செவ்வாய், 25 செப்டம்பர், 2012

கிரெடிட் கார்டைப் போலே தேய்ந்து போகும் உங்கள் மூட்டு. (பஜ்ஜி சொஜ்ஜி - பாகம் 2)



பஜ்ஜி சொஜ்ஜி - பாகம் 2

வால்மார்ட்டை வரவேற்கவும் உங்களுக்கு காரணம் இருக்கலாம்
 காரணம் 1

மான்புமிகு பாரதப் பிரதமர் அந்நிய முதலீட்டிற்கு வக்காலத்து வாங்க சொல்லும் பல காரணங்களுள் ஒன்று தான் வீணாகும் உணவுப் பொருட்கள் பற்றிய அக்கறை. சமீப காலமாக சமூகவலைதளங்களில், செய்தி ஊடகங்களில் என உணவுப் பொருட்கள் வீணாகுவதைக் குறித்த பகிர்வுகள் வருகின்றன. இதன் பின்னணியில் கூட வால்மார்ட் ஸ்டோர் நமது நாட்டில் இது போன்ற செய்திகளை பரப்பிட கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளார்கள் , விமர்சகர்கள் என இவர்களின் சூழ்ச்சியில் தெரிந்தோ தெரியாமலோ ”வீணாகிப் போகும் உணவுப் பொருட்களைப்” பற்றி நிறையக் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.


சரி, அவர்கள் சரியாகத் தானே எழுதுகிறார்கள் என்று நமக்குத் தோன்றினாலும். அவர்கள் என்னவோ ஆராய்வது நம்மிடம் இருக்கும் செயல்படாத சேமிப்பு அமைப்புகளையும், தனியார்களிடம் இருக்கும் கிடங்கில் இருக்கும் அதிக விலையும் தான். இவையாவும் அலசி ஆராயப் படுகிறதேயொழிய இதற்கு மாற்று சேமிப்பு முறைகளைப் பற்றி யாரும் சொல்வதில்லை பெரிதாக வடநாட்டு ஊடகங்கள் கூட மாற்று வழிமுறைகளை விவாதிப்பது இல்லை, பொருளாதார வல்லுனர் திரு.சேகர் ஸ்வாமி கிராமப் புறங்களில் கூட்டுறவு பண்டகச் சாலையை நவீனப் படுத்தி மேம் படுத்துவதே நம் நாட்டின் மொத்த கிட்டங்கித் தேவைக்கும் போதுமானது ( இது மத்திய அரசு ஏற்கனவே ஒதுக்கும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒதுக்கியுள்ள 40000 கோடிகளில் சாத்தியம்) என்றும்,  நைஜீரிய நாட்டைப் போல (நைஜீரியாவில் - அந்த பிந்தங்கைய ஆப்பிரிக்க நாட்டின் வறண்ட பிரதேசங்களில் வசிக்கும், கிட்டதட்ட 15  கோடி மக்கள் பயன்படுத்தும் முறை) மண்பானைகளுக்குள் சேமிக்கும் வழக்கமே!! (இரண்டு மண்பானைகளை வைத்து அதற்கு இடையில் மணல் நிரப்பி மூடி வைத்தல்). இது நம் தனி நபர் சக்திக்கும், தேவைக்கும் தாரளமாக போதுமானது என்றும் சொல்கிறார். 



இந்த உதாரணம் மிகச் சாதாரணமாய் உங்களுக்குத் தோன்றினாலும் இதன் மகிமை மகத்தானது. நமது விவசாய முறையோடு ஒத்துப் போவது, ஒரு சாதாரண ஏழை விவசாயி கூட சில விரைவில் அழுகும் காய்கறிகளுக்கு ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்து நல்ல விலையை பெறலாம். தவிர மின்சாரப் பயன்பாடு இல்லவே இல்லை, சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட மதுபானத்தை இப்படி இயற்கையாக குளிரூட்டுகின்றனர்.
ஆயினும் என்ன? மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது தீர்மானத்தை இனி நம் வேலையெல்லாம் நம் ஊரில் திறக்கும் வால்மார்ட்டின் வாசலில் நின்று உங்கள் ஐ-போனில் போட்டோ எடுத்து உங்கள் முகநூலிலோ, ட்விட்டரிலோ அப்லோடு செய்வதுதானா ??

(காரணம் இரண்டு :அடுத்தக் கட்டுரையில்)
Wiki search :Pot in Pot refrigerator

********************************************************************************
விஜய் டீவியில் சூப்பர் சிங் ஜூனியரைப் பார்க்கும் போது அந்தக் குழந்தைகளின் அசாத்திய திறமைகளில் நாம் மயங்கித் தான் போகிறோம்
என்பதில் ஐயமில்லை, ஆனால் அறுபது லட்சம் மதிப்புள்ள பரிசுத் தொகையால் குழந்தைகள் மீது பெற்றோர்களும் மற்றவர்களும் இந்தக் குழந்தைகள் மீது வைக்கும் அழுத்தத்தை நினைத்துப் பார்த்தால் மிகப் பயங்கரமாக இருக்கிறது, பத்துப் பனிரெண்டு வயதில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் பங்ளா வீட்டை விட அநேகமாக அவர்கள் இழந்தது என்ன என்று போடும் பட்டியல் தான் பெரியது என்று நம்புகிறேன்.

அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் exposure-ஐக் குற்றம் சொல்லவில்லை, அதே சமயம் பதினோரு வயது சிறுவன் சொர்கம் மதுவிலே” என்று  சொக்கி சொக்கிப் பாடுவதும், அதை நடுவர்களோ அவனைப் பாராட்டும் போது “அப்படியே உள்வாங்கி , உணர்ந்து பாடுகிறாய், கேசுவலாய்ப் பாடுகிறாய், நல்லா என்ஜாய் பண்ணி பாடுறீங்கஎன்று வியந்து பாராட்டும் நாட்டமைத்தனமும் நிறையவே வெறுப்பேற்றுகின்றன.

இசையைப் பற்றியும் அதன் நவீன கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் சமூகம் பற்றியும் அதன் அழகியல் பற்றியும் ஒரு சிறப்பானக் கட்டுரை இருக்கிறது. நீங்களும் அதை வாசித்தல் நலம், நண்பர் பாலசுப்ரமனியனின்  வலைப்பூவில் http://sadhukkam.blogspot.in/2012/09/blog-post.html.ஒரு நல்ல கட்டுரை இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சியில் கூட செயற்கைத் தமிழில் ஸ்டைலாகப் பேசி கவரும் தந்திரம் மீது காறி உமிழத் தோன்றுகிறது.

*********************************************************************************

பூரண மது விலக்கை அமல் படுத்தக் கூறி, இன்றைய சமுதாயத்தில் மதுவை ஒழிப்பதன் அவசியத்தைப் பற்றி ஒரு நண்பர்கள் சந்திப்பு வரும் அக்டோவர் இரண்டில் நடக்க இருக்கிறது. இதைப் பற்றி பேசும் பொழுது, இப்படியெல்லாம் கூடவா கூட்டம் நடத்துறாங்க என்று கேட்ட என் நண்பன், “பார்க்கலாம் எவ்வளவு பெரிய க்ரூப் போட்டோவ நீ அப்லோடு செய்வ என்று சொன்ன அவனிடம் ஒரு அதீத நம்பிக்கை இருந்தது. அவன் நம்பிக்கை பொய்யாகக் கடவுக . http://www.facebook.com/events/484025931615936/. நீங்களும் இதில் இணையலாம் - மேலே சொடுக்குங்கள்.
******************************************************************************

ஜங்ஃபுட்சுகளில் அதுவும் மாலை நேர தின்பண்டங்களில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்று முதலிடத்தில் இருக்கும் பண்டம் தான் என்னருமை பஜ்ஜி. கெடுதல், கொழுப்பு, வாயு என்று எல்லா நெகடிவ் விசயங்களையும் தாண்டி, பாணி பூரி, சமோசா, கச்சொரி, பாவ் பாஜி போன்ற போன்ற வடநாட்டு சாட் ஆதிக்கங்களையும், பீட்சா, பர்கரைப் போன்று சப்வேயில் வந்துக் குடியேறிய அகலவாய்த் திறப்பு அந்நியப் பதார்த்தங்களையும் தாண்டி முதலிடத்திலிருப்பது நம் தென்னிந்திய பஜ்ஜியே!!

அதுவும் இந்தப் போட்டிகளை சமாளிக்க தன்னைப் பரிணமித்து புதுப் புது வகைகளாக பிரட் பஜ்ஜி, காலி ஃப்ளவர் பஜ்ஜி, ஆனியன், உருளை, மிளகாய், முட்டை பஜ்ஜி என்று நீண்டு செல்லும் கியூவில் மலையாள வாழைப்பழ பஜ்ஜியெல்லாம் கூடுதல் சிறப்பு, என் அம்மா கூட பீர்க்கங்காய், அப்பளம்,மாங்காய் என்று கூட முயற்சி பண்ணிப் பார்த்துள்ளார். இப்படி எத்தனை வகை பஜ்ஜி இருந்தாலும் எப்பொழுதும் வாழைக்காய்க்கே முதல் இடம் என்று பஜ்ஜி சாஸ்திரம் பயின்ற பாக்கியம் ராமசாமி வாரமலரில் ஒரு கட்டுரையில் தெரிவித்து இருக்கிறார்.

இதில் இதற்கு தோதான சட்னி எது என்ற விவாதம்(அதிக ஓட்டுகள் தேங்காய் சட்னிக்குத் தான்)இருந்தால் கூட சட்னி என்பது இடைச் சொருகல் தான் என்றும்  “சட்னி இல்லாமலே கூட சாப்பிட்டாலும் அது சிறப்பானதே!!என்றும் பிரகனப் படுத்துவதில் தவறில்லை தானே

பஜ்ஜி போன்ற பதார்த்தங்களில் உடல்நலம் என்ற பெயரில் தீண்டாமையை அனுசரிப்பவர்கள் கூட குற்றாலம் போன்ற குளியல்களை ஒட்டியும், மழையின்
ஈர அனுசரிப்பிலும் தங்கள் கொள்கை மறக்கும் பகுத்தறிவைப் பெறுவது யதார்த்தமே. நினைத்துப் பாருங்கள் ஹைஜீனிக் என்று உங்களுக்கு கிடைக்கும் கொசுறு, சாம்பிள் பீஸ் தரும் அண்ணன்மார்களின் கடையை விடுத்து, மல்டி ஸ்டோரி பில்டிங்கில் டோக்கன் வாங்க ஒரு கியூ, ஃபூட் கோர்ட்டில் ஆர்டருக்கு ஒரு கியூ என்று நின்று கொண்டே இருந்தால் உங்கள் கிரெடிட் கார்டைப் போலே தேய்ந்து போகும் உங்கள் மூட்டு.


பஜ்ஜி-சொஜ்ஜி;
இன்னும் சுவையாக அடுத்த கட்டுரையில்,

உங்கள்
ஜீவ.கரிகாலன்

                      
                       பாகம் 1ஐ சொடுக்க

1 கருத்து: