திங்கள், 14 பிப்ரவரி, 2011

பொக்கை வாய் முத்தம்


        விடிந்தவுடன் ஒரு சராசரி மனிதன் வேண்டுவது,ஒவ்வொரு நாளும் நாம் நிம்மதியாய் தூங்க வேண்டும் என்பது தான். ஆனால் நாம் இரவு படுக்கும் போது, ஏதோ ஒரு காரணி நம் தூக்கம் வருவதற்கு தடையாக இருக்கிறது. ஒரு காலத்தில் வீட்டுப் பாடங்கள் தடையாய் நிற்கும், பின்னர் பரீட்சை பற்றிய பயம் , கொஞ்சம் வயதான பின்பு எதிர்பால் ஈர்ப்பில் தூக்கம் தடை படும், காதல் ,வேலை, திருமணம் என நம் சந்திக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் நமது அடுத்த இலக்கு நம் தூக்கத்தினை தடை செய்யும்.

        நானும் அப்படித் தான், எப்பொழுதும் அவளுடன் செய்யும் காதலுக்கு இடைவெளியில் எப்போதாவது வாழ்க்கை பற்றிய எண்ணங்களும் வந்து தூக்கத்தினை தடை செய்யும். இன்றும் அப்படித் தான், தூக்கம் வருவதற்கு முன்னே நானே   வடிவமைத்த கனவும் , அதில் அவளும், எங்களுக்கான கற்பனை உலகமும் தயாரானது. என்னருகில் வந்து ஆவலாய் பேச ஆரம்பிக்க அவள் முற்பட்ட போது, முகத்தில் சில்லென்ற நீரை ஊற்றியது போல் ஏன் வாழ்க்கை பற்றிய பயமும், என்னுடைய பொருளாதார இலக்குகளும் என்னை சூழ்ந்தன.

      போர்த்தியிருந்த போர்வையினை விலக்கிவிட்டு அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர முயன்றேன். எதற்காக என் போராட்டம்? யாருக்காக நான் வாழ்ந்து காட்ட வேண்டும்? எந்தச் சமுதாயம் வேறு வேலை வெட்டி இன்றி என்னையே பார்த்துக் கொண்டு வருகிறது? தன் இறப்பினை குறித்து விட்டு பிறக்கும் மனிதனாகிய நான் இடையில் அடையப் போவது என்ன? என்று குறைந்த மின் அழுத்தத்தில் சுற்றும் மின்விசிறி போல் என் மனம் அலை பாய்ந்தது.

     இவ்வாறு அயர்ந்து, சோர்ந்து மெல்ல தூக்கம் எனும் பயணத்தினை தொடங்கினேன், இந்த முறை என் இளவரசியை பற்றிய அக்கறை இல்லை, ஒருவேளை நான் எந்த அரிதாரமும் பூசாமல் , கையிலே எந்த பணமும் செலவு செய்ய இல்லாததாலோ  என்னவோ அவள் அப்பொழுது வரவில்லை.ஆனால், எவ்வளவு பணம் கட்டியும் , யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி எடுத்தும் கிடைத்திடாத ஒரு புல்லரிப்பு அக்கணத்தில் எனக்கு ஏற்ப்பட்டது. இந்த இடுகையை எழுதும் போதும் கூட அதை என் ..........ஆத்மார்த்தமான உணர்வு என்று பெயரிட்டு அழைக்க தோன்றுகிறது. எல்லாம், எனக்கு கிடைத்த அந்த பொக்கை வாய்  முத்தத்தின் விளைவு தான்.

     அந்த முத்தம் கொடுத்த பொக்கை வாயின் சொந்தக்காரி என் ஆச்சி தான், இன்னும் அவளுக்கு சில பற்கள் உள்ளது என்றாலும், என் கனவில் அவள் கொடுத்தது பொக்கை வாய் முத்தம் தான். அந்த எச்சில் இன்னும் என் கன்னங்களிலும் தொட முடியாத என் இதயத்திலும் படிந்திருப்பதாக உணர்கிறேன்.

    ஆச்சி, என் அம்மாவின் அன்னை. நிரம்ப பழகியது இல்லை, ஒவ்வொரு விடுமுறையிலும் பார்க்கும் ஒரு விருந்தினராய் தான் அவள் எனக்கு உறவு .அவள் என் பால்ய வயதில் தூக்கி வளர்த்ததை என் அம்மா சொல்லுவாள்,  என்னை அவள் சீராட்டியது என் மூளையால் ஞாபகம் கொண்டு ஆதரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. என் தந்தையின் அன்னையோ, நான் பிறக்கும் முன் இறந்ததால், இன்று எனக்கு முத்தம் அளிக்கும் வாய்ப்பு அவளுக்கு கிட்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

   அவள் என்னை உச்சிமுகர்ந்து கொடுத்த முத்தம், என் அம்மாவிடம் கூட எனக்கு கிடைக்காதது.அவள் எதற்க்காக எனக்கு கொடுத்தாள்? என்று தெரியவில்லை, நான் என்ன ஜில்லா கலெக்டரா சாதனைகள் செய்ய ?? கண்டிப்பா அது என் திருமண நாளாக தான் இருக்க வேண்டும். என் காதலியை  மனம் முடிக்கும் கனவில் கூட எனக்கு இவ்வளவு புத்துணர்வு ஏற்ப்பட்டதில்லை. இந்த கனவு எனக்கு என்ன காரணம் சொல்ல முற்படுகிறது?

    தாயின் தாய் கொண்டுள்ள தாய்மையின் சிறப்பை அளவிட முடியாது, அதை என் நண்பனின் (பிரதீப்) பாட்டியிடம் இருந்தும் நான் உணர்ந்துள்ளேன்.அன்பு என்பது எத்தனை பலவீனமானது என்பதை இந்த பாட்டிகளிடம் இருந்து தான் உணர்கிறேன்.தேய்ந்து போன எலும்பினையும், சுருங்கிய தோலினையும் ,மங்கிய பார்வை கொண்டும் தன் பேரன்/பேத்திக்கென செய்யும் சமையலில் ஒவ்வொரு அரிசியிலும் அவள் அக்கறை இருக்கும், பிரதிபலன்களை எதிர்பாராமல்.

    தாய் எதையும் எதிர்பார்காதவள் என்றாலும், நாம் பயின்று வரும் கல்வியில் இருந்து சினிமாவரை தாயை பார்க்கும் பக்குவத்தை சொல்லிவருகிறது (  தந்தையின் நிலை பாவம் தான்), எனவே நாம் அவளுக்கு உரியனவற்றை செய்துவருகிறோம்.  ஆனால் நம் பாட்டிகளின் நிலை வேறு, அதுவும் உடல் நிலை குன்றியவள் என்றால் அவ்வளவு தான் . இன்னும் நம் கிராமங்களில், எத்தனையோ வீட்டில் திண்ணை தான் கிழவிகளின் இருப்பிடமாக பார்க்கிறோம். ( நகரங்களில் தான் அவுங்க அவசியமே இல்லையே). அப்படி இருந்தும், பாசத்தில் ஒரு எள்ளளவும் குறை இன்றி தன் பேரனை கொஞ்சுவர்.

     அவர்கள் மூன்றாவது தலைமுறையினை பார்ப்பதாலோ என்னவோ, வேகமாக மாறிவரும் உலகம் அவர்களை மிகவும் பயத்திற்கு உள்ளாக்கும், மாற்றங்கள் அவர்களை சித்திரவதை படுத்தும் நிலையும் ஏற்படலாம். பொதுவாக, அவர்களின் உபயோகம் குறைய, குறைய நமக்கு ஒரு அலட்சியம் அவர்கள் மேல் வந்துவிடுகிறது. வாரம் ஒருமுறை, ஒரு போன் பண்ணி, "எப்படி இருக்கே ?" என்ற இரண்டு வார்த்தை கேட்டாலும் - கண்டிப்பாக அவளுக்கு ஒரு வாரம் தாக்கு பிடிக்கும் நிலை கொடுக்கும் என்றாலும், facebook, blog ,sms என்று வேலைப் பழுவில் நாம் மறந்து விடுவோம்!!!

      ஆனால் , அவளை நாம் பார்த்தாலும், பார்க்காமல் சென்றாலும், பணிவிடை செய்தாலும், திட்டினாலும், அலட்சியப் படுத்தினாலும், நிராகரித்தாலும்,தலையை தொட்டுத் தடவ முற்படும் போது நாம் எக்கி நின்றாலும், நகைத்தாலும், அவள் காலத்தினை ஏளனம் செய்தாலும், அது அவளை ஒன்னும் செய்யாது. நமது சிரிப்புக்காக  - நாம் குழந்தையாய் இருக்கும் போது தன்னை முகம் மாற்றி கோமாளியாய் காட்டியவள் தானே அவள்? நம் தாயின் பிரசவ வேதனையை - தன் மனதில் நிறுத்தி - மீண்டும் செத்துப் பிறந்தவள் தானே அவள்? அவள் கோபப் படமாட்டாள், பாசத்துடன் நம் தலைமயிரை தடவிக் கொடுக்கவே ஆசைப்படுவாள்.
  
      என்றாவது ஒருநாள் நமக்கு வாழ்க்கையை பற்றிய பாடத்தினை முதன் முதலில் கற்றுத் தருபவள் அவள் தானே? ஆம், அவள் தன் இழப்பின் மூலம், தான் இருத்த திண்ணையின், கட்டிலின் வெற்றிடத்தைக் காட்டி சொல்வாளே ஒரு மவுன நீதியினை.
அது தான் இந்த சமுதாயத்தில் நமக்கு பாட்டி என்பவள் ஒரு பொக்கிஷம் என்பதை உணர்த்தும். அவள் ஊட்டிய சோறு, சொல்லிய கதையுடன் , காட்டிய வெற்றிடம் சொல்லும் தேவையற்ற ஆசையின் சொற்ப வாழ்நாளினை.

     அடைந்தது, அடையாதது என்ற எல்லா பாகுபாடும் ஒரு வெற்றிடத்தில் தான் முடியும் என்பதை அந்த பொக்கை வாய் முத்தம் எனக்கு உணர்த்தியது. காலை எழுந்து பார்த்தேன், தலையணை நனைந்திருந்தது, உள்ளமோ குளிர்ந்திருந்தது. ஆச்சி, இன்று நான் உனக்கு புடவை வாங்கி வருவேன்.

    

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக