இப்பொழுது நான் மரணம் பற்றிக் கேட்கப் போகிறேன், பேசப் போகிறேன், எனக்கு நானே நிறைய விவாதிக்கப் போகிறேன் .. சுவாரஸ்யம் பற்றிய அக்கறை இதற்கு தேவைப் படாது என்கிற முன் முடிவை வைத்து எழுதப் போகிறேன். இது எந்த இசத்தை நோக்கி என்னை இட்டுச் செல்லும் என்கிற கேள்வி மட்டும் அழுத்தமாய்.
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி |
கடந்து
செல்லுதல்
வாழ்வில்
நாம் அலைந்து கொண்டிருக்கிறோம், திரிந்து கொண்டே, நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்,
பயணப் பட்டுக் கொண்டிருக்கிறோம், சுற்றி வருகிறோம் இவை எல்லோராலும் முடிகிறது, ஆனால் கடந்து செல்லத் தான் முடிவதில்லை... முதலில் சொன்ன எல்லாவற்றிற்கும் இயக்கம் என்ற பொருள் படும் ஒரே
அர்த்தம் தான் இருக்கின்றது. ஆனால் கடந்து வருதல் என்பது பல அர்த்தங்கள் உடையது, அவற்றிற்கு பல கோணங்கள் உண்டு. மற்ற சொற்கள்
யாவுக்கும் இல்லாத உணார்வு ’கடந்து’ வருதலுக்கு உண்டு, அதற்குள் வலி இருக்கின்றது,
வைராக்கியம், தெளிவு, அறிவு, ஞானம், முதிர்ச்சி, கணம், அனுபவம் என
நிரம்பியிருக்கிறது.
வாழ்வில்
ஒன்றைக் கடந்து வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
நான்
பார்த்த மனிதர்களைக் கொண்டு அவர்கள் கடந்த விசயங்களை அவதானித்து......
*மது,
புகை போன்ற தீய பழக்கங்களை அறவே கடந்து வருபவனின் மனம் பக்தியில்
திளைத்திருக்கிறது.
*காதலை,
தோல்வியை, பிரிவை கடந்து வருபவன் மனிதர்களை நம்புவதை கைவிடுகிறான்
*தொழிலில்,
போட்டியை, சரிவை, வெற்றி-தோல்வியைக் கடந்து வருபவன் நிலைத்து நிற்கிறான்
*நட்பை,
உதவியை, துரோகத்தை கடந்து வருபவன் இயல்பை ஏற்றுக் கொள்கிறான்
*மரணத்தைக்
கடந்து வருபவன்..............................................
மரணத்தை
எப்படி கடந்து செல்ல முடியும்..
மரணம்
என்ன ஏற்படுத்தும், ஒரு இழப்பை அல்லது ஒரு வெற்றிடத்தை.
நம்முடைய
காதலோ, நட்போ, உறவோ யாரோ ஒருவர், அவர்கள் இடம் மாறும் போதோ, பணிக்கு செல்லும்
போதோ, அல்லது திருமணத்திலோ, மண முறிவிலோ அல்லது வேலைக்கு செல்லும் போதோ, வெளிநாடு
செல்லும்போதோ நாம் இதே போல் ஒரு இழப்பையும், வெற்றிடத்தையும் உணரலாம். நம் வாழ்க்கையில் அவர்கள் ‘பிரிவு’ மட்டும் ஒரு மாற்றமாக இருந்தால் அது இழப்பு தான்.
ஆனால் அதுவே வேலைக்கு செல்பவருக்கோ, படிப்பிற்காக வேறு ஊர், அல்லது பணி மாற்றம் ஆனவர்களுக்கோ
முற்றிலுமாக மாற்றம் வந்து விடுகிறது. அந்தப் புதிய சூழல், ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் மீது ஒரு ஆர்வத்தைக்(excitement) கொடுக்கிறது. அந்த மாற்றம் ஆர்வத்திற்கு ஏற்ப இல்லாமல்
ஏமாற்றமடைந்தாலொழிய அவர்களுக்கு வெற்றிடமோ, இழப்போ இருக்காது.
மரணமும்
அது போலத் தான், அது வெற்றிடமும், இழப்பும் ஈடுகட்ட முடியாத துக்கம் ஒன்றைத் தந்து
விடுகின்றது. ஆனால் நேர்பவர்களுக்கு ? ”யார் அறிவார்?”. மேற்கண்ட கூற்றின் படியே மரணமும் ஒரு excitement ஆக இயற்கையாக மரணமடையும் பலருக்கு இருக்கின்றது என்று நான் அறிகிறேன். நம்
கலாச்சாரங்களில் பக்தி இலக்கியத்திலோ, மத நம்பிக்கைகளிலோ மரணம் முழுமையாக
ஏற்கப்பட்டு விட்டது. எல்லோரும் “நல்ல சாவு”என்ற வார்த்தைக்கு உடன்பட்டிருக்கின்றனர். இந்த excitement பற்றி உணர்ந்து தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் பகிர????
மரணங்களில் சிலருக்கு மட்டும் வலியும், வெற்றிடமும், இழப்புமாக இருக்க, பலருக்கு அது ஒரு தரிசனமாகத் தான் இருக்கின்றது. இப்படித்தான் என் சிறு வயதில் கூட என் தாத்தாவின்
மரணத்தை என்னால் உணர முடியாது போனது. “அவர் முடியாது இருக்கிறார், உடனே புறப்பட்டு வரவும்” என்று போன் அழைப்பு வந்திருந்தது. நாங்கள் எங்களுடைய சொந்த ஊருக்குக் கிளம்பினோம். ஆனால் எனக்கு ஊருக்குச் செல்கிறேன் என்ற மகிழ்ச்சி தான் இருந்தது. நானும், என் தம்பியும்
ஊரைப் பற்றிய கனவில் தான் இருந்தோம். “அம்மாவிடமும் “அத்தை” வந்திருப்பாரா? அண்ணா வந்திருப்பானா?
அம்மு அங்கே தானே இருக்கா? சிவாவும் வருவான்ல” என்ற படி பயணித்திருந்தேன்.
கம்பீரமாய்
நடந்து செல்பவர், படுத்தபடி இருக்கிறார் என்று பார்த்த போது அது ஒரு காய்ச்சல்
போன்ற ஒன்றாகத் தான் தோன்றியது, எல்லோரும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு ஸ்பூனில் பாலை
எடுத்து அவருக்கு ஊட்டும் பொழுது என் முறை எப்பொழுது என்றபடி தான்
இருந்தேன்.அவருக்கு ஊட்டும் பொழுது அது அவர் பசி போக்கும் என்ற நம்பிக்கையில்
ஊற்றினேன். ஊற்றி முடித்து வரும் பொழுது என் நெற்றிக்கு யாரோ முத்தம்
வைத்திருந்தனர்.
அன்றிரவு
தூங்கச் சென்றேன், அழுகை ஒலியால் என் வீட்டுப் பெண்கள் ஓலமிட்டு என்னை எழுப்ப,
நான் திரு திருவென முழிப்பதைக் கண்டு “தாத்தா செத்துப் போயிட்டார் என்றும் பின்னர்
சாமிக்கிட்ட போயிட்டார்” என்றும் சொன்னார்கள். தாத்தாவைக் குளிப்பாட்டி, ஒரு நாற்காலியில் அமர
வைத்து மாலையிட்டிருந்தனர்.
போய் வணங்கச் சொன்னார்கள் பயமாய் இருந்தது, கால்களைத் தொட்டுப் பார்த்தேன், தாத்தாவுக்கு சந்தனம், குங்குமம், விபூதி இட்டிருந்தார்கள், தாத்தா கடவுள் இல்லை என்று சொன்ன சிவப்புத் துண்டுக்காரர்களில் அந்த பிராந்தியத்தின் முக்கியமானவர் என்று தெரியாததால், வெறுமனே தொட்டுப் பார்த்துவிட்டி நகர்ந்து விட்டேன். என் கவனம் எல்லாம் விடுமுறையில் வந்திருந்த என் அத்தைப் பையன், அக்கள், அண்ணனிடம், மதினிமார்களிடமும் தான் இருந்தது. ஆனால் என் அத்தைப் பையன் சிவாவைத் தவிர எல்லோரும் அழுதுக் கொண்டிருந்தனர். நான் எனது அத்தைப் பையனுடன் சேர்ந்து
நாளை உனக்கு லீவுதானே என்று விசாரித்து தெரிந்து கொண்டேன், குறைந்தது ஒரு வாரம்
நாம இங்கே தான் இருப்போம் என்றான். நாளை என்ன விளையாடலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். அவன் நகரவாசி அவனுக்கு என்னை விட நிறையத்
தெரியும் என்று என் அனுமானம். நாங்கள் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக்
கொண்டோம்.
தாத்தாவைக்
காண அன்று ஊரே ஒன்று கூடி வந்தது, பல பெண்கள் விழுந்துப் புரண்டனர். சில பெண்களைப் பார்க்க எனக்கு சிரிப்புத் தான் வந்தது. ஆனால் நான் சிரிக்கக் கூடாது என்றும் உணர்ந்திருந்தேன். கொட்டு மேளம்
எல்லாம் கொண்டு வந்தார்கள், அவர்கள் வாசிக்க ஆரம்பித்த உடனே எனக்கு ஏதோ பயம் வந்து
விட்டது. என் அண்ணனும் (பெரியப்பா மகன்), அம்மு மதினி, அக்கா எல்லோரும் சத்தம் போட்டு அழுதுக்
கொண்டிருந்தனர். அப்போ நாமும் அழனுமா என்று யாரிடமாவது கேட்கணும் போலிருந்தது. ஆனால் சிவாவோடு வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தேன், என் தாத்தா மீது சிவப்பு, சுத்தியல், அறுவாள் கொடி போர்த்தப்பட்டது. பெரிய, பெரிய மாலைகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன, நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம்.
எனக்கு ஏறகனவே
உடம்பு சரியில்லாமல் இருந்ததால், பக்கத்து வீட்டிலிருந்து எனக்கு ஹார்லிக்ஸ்
போட்டுக் கொடுத்தார்கள், பிஸ்கட்டும் கொடுத்தார்கள். “இன்னும் கொஞ்ச நேரத்தில் தாத்தவை எடுத்து
விடுவார்கள்” என்று சிவா சொன்னான். ”எடுத்துக் கொண்டு போய் எரித்து விடுவார்கள்” என்றும் சொன்னான். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது தாத்தாவை எரிப்பார்கள் என்று
சொல்லும் போது இதயம் படக் படக் என்று அடிக்கத் தொடங்கியது. சங்கு சப்தம் கேட்கும் போதெல்லாம் அழுதிடுவேனோ என்று பயந்தேன். சாங்கியத்தின் ஊடே
என்னை அழைத்து கைகளில் சில நெல் மணிகளை கொடுத்து வாயில் போடச் சொன்னார்கள் என்
தாத்தவைப் பார்க்க பயமாகவும், பாவமாகவும் இருந்தது, கண்களில் நீர் முட்டியது,
சிறுநீரும் வந்துவிட்டது.
அம்மாவைக்
காணவில்லை, பக்கத்து விட்டு ராஜி அக்கா என் கண்ணீரைத் துடைத்து விட்டு, “உனக்கு தான் உடம்பு சரியில்லையே!! தாத்தாவை எடுக்கும் பொழுது
நீயும் கூடே செல்ல வேண்டாம், வா நம் வீட்டிற்கு” என்று அவள் வீட்டிற்கு அழைத்துச்
சென்றாள். அவள் கை பற்றி தள்ளாடியபடி கூடவே சென்றேன். தாத்தாவுக்கு என் தம்பி
செய்ததாய் சொன்ன சடங்குகளை நான் செய்யவில்லை, தாத்தாவை எடுக்கும் பொழுது
நீயிருந்தால் உன் உடம்பு தாங்காது சின்னப் பையன் அல்லவா என்று என்னை ராஜி
அக்காவிடன் அனுப்பியிருந்தார்கள்.
அக்காவின்
கைப் பிடித்து நடந்து வருகையில் ஒரு கணம் என் வீட்டைத் திரும்பிப் பார்த்தேன்....
நான்கரை மணி வெயிலில், பெயர்ந்திருந்த மண் சுவர் கொண்ட பெரிய வீட்டிலன், இரு புறமும்
பெரிய திண்ணைகள் கொண்ட படிகளில் என் தாத்தா தன் ஜிப்பாவை சுருட்டி விட்ட படி
இறங்கி வரும் அழகை, இன்று என் தாத்தவைப் பற்றி ஒரு நண்பரின் நினைவுகளில் கடந்து
வந்திருக்கிறேன் என்று உணர்ந்திருக்கிறேன்.
என்
தாத்தா இன்னும் உயிரோடிருந்தால், நாங்கள் எப்படி இருந்திருப்போம், தாத்தா எல்லோரையும்
விட என்னையும் என் தம்பியையும் நேசித்திருபார் என்றெல்லாம் என் அம்மா
சொல்லியிருக்கிறார், அவர் சொல்லும் கெட்ட வார்த்தையிலிருந்து, அவர் நடை, அவரைப்
பற்றிய விமர்சனம், அவர் செய்த நற்செயல், அவர் ஏமாளித்தனம், அவர் சொல்லும் மனக்
கணக்கு, ஆடு, புலி ஆட்டம், பிளாஸ்டிக் பால் கிரிக்கெட் என்று எல்லா நினைவுகளும்
அவர் போட்டோவோடு சேர்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றது....