைகளில் சொருகியிருக்கும் ஆளுங்கட்சியின் உறுப்பினர் என்னும் அட்டை, ஒரு சிறுதொழில் செய்வதற்கே அரசியல் செய்யவேண்டியிருக்கிறது என்பது சமூகத்தின் நிர்பந்தமாகிப் போய்விட்ட காலத்தில்…

இருந்த உறவையெல்லாம் இழந்துவிட்ட ஒருத்தன், கரித்துண்டுகளாலும், செங்கற்பொடியாலும் ஒரு வெள்ளைச்சுவற்றில் மனதில் பதிந்த அந்த இரும்புப் பெட்டியில் வரைந்திருந்த மூன்று ஓவியங்களில் ஒரு ஓவியத்தின் சுவடு இன்னும் அழகாய் மாறியிருக்கிறது. ஒரு கையில் பீடியை வழித்தபடியே வரைந்து கொண்டிருக்க, ஒரு ஸ்தபதிக்கு கோயிலில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்ததில் அவனுக்கு கற்றுக்கொள்வதற்கு என்று வேறேதுமில்லாமல் போனதற்கு காரணமாயிருந்த அந்த சித்திரக்காரனை அவன் சபிக்கவேயில்லை. தனது முதுகிற்குப் பின்னே “உச்” கொட்டும் சமூகம் மீது எந்த மரியாதையும் இல்லை, அக்கறையுமில்லை.

பிரச்சினை எல்லாமே நாம் மதிக்கின்ற, போற்றுகின்ற, நாம் நம்புகின்ற கலை மீது தான். சமகாலக் கலை மற்றும் தஞ்சாவூர் ஓவியங்களின் அணிவகுப்பு என்று தமிழக முதல்வரின் முகப்புப் படம் போட்ட ஃபேஸ்புக் பக்கம் சொல்லும் போது கூட எனக்கு எந்த முன்யோசனையும் இல்லை, துணைவேந்தரின் செய்திக் குறிப்பில் சமகாலக்கலையும், தஞ்சாவூர் ஓவியங்களும் சங்கமம் என்ற அறிவிப்பில் இருக்கும் மடிப்பினைத் தெரிந்து கொள்ளும் அளவு ஞானம் இல்லை என இப்போது அந்த நண்பரின் புன்னகையை நினைவு கூர்கிறேன்.

ஊட்டியில் இயங்கிவரும் மேக்கேன் கட்டடக்கலை பள்ளி (MCGAN’s School of Architecture) ஏற்பாடு செய்திருக்கும் கண்காட்சி அது, மேற்சொன்ன தமிழகத்தின் முன்னோடி ஓவியர்களோடு, அப்பள்ளியின் மாணவர்களும் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர் போலும், ரவிவர்மாவின் ஓவியம் ஒன்றில் வேறொரு பெயரைப் பார்த்தபோது தான் அந்த ஆச்சரியம் எழுந்தது, விசாரித்தால் அது மாணவரின் ஓவியமாம், லலித்கலாவில் இந்தோகொரிய கலாச்சார பண்பாட்டு பகிர்வாக காட்சிப்படுத்தப்பட்ட கொரியப் பள்ளி மாணாக்கார்களின் படைப்பும் அப்படியான ஒன்றாகத் தான் இருக்குமோ என்றும் அதைத் தான் அரசும் முன்னிருத்துகிறதோ என்கிற கேள்வியை இரண்டு முறை அழித்துவிட்டு தான் மீண்டும் தட்டச்சு செய்கிறேன். ஓ.எம்.ஆரின் தேநீர் கடைக்காரருக்கும் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்பவருக்குமான வித்தியாசங்கள் பல இருக்கலாம், ஆனால் இருவரும் அரசியல் முகவரிகளால் தங்கள் நிறுவனத்தைப் பாதுகாக்கத் தெரிந்தவர்கள்.

