வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

வீர நாயக்கன் -5 )


               ஆள் அரவமற்ற அந்த ஏரியை சுற்றி இருந்த அப்பகுதி, நிசப்தமாய் இருந்தது,நிலவின் ஒளியில் வெள்ளிப் பாளமிட்டு அலங்கரிக்கப் பட்ட அக்குளம், அங்கு வீசிய தென்றலின் காரணமாய் சிறு சிறு அலைகளை எழுப்ப முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. குளத்தின் மேல் பரப்பில் நீந்திக் கொண்டிருந்த கெண்டை மீன்கள் யாவும்  வெள்ளி நிற ஆடை தரித்தது போல் நிலவின் பாலொளியில் தம்மைக் காட்டிக் கொண்டிருந்தன.

'தொப்' என்று ஒரு சத்தம், அப்பகுதியின் நிசப்தத்தை கலைப்பது போல் அக்குளத்தில் இருந்து எழுந்தது.தம்மை விட வேகமாக நீந்தி வரும் மானிடனைக் காண, நீர் பரப்பில் இருந்த மீன்கள் கொஞ்சம் எழும்பி குதித்து அம்மனிதன் யார் என்று பார்த்தன, நம் வீரன் தான் நீந்தி வருகிறான்.அன்று மட்டும் ஏன் இந்த திடீர் உற்சாகம் இவனுள் ?தமக்காகவே நிலவை ஆண்டவன் படைத்தது போல் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.நிலவின் பிம்பம் ஒரு பெண்ணின் வதனமாய் தெரிந்தது.அவள் யார் என்று புதிர் போடுதல் இக்கதையில் தேவையற்ற ஒன்று.ஆம், அவள் தான் கோதை!

      

இயற்கை அழகு என்பதும் கூட ஒரு மாயை தான், அதன் இருத்தல் என்றுமே உள்ளது.மனிதர்களாகிய நாம் தான் நமது வாழ்க்கையின் கோரப் பிடியில் அந்த இருத்தலை மறந்து, நம் மனதின் நிலைக்கு ஏற்றவாறு இயற்கையை உணர்கிறோம்.வீரனும் மனிதன் தானே, அவன் நித்தமும் நடந்து செல்லும் குளக்கரையில் ,இந்த நிலவும், மீனும், நிசப்தமும் கூட அவனுக்கு பரிட்சயம் ஆனது தானே!ஆனால் அவன் அவற்றை முதன் முதலாக பார்ப்பது போல் ரசித்துக் கொண்டு தான் கற்ற இலக்கியப் பாடல்களை ஒன்றிரண்டு பாடிக் கொண்டிருந்தான்.வேடனாகப் பிறந்தும் அவ்வினத் தலைவனின் உறவுக்காரனாய்  பிறந்ததால், அவன் இளம் பிராயத்தில் ஒரு பாட சாலை சென்று குருவிடம் கொஞ்சம் கல்வி பயின்றான்,ஆனாலும் தான் படித்தவற்றை வெளியே காட்டி தன்னை மற்றோர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் இயல்பு இல்லாதவன் அவன்.அன்று மட்டும் ,தன்னை ஒரு பக்குவமிக்க புலவன் போல் நினைத்துக் கொண்டும், பாடிக் கொண்டும் ,தன்னையே மறந்து நீந்திக் கொண்டிருந்தான்.

                வீரன் தன் ஈர உடையுடன் கரை ஏறி ஒரு விசில் ஒன்று அடிக்க தான் வளர்த்த நாய் நான்கு கால் பாய்ச்சலில் வந்து அவன் காலடியில் நின்றது.தனக்கு என்ன நேர்ந்தது என்று தன் நாய்க்கு விளக்க ஆரம்பித்தான்,"ஏலேய் ஒய்யா!! என்னடா அப்படி பார்க்குற!" என்று தன் நாயை அழைக்க, அது அவனை ஆச்சரியமாக பார்த்தது.தன் வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசமான நாள் இது வரை இருந்ததில்லை என்று வியந்து கொண்டான். தன் கூட்டத்தில் உள்ள குறி சொல்லும் கிழவி , தன்னால் தான் சமூகத்திற்கு விடிவு காலம் வரப் போவதாகவும், அதுவும் ஒரு மேற்க்குடியை சேர்ந்த ஒரு எழிலரசி தான் அதற்கு காரணமாவாள் என்று பல முறை சொல்லும் வாக்கு மெய்யாகுமோ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டான்.. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
                       அன்று,  அப்புலியை கொன்ற பின்னர் தான் தன் எதிரில் உள்ள அப்பெண்ணை  அவன் கண்டான். அவள் கண்களில் கண்ணீரும், ஆச்சரியமும் , கனிவும், கண்ணியமும் அவனுக்கு ஒளியாய் தெரிந்தது.குறி சொல்லும் கிழவி மறுபடியும் தன் முன்னே வந்து ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அதை கடந்து இரண்டடி முன்னே சென்று அவளை நோக்கினான்.

                           தான் காப்பாற்றப் பட்ட அடுத்த நொடி அங்கே செத்துக் கொண்டிருக்கும் புலியை பரிவுடன் நோக்கிய அவள் கண்களை கண்டு பிரமிப்புற்றான்.தன்னை காப்பாற்றியமைக்கு நன்றி சொல்லும் போது ஒலித்த அவள் குரல் யாழிசையாய் கேட்டது, அதற்கு பின் அவனை பாராட்டிய முத்தரசனின் குரலோ, அவளின் தந்தையின் குரலோ,  பொம்மனின் குரலோ , ஏன் அருகிலிருந்து குறைத்துக் கொண்டிருந்த அவன் நாய் ஒய்யனின் குரல் கூட அவனுக்கு கேட்கவில்லை. நனைந்த உடையுடன் அக்குளத்தின் கரையில் அமர்ந்திருக்கும் போது கூட அவனுக்கு அவளின் குரல் தான் கேட்டுக் கொண்டிருந்தது.

அவன் நினைவில் வந்த அவள் குரல் எனும் யாழிசையில், அவன் கவி இயற்றத் தொடங்கினான்.

" நிலவின் நிழலும் வெண்நிறமோ ?
அந்நிழலும் வருவது பகல் பொழுதோ?
உன்னை நான் பார்க்க மழை வருமோ !!"...

என்று தன்னை கவிஞனாய் இவ்வுலகுக்கு அறிமுகப் படுத்தினான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

              கோதை அன்று புலியினால் ஏற்பட்ட பீதியில் உணவு உண்ணாமல் துயிலச் சென்றுவிட்டாள் என்று அவளின் அன்னை அவளை வற்புறுத்தாமல் சென்று விட்டாள்.
கோதையின் தந்தையும் அன்று நடந்த சம்பவத்தை நினைத்து மனம் கொதித்து இருந்தார்.புலி வேட்டையாடிய அவ்விளைஞனுக்கு பாண்டியனின் பரிசில் பெற்றுத்தருவதாய் வாக்களித்திருந்த முத்தரசன், இனி தன்னை பழி வாங்க எவ்வாறெல்லாம் முயற்சிப்பான்? அவனை எப்படி சமாளிக்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
             புலி வேட்டையாடிய இளைஞனுக்கு பாராட்டு விழா நடத்தும் பொருட்டும், கோயில் மற்றும் குளம் கட்டுமானத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து வரவும் அந்த ஊரிலே சிறிது நாள் தங்கி இருப்பதாக - ஓலை ஒன்றை பாண்டியனின் ராஜாங்க மந்திரிக்கு அனுப்பினான் முத்தரசன்.தான் உண்மையிலே அவ்வூரில் தங்குவதற்கு காரணம் அக்கோயிலா? குளமா? இல்லை பழி வாங்கவேண்டிய அந்த ஆலய அர்ச்சகர் -தன்னுடைய எதிரி நம்பியா ? இல்லை அந்த வேட்டையாடிய வீரனா? என்று நாம் யோசித்தால், முத்தரசனின் கை அக்கோயிலில் செதுக்கி கொண்டிருந்த ஒரு ஆடலரசியின் சிலையின் இடுப்பில் வைத்திருந்த கையில் இருந்து அவன் காம நோயில் ஆட்கொள்ளப் பட்டதை உணர்த்தியது.

அந்த பௌர்ணமி இரவில், வீரன், ராகவ நம்பி, முத்தரசன் ஆகிய மூவரும் ஒவ்வொரு கோணத்தில் கோதையை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க, வீரன் செய்த அந்த புலி வேட்டை அவ்வூரில் புரட்சி ஏற்படுத்தும் நாள் வெகு தூரம் இல்லை என்றவாறு காய்ந்து  கொண்டிருந்தது...


தொடரும்    



(தொடரும்)




 


5 கருத்துகள்: