வியாழன், 21 நவம்பர், 2013

2 C - பஸ்ரூட்

 (மலைகள் இதழில் வெளிவந்த எனது சிறுகதை)
2 C -  பஸ்ரூட்

கரூர், பழையபஸ் ஸ்டாண்ட், லைட்ஹவுஸ் தியேட்டர், திருமாநிலையூர், சுங்ககேட், மில்கேட், தாந்தோனிமலை, அரசுக்கலைக் கல்லூரி, காளியப்பனூர் கலெக்டர் ஆபீஸ், RTO ஆபீஸ் எல்லாம் தாண்டிய பின் வெங்கக்கல்பட்டியைக் கடந்து செல்லும் அத்தனை வாகனங்களும் வேகத்தைக் கூட்டி விடும். அதற்கு அப்பால் செல்லாண்டிபட்டி அல்லது வெள்ளியணை வரை வேகத்தைக் குறைக்கத் தேவையில்லை. மணவாடி, கல்லுமடை, காலணி என நின்றுச் செல்பவை பெரும்பாலும் 2ம் நம்பர் கொண்ட அரசுப் பேருந்துகளும், தனியார் டவுன் பஸ்ஸுகளும் தான்.
 அப்பொழுது கூட்டம் அதிகமாக இருந்தால் போதும் மணவாடி, கல்லுமடை, அடுத்து வரும் காலணியில் என எந்தப் பேருந்துகளுமே நின்று செல்லாது. கலெக்சனுக்காக சில தனியார் பஸ் நிற்குமளவிற்குக் கூட அரசுப் பேருந்துகள் நிற்காது. இந்த ஐந்து –ஆறு வருடத்தில் தான் சில தனியார் டெக்ஸ் கம்பெனிகள் ஸ்டாஃப் பஸ் விடுகின்றன. முன்னரெல்லாம் பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள கிராமங்களிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கரூர் வந்து செல்கின்றனர். கட்டிட வேலைக்கு, டெக்ஸ் வேலைக்கு, பஸ்பாடி கட்டும் வேலைக்கு, தையல் காண்ட்ராக்ட் வேலைக்கு, கொசுவலை பேக்டரிகளுக்கு, சாயப் பட்டறைகளுக்கு என வந்து போகின்றனர். டவுன் பஸ்ஸுகளுக்கு சரியான கல்லா கட்டும். சனிக்கிழமைகளில் உங்கள் உறவினர் யாரையாவது பார்க்க இந்த வழியில் உள்ள ஊர்களுக்கு வர விரும்பினால், நல்லது நீங்கள் வர விரும்ப வேண்டாம். எப்போதும் இருக்கும் வியர்வைப் புழுக்கத்தோடு, சரக்கு வாசனையும் கலந்து குடலைப் புரட்டும். ஆனாலும் இளையராஜா, டீ.ராஜேந்தர், எஸ்.ஏ. ராஜ்குமார் இருக்கும் பொழுது கூரையைத் தட்டிக் கொண்டே ஒவ்வொரு ஸ்டாப்பாக பார்த்து வந்தால் உங்கள் ஊர் வெள்ளியனையோ, கூடலூரோ, பாளையமோ வந்துவிடும்.
 அதே திங்கள் காலையில் நீங்கள் கரூர் செல்ல வேண்டுமாயின் சிறந்த வழி பால் டெம்போ, ட்ராக்டர் போன்ற எதிலாவது லிஃப்ட், இல்லை இல்லை வாடகைக் கொடுத்துப் போகலாம், வாடகை என்பது பஸ் கட்டணம் தான். ஆனால் நின்று கொண்டே போக வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் டூவீலரில் ஓசிப் பயணம் போக விரும்பினால் கண்டிப்பாக உங்களுக்கு முனீஸ்வரனின் அருள் உண்டு, அங்கு இறங்கி குழாயில் கால் கழுவி, கையைக் குவித்துக் கொஞ்சம் தண்ணீர் அருந்தியும் கொள்ளலாம். பின்னர், காணிக்கையிட்டு சாமி கும்பிட்டவுடன். அகண்ட கண்ணாடியில் உங்கள் முகம் பார்த்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்ளலாம், நீங்கள் வேலை வெட்டி இல்லாதவராக இருந்தால் அங்கிருக்கும் பூசாரியிடம் “ஏதாவது வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா” என்று குறி கேட்கலாம். அப்பொழுது தாராளமாக நீங்கள் எந்த கம்பெனியை மனதில் நினைத்தும் கேட்கலாம் நம்ம ஊர் “ராயல் கோச்சிலோ, வீகேஏ பாலிமர்சிலோ, சபரி டெக்ஸ்டைலிலோ அல்லது அதையும் தாண்டி இன்ஃபோசிஸிலோ, டீ.சீ.எஸிலோ அல்லது க்ரிண்ட்லேஸ் பேங்கிலோ கூட வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?” என்று கூட கேட்கலாம், அவரும் சோளியை உருட்டிக் குறி சொல்லுவார். அதனால் உங்களுக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும் என்று சொல்லவில்லை.அது தான் அவருடைய வேலை என்று சொல்கிறேன். அந்தப் பூசாரி மிகவும் நல்லவர், சிரித்த முகமும் கூட, எப்பொழுதுமே நல்ல சகுனம் தான் சொல்லுவார். ஆனால் அவருக்கு உங்கள் கனவு நிறுவனத்தின் பெயர் வாயில் நுழைய வேண்டும். மற்றபடி நிற்காத வாகனங்களில் நீங்கள் பயணிக்கும் பொழுது கன்னத்தில் போட்டுக் கொள்ளலாம்.
 முனீஸ்வரன் கோயில், செல்லாண்டிபட்டி ரயில் பாலத்திலிருந்து, CC பாலத்திற்கு இடையே உள்ள …………………….. 30 வருடம் முன்பு வரலாறு தெரியாத, 26 வருடம் முன்பு வெயிலில் காய்ந்த, அடுத்த ஆண்டு விலங்குகளுக்கு பலி கொடுக்க ஒரு பீடமும், 23 வருடம் முன்பு சிறிய கூடாரத்தின் முன் சில வேல்களுடனும், 20 வருடத்திற்கு முன்பு சிறிய கான்கிரீட் கோயிலாய் – போர்வெல் வசதியுடன், அருகில் ஒரு பெட்டிக் கடையுடனும், 18 ஆண்டுகளுக்கு முன்பு கிடா வெட்டி சமைக்க ஒரு சமையற்கூடமும், அடுத்த இரண்டாண்டுகளில் எதிரே ஒரு குதிரை வீரனாகவும், அதற்கும் அடுத்த ஆண்டே அருகில் ஒரு பிள்ளையார் கோயிலும் அதற்கடுத்த ஆண்டே ஒரு நிழற்குடையுமாக மாறிய எல்லை காக்கும் அவ்வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முனீஸ்வரன் கோயில். எல்லா புதிய வண்டிகளுக்கும் அங்கே தான் பூஜை பரிகாரங்கள் நடைபெறும், தனியார் பேருந்துகள் எல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் வீடு திரும்புகையிலோ அல்லது கரூர் செல்கையிலோ தேங்காய் உடைப்பார்கள். உழவர் சந்தைக்கு இருந்து வரும் முதல் லோடு எழுமிச்சை நம் கோயிலுக்குத் தான். மற்ற நாட்களில் எல்லாம் பயணிகளிலிருந்து ஓட்டுனர் வரை சல்யூட் போடுவது போலவோ, ஃபிளையிங் கிஸ் போலவோ கண்களை ஒற்றிக் கொள்வார்கள். சாலை விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் அங்கு வந்து பொங்கல் வைப்பார்கள். பலர் கிடா வெட்ட நேர்ந்து கொள்வார்கள். அவர்கள் இறந்தவர்களோடு தொடர்பு உடையவரா?, அல்லது பிழைத்தவர்களோடு தொடர்பு உடையவரா? இல்லை அக்கோயிலுக்கு முறை செய்ய வந்த உண்மையான பாத்தியம் உடையவர்களா? என்று ஆராய முடியாது. எல்லாருமே பக்தர்கள் தான் என்று விட்டுவிடுவோம்.
