புதன், 6 பிப்ரவரி, 2013

டேவிட் - விமர்சனம்



டேவிட் - ஒரு பெயர் இரண்டு வாழ்க்கை.

இரண்டு நிறைவான வெவ்வேறு கதைகளை non-linear திரைக்கதைக்குள்ளே படமாக்கிட தேவைப் படும் ஒரு அம்சமாக  “டேவிட்” எனும் ஒற்றைப் பெயரைக் கொண்டு இணைகிறது.

அவ்வளவு தானா!! வெறும் பெயர் என்ற  ஒற்றைப் புள்ளியில் எப்படி இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் உள்ள கதைகள் இணைகிறது? என்பது முக்கியமல்ல.

 டேவிட் - என்ற பெயர் மூலம் ஒரு கிருத்தவ மனநிலையில், மதத்தின் பால் ஏற்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை காட்சிப் படுத்துகிறார் இயக்குனர். ஒரு பக்கம் பாதிரியாரின் மகனாக ஜீவாவின் வெளிநாட்டு மோகம், கிருத்துவ போதனைகளின் மீதுள்ள வெறுப்பு, இசையில் தான் அடைய வேண்டிய இலக்கு என்று ஒரு டேவிடின் கதை நகர, தன் திருமணம் நின்று போன நிலையில், முழுநேரக் குடிகாரனாக எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கேரக்டர் விக்ரமிற்கு, எப்போதும் குடிகாரனாகத் திரியும் அவர் இறந்து போன தன் தந்தையுடன் கற்பனையாக உரையாடுவதைப் போலே தன் நண்பனின் வருங்கால மனைவி தன்னை காதலிப்பதாக கற்பனை செய்து கொள்கிறான்.

விக்ரம், ஜீவா என்ற நிரூபித்துவிட்ட கலைஞர்களின் நடிப்பிற்கு மார்க் போடுவது என் வேலை இல்லை. ஆனால் ஒரு குடிகரனாக ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு ஸ்டைலில் அங்கங்கே மறைத்து வைத்திருக்கும் மதுவைக் குடிப்பதுமாகவே இருந்திருந்தாலும் விகரமின் casual performance சலிப்பு ஏற்படுத்தவில்லை.   அதிலும், போதையிலேயே ஸ்கூட்டர் ஓட்டும் காட்சி மிகவும் ரசிக்க வைக்கிறது. நாசர், விக்ரமின் அப்பாவாக வரும் சௌரப் சுக்லா, தபு, லாரா தத்தா என்று பெரிய castingஐ வைத்துக் கொண்டு பிசிறில்லாமல் கதை சொல்லியதே பாராட்டக்குரியது. ஆனால் தியேட்டரில் அனேகமாக அந்தப் படத்தை ரசித்த சிலரில் ஒருவனாக மட்டுமே என்னை நான் உணர்ந்தேன். நிறைய பேருக்கு கதை நகரும் வேகம் குறைவாக இருப்பதாக அலுப்பை “உச்” கொட்டினர். ஆனால் இரண்டு தனித் தனிக் கதைகளாக எடுத்துக் கொண்டால் இயக்குனர் கதையைத் தாண்டி ஒரு அங்குலம் கூட சொல்லவில்லை என்று உணரலாம்(ஹிந்தியில் மூன்று கதைகள்).

ஒரு கதை ஜாலியாக பயணிக்கிறது கிறுக்கு சாண்டா போன்ற காமிக் சிரிப்புகள் பிடிக்கவில்லையென்றால் படத்தில் கிடைக்கும் ஹாப்பி எண்டிங் கிட்டாமல் ஜீவாவின் வலியோடு வீட்டிற்கு சென்றிருப்போம். இயக்குனர் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை, எங்கும் மிகைப் படுத்துதல் இல்லை, பம்பாய் வாழ் தமிழராக பார்க்கும் போது நமக்கு அந்நியப்படவில்லை ஏனெனில் துப்பாக்கி போன்ற படத்தில் இல்லாத நம்பகத்தன்மை - களம் மும்பை தான் என்று.

அது போலத் தான் விக்ரம் வரும் காட்சிகளில் கோவாவைப் பார்க்கும் பொழுது நீர்ப்பறவை, கடல் போன்ற சலிப்பூட்டும் அலையோசையைக் காட்டிலும் இது அழகான கதையாகவே இருக்கிறது. நன்றாக கிறுத்துவ வாசம் வீசும் திரைக்கதை -ஆமாம் அது தான் இந்தப் படத்தை நிறைவாகச் செய்திருக்கிறது, அதற்காக ஆலப்புழாவை கோவா என்று காட்டினால் நம்புவார்கள் என்று இயக்குனர் நினைத்திருப்பது தான் பரிதாபம்.


சில வசனங்கள் மிகக் கூர்மை :-

”என்ன மதம்”
“கிரிஸ்டியன்”
“கிரிஸ்டியன்னா, எந்தக் கிரிஸ்டியன் நாடாரா! செட்டியாரா! முதலியாரா?”

பல வசனங்கள் , கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்கும் மேலே ம்யூட் செய்யும் அளவுக்கு சென்ஸேசனலாக இருந்திருக்கின்றன,


தபு, லாரா தத்தா, ஜீவாவின் தங்கை என பெண்களின் வாழ்க்கையைக் காட்டியிருக்கும் விதத்தில் வரும் சில அதிர்ச்சிகள், கிருத்தவக் குடும்பங்களில் கலாச்சார மாற்றங்களின் வேகம் அதிகம் என்றும் சில இடங்கள் காட்டுகிறது யதார்த்தம். ஜீவா தன் தந்தையை அவமானப் படுத்திய இந்து மதவாத அமைப்பினரின் தலைவரை ஒருவன் சுடும் பொழுது, அந்த கிளைமேக்ஸ் காட்சியில் எந்த வசனமோ, ஹீரோயிசமோ அல்லது குண்டடிப் பட்டவருக்கு இரத்தம் கொடுப்பது போன்ற செண்டிமெண்டு காட்சியோ இல்லாமல்,  வெறும் கண்ணீருடன் திரும்பும் காட்சிக்காகவே இந்தப் படம் பார்க்கலாம்.



- ஜீவ.கரிகாலன்




1 கருத்து:

  1. "வெறும் கண்ணீருடன் திரும்பும் காட்சிக்காகவே இந்தப் படம் பார்க்கலாம்"
    அருமையான ஆய்வு தந்ததற்கு பாராட்டு !

    பதிலளிநீக்கு