வியாழன், 17 நவம்பர், 2016

பஜ்ஜி - சொஜ்ஜி 101. புரட்சிகர மாதத்தில் ஒருநாளானது...    வழக்கம்போல நேற்று அலுவகலத்திற்குச் செல்லும் போது ஆலந்தூர் நீதிமன்றம் அருகில் திடீரென்று போக்குவரத்து நெரிசல் அதிகமானது. வாடகை மகிழுந்து ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்திருக்கும் கண்டன ஆர்ப்பாட்டமாம். ஓலா மற்றும் ஊபர் எனும் நிறுவனங்களைக் கண்டித்து ஓரளவுக்க நல்ல கூட்டம் கூடியிருந்தது. ஏற்கனவே பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த, இந்த கூட்டத்தைப் பற்றி அறியாத மற்ற மஞ்சள் போர்டு மகிழுந்து ஓட்டுனர்களை வலுக்கட்டாயமாக மறியல் செய்து போராட்டத்தில் இறங்கச் சொல்லியபடி போக்குவரத்தை தடை செய்து கொண்டிருந்தனர்.


அலுவலகத்திற்கு தாமதமாகச் செல்வதற்கு தான் தினமும் எத்தனைக் காரணங்கள் கிடைக்கின்றன இம்மாநகரத்தில். ஆவின், கோ ஆப்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் போல் சில மாதங்களாக சென்னையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது காவல்துறை. அதைப் பற்றித் தனியாகவே ஒரு பதிவிடலாம்.

 என் இருசக்கரவாகனத்தை ஓரங்கட்டி ஆவின் பால் பூத்தில் ஒரு பால் வாங்கியபடி, போராட்டத்திற்கு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டும் அதே சமயம் கைதாவதை விரும்பாத ஓட்டுநர்களும் அங்கே ஒதுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களைப் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒரு முகவர் வற்புறுத்தியபடி இருந்தார். ஒரு நபரை மட்டும் ஒதுக்கினேன். உண்மையில் ஓலா, ஊபர் மீது உங்களுக்கு என்ன கோபம் என்றேன்.

“எங்களுக்கு இன்னா ப்ரச்சன, அடுத்த வர்ஷம் நம்மளே சொந்த கார் வாங்கலாம்னு நான் யோசிக்கிறேன்ல அதான் எங்க மொதலாளிக்குப் பிரச்சனை”

‘மொதலாளிக்காக நீங்க ஏன் பயப்படுறிங்க, போலீஸ்கிட்ட சொல்லலாமே’

“என்னைக் கைது பண்ணப்போறதே என் மொதலாளி தான்” என்றபடி சிரித்துக்கொண்டே கைதாகிக் கொண்டிருந்த ஓட்டுனர்களோடு கலந்து கொண்டார்.

உண்மையில் அரிவாள் யாரை அறுக்கிறது, யார் தலையில் சுத்தியல் விழுகிறது.

 காவல்துறை உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகளுன் ஊழல்/லஞ்சப் பணத்தை முதலீடு செய்யும் துறைகளில் முக்கியமான துறை தான் மஞ்சள் போர்டு கார்கள். ஊபரும், ஓலாவும் மிகப்பெரிய முதலைகள் தான், இவர்கள் பல சின்ன முதலைகளின் தொழிலில் கைவைத்து விட்டு, ஓட்டுநர்களாக இருக்கும் பலரை முதலாளிகளாக்கி விடுகிறார்கள்.

 எனக்குத் தெரிந்து கரூர், நாமக்கலிலிருந்தே நிறைய ஓட்டுநர்களைச் சந்தித்திருக்கிறேன். மாதம் எளிமையாக நாற்பதாயிரத்திலிருந்து அறுபதனாயிரம் வருமானம் வருகிறது என்று இங்கே வந்துவிட்டவர்கள் ஏகப்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறேன். என் அலுவலகத்தில் கூட ஒரு நபர் தான் பகுதிநேரமாகச் சம்பாதித்திட கார் ஓட்டிப் பழகிக்கொண்டிருக்கிறார்.

 ஊபரையும், ஓலாவையும் இவர்களால் (சிறு முதலாளிகளால்) ஒன்றுமே செய்யமுடியாது என்பது தான் நிதர்சனம். கூடுதலாக ஷேர் டாக்ஸி வந்தபிறகு பெருமளவு பொதுமக்களின் ஆதரவு வந்துவிட்டது. அதனால் எத்தனை சட்டம் போட்டும் மீட்டர்போடாத ஆட்டோமேன்கள், இப்போது அவர்களாகவே மாறிக்கொண்டார்கள். ஆனால் இப்படியானப் போராட்டங்களில் பங்கெடுக்க வைத்து ஓட்டுனர்களுக்குப் போலியான அச்சத்தை உருவாக்கிய அரசாங்க அதிகாரிகளின் முகவர்கள் ஒரு கட்சியின் சங்கமாக அதற்கு ஒரு குறியீட்டை வழங்கி அந்த கட்சியின் மீதும் சலிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேலே சொன்ன ஒரு சம்பவம் என் நாளை ஆட்கொள்ளும் என்று தப்புக்கணக்கு போட்டேன். எத்தனை விஷயங்கள் குடைச்சல் கொடுக்கின்றன ஒரேநாளில்…

  அம்முவின் பிளாஸ்திரி போட்டு குளுகோஸ் ஏறிக்கொண்டிருக்கும் வெளிறிய கைகளைப் பார்த்துவிட்டும், அவளிடம் நீங்கள் அணிந்திருக்கும் உடை மிகப்பொருத்தமாய் உங்களுக்கு இருக்கிறது என்றேன். ரமேஷ் ஒரு மாதம் ஆகியும் தன் அறையில் வாங்கி வைத்திருக்கும் தக்காளி கெடாமல் இருக்கிறது என்றான். ஃபேஸ்புக்கில் ஜடாயு என்கிற நண்பர் தான் இந்தியா முழுக்கச் சுற்றியவன் என்றும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக ஜாதித் தீண்டாமைகள் இருப்பதாகவும் அறிவிக்கிறார். ரஜினிகாந்த் இந்தியாவை ஒரே நாளில் மோடி மாற்றிவிட்டார் என்று சொல்கிறார்.

PRIME MEDIAக்கள் தான் TRENDINGஐ தீர்மானிக்கிறது என்பதை அறியாமல் நாம் சமூக ஊடகத்தைப் புரட்சியின் விளைநிலமாக பாவிக்கிறோம். அவ்வப்போது இரயில் சரியான நேரத்திற்கு வருகிறது, அதை விட ஆச்சரியமாக வார இறுதியில் பயணிக்க டிக்கட்கள் கிடைக்கின்றன.

ஏழைகள் பணக்காரர்களுடைய கருப்புப் பணத்தை க்யூவில் நின்று மாற்றுவதைத் தடுப்பதற்காகத் தான் வங்கியில் பணம் மாற்றுபவர்களின் விரலில் மை வைக்கப்படுகிறது என்று ஒரு பீ.ஜே.பி பிரச்சாரகர் சொல்கிறார். அவர்களிடமிருந்து தான் சில சிறந்த கவிதைகள் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களால் மட்டுந்தான் சில முக்கிய தொகுப்புகள் வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. யாரோ ஒருவரை வைத்து எழுதினாலும் அது சுயசரிதை தான் எனச் சொல்லப்படுகிறது. ஓவியர் சிவக்குமார் இளைஞர் சிவக்குமாராக இருந்த போது வரைந்த ஓவியங்களை அகழ்ந்தெடுத்த மீடியாக்களும், சில ரிட்டையர்டு ஓவியர்களும் அவரை EMINENT ARTIST என்று ஸ்டிக்கர் ஒட்டின. ஸ்காலர்கள் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொள்கிறார்கள். இலக்கியவாதிகள் தங்கள் மனைவி மக்களுக்கு நெபோடிஸ அப்பத்தையும் திராட்சையும் கொடுத்ததை உலகுக்கு அறிவிக்கிறார்கள்

***
இப்போது வாடகைக்கார்களை உபயோகிக்கும் மத்தியத்தர வர்கத்தின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது மறுக்கமுடியாத உண்மை. மோடியின் தப்புக்கணக்கு போன்று மத்தியத்தர வர்கத்தை முட்டாளாக்க முயன்றால் அது தோல்வியில் தான் முடியும் ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே முட்டாள்கள் தான். (நானுந்தான்).

ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக