வெள்ளி, 25 நவம்பர், 2016

பஜ்ஜி-சொஜ்ஜி 102

உலகில் ஒருத்தி
*****************

உலகில் ஒருவன் நாவல்,
குணா கந்தசாமியுடன் புத்தக உருவாக்கத்திலிருந்து உடனிருந்து வருகிறேன். அந்த நாவல் குறித்து எழுந்த விமர்சனங்கள் இன்று நினைவுக்கு வந்தது. (இன்று குணா கந்தசாமியின் புத்தகத்திற்கு ஜெயந்தன் விருது அளிக்கப்பட இருக்கிறது) பால்யத்தில் தன் இறுக்கமான நினைவுகளை, பால்யத்தில் ஒருவனுக்கு இருக்கின்ற பார்வையுடன் மட்டுமே எழுதியிருப்பார். ஓரான் பாமூக்கை மொழிபெயர்க்கும் உலக இலக்கியங்களை விரும்பி வாசிக்கும் ஒருவன், அந்த அறிவின் வாசிப்பனுபவத்தை செயல்திறனாக மட்டும் கொண்டு, அந்த பால்யம் குறித்த இன்றைய எழுத்தாளனாய் தன் தரிசனத்தைச் சொல்லாமல். அந்த வாழ்க்கையைப் பதிந்த விதமும் சில , அந்த வடிவம் தான் அதிகம் விமர்சிக்கப்பட்டிருந்தது என் நண்பர்கள் வட்டாரத்தில். எனக்குத் தெரியும் அது தான் இந்த நாவலைக் கொண்டாடவும் சொல்லும் என்பது.

அந்தக் கதையில் வரும் சிறுவனின் பார்வையில் சில சம்பவங்கள் எத்தனையோ கேள்விகளுக்கு விடை இல்லாமல் அங்கங்கே நின்று விடும். அதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார் குணா. திடீரென்று ஊரை விட்டு ஓடி விடும் பக்கத்து வீட்டு அக்கா, ஒரு சிறுவனுக்கு அவளைப் பற்றி எத்தனை தூரம் தெரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தான் எழுதப்பட்டிருக்கும். அதே சமூகத்திலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடத்தை அந்த நாவலில் பொருத்திப் பார்த்து நான் கதைகளை நீட்டிக்கலாம்.


இதை எழுதுவதற்கு மற்றுமொரு காரணம், யதார்த்தவாதம் குறித்து என் மனநிலையில் இருந்த ஒரு பிம்பம் அறுபட்டது அந்த நாவலில் தான். எதார்த்தவாதம் என்பது காலாவதியானது என்கிற நம்பிக்கை என் மனதில் இருந்து வந்தது. ஆனால் எதார்த்தவாதிகள் தான் பெரும்பாலும் இந்த நாவலை விமர்சித்தார்கள் என்றும் ஞாபகம். இந்த நாவல் பொதுவாக எதார்த்தவாதம் அல்லது ரியலிச கட்டுமானங்களை குலைக்கும் வடிவமாகத் தான் உருவாக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ரியலிஸ்டிக்கான வடிவம் என்று நாம் நம்பும் அநேகக்கதைகள் கதைகளுக்கும் மேலே ஒன்றை அது அந்தக் கதை எழுதியவரின் சித்தாந்த, அரசியல், தரிசன என ஏதோ ஒன்றைப் பற்றி அரிதாரம் பூசி தான் கிடைக்கிறது.


கருவிற்கு மேல் வெள்ளைப் பாகம் அவற்றை மாவில் முக்கி எடுத்துப் பொறித்துப் பார்க்கும் முட்டை போண்டா தான் இங்கே பெரும்பாலும் சொல்லப்பட்டு வரும் ரியலிச படைப்புகள் என்கிற முடிவுக்கு வர உலகில் ஒருவன் எனக்கு மிகவும் உதவினான்.

இந்த நாவலைப் பற்றி மீண்டும் பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த நாவலின் மையக் கதாப்பாத்திரமான அந்த சிறுவனின் அத்தை. அவனுக்கு இரண்டு அத்தைகள் இருக்கின்றனர். ஒரு அத்தை விதவையாக வீட்டில் இருக்கிறாள். உண்மையில் வீட்டை ஆள்கிறாள். அவன் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு அத்தை வீட்டிற்கு அனுப்பப்படுகிறான். அங்கு அவனது வாழ்க்கை தான் நாவலாகிறது. உறவுகள் காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் காலத்தில் ஆண்டிக்களிடமிருந்து அத்தைகளை வித்தியாசப்படுத்தி உணர அடுத்த தலைமுறை எப்படிக் கொடுத்துவைத்திருக்கிறதோ தெரியாது.


எனக்கு இந்த நாவலை மறுபடியும் புரட்டிய போது என் அத்தை ஞாபகமே வந்தது, ஆச்சரியமாக என் பெரிய அத்தையை பல மாதங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ஏதோ ஒரு ஊரிலிருந்து அல்ல, வில்லிவாக்கத்திலிருந்து தான் வந்திருந்தார். பல மாத இடைவெளி என்பதை, சில வருடங்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அத்தையின் பெயர் சரோஜினி, நான் என் பால்யத்தில் அவர்களை மெட்ராஸ் அத்தை என்று தான் சொல்வேன், ஆனால் எனக்குத் தெரியாது மெட்ராஸ் என்பது சென்னை என மாறும் என்றும், எங்கள் எல்லோரின் குடும்பமும் இந்த ஊரில் தான் பிழைக்கப் போகிறோம் என்றும், இப்போது பெரிய அத்தை என்றே அழைக்கிறேன். இப்போது அப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், அப்பாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர், இதில் என் அப்பாவிற்கு மட்டும் தான் சரியாக எல்லா உறவுகளும் அமைந்திருக்கும். ஒருவருக்கு அக்கா இருக்காது, இன்னொருவருக்கு தம்பி இருக்காது, மற்றவருக்கு அண்ணனோ, தங்கையோ இருக்காது. அந்த எட்டுபேரில் என் தந்தைக்கு மட்டுமே அது அமைந்திருப்பதாலோ என்னவோ. உறவுகளோடு ஒரு DEPENDENCY இருக்கும் வாழ்க்கைச் சூழலே எங்கள் குடும்பத்திற்கு என்று சொல்ல வருவது இந்தப் பதிவின் நோக்கமல்ல என்பதால் இதை இப்படியே விட்டு விடுவோம்.

சரோஜினி அத்தை, எங்க அப்பாவிற்கு மூத்தவள். பெரிய அத்தைக்கும், என் அப்பாவிற்கும் இடையில் தான் எங்கள் வீட்டின் அரசியல் விதி மாறியிருக்கிறது.

சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் தாத்தா காங்கிரஸ் கட்சியில் தான் இருந்திருக்கிறார், தன் மூத்த மகளுக்கு சரோஜினி என்று பெயர் வைத்திருக்கிறார். தன் மூத்த மகனுக்கு சுபாஷ் சந்திர போஸ் என்றும் பெயர் வைத்திருப்பதால் அவர் (காங்கிரஸில் இருந்து கழட்டிவிடப்பட்டோ அல்லது புறக்கணிக்கவோ கூடும் அல்லவா), என் அத்தைக்குப் பிறகு பிறந்த என் தந்தைக்கு ஜீவா என்று பெயர் (அடைப்புக்குறிக்குள் எந்த கட்சி என்று போடுமளவுக்கு நாடு மோசமாகப் போகவில்லை என்று நம்புகிறேன்). அடுத்தடுத்து கம்யூனிச பெயர் தான் (லெனின், ரோஸி, கல்யாணசுந்தரம்). இந்த பெயர் வரிசையில் ஏழாவது குழந்தைக்கு ஆச்சியின் உடல்நிலைக்கான வேண்டுதலின் கதை பதியப்பட்டிருக்கும். சதுரகிரி மஹாலிங்க மலைக்கு அவ்வளவு தீவிரமான கம்யூனிஸ்டாக இருந்த காலத்திலும் சென்றுவந்திருக்கிறார் என்றும் அறிய வந்தேன். ஆனால் இந்த சுவாரஸ்யமும் இப்போது நீட்டிக்கத் தேவையில்லை.


அத்தை 66 வயது இருக்கும்,  இந்த வயதிலும் அத்தைக்கு இருக்கும் எனர்ஜியைப் பார்க்கும் பொழுது அவ்வளவு ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரு காலத்தில் சென்னைக்கு வந்த பொழுது வார இறுதியென்றாலே வில்லிவாக்கத்திற்கு செல்லத் தோன்றும், ஏனென்றால் அந்த வீட்டில் மட்டுந்தான், கூழ்வடகத்திற்குத் தொட்டுக்கொள்ள நிறைய சோறு கிடைக்கும் :p.

“அவ கை ரொம்ப பெருசு”
“அவ பெரிய கைங்காரி”

பெண்களைப் பொதுவாக மற்ற பெண்கள் விமர்சிப்பதை இவ்வாறு இரண்டாகப் பிரிக்கலாம். என் அத்தையை எல்லோரும் முதல் ரகத்தில் வைப்பார்கள். மோப்பக் குழையும் மலர்நீச்சம் குரலை மனதில் நினைத்துக் கொள்வேன், அந்த முகம் வாடவே வாடாத வாடாமல்லியைப் போன்றது. தன் சிறுவயதிலிருந்து ஓயாமல் உழைப்பவள், என் அப்பா முதற்கொண்டு, எல்லா அத்தைமார்களையும் அவள் தான் வளத்திருக்கிறாள். இப்போதும் பேரப்பிள்ளைகளோடு ஷிஃப்ட் போட்டு வளர்த்து வருகிறாள். உழைப்பு, உழைப்பு என்றாள் அப்படி ஒரு உழைப்பு. என் பால்ய நினைவுகளில், அவர் வீட்டிற்குப் பின்புறம் அவர்கள் மாடு வளர்த்த ஞாபகம் இருக்கிறது, பின்னர் அமுல் ஐஸ்க்ரீம் பார்லர் நடத்திய ஞாபகம், ஆம்வேயில் அவர் முகவராகத் தீவிரமாக இயங்கியதும் ஞாபகமாக இருக்கிறது.


நாங்கள் கரூரில் இருக்கும் பொழுது, 90களின் மத்தியில் நிறைய மில்கள் மூடப்பட்ட காலம். அத்தையைப் பற்றி சில ஆண்டுகள் மறந்துவிட்டிருந்த காலம், ஒரு பெரிய தொகையுடன் வீட்டிற்கு வந்து என் அப்பாவிற்கு கொடுத்துவிட்டுப் போனார். தம்பிக்கு வீடியோ கேம்ஸ் உட்பட கைநிறைய ஏதோ வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனார். அத்தனைப் பாசக்காரியாக அவர் அன்று முதல் தான் கவனிக்க ஆரம்பித்தேன்.


அந்த ஆண்டு பரிட்சை லீவிற்கு அவர் வீட்டிற்கு தான் சென்றோம். குடும்பத்தில் சூறாவளி தாக்கிய காலக்கட்டம், என் பால்யத்தின் ஒன்று ஏற்கனவே இன்னும் நினைவில் இருக்கிறது, ஆனால் அந்த ஆண்டு நான் எட்டாவது முடித்திருந்தேன். ஒன்பதாம் வகுப்பிற்கு செல்வது என்பதே கேள்விக் குறியான காலக்கட்டம், ஏன் என்ற கேள்வியை வானத்து நட்சத்திரங்களிடமிருந்து விடுத்து மனிதர்களிடம் பார்க்க ஆரம்பித்த காலம். அப்போது தான் அத்தையை நன்கு அறிந்து கொண்டேன். அவள் சிறுக சிறுக சேமிக்கும் பணமெல்லாம் தன் தம்பி தங்கைகளுக்காக தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்து வந்தாள். நேற்று வரை, நாளையும் கூட. சகோதர உணர்வுகள் தாய்மையோடே பார்த்துக்கொள்ளப்பட்ட கடைசி தலைமுறை அதுவாகவே இருக்கும். இப்போதெல்லாம் பார்த்தால், சண்டை போடாமல் பிரிஞ்சுக்கிட்டா தேவலை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

அத்தை – இப்போது மனவளக்கலை மன்றத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ மனிதர்கள் அவரிடம் ஆலோசனை பெறுகிறார்கள். நிறைய இடங்களுக்குச் செல்கிறார், யோகா வகுப்புகள் எடுக்கிறார். யோகம் பற்றி சொற்பொழிவு நடத்துகிறார். யோகப்பயிற்சியில் முதுகலைப் பட்டம் வாங்கிவிட்டார். இப்போதும் வர்மக்கலை பயின்று வருகிறேன் என்று சொல்லும் போது. நான் அதிர்ந்துதான் போய்விட்டேன். இவர்களது வாழ்க்கைக்கு முன்னர் நாமெல்லாம் என்ன பெரிதாகச் சாதித்து விட முடியும் என்று தான்.

அவர் மாமியார் திரைப்படங்களில் காட்டப்படும் மாமியார் எம்.என்.ராஜம் போன்று சற்றுக் கடுமையானவரென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை இக்கட்டிலும் கடுமையாக உழைத்து, சேமிப்பில் இருந்து தன் தம்பி, தங்கைகளுக்கு உதவுவதுடன், தன் இரண்டு மகளுகளையுமே நன்கு படிக்க வைத்திருக்கிறார். இருவரும் இன்று professionals ஆக வெவ்வேறு துறைகளில் நிற்கின்றனர். இப்போது அவர் தன்னை சமூகப் பணியில் ஆன்மீகப் பணியென பாவித்து நிறைய செய்து வருகிறார் எனத் தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் மாமாவுக்கு அவர் செய்யும் பணிவிடைகளும் லேசுப்பட்டதல்ல, 70 வயதுக்குப் பின்னர் தன் கணவருக்கு STROKE வந்தபோதும். அவரை இப்பவும் sophisticated posh gentleman ஆக நடமாட வைத்திருக்க முடிகிறது என்றாள் அத்தையின் மனதைரியமும் ஆன்மீக பலமும் சாதாரணமானது அல்ல.


ஆனால் அத்தைச் சாதாரணமானவள் தான், எளிமையானவள் தான். எப்போதும் யாரைப் பார்த்தவுடனும் “வாழ்க வளமுடன்” என்று சொல்லும் பொழுது அவள் தன்னை பேரண்டத்தின் சக்திகளை வாங்கிக் கடத்தும் TRANSMITTORஆகவே தன்னை தினமும் தக்கவைத்து வருகிறாள். சம்மணமிட்டு, நேராக அமர்ந்திருக்கும் கம்பீரம் தனி அழகு தான். அந்த வயதிற்கான அழகு ஒவ்வொரு வயதிலுமே இருக்கிறது. அது அவளுக்கு நிறையவே இருக்கிறது. நேற்றைக்கு வீட்டிற்கு வந்ததும், சில பிராதுகளுக்கு பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. பிரச்சினைகளை அவள் அணுகும் முறை வெகுவாக மாறியிருக்கிறது.

அவள் இப்போது அக்காவாக மட்டும் பேசவில்லை, சகவுயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்று தினமும் தியானிப்பவளாக மாறியிருக்கிறாள். இன்று வரை ஆண்களின் அடக்குமுறையில் இருள் கவிழ்ந்திருக்கும் அந்த கூட்டுக் குடும்ப வீட்டில் தான் என் அத்தையான இந்த ஆனந்த ஜோதி.

இதில் வாழ்க்கையை மறுத்து, எதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன், எதைத் தேடுகிறேன் என்பதெல்லாம், இன்னும் ஏதோ தெரிந்துகொள்ள வேண்டும் என்று பயணிக்கிற, தன் கடமைகளென எல்லாவற்றையும்  கடந்து  இன்னமும் உழைத்துக்கொண்டிருக்கிற என் அத்தையைப் பார்க்கும் போது என் தேடலெல்லாமும் கடுகளவு தான்.

இலக்கியத்தைப் பற்றி பேசவந்த, எழுத வந்த, சாதிக்க வேண்டும் என்கிற கற்பிதங்கள் சில நாட்களாகக் கரைந்துக் கொண்டிருக்கிறது. இலக்கியம் என்ற ஒன்று தனியாக இருக்கிறதா என்ன?  எத்தனையோ பேரின் வாழ்க்கையில் இருந்து கிடைக்கின்ற தரிசனங்களைக் காட்டிலும் இலக்கியம் எப்போதாவது தான் சிந்திக்க வைக்கிறது. ஆக இந்த பஜ்ஜி-சொஜ்ஜியில் நான் கடந்து வந்த சில மனிதர்களைப் பார்க்கலாமே என்று தோன்றுகிறது.

ஆனாலும் என்ன அத்தை மீது எனக்குத் தீராத கோபம் ஒன்றிரண்டு இருக்கவே செய்கிறது.

1. இரண்டு பெண்களுடன் நிறுத்தி விட்டாள்.
2. இரண்டுமே என்னை விட மூத்தவளாகி, நான் சுதாரிப்பதற்குள் திருமணமும் நடந்து விட்டது.

:p








வியாழன், 17 நவம்பர், 2016

பஜ்ஜி - சொஜ்ஜி 101. புரட்சிகர மாதத்தில் ஒருநாளானது...



    வழக்கம்போல நேற்று அலுவகலத்திற்குச் செல்லும் போது ஆலந்தூர் நீதிமன்றம் அருகில் திடீரென்று போக்குவரத்து நெரிசல் அதிகமானது. வாடகை மகிழுந்து ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்திருக்கும் கண்டன ஆர்ப்பாட்டமாம். ஓலா மற்றும் ஊபர் எனும் நிறுவனங்களைக் கண்டித்து ஓரளவுக்க நல்ல கூட்டம் கூடியிருந்தது. ஏற்கனவே பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த, இந்த கூட்டத்தைப் பற்றி அறியாத மற்ற மஞ்சள் போர்டு மகிழுந்து ஓட்டுனர்களை வலுக்கட்டாயமாக மறியல் செய்து போராட்டத்தில் இறங்கச் சொல்லியபடி போக்குவரத்தை தடை செய்து கொண்டிருந்தனர்.


அலுவலகத்திற்கு தாமதமாகச் செல்வதற்கு தான் தினமும் எத்தனைக் காரணங்கள் கிடைக்கின்றன இம்மாநகரத்தில். ஆவின், கோ ஆப்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் போல் சில மாதங்களாக சென்னையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது காவல்துறை. அதைப் பற்றித் தனியாகவே ஒரு பதிவிடலாம்.

 என் இருசக்கரவாகனத்தை ஓரங்கட்டி ஆவின் பால் பூத்தில் ஒரு பால் வாங்கியபடி, போராட்டத்திற்கு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டும் அதே சமயம் கைதாவதை விரும்பாத ஓட்டுநர்களும் அங்கே ஒதுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களைப் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒரு முகவர் வற்புறுத்தியபடி இருந்தார். ஒரு நபரை மட்டும் ஒதுக்கினேன். உண்மையில் ஓலா, ஊபர் மீது உங்களுக்கு என்ன கோபம் என்றேன்.