CREATIVE DISPLAY என்பது எப்படியோ இருக்கட்டும் – மிகமோசமான காட்சிப்படுத்தல் எப்படி இருக்க முடியும் என்று புரிந்து கொள்ள உதவியது இக்கண்காட்சி என்பது மிகையல்ல, மிகவும் பழமையான தஞ்சாவூர் ஓவியம் ஒன்று ஒளித்து வைக்கப்பட்டது போல் கடைசியாக வைக்கப்பட்டிருந்ததிலிருந்து, தொங்கிக் கொண்டிருக்கும் ஓவியங்களை விட லேபிள் விலையுயர்ந்ததா என்ன? என்று கேட்குமளவுக்கு ஒரு ஓவியத்தில் தவறு ஒன்று திருத்தி எழுதப்பட்டிருந்தது, விநாயகரின் சற்றே பிதுங்கிய மார்பினை நினைத்து அந்த அரங்கக்காப்பாளர் அதை தேவி என்று எழுதியிருக்கிறார். அது திருத்தி எழுதப்பட்டிருந்த வரலாறு பற்றி அடியேனுக்கு எதுவும் தெரியாது என்பதில் வருத்தமே.

தஞ்சாவூர் ஓவியங்கள் எந்த இனக் குழுவிற்கு சொந்தமானது? அதற்கென மொழி அடையாளம் என்று ஏதேனும் உண்டா என்கிற கேள்விக்கு அடிப்படைத் தமிழக வரலாறு தெரிந்திருந்தால் போதுமானது. தமிழகத்தின் தொன்மையான கலையாக இருந்த சித்திரக்கலையின் நீட்சியாக இன்று நாம் எதைத் தக்கவைத்திருக்கிறோம்? அல்லது நாம் இன்று தமிழர்களின் கலை என்று எதை மார்தட்டிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? இவ்விரண்டும் இரு வேறு கேள்விகளாய் தோன்றவில்லை. மராட்டியர்களின் வரவிற்குப் பிறகு தான் சாம்பார் என்கிற உணவு தமிழனின் தாளியில் சேர்ந்தது என்று சொன்னால் கூட யாரேனும் உணர்வாளர்கள் என்னை பழிக்கலாம். கேழ்வரகுக் கூழ் பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு செய்வது யாளியின் நோக்கமல்ல.

தமிழக முதல்வரின் இருபது பெரிய ஓவியங்களை, அலங்காரம் செய்து அதை தஞ்சாவூர் ஓவியங்கள் என்று பெயரிட்டிருப்பதால் அவற்றை தஞ்சாவூர் ஓவியங்கள் என்றே நம்ப வேண்டும் என்பது தமிழகத்தின் தலையெழுத்து. தமிழக முதல்வரின் கலையுலக வாழ்க்கையை பொன்னாலும், விலைமதிப்பற்ற கற்களாலும் விலைமதிக்கவியலா வரலாற்றில் பதிவது தான் கண்காட்சியின் நோக்கமெனத் தெரிந்தது. இதனோடு சமகாலக் கலைஞர்களென நம்பியிருந்த கலைஞர்களின் படைப்புகளோடு ஒட்டவைத்து எதையோ கட்டுமானம் செய்ததாகத் தோன்றுவது, கட்டடக்கலைப் பள்ளியின் சேர்மேன் அவர்களின் கனவுத் திட்டமா அல்லது கனவுத் திட்டத்தின் பிரதிபலனா என்கிற ஐயம் நிதர்ஸனம்.

நாம் பார்ப்பனவற்றில் நம் மனதில் பதிய வேண்டியவை இவை தான் என்று முன்னமே தீர்மானித்து CUSTOMIZE செய்து கொள்ளும் திறன் இருந்தால் தேவலை தான். இங்கே, இதற்கு இணையான உதாரணமாக, ஸெம்மொழி மாநாடு நடந்த வரலாறு தெரியுமா என்றும் எதிர் அரசியல் பேசலாம் தான். அரசு போடும் தீவனத்தை எதிர்பார்க்கும் சமூகத்தை தான் முதலில் சுட்ட வேண்டியிருக்கிறது என்பது யாளியின் மன உறுதி

“ஒரு சமூகம் எல்லாவகையிலும் பின் தங்கிப்போய்விடும் என்பதை அதன் முகமான கலை வடிவங்களின் நிலையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆட்சியிலிருப்பவர்களை அண்டித் தான் கலைஞர்கள் பிழைக்க வேண்டியிருக்கிற நிலை சாபக்கேடு. வெகுஜன ஊடகங்களின் செயல்பாடு இப்படி இருந்தால் பரவாயில்லை, சமகாலக் கலைப் பண்பாடுகளின் அதிதீவிர இயக்கங்களும் இவ்வாறே வாழவேண்டிய நிர்பந்தம் இருப்பதாகத் தம்மைக் காட்டிக்கொண்டு இருப்பது, உறக்கத்திலிருந்து எழவே விரும்பாத சமூகத்தின் நிலையாகத் தான் இருக்கிறது. நாம் வாழும் காலத்திலேயே அச்சமூகத்தோடு சேர்ந்து ஜீவ சமாதியாகிப் போய்விடத் தான் மனம் நாடுகிறது…” என்று கிறுக்குத்தனமாய் ரோட்டில் கத்தியபடி நடந்து சென்ற ஒருவன், இறந்து போன யாரோ ஒருவனின் நினைவாக வைத்திருந்த அந்த ஒட்டுபோட்ட ஜோல்னா பையிலிருந்த சில கரித்துண்டுகளையும், ஓட்டுச் சிதிலங்களையும் கையில் எடுத்தான். ஒரு வெள்ளைச் சுவர் அவனை வா... வா... என்று அழைத்தது..

யாளி தன்னைத் தானே கல்லைச் சமைக என்று சாபமிட்டது

நன்றி யாவரும்.காம்

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

பஜ்ஜி - சொஜ்ஜி - 80 / ஒரு பயணத்தின் கதை

இந்த வருடத்தின் ஏப்ரல் 1 என நினைக்கிறேன் கைகளில் ஜெஹாங்கீர் ஆர்ட் கேலரி என்கிற லோகோவுடைய உறையினை கையில் வைத்திருந்தார். “மே மாதம் 3ஆம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு என்னுடைய SOLO SHOW” என்று சொல்லும் போதே துள்ளிக் குதித்தேன். நான் அடுத்த மாதம் அசலான வடா பாவ், பாவ் பாஜி எல்லாம் சாப்பிடப் போகிறேன் என்று, ஜஹாங்கீர் ஆர்ட் கேலரி பற்றி விட்டல்ராவ் தன் ‘காலவெளி’ நாவலில் சொல்லியிருந்ததை தான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன் நாயகன், பாட்ஷா, தலைவா என்று சினிமாக்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு தான் அந்த ஊரின் அழகைப் பற்றிய தகவல்கள் மனதில் பதிந்தன என்பது ரஸிக்கக் கூடிய வரலாறு அல்ல.

ஆனால் அன்று சொன்னத் தகவலோடு சரி, மனுஷன் நெருப்பாய் மாறிவிட்டார். அவருடைய தொனியில் சொல்லப் போனால் TOTAL DETACHMENT, இந்த பதத்தை அடிக்கடி பிரயோகித்திருக்கிறார். அப்போது தான் நாங்கள் அதை உணர்ந்தோம். டியர் – ரீடர்ஸ் இந்த இடத்தை டாக் செய்துக் கொள்ளுங்கள் மறுபடியும் இந்த இடத்தை நினைவு கொள்ள வேண்டி வரும். அதற்குப் பின்னர் சேர்ந்த மாதிரி இரண்டொரு வாக்கியங்கள் கூட சேர்ந்துப் பேச முடியாத படி மாறிவிட்டார், மும்பை சென்று பார்க்காத வரை அதற்கான நியாங்கள் புலப்படவில்லை. ஒரு கலைஞன் தன்னை அற்பனிப்பது பற்றியும் எது எத்தனைத் தீவிரமானது என்பதையும் அன்று தான் உணர்ந்தேன். இந்த ஒரு மாத இடைவெளியில் அவர் தன் கல்லூரியில் ஆண்டுத் தேர்வையும் எழுதி முடித்தார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது. (ஆம் அவர் மாணவராகவும் இருக்கிறார்??!!). நானும் மும்பை வருகிறேன் என்று சொல்லும் போதெல்லாம் அதை அவர் சட்டை செய்யவில்லை – அதற்கான(பதில் சொல்லும்) நேரம் அவருக்கு இல்லை என்பதும் தெரியும்.

மும்பைக்கு எப்படித் தனியாகச் செல்வது என்று கொஞ்சம் தயக்கம் தான், அலுவல் ரீதியாகவோ, இல்லை தெரிந்தவர்கள் என்று யாரும் இருந்தார்கள் எனில் போய் வரலாம், சுற்றுலா என்றாலாவது அதைத் தனியாக எடுத்துக் கொள்ளலாம். இங்கே இருக்கும் எல்லா கேலரிகளுக்குள்ளும் அவ்வளவு எளிதாகச் செல்ல முடியாது, RSVP போல ஏதாவது மின்னஞ்சல் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டி வரும் என்று நானாக முன்முடிவு வைத்திருந்தேன். நமக்குத் தெரிந்ததோ “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாதா” என்கிற வாக்கியமும், அண்மைக்காலமாக அறிந்து கொண்ட “ஆப் கி பார் மோடி கி சர்கார்” என்கிற சொலவடையும் தான். பாலசுப்ரமணியன் சார் வேறு தினமும் இரண்டு போட்டோக்களாக மும்பை கண்காட்சியைப் பற்றி தன் ஃபேஸ்புக் சுவரில் போட்டப் பதிவுகள் ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது.

என் தம்பி ஒருத்தனிடம் இதைப் பற்றியெல்லாம் எடுத்தியம்பி, ஏதேனும் அவசரமென்றால் என் வங்கிக் கணக்குக்கு கொஞ்சம் பணம் மாற்றிப் பெற்றிடும் நம்பிக்கையைப் பெற்றதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்த ஒரு மாதத்தில் யார் அழைத்தாலும் தலைவர் போனை எடுப்பதாக இல்லை, அடித்துப் பிடித்து ப்ரீமியம் தட்காலில் டிக்கெட் எடுத்தாகிவிட்டது, கணையாழிக்குச் சென்று இந்த மாதிரிக் கண்காட்சிக்கு செல்கிறேன் என்று ஐயாவிடம் சொல்லும் போது, ஐயா திடீரென்று என் பயணச் செலவை கணையாழியே ஏற்கும் என்றும் – ஓவியங்கள் பற்றி எழுத ஆரம்பித்த பின் கிடைத்த முதல் ஷ்பான்சர்சிப் என்பதிலும் அதைத் தரும் கரங்கள் மீதிருந்த மரியாதையும் மகிழ்ச்சியின் வால்டேஜை ஏற்றியது.  சென்னை எக்ஸ்பிரஸில் கிளம்பலானேன், 50 டிகிரியைத் தொடும் வெப்பத்தை வரலாற்றில் பதிவு செய்து கொண்டிருந்த காலம் அது – தண்ணீருக்கே இந்தப் பயணத்தில் அதிகம் செலவழிக்கப் போகிறேன் என்று உறுதி செய்துக் கொண்டேன். “நான் மும்பை வந்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஒரு குறுந்தகவல் –அழைத்தார் – ஒரு மிக்ஸ்ட் ரியாக்ஸன் இருந்தாலும், வந்திறங்க வேண்டிய இடத்தைச் சொல்லி வந்தவுடன் அழைக்குமாறு சொல்லி போனை வைத்தார். நினைத்த அளவுக்குச் சிரமம் இருக்காது என்று மனம் சாந்தி அடைந்தது. உடன்பயணித்து ரயில் சிநேகிதர்களாக்கிக் கொண்ட நண்பர்களுடன் ஒரு டாக்ஸியை ஷேர் பண்ணி ரீகல் தியேட்டரில் வந்து இறங்கினேன்.

அதிகாலையில் ரீகல் தியேட்டரில் இருந்து பாரம்பரியமிக்க கட்டங்களையும், கேட்வே ஆஃப் இந்தியாவையும் பார்ப்பதில் மனம் லகுவாகி விட்டிருந்தது. பார்ஸிக்களின் கட்டுப்பாட்டில் தான் இன்றளவும் பெரும்பாலும் இருப்பதாக அறிந்தேன். அதிகாலை என்பதால் சலனமற்று இருந்த அந்தப் பகுதியில் ஒரு போலீஸ்வாலா மட்டும் என்னைப் பார்த்துக் கொண்டே ஜீப்பில் அமர்ந்திருந்தார். அப்புறம் அவரை சந்திதேன், அவரை சந்திக்கும் போது முதன்முறை ஒரு தீபாவளிக்கு முந்தைய மாலைப் பொழுதை மீண்டும் நினைவில் கொண்டு வந்தது.

