வியாழன், 25 அக்டோபர், 2012

பஜ்ஜி சொஜ்ஜி-4

சப்தங்கள்


நீங்கள் வாசிக்கப் போவது கவிதை என்று முதலில் நம்பிவிடுங்கள்

தனிமை

தவிர்க்க முடியாத
நிசப்தப் பேரிரைச்சல்
காதைப் பிளக்க,
செவிடாகிப் போனேன்....

தனிமையின் வாதையை சொல்லிப் போகும் இந்த கவிதை நிசப்தத்தினை ஒரு இரைச்சலாக, பேரொலியாக பாவிக்கிறது. சப்தங்களைப் பற்றிதான் இந்த பஜ்ஜி சொஜ்ஜியில் சுவைக்கப் போகிறோம்.

சப்தங்கள், ஒலி, ஓசை, இரைச்சல், ஸ்வரம், இசை, பாடல், மொழி என பல பெயர்கள், பயன்கள், பரிமாணங்கள் என நம் வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் சப்தங்களுடன் பிண்ணிப் பினைந்திருக்கின்றன. ”ஆதியில் ஒசை இருந்தது”!! ஏன்? மொத்த பிரபஞ்சமும் ஒரே ஒசையாக அக்ஷ்ரமாக சொல்வது ப்ரணவ மந்திரமாய் ஒலிக்கின்றது என்று வேதம் கூருவதாக சொல்லுவர். சூக்குமமான சப்தங்கள் பற்றி பேசுவது ஒரு புறம் இருக்கட்டும், நம் அன்றாடம் கேட்கும் சப்தங்களின் தனித்தன்மை பற்றி ஏதாவது பேசுவோம்.

நமது ஊர்களில் டீக் கடைகளிலும், பரோட்டா, பிரியாணிக் கடைகளிலும் கடைக்காரர்களின் வியாபரத்தில், அவர்களுடைய பணியின்போது நாம் சில ஓசைகளை கவனிக்கின்றோமா ? அதாவது டீ மாஸ்டர் டீயை ஆற்றிவிட்டு, கிளாசை அவர் பாய்லரை வைத்திருக்கும் ட்ரேயில் ஒரு தட்டு தட்டுவதும், பிரியாணிக்கடையில் சிக்கன் பீஸ், முட்டை வைத்து மேலே பிரியானியை அடிக்கும் ஒவ்வொரு இடைவெளியிலும் அந்தப் பாத்திரத்தை தட்டுவதும்,  வெறும் கல்லில் கொஞ்சம் தண்ணீரை தெளித்து சில ஈர்க்குச்சிகளால் வாரிவிட்டு வெறும் இட்லியுடன் எழுந்துவிட எத்தனிக்கும் வாடிக்கையாளாருக்கு குறைந்தபட்சம் ஒரு ஆஃப் பாயிலாவது வாங்க வைப்பதும், குழந்தையோடு கடற்கரைக்கோ;கோயிலுக்கோ செல்லும் பொழுது குழந்தைக்கு கேட்குமாறு தந்திரம் செய்யும் ஐஸ்கிரீம், பஞ்சுமிட்டாய், பலூன் வியாபாரிகளின் சைக்கிள் ஹாரன்களும், பலூன் கீரல்களும் நாம் அன்றாடம் சந்திப்பவையே, கடினமான தொழில் செய்கின்றோமே என்று வெறுமனே வாழ்க்கையை நொந்துக் கொண்டே இருக்காமல், ஒரே ஒரு அற்புத நிமிடத்திற்காக வேண்டிக் கொண்டே சோம்பேறியாகவும் இல்லாமல், அதே சமயம் தங்கள் இருப்பையும், நம்பிக்கையையும் உலகிற்கு தெரியப் படுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது. முதன் முதலில் உங்கள் வீட்டில் ஒலித்த ரேடியாவின் கானம் தந்த ஈர்ப்பு இன்று லட்சம் பாடல்களை மெமரியில் வைக்கும் கேட்ஜட்டுகளில் கண்டிப்பாய் இராது தானே?? வைரமுத்து தன் வரிகளில் சொல்லும் “பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் என்ற வரிகளில் பாருங்கள் - எவ்வளவு எளிதாக ஒரு உளவியல் செய்தி இருக்கிறது? வெறும் அற்பமான சப்தம் நம் பசிக்கும் நேரத்தில் சங்கீதமாகும் ரசவாதம் என்று.

ஆனால் புதிய கரும்பலகையில் சாக்பீஸால் கீறும் கணித வாத்தியாரின் செயலைப் போல அருவருக்கச் செய்யும், வெறுக்க வைக்கும் சப்தங்களும் அன்றாட வாழ்வில் நிறைய இருக்கின்றன, மஞ்சள் விளக்கைக் கண்டு நிறுத்தக்-கோட்டோரம்(stop line) நம் இரு சக்கர வண்டியை நிறுத்தும் போது, நம் பின்னால் வந்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் எழுப்பும் சப்தமான ஒலி மிகவும் கண்டிக்கத் தக்கது. அது போல, பொது இடங்களில் கொரியன் மொபைல்களில் பெரும்பாலும் கானாப் பாடல்களை லவுட் ஸ்பீகரில் வைத்துக் கொண்டு செய்யும் வாலிப மந்திகளின் பேரிடர்கள் மிகக் கொடுமையானது. சில பெரிசுகளும் அதே போல MGR ரொமான்ஸ் ,ரவிச் சந்திரன் ரொமான்ஸ் பாடல்களைக் கேட்பதும் அதே அளவுக் கொடுமையானது. பக்தி என்ற பெயரில் போடும் காட்டுக் கூச்சல்களை வைத்து கன்னாபின்னாவென்று டெசிபல்கள் எகிறும் பிரார்த்தனைப் பாடல்கள் பல இடங்களில் (முக்கியமாக பொது இடங்களில்) ஒரு இடரே1 (இது சர்வ சமயத்திற்கும் பொருந்தும்).

*எங்கேயாவது கேட்கும் ஆம்புலன்ஸ் சைரனில் எல்லாம், ந்ம்மையும் அறியாது ஒரு நடுக்கமோ, பயமோ வந்துவிடுகிறது, அடுத்த விநாடி நம்மை எந்த பாதளாத்திற்கும் கொண்டு செல்லும் வலிமை மிக்கது என்று எண்ணும் அதே நேரம், காதில் கேட்டுக் கொண்டே இருக்கும் சைரன் ஒலியில் ஆம்புலன்ஸில் செல்லும் யாரோ ஒருவருக்கு பிரார்த்தனை என்ற மலர் எடுத்து வைக்க நம்மைப் பணிக்கும்.
* சினிமாவில் ஹீரோயிசத்தைக் கொண்டுவர உபயோகப் படுத்தும் “விஷ்”, “ஷ்க் என்கிற வாயுச் சப்தங்களும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றில் நவநகாரிகத் தம்மிள் பேசும் தொகுப்பாளார்களின் மொழியும் நான் அறவே வெறுக்கும் சப்தங்கள்.
*உலகம் அழியப் போகிறது, லாஸ்ட் சான்ஸ், கலிகாலம் போன்ற பயமுறுத்தி மதக் கேன்வாஸ் செய்யும் சப்தங்களுக்கு நான் செவியெடுப்பதில்லை. கரை படியாத கை, லட்சியம், அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, வாழ்க ஒழிக கோஷங்களைக் கேட்பதற்கு நான் காது கேளாதவனாகவே போகலாம்.


நமது கிராமத்தின் விடியல் அன்று எப்படியெல்லாம் இருந்தது? நீரின் சலசலப்பு, பறவைகளின் கூச்சல், மெல்லியக் காற்று எழுப்பும் புழுதி ஒலி,
காலையிலேயே வேலைக்கு செல்லும் சைக்கிள் பெல்கள், சிறிய தட்டிச் சுவர்களுக்குள் கேட்கும் குளியல் ஓசைகள், தெரு நாய்களின் கொட்டாவி அல்லது சுரம் குறைந்த குரைப்பு, பால் சுரந்து கொண்டிருக்கும் பசுமாட்டின்  “மா..சப்தம் , பால் காரனின் பாத்திர இழுவை சப்தம், பேருந்துகளில் - டி.எம்.எஸ் பக்திப் பாடல்கள், தேய்ந்துப் போன கிராமத்து கோயில்களின் சுப்ரபாதமும், தேவாலய மணியும், ஆல் இண்டியா ரேடியோவில் நேரம் அறிவிப்பு “ஆறு மணி, ஐந்து நிமிடம்என்று சொல்லியவுடன் ஒலிக்கும் நாகூர் ஹனீபாவின் “இறைவனிடம் கையேந்துங்கள்பாடலும் எல்லாமுமாய் சேர்ந்து ஒரு நாளை எப்படி இனிமையாகத் துவக்கியது அந்நாளில் என்று வியக்கிறேன். எத்தனை துயரங்களில் கிராமம் உறங்கச் சென்றாலும் அதற்கு ஒவ்வொரு விடியலும் உற்சாகமே.

முடிந்தால் ஒரு ஞாயிறு அதிகாலையிலேயே நகரத்தின் பார்வையில் இருந்து தொலைந்து ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று அல்லது ஒரு இயற்கையான சூழ்நிலையில் விடியலின் சப்தங்களைக் கேட்டு வருவோமா??

சென்னைக்கு மிக அருகில் வேடந்த்தாங்கல், புலிக்காட் ஏரி ஏன் வேளச்சேரியை அடுத்து இருக்கும் சதுப்பு வனக் காடுகளில் (இப்பொழுது குப்பைகளின் புகலிடமாகவும் இருக்கும்) வந்து செல்லும் பறவைகளிடம் எப்போதாவது விடியலின் செய்தியை கேட்டு அனுபவித்திருக்கிறீர்களா? 

பஜ்ஜி-சொஜ்ஜி
இன்னும் சுவையாக அடுத்த பாகத்தில்
ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக