செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

எங்கே செல்கிறேன் ???


உதிர்ந்துவிட வேண்டிய
காட்டயத்திலிருக்கும் சருகாய்,

கதிரவன் மறையும் முன்பு
கடைசியாக பார்க்கும் சூரியகாந்தியாய்,

வெட்டப்படும் நேரம் நெருங்குவதையுணராது
உரிமையாளனின் காலில் தன்கொம்பினைச்
சொரியும் வெள்ளாடாய்,

காத்திருக்கும் வலையை நோக்கியே
அதிர்நீச்சல் அடித்து வரும் ஆற்றுமீனாய்,

நிலையற்ற வாழ்வில்
சூன்யத்தின் பிரதிபலிப்பாய்,

திசையறியாது - பாதை தெரியாது
பயணத்தின் முடிவு தெரியாது

மனதின் உந்துதலில் - ஏதோ ஒரு
பொக்கிஷமென காலிபெட்டியினைச் சுமந்து

உள்ளிருக்கும் விழிப்புணர்வை,
உலகெல்லாம் தேடியலையும் முட்டாள்தனத்துடன்
ஒரு தேடல்,
ஒரு விடியல்,
இன்னும் புலப்படாமல்.........

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

உங்களோடு பேச வேண்டி,,ஒரு நிமிடம்

கிருஷ்ணனும் , இயேசுவும் தங்கள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர், அவர்களை பற்றிய புராணங்களில் கூட கிருஷ்ணன் ஒரு யாதவச் சிறுவனை உயிர் பிழைக்க வைத்ததாகவும், இயேசுவும் தன்னை நம்பிய ஒரு ஏழை தாயின் இறந்துபோன மகனின் சடலத்தினை -மீண்டும் உயிருள்ள மகனை மாற்றிய அற்புதம் நிகழ்ந்ததையும் கேள்விப் பட்டுள்ளேன்.

இதே போன்ற வேளையில், புத்தன் மட்டும் தன்னை வேண்டி வந்த தாயிடம்,"மரணச் செய்தி  இல்லாத ஒரு வீட்டில் ஒரு பிடி அரிசி கொண்டு வா"என்று கட்டளையிட, ஒவ்வொரு வீட்டிலும் அந்த யாசகம் கேட்டு கிடைக்கததால் இறுதியில் புத்தனிடம் வந்தாள்.அப்பொழுது புத்தன் அவளிடம்" என்ன கிடைத்ததா? " என்று வினவ, மரணம் என்பது எல்லோர் வாழ்விலும் நடக்கும், பிறப்பு என்பது இறப்பின் தொடக்க புள்ளி, நிலையற்ற வாழ்வே நிலையானது என்று உணர்ந்து அந்த தாயும் புதனின் சீடன் ஆனாள்.

இதில் யார் செய்தது உண்மையில் அற்புதம் ???
1 .இயேசுவும்,க்ரிஷ்ணனுமா ?? - இல்லை
2. புத்தனா??