“எங்களுக்கு இன்னா ப்ரச்சன, அடுத்த வர்ஷம் நம்மளே சொந்த கார் வாங்கலாம்னு நான் யோசிக்கிறேன்ல அதான் எங்க மொதலாளிக்குப் பிரச்சனை”

‘மொதலாளிக்காக நீங்க ஏன் பயப்படுறிங்க, போலீஸ்கிட்ட சொல்லலாமே’

“என்னைக் கைது பண்ணப்போறதே என் மொதலாளி தான்” என்றபடி சிரித்துக்கொண்டே கைதாகிக் கொண்டிருந்த ஓட்டுனர்களோடு கலந்து கொண்டார்.

உண்மையில் அரிவாள் யாரை அறுக்கிறது, யார் தலையில் சுத்தியல் விழுகிறது.

 காவல்துறை உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகளுன் ஊழல்/லஞ்சப் பணத்தை முதலீடு செய்யும் துறைகளில் முக்கியமான துறை தான் மஞ்சள் போர்டு கார்கள். ஊபரும், ஓலாவும் மிகப்பெரிய முதலைகள் தான், இவர்கள் பல சின்ன முதலைகளின் தொழிலில் கைவைத்து விட்டு, ஓட்டுநர்களாக இருக்கும் பலரை முதலாளிகளாக்கி விடுகிறார்கள்.

 எனக்குத் தெரிந்து கரூர், நாமக்கலிலிருந்தே நிறைய ஓட்டுநர்களைச் சந்தித்திருக்கிறேன். மாதம் எளிமையாக நாற்பதாயிரத்திலிருந்து அறுபதனாயிரம் வருமானம் வருகிறது என்று இங்கே வந்துவிட்டவர்கள் ஏகப்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறேன். என் அலுவலகத்தில் கூட ஒரு நபர் தான் பகுதிநேரமாகச் சம்பாதித்திட கார் ஓட்டிப் பழகிக்கொண்டிருக்கிறார்.

 ஊபரையும், ஓலாவையும் இவர்களால் (சிறு முதலாளிகளால்) ஒன்றுமே செய்யமுடியாது என்பது தான் நிதர்சனம். கூடுதலாக ஷேர் டாக்ஸி வந்தபிறகு பெருமளவு பொதுமக்களின் ஆதரவு வந்துவிட்டது. அதனால் எத்தனை சட்டம் போட்டும் மீட்டர்போடாத ஆட்டோமேன்கள், இப்போது அவர்களாகவே மாறிக்கொண்டார்கள். ஆனால் இப்படியானப் போராட்டங்களில் பங்கெடுக்க வைத்து ஓட்டுனர்களுக்குப் போலியான அச்சத்தை உருவாக்கிய அரசாங்க அதிகாரிகளின் முகவர்கள் ஒரு கட்சியின் சங்கமாக அதற்கு ஒரு குறியீட்டை வழங்கி அந்த கட்சியின் மீதும் சலிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேலே சொன்ன ஒரு சம்பவம் என் நாளை ஆட்கொள்ளும் என்று தப்புக்கணக்கு போட்டேன். எத்தனை விஷயங்கள் குடைச்சல் கொடுக்கின்றன ஒரேநாளில்…

  அம்முவின் பிளாஸ்திரி போட்டு குளுகோஸ் ஏறிக்கொண்டிருக்கும் வெளிறிய கைகளைப் பார்த்துவிட்டும், அவளிடம் நீங்கள் அணிந்திருக்கும் உடை மிகப்பொருத்தமாய் உங்களுக்கு இருக்கிறது என்றேன். ரமேஷ் ஒரு மாதம் ஆகியும் தன் அறையில் வாங்கி வைத்திருக்கும் தக்காளி கெடாமல் இருக்கிறது என்றான். ஃபேஸ்புக்கில் ஜடாயு என்கிற நண்பர் தான் இந்தியா முழுக்கச் சுற்றியவன் என்றும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக ஜாதித் தீண்டாமைகள் இருப்பதாகவும் அறிவிக்கிறார். ரஜினிகாந்த் இந்தியாவை ஒரே நாளில் மோடி மாற்றிவிட்டார் என்று சொல்கிறார்.

PRIME MEDIAக்கள் தான் TRENDINGஐ தீர்மானிக்கிறது என்பதை அறியாமல் நாம் சமூக ஊடகத்தைப் புரட்சியின் விளைநிலமாக பாவிக்கிறோம். அவ்வப்போது இரயில் சரியான நேரத்திற்கு வருகிறது, அதை விட ஆச்சரியமாக வார இறுதியில் பயணிக்க டிக்கட்கள் கிடைக்கின்றன.

ஏழைகள் பணக்காரர்களுடைய கருப்புப் பணத்தை க்யூவில் நின்று மாற்றுவதைத் தடுப்பதற்காகத் தான் வங்கியில் பணம் மாற்றுபவர்களின் விரலில் மை வைக்கப்படுகிறது என்று ஒரு பீ.ஜே.பி பிரச்சாரகர் சொல்கிறார். அவர்களிடமிருந்து தான் சில சிறந்த கவிதைகள் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களால் மட்டுந்தான் சில முக்கிய தொகுப்புகள் வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. யாரோ ஒருவரை வைத்து எழுதினாலும் அது சுயசரிதை தான் எனச் சொல்லப்படுகிறது. ஓவியர் சிவக்குமார் இளைஞர் சிவக்குமாராக இருந்த போது வரைந்த ஓவியங்களை அகழ்ந்தெடுத்த மீடியாக்களும், சில ரிட்டையர்டு ஓவியர்களும் அவரை EMINENT ARTIST என்று ஸ்டிக்கர் ஒட்டின. ஸ்காலர்கள் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொள்கிறார்கள். இலக்கியவாதிகள் தங்கள் மனைவி மக்களுக்கு நெபோடிஸ அப்பத்தையும் திராட்சையும் கொடுத்ததை உலகுக்கு அறிவிக்கிறார்கள்

***
இப்போது வாடகைக்கார்களை உபயோகிக்கும் மத்தியத்தர வர்கத்தின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது மறுக்கமுடியாத உண்மை. மோடியின் தப்புக்கணக்கு போன்று மத்தியத்தர வர்கத்தை முட்டாளாக்க முயன்றால் அது தோல்வியில் தான் முடியும் ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே முட்டாள்கள் தான். (நானுந்தான்).

ஜீவ கரிகாலன்

புதன், 9 நவம்பர், 2016

பேலியோ வொர்க் ஆகுதா?



பெற்றோர்களில் இருந்து நண்பர்கள், கடந்து செல்பவர்கள் என்று பலரிடமும் இலவச அட்வைஸ் சொல்லும்போதும், குறிப்பாக யுவதிகள்களின் ’அங்கிள்’களைக் கேட்கும் போது இப்படி போலியாக சிரித்தபடி தப்பித்துக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தேன்.

பேலியோ எல்லாவற்றையும் மாற்றிவிட்டது, இத்தனைக்கும் எனது மெடிக்கல் ரிப்போர்ட் மிகவும் மோசமான பல விளைவுகளுக்கு எச்சரிக்கை விடுத்ததை அறிந்த, சில நண்பர்கள் பயமுறுத்தியபோதும், டீமோட்டிவேட் செய்தபோதும். அது என்னைக் கட்டுப்படுத்தியது, அதன் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் முதலீடு செய்தேன். நவம்பர் மாதம் 2013ல் எனது எடை 117 கிலோ இருந்தது, அதற்குப் பின்னர் பார்க்கவேயில்லை. பேலியோ ஆரம்பித்தது ஆகஸ்ட் மாதத்தில் தான். மற்றவர்களைப் போல விடாப்பிடியான வைராக்கியத்தோடு இருக்கவில்லை, 32 ஆண்டுகளாக இருந்த பழக்கத்தை ஆயினும் பெருமளவு கட்டுப்படுத்தினேன். வெளியூர் பயணங்கள், வார இறுதியில் சீட்டிங் செய்தாலும் எண்ணெய் பலகாரம் போன்றவற்றை விட்டுவிட்டாலும், இனிப்புகளை அவ்வப்போது எடுத்துவந்தேன். கோர்ஸ் ஆரம்பிக்கும் பொழுது 116 கிலோவும், இன்றைக்கு காலை 99.9 என்றும் வந்தது.

மரக்கறி(சைவம் என்றெல்லாம் மதச்சாயம் வேண்டாம்) பேலியோ உணவுவகைகளுடன் முட்டையும் தினசரி எடுத்து வந்தேன். முன்பு போல் முதுகு வலியோ, அசதியோ எனக்கு வருவதில்லை. டயட்டிங்கில் கூட ஒன்றிரண்டு முறை தலைவலியைத் தவிர வேரெந்த பாதிப்பும் நான் உணரவில்லை. உடல் முன்பை விட வலிமையாக இருக்கிறது.
46 சைஸ் சட்டையும் பேண்டும் என சமமாக இருந்த எனக்கு, இடுப்பளவில், சட்டை அளவில் இரண்டு சைஸ்களுக்கு குறைத்திருக்கிறேன். டபுள் எக்ஸ் எல்லில் (XXL) இருந்து எக்ஸ் எல் (XL). 



உலக அளவில் எல்லாத்துறைகளைப் போலவே மருத்துவத்துறையிலும் நிறைய அசூரர்கள் இருக்கிறார்கள். சக்கரை, இரத்தக் கொதிப்பிற்கான வரைமுறை அளவுகளைத் திருத்திய உலக சுகாதார நிறுவனத்தின் (2013 GUIDELINES) செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது பன்னாட்டு வியாபாரமாக உலகமயமாக்களினால் பெரிய சந்தையாகிவிட்ட PHARMATEULS துறை, இந்தியா போன்ற நாடுகளில் பெரிய தாக்கத்தையும், அதிகாரத்தையும் கொண்டிருப்பார்கள் என்பது எளிய யூகமே. அவர்கள் மூலம் பிரச்சினைகள் வருவது எதிர்ப்பார்ப்பிற்குரியது தான். அதுவும் இத்தனை அமைதியான புரட்சி ஒன்றைக் காணும் போது.

ஆனால் இது போன்ற மிரட்டல்கள் வரும்பொழுது பலனை அனுபவிப்பவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்கிறவகையில் தான் இந்தப் பதிவு இல்லாவிட்டால் இன்னும் நிறைய எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறேன்.

தினமும் பேலியோவால் மாற்றமடைந்து வரும் நபர்களின் டெஸ்டிமோனியல்களைப் பார்க்கையில், அதில் நானும் ஒருவனாக அங்கம் வகிக்கையில், இதுவரை திரு.செல்வன், திரு.விஜய் உள்ளிட்ட அனைத்து மெம்பர்களுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துகளையும் ஆதரவு நிலைப்பாடாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரொம்ப காலமாகவே எனக்கு இந்த டயட்டிங்கை பரிந்துரைத்து வந்த நண்பர்களுக்கும், என்னை இங்குத் திருப்பிவிட்ட தோழமைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னிடமே வெயிட் லாஸ் டிப்ஸ் கேட்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. அவர்களிடம் “ஆரோக்கியம் & நல்வாழ்வு” என்று பாந்தமாக ஒரு பாதிரியாராக இந்தக் குழுமத்தைப் பரிந்துரைத்தபடி செல்கிறேன்.

மதமாற்றத்தை போலல்லாது மனமாற்றத்தை விரும்பும் ஜீவ கரிகாலனாகிய நான்.

09/11/2016