2013, நவம்பர் – 02, சனிக்கிழமை. ஒரு சிற்றிதழில் வெளியாகியிருந்த சுமாரான கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்து என்னை அடையார் பக்கம் வரும்பொழுது அவரது ஸ்டூடியோவிற்கு வருமாறு அழைத்திருந்தார். அதற்கு முன் சில ஓவியர்களின் ஸ்டூடியோவிற்கு சென்றதால், இவரை முதன் முதலில் சந்திக்கும் போதே எனக்கு ஆச்சரியம் அளித்தது. எங்கேயும் பெயிண்டிங் இல்லை, “இழைத்தலின் மேல் எனக்கு நம்புக்கை இல்லை” என்று வேறு சொன்னார். குழம்பினேன். அவரது ‘நம்மோடு தான் பேசுகிறார்கள்’ புத்தகம் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ போன்ற ஒரு நாஸ்டால்ஜிக் லேயராகத் தெரிந்தது. ஆனால், அந்தச் சந்திப்பு தான் என்னை – என் பயணத்தை எல்லாம் திசை திருப்பிய நாளாக அமைந்தது என்பதை இப்போது எழுதிக் கொண்டிருக்கையில் உணர முடிகிறது. இந்தச் சம்பவம்- என் அனுபவத்தை சொல்வதற்காக நான் பதியவில்லை. முக்கியமாக நான் அவரிடம் கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதிலுக்கான தொடர்ச்சியை நான் இந்த மும்பைக் கண்காட்சி வரை பார்க்கிறேன்.

“உங்க அடுத்த திட்டம் என்ன?”

ஒரு நீண்ட உரையாடலாக அந்தக் கேள்விக்குப் பின்னான பதிலாய் அது மாறியது. இணையத்தில் தேடிப் பார்த்த அவரது சில ஓவியங்களை வைத்து அவரோடு பேசிக்கொண்டிருந்தேன், அவை யாவும் “Figurative” ஓவியங்கள். அவ்வுரையாடல் முடியும் தருவாயில் சொன்னார் “நாம் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும், மறந்து போற விஷயங்களுக்கும் இடையில் இருப்பதைக் கொண்டு வர விரும்புகிறேன்” என்றார். அதை ஒட்டி சில உருவாக்கங்களையும் காண்பித்தார் – அவரது டிஜிட்டல் படைப்புகள்.

இன்று மும்பைக் கண்காட்சி அவரது கனவின் மெய்ப்பொருளாக உருவாக்கம் பெற்றிருப்பது நான் கண்ட தரிசனம். என்னால் இங்கு ஒரு சாட்சியாக இவரது ஒரு பயணத்தின் 18 மாத காலமாக இருந்த வந்த தேடலை இப்போது ஆவனப்படுத்தமுடிகின்றது. அது இன்னமும் சொல்லப்போனால் “நம்மோடு தான் பேசுகிறார்கள்” எனும் புத்தகத்திலிருந்தே தொடங்குகிறது என்று சொல்லலாம், ஒரு குளத்தின் GEOMETRICAL வடிவத்தைப் பற்றிப் பேசியபடியே துவங்கும் நூல், அரூபங்களைப் பற்றி பேசியபடிதான் முடிகிறது. அப்படியாயின் அது ஒரு நீண்ட தேடலை அடிப்படையாய் கொண்டிருக்கின்ற பயணம் என்பதை உணர முடிகிறது.

இன்று கணையாழியில் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளில் பதிவு செய்து வரும் விஷயம், பல்வேறு ஓவியர்களின் TRANSITIONஐ அடிப்படையாக வைத்து உருவான கட்டுரைகளே. இப்படியான TRANSITIONஐ நானே நேரடியாகக் கண்டுணர்வது என்னளவில் தொடர்ந்து எழுதப்போகும் கட்டுரைகளுக்கும், பிற செயல்பாடுகளுக்கும் பேருதவி செய்யும் என்று நம்புகிறேன். அதற்காகத் தான் எப்படிப்பட்டேனும் மும்பை செல்லவேண்டும் என்கிற தீர்மானம் உருவாகிற்று..

அதே நேரம்....

(அப்படி ஒரே பதிவுல எல்லாம் முடிக்க முடியாது.. )

ஜீவ கரிகாலன்






அவள் ஒரு ஆலகால விடம்


அற்புதமானவைகளின் படிமம் அவள். யாழ் மீட்டும் வேளையிலும் மண்புழுவின் நெளிதல் மேல் அவளுக்கு காதலிருக்கிறது. யோசுவாவின் தத்துவங்களை நேசிக்கிறாள், அழிப்பவர்களை சமன் செய்பவர்கள் என்கிறாள்.  அமுதமாய் இசைப்பவளின் குரலும் அதுவாய் இருந்தும், அவள் விஷ்னுவின் கழுத்தில் நின்று நீலகண்டனைப் பருகும் Fluorescent விஷம். அந்த ஐந்து விநாடி ‘களுக்’ சிரிப்பும் அவ்வப்போது தொடர்ந்து வரும்.

மரமும், செடியும் அவளைத் தழுவத் துடிக்கின்றது, மாவும், பலாவும் அவள் விரல், பல் படக் காத்திருப்பதில் ஆச்சரியமில்லை.

மொழி அவளுக்கானது, அவள் கட்டமைத்தது, சட்டை உரித்த பாம்பென எப்போதும் வழுவழுப்பானது, மென்மையானது, ஒளிர்வது அல்லது தீப்தமானது அந்தச் சர்பங்களால் தீண்டப்படுவது ஒரு நல்ல மரணம் எனப்படும், சில கணங்கள் ஒரு மரணத்தை சுகிப்பது, நமது வாழ்க்கையின் முக்கியத் தருணங்கள். மற்றபடி அவள் மொழியில் பயணிக்க அவள் இடம் தரும் ஓடம் மிகவும் கலைநயமிக்கது, ஓடத்தில் ஏறியதுமே பூக்களின் நறுமனங்களும், செல்லோவின் தந்தியோசையும் உங்களை மகிழ்விக்கும்.

அவள் நேசிக்கிறாள் – பட்டாம்பூச்சி, மகிழம்பூ, தாழம்பூ, பூக்காரி, மாதரசி, மாசாத்தி, இளவரசன், காளிதாசன், கண்ணதாசன், பாரதி, பெரியார், மார்க்ஸ், மணிகண்டன் என கணக்கில்லாமல் நேசிக்கிறாள்.

அவளுக்காக மொட்டு திறக்கிறது, கவிதை எழுதப்படுகிறது, தூரிகைகள் சமைக்கப்படுகிறது, வேகம்கள் கீறப்படுகின்றன, பாடல் இசைக்கப்படுகிறது, மழை பெய்கிறது, பொழிகிறது, தூறுகிறது, கொட்டுகிறது, நனைக்கிறது, அந்தச் சிறுமியும் பாடுகிறாள், யாரோ வந்து தழுவுகிறார்கள், யாருக்கு காதல் கைகூடுகிறது, யாரேனும் தங்கள் அரசியலை சுயவிமர்சனம் செய்திருக்கலாம், பொறாமைக்கும் மேலே ஒரு ‘உச்’ கொட்டியிருக்கலாம்,

அவள் பெயராலேயே வேறு யாராவது சந்தோஷித்து இருக்கலாம், கவிதை எழுதியிருக்கலாம், தன்னை மறந்திருக்கலாம், நன்றாக உண்டிருக்கலாம், அல்லது நடனமாடியோ, இசைத்தோ , ரசித்தபடியே இருந்திருக்கலாம் , யாருக்கோ, யாரிடமிருந்தோ, யாரோலோ முத்தங்கள் பரிமாறப்பட்டிருக்கும், கூடியிருப்பர், மழையில் நனைந்திருப்பர், விழிப்புணர்வு அடைந்திருப்பர், காதல் கொண்டிருப்பர், சிரித்து இருப்பர், தற்கொலை முயற்சியிலிருக்கலாம், வேறு காதல் கைகூடியிருக்கலாம்.

அவளைப் பற்றியும், அவளைச் சுற்றியும் தான் என்னென்னவெல்லாம் நடக்கட்டும், அவளை அவளாய் இருக்க விடுங்கள்..


அவள் காலம் சுகமாய்ப் பிரசிவித்த தேவி!!!