”எதுவொன்றைப் புரிந்துகொண்டால்
எல்லாமுமாக இருக்கமுடியுமோ அந்த ஒன்று தான் அதுவாக இருக்கிறது”
படிக்கட்டுகள் வழியே கீழிறங்கி வந்தால் அந்த அறையின் கதவு தென்படும். அறை முழுதும்
ஆப்பிளின் நறுமணம் கமழ்ந்திருந்தது. பச்சை வண்ண விளக்கொளியில் அறையின் மையத்தில் ஒரு
நீண்ட மீன் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. மீன் தொட்டிக்கு அருகிலேயே நீச்சல் குளம்,
கண்ணாடியாலன்றி பெரிய பெரிய கற்களால் ஆன நீச்சல் குளம். நவீனமயமாகக் கட்டப்பட்டிருக்கும்
இவ்வறைக்குள்ளே, பாரம்பரியமான குளம். மேல்தளத்திலிருந்து சூரிய ஒளி படுவதற்குப் பதிக்கப்பட்டிருந்த
கண்ணாடிக் கூரை நீச்சல் குளத்திற்கு சரியாக மேற்புறம்.
அந்திவேளையின்
வீரியம் குறைந்த சூரியன் ஒளி, சாளரங்களற்ற அந்த அறையின் பச்சை விளக்குகளின் ஒளியை
FLOUROSCENTஆக மாற்றியிருந்தது.
சன்னமாக ஒலித்துக்
கொண்டிருக்கும் இந்துஸ்தானி இசைக்கு காதுகொடுத்தும், குமார சம்பவத்திற்கு கண்களைக்
கொடுத்தபடி நான் தரையில் படுத்திருந்தேன்.
துவட்டாத மேனியோடு
சாய்ந்து கொண்டாள் என் மீது.
மீன் தொட்டியைப்
பார்த்தபடியே நீந்துவது அவள் வாடிக்கை. அவள் நீந்தும் போது அத்தொட்டியில் இருக்கும்
தங்க மீனும் அவளோடு போட்டிபோடும். அவளுக்கு இணையாக மெதுவாக நீந்துவது தான் போட்டி.
இந்த முனையிலிருந்து அந்த முனை வரை அவள் செல்லும் நேரத்தில், தங்க மீனும் இந்தப் புறத்திலிருந்து
அந்தப் புறம் சென்றிருக்கும். இரவரும் நீந்திக் கொண்டிருப்பதை மணிக்கணக்காகப் பார்த்துக்
கொண்டிருப்பது இவன் வழக்கம்.
அவளுக்குப் பிடித்ததாக
தன் வீட்டினை மாற்றிக் கொண்டே வந்தான். விளக்கொளி, நறுமணம், நீச்சலறை, மீன்தொட்டி எல்லாமுமே
அவளுக்குப் பிடித்த்தென அவன் அறிந்து வாங்கியவை. அவளிடம் இவை பிடித்திருக்கிறதா என்று
கேட்டதும் கிடையாது. அவளும் சொன்னது இல்லை.
எப்பொதும் அப்படித்தான்
நான் பேசிக்கொண்டிருப்பவனாகவும், அவள் கேட்டுக் கொண்டிருப்பவளாகவுமே இருக்கிறாள். உண்மையில்
அவள் குரல் மிக மிக வசீகரமானது. வசீகரமானது என்றால் அதை விவரிக்க முடியாது. விவரிக்க
முடியாத உலோக உருளைக்குள் உருண்டுக் கொண்டிருக்கும் வாயுவின் ஓசையாக, ஆனால் வேக வேகமாகப்
பேசக் கூடியவள். இருந்தும் நானே அதிகம் பேசுபவனாகவும். அவள் கேட்டுக் கொண்டிருப்பவளாகவும்
இருக்கிறாள்.
அவளிடம் நான் என்ன
கேட்பது, அவளைப் பற்றி நான் தெரிந்து கொள்வது. அவள் இப்பொழுது வாழும் காலத்தில் மட்டும்
அவளுடைய தேவைகள் பற்றி அறிந்துவந்தால் போதுமா? அவளுக்கு முன்னர் எது தேவையாக இருந்தது,
இனிமேல் என்னென்ன தேவையாக இருக்கும், அதற்கும் அப்பால் அவளுக்குத் தேவைப்படுவது என்ன
என்று யுகங்களைக் கடந்து தெரிந்து கொள்ளும் சாத்தியம் இருந்திருந்தால் நான் ஒரேடியாகக்
கேட்டுத் தெரிந்திருப்பேன். அதுவரை அவள் உணர்த்துவதைத்தான் நான் செய்ய முடியும்.
அந்த தங்கமீன்
எங்களைப் பார்த்தபடி, கண்ணாடித் தொட்டியின் சுவர்களை முட்டிக்கொண்டிருப்பதாய் தோன்றியது.
அது முட்டுவது போலவும் இல்லை, பசியோடு இருக்க வேண்டும், வாயை நன்றாகப் பிளந்து கொண்டிருந்தது
அவள் தலையிலிருந்து
இறங்கிக் கொண்டிருந்த ஈரம் என் இதயத்திற்கு மேற்புறம் நின்று கொண்டிருந்தது. கைகளிலிருந்த
புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு. அவள் கீழ்தாடையைப் பற்றிப் பிடித்தபடி அவளைத் தூக்கி
என் பக்கம் இழுக்க முயன்றேன். அவள் உடல் வலுவாக இருந்தது. தலையின் கணம் என் நெஞ்சை
அழுத்தியது. பச்சை நிற அறை அடர்த்தி மிகுந்திருந்தது. அவள் இன்னும் என் நெஞ்சை அழுத்தினாள்,
உடல் அழுந்தியது. ஆப்பிள் நறுமணம் திண்மையாகவும், தாங்க முடியாத நெடியுடனும் மாறியது.
மீன் தொட்டியின் கண்ணாடிச் சுவர்களை, அந்த மீன் தன் பற்களால் கடித்துக் கொண்டிருந்தது.
தொட்டியில் விரிசல் பெரிதாகிக் கொண்டிருந்தது.
நீச்சல் குளத்தில்
யாரோ கைகளையும் கால்களையும் தண்ணீரில் அடித்துக் கொள்வது போல சப்தம். எழுந்து என்னால்
பார்க்க முடியவில்லை. மீன் தொட்டியில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. சூரியன் முழுமையாக
மறைந்து இருந்தது. என் நெஞ்சில் தலை சாய்த்தவள் முழுமையாக மேலேறினாள் உடல் அவளைத் தாங்க
முடியாமல். சுவாசத்தைத் தடுத்தது. முகத்தில் யாரோ அறைந்தது போல் இருந்தது.
தலையைச் சுற்றிப்
பிடித்திருந்த ஏதோவொன்று அகன்றுவிட்டதாய் விழித்துப் பார்க்க, அதே நாற்றத்துடன் கூடிய
தண்ணீர் என் முகத்தில் வழிந்துக் கொண்டிருக்க, என் எதிரேயிருந்தப் பெண்மணி நான் விழித்ததைக்
கண்டு புன்முறுவலித்தாள்.
”சார் , காலைல
இருந்து எதுவும் சாப்பிடலையா சார்” என்று என் முகத்தில் தண்ணீர் தெளித்த தேநீர்கடைப்
பையன் என்னைக் கேட்டேன் அவனுக்கும் பின்பு நான்கைந்து பேர் நின்றுக் கொண்டிருந்தனர்.
தண்ணீர் தெளித்தும் கண் விழிக்காததால், அவள் என்னை அறைந்திருக்கிறாள். கன்னம் வலித்தது.
வயிற்றிலிருக்கும் கட்டியையும் தடவிப் பார்த்தேன், மருத்துவமனை என்னை அவ்வளவு எளிதில்
விடாது என்று தோன்றியது.
நான் இப்போது என்ன
செய்யட்டும்
தூக்கத்தை தேடட்டுமா?
மனநோய்க்கு மருந்து
தேடவா?
வயிற்றை பரிசோதனை
செய்யவா?
*
வீட்டிற்கு வந்து
சேர்ந்தேன்.
சிரசாசனம் செய்துகொண்டிருந்தது
அது.
ஒன்றும் பேசாமல்
கட்டிலில் விழுந்தேன். என்னைப் பார்த்து உரத்தக் குரலில் கேட்டது?
“ மீன்களுக்கு
அத்தனை வலிமையான பற்களா? ”
அடுக்களையில் ஏதோ
ஒரு பாட்டில் விழுந்துடையும் சப்தம்.
அதனைப் புரிந்துக்
கொள்ளுதல் என்பது ஒரு நாளும் அதுவாக ஆக முடியாது
(மன்duk0101)