 முனீஸ்வரனிடம் கேட்கப்படும் வேண்டுதல்களில் பெரும்பான்மையானவை நமது பயணத்தில் எந்த விபத்தும் நிகழாதிருக்க வேண்டும் என்பது தான். அந்த தொழில் நகரின் அசுர வளர்ச்சியை அங்கு சென்று வந்து கொண்டிருக்கும் அதிவேகப் பயணங்களும் சாத்தியப் படுத்திக் கொண்டிருந்தன. இதில் செட்டிநாடு சிமெண்ட் பேக்டரிக்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கை வேறு. ஆக இக்கதை இதைப் பற்றியது தான், சாலை விபத்துகள்; பெரும்பாலும் ஒவ்வொரு சனிக்கிழமையிலோ, வெள்ளியிலோ மணவாடிக்கு பக்கத்துல ஒரு “ஆஸ்ஸிடென்ட்” என கதை சொல்லும் அக்காக்களை நீங்கள் வெள்ளிக் கிழமை கோயில்களிலோ, சனிக் கிழமை சந்தைகளிலோ அல்லது கடைத் தெருவிலோ பார்க்கலாம். அந்தப் பகுதியில் அவசர சிகிச்சை செய்யப்படும் என்று போர்டு வைக்கும் MBBS டாக்டர்களுக் கெல்லாம் உடனடியாக அரசு வேலைக் கிடைத்தது. அதனால் விபத்தென்றால் ஒரே வழி பத்து கிலோமீட்டர பறந்து கரூர் செல்வது தான். அங்கு நிகழும் விபத்துகளில் பெரும்பாலும் இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் தான் மரணித்துப் போவார்கள். சில சமயம் பேருந்தில் தொங்கியபடி வருபவர்கள், குடித்து விட்டு அப்பகுதியில் உள்ள மரத்திலோ, சின்ன பாலத்திலோ அல்லது வேறு வாகனத்திலோ முட்டிச் சாகும் சொகுசுக் கார்களும் உண்டு. அந்தப் பகுதிகளில் மட்டும் நிகழும் விபத்துகளில் பெரும்பாலும் பிழைக்கும் எண்ணிக்கைக் குறைவு தான்.
 வெங்கக்கல்பட்டியைத் தாண்டியதும் பொதுவாக எல்லோரும் ஆக்ஸிலேட்டரில் அழுத்தம் கொடுத்து விடுவார்கள். ஏனென்றால் தொழில் நகரான கரூரில் டவுன் பஸ்ஸுகளும், மஃப்சல் பஸ்ஸுகளும் மந்தைகளைப் போல பயணிகளை அடைத்து வைக்க எடுத்துக் கொள்ளும் கூடுதல் வெய்ட்டிங் நேரத்தையும்; நகரில் ஊர்ந்து செல்லும் நேரத்தையும் கனக்கிட்டு, இந்தப் பகுதியில் வேகமாகப் பேருந்தை விரட்டினால் தான் சமன் செய்து வெள்ளியனையிலோ, கூடலூரிலோ, பாளையத்திலோ வரும் மினிபஸ்களின் பயணிகளுக்கு கனெக்‌ஷன் கொடுக்க வேண்டும். இதில் தனியார் பேருந்துகளின் மத்தியில் போட்டி வேறு. வெங்கக்கல்பட்டியில் இருக்கும் ஒரு கோழிப் பண்ணையைக் கடந்ததும் சாலையானது மேட்டில் ஏறும் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் தான் விபத்துப் பகுதி. அந்த மேட்டிலிருந்து வேகமாகக் கீழிறங்கி ஒரு சின்ன வாய்க்கால் பாலம் வழியாகத் தூக்கிப் போட்ட மறுபடியும் மேடேறி வளைந்தபடி மணவாடியைக் கடந்து செல்லும் சாலையில் தான் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அங்கு இறந்தவர்களின் துஷ்ட ஆவிகள் அங்கே தான் உலாவுகின்றன என்ற கட்டுக் கதைகள் வேறு. சிலர் வாகனங்களில் செல்லும் பொழுது வெள்ளையாக, புகை போல ஆவிகள் கடப்பது போலவும், சில மனித உருவில் லிஃப்ட் கேட்பது போலவும் தோன்றும், தனித்து இருசக்கர வாகனத்தில் செல்லும் சிலருக்கு திடீரென்று டபுள்ஸ் போவது போலே தோன்றும் அப்பொழுது நீங்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று பொதுவாக அறிவுறுத்தப் பட்டிருக்கும், நீங்கள் CC பாலத்தைக் கடந்து செல்கையில் முனீஸ்வரன் கோயில் உங்கள் கண்ணில் படும் நேரம் மறுபடியும் நீங்கள் தனியாக உங்கள் பயணத்தைத் தொடர்வீர்கள். ஆனால் இந்த பயத்திற்காக யாரும் இவ்வழியே பயணிப்பதைத் தவிர்க்க முடியாது, ஏனென்றால் நாம் போய் தான் ஆகவேண்டும், வெள்ளியணை பெரிய குளத்திலிருக்கும் தண்ணீர் வருடா, வருடம் நிரம்பியும், காய்ந்தும் தான் போகிறதே தவிர அம்மடை வழியே பாசனத்திற்கு திறந்துவிட யாரும் இல்லை. கிணறு இல்லாத தரிசாகவே சாலையின் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மையான ஊர்களில் நிலங்கள் இருக்கின்றது.
 ஆவிகள் என்பதை ஒரேடியாகக் கட்டுக் கதை என்று சொல்லி விட முடியாது,விபத்தில் அகால மரணமடைந்து விடுபவர்கள் ஆவிகளாக அந்தப் பகுதியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பக்கூடியது தான் என்னைப் பொருத்தவரை. அவர்கள் / அவைகள் தான் மேலும் மேலும் விபத்துகள் நடைபெறக் காரணம் ஆகிறது. நான் அந்த வழியாக செல்லும் போதெல்லாம் அந்த துஷ்ட ஆவிகள் இருக்குமே என்று கவனமாகவே செல்வேன். சில சமயம் வண்டியில் யாரோ பின்னாடி அமர்ந்திருப்பதைப் போல உங்களுக்கு கூடுதல் சுமை தெரியும், அவ்வேளைகளில் திரும்பிப் பார்க்காமலோ கண்ணாடியைப் பார்க்காமலோ வண்டியை ஓட்ட வேண்டும் என்பது பொதுவாக அங்கு போய் வருவோரின் நம்பிக்கை. அதே போல யாரும் அந்தப் பகுதியில் நடந்து சென்றால் கூட அவர்கள் மனிதர்கள் தானா என்று சந்தேகம் வந்துவிடுவதால் அவர்களை வேகமாகக் கடந்து விடுவேன், இல்லைத் தெரிந்த அளவுக்கு கந்த ஷஷ்டி கவசம் பாடுவேன். டு டு டு டு டு டு டு டு டு டு, டகு டகு, டிகு, டிகு, டிங்கு, டிங்குகு வரை. அதற்குள் மணவாடியைக் கடந்து விடுவேன். அதே சமயம் இப்படி பாடிக் கொண்டே இரவில் வரும் வேளை வண்டியில் காலைத் தூக்கியும் வைத்தவாறே தான் வர வேண்டும், அதுவும் வேகமாக. ஏனென்றால் இரவில் தான் நிறைய பாம்புகள் சாலையைக் கடக்கின்றன, இந்தப் பகுதியில் பாம்புகள் மிக அதிகம் என்பதால் வெள்ளைக்காரனே குஜிலியம்பாறையில் பாம்புக்கடிக்கென மருத்துவமனை கட்டியிருக்கிறான் தெரியுமா??. நானே இது வரை 5-6 பாம்புகளில் வண்டியை ஏற்றியிருக்கிறேன் எல்லாமுமே அந்தப் பகுதியில் தான். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் ஊர் மக்கள் யாவரும் தினமும் நகரத்திற்குப் போய் வர வேண்டிய வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்று எழுதுவது சமூகப் - பொருளாதாரக் கட்டுரை போல மாறி விடும்.
 அந்த இடத்தில் நிகழும் விபத்துகள் மிகவும் கோரமாகவே நிகழ்ந்து வந்தாலும், அங்கு செல்லும் யாவரும் மெதுவாக செல்வதேயில்லை. ஆனாலும் முனீஸ்வரனைக் காணும் பொழுது ஒவ்வொரு முறையும் நன்றி சொல்வதை நாங்கள் வழக்கமாய் வைத்திருக்கிறோம். திடீரென்று அந்தப் பகுதியில் நிகழும் விபத்துகள் குறைய ஆரம்பித்தன. அதாவது முனீஸ்வரன் கோயிலைக் கடந்தும், ஏன் ஊருக்குள்ளேயும் கூட விபத்துகள் நிகழ ஆரம்பித்து விட்டன. ஆனால் அந்த விபத்துப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தன. சில மாதங்களாக எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருந்தது. இதற்கும் என் நண்பன் தங்கவேலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று தெரிய வரும் போது நான் அவ்வளவு எளிதாக நம்பவில்லை, ஒரு சந்தேகம் மட்டுமே இருந்தது. சில வருடங்கள் கழித்து இன்று அவனிடம் போனில் பேசும் போது தான் நம் சந்தேகம் சரிதான் என்று தோன்றியது.
 தங்கவேல் ஒரு மினிபஸ் கம்பெனியின் செக்கர் பணியில் இருந்தான். அவன் என் பள்ளி நண்பன், எங்களுக்குள் பெரிய தோழமை சரித்திரம் இல்லாது போனாலும். எங்கே போனாலும், பார்த்தாலும் “நீ எப்படியிருக்கிற? அவள் எப்படியிருக்கிறா? இன்னும் அவ உனக்கு செட் ஆகலையா?” என்று கேட்கும் பள்ளி மாணவர்களில் அவனும் ஒருவன். அவன் எப்படி இந்த சாலை விபத்துகள் குறையக் காரணம் ஆனான் என்று தெரிய வேண்டுமாயின். அவன் எப்படி வாழ்க்கையில் உயர்ந்தான் என்று நீங்கள் அறிய வேண்டும். தினமும் கரூர் சென்று பிழைப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று நொந்து கொள்ளும் பிரஜை தான் என்றாலும், தொழில் தொடங்குவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அல்லவா? அவனுக்கு அந்த தைரியத்தை அவன் சார்ந்த அச்சமூகம் கொடுத்திருக்கிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அவ்வூரில் பெரும்பான்மையானவர்கள்.
 அவர்கள் வீடு மணவாடிக்கு முன்னே, சரியாக அந்த விபத்துப் பகுதியில் மையத்தில் உள்ள தோட்டத்தில் அமைந்திருக்கும். ஹாலோ பிளாக்குகளை வைத்து தன் வீட்டிற்கு பின் புறம் சில கட்டுமானங்கள் செய்து நாட்டுக் கோழிப் பண்ணை ஒன்றை ஆரம்பித்தான். பண்ணை தொடங்கிய காலத்திலேயே எல்லோர் கவனமும் பெற்றது. அங்கே போவோர் வருவோரெல்லாம் அந்தப் பகுதியில் புதிதாய் வந்திருக்கும் கோழிப் பண்ணையை பற்றி பேச ஆரம்பித்தனர். வெங்கக்கல்பட்டியிலே முன்னர் இருந்தது பிராய்லர் கோழிப் பண்ணை. ஆனால், தங்கவேல் வைத்திருப்பது நாட்டுக்கோழிப் பண்ணை. இரண்டாம் கையாக ஒரு பஜாஜ் எம்.80 ஒன்றும் வாங்கியிருந்தான். என்ன நேரமென்று தெரியவில்லை, அவனுக்கு வியாபாரம் நல்லபடியாக போக ஆரம்பித்தது. அந்த இடம் அவ்வழியாக போவோர் வருவோரால் பேசப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
 இரண்டு பள்ளிகள் அங்கே புதிதாய் திறக்கப்பட்டன, ஒன்று அந்தக் கோழிப் பண்ணைக்கு அருகிலும், மற்றொன்று சாலைக்கு மறுபுறமும் தொடங்கப்பட்டது. அந்த மண்ணின் ராசி இரண்டு பள்ளிகளுமே வெகு சீக்கிரமாக நல்ல பெயர் எடுத்தன. பள்ளியில் மாணவர்கள் வரவை கணக்கிட்டு ஒரு பெட்டிக் கடையும், பஞ்சர் கடையும் வந்தது. பள்ளி பிரபலமாக ஆரம்பித்தது, எல்லாப் பேருந்துகளும் கட்டாயம் நிற்க வேண்டும் என்று ஆணையும் வந்தது கலெக்டரிடமிருந்து. பண்ணையும் நல்லபடியாக போக ஆரம்பித்தது, ஆனால் அவன் பண்ணையைப் பற்றி எல்லோரும் பேசுவது சுவாரஸ்யமாகவே இருந்தது. பள்ளி இருக்கும் பகுதி என்பதால் வேகமாக வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப் பட்டன. அதே சமயம் அங்கு உலவிய பேய்க் கதைகளும் குறைய ஆரம்பித்தன. பைக்கில் வருவோர் சிகெரட் பற்ற வைத்து ஆசுவாசம் அடையுமிடமாக அந்த பெட்டிக் கடை திகழ்ந்தது. கலெக்டர் ஆபிஸ் அருகிலேயே இருப்பதாலும், 2008ல் ஏற்பட்ட ஷேர் மார்கெட் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக பங்கு வர்த்தனையில் ஏற்பட்டிருந்த பெரும் சரிவின் பொருட்டு தங்கள் முதலீட்டை நிலங்களில் அசுர வேகத்தில் நிலத்தில் பாய்ச்சினர். இப்பொழுது தங்கவேலின் பண்ணையைச் சுற்றிலும் வீட்டு மனைகள்.
 முனீஸ்வரன் கோயிலும் மிகச் சிறப்பாக வளர்ந்து விட்டது. கடைசியாக நான் அவ்வூருக்கு சென்ற போது, அந்தக் கோயிலின் பின்புறம் ஏதோ ஒரு கட்டடம் கட்டப்பட்டு வந்தது. புறவழிச் சாலையும் வெங்கக்கல் பட்டி வழியாக வந்துவிட்டது. ஆனால் நேற்று கூடலூரைச் சேர்ந்த என் நண்பன் ’அருள்’ வண்டி ஓட்டிய படியே என்னுடன் பேசி வந்தான். இப்பொழுது எங்கேயடா இருக்கிற என்று கேட்டேன், “மணவாடிக்கு கொஞ்சம் முன்னாடி” என்றான். “வண்டியை ஓட்டியபடியே பேசுவது ரிஸ்குடா” என்று கண்டித்தபடி போன் இணைப்பை துண்டித்தேன். சற்று நேரம் கழித்து வீடு சென்ற என்னை அழைத்த அவனிடம், “இப்போது சாலை விபத்துகள் எப்படி?” என்று கேட்டேன்.
“அத ஏன் கேக்குற!! தெனமும் ஒன்னுரெண்டு நடக்குது எல்லாமே ஸ்பாட்லயே ஆயிடுது” என்றான். அதிகமாக “எந்தப் பகுதியில நடக்குது?”என்று அவனிடம் நான் கேட்க, “அவன் அதே வெங்கக்கல் பட்டிலயிருந்து மணவாடிக்கு இடையில தான் நெறைய நடக்குது. ஒரு பயலும் மெதுவாப் போறதில்லை, பத்தாதைக்கு இந்த பைபாஸ் ரோட்டுல வர்ற வண்டிகளாலத் தான் பெரிய பிரச்சினை” என்றான். “இப்போலாம் லைனுக்கு தனியா அந்தப் பக்கம் போறதுக்கே பயமா இருக்கு தெரியுமா?? நெறைய ஆவிங்கள்ளாம் சுத்துதாம், கொஞ்ச காலம் எந்த ஆக்ஸிடெண்டும் பார்க்காம இருந்தேன், ஆனா இப்போ?? போன வாரம் ஒரு காட்டான் மாறி என்னை முந்திக்கிட்டு போனான். வந்த வேகத்துல நேரா போயி அந்த வாய்க்கா பாலத்துல முட்டி, ஓட்டி வந்தவனுக்கு செம அடி, கூட வந்தவன் ஸ்பாட்டாயிட்டான்!! அந்தச் சத்தம் கூட இன்னும் எங்காதில கேட்குது” என்று தான் பார்த்த காட்சியை விளக்கினான்.
நான் அவனிடம், “ டே!! ஆவிகளால எல்லாம் ஒரு கெடுதலும் நடக்காது, எல்லாம் பைபாஸினால் வந்த வினை, காவேரில இருந்து மண் எடுத்துப் போகும் லாரிலாம் இந்தப் பக்கமாத்தான வருது?? “ என்று கேட்டேன், ஆமோதித்தான். “ஏன் இந்த தங்கவேல் பயலும் கோழிப் பண்ணைய நிறுத்திட்டானோ?” என்று சந்தேகத்துடன் கேட்டேன். “ஆமாடா!! உனக்கும் தெரிஞ்சு போச்சா?”, “கிரவுண்டு வெல ஏறிக்கிட்டே போதும்ல, அழகா வித்துட்டு, வெள்ளைக் கதர் சட்டை மாட்டிட்டு ஜாலியா வாழலாமே!! தவிர வெள்ளியணையிலயே மூணு வாத்துக் கறிக் கடை வந்துருச்சு அதுவும் டாஸ்மாக் பக்கத்துல. இதுல போயி கறிக்கோழி விக்குறதுக்குன்னு எவ்வளவு நாள் தான் இருக்கமுடியும்? அதனால அவனுக்கும் தொழில் சுத்தமா படுத்துகிச்சு” என்று அவன் தரப்பு ஞாயங்களை எடுத்து வைத்தான் அருள். அப்படித் தான் ரொம்ப நாட்களாக தீராமல் இருந்த என் சந்தேகம் ஊர்ஜீதமாகியது. ஆம் தங்கவேல் தான் அங்கு இது நாள் வரைக்கும் வண்டிகள் மெதுவாக செல்லவும், விபத்துகள் குறையவும் காரணமாக இருந்திருக்கிறான். அந்தப் புதிய பள்ளியும், கிராமச் சாலையும், பேருந்து நிறுத்தமும் கூட ஒரு பட்டாம்பூச்சி தேற்றம் போலே ஏதேச்சையாக அவனே காரணம் ஆனான். அதற்கு அவன் நிர்வாகம் செய்து வந்த தொழிலின் பெயரை பிளெக்ஸ் போர்டில் அடித்து, இருட்டிலும் பளிச் என்று தெரியும் பச்சை வண்ணத்தில் வடிவமைத்தது தான். அது தான் அவன் வெற்றிக்குக் காரணம் என்பது புரிந்தது
அந்தக் கடையின் பெயர் “நமீதா நாட்டுக்கோழிக் கடை”. ஃபிளக்ஸ் போர்டின் இரு புறமும் சிவப்பு ஆடையணிந்த நமீதாவின் கவர்ச்சியில் “இங்கே நாட்டுக் கோழி கிடைக்கும்” என்ற வாசகம் விளம்பரமாக நட்டு வைக்கப் பட்டிருந்தது.
- ஜீவ.கரிகாலன்


இந்த படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை ..ஹி ஹி ஹி



செவ்வாய், 19 நவம்பர், 2013

பாரத ரத்னா சச்சின் - பஜ்ஜி - ஜொஜ்ஜி 48


வழக்கம் போல மக்கள் கவனம் இருக்கும் இடத்தில் எல்லாம் அரசியல் செய்து லாபம் பார்க்கும் மீடியாக்களும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து சமீபத்தில் கொள்ளையடித்த இடம் கிரிக்கெட் மைதானம்.

கடந்த உலகக்கோப்பையுடனோ அல்லது இன்னமும் விளையாடும் ஆசையுடனோ இருக்கும் சச்சினை 200 என்கிற Benchmarkஐ வைத்து கேட்கப்பட்ட கேள்விகள், அவரை ஓய்வு குறித்த ஒரு முடிவை எடுக்க வைத்தது. சுமார் 2 மாதங்களுக்கு முன்னராகவே அவர் சொன்ன ஓய்வுத் தேதியை மட்டும் வைத்து எத்தனையோ கோடிகள் அள்ளப் பட்டிருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, அவர் ஓய்வு பற்றிய தகவல் சொன்ன அன்றே ஓய்வு எடுக்க ஆரம்பித்தது போல் எத்தனை விஷேசக் கட்டுரைகள், செய்திகள் , விவாதங்கள்.

இது ஒரு குறிப்பிட்ட ஒரு விளையாட்டின் மீது மட்டும் அக்கறை கொண்டுள்ள ஒரு நாட்டின் அவல நிலையினைக் காட்டுகிறது. உண்மையில் இது பணத்தைக் கொட்டிக் குவிக்கும் விளையாட்டாக இருந்த கிரிக்கெட், ஐ.பி.எல்-ற்குப் பின் சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கைகளின் சப்தமும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடந்த சி.பி.ஐ அமைப்பின் கருத்தரங்கில் அதன் இயக்குநர் ரஞ்சித் சிங் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்கினால் கருப்புப் பணப் புழக்கத்தைக் குறைக்கலாம் என்று கருத்து சொன்னது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பேச்சு.

நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவனமும், ஆர்வமும் ஒரே விளையாட்டின் மீது படிந்திருப்பது வளர்ச்சி ஆகாது அது ஒரு வீக்கம் மட்டுமே. கடந்த ஆண்டு மகளிருக்கான கபடிப் போட்டியில் தங்கம் வென்று வந்த மகளிரைக் கண்டு கொள்வாரில்லை. சிறப்பு ஒலிம்பிக்குல் 2 பதக்கங்கள் வென்ற சீதாசாஹூ இன்னமும் சாலையோரம் பாணி பூரி விற்கும் தொழிலையே செய்து வருகிறார்.

செஸ் நமது நாட்டின் தொன்மையான விளையாட்டு என்பதைக் கூட நாம் மறந்து விட்டிருக்கிறோம், கபடியை சீண்டுவாரில்லை, தேசிய விளையாட்டான ஹாக்கியைப் பற்றிப் பேசுவாரில்லை, உலகத்திலேயே தலை சிறந்த விளையாட்டாகக் கருதப்படும் கால்பந்து விளையாட்டின் நிலைமை நம் நாட்டில் பரிதாபம். பாய்சங் பூட்டியா இந்திய கால்பந்திற்குக் கிடைத்த கடவுளின் குழந்தை என்று பாராட்டப் பெற்றவர். இந்த சிக்கிம் மனிதரைப் பற்றிய கேள்விகள் கூட நமது பள்ளிக்கூட விநாடி வினாக்களில் கேட்கப் படுவது இல்லை. அரசு நினைத்திருந்தால் உலக அரங்கில் ஒரு நல்ல கால்பந்து அணியை உருவாக்கியிருக்க முடியும், சரவதேச தரத்துடன் விளையாடி வந்த இவர் வேறு நாட்டில் பிறந்திருந்தால் இந்நேரம் மிகப்பெரிய புகழும் பணமும் ஈட்டியிருப்பார் என்பது மட்டும் உறுதி.

அது போல சர்வதேச ஹாக்கிப் போட்டிகளில் மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்த தியான் சந்த் நம் நினைவுகளில் இருந்து காணாமல் போய்விட்டார். இவர் பிறந்த ஆக்ஸ்டு 09 தான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. விஸ்வநாதன் ஆனந்தின், லியண்டர் பயஸ் போன்ற அத்தனை பேரும் அவரவர் துறைகளில் சாதித்தவர்களே, இதில் கிரிக்கெட்டிற்கு மட்டும் இத்தகைய கௌரவம் கொடுப்பது அரசின் பொருப்பற்ற தன்மையினையே காட்டுகிறது.

நமது மற்ற அமைச்சகங்களைப் போன்றே நாட்டின் விளையாட்டு அமைச்சகமும் ஊழல் மிக்கதாகவே காணப்படுகிறது, கிரிக்கெட் மட்டுமே விளம்பரங்களாலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் ஈடுபாட்டிலும், இப்போது ஆட்டம், பாட்டம் கவர்ச்சி என்று மாறி விட்ட 20-20 போட்டிகளாலும் மற்ற விளையாட்டுகளை இன்னமும் சீரியதாக அகற்றிக் கொண்டிருக்கிறது. இதில் சச்சினுக்குக் கொடுக்கும் பாரத ரத்னா மற்ற துறையை, சமூகத் தொண்டு புரிந்து வருபவர்களை அவமதிப்பதைக் காட்டிலும், கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டைப் பற்றிய கனவையும் நம் இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்காது என்பது மட்டும் உறுதி.

- ஜீவ கரிகாலன்


ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஒரு ஆக்ஸிடெண்டல் ஸ்டோரி அல்லது புத்தகப் பார்வை

பஜ்ஜி -சொஜ்ஜி - 47

ஒரு ஆக்ஸிடெண்டல் ஸ்டோரி அல்லது புத்தகப் பார்வை



இந்த புத்தகத்தின் திறனாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்றிரவு வீடு திரும்புகையில் நள்ளிரவு மணி 12.30 இருக்கும், இடையில் நண்பர் பாலாவை வீட்டில் சேர்த்து விட்டு என் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். நான் மட்டும் தனியாக தெருக்களின் வழியே குறுக்கு வழியில் சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு வளைவில் திரும்பியவுடன் வண்டியை நிறுத்திவிட்டேன். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ.. அந்த நேரம் நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன்.. ஆம், ஏதோ ஒரு நள்ளிரவில், ஏதோ ஒரு நகரத்தில் (நான்கைந்து- நகரங்களில் நான் தங்கியிருக்கிறேன்) இருக்கிறேன் என்ற உணர்வு மட்டுமே இருந்தது. வேறு எந்த பிரக்ஞையும் இல்லை.
எல்லா நகரங்களுமே கிட்டதட்ட இரவில் இப்படித்தான் ஒரே மாதிரியான விளக்கொளி, நாய்கள், நிசப்தம் என்ற ஒழுங்கில் இருக்கின்றன. நான் எப்படி இந்த இக்கட்டில் இருந்து வீடு திரும்பப் போகின்றேன்.....???

**************************

சுஜாதா எழுதிய புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்கள் என்று ஒரு பத்து பேரிடம் பட்டியலை வாங்கிப் பாருங்கள், பெரும்பாலோனோர்களின் பட்டியலில் ஒரு புத்தகம் இடம் பெற்றிருக்கும் -அது ஸ்ரீரங்கத்து தேவதைகள். அவர் கொஞ்சம் கூட சிரமப்படாமல் எழுதியிருக்க வேண்டிய புத்தகம் இது. அவருடைய Nostalgic பக்கங்கள் தான், ஆனால் ஒரு மனிதன் இழந்துவிட்ட தன் பால்யங்கள், தனக்குத் திரும்பவும் கிடைக்காத சந்தோஷங்கள், காணாமல் போன பழமையின் சுவடுகள் போன்ற சமாச்சாரங்கள், நமக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அக்ரகாரத்து நினைவுகள் கூட நமக்கு நெருக்கமான புத்தகமாகப் பிடித்துப் போகக் காரணமாயின.

அப்படிப் பட்ட ஒரு புத்தகமாகத்தான் எனது favorite பட்டியலில் சேர்ந்து கொண்டது இந்த புத்தகம். அந்த புத்தகத்தின் பெயர்  “நம்மோடு தான் பேசுகிறார்கள்”. இரண்டு நண்பர்களின் உரையாடல்கள் தான் இந்த தொகுப்பு. இவர்கள் நண்பர்கள் என்பதால் தான் அவர்களுக்கு இடையே இருக்கும் மீடியத்தில் எந்த வித அலங்காரமும் இன்றி(?) எளிமையாக உரையாடல் நடந்தேறக் காரணமாகிறது, ஆனால் அலங்காரம் பற்றிய உரையாடல்கள்  இதில் அதிகம் இருக்கிறது என்பது வேறு விஷயம் (அதைப் பற்றி பல கட்டுரைகள் வந்துவிட்டன). இதைப் பற்றி நான் கூட முன்னரே ஒரு பதிவு செய்திருக்கிறேன். இப்படி இரண்டு ஆத்மார்த்தமான நண்பர்கள் முன் வைக்கும் உரையாடல்களும், அவர்கள் கையாளுகிற மொழியும் தான் நம்மையும் அவர்கள் அருகில் சம்மணமிட்டு அமர வைத்து, கலந்து கொள்ள வைக்கிறது.

அப்படி அவர்கள் நம்மோடு என்னதான் பேசுகிறார்கள்?? என்று கவனிக்கும் போது முதலில் மிகச் சாதாரணமாய் தோன்றுகிற விசயங்கள் தான் நமக்கு அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் அவை எதற்கு அப்படி ஒருமித்து க்யூவில் நிற்கின்றன என்று மறுமுறை வாசிக்கும் பொழுது தான் விளங்க ஆரம்பித்தது. கடந்து செல்ல முடியாத வலிகள் தான் இந்த தொகுப்பிற்கான உந்துதல் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது நவீன உலகில் பிழைப்பதை மட்டுமே வாழ்க்கையாக நம்பிவிட்டு நாம் அப்புறப்படுத்திவிட்ட கலையுணர்வு மற்றும் தொன்மைகள் மீது நமக்கிருக்கும் கடமைகளை எண்ணி அவர்கள் வருந்தியிருப்பதைக் காட்டுகிறது. எவ்வளவு எளிதாக சுவர் ஓவியங்கள் மீது நமது பெயரை எழுதி அதை சேதப்படுத்தும் மனநிலை பொது ஜனங்களுக்கு உருவாகிவிட்டது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பொறுப்பற்றச் சமுதாயம் மீது, இளைஞர்கள் மீது தமது கோபத்தையும், ஆற்றாமையும் வெளிப்படுத்தி எத்தனையோ எழுத்துகளையோ பார்த்துவிட்டாயிற்று, இவர்கள் என்னப் பேசப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா?? ஆம் அவர்களும் மீட்டெடுப்பைப் பற்றித் தான் பேசுகிறார்கள். ஆனால் இந்த மீட்டெடுப்பு ஒரு புரட்சிப் படையை உருவாக்கி நம் அரும்பெரும் பொக்கிசங்களைக் காப்பதோ அல்லது மீட்டெடுப்பதோ அன்று. இயல்பான வளர்ச்சியில் இருந்து, திடீரென்று ஒரு அசுர வேகத்தில் நமக்கு ஏற்பட்ட வளர்ச்சி நிலை, அறிவியல் தொடர்பு சாதனங்கள், மேலைநாட்டு மோகங்கள் கட்டிபோட்டு விட்ட நம் கண்களை அவிழ்த்து விடுவது தான் இந்த மீட்டெடுப்பு.

இங்கேயும் எப்படி உலகமயமாக்கல் பற்றிய உரையாடல் வந்து விட்டதே என்று சலிப்படையத் தேவையில்லை. உலகமயமாக்கல் பற்றி நேரிடையாக அவர்கள் பேசவில்லை, அவற்றின் நல்லது கெட்டது பற்றிய உரையாடல்கள் நடத்தவில்லை, இந்த தொன்மையான தேசம், தன் கலைத் தன்மையை உலகம் முழுக்க வியாபித்திருந்த காலம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே. ஆனால் இந்த உலகமயமாக்கல் தந்திருக்கும் வளர்ச்சியில் நமது மனநிலையில் ஏற்பட்டிருக்கும் அதீத மாற்றங்கள் தான் எவ்வளவு பெரிய இடைவெளிகளை விட்டிருக்கிறது என்று இத்தொகுப்பு பேசுகிறது, நம்மோடுதான்.

செவ்வியல் கலைகளை நோக்கித் தேடியலையும் பயணம் என்பது ஏதோ சில கலைஞர்களுக்கானது மட்டுமல்ல, நமது வாழ்க்கையில், பொருளாதாரத்தில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அதே சமோசா கடை, அதே காபி கடையைத் தேடிச் சென்று அருந்துவதைப் போலத் தான் என்று நம்மைவிட்டு அந்நியப்படாமல், வாசகர்களாகிய நம்மையும் அவர்கள் தேடலில், உரையாடலில் இணைத்துக் கொள்கிறார்கள் இந்த கலைஞர்கள்.

சமோசா, காபிக் கடை  என்றும் தஞ்சாவூர் கோயில், ஓவியங்கள், பேராசிரியர் இராமனுஜம் மீட்டெடுத்த ஒரு நாடகம் என்று ஆரம்பிக்கின்ற உரையாடல் ரசனை என்றால் என்ன? அலங்காரம் என்றால் என்ன? கலையுணர்வு என்றால் என்ன? thought process என்றால் என்ன? என்ற கேள்விகளைக் கேட்டுவிடுகின்றனர். சரியாக ஒவ்வொரு கேள்வியாய் நாம் பயணிக்கிற வழியும் சுவாரஸ்யமாகத் தான் செல்கிறது, தேர்த் திருவிழா, கோலங்கள், அம்மாவின் கலையுணர்வு, அப்பாவுடன் உரையாடல், பிராண்டிங் பற்றிய உரையாடல், ஸ்ரீதர் படத்தின் வண்ணங்களின் நேர்த்தி என்றெல்லாம் நம்மை ஒரே மூச்சில் வாசிக்க வைக்கத் தூண்டுகின்றன. முதன் முறை வாசிக்கும் போது உங்களுக்கு இந்த சுவாரஸ்யங்கள் மட்டுமே தென்படலாம், இவர்கள் அடுக்கும் கேள்விகளை கோர்த்துக் கொண்டே வந்தால் தெரியும் அவர்கள் மிகவும் திட்டமிட்டு பின்னப்பட்ட உரையாடல்களின் தொகுப்பு தான் இத்தனை எளிமையாகத் தோற்றமளிக்கிறது.

கலை உணர்வு ஒரு மீடியத்தைத் தேடி அது உருப்பெரும் முன் அது எப்படி இருக்கிறது என்ற உரையாடலைப் பதிவு செய்வதற்கான முயற்சி தான் அது, thought process & intellectual thought process பற்றிய பதிவுகள் தான் அவை, ஒரு படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இடையே இருக்கும் இயக்கம் பற்றி கலைஞர்கள் பேசிக் கொள்ளலாம், ஆனால் நம் போன்ற வாசகர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு சமோசா கடை, ஊர்த் திருவிழா, ஸ்ரீதர்,பாலா திரைப்படங்கள், சின்ன யானை வழியாகக் கூட்டி வருகிறார்கள். இப்போது அந்த கேள்வியை உற்று கவனிக்கலாம் அல்லவா??ஒரு படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இடையே இருக்கும் இயக்கம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் எழுகிறது. இது இந்த நண்பர்களின் வெற்றி

இப்புத்தகம் வாசித்தவுடன், முழுமையாக நாம் எத்தனையோ சந்தோசங்களை பறிகொடுத்து விட்டு நிற்கிறோம் என்ற வெறுமை அப்பிக் கொள்கிறது. எங்கேயோ ஓடுகிறோம், தேடிகிறோம், ஏதோ கிடைத்துவிட்டதாக மகிழ்வடைகிறோம், ஆனால் அந்த மகிழ்ச்சி நிறைவானதா அல்லது உண்மையானதா என்றால் இல்லை. அது எப்படி மகிழ்ச்சியானதாக இல்லை என்ற பட்டியலும் இந்த புத்தகத்தில் கிடைக்கிறது.

*1980களில் தஞ்சை சுவோரோவியங்கள் மீது Distember பூசும் பொழுது, சாலையில் நின்று போராடிய மனங்கள் இன்று எந்த அக்கறையும் காட்டாமல் வெறும் இஞ்சினியர்களாய் மட்டும் எண்ணிக்கை காட்டுகிறது.

*மஹாராஸ்ட்டிராவில் 450க்கும் மேற்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆர்ட் சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. (ஆனால் நம்மூரில்???)

*பரவலாக இயல்பாக இருந்த தொழிலை  அரிதாக்கி, இது அரிதாகிவிட்டது காப்பாற்ற நான் மட்டுமே மிச்சம் என்று கொள்ளையடிக்கும் பண்பாட்டுக் காவலர்கள்

இது போன்ற கேள்விகள் எழுப்பும் தாக்கம் எளிதில் சொல்லி விட முடியாது தான். ஆனால் ஒரு பொறுப்புணர்வைத் தூண்டும், ஆனால் செயல்பாடுகளைக் கோருமா என்கிற கேள்வி Out of the context தான். அதே சமயம் செயல்பாடுகளைத் தூண்டும் என்பது உறுதி, “ஒரு சாதாரணமான, ஒரு இயல்பான, ஒரு சந்தோஷ்மான, ஒரு முழுமையான வாழ்க்கையை வாழக்கூடிய ஒவ்வொருத்தனுமே ஒரு படைப்பாளி, ஒரு நல்ல இயக்குமுடன் கூடிய படைப்பைப் படைப்பவன்”, இதை மனதிற்குள் கோயில் கட்டி இறைவனுக்கு சேவை செய்த முக்கிய நாயன்மார்களுள் ஒருவரான பூசலார் நாயனாருடன் இந்த உரையாடல் முடிவடைகிறது.

அதற்குப் பின்னர் இருக்கும் அரூபம் பற்றிய பதிவுகள் இந்த கருத்துகளோடு முழுதும் ஒத்த நிலையில் தான் முழுமையாக நாம் ஒன்ற முடியும், அது நவீன ஓவியங்களோடு பரிச்சயமாகத் தேவைப்படும் மனநிலை.
*******************************
ஒரு மனநிலை ஓர் இரவில் ஒரு பத்து நிமிடம் என் இயக்கத்தை, என்னை ஒரே இடத்தில் நிறுத்தியிருக்கிறது. நிச்சயமாய் இது மரணம் இல்லை, இது விபத்து இல்லை உறுதியாக இது தியானமும் இல்லை. இந்த புத்தகத்தின் தாக்கம் இல்லை என்று என்னால் சொல்லிவிட முடியவில்லை ( இரண்டு முறை வாசித்திருந்தேன்), ஏனேன்றால் எனக்குள் உரையாடல் நிகழத் துவங்கியிருந்தது. நான் அந்த நேரத்தில் எதை மறந்திருந்தேன் என்பதை உறுதிப் படுத்த வேண்டியிருந்தது. நான் முதலில் என்னை யார் என்று நினைவில் கொள்ள வேண்டுமா?? அல்லது எனது முகவரி எங்கு என்று தெரிந்து கொள்ள வேண்டுமா??

இப்போதைக்கு என் முகவரி மட்டும் போதும் என்று நினைத்தேன், ஆனால் பிரயோஜனம் இல்லை. எங்கிருந்து வந்தோம் என்று கூட மறந்து விட்டது. சரி, நான் யார்?? என்றெல்லாம் கேள்வி கேட்பது எனக்கே ”கொஞ்சம் ஓவரா போறோமா??” என்று கேட்க வைத்தது. கொஞ்ச நாட்களாக SELF பற்றிய விவாதங்களில் வேறு நிறைய கலந்து கொண்டேன், ஒரே ஒரு வழி தான் இருந்தது, நான் மறந்து விட்டது மற்றும் நினைவில் மீந்து கொண்டு இருப்பது இவ்விரண்டிற்கும் இருக்கும் இடைவெளி பற்றி கொஞ்சம் கவனிப்பது

ஆம், சற்று நேரத்தில் அந்த இடைவெளி நன்கு புலப்பட ஆரம்பித்தது, இடையே இருப்பது கொஞ்ச தூரம் தான், வண்டியை எடுத்துக் கொண்டு செல்வோம் என்பது தான் அது. பயணப்பட்டால் வேறு ஏதாவது ஸ்தூலங்கள் நமக்கு நியூரான்களுக்கு SMS அனுப்பி ஞாபகம் கொள்ள வைக்கும் என்று தோன்றியது. சில தெருக்கள் தாண்டும் வரை இல்லாத ஞாபகம், ஒரு விமானத்தில் ஒலியைக் கொண்டு - இது சென்னை கண்டிப்பாக 2008க்குப் பிறகு (2008ல் தான் நான் சென்னை வந்தேன்) என்று முடிவுக்கு கொண்டு வந்தது. பின்னர் கூவத்தின் நாற்றம், ஆஹா இது ஜாஃபர்கான் பேட் என்று ஞாபகம் அளித்தது. அப்படியெ கத்திப்பாரா வரை ஒரே Mental work தான், வண்டியை ஓட்டியது எல்லாமுமே -Sub-conscious தான். கத்திப்பாரா பாலத்தில் இருந்த சோடியம் விளக்கொளி, இரவல் நிலவொலி, மெட்ரோ ரயில் கட்டுமானச் சத்தங்கள், வாகனங்கள் இல்லாத சாலைகள் எல்லாமுமே ஒரு கம்போஷிசனாகி... என்னை மீட்டுத் தந்தன.

“நீ காளிதாசன் எனும் இயற்பெயர் கொண்ட ஜீவ கரிகாலன், படா குண்டன், லாஜிஸ்ட்க்ஸில் வேலை பார்க்கிற, அம்மா உன்னை வசைபாட வீட்டில் காத்திருக்கிறாள், வீட்டிற்கு போனதும் பாலாவுக்கு //am reached//என்று தகவல் கொடு, அந்த நிகழ்வைப் பற்றி ஒரு பதிவிடு , முக்கியமா மூனு ட்ரை ஜாமூன் சாப்பிட்டிருக்கிற ENO போட்டுக்கோ” என்று என்னை சகஜநிலைக்குத் திருப்பியது.

இந்தப் பதிவில் வரும் ஒர் இரவில் நடந்த கதையினை இவர்கள் தொகுப்பில் இறுதியாகப் பேசிய ஓவியத்தின் ILLUSTRATION ஆக நான் செய்திருக்கிறேன் (ஆனால் இது உண்மைச் சம்பவமும் கூட). ஏனென்றால் இந்த தமிழ்ச் சூழலில் ILLUSTRATION பற்றிய உரையாடல்களைக் கூடத் தேடிப் பிடிக்க முடியவில்லை,  நாம் ஏன் ஓவியத்திற்கு ILLUSTRATION ஆக கதைகள் சொல்லக் கூடாது என்று தோன்றியது.

பல புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன, வெகு சில புத்தகங்கள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நான் கொண்டாடுகிறேன் இந்த புத்தகத்தை, இவர் படைப்புகளைப் பற்றி பேசுவதற்கான பயிற்சியை, அந்த SPACEஇனை அவரிடம் இருந்தே எடுத்துக் கொள்கிறேன், இந்தப் புத்தகம் வழியாக இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்கையில், அரூபம் எனும் கடைசிப் பகுதியில் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுந்து தான், இந்தப் பதிவை எழுதுகிறேன்.
நன்றி

புத்தகம் : நம்மோடுதான் பேசுகிறார்கள்
ஆசிரியர்கள் : சீனிவாசன் - பாலசுப்ரமணியன்
பதிப்பகம் - வம்சி

ஞாயிறு, 10 நவம்பர், 2013

அலங்காரம் என்றொரு கலையுணர்வு - பஜ்ஜி-சொஜ்ஜி /046


எல்லா விடியல்களுமே அன்றைய இரவு எப்படி ஒரு மனநிலையைத் தரும் என்ற ரகசியத்தை மறைத்து வைத்தபடியே தான் விடிகின்றன..

நேற்று  “நம்மோடு தான் பேசுகிறார்கள்” எனும் ஒரு உரையாடல் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டத்திற்கு சென்று வந்தேன். நண்பர்களோடு அமர்ந்து சினிமா பார்ப்பதெல்லாம், இது போல கூட்டங்களுக்குச் செல்லும் நிறைவில் பத்து சதவீதம் கூட தராது என்று சொல்லலாம். அப்படியொரு நாள் தான் நேற்று.

இன்றைய நவீனச் சூழலில் தொன்மை, கிராமியம், ஆறு, இழப்புகள் என்று பேசிக் கொள்ளும் இடங்களில் பெரும்பாலும் மிஞ்சுவது எல்லாம் விரக்தி தான் இருக்கும் என்பது என் அவதானிப்பு, நேற்றோடு அவை மடிந்துவிட்டன. அப்படிப் பட்ட ஒரு உற்சாகமான கூட்டம் இந்த புத்தகத்தை முன் வைத்துப் பேசியது, அந்தவகையில் இந்த புத்தகம் சாதித்திருப்பது ஒரு பெரிய விஷயம் தான் என்று தோன்றியது. கலையானது எப்படி சாதாரன வாழ்வியலில் இருந்து உருப்பெற்று தன் மீடியத்தைத் தேடிப் பிடித்து ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்து தேவையைத் திட்டமிட்டு ஒரு வடிவத்தில் சென்று அமர்கிறது என்று இந்த புத்தகத்தைப் பார்க்கும் பொழுது ராட்டினச் சக்கரப் பயணமாக உற்சாகம் தொற்றிக் கொள்கிறது, இந்த புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் பேசுவோம்.

புக்பாயிண்டில் நடந்த இந்த புத்தகத்தைப் பற்றிய விமர்சனக் கூட்டத்தில் பவா, சைலஜா, சௌமியா, தமிழச்சி தங்க பாண்டியம், பாரதி கிருஷ்ணக் குமார் மற்றும் இந்த புத்தகத்தின்ஆசிரியர்களான ஓவியர்கள் ஸ்ரீநிவாசனும், பாஸ் என்கிற கே.பாலசுப்ரமணியன் அவர்களின் பேச்சுகளில் கிளம்பிய உற்சாகம் அறை முழுதும் பரவியிருந்தது. பாரதி கிருஷ்ணக்குமார் இதுவரை நான் பார்த்திராத மாதிரி வேறு மாதிரியான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

இதில் கோணங்கியின் ஓவியங்கள் பற்றிய ஒரு பதினைந்து நிமிடங்கள் நிகழ்ச்சியின் உச்சம் என்று உணர்த்தியது, இந்தப் பேச்சினை என் ஆயுள் உள்ளவரை மறக்க இயலாது. சித்திரங்கள் பற்றிய அவரது பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வெடிப்பு நிகழ்ந்துக் கொண்டிருந்தது. Naked Eyeன் மகத்துவம் பற்றி ஒரு மாபெரும் கதை சொல்லி சில

வந்துப் பேசிய எல்லோருமே, சிலாகித்த ஒரு சொல்லானது என்னவென்றால் “அலங்காரம்” என்பது தான். தமிழச்சி ஞாபகம் கொண்ட தன் அப்பாவின் ஞாபகம் மற்றும் அலங்காரம் பற்றிய அவரது அபிப்ராயங்கள் (அதில் அவரது பூ, வளையல்கள் பற்றி அவர் பேசுவதற்கான வாய்ப்பை இந்த புத்தகம் உருவாக்கி வைத்திருப்பதை அவர் பேசும் பொழுது, என்னைப் போஒல பலருக்கும் அவரது அலங்காரம் பற்றி மனதில் இருக்கும் சில கேள்விகளுக்கான விடைகளை அவரே கேள்விகளை முன் வைத்து பதில்களையும் அளித்தார்). B.கிருஷ்ணக்குமார் ஞாபகம் வைத்திருந்த தன் அம்மாவின் நினைவுகள் எனக்கான குரலாக அவர் பேசியது போன்று இருந்தது. அலங்காரம் எனும் கலையம்சம் கொண்ட வார்த்தையானது மிகப்பெரிய உரையாடலை அந்த அரங்கில் முன்வைத்திருந்தது.

நிகழ்வு மிகவும் வித்தியாசமாக, நமது இலக்கியக் கூட்டம் போன்ற இறுக்கம் இல்லாமல் நடந்து முடிந்தது.

அலங்காரம்
************

ஓவியர் ஸ்ரீநிவாசனோடு கேட்டுக் கொண்டிருக்கையில் அலங்காரம் எப்படி கலையுணர்வாக மாறுகிறது என்ற transformation தான் இந்த நூலின் அடிநாதம் என்று தெரிய வருகிறது. அதற்கான யுக்தி தான் - இது போன்ற ஒரு உரையாடலைத் திட்டமிடுவது, அப்படி வந்திருக்கும் இந்த புத்தகம் தான் தான் இது போன்ற ஒரு அரங்கத்தை சாத்தியப்படுத்தியது. அதுவும் சரியான பதில் தான் வெற்றிகரமாக முடித்து விட்டனர் அந்த இரு நண்பர்களும்.

இவ்வளவு பேர் அலங்காரம் பற்றிப் பேசினார்களே என்று யோசிக்கும் பொழுது, கண்டிப்பாக இதன் ஆசிரியர் என்பவர் இது போன்ற ஒரு உரையாடல் உருவாகும் என்று எப்படியும் எதிர்பார்த்திருப்பார்கள் என்று தோன்றியது. அலங்காரம் பற்றி தனது ஏற்புரையில் ஃநிவாசன் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பும் கூடவே இருந்தது, உலகம் முழுக்க சுற்றி வந்தாலும் தன் நிலத்தின் மக்கள் தரும் அன்பும் மரியாதையும் சேர்ந்து உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நன்றிவுரையாக முடித்து விட்டுக் கீழிறங்கி விட்டார். கடைசியாக வெளியே வரும் பொழுது, பாலசுப்ரமணியன் அவர்களிடம் சென்று என்னை சுய அறிமுகம் செய்யும் பொழுது, அவர் என்னை முன்னமே அறிந்திருந்தார் (ஸ்ரீநிவாசன் சார் மூலம் தான்) என்பது எனக்குக் கிடைத்த ஒரு பரிசாகவே தோன்றியது. கீழே இறங்கும் போது தான் சிந்தித்தேன், அங்கே தேனீரோடு வழங்கப்பட்ட இனிப்பு மற்றும் சமோசாவும் தான் இந்நிகழ்வை மிக அழகாக அலங்கரப்படுத்தியிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அடடா இந்த ஏற்பாட்டை யாரும் கவனிக்கவில்லையா என்று வியந்தேன்

இந்திய ஓவியச் சூழலில் இருக்கும் பிரதான ஓவியப் பள்ளிகள் என்று எடுத்துக் கொண்டால் பாம்பே, வதோதரா(குஜராத்) மற்றும் வங்காளத்தின் பாரம்பரியமிக்கப் பள்ளிகளே, இந்த தென்னிந்தியக் கலைஞர்களின் (madras movement)  விழாவுக்கு அலங்காரம் செய்வது போல் - முறையே பாம்பே சமோசா, வதோதரா மில்க் ஸ்வீட் ஒன்று(டோட்லாவோ கோட்லாவோ பெயர் அடிக்கடி மறந்து விடுகிறது) மற்றும் பெங்காலி ஸ்வீட்டான ட்ரை ஜாமூன் என்று அலங்காரப் படுத்தியவற்றை நான் உணர்ந்து கொண்டேன். அலங்காரம் எனும் சொல் இத்தனை கலைநயம் மிக்கதா என்று சந்தோஷத்துடன் உறங்கச் சென்றேன்..

What A Sweet Memories

ஜீவ.கரிகாலன்