சினிமா விமர்சனம் எழுத வேண்டும் என்று நான் இந்த பிளாக் ஆரம்பிக்கவில்லை, ஆனால் என்னை பாதித்த கலை படைப்பு என்று எதை நான் உணர்ந்தாலும், அதை நான் எழுதலாம் என்று தான் இப்பொழுது சினிமாவையும் சேர்த்துக் கொள்கிறேன். ஆகவே, லைவ் ஓபனிங் டே கமெண்ட்ஸ், இண்டெர்வெல் ரெவியூ, இன்ஸ்டண்ட் அப்டேட்ஸ், கலெக்ஷன் ரெக்கார்ட், ஓபனிங் ஹிஸ்டரி என்றெல்லாம் எழுதாமல் எந்தக் காலமாக, எந்த மொழியில் எடுக்கப் பட்டதாக இருந்தாலும் அதைப் பற்றி எழுதலாம் என்று தான் தீர்மானம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் இன்று மரியான் படம் பார்த்து விட்டு வந்தேன், இங்கிருந்தே தொடங்குகிறேன்
*********************************************************************************
மரியான் - எனது பார்வை, அனுபவம்
ஆள்-அரவமற்ற பாலை நிலத்தில் ஒன்பது நாட்கள்
உயிர் வாழ்ந்திட முடியுமா? உயிர் எந்த
கணமும் பிரியலாம் என்ற நிலையில் அவன் திசை தெரியா சுடுமணலில் அடுத்த அடியை எடுத்து
வைக்க முடியுமா?? அந்தப் பாலைவனத்தில் ஏன் ஒரு சாமியால்
(ஜெகன்) முடியாததை, மரியானால் மட்டும் செய்ய
முடிகிறது?? எப்படி அவன் மட்டும் பாலைவனத்தைக் கடக்கிறான்? பாலைவனத்தில் அலைவதை விட “சாவது பெரும் வரம்” என்று மாய்த்துக் கொள்ளாமல் உயிரைச் சுமந்து
செல்ல பலம் தரும் சக்தி எது?
கண் முன்னே சிறுத்தை வந்து நிற்கவும், அவநம்பிக்கையின் உச்சம் தன் உடலை
மூர்ச்சையாக்குகிறது. உயிர் துடிப்பில் ஒரே ஒரு மந்திரம் ஜெபிக்கப் பட்டு வருகிறது
“பனிமலர்”. பனிமலரும் ஜபிக்கிறாள் சர்ச்சிற்கு வெளியே
(!!) “மரியான்” என்று. பாலை வனத்தில் பல ஆயிரம் மைல்
தாண்டி, உயிர் பிரிந்து செல்ல
எத்தனிக்கும் பாதையை, பனிமலரின்
வியர்த்திருக்கும் தாவனியின் நிழல் அடைக்கின்றது. மரியான் விழிக்கின்றான், கண்முன்னே பனிமலர்.
“நெஞ்சே எழு .... நெஞ்சே எழு.... நெஞ்சே எழு...”
பனிமலருக்கு இடம் கொடுத்த ( ப.ம: உன் நெஞ்சு தான்
காலி கிரவுண்டுன்னு சொன்ன, மரியான் :அதான் நீ பிளாட் போட்டுட்டியே) வரண்டு
கொண்டிருக்கும் நெஞ்சம் எழுந்தால் மட்டும் போதுமே, உடலை இழுக்கும் சக்தி அந்த நெஞ்சத்தில் தானே
இருக்கிறது?? மரியான் நடக்கிறான்... தத்தி தத்தி, சில சமயம் கைகளையும் ஊன்றி, கொதிக்கும் சுடுமணலில்
அடுத்த அடியை அவன் எடுத்து வைத்துக் கொண்டே இருப்பது தான் அவனுக்குக் கிடைக்கும்
ஒரே ஆறுதல், நடந்து கொண்டே இருக்கிறான், பனிமலர் அவனை நடத்துகிறாள்.
“ஆயிரம் சூரியன்
சுட்டாலும்,
கருணையின் வர்ணம் கலைந்தாலும்,
வான் வரை அதர்மம் ஆண்டாலும்,
மனிதன் அன்பை மறந்தாலும்.........
அவன் மறுபடியும் முயல்கிறான், நடக்கிறான்,
காதல் அவனை நடத்துகிறது, பனிமலர் அவனை நடத்துகிறாள். அவன் அடைந்துவிட்டான்.
“உன்
காதல் அழியாது..
நெஞ்சே எழு
..நெஞ்சே எழு .... நெஞ்சே எழு... “
* ரோஜா படத்தில் மதுபாலாவைப் போல,
* இல்லை இல்லை வினை பொருட்டு தலைவன் வேறு
நிலம் செல்லும் தலைவனை ஏங்கும் ஏதோ ஒரு
அகத்திணை துறையைப் போல.
* அல்கெமிஸ்ட் நாவலில் கூட ஃபாத்திமா பாலை
நிலத்தின் பெண்கள், தாங்கள் வாழும் நிச்சயமற்ற உலகில், தங்கள கணவனைப் பிரிந்து
வாழும் துயரின் கொடுமைக்கு ஒப்பாக
* நம் கடற்புறத்து மீனவர்கள் வாழ்வில்
அன்றாடம் இருக்கும் அச்சம் போல..
ஒரு பெண்ணின்
அன்பை விட உலகில் வேறு என்னப் பெரிய விஷயம் இருக்கிறது அடைவதற்கு?? அதனால் தானே நாம் எல்லோரும் வீடு
திரும்புகிறோம்?? . இந்தப் படம் வெளிவந்த அன்றே ஒரு மாதிரியான மிக்ஸட் ரெவியூவினைப் பார்த்தேன். நான் எந்த வகையறா ரசிகன் என்பதும் எனக்கே இதுவரை தெரியாது. இருந்தாலும் விமர்சனங்களை இந்தப் படம் முடிந்த பின் எப்படி பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டும்
# படம் பார்ப்பதற்கு வெகு ஸ்லோவாக
இருக்கிறது, செகண்ட் ஹால்ஃப் ஆமை போல ஊர்கிறது என்று சிலர் விமர்சித்தார்கள். ஹரி படம் போல ஸ்கிரீனில் நாலு கட்டம் கட்டி காட்சிகளை வேகமாக நகர்த்திவிடுதலில் என்ன
அனுபவம் இருக்கின்றது எனக்குப் புரியவில்லை? மரியான் மனதில் தங்கி நிற்கிறான், தனுஷ்
எனும் தமிழின் முக்கிய கலைஞன் இங்கிருந்து இன்னும் பல உயரங்கள் செல்வார் என்று
உள்ளிருக்கும் ரசிகாத்மா சொல்கிறது. பனிமலர் கண்களாலேயே, புருவங்களாலேயே மிகப்
பிரகாசமாக மரியானைக் காதலிக்கிறாள், அவனுக்காக காத்திருக்கிறாள். அப்புக்குட்டி,
இமான் அண்ணாச்சி போன்ற கதாப் பாத்திரத்தை தேர்ந்தெடுத்தது கச்சிதம்.
#நான் அமர்ந்திருந்த வரிசையில் அநேகம் பேர்
இந்த படத்தை ஒரே மொக்கை மொக்கை என்று விமர்சித்தார்கள், ஏன் அடிக்கடி மொக்கை
“மொக்கை” என்று பேசி
வருகிறோம். தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஹாஸ்யமில்லா, இரட்டை அர்த்தக் காமெடி,
நக்கல் பாணி(கலாய்த்தல்) காமெடிகளிலேயே நாம் மொன்னையாகி விட்டு நமது அளவீடுகளைத்
தொலைத்து விட்டோமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதனால் பரவாயில்லை, தனுஷும் படிக்காதவன், மாப்பிள்ளை
போன்ற படங்களில் நடிக்கவும் தானே செய்கிறார்
#பாடல்கள் அந்த அளவிற்கு இல்லை, பீ.ஜி.எம்
மோசம் என்றெல்லாம் சொன்னார்கள். வழக்கம் போல இசைப்புயல் கேட்கக் கேட்கத் தான்
தெரியும் என்று நண்பர் ஜெகன் சொல்வது போல், படத்தோடு ஒன்றிக் கேட்க முடிகின்றது,
கடல் படத்திலிருந்து ஒரே பின்புலம் கொண்ட இந்த படத்தில் இருக்கும் பாடல்கள் எத்தனை
தூரம் வேறுபட்டு இருக்கிறது. இந்தப் படத்திறகு ஓட்டு கேட்பது போலே இந்தக் கட்டுரை போய்க் கொண்டிருப்பது ஏனென்றால் , இதுவரை நான் பார்த்த அத்தனை நெகடிவ் விமர்சனங்கள். அதனால் தானே என்னவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி சென்றான், நிறைவாகத் திரும்புகிறேன்.
# கடற்புறத்தே எடுத்த படங்களில் மிக நேர்த்தியாக வெளிவந்த இயற்கை படத்தின் Back Drop ஒரு
கற்பனைத் துறைமுகமாகவே எடுக்கப்பட்டிருக்கும், மற்றபடி நீர்பறவை, கடல் திரைப்படங்களில் காட்சிப் படுத்தப்பட்ட ஒரே நிலம் தான் இந்தப் படத்திலும் வருகிறது. திருச்செந்தூரை ஒட்டிய கடற்புறம், மனப்பாடு வரை நீள்கிறது. (கடற்புறம் யாவும் நாஞ்சில் தேசம்
அன்று), ஜோ டீ குருஸ் வசனம் என்பதால் அந்த ஊர் பாஷை மற்ற இரு படங்களை விடத்
தேவலாம் என்று சொல்ல முடியும்.. மீனவர்களின் பின்புலத்தை மிகச் சரியாகக் காட்டியிருக்கும் படம் முதல்
பாதி முழுக்க மீன் எங்காவது சமைக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றது, எல்லா இடமும் சிலுவை மயமாகவும் இருக்கிறது. பனிமலரின் தந்தை சரியான தேர்வு, ஆனால் எந்த சர்சிலும் ஒரு ஃபாதர் கூட ஸ்கிரீனில் தெரியவில்லை, இது ஏதேச்சையா நடந்ததா? இல்லை திட்டமிட்டா என்று தெரியவில்லை. மேலும், ஒரு பாடல் காட்சியில் (புயலில் படகில்
சென்ற தனுஷை நினைத்தபடி பாடும் பாடல்) சோகத்தில் பனிமலர் கடற்கரையில் ஒரு சூரிய
அஸ்தமனம் பார்ப்பது போல வருகிறது, வங்காள விரிகுடாவில் எப்படி சூரிய அஸ்தமன்ம்
பார்க்க முடியும் என்று தெரியவில்லை – ஒரு வேளை நான் தான் தவறாகப் பார்த்து
விட்டேனா??
#கடல் திரைபடத்தில் திடீரென கடலை கேரளா
போல் ஒரு பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டாக (ஆலப்புழாவைக் காண்பித்து) காட்சிப்
படுத்தியிருப்பார்கள். சில காட்சிகளில் கதாநாயகன் கேரள வல்லத்தில் தான் வலம்
வருவார், அழகியல் என்று பார்ப்பவர்களை முட்டாளாக்குவது மிகக் கொடுமையான் விஷயம். அதே
போல இலங்கைக்காரன் சுட்டான் என்பதை, கதையின் மையக் கருவாக ஒரு மரணம் இருந்திருந்தும், “இலங்கை” எனும் பதத்தைக் கூட சொல்லாது
விட்ட தமிழுணர்வு அது. நீர்ப்பறவை போல் இங்கே இல்லை. “சிங்களவனுக சுட்டுட்டானுக” என்றே சொல்லப்படுகிறது. ஜோவையும், இயக்குனரையும் இதற்காகவே பாராட்ட வேண்டும், நன்றி சொல்ல வேண்டும். ஜோ டி குருஸிடம் இருமுறை பேசியிருக்கிறேன், ஒரு முறை அவர் பேச்சினைக் கேட்டிருக்கிறேன் இந்தியக் கடல் அரசியலும், கடல் வாழ்வும் பற்றி அறிந்து வைத்துள்ள மிகச் சில மனிதர்களில் ஒருவர் அல்லவா இவர்!! அதனால் தான் கடலோடு ஒன்றிப் போதல் சாத்தியமாகிறது.
தனுஷ் கடலைப் பார்க்கும் பொழுது “ஆத்தா” என்று சொல்கிறாரே, நவநாகரிக நவீனச் சிந்தனைகளில் ஒன்றான இகோ ஃபெமினிசம்(ECO Feminism) இது தான். கடலை இயற்கையாக பயந்து, வணங்கி, பெண் போல் உருவகம் செய்து அன்னையாக்கி, கடலாத்தா, கடலம்மா என்று சொல்லி பின்னர் அது கடல் மாதாவுமாகக் கூட மாறுகிறது. பெண்ணையும் இயறகையை போற்றுவது போலே மதிக்க வேண்டும் என்பது தான் இகோ ஃபெமினிசம். அந்த பெண் தான் போராடி வெல்லும் சக்தியை இறுதியில் மரியானுக்குத் தருகிறாள்.
தனுஷ் கடலைப் பார்க்கும் பொழுது “ஆத்தா” என்று சொல்கிறாரே, நவநாகரிக நவீனச் சிந்தனைகளில் ஒன்றான இகோ ஃபெமினிசம்(ECO Feminism) இது தான். கடலை இயற்கையாக பயந்து, வணங்கி, பெண் போல் உருவகம் செய்து அன்னையாக்கி, கடலாத்தா, கடலம்மா என்று சொல்லி பின்னர் அது கடல் மாதாவுமாகக் கூட மாறுகிறது. பெண்ணையும் இயறகையை போற்றுவது போலே மதிக்க வேண்டும் என்பது தான் இகோ ஃபெமினிசம். அந்த பெண் தான் போராடி வெல்லும் சக்தியை இறுதியில் மரியானுக்குத் தருகிறாள்.
*******************************************************************************
அப்புறமாக மரியான் படத்தில் அதிகமாக
வைக்கப்பட்டுள்ள அரசியல் விமர்சனம், பன்னாட்டு நிறுவனங்கள் உண்டாக்கிய பஞ்சத்தால்
உருவான தீவிரவாதிகளைக் கெட்டவர்களாக காண்பித்திருப்பது என்கிற தீவிரமான விமர்சனம்.
·
மரியான் என்பது தனியாள், வீடு திரும்ப நினைக்கும்
ஒரு கூலித் தொழிலாளி. தன் குடும்பத்தினை வறுமையில் இருந்து மீட்பதற்காக தன்னேயே
அடகு வைப்பவன். அந்தத் தனிமனிதனின் காதல் முன்னால் பன்னாட்டுக் கம்பெனியென்ன,
புரட்சியாளர்களின் கொள்கை எது குறுக்கே வந்தால் அவனுக்கு என்ன?
·
இரண்டாவது அவன் ஒரு சிறிய போராட்டக் குழுவில்
சிக்குவதால் தான் தப்பிக்க முடிகிறது, இதுவே ஒரு பன்னாட்டுக் கம்பெனியின்
அதிகாரியாக ஒரு வில்லன் இருந்தால், ஒரு சாமான்யன் தப்பித்தல் சாத்தியம் ஆகுமா
என்ன? இல்லை அதற்கு பஞ்ச் பேசும் சூப்பர் ஹீரோக்களை அமர்த்த வேண்டும்.
·
இந்தப் விஷயத்தில் மிகக் கவனமாக பன்னாட்டு
நிறுவனத்தின் அட்டுழியங்களை ஒரு தீவிரவாதி பேசும் வசனங்கள் வழியாக பதிவு செய்யவும் தவறவில்லை
இயக்குனர்.
·
பனிமலரின் பாத்திர அமைப்பு, பூ பார்வதியாகவே என்னைக்
கவர்ந்துவிட்டவரின் மேல் இருந்த கவனம் பல மடங்கு அதிகமாகிவிட்டது. எத்தனை dignified ஆக ஒரு பெண்
பாத்திரத்தை அமைக்க முடியும் என்பதை இந்த படத்தில் பதிவு செய்துள்ளனர். அவள்
மரியான் வந்துவிடுவான் என்று சொல்கின்ற கணம் மிக அழகானது.
·
பனிமலர் “என்னால தான் நீ இவ்ளோ கஷ்டப்பட்ட??” அழுகிறாள்
மரியான் “ உன்னால இல்ல, உனக்காக”
காதல் அழியாது...
நெஞ்சே எழு
#டூரிங் டாக்கீஸ்
அடுத்த ஷோவில் ஸ்பானியப் படம் பார்ப்போம்
ஜீவ.கரிகாலன்