கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள்,
தினமும் CHILD ABUSE செய்திகள் தான் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் இந்நாவலை வாசித்தேன்.
அபிலாஷின் இந்தக் குறுநாவலை
வெறுமனே க்ரைம் அல்லது டிடெக்டிவ் நாவல் என்று வகைப்படுத்த முடியவில்லை.
சமூகத்தின் இருண்ட பக்கங்களை தத்துவ ரீதியிலும், உளவியல்
ரீதியிலும், துப்பறியும் நாவலாகவும் முக்கியமாக கதையின் தளமாக குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்முறைகளை எடுத்துக் கொண்ட விதம் மிகத் துணிச்சலானது. அதை மிகக் கவனமாகவும் கையாண்டிருக்கிறார்.
சுவாரஸ்யத்திற்காக எழுதப்படும் மற்ற வகை துப்பறியும் நாவலாக
வந்துவிடக்கூடாது என்பதற்காக NARRATIVEஐ கையாண்டிருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. பாலியல் காட்சிகளை எழுதும்போது கூட அதை வெறுமனே சொல்லிவிட்டு நகர்வதாய் அமைந்திருப்பது பாராட்டிற்குரியது. துப்பறியும் நாவல் என்றாலே கிளுகிளுப்பாக எதாவது சொல்லனும் என்று கிளிஷேவாக ஏதும் முயற்சிக்கவில்லை.
அதே
சமயம் கவிதைத்தனம் வந்துவிடக்கூடாது என்றும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் சில இடங்களில்
அழுத்தமாக நிற்கிறது.
பெண்ணியம், தலித்தியம் தொடர்பாக தனது அரசியல் நிலைப்பாட்டைச்
சொருகும் இடத்தில் மட்டுந்தான் எனக்கு சுஜாதாவின் ஞாபகம் வந்தது.
மற்றபடி, சுவாரஸ்யம், கவிதைத்தனம்
இவற்றோடு சுஜாதாத்தனமும் அந்நியப்படவேண்டும் என்று மெனக்கெட்டு இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். சர்ரியலிஸ்டிக்காக வரும் நீல நீள உருவம் வழியாக கதாப்பாத்திரங்களின்
மனநிலையை எனக்கு கடத்தியது, இந்த நாவலின் சிறப்பாக இந்த நீல உருவம் வரும் இடங்களை நான் கருதுகிறேன்.
என்னடா யாரைப்பார்த்தாலும் ஒரே மன அழுத்தமும், பாலியல் துன்புறுத்தல்களும்,
PERVERSIONகளுமே கதை முழுக்கக் கட்டப்பட்டிருக்கிறதே என்று பார்த்தால். அது ஜார்ஜ்
எனும் ஒரு போலீஸ் அதிகாரியின் மனநிலையில் இருந்து சொல்லப்படும் நாவல், ஒரு காவல்துறையைச்
சுற்றியிருக்கும் மனிதர்களின் மீதிருக்கும் குருதி வாடையாக JUSTIFY பண்ண முடிகிறது.
‘முண்டா’ தன் கதையைக் கூறும் இடத்தில் உண்மையில் நம்மை நடுங்க வைக்கிறது,
அது போல் தமிழ்ச்செல்வனின் ஆசிரிய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும். எனது நண்பர் ஒருவர்
இதே துறையில் எழுதுவதற்காக நிறைய தகவல்களை சேமித்துக் கொண்டிருக்கிறார். மேற்சொன்ன
அப்பகுதிகளை வாசிக்கும் பொழுது என் நண்பர் சொன்ன விஷயங்கள் எத்தனை தூரம் உண்மை என அச்சுறுத்துகிறது.
இது போன்ற விஷயங்களை தினமும் நாளிதழ்களில் பார்க்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும்
இருள் பற்றியோ ஒளி பற்றியோ கண்களைத் திறக்கும் வரை நமக்கு ஒன்னும் தெரியாது.
கட்டுரையாளர் அபிலாஷாக – ஐ.ஐ.டி உரை நிகழ்த்தும் தமிழ்செல்வனின்
வாயிலாக ஆசிரியரை கவனிக்க முடிகிறது, ஐரோப்பியத் தத்துவியலைப் பற்றி தனது பார்வையை கதைக்குத் தகுந்த உரையாகப் பேசும் இடங்கள் ஈர்க்கின்றன. வழக்கமான துப்பறியும் நாவல்களில் வருவது போல்,
ஜார்ஜ் திடமானவராகவோ வலிமையானவராகவோ சித்தரிக்கப்படவில்லை.
மோகனின் தனிமையும், ஜார்ஜின் தனிமையும் அதை அவர்கள் எதிர்கொண்டு வரும் விதமும் கூட உண்மையில் GREY AREA தான்.ஜார்ஜ் நாவல் முழுதும் வலிமையற்றவனாக,
பதட்டப்படுபவனாக, மனச்சிதைவில் அல்லாடுகிறான் இதுவும் மற்ற துப்பறியும் கதைகளில் இருந்து இந்நாவலை வெகு தொலைவில் விலகி நிற்க உதவுகிறது, இதையும் பாசிடிவான அனுகுமுறையாகத் தான் பார்க்கிறேன்.
அபிலாஷின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.
கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள்.
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் 102
விலை : 100/-
- ஜீவ கரிகாலன்