வியாழன், 26 மே, 2011

பசுவும் கன்றும் ...........


 காலம் - அது பல காயங்களின், வேதனைகளின், வலிகளின் மருந்து. அதே நேரம், எதிர்காலம் என்பது எந்த நொடியிலும் ஆச்சரியத்தினையோ,அதிர்ச்சியினையோ நமக்கு பரிசளிக்க ஒளித்துவைத்திருக்கும் ஒரு விளையாட்டு.

 பயணம் - மனித நாகரிகம் உருவெடுக்கவும், அவன் உலகில் அணைத்து உயிர்களை காட்டிலும் உயர்ந்ததாகவும் உருமாற அவன் கொண்ட பயணமே காரணம்.ஒவ்வொருவர் வாழ்விலும் - மாற்றம்,முன்னேற்றம்,தோல்வி,வெற்றி என எல்லா நிலைகளிலும் பயணம் ஒரு விளைவாகவோ அல்லது காரணமாகவோ இருக்கிறது.

ஒரு கால சுழற்சியில் நடக்கின்ற இரு ஒத்த பயணங்களை பற்றிய எண்ணங்கள்/ நினைவுகள்  இனி ;

பசுவும் கன்றும்  

மே திங்கள்  22 ,1992

அது ஒரு ஒரு மாலைப் பொழுது, தான் அடுத்த நாள் மேற்கொள்ள இருக்கும் பயணத்தை பற்றி அந்த சிறுவனுக்கு ஒரு மலைப்பு. தன் தாய் தன்னிடம் , "உனக்கு பிடித்த விளையாட்டு பொருள் ஏதாவது ஒன்றினை எடுத்துக்கொள் மற்றவை எல்லாம் நாம் பின்னர் எடுத்து கொள்ளலாம்"என்றாள். அது அவனால் முடியாத ஒன்று. ஏனெனில், தனக்கு மிகவும் விருப்பமுள்ள விளையாட்டுப் பொருள் தன் தாத்தாவின் ஊன்று கோல் தானே, தன் தாத்தாவின் ஊன்று கொலை பிடுங்கி கொண்டு சிலம்பம் சுற்றுவதும், பின்னர் தன் தாத்தவினைப் போலவே அடுத்தவர்களை அதிகாரம் பண்ணவும், பின் தாத்தாவோடு விளையாடவும் அவனுக்கு பிடித்த விளையாட்டு பொருள் தன் தாத்தாவின் ஊன்றுகோல் தான், அவன் தாத்தாவோ அவனுடன் வரவில்லை .

இது வரை மேற்கொண்ட பயணங்கள் தந்த உற்சாகம் அவனுக்கு அந்த பயணம் தரப்போவதில்லை. தனது ஐந்து வயதிலேயே, அவன் அந்த ஊரின் மைனரைப் போல் வாழ்ந்து வந்தவன்.அவன் உடைத்த மண் பானைகள், சில சிறுவர்களின் மண்டைகள், அவன் அண்ணனின் விளையாட்டு பொருள்கள் என நீண்ட பட்டியல் அவன் வரலாற்றில் உண்டு. அந்த தெருவில் அவன் தான் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை, எல்லோரையும் பெயர் சொல்லி தான் அழைப்பான், ஒருமையில் தான் பேசுவான்.சுருங்க சொல்லப் போனால் அவனது பயணம் புறப்படும் அந்த இடம் அன்று வரை அவன் ராஜ்ஜியம்.

 வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிழைப்பு தேடி வேறு ஒரு ஊர் செல்லும் போது அவர்கள் யார் முகத்திலும் முழிக்க முடியாது , அந்த நிலையில் தான் அந்த குடும்பமும் - அடுத்த நாள் காலை நான்கு மணிக்கே அவ்வூரை விட்டு கிளம்பிய ஒரு பேருந்தில் அவன் குடும்பம் இருந்தது, தன் தாய்,தந்தை மற்றும் அவன் அண்ணன் ஆகியோர் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தனர்.அன்று ,  ஜன்னல் சீட்டிற்காக அவன் அண்ணன் அவனுடன் சண்டை போடவில்லை.

       எந்த பேருந்து பயணத்திலும் அவனுக்கு கிடைக்கும் டொரினோ குளிர் பானம், அன்றும் கிடைத்தது.ஆனால், அதை வாங்கி தரும் வேளையில் அவன் தந்தை சொன்ன வார்த்தைகள் அவனுக்கு அந்த பானத்தின் ருசியினை குறைத்தது - "கண்ணா! நீ எது கேட்டாலும் இன்னைக்கு வரைக்கும் டாடி உனக்கு வாங்கி தந்துருக்கேன்.. ஆனா நாம புது ஊருக்கு போனதுக்கப்புறம் அப்படி எல்லாம் வாங்கித் தர முடியாது. நீயும் மம்மி -டாடி பேச்சல்லாம் கேட்டு நடக்கணும் ,எதுவும் வேண்டும் என்று அடம் பிடிக்க கூடாது ". 

       எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிக் கொண்டு குடிக்கும் தன் அண்ணனை பார்க்கும் போது பாவமாக இருந்தது.தானும் தன் அண்ணனைப் போல் தலையாட்டி, தன் தந்தையினை உற்று நோக்கினான்.அவர் கண்களில் கண்ணீர் துளி ஒன்று கட்டுப்பாடின்றி வெளியே வந்தது.மதுரையில் பேருந்து மாற்றி ஏறியவுடன் இந்த முறை தாமாகவே வலிய வந்து தன் அண்ணனுக்கு ஜன்னலோரம் இடம் கொடுத்து தன் அம்மாவின் அருகில் வந்தான்.

         தன் அம்மா தன்னிடம் எதோ சொல்ல வந்து, பின் சொல்ல முடியாமல் இருப்பதை அவனால் உணர முடிந்தது.அப்படியே தன் தாயின் மடியில் படுத்துக்  கொண்டான்.அடிக்கடி கண்ணீரை துடைத்து கொண்டே வருவதால் தன் தாயின் சேலை முந்தி கொஞ்சம் ஈரமாய் இருந்தது, அந்த ஈரம் தூண்டி விட்ட ஒரு  உணர்வு அவன் அம்மாவிடம்,"தான் இனிமேல் சேட்டை பண்ண மாட்டேன் , என் வாழை சுருட்டி வைத்து விடுவேன், நல்ல பிள்ளையாய் நடந்து கொள்வேன் " என்று சில உத்திரவாதம் கொடுத்தது.தன் பிள்ளையை தன் மாரோடு அணைத்து கொண்டு அந்த பயணத்தில் ஆழ்ந்திருந்தாள்.

            கடன் தொல்லையால் தன் வாழ்க்கையில் தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் கொடுத்த விலையே அக்குடும்பம் அவ்வூரை விட்டு வேறு ஒரு ஊருக்கு வரவழைத்தது.அந்த பயணம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.அந்த பயணத்தின் அர்த்தம் அவர்களுடைய அவ்விரண்டு பிள்ளைகளே.அப்பிள்ளைகளுக்காக எப்படிப் பட்ட கடினப் பாதையினையும் கடந்து செல்ல அந்த பயணம் அவளுக்கு ஒரு வைராக்கியம் அளித்தது.தனது மனைவியின் பார்வையை கண்டே அவள் உள்ளம் உணர்ந்த கணவனும் அந்த பயணத்திற்கு தயாரானார். அந்த பேருந்துப் பயணத்தில் தொடங்கிய அச்சிறு குடும்பத்தின் பயணம் தங்கள் முதல் பயணத்தினை நிறைவு செய்ய சரியாக 20௦ வருடங்கள் பிடித்தது.

மே திங்கள் -22 ,2011   :-

    அடுத்த பயணத்துக்கான நாள் தேதி குறிக்கப்பட்ட நாள், இந்த பயணத்தில் அவனும் ,அவன் அண்ணனும் தங்களுடைய பெற்றோர்களை அழைத்து செல்ல இருக்கின்றனர். அந்த பயணத்தில் ''தன்னை குறும்பு பண்ணக்கூடாது ,நல்ல பிள்ளையாய் நடந்து கொள்ள வேண்டும்'' என்று அறிவுரை கூறி வந்தவர்கள், இன்று எந்த நிலையில் வருவார்கள் ?? தனக்கென்று ஒரு வீடும் இல்லாத அவன் தாய், நிலையான உத்தியோகமும் - பணவரவுமில்லாத தன கணவனோடு தன பிள்ளைகளை மட்டும் நம்பி எப்படி வருவாள்? "பசுவின் பின் கன்று வந்த காலம் போய், கன்றின் பின்னால் பசு செல்லும் காலம் எத்தகையது?"

  தனது முழு வாழ்க்கையை தன பிள்ளைகளுக்காக அர்பணித்த அவன் பெற்றோர்கள், தனக்கென்று ஒரு வீடோ மற்ற பொருளோ சேர்த்து வைக்கதோர் தம் மக்களை முழுதுமாக எதனை காலம் நம்பி இருப்பர், அவர்களுக்கு மணமாகும் வரை இருக்கலாம், அதற்கு பின்னர் ஒரு தவிர்க்கமுடியாத ஒரு இடைவெளி நம் கலாச்சாரத்தால் உருவாகிறது.

 நமது வாழ்க்கையில் நிம்மதி,சுதந்திரம்,அன்பு இவற்றிற்கு மட்டும் தான் விலையே கிடையாது. இது நம்மால் வாங்க முடியாத ஒன்றும் கூட, கலாச்சாரம் , பாசம், பண்பாடு, பொறுமை என்ற சக்கரங்களில் வாழ்க்கையை  ஒட்டிக் கொண்டிருக்கும், இந்த பசுவின் நிலை காலத்தின் கைகளில்...

அதோ அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.மேலும் ஒரு பயணம் தொடர்கிறது எந்த ஒரு அர்பணிப்பும் இல்லாமல் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக