திங்கள், 31 ஜூலை, 2017

வீணாய்ப் போனவர்கள் கதை - 12

அவர்கள் கேட்டத்தொகையை அவன் கொடுத்துவிட்டான். தனது தலைவலிக்காக பிரச்சனையை அவன் ஒருநாள் முழுமையாகச் சொன்னபிறகு, அவர்கள் அவனுக்குச் சிகிச்சையளிக்கத் தொடங்கினார்கள்.
அவன் சற்று இலகுவாகத் தன்னை உணர்ந்திருந்தான். ஏதோ அவனை விட்டு இறங்கியதாகத் தெரிந்தது. தான் எதற்காகச் சிகிச்சைக்கு சென்றிருந்தோம் என்பதையே மறந்திருந்தான். அது மருத்துவருக்கும் தெரியும் போல, தான் விடைபெறும் போது தன்னிடம் இருந்த கேஸ் ஹிஸ்டரி கோப்பினை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். அவனுக்கு அது ஒரு கோப்பு என்று தான் ஞாபகமிருந்தது. அதில் என்ன இருந்தது என்பது துளி கூட ஞாபகம் இல்லை.

தான் மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம் என்பது மட்டும் ஞாபகமாய் இருந்தது. மீண்டும் வரத்தேவையில்லை என்று அந்த மருத்துவர் சொன்னவுடன், அவன் விடைபெறும் போது. ஏனோ அந்த மருத்துவர் அவனை ஆரத்தழுவியது ஞாபகமிருந்தது. அவர் ஏன் தன்னைத் தழுவினார் என்று தெரியவில்லை.

சில நாட்களாக அவன் கிளைகளில் இருந்த விடுபட்டிருந்த சுதந்திர இலையாய் உணர்ந்தவன், தான் மெல்ல மெல்ல காய்ந்து கொண்டிருப்பதாய் உணர ஆரம்பித்தான். உண்மையில் அவனுடைய ஏதோ ஒன்று இல்லாமல் போயிருந்தது. சிறிது நாட்களில் அவன் அது குறித்தே தீவிரமாய சிந்தித்துக் கொண்டிருந்தான். தான் எதற்காக மனநிலை மருத்தவரிடம் சென்றோம் எனத் தீவிரமாய் ஆய்வு செய்து கொண்டான். தனக்கு இருந்த டைரி எழுதும் பழக்கம் ஞாபகமிருந்தது. ஆனால் அவைகளைக் காணவில்லை, தனது கைப்பேசி, கணிணி போன்றவற்றில் நிறைய விஷயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தான். அதைத் தானே செய்திருக்கலாம், அதுவும் அந்த மருத்துவரின் ஆலோசனைப்படி தான் அவற்றைச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

நிச்சயமாக அவனுக்கு மருத்துவர் மீண்டும் உதவுவாறா என்று தெரியவில்லை. ஆனால் நித்தமும் அவனது சிந்தனை, ஏதோ ஒரு வெற்றிடத்தை நினைவுறுத்திக் கொண்டே இருந்தது. அதையே தொடர்ந்து சிந்திக்க ஆரம்பித்ததும் மீண்டும் தலைவலியால் அவதிப்பட ஆரம்பித்தான். இந்த முறை வேறு ஒரு மருத்துவர், ஸ்கேனிங்கில் ஒன்றும் தெரியாததால். அவர் வெறும் மாத்திரைகள் எழுதி சாப்பிட்டுவரச் சொன்னார். எதுவும் தேறவில்லை. மீண்டும் அந்தப் பெண் மருத்துவரையே சந்திக்கலாம் என்று தோன்றியது.

“you crazy, நீங்க இப்போ நல்லாருக்கிங்க. கொழம்பாம அலட்டிக்காம லைஃப ரீஸ்டார்ட் பண்ணுங்க”

“டாக்டர். ரீஸ்டார்ட்னு சொல்றிங்க. எனக்குத் தெரியல் என் லைஃப நான் எப்படி அழிச்சுக்கிட்டு இருந்தேன்னு. ஆனா தெரிஞ்சுக்காம என்னால இயங்கமுடியாது”

“தட்ஸ் இம்பாசிபில் நான் எல்லார்க்கும். இது போல இவ்ளோ தூரம் இறங்கி வந்து ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை. உங்களுக்காகக் கொடுத்திருக்கேன். நீங்க சில விஷயங்களை மறக்க வேண்டியிருந்தது. டெலிட் பண்ணேன். மத்தபடி அது உங்களோட முயற்சில மட்டுந்தான் சாத்தியமானது. சோ உங்கள நீங்களே கொழப்பிக்காதிங்க”

”அதுவும் மூன்றரை ஆண்டுகளாக”

அவன் அந்தக் கால இடைவெளியை சரியாகச் சொன்னபோது. அந்த மருத்துவர் சற்று அதிர்ச்சியானாள்.

“மூன்றரை ஆண்டுகளா சரியாகச் சொல்ல முடியுமா எந்த மாதத்திலிருந்து” என்று.

”ஆம், சரியாகச் சொல்லப்போனால் செப்டம்பர் மாசம் மூணாம் தேதியோ , ஐந்தாம் தேதியோ”

கிட்டத்தட்ட மிகச் சரியாகச் சொல்லிவிட்டான் என்கிற போது, அந்த மருத்துவருக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உடனேயே அவனை மீண்டும் சிகிச்சைக்கு வரச்சொல்லியிருந்தாள். சிகிச்சை ஆரம்பிப்பதற்குள் தன் மூத்தவர்களோடு விவாதித்துக்கொண்டாள்.

அவனுடைய நினைவுகளில் இருந்த அவன் காதலியின் நினைவுகளை முழுவதுமாக ஆழ்மனப்பயணம் மூலம் அழித்துவிட்டிருக்க. அவளை அழித்தபின்பு ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களால் அவன் அல்லலுற்றிருந்தான் என்பதால், அந்த இடைவெளியை அவன் துல்லியமாகக் கணக்கிட்டு, மீண்டும் மனச்சிதைவுக்குள்ளாக ஆரம்பித்திருக்கிறான். இப்போது மீண்டும் அவனை குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த இடைவெளியை மீண்டும் அவனுக்கு நினைவாக மாற்ற வேண்டும்.

அதே கதை தான் சொல்லப்படவேண்டும், ஆனால் அவன் காதலிக்கும் எல்லா கணங்களிலும் காதல் நிகழாதவாறு சம்பவங்களை மாற்றிச் சொல்லி அவனை நம்ப வைக்க வேண்டும். அதே பெண் மீது அவனுக்கு காதல் வர எந்தக் காரணமும் வந்துவிடக்கூடாது. இப்போதெல்லாம் இது போன்ற சிகிச்சை மிகச்சாதாரணமாகி விட்டது.

மீண்டும் அவனுக்கு அட்மிஷன். ஒரு நீண்ட கோர்ஸ் ட்ரீட்மெண்ட் என ஆரம்பித்தார்கள். ரெகார்ட் செய்யப்பட்டிருந்த அவனது கதைகள் மீண்டும் அவனுக்கு மாற்றிச் சொல்லப்பட ஒரு எழுத்தாளரால் ஸ்க்ரிப்ட் செய்யப்பட்டு அவனுக்கு ஊட்டப்பட்டன. அந்த கோர்ஸ் முடித்து அவன் வெளியே வருகையில் மிக உற்சாகமாகக் காணப்பட்டான்.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் அந்த மருத்துவரை போனில் அழைத்தான்.

“வணக்கம் டாக்டர். இதை ஏன் நான் உங்ககிட்ட சொல்லனும்னு எனக்குள்ளே மிகுந்த உந்துதல் இருக்கோன்னு தெரியல.. ஆனா நான் இப்பொ என் நிலைமையைப் பற்றி உங்களுக்குச் சொல்லனும்”

மிகுந்த பயத்துடன் அவள் அவனுக்கு ம்ம்ம் கொட்டினாள்.

“டாக்டர் அம் லிவிங் வித் ஹெர் நவ்”
 “என்ன”

“வீ ஆர் லிவிங் டுகெதர்”

புதன், 5 ஜூலை, 2017

பஜ்ஜி-சொஜ்ஜி 112 / ஆசிரியர் தாமஸ்


லேட்டா வருது பார் ஊர்சுத்தி” என்று வீட்டிற்கு வரும்போதெல்லாம் நம்மை நோக்கி இப்படிச்சொல்வதற்கெல்லாம் தகுதியான வாழ்க்கையை தான் வாழ்கிறோமா என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக் கொள்வேன். ஆனால் என்னதான் வீடு செல்லாமல் ஊர் சுற்றினாலும், நாம் சுற்றும் தொலைவின் விட்டமோ ஐம்பது சொச்சம் கி.மீ ஆகவோ அல்லது சந்திக்கின்ற மனிதர்கள் அநேகமாக யாரும் இல்லாததாகவோ இருப்பதில் ’ஊர்சுத்தி’ என்கிற பட்டத்திற்கு தகுதியானவன் தானா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

இந்த ஆண்டிலிருந்து அவ்வாறாக இல்லை, ஏதாவது ஒரு வேலையும் சொல்லிவைத்தார் போல் வந்துவிடுகிறது. இந்த வாரம் அப்படி இரு சந்திப்பு, ஒன்றைப் பற்றி விலாவரியாகப் பேசவேண்டும். இன்னொன்றுக்கு வருகிறேன்.

கோபி சென்றிருந்தேன் இந்த வாரம். கல்லூரியில் மணிகண்டனின் மூன்றாம் நதியைச் சேர்த்துவிட்டு வந்தேன். பெருமையாக இருந்தது. கல்லூரியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென்று ஒரு போன். தாமஸ் தோழர்.

தாமஸ் தோழர் மணிகண்டனின் அறக்கட்டளை காரியங்களுக்கு உடன் நிற்கும் தோழமைகளில் ஒருவர். முக்கியமாக அவர் ஒரு தமிழ்தேசியவாதி. தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர், அரசியல் ஒவ்வாமைக்காரணமாக தன் கல்விப்பணியை மட்டும் முழுமையாக மேற்கொண்டு வருகிறார். கோபியிலிருந்து சுமார் ஐந்தாறு கி.மீட்டர் தொலைவில் தூய திரேசாள் முதனிலைப்பள்ளி எனும் தொடக்கப்பள்ளியை நிர்வகித்து நடத்தி வருகிறார். அவர் என்னை அழைத்தது அங்கே பள்ளிக்கு அழைத்துச்செல்ல..

கோபிச்செட்டிப்பாளையத்தில் மணியை அரசியலில் நிப்பாட்டினால் உருப்படியான ஒரு எம்.எல்.ஏவை சட்டமன்றம் பார்க்கும் என்று மனதினில் அடிக்கடி தோன்றும். மணிகண்டனின் பப்ளிஷர் என்றே அந்த ஊரில் பத்து நண்பர்களாவது தெரிந்து வைத்திருப்பேன். அத்தனை பேரும் அவ்வூரில் முக்கியப்பிரமுகர்கள். பொதுவாகவே அந்த ஊரில் உன்னைக் கொலை பண்ணுகிறேன் என்று மிரட்ட வேண்டுமென்றாலும் கண்ணூ என்று சேர்த்து விளிப்பதால் அன்பாக நாமே வயிற்றைக் காண்பித்து இங்கே குத்துங்கள் என்று சொல்லும் அளவுக்கு மக்களோடு பிரியம் வந்துவிடும் என்பது தனிக்கதை.

தாமஸ் தோழர், மிக எளிமையான மனிதர். தன் என்ஃபீல்டில் என்னை அழைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவரது தந்தை நல்லாசுரியர் மா. அரசு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த இப்பள்ளியை இப்போது இவர் நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியின் வயது 75. பவள விழா கொண்டாடியிருக்கிறது, மூன்று தலைமுறை மாணவர்களைக் கண்டிருக்கும் பள்ளி எனும் போது ஆர்வமாகத்தான் இருந்தது.
இந்தப் பள்ளியில் தான், மணிகண்டன் தொடுதிரை வகுப்பிற்கான ஏற்பாடுகளை அமைத்துக்கொடுத்திருந்தார் என்று கேள்விப்பட்டிருந்தேன். 

போகும் வழியில் அந்த ஊரின் வரட்சியைப் பற்றி விசனப்பட்டுக்கொண்டு வந்தார். தன் வாழ்நாளிலே எப்போதும் நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஓடை காய்ந்துபோனதைப் பற்றி அவர் பேசும் போது, நமக்கு ஏதோ ஒன்று நெருங்கிக்கொண்டிருப்பதாய் ஒரு அவநம்பிக்கை சூழ்ந்து கொண்டிருந்தது. வற்றிப்போயிருந்த குளங்கள் தூர்வாரப்பட்டுக்கொண்டிருந்தன. ஒன்று அவ்வூர் பொதுமக்களாக சேர்ந்து தூர் வாரிக் கொண்டிருப்பதாகவும் ஊருக்கு வெளியே இருக்கும் குளத்தை நிசப்தம் அறக்கட்டளையின் உதவியால் தூர் வாரிக்கொண்டிருப்பதாகவும் சொல்லும் போது. அன்று மணிகண்டன் பேசியது நினைவுக்கு வந்தது.
ஊருக்குள் இருக்கும் குளத்தை ஏன் மக்களே தூர்வாரக்கூடாது என்று பேசிக்கொண்டிருந்தார். மணி அறக்கட்டளை நடத்துவதில் நண்பர்களை விட எதிரிகள் தான் அதிகம் எனப் புரிந்து கொண்டேன். முதல் வருட நூலகக்கொடையில், இந்தப் பள்ளிக்கு நிசப்தம் தரவில்லையாம். கிருத்தவ உதவி பெறும் பள்ளிகளென்றால் வசதி இருக்கத்தான் செய்யும் என்று தள்ளிப்போட்டுவிட்டாராம். பின்னர் அவரே அந்தப் பள்ளிக்கு வரும் உதவிகளின் அளவைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இந்தப் பள்ளிக்கான நூலகம் வைத்துக்கொடுத்துள்ளார்.


பள்ளிக்குள் செல்லும் பொழுது, ஒரு தொடக்கநிலைப்பள்ளி போல் இல்லை, ஒரு இடைநிலை, உயர்நிலைப் பள்ளி போல் இருந்தது. நல்ல விசாலமான, காற்றோட்டமுள்ள, மின் விசிறிகளுள்ள சத்துணவு வசதியுள்ள மிகவும் தரமான பள்ளியாக இருக்கிறது என்பதை வெளியில் இருந்தே புரிந்து கொள்ள முடிந்தது, இந்தப் பள்ளியைப் பற்றி அதன் முன்னால் மாணவர்கள் குறும்படம் எடுத்திருப்பதாகக் காட்டினார்.
கொஞ்ச நேரம் மாணவர்களோடு உரையாடலாம் என்று சொன்னார். மாணவர்களோ எப்படிப் பேச, இலக்கியக் கூட்டம் என்றாலே. கரகரன்னு சரியா ட்யூன் பண்ணாத ரேடியோ போல் இருப்போமே என்று தயக்கத்தோடு உள்ளே நுழைந்தாலும், அவர்களைப் பார்த்தவுடன் உற்சாகம் பிறந்தது.


கொஞ்ச நேரம் உரையாடுவதிலேயே அவர்களுக்கு ஒழுக்கத்தோடு சேர்த்து கனவும் விதைக்கப்பட்டிருக்கிறதைப் புரிந்து கொண்டேன். ஒரே ஒரு பேருந்து மட்டும் வந்து செல்லும், ஒரு தேநீர் கடை கூட இல்லாத அப்பள்ளிக்கு பத்து கி.மீ தள்ளியிருக்கின்ற ஊரிலிருந்து கூட மாணாக்கர்கள் வருகிறார்கள் என்று அறியும் போது தான் ஆசிரியர்களின் ஈடுபாட்டைத் தெரிந்து கொண்டேன். இவையெல்லாம் இருக்கட்டும். ஏதாவது ஒரு அட்வைஸ் சொல்லலாமே என்று எல்லாரும் புக் வாசிக்கிற பழக்கம் இருக்கா என்று கேட்க, அநேகத் தலைகள் மேலிருந்து கீழாய் அசைந்தன. Random sampling ஆக நீங்க என்ன படிச்சிங்க என்று ஒரு சிறுவனை அழைத்துக் கேட்க அவன் வாசித்தக் கதைகளைச் சொன்னான், வேறு ஒரு மாணவியைக் கேட்க அவள் ஒரு சிறுகதைத் தொகுப்பு வாசித்ததாகச் சொன்னாள், அபப்டியே இன்னும் இரண்டு மூன்று மாணவர்களை நானாகத் தெரிவு செய்து கேட்க, அவர்கள் எல்லோருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களென அறிந்து கொண்டேன்.
எப்படி இந்த ஆர்வம் மாணவர்களுக்கு சாத்தியமானது என்று தலைமை ஆசிரியரிடம் கேட்க. அதற்கும் மணிகண்டனின் பங்களிப்பைச் சொன்னார். வெறுமனே கட்டிவைத்த புத்தகங்கள் கூடப் பிரிக்கப்படாமல் இருக்கும் பள்ளிகளைக் கண்டு சற்றே தளர்வடைந்ததால், புத்தகம் கொடுக்கும் பள்ளிகள் எவ்வாறு செயல்பட்டால் நன்றாக இருக்குமென இருவரும் விவாதித்திருக்கிறார்கள்.


அதன்படி, அப்பள்ளியில் வாரத்திற்கு மூன்று வகுப்புகள் நூலகத்திற்கான வகுப்புகளாக ஒதுக்கப்படுகின்றன, ஒவ்வொரு வெள்ளி மாலையும் அவர்களுக்கு வீட்டிற்கு புத்தகங்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டு, அவை திங்கள் பெறப்படுகிறது. மாணவர்கள் ஆர்வமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் உள்ள கையேட்டில் அவர்கள் வீட்டுப்பாடக் கணக்கைப் போல, நூலக வாசிப்பிற்கான பக்கங்களும் இருக்கின்றன. அதில் அவர்கள் வாசித்த புத்தகங்களின் பட்டியல் இருக்கின்றன, பள்ளி தொடங்கிய இந்த ஒற்றை மாதத்தில் மூன்று புத்தகங்கள் வரை படித்த மாணவர்கள் இருக்கிறார்கள். அந்த கையேட்டின் பின்பகுதியில் ஒரு பயோடேட்டா இருக்கிறது மாணவர் பற்றிய தகவல், அதில் கடைசி வரியில் லட்சியம் என்று இருந்தது.

லட்சியம் : அறிவியல் விஞ்ஞானி.
அவன் அந்த வாரம் படித்த புத்தகம் – அறிவியல் விளையாட்டுகள்.


மிகவும் சந்தோசமாக இருந்தது. வாசிப்பை ஊக்கப்படுத்துவது எங்கிருந்து தொடங்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாகச் செயல்படுத்தியிருக்கிறீகள் என்று ஆசிரியரை உளமாரப் பாராட்டிவிட்டு, நெகிழ்வோடு திரும்பி வந்தேன்.




நீங்கள் மிகச்சரியாகப் போய்க்கொண்டிருக்கிறீர்கள் மணி. உங்களோடு பயணிப்பதில் எனக்கு மிகவும் பெருமை தான். ஆனால் என்ன என்னை கவிஞன் என்று சொல்லிவைத்திருக்கிறீர்கள், தாமஸ் தோழரும் என்னைக் கவிஞன் என்று மாணவர்களிடம் அறிமுகப்படுத்திவிட்டார். நானும் ஒரு கவிதை எழுதனும்ங்கற சித்தம் வந்துவிட்டதாக உணர்கிறேன்.


ஜீவ கரிகாலன்