புதன், 19 செப்டம்பர், 2012

இதற்கு இன்னும் தலைப்பில்லை

எனது பிளாகில் புதிய ஒரு லேபிளைப் போடும் அவசியம் என்ன ? எது என்னைத் தூண்டுகிறது என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. ஆனால் நண்பர் ஒருவரிடம் பெற்ற கட்டுரைகளைக் குறித்த ஆலோசனை, எப்படி டைல்யூட் ஆகாமல் தக்க வைக்கலாம் என்று ஒரு நம்பிக்கையைத் தருகிறது, அதன் விளைவு தான் இந்தப் பகுதி. ஏற்கனவே இதே ஃபார்முலாவில் என் நண்பர்களே எழுதியும் வருவதால், கொஞ்சம் வேறுபடுத்தியும் காட்ட வேண்டும்.

மேலும் இந்த லேபிளில் நான் சேகரித்து வைப்பது என் நுனிப் புல் மேய்தலை சற்று குறைப்பதற்கும், நிறைய வாசிப்பதற்கும், புதியவர்களோடு பழகுவதற்கும் வாய்ப்பு கொடுக்கும் என்கிற எண்ணமும், எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சில தம்பிகளும், நண்பர்களும் என்னை தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று ஒரு நம்பிக்கைய்ும் தான் இதை சாத்தியமாக்கியது.

இந்த லேபிளுக்கு ரெண்டே தீம்.
 1. சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்
 2. முதலாவது தீம் மட்டுமே மிக முக்கிமானது அல்ல

இப்போது இந்த தொடருக்கு தலைப்பை வைக்கலாமா? (ஏற்கனவே இதே ஃபார்முலா வைத்து பாப்கார்ன் என்று எழுதினேன் -அது ஃப்ளாப்கார்ன்)

*****************************************************************************
பஜ்ஜி -சொஜ்ஜி

என்னடா இது டைட்டில்?

பஜ்ஜி என்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்ல  நம் ஊரில் யாராவது இருப்பார்களா?, பஜ்ஜி தெரியும்அதென்ன சொஜ்ஜி? எனக்கு தெரிந்து எல்லா வகை பஜ்ஜிகளையும் ருசி பார்த்துள்ளேன். பஜ்ஜிக்கும் எனக்கும் அவ்வள்ாவு நெருங்கிய தொடர்பு இருப்பதால் - இதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று சொஜ்ஜி என்றால் என்ன என்று எத்தனையோ அம்மையார்களிடம், அக்காக்களிடம்  எல்லாம் கேட்டுவிட்டேன்? ஆன்ால் எனக்கோ ஆரம்பத்தில் சரியான பதில் வரவில்லை - 

முதலில் இதை ஒரு கரண்டி/கிரண்டி போன்ற எதுகை-மோனை சமாச்சாரமோ என்ற பதிலில் ஆரம்பித்து, ஏதோ ஒரு இனிப்பு பலகாரமாத் தான் இருக்கும் என்று தீர்மான்ித்து, முந்திரி கொத்து போலே செய்வதற்கு கடினமாய் இருப்பதால் நம் பாட்டிமார்கள் இதை ரகசியமாக்கி மறைத்திருக்கலாம் என்று சந்தேகித்து, இணையத்தில் அதைத் தேடினால் அது வட இந்திய திண்பண்டம் என்று தகவல் வருகிறது. சில சமையல் குறிப்புகளும் வருகின்றன - இது அப்பம் மாதிரியான எண்ணைப் பண்டமாகவும், போளி போன்ற தோசைக்கல்லில் சுடும் பண்டமாகவும் செய்முறை வருகிறது.
நன்றி:http://geetha-sambasivam.blogspot.in/2012/04/blog-post.html (நல்ல தளம் நிறைய நாவூறும் பொக்கீஷங்கள் இருக்கின்றன)

ஆனால் நம் குடும்பங்களில் வழக்கில் இல்லாத அல்லது அரிதாக இருக்கும் பண்டம் என்பது உண்மை. திருமணம், சடங்கு, நிச்சயம் போன்ற வீட்டில் நடக்கும் வைபவங்களில் பெரியவர்கள் பேச்சை ஆரம்பிக்கும் முன் என்ன பஜ்ஜி-சொஜ்ஜில்லாம் சாப்பிட்டாச்சா என்பது வழக்கம். இதன் மூலம் இந்த பண்டம் சில மக்கள் பேசி, மகிழ்ந்துக் கொண்டாடும் சமயங்களில் முக்கிய அம்சமாக ஒரு தெம்பை/புத்துணர்வைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. பஜ்ஜியுடன் - சொஜ்ஜி இருந்தால் நல்ல விவாதங்களும் தொடரும் என்கிற ஒரு நல்ல மூட நம்பிக்கையுடன் நம் தொடருக்கு பஜ்ஜி- சொஜ்ஜி என்ற தலைப்பை சூட்டுகிறேன். :)

*************************************************************************
இன்று பிள்ளையார் சதுர்த்தி 

ஆம், அக்‌ஷய திரிதியைப் போலவே ஒரு நவீனப் பண்டிகையாக மட்டும் இதைப் பார்க்கிறேன். இந்த கம்ப்யூட்டர் சாம்பிரானியைப் போலவே ஒரு நிறைவு தனை இந்த திருவிழாக்களில் காண முடிவதில்லை. இங்கு நான் பகுத்தறிவு என்று பகடி பேசவில்லை, திருவிழாக்களை நான் மிக முக்கியமான நிகழ்வாய் நம் வாழ்வில் பார்க்கிறேன். நம் நாட்டின் முதுகெழும்பான கிராமங்களில் திருவிழாக்கள் என்பது, அந்த கிராமத்தை உருக்குலையாமல் காக்கும் நிகழ்வாக இருந்து வருகிறது (இப்போது சில இடங்களில் சுத்தமாக இல்லை). ஒரு வருடம் ஒரு கிராமத்தில் எந்தக் கோவிலிலும் திருவிழா நடக்கவில்லை என்றால் அந்த கிராமத்தின் சந்தை நீர்த்துப் போய்விட பல காரணங்கள் இருக்கின்றன.

ஆக, கோவில்கள் மிக முக்கியமான் ஒரு பொருளாதார மையம் என்பதையும்,
இறை நம்பிக்கையுடன் தினமும் வாழ்வது நம் வாழ்வியல் நடைமுறையில்
பொருளீட்டலுக்கும்(தொழில், பணி, கலை, ப்ரோகிதம்) அதை சமூகத்தில் பகிர்ந்தளிக்கவும் (நுகர்வு , தானம்) பயன்படுகிறது என்று சொல்லலாம். இது ஒரு அமைப்பு(system) என்றால் இதனாலா நமக்கு பிரச்சனை?? இல்லை, இந்த அமைப்பைக் கையாளும் விதத்தினால் தான்(system handling). 

மீண்டும் பிள்ளையாரைப் பற்றி ஒரு செய்தி:

கோயில்களிலோ, விசேஷங்களிலோ மட்டுமல்ல நமது பாரம்பரிய விளையாட்டுகளோடும் பிள்ளையார் சம்பந்தப்படுவார்..
1. பிள்ளையார் பந்து (ஆண்கள் எறிபந்து)
2. பிள்ளையார் பிடி (பெண்கள்)
3. மழையாட்டம் (இரு பாலர்)
4. தண்ணிக்குடம்/கும்மி
போன்ற சில விளையாட்டுகளில் நம் மக்கள் களிப்புற்றனர். வேறு எந்த பொழுதுபோக்கு உண்டு அந்த நாட்களில் விளையாட்டு, கலைகளைத் தவிற ?
அவர்களிடம் பிள்ளையார் ஒரு தெய்வமாகவும் அதே சமயம் ஒரு விளையாட்டு பொம்மையாகவும், ஒரு சூப்பர் ஹீரோவாகவும் இருந்து வந்தார்.எல்லாவற்றிட்கும் மேல் சிறு வயதில் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தெரியும், அனேகமாக நம் உண்டியல் வடிவத்தில் இருந்து நமக்கு சேமிக்கும் பழக்கத்தையும் funஆக மாற்றியவர் இந்த பிள்ளையார்.

******************************************************************************
கூடங்குளம் பிரச்சினை பற்றி நமக்கு முழுதும் தெரியுமோ தெரியாதோ, ஆனால் ஏதோ ஒரு நிலைப்பாடு மட்டும் நமக்கு இருக்க வேண்டியதை இந்த சமூகம், மீடியா போன்றன தீர்மானிக்கின்றன. இந்த dichotomy-இல் நானும் இருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன்,ஆனால் இந்த இரு பிரிவினருக்கும் பொதுவாக ஒரு மூன்று வெவ்வேறு உணர்வுகள் இதில் இருக்கின்றன என்று தெரிகிறது.
1. தமிழனாய் கூடங்குளம் வேண்டாம் என்றும்/ வேண்டும் என்றும்
2. இந்தியனாய் கூடங்குளம் வேண்டாம் என்றும்/வேண்டும் என்றும்
3. வெறும் மனிதனாய் உலகின் இன்றைய தேவைக்கு அணுசக்தி மின்சாரம் வேண்டும் என்றும்/ வேண்டாம் என்றும்.

இதில் அறிவியலின் பங்கு வெறும் ஊறுகாய் தான், அறிவியல் தன் வேலையை செய்துக் கொண்டே இருக்கும், அது அணுவுலைகளை விட அதிக ஆபத்தான கண்டுபிடிப்பிற்காக தன் சட்டையை உறித்துக் கொண்டிருக்கும்,
அது ஏலியன்களுடன் நம்மை யுத்தத்திற்கே அழைத்து சொல்லலாம்.
(ஏலியன் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த ப்ளாக்கை மூடிவிட்டு ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி வலை வீசவும்).

மற்றபடி அரசங்கத்தின் அடக்குமுறையில் கடும் கண்டனத்தையும், இந்த போராட்டம் மீது சில அவநம்பிக்கைகளும் என்னிடம் உள்ளன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

******************************************************************************

சுந்தரபாண்டியன் படம் பார்த்தேன் , இன்னும் இந்த க்ரேனில் ஹீரோவை உயரத் தூக்கிக் காட்டும் சோலோ தத்துவ ஹீரோயிச ஷாட்டுகள் எல்லாம் இன்னும் எத்தனைக் காலம் தான் பார்க்கும் அவலம் இருக்குமோ??

”நண்பன் குத்துனாக் கூட செத்தாலும் வெளியே சொல்லக் கூடாது”
எனும் பஞ்ச் டைலாக் வருகிறது, 
குத்துனா தான் செத்துப் போயிடுவியே அப்புறம் எப்படி சொல்லுவ ??

எப்படித் தான் இந்த வசனங்களுக்கு கூட கை தட்டும் ரசனையில் நம்மை இவர்க்ள் வைத்திருக்கிறார்களோ?? இப்போது வரும் சினிமாக்களில் நட்பை அனேகமாக பார்களிலும், பப்களிலும் வைத்து மட்டுமே காட்டுகிறார்கள் என்பது திரைப்படங்களின் மிகத் தாழ்ந்த தரத்தையே காண்பிக்கிறது. 

என் நண்பரின் முகநூல் ஸ்டேடஸ்:-
(சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு)
வாங்குவதாக எண்ணி
விற்றுக்கொண்டிருக்கிறோம்
அன்னியனிடம்.


இந்த முதல் பகுதியில் சொஜ்ஜியைப் பற்றி சொன்னேன், பஜ்ஜியைப் பற்றி சுவையாக அடுத்த பாகத்தில் பார்க்கலாம்

இன்னும் சுவையாக, சூடாக
மீண்டும் சந்திப்போம்
ஜீவ.கரிகாலன்
9042461472


2 கருத்துகள்: