வியாழன், 31 அக்டோபர், 2013

வசந்தகால நினைவுகள்

இந்தப் பதிவு முழுதும் எனது கல்லூரி நண்பர்களுக்காக!!

ஒரு கதை எழுதத் தோன்றிய நள்ளிரவில் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத விரும்புகிறேன்... ஏனென்றால் இது தான் கடவுள் வாழ்த்து....

நண்பர்களே எங்கே இருக்கிறீர்கள்!! நலமா?? உங்கள் குடும்பம் நலமா??

இங்கே நான் நலமாகத் தான் இருக்கிறேன், என்னைச் சுற்றி எல்லோருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நான் தான் நல்லவனாக இருக்க முடியவில்லை, அவர்களுக்கு ஏற்றவனாக இருக்க முடியவில்லை. எத்தனை களிப்புடனும், நிறைவுடனும் வந்தாலும் வீட்டிற்குத் திரும்பியதும் வெற்றிடம் தான் மிஞ்சுகிறது.

அப்போது தான் உணர்கிறேன் நானாகிய என்னில் அரிதாரம் மட்டுமே வெளி உலகிற்குள் உலவுகிறது, என் அகம் விரும்புவது உங்கள் அண்மை தான். உலகம் நன்றாகத் தான் இயங்குகிறது, அது நான் பிறப்பதற்கு முன்பு சுழன்ற அதே அச்சில் தான் இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது... எனக்குத் தான் வித்தியாசமாகத் தெரிகிறது.

எனக்கென்று இந்த சமூகம் பல செயல்களைப் பணித்திருக்கிறது, உங்களுக்கும் கூட அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் முன்னரே சொன்னேன் அல்லவா?? "நான் தான் எனக்குப் பிரச்சினையாக இருக்கிறேன்" என்று, நண்பர்களே எல்லாம் பொருள் சேர்க்கும் ஒரே அச்சில் தான் நாமும் சுழன்றுக் கொண்டிருக்கிறோம். நமக்கு வயதாவது தெரிவதில்லையா??

நாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம் !! நல்லவேளை இந்தத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தி விட்டது, நமக்கிருக்கும் இடைவெளியை அது குறைக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. நானும் மனிதன் தானே எல்லோரையும் போலவே ஆசை வருகிறது, நான் யார்?? நீ யார்?? உன் அந்தஸ்து என்னவாகிப் போகிறது? நீ என்னவாகப் போகிறாய்? இவள் மகிழ்ச்சியாய் இருப்பாளா?? இவன் வெற்றியடைவானா? இவன் மேலே படிப்பானா? இவள் காதல் கைகூடுமா என்றெல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவில்லை.

நமக்கு இருந்ததெல்லாம், நாம் தினமும் பேச வேண்டும், சிரிக்க வேண்டும் அவ்வப்போது அழவேண்டும், குட்டிக் குட்டிச் சண்டைகள் போட வேண்டும்.. களிப்போடு கழித்தோம். இப்போது நிழற்படங்களில் தெரியும் எடை குறைந்த அன்றைய நான் இன்று நானாகயில்லை, அது போல தான். ஒருவொருக்கொருவர் பிடுங்கித் தின்ற பண்டங்களின் சுவை, திரும்ப கிடைக்கவேயில்லை. என் தோள் சாய்வதும், அடிப்பதும், கிள்ளுவதும் நம்மில் நிகழ்ந்துக் கொண்டு தான் இருந்தது. வகுப்புகளின் போது நாம் பேசிக் கொள்ள கிழித்த பேப்பர்களின் சத்தம் இன்னும் என் ஆழ்மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஏதாவது ஒரு நிகழ்விலும், விழாக்களிலுமே என்னைக் கிண்டல் செய்த வார்த்தைகள் எவ்வளவு மென்மையானவை, இங்கே வாழ்த்தும் சொற்களிலேயே வலையும் வீசுகின்றனர். என் டைரிக் குறிப்பில் இருந்த உங்கள் வாழ்த்துகள் தான் என்னை எழுப்பி விடுகிறது, நான் அடிக்கடி விழுந்துவிட்டேன்.

நம் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஒரு காதல் கதை இருந்து, நமக்குள்ளும் சில காதல்கள் இருக்கவே செய்தது. காதலுக்கு உதவிகள் நடந்தன, ஆலோசனைகள், புத்திமதிகள், வசவுகள் இருந்தன. காதல் பயணித்தது. அது தன் வேலையைச் செய்து கொண்டிருந்த போதும் நம் நட்பில் திளைத்துக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட உங்களின் இல்லாமையைத் தான் நான் பெரிதும் உணர்கிறேன். உண்மையான பாராட்டுகளும், புத்திமதிகளும் எனக்குத் தெரியாத வண்ணங்களில் வலம் வருகின்றன.

ஒட்டுமொத்தமாக மொத்த வகுப்பும் ஒரு குடும்பமாய் மூன்று நாட்கள் வாழ்ந்தோம், அந்தச் சுற்றுலா போல் திரும்ப கிட்டாத சந்தோஷம் என் வாழ்வில் இதுவரை இருந்ததில்லை, இனிமேலும் கூட வராது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன். நாம் ஒரு மரணத்தைக் கடந்து வந்தோம், வெறுமனே அல்ல கரைந்திருப்போம் ஒரு துளியாவது..

ஒருவரை ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பொழுதுகளில் எல்லாம் யாரோ ஒருவர் தேவதையாக்கப் பட்டிருந்தோம். நமது சிரிப்பொலிகள் பதிந்த திரையரங்கு நினைவுகளில் ஒட்டடை மட்டுமே படிந்திருக்கிறது. யாரோ ஒருவர் குடும்பத்தின் வேதனைகளை, நண்பர்கள் பகிர்ந்து கொள்ள பாடங்களில் படித்ததில்லை. ஏன் நாமெல்லாம் அருகருகே வாழ்ந்து முடிக்கும் வரம் கிடைக்கவில்லை??!!

நண்பர்களே!! வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் சந்திக்கிறோம். முதலில் அதே நெருக்கம் இருந்தது, பின்னர் நெ ரு க் க மானது, அடுத்து நெ
                                                                                                               ரு
                                                                                                                க்
                                                                                                                க
                                                                                                                மாகின்றது.

உலகில் எல்லோருக்கும் இப்படித் தான். அதை மாற்ற முடியாது. ஆனால் ஒரு அரிய புகைப்படமோ!! திரைக்காட்சியோ அல்லது திடீர் தனிமையோ நம்மை ஞாபகப்படுத்தும். நம் கண்ணீர்களை எண்ணிப் புன்னகைப்போம், சிரிப்பொலிகளின் நினைவு கண்ணீரை வரவழைக்கும். சிலருக்கு வாய்ப்பு கிட்டும், சிலருக்கு அது வெறும் வாய்ப்பாக மட்டுமிருக்கும்.பின்னொரு நாள் காதோர நரையிலோ, பல் விழுந்த வயதிலோ நம் அண்மை தேவைப்படும், அதற்காவது நமது பிரிவில் சேர்க்கின்ற பணம் பயன்படட்டும் என்று நம்புவோமாக.

ஆம் உங்களை எண்ணுகிற இந்த நிசி தான் என்னை தூண்டுகிறது ஒரு கதை சொல்ல, நம் தாக்கம் இருக்கின்ற ஒரு காதல் கதை, நண்பர்களைப் பற்றிய கதை.. எத்தனையோ முறை சொல்லப்பட்ட மற்றுமொரு அதே கதை.. எண்ணிக்கைகளுக்காக இல்லாமல், உங்களோடு மீண்டும் கல்லூரி செல்வதாக நினைத்து எழுதுகிறேன், அநேகமாக அடுத்த வருடத்திற்குள்ளாவது இந்தக் கதையினை முடிக்கலாம்,, முடிப்பேன். இதுவே அதற்கு முன்னுரை..

நண்பர்களே!! உங்களால் தான் நான் படிப்பினைத் தொடர்ந்தேன்!! அந்த மூன்று வருடம் என்னும் வசந்த காலம் வாழ்ந்தேன்.... எனக்குத் தெரியாது திரும்பக் கிடைக்காது என்று, ஆனால் இதில்  அந்த வாழ்க்கை திரும்பவும் பயணிக்கும்... மீண்டும் ஒரு கல்லூரிக் காலம்.

வருகிறேன்...

செவ்வாய், 29 அக்டோபர், 2013

பஜ்ஜி -சொஜ்ஜி - 45 / சூழலை மதிக்கும் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா??

 சூழலை மதிக்கும் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா??


என்னடா இது? பட்டாசையும் ஜீன்ஸையும் ஒன்றாக வைக்கும் அளவிற்கு ஜீன்ஸ் என்ன அவ்வளவு ஆபத்தானதா என்று யோசித்தீர்களாயின் உங்களைத் தான் இந்தக் கட்டுரை டார்கெட் செய்கிறது. தவிர இதை பட்டாசுகளோடு ஒப்பிடுவதற்குக் காரணம் பட்டாசைப் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஓரளவுக்கு உங்களை சென்றடைந்திருப்பதால் ஜீன்ஸினை இதனோடு Tag செய்கிறேன்.

உடலுக்குத் தீங்கு:-

பட்டாசுகள் : இதன் புகைகள் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும், மூச்சுத் திணறல், ஆஸ்மா, தீப்புண்கள், சரும நோய் என்றெல்லாம் சொல்லலாம், ஜீன்ஸிற்கு???

ஜீன்ஸ் எனப்படும் பருத்தி ஆடைகள், மலைவாசத் தளங்களிலோ, குளிர் பிரதேசத்திலோ அணிந்து கொள்ளுதலை மட்டுமே உடலால் ஏற்றுக் கொள்ள முடியும்.

மற்றபடி ஜீன்ஸ் மிக மிக ஆபத்தான ஒரு ஆடையாக அதைப் பற்றி தெரிந்து கொள்வது தேவையாயிற்று. ஜீன்ஸ் வந்த பிறகு இருபாலரும் அதை எளிதாக ஏற்றுக் கொண்டு தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர், இப்பொழுது மிக இறுக்கமான ஆடையாக அணிகிறார்க்ள். முதலில் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வரும் ஆபத்துகளும், இரண்டாவதாக சுழலில், பொருளாதாரத்தில், செய்முறையில் உள்ள ஆபத்தையும் என விவாதிப்போம்.இறுக்கமான ஆடையாக ஜீன்ஸை அணிவதில் என்ன பலன் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்துப் பார்த்தால், ஒரு பலனுமில்லை, எனும் பதில் தான் வருகிறது. கவர்ச்சி, அழகு எனும் பெயரில், ஜீன்ஸ் ஆடையை உடலோடு இறுக்கமாய் அணிவது, நமது உடல் அமைப்பை வெளியே எடுத்துக் காட்டும் வேலை ஒன்றை மட்டுமே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் நவீன யுகத்தில் இறுக்கமான ஆடை அணியும் வழக்கம் கலாச்சாரமாக மாறிட ஜீன்ஸின் பங்கு தலையாயது. இதனால் வரும் நோய்களின் பட்டியலும் மிகப் பெரியது.

*இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகள் தொடைகளில் ஏற்படுத்தும் வியர்வை மற்றும் அழுத்தம் காரணமாக பித்தப் பை, அண்டம் போன்றவற்றில் தொற்றுநோய் (infection) பரவலாம். அடிவயிற்று வலி காரணமாகக் குடல் வலி, ஆண்களுக்கு உறுப்புகளில் எரிச்சல், வியர்வைக் கொப்புளம் போன்றவற்றோடு விதைகளின் இடமாற்றம், meralgia paresthetica போன்ற நரம்புக் கோளாறுகள், lipoatrophia semicircularis என்பன போன்ற நோய்கள் வரும் அபாயம் இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிரஃப் பத்திரிக்கைக்காக எடுத்த ஒரு ஆராய்ச்சியில் 2000 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர் (2012ல்). அவர்கள் இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளைத் தொடர்ந்து உபயோகப் படுத்த ஆரம்பித்தனர். அதன் முடிவில் பத்தில் ஒருவர் ஆடையை அசௌகரியாகக் கருதி அதைத் தவிர்க்கும் மனநிலையில் இருந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட பாதி பேருக்கு இரைப்பை மற்றும் பாலுறுப்புகளில் தொற்று நோயால்(infection) பாதிக்கப் பட்டனர், கால்வாசி பேருக்கு இரு தொடைகளுக்கு மத்தியில் படை இருந்தது, ஐந்தில் ஒருவருக்கு விதை இடமாற்றமாகியிருந்தது, பலருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருந்தது. .இங்கிலாந்திலேயே இத்தனை ஆபத்துகளையும் தீங்குகளையும் தரும் ஜீன்ஸ் ஆடைகள் இந்தியாவின் தட்பவெப்பத்தில் எத்தனைக் கேடுகளைத் தரும் என்பது எல்லாருக்கும் எளிதில் விளங்கக் கூடியதே..


சுற்றுச்சூழல்

பட்டாசுகளை சுற்றுச்சூழலுக்கான எதிரியாக நம்மில் பெரும்பாலானோர் கவனிக்கத் தொடங்கிவிட்டோம்!!

ஜீன்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு எத்தனைக் கெடுதல் தரும் என்று பார்க்கும் பொழுது முதலில் உலகின் ஜீன்ஸ் உற்பத்தியைப் பற்றிய விவரங்களைப் பார்க்க வேண்டும் (பார்க்க பட்டியல் 1). அவற்றுள் கிட்டதட்ட 60% சதவீத உற்பத்தியை ஆசிய நாடுகளே கொண்டுள்ளது. இந்த பட்டியல் வளர்ச்சியைக் கணக்கிட்டு ஒரு தொழிற் கூட்டமைப்பில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தான். ஆனால், இவை நமக்கு கொடுக்கும் அதிர்ச்சிகளோ ஏராளம். இதன்மூலம் வளர்ச்சி என்பது மிகவும் கேள்விக்குரியதாகிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். உலகில் உள்ள பிரபலமான எல்லா வகை ஜீன்ஸ் பிராண்டுகளும் நம் நாட்டில் உற்பத்தியாகிறது என்பது தெரியுமா (killer, denim, trigger போன்றன கர்நாடகாவில் தான் தயாராகின்றன)

1.உலகில் உள்ள நாடுகளில் 21% சதவீத உற்பத்தியும், 4.5 சதவீத வளர்ச்சியும் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. மிகப் பெரிய தொழிற்துறையாகவும் ஜீன்ஸ் உற்பத்தி இருக்கின்றது.

2.ஒரு ஜீன்ஸ் துணிக்கான பருத்தியைக் உற்பத்தி/கொள்முதல் செய்ய 6800 லிட்டர் தேவைப்படுகிறது, ஒரு டெனிம் துணியினை நீலச் சாயத்தில் ஊறல் போட்டு நிறம் மாற்றிடத் தேவைப்படும் நீர் மற்ற துணிகளை சாயம் போடுவதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கின்றது.

3.ஜீன்ஸ் துணிக்கான கொள்முதல் செய்யப்படும் பஞ்சின் பற்றாக் குறையை, விலையேற்றத்தை சமாளித்துக் காப்பதற்கு பஞ்சின் தேவை அதிகமாகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளித்திட முதல் அழைப்பாக BT பருத்திகளை இறக்குவார்கள்.

4.இந்தியாவில் பருத்தி உற்பத்திற்கு 5% சதவீத நிலத்திலேயே பயரிடப்படுகிறது, ஆனால் இந்த உற்பத்திக்காக நாட்டின் 25% இருந்து 50% வரை சில பூச்சிக் கொல்லி மருந்து பருத்தி உற்பத்திக்காகவே பயன்படுத்தப் படுவதால் நிலத்தின் நச்சுத் தன்மை அதிகரிக்கிறது.

5.நீல நிறத்திறகாக எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறைகள் தான் மிக மிக ஆபத்தானது. இதற்காக உபயோகிக்கப் படும் சிந்தடிக் சாயங்கள் (முந்தைய காலத்தில் தாவரங்களிலிருந்து சாயம் எடுத்துவரப் பட்டது) பெரிய அளவில் ஆசியா நாடுகளில் நீர்நிலைகள் மாசுபடக் காரணமாக இருக்கின்றது. சீனா, இந்தோனெசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பாயும் நதிகளில் பல நிறங்கள் இருக்கின்றது. சீனாவில் Guang Zhou நகரில் உள்ள Pearl எனும் நதி நிறம் மாறிய அவலம் உலகின் மிகப் பெரிய தொழில் நகரம் என்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இந்நகரத்தின் வரலாற்றில் இருக்கிறது
சீனாவில் ஜீன்ஸ் தொழிற்சாலைகளினால் மாசடைந்த பியர்ல் நதி செல்லும் வழி


6. ஆற்று நீரில் கலந்த சாயங்கள், பல குளங்களைத் தொடக் கூட இயலாதவாறு குடிநீர் பிரச்சனையையும், விவசாயம் பண்ண முடியாத சூழலையும் உருவாக்கிவிட்டது.



பொருளாதாரம் :
பட்டாசினைத் தவிற்பதற்கு தலையாய காரணமாக இதைச் சொல்லலாம், ஒரு தனி மனிதனின் அல்லது குடும்பத்தின் செலவாகப் பார்க்கப் படும் பொழுது, அதுவும் இன்றைய விலைவாசியில் குறிப்பிடத்தகுந்த அளவு ஒரு தொகையினை சேமித்து விட முடியும் என்பது முக்கியமான காரணமாகிறது. 

இதுவே ஒரு நாட்டின் பொருளாதாரக் கணக்குகளில் இந்த துறை நசுங்குவதால் ஏற்படும் இழப்பை ஏதோ ஒரு வகையில் வேறு பொருட்களிலோ சந்தையிலோ குடும்பங்களால் செய்யப்படும் நுகர்வு இதனை ஓரளவிற்கு ஈடுகட்டும், அதே போல சூழலுக்கு கொடுக்கும் விலையாகவும் இதைக் கொடுக்கலாம். ஒரு சமூக Cluster அடிப்படையாக இருப்பதால் சிவகாசியில் வேறு ஏதாவது தொழிலைப் பிரதானமாக எடுத்துக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைத் தொழிலாளர்களுக்கு இனி அந்த ஆபத்தான வேலையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

ஜீன்ஸ் ஆடை உற்பத்தி செய்யும் தொழிலாளார்களில் நிலையிலிருந்து பார்த்தால், இவ்வாடைகளை சாயமிட்டு முடித்தவுடன் செய்யப் படும் வண்ணநீக்கம் பற்றியும் தெரிந்துக் கொள்ளவேண்டும், இதைSand Blast என்று சொல்லுவார்கள். அதாவது ஜீன்ஸ் ஆடை/துணி குழாய் வழியாக ஆடை மீது பக்குவப்படுத்தப்பட்ட மணலை ஆடைகளின் மீது சூடாக உயர் அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட குழாய் மூலம் செலுத்தி ஆடைகளில் நிறத்தை மங்கச் செய்கின்றனர். ஆனால் இந்த வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கு நிறைய பக்கவிளைவுகளும், உடல் பிரச்சனைகளும் வருகின்றன. பல மேலை நாடுகளில் இந்த பணி செய்வதற்கு தடை வந்துவிட்டது, ஆகவே இதை முற்றிலுமாக ஆசியா நாடுகள் தான் செய்து வருகின்றன

நமது பலம் என்ன? நமக்கு உகந்தது என்ன? என்றும் தெரியாமல் இருக்கின்றோம். இப்பொழுது eco-friendly ஜீன்ஸ் உற்பத்தி என ஆர்கானிக் காட்டன் மற்றும் உற்பத்தி முறையில் உள்ள மாற்றங்கள் செய்து சந்தையில் விலையுயர்ந்த ஜீன்ஸ்களை கொணர்ந்துவிட்டனர்.

ஜீன்ஸ் ஆடையின் உளவியலே ஒரு வெளிக்காட்டுதலியல் (exhibitionism) தான் அதாவது, ஜீன்ஸ் பேண்ட் என்றால் துணி என்பதற்கும் மேலே அதில் இருக்கும் லேபிள், உலோக பட்டன்கள், ஜிப் மற்றும் பட்டன்களின் அளவு, சில அலங்கார சங்கிலி, அலங்கார எம்பிராய்டரி மற்றும் பிரிண்டுகள் முதலியன சேர்ந்தது ஆகும். அதன் லேபிள் தான் ஜீன்ஸ் பேண்ட்டின் அதி முக்கிய பாகம் எனக் கருத முடியும், அதை வைத்து தான் பெரும்பான்மையான பேண்ட்கள் வாங்கப் படுகின்றன. அதாவது பிராண்ட் ஃப்ரீக்காக நம்மை வைத்திருக்கிறது.இதை வைத்துக் கொண்டு ஜீன்ஸ் ஆடைகள் வெறும் மோகத்தையும், பகட்டையும் அடிப்படையாகக் கொண்டது என்ற முடிவிற்கு எளிதில் வரலாம். ஏனெனில் இந்தியாவில் 80% ஜீன்ஸ் உற்பத்தி லேபிள் செய்து தான் விற்கப் படுகின்றன.

final arguement:

ஜீன்ஸுக்கு எதிரான குரலை நான் நுகர்வுத்தன்மைக்கு எதிரான ஒரு முக்கிய படிக்கட்டாகப் பார்க்கிறேன், மேற்கத்திய ரெஸ்டாரெண்ட்கள், திண்பண்டங்கள், அதிவேக பைக்குகள், Accesoriesகள் போன்ற பல கட்டங்களுக்கு நகர்த்திட உதவும்.

நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் எவ்வளவு தூரம் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு அறியாமல் justify ஆகாத நுகர்வுக்குள் உங்களை செலுத்திவிட்டீர்கள் என்று. அது  நீங்கள் காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. சந்தையில் இருக்கும் நல்ல பற்பசையை விட நான்கு மடங்கு விலையுயர்ந்த சென்சிடிவ் டூத் பேஸ்டில் இருந்து ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம் முந்தைய நாள் நீங்கள் ஜீன்ஸ் வாங்க ஷாப்பிங் செல்லும் பொழுது ஒரு சிக்கன் பர்கரையும் கோக்கையும் நீங்கள் கையில் வைத்திருந்தீர்கள்.

ஆம், இந்தக் கட்டுரை எழுதுவதற்காக நான் ஒரு வருடங்களுக்கும் மேலாக ஜீன்ஸ் அணிவதில்லை. எனது தீபாவளி ஓரளவுக்கு ECO-FRIENDLY தான். 
Happy Diwali friends

-ஜீவ.கரிகாலன்


திங்கள், 28 அக்டோபர், 2013

அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சிவனின் காதல்



காதல் தரும் துயரத்தில் மீள முடியாத நிலை அது, உலகையே அழித்து விடச் சொல்லும் வெறி மட்டுமே அதில் மேலோங்கியிருக்கும். அதுவரை கண்களுக்கு அழகாக பிரசன்னமாகியிருந்த இயற்கையின் அழகுகள் எல்லாம் வெறுப்பாக மாறி விடும். எத்தனை கனவுகள்?, எத்தனை போராட்டங்கள் ? எல்லாமுமே ஒரு வாழ்வுக்கான ஆரம்பத்திற்காகத் தான், ஆனால் அப்படி துளிர் விட்ட காதல் தான், அதற்குள் கருகிப் போனது எத்தனை கொடுமையானது??

இனம் மாறித் திருமணம் செய்து கொண்டது தானே ஒரு சமூகத்திற்கு அவமானகரமாய்ப் போய்விட்டது? ஒட்டுமொத்த நாடும் ஒரு காதலைப் புறக்கணித்தது.  காதலில் மூழ்காமல் இருந்தது பாசப்போராட்டம், இறுதியில் தான் வாழும் சமூகம் தன்னை அவமதிப்பதைத் தாளாது தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்குத் தூண்டியது. ஒரு பக்கம் தன் காதலி இறந்த சோகமும், மற்றொரு பக்கம் தங்களை ஒதுக்கிய, தூற்றிய சமூகத்தின் கோபமும். காதல் தரும் துயரத்தில் ஆற்ற முடியாத கோபம் இது, சர்வமும் நிர்மூலமாக்கப் பட்டது.

தீக்கிரையான தன் காதலியின் உடல் கருகித் தான் கிடக்கிறது. தனது வலிமையான தோள்களை கெஞ்சிடச் சொல்லிப் பணித்த அந்த மென்மையான உடலும், கருமையான விழிகளும் கருகித் தான் கிடக்கிறது. தன் ஏழ்மையை, கடின வாழ்க்கை முறையினை, தன் குறைகளை என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட மேன்மை பொருந்திய அரசிளங்குமரி தன்னை விட்டு அகன்று விட்டாள்.

”நம் இத்தனைக் கால காதல் வாழ்க்கையில் அதிகப்பட்சமாய் ஒரேயொரு கடுஞ்சொல், ஆனால் அது உண்மையாகிப் போய்விடும் என்று யாருக்குத் தெரியும்?. அந்த சொல்லுக்கு மட்டும் என்ன அப்படிப்பட்ட சக்தி? அப்படியென்றால் எத்தனை முறை சொல்லியிருப்பேன், ’நீயின்றி நானில்லை ’ என. ஒருவேளை நானும் இறந்து விட்டேனா என்ன??.
’நீ என்னுள் பாதி’ என்றேனே, இனி எப்படி உனக்கு நான் இடம் தருவது? நீ எப்படி என் இடம் பெயர்வாய்??”...

 ”சொல் தாட்சாயினி!! நீ ஏன் அப்படி செய்தாய்”.
 ”என் ஒரு பாதியாகிய நீ மரித்துப் போன பின்பு நான் மட்டும் எப்படி சிவம்?? நான் என்பது இனி ஒரு சவம். எனினும், இப்பொழுதும் உன்னை விட்டு என்னால் பிரிய முடியாது.”

தன் கையில் வைத்திருந்த சூலத்தால், கருகிய நிலையில் இறந்து போன சதியின் உடலை ஏந்திய படி எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் நாடு முழுதும் அலைந்து திரிகிறான்...

இப்படி ஒரு ஓவியத்தில் மறைந்திருந்த முன் கதையானது என் கண் முன்னே வந்து போனது, புராணக் காலங்களில் இருந்தே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் தனியுலகத்தின் பொது எதிரியாகவே சமூகம் இருந்து வருகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இது புராணச் செய்தியாக இருந்தாலும் இதை வரையும் மனநிலை எப்படி இருந்திருக்கும்? சூலத்தின் கூர்மைகளில் கிழிந்தபடி தொங்கும் சதியின் நிலை அவ்வோவியருக்கு எத்தனை துயரத்தை தந்திருக்கும்?

அந்த ச(வி)தியின் கோடுகளே, சிவனை உலகைப் பற்றிய பிரக்ஞை இல்லாத ஒரு மனிதனாகவும், தன் காதலி சவமாக இருக்கும் நிலையினை மறந்தவனாகவும், தான் எங்கே செல்கிறோம் என்று கூட தெரியாதவனாகவும் இருக்குமாறு அவன் முகத்தின் வெளிறியத்தன்மை காணப்படுகிறது. பின்னர் ஒருநாள் மரணம் பற்றியத் தெளிவு, வாழ்வினை மீச்சிறிய ஒரு  குறிக்கோள் ஒன்றின் பகுதியாகவும் எல்லையற்ற,  முடிவற்ற ஒரு வாழ்வின் ஒரு துளியாகவும் இருக்கும் பிறவியின் மீது ஒரு தெளிவு உண்டாகிறது. பின்னர் இந்தக் காதலே இவர்களை புராணங்களின் வாயிலாக வழிபடச் செய்யும் தெய்வங்களாக்கிறது என்பது வேறு கதையாகின்றது. இப்போது, இந்தக் கதையைப் போலவே இந்நாட்டில் காதல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது, இன்றைய போராட்டங்கள் நாளைய வரலாறாக மாறவே செய்யும்..



கிட்டதட்ட இவ்வோவியம் வரைந்து முடித்த நிலையில் ஓவியருக்கு கிடைத்திருக்கும் அமைதி நிலை. இதைக் கடக்கும் பொழுது நமக்கும் தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது, அந்த நீண்ட நெடிய துயருக்குப் பின் வரும் அமைதி நிலை, அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது!. எத்தனை யுகங்களானாலும் இன்னும் காதல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற நிம்மதியில் விளையும் அமைதி தான் அது.

18ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஒரு ஓவியம் தான் இது,
நீர்வண்ணங்களைக் கொண்டு காகிதத்தில் வரையப்பெற்ற இவ்வோவியத்தில் தங்கத்தினையும் அழகிற்காகப் பயன்படுத்தியுள்ளார் இதை வரைந்தவர். இதை வரைந்தவர் பெயர் தெரியவில்லை, இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா பகுதியில் வரையப்படும் மினியேச்சர் ஓவியங்கள். இப்போது இந்த ஓவியம்  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அரசுப் பொருட்காட்சியில் வைக்கப் பட்டுள்ளது. அதை மீட்டுக் கொண்டு வர நம்மால் ஏதும் செய்ய முடியாது தான், மீண்டும் கொண்டு வந்து நம் நாட்டில் வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஆனால் நம் அருங்காட்சியங்களில் படிந்திருக்கும் தூசிகள் அவ்வோவியத்தில் வேறு யாரின் படத்தினையும் கூடுதலாக வரைந்து விடக் கூடும்

இந்த ஓவியத்தைப் பார்த்துச் செல்லும்  ஒரு அமெரிக்கனுக்கு இந்தப் புராணம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காதல் என்பது உலகில் ஒன்று தானே!! சிவனின் துயரம் எந்த மொழி பேசுபவனுக்கும் புரியும்.


(பஜ்ஜி -சொஜ்ஜி - 44, ஓவியம் -01)
ஜீவ,கரிகாலன்

பஜ்ஜி - சொஜ்ஜி 43 /ஸ்விஸ் பாங்க் விவகாரம்



அனைத்து நாடுகளில் இருந்தும், அதுவும் குறிப்பாக இந்தியாவில் இருந்தும் அரசியல் வாதிகள், மற்றும் தொழில் அதிபர்கள், திரையுலகினர் என்று தங்களது கருப்பு பணத்தை  பதுக்கி வைக்கும் இடமாக சுவிட்சர்லாந்து வங்கிகள் செயற்பட்டு வந்தன.

அமெரிக்காவின் கடும் நிதிநெருக்கடியைச் சந்தித்ததன் விளைவாக, சமாளிப்பதற்கு எடுத்த பல நடவடிக்கைகளில் ஒன்றாகத் தான் ஸ்விஸ்பாங்கின் இந்த திடீர் நிலை மாற்றம். ஆமாம், நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும் என்பது போலவே, பல ஆண்டுகளாக இந்திய அரசு கருப்பப் பணம் பற்றிய கணக்குகளைக் கேட்டுப் போராடிக் கொண்டிருந்ததற்கு, அமெரிக்காவும் அதே கோரிக்கையை அழுத்தமாகக் கோரியதும், இப்போது ஸ்விஸ் அரசு செவி பணிந்து சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பதன் மூலம் இனி ரகசியம் காக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

வரி தொடர்பான நிர்வாக தகவல்களை பரஸ்பரம் தரும் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அளவில் பல நாடுகள் இடையே பேச்சு நடந்தது. அதில் அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து உட்பட 58 நாடுகள் பங்கேற்றன. அதில் சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் 48 நாடுகளும் கையெழுத்திட்டன. இதில் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டது.

மேலும், இந்த வங்கிகளில் யார் யார் எவ்வளவு பணம் பதுக்கி வைத்து இருக்கிறார்கள்  என்பது மட்டும் படு ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால்,சொந்த நாடுகளை விட்டு, இந்தியா  உள்ளிட்ட வெளிநாடுகளின் வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அவர்களது வங்கி கணக்குகள் பற்றி முழு விவரத்தையும் வெளியில் அறிவிக்க வேண்டும் என்கிற சர்வதேச ஒப்பந்தத்தில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கை எழுத்து ஒப்பந்தம் போட்டுள்ளதால் இனி சுவிஸ் வங்கி தங்களது வங்கி கணக்கு பற்றிய அறிக்கையில் ரகசியம் காக்க முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதற்கான போராட்டம் சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்த பணம் இரண்டரை லட்சம் கோடியை தாண்டும் என்று பாஜ உட்பட பல கட்சிகளும் பெரும் கோஷமெழுப்பின. இதன் விளைவாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெள்ளையறிக்கை சமர்பித்த போது கருப்பப் பணத்தின் பதுக்கல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது, அதாவது சுமார்  பதினாலாயிரம் கோடிகள் மட்டுமே கருப்புப் பணம் இருப்பதாகத் தெரிந்தது.
யூதர்களின் பணத்தை சேமித்து வைப்பதற்காக இரண்டாம் உலகப் போரினை ஒட்டியக் காலக்கட்டத்தில் கருப்புப்பணப் பெட்டகமாக மாறிய சுவிட்சர்லாந்து வங்கிகள். கிட்டதட்ட உலகம் முழுவதும் இருந்து வரும் கருப்புப் பண பதுக்கல் சுமார் 90லட்சம் கோடிகளைத் தாண்டுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

பொதுமக்கள் இந்த விசயத்தில் கவனம் கொள்ள ஆரம்பித்ததன் விளைவாகவும், எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தின் விளைவாகவும் வெள்ளையறிக்கைத் தாக்கல் செய்த மத்திய அரசு அந்தப் பட்டியலை வெளியிட மறுத்து விட்டது. அந்த பட்டியலில் கருப்புப் பணத்தின் அளவு எவ்வளவு என்று வெளியிட்ட அரசு, அதைப் பதுக்கியவரின் பெயரை வெளியிடப் போவதில்லை, ஏனென்றால் அவர்கள் இந்த நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள்.

- தொடரும்
 ஜீவ.கரிகாலன்

வியாழன், 17 அக்டோபர், 2013

யாளி பேசுகிறது -01


யாளி பேசுகிறது -01 (புதியத் தொடர்)

ஆயிரங்கால் மண்டபத்தின் வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து.
ஓவியம் பற்றியத் தொடர் ஒன்றினை ஆரம்பிக்கத் தூண்டியது எது?
இது தான் என் முதல் கேள்வி, பல கதை சொல்லிகளுக்கு மத்தியிலே புரண்டு கிடந்தும், சொல்லத் தெரிந்து நிறையக் கதைகள் இருந்தும் சொல்ல முடியாமல் , எங்கெங்கோ  சிக்கித் தவிக்கும் என் கதைகளை தனியே விட்டு விட்டு நான் மட்டும் பிரயாணம் செய்கின்றேன்.
ஒரு குரல் கேட்கிறது, அது ஒரு அறிவியல் ஞானியின் குரல். அக்குரலில் வரும் ரிச்சர்ட் ஃபெய்மெனின் (Richard Feymann)அறிவியல் கோட்பாடாக மட்டும் கீழே வரும் வாக்கியத்தை எடுத்துக் கொண்டு சுருங்கி வாழ முடியாது. அவர் சொன்னது பிரபஞ்சத்திற்கே பொதுவான உண்மை என்பது மிகை.
“There's A Plenty of a Room at the Bottom” எனும் சொல்லாடல் தான் அது.
குறிப்பாக ஓவியம் பற்றி பேசுவதற்கு மிகவும் குறைவான ஆட்களே இருக்கின்றனர். அதுவும் அவர்கள் பட்டியல் - வான்கோ, பிகாசோ, காகின், கிளிம்ட்,வாஸில்லி காண்டின்ஸ்கி, வில்லியம் பிளேக் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிக்கிறது. விக்கீபிடியா போன்ற தகவல் களஞ்சியங்களில் கூட நமது தென்னிந்திய ஓவியர்களைப் பற்றிய குறிப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  இது ஒரு திட்டமிட்ட புறக்கணிப்பு.
அசரீரி: கலையின் உபபொருள் ரசனையா? அல்லது நிராகரிப்பா?
இன்றைக்கு இருக்கும் நவீன ஓவியச் சூழலில், நல்ல தொழில்நுட்பங்களுடன் கூடிய ஓவியப் படிப்பு ஒரு தொழிற்கல்வியாக மாறும் அளவிற்கு கணிசமான வேலை வாய்ப்பை பல்வேறு துறைகளில் உருவாக்கித் தருகிறது. ஆனால் பல ஓவியர்கள் பொருளீட்டும் உலகில் இருந்து தனித்தே இருக்கிறார்கள்.
இக்கட்டுரை, ஓவியங்களோடு  நமது ஓவியர்கள், இன்றைய ஓவியங்களுக்கான உலகச் சந்தை, ஓவியம் மூலமாக உலக அரசியல், ஓவியங்களைப் பற்றிய விளக்கங்கள், நிர்வாணம் முதல் கார்ட்டூன் அரசியல் என உரையாடல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.
நண்பர், ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி இதற்கான உதவிகளை எனக்குச் செய்வதாக உறுதி கூறியுள்ளார். அவருக்கும் என் நன்றி.
பிற நம் கட்டுரையில் வலம் வந்த பின்னர்:
*****
தொழிற்நுட்பத்தின் காரணமாக அது உருவாக்கப்படும் பிரதேசத்தின் சாயல்களை அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் படைப்பில் பிரதிபலிப்பார்கள். அப்படித் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டு இருப்பதால் சொந்த மண்ணின் தொன்மைகள் மறக்கடிக்கப் பட்டுவிடும்.  இதை சமீபத்திய உதாரணமாக, சீன, கொரிய மற்றும் சில மேற்கத்திய கார்ட்டூன்கள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக (Ranger, Ben10, Transformers) பழைய Disney, Mickey mouse போன்ற கதைகள் மறைந்து விட்டன.
இது நேரடியாக நமது நாட்டிலுள்ள பொம்மைகள் சந்தையினை முற்றிலுமாக பாதித்தது. பிறகு நமது பூர்வீகமான புராணங்களில் இருந்து உருவான பாலகிருஷ்ணா, சோட்டா பீம் போன்ற கதைகள் மறுவுருவாக்கம் செய்யப்பட இந்திய பொம்மைச் சந்தைக்கு திரும்பவும் உற்பத்தி செய்யும் வாய்ப்பு கிட்டியது.
இந்திய நவீன ஓவியங்களின் முன்னோடிகளில் ஒருவரான KCS Panickar-ன் படைப்புகளை நான் கண்ணுறும் போது இது போன்ற சந்தை மாற்றம் பற்றிய பின்புலம் பற்றியும் யோசிக்க இடமிருந்தது. ஏனெனில், அவரும் இத்தகைய ஒரு பெரிய மாற்றத்திற்கான ஒரு முன்னோடியாக செயல் புரிந்தார்.
(இளையாராஜாவை நாம் போற்றிப் பாடுவதன் பின்னணியிலும் இத்தகைய காரணம் தான் அடித்தளம்.)
KCS பனிக்கரை நாம் முக்கியமான ஓவியராக ஒரு புறமும்,  நவீனச் சூழலில் ஒரு புதிய களம் ஏற்படுத்திக் கொடுத்த பிதாமகராகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைஞனாக அவரைப் பார்ப்பதைக் காட்டிலும் அவர் அமைத்துக் கொடுத்த சோழமண்டல அமைப்பின் நிறுவனராகவே பல இடங்களில் கவனிக்கப்படுகிறார். அதன் காரணமாகவே அவரைப் பற்றியே நான்  முதலில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
ஆனால் முதலில் பேசப்போவது அவர் ஓவியங்களைப் பற்றியே.
சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை நவீன ஓவியர்களில், இவர் படைப்புகள் நுட்பமான உரையாடலையும் (Narrative) வைத்திருந்தது.
இவரது சொந்த ஊரான, கேரள மாநிலத்தின் ஒரு கிராமத்துக் காட்சி அப்படிப்பட்டவை இல்லையென்றாலும் அதன் பின்னர் வரைந்தவை இந்த வண்ணங்களிலிருந்து மிகவும் வேறு பட்டவை. மிகக் கடினமான பரிசோதனைகளை மேற்கொண்டது ஒரு புறம் இருந்தாலும், இவரது கோடுகள் மிகச் சாதாரணமான வடிவங்களையே திட்டமிட்டு உருவாக்கின. அவர் வரைந்திருக்கும் மனிதர்களின் வடிவம் மிக எளிமையான (Fruit seller) குழந்தைகளின் முயற்சியைப் போன்ற தோற்றமளித்தன. பிற புராணங்களைத் தழுவிய ஓவியங்களிலும் இவர் வரைந்திருக்கும் மனிதர்களின் தோற்றம் வித்தியாசமானவையே. அவை தம் கண்களைக் கொண்டு உரையாடுவதைப் பார்க்கலாம்.
வாழ்க்கை, மரணம், பிறப்பு குறித்த இவரது ஓவியங்களையும், சில narrative ஓவியங்களையும் தொடர்ந்து  இக்கட்டுரையில்  பார்த்து வருவோம்.
அசரீரி: கலைஞன், கட்டுவிக்கும் அதே அடித்தளத்தில் இருந்து ஆரம்பித்தாலும் கூட ஒரு ரசிகன் உணர்ந்து வடிக்கும் கோபுரங்கள் அது போல இருப்பதில்லை. அது ரசிகனின் தேவைக்கேற்ற அல்லது புரிதலுக்கேற்ற கட்டுமானம், அதில் தவறில்லை. வெறும் அடித்தளத்தைத் தொட்டு வணங்கிவிட்டு செல்லும் பீடமாக மட்டும் இருப்பது தான், பழிக்கு ஆளாகும் நிலை.
அடுத்து அவரது ஓவியம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்:

கே.சி.எஸ்.பனிக்கர்
கே.சி.எஸ்.பனிக்கர்
Genesis எனும் ஓவியம். இது ஒரு கோட்டுச் சித்திரம். 1957-ல் வரையப்பட்டது.
இதை நாம் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இதில் மொத்தம் நான்கு காட்சிகள். அவை காதல் , கற்பம், கரு, பேறுகாலம் என கோடுகளாகத் தீட்டப் பட்டிருக்கும்.
இவர் வரைந்திருக்கும் மனித உருவங்கள் பிரத்தியோகமானவை. கருவை அவர் வரையும் பொழுது கருவறையைச் சுற்றி ஒரு ஜுவாலை இருப்பது ஒரு மரபுச் சார்ந்த படிமம்.
ஓவ்வொரு காட்சிகளில் இருக்கும் கண்களின் வித்தியாசத்தைப் பாருங்கள். அதில் காதல், பூரிப்பு/வெட்கம், வலி - அதோடு கருவில் இருக்கும் குழந்தையின் கண்கள் கவலைகளுக்கு இடமேயில்லாத உலகில் இருப்பது போல் தோற்றமளிக்கும். இவரது கோடுகள் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும், அவற்றை ஆழ்ந்து நோக்குவதற்கு முன்பே இவை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடும்.
நவீன உலகில் நமது மரபுகளை / நம்பிக்கைகளை, ஆன்மீகத்தை குறிப்பிடும்படியான எந்த பரிட்சார்த்தமும் செய்துப் பார்க்காத போதிலும் அவற்றை அழகியலுடனும், மிக நுண்ணியக் குறியீடுகளுடனும் வெளி உலகிற்கு எடுத்துச் செல்லவும், சமகாலத்தின்/சமூகத்தின் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் சில திரைகளை விலக்குவதற்கும் அவை பயன்படும்.
இன்னும் சில ஓவியங்களோடு அடுத்தப் பகுதியில்...


 - ஜீவ.கரிகாலன்
(நன்றி : யாவரும்.காம் )

*******************************************************************************************

ஜீவ.கரிகாலன் -   www.kalidasanj.blogspot.in , kaalidossan@gmail.com

செவ்வாய், 15 அக்டோபர், 2013

அசுரன் ஆளும் உலகு (பஜ்ஜி - சொஜ்ஜி 42 )

                    தண்ணீர் காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்

சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு முக்கியமான திர்ப்பை வழங்கி மத்திய அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தான் பொதுமக்கள் தங்கள் மானியத்திற்காக ஆதார் கார்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தியது தான். ஆதார் கார்ட் இல்லாதவர்களுக்கும் மானியம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொன்ன தீர்ப்பு ஒரே நாளில் அரசின் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தின் பெரும் தோல்வியாக நாம் பார்க்க இடமளிக்கிறது.

இந்த தீர்ப்பினை எதிர்த்துப் போராட மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் அவர்களுக்கு விலை போன மீடியாக்கள் என்று ஒரு குழுவாக களத்தில் இறங்கி இந்த தடையை தளர்த்த போராடுகிறார்கள்

எதற்காக இந்த தடை?

சுப்ரீம் கோர்ட் கீழ்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

1. பொது மக்கள் எல்லோராலுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஆதார் அட்டையினை வாங்கிட முடியாது,
  - இது அரசின் புள்ளியல்  மற்றும் கணக்கெடுப்புத் துறையின் பலவீனமான செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட் சரியாகக் கணக்கில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

2. ஆதார் அட்டை வழங்குதலில் உள்ள முறைகேடு மற்றும் குழப்பங்கள்
- போலியான அட்டைகள், பணம் வாங்கிக் கொண்டு முறைகேடாகத் தரும் அட்டைகள் (ஆந்திராவின் ஒரு பகுதியில் ரூ.200/-க்கு முறைகேடான் ஆதார் அட்டை வழங்கிய கும்பல் போன மாதம் கைது), குளறுபடியாக பிரிண்ட் செய்யப்பட்ட அட்டைகள்(பெயர், போட்டோ மாறியிருத்தல் மிகச்சாதாரனமாக காணப்படுகிறது)
- எத்தனை பேருக்கு ஆதார் அட்டைக்கான சான்றுகள், விண்ணப்பிப்பதற்கான விடுப்புகள், வங்கிக் கணக்குகள் இருக்கின்றன? எத்தனை கிராமங்களில் வங்கிகள் இருக்கின்றன?

3.ஆதார் அட்டையினால் லாபம் அடைபவர்கள் யார் யார்..

மூன்றாம் கேள்விக்கான விடை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தவுடன் காலில் வெந்நீர் ஊற்றியது போலே குதித்துக் கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டை கவனித்தால், இவர்களுக்கு இருக்கும் நிஜ ஆதாயம் என்ன என்று புரியும்.

Economic Timesல் இந்த தீர்ப்பினால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது, கள்ளச் சந்தையில் எல்.பி.ஜி சிலிண்டர்களை கட்டுப்படுத்தத் தவறினால் அரசுக்கு 01 பில்லியன் டாலர் வரை இறக்குமதி அதிகரிக்கும் என்று சொல்கிறது. இங்கே ஒரு லாஜிக்: ஆதார் கார்ட் உபயோகிப்பதால் எண்ணெய் இறக்குமதி குறையும் என்று எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் இந்நிறுவனங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது?. 

லாபம் இருக்கவே செய்கிறது!! அதாவது ஆதார் கார்டு வினியோகத்தில் உள்ள சாத்தியக் கூறு, இருக்கும் வாடிக்கையாளர்களில் ஒரு பத்து சதவீதம் பேரையாவது வடிகட்டி அவர்களுக்கு மானியம் இல்லாமல் சந்தை விலைக்கு கொடுக்க முடியும் என்பது அரசிற்கு ஒரு Extra Bonus. உங்கள் மாநகரங்களில் திடீரென்று முளைத்துள்ள சில தனியார் எல்.பீ.ஜி. கடைகளின் பெயர்கள் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?? Total Gas, Super Gas..இவர்களுக்கான புதிய சந்தைக்கு பயன்படும் ஒரு முக்கிய நபர் இந்த ஆதார்.  

அப்படியென்றால் அரசினால் ஆதார் கார்டு இல்லாமலேயே கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்த வேறு வழிகள் இல்லையா?? அரசு மட்டும் நினைத்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாகவே RFID தொழில்நுட்பம் மூலம் வீட்டு நுகர்வுக்கு வரும் சிலிண்டரினை கள்ளச் சந்தையில் விற்பதை தடுத்திருக்க முடியும். ஏன் ஒட்டுமொத்த CIVIL SUPPLIESஐயும் கட்டுப்படுத்திட இந்த தொழில்நுட்பம் உதவும், ஆனால் அரசுக்கு இதன் மீதான் அக்கறை இல்லை என்பது மட்டும் உறுதி.

சரி இப்படி வைத்துக் கொள்வோம், முதலில் எல்.பீ.ஜிக்கான மானியத்தை இப்படி ஆதார் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்தால், அடுத்ததாக ஒட்டு மொத்த CIVIL SUPPLIESன் மானியங்களும் வங்கிகளுக்குமே வரவு வைக்கப் படும், நாம் அதை எடுத்துக் கொண்டு ரிலையன்ஸ் ஃப்ரஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டிலோ அல்லது தீபாவளிக்கு வெளி வரும் திரைப்படத்தைக் கான் முன்பதிவோ செய்யக் கூடும்.

எல்லோரும் 1004 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கிவிட வேண்டும், அரசு நாம் வாங்கியவுடன் 410.50 ரூபாயினை நம் வங்கியில் வரவு வைத்து விடும், இங்கே நாம் கவனமாக இருக்க வேண்டும், சரியாக குறைந்த வைப்புத் தொகையினை நாம் வங்கியில் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் உங்கள் மானியம் அபராதமாக வங்கிகளால் சுவாஹா செய்யப்படும். இதில் எத்தனை பேருக்கு எல்லா வங்கிகளிலும் NO FRILLS ACCOUNT இருக்கும் என்று தெரியும்?? ஆனால் NO FRILLS ACCOUNTஇனை வையர் ட்ரான்ஸ்பருக்குப் பயன்படுத்த முடியுமா என்று தெரியாது? மானியத்திர்காக மட்டும் வங்கிகளுக்குள் முதன் முறை நுழைபவர்களுக்கெல்லாம் ATM கட்டணங்கள், இதர வங்கிச் சேவை கட்டணங்கள் குறித்த விளக்கங்கள் தெரிவிக்கப்படுமா??

ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் ஆதார் கார்டு இந்திய அரசியல் சாசனத்தின் 14,20 மற்றும் 21ஆம் பிரிவுகளுக்கு எதிரானது (Right to equality, live and liberty) என்பதை, ஆக இதற்கெதிரான பிரச்சாரம் மிக அத்தியாவசியமாகிறது

மராட்டிய மாநிலத்தில் ஆதார் கார்டு இல்லையெனில் திருமணப் பதிவு ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று அரசு கூறியுள்ளது ஒருவேளை மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் யுக்தியா என்று தெரியவில்லை.
வரும் அக்டோபர் 22ம் தியதியில் வரும் தீர்ப்பினைச் சார்ந்து தான் இதன் முடிவு எப்படி இருக்கும் என்று யோசிக்க இயலும். அதுவரை எண்ணெய் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினைக் கண்டு அஞ்சப் போவதில்லை...

அடுத்தப் பகுதியில் தீர்ப்பினை வைத்து விவாதிப்போம் ...

ஜீவ.கரிகாலன்




வியாழன், 10 அக்டோபர், 2013

காதல் திருமணம் செய்யாத கடவுள்

காதல் திருமணம் செய்யாத கடவுள்



-பஜ்ஜி - சொஜ்ஜி -41



ஆன்மீகம் என்பது என்னைப் பொருத்த வரை என்னவென்று, சரியாக ஒரே நிலையில் வரையறுப்பது கடினம். எப்போதாவது என்னையறியாமல் வணங்குவதோ! பிரார்த்தனை செய்வதோ நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும், மற்றபடி எந்த சடங்குகளிலுமோ, பூஜைகளிலும் நம்பிக்கை இல்லாதது போலே வலம் வந்து கொண்டிருக்கிறேன். தீபாவளி, பொங்கல், கார்த்திகை, பிள்ளையார் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் யாவும் என் அம்மாவின் ’கை’ங்கர்யத்தில் எழும்பும் சமையலறை வாசனைகளால் நல்ல பிள்ளையாக நடந்து தொப்பையை maintain பண்ண உதவும்.

வீட்டில் நவராத்திரி கொலுவை அம்மா நான் பிறந்த வருடத்திலிருந்து வைத்து வருவதாகச் சொன்னார். அவருக்கு உடல் நிலை சரியில்லாத் காரணத்தால் நானும் என் நண்பனுமே படிகளை அமைத்து, கொலு பொம்மைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தோம். சொந்த ஊரில் வைத்திருந்த கொலுவில் 15% பொம்மைகளே இருப்பதாகத் தோன்றிற்று.

ஒவ்வொரு பொம்மைகளாக எடுத்து வைக்கும் பொழுது தான் நான் அதை கவனித்தேன், அதாவது எல்லா தெய்வங்களின் ஜோடியையும் பார்க்கும் பொழுது அவர்கள் வேறு வேறு CLAN களாக(இனக்குழுவை) எனக்குத் தோன்றியது. அதாவது எல்லா தெய்வங்களும் ஏதோ ஒரு வகையில் வேறு இனக் குழ்வைச் சேர்ந்தவரை காதலித்து மணமுடித்துள்ளது(??).

ராமருக்கு சீதை மேல் காதலில்லாது போனால் அந்த வில் முறிந்திருக்குமா என்பது சந்தேகம். கண்ணன், சிவன், முருகன் என எல்லா தெய்வங்களிலுமே வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்க முடியும். சீதை மிதிலை தேசத்து (நேபாள) இளவரசி -ராமன் அயோத்தி. அது போல சிவனாகிய யாசகன் பல அவதாரங்களில் மணமுடிக்கும் உமையானவள் தக்ஷனுக்கும், பரதவருக்கும், பாண்டிய தேச இளவரசி மீனாக்ஷி என்று வேறு வேறு இனக்கலப்பை தான் இவர்கள் காதல் உருவாக்கியிருக்கிறது. முருகன் - வள்ளி, பூமாதேவி - வராக அவதாரம் என பெரும்பானமையான எல்லா தெய்வங்களுமே காதல் மணம் புரிந்திருக்கின்றன.

அப்படியானால் காதல் மணம் புரியாமல், ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்களின் புராணமோ தகவலோ இல்லையென நீங்கள் கேட்டால், இருக்கிறது அந்த ஜோடி தான் பிரம்மா மற்றும் சரஸ்வதி. எப்படி இவர்கள் காதல் மணம் புரியவில்லை என்று சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?

வெறும் அசுரனை வதம் செய்வது மட்டுமே ஒரு புராணம் ஆகிவிடுமா? கடவுளர்கள் ஒவ்வொரு முறை அவதரிக்கும் போதும், அவர்கள் போர் மட்டும் செய்வது கிடையாது - காதலும் செய்கின்றனர். அதுவும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக. Everything is right in love and war அல்லவா? அதனால் தான் தந்திரமாக வதம் செய்வதும், களவு செய்து மணமுடிப்பது அவதார நோக்கமாக புராணங்களில் அறிந்து கொள்ள முடிகிறது. ஏன் பிரம்மனை இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவில்லை  என்று கேட்கிறீர்களா? So, Simple, பிரம்மதேவன் மட்டும் காதல் மணம் புரிந்திருந்தாலோ? அல்லது வேறு இனப் பெண்ணை மனமுடித்திருந்தாலோ? , இவை நிச்சயமாய் நிகழ்ந்திருக்கும்.

1 .பிரமம்தேவனுக்கு என்று தனியான புராணங்கள் இருந்திருக்கும்
2. இந்த சிவனின் சாபத்தை எல்லாம் ஓவர்கம் செய்து தனக்கென ஒரு பிரத்யோக மார்கத்தை உருவாக்கியிருப்பார், அவருக்கும் தனியாக கோயில்கள் இருந்திருக்கும் - என்ன செய்வது...எல்லாம் விதி.

என்னடா இவன் நமது நம்பிக்கைகளை இப்படி அவமதிக்கிறானோ என்றோ?? அல்லது இந்து மதத்தை பரப்புகிறான்?? என்றோ விமர்சித்தீர்களாயின் அதற்கு நான் பொருப்பல்ல.. என் நம்பிக்கைகளை யார் மீதும் தினிப்பதில்லை, ஏனென்றால், என் நம்பிக்கைகள் யாவும் எனக்கென்று பிரத்யோகமாக இருக்க வேண்டும் என்றே விரும்பிகிறேன். இவற்றை ஒரு புனைவாக நான் எழுதியிருக்கும் கட்டுரையின் வாயிலாகவே என் ஆன்மீகமும் பயணிக்கிற திசையை நான் காண முடிகிறது, முடிந்தால்/விருப்பமிருந்தால் உங்களுக்கும் புலப்படும்.

It's Interesting, isn't it?

அடுத்த பகுதியில் இன்னும் சூடாக
ஜீவ.கரிகாலன்