செய்திகள்
இன்று
அனேகமாக இப்பொழுது மகாராணி ஆசைத் தம்பி அண்ணனிடம்
மறுபடியும் கடன் கேட்டுக் கொண்டிருப்பாள். BBC-இல்
ஒலிவியாவிடம் சில கேள்விகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கேட்க இருக்கின்றனர் – இது
நேரடி ஒலிபரப்பு ????
நேற்று
மான்செஸ்டர், உச்சி வெயில்
இருபது டிகிரியைத் தொட்டிருக்கும். நகரத் தெருக்களில் வாகனங்கள் இரைச்சலின்றி
சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தன, ஒலிவியா அலுவலகத்தில் தொடர் விடுமுறையில் எடுத்திருந்தாள். அவள் வசிப்பது நாற்பத்து
மூன்றாம் மாடியில் உள்ள ஒரு டூப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில், அதன் பெயர் பீத்தம்
அபார்ட்மென்ட்ஸ் . மான்செஸ்டரில் அது தான் மிக உயர்ந்த கட்டிடம். அந்த
கட்டிடத்தின் கீழேயே உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு அவள் அடிக்கடி போவது கிடையாது ஆனால்
இன்று வீட்டின் கதவை லாக் செய்யும் போதே அவள் அங்கு தான் போக வேண்டும் என்று
தீர்மானித்து இருந்தாள்.
ஹோட்டலுக்குள்
வந்தவுடனேயே சற்றும் தாமதியாமல் ஒரு ஹம்பென் பீர் ஆர்டர் பண்ணினாள், அவளுக்கு பீர்
சப்ளை செய்த நொடியே சற்றும் தாமதியாமல் அவள் அதை எடுத்துக் குடிக்கும் வேகத்திலேயே
அவள் வெறியும், கோபமும் இன்னும்
இரண்டு ஹம்பென் ஆர்டர் பண்ணிடத் தூண்டும் என்று தெரிந்தது. அவள் கண்களில் கோபம்
மிகுந்திருந்தது, கொஞ்சம் கொஞ்சமாய்
தலைக்கேறிய போதையால் அவள் ஸ்டீபனின் தாயைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் வசை
பாடிக் கொண்டிருந்தாள். ஒலிவியா வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவளுடைய டீம் லீடர்
தான் இந்த ஸ்டீபன், இவளது முன்னாள் காதலன். அவனைத் திட்டிக் கொண்டே ஒன்றரை லிட்டர்
பீரில் நனைந்திருந்த அவள் மனது, குடித்து முடித்த பின்பு தான் சற்று
ஆறுதலடைந்ததிருக்க வேண்டும். மங்கிய கன்களுடன் அருகில் இருந்த பார் கவுண்ட்டரில்
உள்ள கண்ணாடியில் தன் முகம் பார்த்துக் கொண்டாள். பீரில் நனைந்திருந்த சிவந்த உதடு
அவள் அழகை அதிகமாக்கியது
********
கண்ணாடியில்
தெரிந்த தன் முகத்தை பார்த்தவுடன், உடனேயே பாத்ரூமிற்கு சென்று ஒரு பிளாஸ்டிக்
கப்பில் தண்ணீர் மொண்டு கழுவினால், தன் மணிபர்ஸில் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு
ஒன்றை எடுத்து தன் நெற்றியில் ஒட்டிக் கொண்டாள். அவள் கைகளில் உடைந்திருந்த
கண்ணாடி வளையல் தனக்கு காயம் கொடுத்திருப்பதை அப்போழுது தான் உணர்ந்தாள்.
கலைந்துக் கிடந்த தன் உடைகளை சரி செய்துக் கொண்டே அந்த அறையில் இருந்து வெளியே
வந்தாள் மகாராணி .
பால்வாடியில்
படிக்கும் தன் பிள்ளைக்கு வாங்கவேண்டிய ஸ்கூல் பேக், ஃபைனான்சில் அடகு வைத்திருந்த ஒரு ஜோடித்
தோடுகளை மீட்பது அப்புறம் முக்கியமாய் தன் கணவரின் மேலாளர் எழுதிக் கொடுத்த தாளில்
இருக்கும் மாத்திரை என்று மனதிற்குள் பட்டியலிட்டுக் கொண்டே வந்தாள். கடிகாரம்
இரவு ஏழே முக்கால் என்றிருந்தது, வெளியே வந்தாள். வெளியே, அவளுக்காக
காத்துக் கொண்டிருந்த மகாராணியின் கணவன் தன் முகத்தில் செயற்கையாக ஒரு சோகத்தை
வரவழைத்துக் கொண்டான். மகாராணி அவனிடம் எதுவும் பேசவில்லை. அவனும் அவள் தன்னருகில்
வந்ததும் தான் கொண்டுவந்திருந்த இரவல் டி.வி.எஸ் சாம்ப் வண்டியில் ஒரு உதை
விட்டுக் கிளம்பலானான்.
*******
அலுவலகத்தில்
இருந்தபோது ஸ்டீபனோடு கொண்ட காதலில், தன் கணவரிடமிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு விவாகரத்து
வாங்கியவள் ஒலிவியா. அலுவலகத்திலும், வார விடுமுரை நாட்களிலும் இருவரும் ஒன்றாகவே
இருந்தனர். சில மாதங்கள் மட்டுமே நீடித்த உறவு ஸ்டீபனுக்கு புளித்துப் போய்விட, கொஞ்சம் கொஞ்சமாக
அவளைத் தவிர்த்து வந்தான். குடும்பத்தை விட்டு தன்னுடன் வருவதாக சத்தியம் செய்துக்
கொடுத்த ஸ்டீபன், மறுபடியும் அவனுடைய
குடும்பத்தில் தஞ்சம் அடைந்தது அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவள்
தொடர்ந்து வற்புறுத்தியும் கூட கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விலகினான்,
அலுவலகத்திலும் ஒலிவியாவின் மேல் அதிகாரியாக மட்டுமே நடந்துக் கொண்டான். கொஞ்ச
நாட்களில் தன்னிடம் வருவதை முழுவதுமாக நிறுத்திவிட, இரண்டு மாதம் பொறுத்துப் பார்த்த ஒலிவியா அவனைப்
பழி வாங்கிட துடித்துக் கொண்டிருந்தாள்.
ஸ்டீபனின்
குடும்பம் தங்கியிருப்பது சால்ஃபோர்டில், அது மான்செஸ்டருக்கு வெளியே உள்ள ஒரு புறநகர்.
அழுக்கு நதியான இர்வெல்லை ஒட்டிய ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அவன்
குடும்பத்துடன் தங்கியிருக்கும் ஃப்ளாட்டைக் கண்டுபிடிப்பதற்கு ஒலிவியா அதிக
சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை. ஸ்டீபன் தன் மனைவி மற்றும் ஒரே மகனுடன் வசிப்பதை
அறிந்த ஒலிவியா அவர்களை எப்படிப் பழி வாங்கலாம் என்று பல நாட்களாய் யோசித்து
வைத்து இன்று அதை செயல்படுத்த நேரம் வந்து விட்டதை உணர்ந்தாள்.
********
இருவரும்
ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்க,“இதோ வருகிறேன் என்று அவளை
அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் கையில் மகாராணி அன்று
ஈட்டிய பணம் இருந்தது. அவன் மேலாளர் எழுதிக் கொடுத்த மாத்திரைச் சீட்டை ஒரு
மெடிக்கலில் சென்று நீட்ட, அவனை சந்தேகக் கண்களில் பார்த்தவாறே அந்த மாத்திரைக்கு
கூடுதல் விலையுடன் அவன் கையில் நீட்டினான் அந்த மெடிக்கல் ஓனர். பஸ்ஸ்டாண்டிற்கு திரும்பும்
வழியில் அருகில் உள்ள ஒரு செல்போன் கடையில் அவன் உள்ளே நுழைந்தான். செல்போன் மீது
கொண்ட அளப்பறிய மோகத்தில் அவனிடம் அவள் கொடுத்து வைத்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயில்
இரண்டாயிரத்து இருநூறு மதிப்புள்ள கேமிரா போனை வாங்கியபடி அவளிடம் செல்ல, அதைக் கண்ட
அவளுக்கு அந்த செல்போனிற்காகத் தான் அவளை அங்கு அனுப்பினானோ என்று நினைத்து பேச்சடைத்து
நின்றாள், தலை சுற்றியது.
திடீரென்று கோயில்களில் பூஜையில் வரும் சாமி ஆட்டம் போல் தன்னை மறந்தபடி தன்
கணவனை வசை பாட ஆரம்பித்தாள். அவன் குடும்பத்தில் யாரையும் விட்டு வைக்கவில்லை தன்
கணவனின் தாய், தந்தை தன்னுடைய
தந்தை என எல்லோர் பிறப்பையும் விமர்சித்தாள், அருகிலுள்ள கடையிலிருப்போர் அனைவரும்
அவர்களைத்தான் கவனித்துக் கொண்டிருந்தனர். மெல்லத் அடங்கிய அவள் கோபம் கண்ணீராக
மாறியது,
அப்பொழுது தான் தன்னை எத்தனை பேர் பார்க்கிறார்கள் ?, தன் ஊர்க் காரர்கள்
யாராவது இருக்கிறார்களா?, கோபத்தில் இன்று நடந்ததையும் உளறிவிட்டோமே? என்று எண்ணி நெளிந்துக்
கொண்டிருந்தாள். மறுபடியும் அவளை சமதானப் படுத்த அவண் கணவன் அவள் அருகில் வந்தான்.
இருவரும்
பேருந்திலேறி அமர்ந்தனர், பேருந்து அவர்களை
சுமந்துக் கொண்டு மெதுவாக நகர்ந்தது. கலெக்டர் ஆபிஸ் தாண்டும் வரை இருவரும்
பேசவில்லை, அவள் கணவன் தான்
மெதுவாக அவளை சமாதானம் செய்ய முயன்றான், “ஏய்! இந்தெ..
இப்படியே எவ்ளோ நேரந்தே இருப்பே, இந்த
வருசமில்லாட்டி என்ன அடுத்த வருசம் போவட்டும், ஜெகதாபில இருக்குற
தோட்டத்துல கல்லு நட்டிருக்காங்கள்ள, அத நாங்க தான்
பட்டா போட்டு பிரிக்க போறொம், தலைவர்கிட்ட
இருந்து எப்படியாவது எதாவது ஒரு
மனையாவது தேத்திடலாம்னு ரோசனை. அப்புறம் பாரு நம்ம புள்ளைய அந்த பாரதி ஸ்கூல்லயே
சேத்திடுவோம். என்ன சொல்லுற கண்ணு?? எதுக்கும் நம்ம
வெள்ளியனையில எறங்கி நம்ப ராசுக்கு அதிரசம், முறுக்கு
வாங்குவோம் ன ?” என்று ஒருவழியாக தன் மனைவியை சமாதானப்
படுத்தினான். அப்பொழுது அவன் கண்களில் அதிரசக் கடைக்கு அருகிலிருந்த டாஸ்மாக் மின்னியது.
**********
ஸ்டீபனை அன்று
எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்று ஒலிவியா தீர்மானித்திருந்தாள். மறுபடியும்
தனது அறைக்கு சென்று தாளிட்டு அங்கிருந்த கவுச்சில் அமர்ந்து ஸ்டீபனை எப்படி பழி
வாங்குவது என்று போட்டு வைத்த திட்டங்களைப் பார்த்துக் கொண்டாள். தன்னுடைய டைரியை
எடுத்து சில வட்டம் வட்டமாக வரைந்தாள் அதனுள் எதோ எழுதினாள். பார்ப்பதற்கு ஃப்லோ
சார்ட் போல் இருந்தது, தன் அலுவலகத்தில்
எந்த ஒரு பணியைத் தொடங்கும் முன்னர் எல்லோரும் ஃப்லோசார்ட் வரைந்து வைக்க வேண்டும்
என்பது ஸ்டீபன் விதித்த விதி. இப்பொழுது அவனை எப்படி பழி வாங்குவது என்று இருந்தது
அதை அவள் வரைந்து வைத்து ஒரு வாரம் ஆகியிருக்கும், அதன் பிரதான வட்டங்களில் இருந்த செயல்கள் :
*ஒன்று
அவனைக் கொலை செய்யவண்டும்
*இரண்டு அவனை
அவன் குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும்.
அவனைக்
கொல்ல வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கும் போதே, இதற்கென்று
அசாசின் வைக்கும் அளவிற்கு இவளிடம் பணம் இல்லை, தன் வெறி தீர வேண்டும் என்றால்
எக்சிக்யூசனும் தன்னாலே ஆக வேண்டும், ஆகவே ”அவன் நிம்மதியைக் கெடுக்க என்ன செய்யலாம் ? அவன் குடும்பத்தை
எதாவது செய்ய வேண்டும்” என்று அவளுக்குத் அந்த
ஃப்லோ சார்ட் சொல்லியது.
இதற்காக போலிசில் சிக்கிக் கொண்டாலும் கவலையில்லை என்று தீர்மானித்திருந்தாள்.
தனது லேப்டாப்பில் கூகிளித்த போது valley arms என்ற வெப்சைட்டில்
கிடைக்கும் துப்பக்கி ரகங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் கிடைத்தவை
எல்லாம் வேட்டையாடுபவர்களுக்கு உதவுவதாகவே இருந்தது. தேடல் இருந்தால் எதுவும்
சாத்தியம் தான், ஆனால் இங்கிலாந்தில் இப்போழுது சட்டம் மிகக் கடுமையாக இருக்கிறது,
இருந்தும் எப்படி அவளால் அந்த மாதிரியான மனிதர்களை எல்லாம் சந்தித்து அந்த துப்பக்கியை
வாங்க முடிந்தது ??
*********
"அந்த துப்பாக்கி எவ்வளவு"
"இருபது ரூபா"
"சரி அதையும் கொடு !! இதுல எங்க தண்ணி ஊத்தோனும்"
"மேல இருக்குற மூடிய தொறந்து தான்"
"சரி! பத்து ரூபாய்க்கு வராதா ??"
"வராது"
"சரி எனக்கு ரெண்டு அதிரசப் பாக்கெட் வேணாம்!! இத வச்சுக்கிட்டு .. அந்த
துப்பாக்கி ஒன்னு கொடு"
"ஏக்கா ! வாங்கினத திருப்பி கொடுக்குற , பதினஞ்சு கொடு போதும் ஒனக்காக
வாங்கிக்கிறேன்"
"அஞ்சு ரூபாவும் இல்லையே! கரெக்டா பஸ்சுக்கு தான் இருக்குது. இருப்பா , ஊட்டுக்காரர்
கிட்ட கேக்குறேன்"
தன் ஊருக்கு
போகும் வழியில் வரும் சிற்றூரான வெள்ளியனையில் தன் மகனுக்கு
அதிரசம் வாங்கலாம் என்று தன் மனைவியுடன் அவ்வூரில் இறங்கிய ஒரு இரண்டு பாக்கெட்
அதிரசம் வாங்க மகாராணியின் கையில் காசைக் கொடுத்துவிட்டு ரியல் எஸ்டேட் பார்டியைப்
பார்க்கப் போகிறேன் என்று அங்கிருந்து டாஸ்மாக் கடைக்குள் நேராக சென்றிருந்தான்.
தள்ளாடிய
படி நடந்து வந்த தன் கணவனின் நிலைமையைப் புரிந்து கொண்ட மகராணி, கண்களில்
தேங்கியக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அந்த பொம்மைத் துப்பாக்கி வேண்டாம் என்று
அங்கிருந்து நகர்ந்தாள். திடீரென்று அங்கிருந்து நகர்ந்ததைக் கண்டு மகாராணியை
அழைத்து பத்து ரூபாய்க்கே தருகிறேன் என்று அந்தக் கடைக்காரன் உரக்க கத்தியும்
காதில் வாங்கிக் கொள்ளாமல் மகராணி அங்கிருந்து நகர்ந்தாள். நடுத் தெருவில் தன்
கணவன் மீது கோபம் கொள்ள முடியாததால், கண்களில் வழியும் கண்ணீரையும் அடக்க
முடியவில்லை. அந்தப் பக்கமாக போன டிராக்டர் ஒன்றைப் பார்த்து, "அண்ணே! என்னை
அப்படியே செகதாபில வுட்டுட்டு போங்கண்ணே"என்று கேட்டாள். டிராக்டர் ட்ரைவரும்
தலையை சொறிந்தவாறே சம்மதித்தார்.
போதையில்
தள்ளாடிய அவள் கணவனின் முகம் பார்க்கப் பிடிக்காமல் அவள் மட்டும் டிராக்டரில் ஏறி
அமர்ந்துக் கொண்டாள். தன்னை விட்டுச் செல்லும் மகராணியை அவள் கணவன் தன் வாய்க்கு
வந்தபடி திட்ட ஆரம்பித்தான், கரூர் பஸ்ஸ்டாண்டில் அவள் மனைவி
கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரமாரியாக பதில் தொடுத்துக் கொண்டிருந்தான்,
அவர்களுக்குள் மட்டும் அந்தரங்கமாய் மறைந்திருக்கும் என்று தீர்மானித்த விசயம் ஒரே
நாளில் காற்றில் பறந்தது.
******
அவள் முடிவு
செய்து வாங்கத் தீர்மானித்து பின்னர் மிகுந்த சிரமப் பட்டு வாங்கியது, டாரஸ்(taurus)9 mm பிஸ்டல் என்ற
ரகம். குண்டு உடலைத் துளைத்தால் அடுத்தப் பக்கம் வெளியே வரும். இங்கிலாந்தில் 2006க்குப் அவ்வளவு
எளிதாக யாரும் இல்லீகல் வெப்பன்ஸ் வாங்கிட முடியாது என்று அவளுக்குத் தெரியும்.
அதுவும் அவ்வூரில் ஆசியர்கள் அதிகமாகக் குடியேறிய பின்னர் கெடுபிடிகள்
அதிகமாகிவிட்டது. இன்டெர்னெட் உதவியில் அதற்கும் ஒரு வழியை எளிதாகக் கண்டுபிடித்து
விட்டாள். ஒரு அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவன் ப்ளாக் மார்கெட்டில்
விற்கிறான் என்று அறிந்தாள். உலகில் எந்த ஒரு மூலையில் வசிக்கும் மனிதனையும்
சந்திப்பதற்கு ஒருவனுக்கு அதிகப்பட்சம் ஆறு நபர்கள் போதும் என்று ஒரு தியரி
இருக்கிறது. நேற்றைக்கு, ஒலிவியாவிற்கு
இரண்டு நபர்களே தேவைப்பட்டனர் அவனை சந்திப்பதற்கு ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி என
இரு இடைத் தரகர்கள் மூலம் நேராக அந்த அமெரிக்கனைப் பிடித்து விட்டாள் . அருகிலிருந்து
சுடுவதற்கு இந்த 9 mm பிஸ்டல் போதுமானது
என்று அவனிடம் கேட்டு அறிந்தாள். “Can you trigger the target?” என்று அவன்
கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே வெளியேறினாள்.
கண்ணாடி
முன் நின்று முகம் கழுவி நிமிர்ந்தாள், குடித்திருந்த போதை கொஞ்சம் கூட தெளியவில்லை.
அவளும் அந்த போதை தெளிந்திட விரும்பவில்லை. லோட் செய்யப்பட்ட பிஸ்டலை
சரிப்பார்த்துக் கொண்டு தன் கருப்பு
நிறக் கோர்ட்டில் வைத்தாள். வீட்டைப் பூட்டி விட்டு, ஒரு டாக்சியைப் பிடித்து ஸ்டீபனின் மகன் ஹென்றி
படிக்கும் பள்ளிக்கு விரைந்துக் கொண்டிருந்தாள். இன்னும் சில நிமிடங்களில் அவள்
சால்ஃபோர்டை அடைந்து விடுவாள். தன் பிஸ்டலில் அவ்வப்பொழுது தன் கை வைத்து பிஸ்டல் இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொண்டாள். டாக்சியும் வந்து சேர்ந்தது....
*******
மெதுவாக வண்டியிலிருந்து
இறங்கிய பின் ட்ரைவருக்கு நன்றி தெரிவித்து அவருக்கு கை காட்ட, அங்கிருந்து
ட்ராக்டர் மெதுவாக நகர்ந்தது. அவள் இறங்கிய உடனேயே அவளுக்காக காத்திருந்தது போல்
அவள் தலையில் இடி ஒன்று விழுந்தது, அந்த இடியை பெட்டிக் கடை கிழவன் தான் சொன்னான்.
தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அவள் வீட்டை நோக்கி ஓடினாள். அவள் வீடு
இருக்கும் தெருவுக்குள் நுழையும் பொழுது, அவள் மகன் ராசுவைத் தூக்கிக் கொண்டு இரண்டு
மூன்று பேர் பேருந்து நிறுத்தத்திற்கு ஓடிக் கொண்டிருந்தனர் தெருவிலுள்ள மரத்தில்
ஏறி விளையாடிக் கொண்டிருந்த ராசு கீழே விழுந்து, தலையில்
ஒரு சிறு பிளவு வழியாக ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
மாலை ஆறு மணியை நெருங்கியிருக்கும் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பலர் தூக்கிக்
கொண்டு வரும் ராசுவைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து வெளி வர முடியாமல் கல்லாய்
நின்றுக் கொண்டிருந்த்தாள். பக்கத்து வீட்டு ஆசைத் தம்பியண்ணன் தான் அந்த நிலைமையை
சமாளித்துக் கொண்டிருந்தார். அடுத்த பேருந்து ஏழரைக்கு தான் என்பதால்
வெள்ளியனையிலிருந்து டேக்ஸி கிடைக்குமா என்று போனில் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அது முகூர்த்த சமயம் என்பதால் அங்கு ஒரு டேக்சி கூட கிடைக்கவில்லை.
பக்கத்திலிருக்கும் எல்.ஜீ.பி தொழிற்சாலையில் சில தொழிலாளர்கள் நம்பரை அழைத்து
உதவியைக் கேட்க, அந்த நிறுவன
மேனஜரின் காரை எடுத்துக் கொண்டு வருவதாய் தகவல் சொல்லிவிட்டார்கள். அன்று மாலை
அவள் கையிலிருந்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் கரைந்து போன விதத்தை எண்ணி கண்ணீர்
வீட்டுக் கொண்டு இருந்தாள். வலி தாங்க முடியாமல் அழுதுத் தீர்த்த ராசு கொஞ்சம்
கொஞ்சமாக சோர்ந்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து மரத்திலேறி விளையாண்ட சிறுவர்களின்
கன்னங்கள் வீங்கியிருந்தன. மொத்த ஊரும் எல்.ஜீ.பியிலிருந்து வரும் வாகனத்திற்காக
காத்துக் கொண்டிருந்தது. மகாராணியின் கணவன் பற்றிக் கேட்டவற்கு அவள் பதிலேதும்
சொல்லாமல் அவன் குடித்துக் கொண்டு எங்கேயாவது இருப்பான் என்று புரிய வைத்தாள்.
மாலை ஐந்து மணிக்கெல்லாம் பூட்டிவிடும் ஆரம்பநிலை அரசு சுகாதார நிலையத்தை
நம்பாத அவ்வூர் மக்கள் நம்பி வந்த ஒரு தனியார் மருத்துவரும் அரசாங்க வேலை
கிடைத்ததால் ஏழரைக்கு பின் தான் வருவார். அதுவும் இப்போது அவர் கட்டு போடும்
சிகிச்சையெல்லாம் அனுமதிப்பதில்லை என்பதால் கரூர் செல்வதைத் தவிர வேறு வழியில்லை,
அவசர சிகிச்சை தேவைப்படும் அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் இதே கதி தான். கார்
ஒன்று வேகமாக வரும் சப்தம் கேட்டது.
*****************
மெதுவாக காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அந்த பள்ளியை நோட்டமிட்டுக்
கொண்டிருந்தாள், கேனான் வில்லியம்சன்
மான்செஸ்டர் நகரில் மிகப் பிரபலமான பள்ளி அது அன்று புதன் மதியம் என்பதால் அந்தப்
பள்ளியில் எல்லோரும் எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்ட்விடியில் இருப்பார்கள். அடுத்த
நாள் செல்வது தான் புத்திசாலித் தனம் என்று தீர்மானித்தாள். இப்படித் தள்ளிப்
போடுவதால் தன் வெறி குறைந்துவிடுமா என்றும் யோசித்தாள், அவள் கொலை செய்வது
பற்றி வாசித்த ”கில்லிங் வில்லிங்” என்ற ப்ளாகில்
இருந்த டிப்ஸ்களும் அப்படித் தான் சொல்லியிருந்தது. மேலும் அதில் “ஒருவரைப் பழி
வாங்கும் நேரத்தில் உங்களுக்கு திடீரென்று கருணை ஏற்பட்டால் ஒன்று செய்யுங்கள். ஒரு
கணம் அவரோடு அன்புடன் பேசி தன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்லி ஒரு
சந்தர்ப்பம் கொடுங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் அன்பு எவ்வளவு பலவீனமானது என்று” என்று
சொல்லியிருந்ததை நினைத்துப் பார்த்தாள். ஸ்டீபனின் நம்பரை அழைத்துப் பார்க்க
முடிவெடுத்தாள்.
மூன்று முறை துண்டித்த அவன், அவளுக்கு வாய்ஸ் மெசேஜில் அவள் தாயைப் பற்றியும்
அவளைப் பற்றியும் தரக் குறைவாய் திட்டி அனுப்பியிருந்தான். வாய்ஸ் மெயிலில் அவன்
தன்னை திட்டும் போது, அவள் அந்த வலைதளத்தை எழுதியவனை நினைத்துப் பார்த்தாள்.
முதலில் வீட்டில் வைத்திருக்கும் ஃப்ராயிட், நியீட்சே, தாவோ போன்றோரின்
புத்தகங்களை கிழித்து எறிய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள்
என்று தாமதிப்பது தவறு, இன்றே ஸ்டீபன் பழி தீர்க்கப் படவேண்டும் என்று நினைத்துக்
கொண்டே புன்னகைத்தாள். அவள் கவர்ச்சியான உடலில் கொலை நாற்றம் வீசத் தொடங்கியது. எப்படியும்
இன்னும் சில நாட்கள் மான்செஸ்டர் முழுதும் தன்னைப் பற்றி தான் பேசுவார்கள்,
ஒருவேளை நாளை உலகம் முழுக்க தன்னைப் பற்றி செய்தி வரலாம் என்று கற்பனை செய்துக்
கொண்டிருந்தாள். கையில் வைத்திருக்கும் பிஸ்டலை தடவிக் கொண்டிருக்க அவளுக்கு வெறி
ஏறிக் கொண்டிருந்தது.
********
கரூர் அரசு மருத்துவமனை - மிகவும்
பரபரப்புடன் நோயாளிகளும், மிகவும் நிதானத்துடன் மருத்துவர்களும் அங்கே இருந்தனர்.
வெளியில் இருக்கும் சோடியம் விளக்கைத் தவிர நல்ல வெளிச்சம் தரும் எந்த விளக்கும்
அந்த மருத்துவமனை வளாகத்தில் இல்லை. அவசர மற்றும் விபத்துப் பிரிவின் வாயிலில்
சுவற்றில் ஒட்டியிருக்கும் வெற்றிலைக் கறை போலே, சுவற்றில் ஒட்டுக் கொண்டு செய்திட
ஏதுமற்றுக் கிடந்தாள்.அவளிடம் இருந்த சக்தி அத்தனையும் மருத்துவமனைக்கு வருமுன்னரே
கண்ணீரோடு போய் விட்டது, குடியை நிறுத்திவிடுவதாக நித்தமும் சத்தியம் செய்யும்
அவள் கணவன், வெள்ளியணை ஊர்க் கிழக்கில் போதையுடன் சாலையோரமாக மல்லாந்து கிடந்ததைப்
பார்த்த பின்னர்,அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற யோசிக்கும் திறனை எல்லாம் இழந்திருந்தாள்.
அரசு மருத்துவமனையில் மருத்துவச் செலவு என்று எந்த செலவுகளும் இல்லை தான், ஆனாலும்
கையில் பத்து ரூபாய் கூட இல்லாத நிலை
மகாராணிக்கு, ராசுவின் நிலையோ பரிதாபமாய் இருந்தது. அவனுக்கு வேண்டிய AB-ve இரத்தம் அவன் குடிகாரத்
தந்தையிடம் இருந்தும் பெற முடியாது அரசு மருத்துவமனையிலும் இல்லை, இரத்த வங்கி
மூலம் அவ்வூர் கல்லூரியான கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இருந்து ஒரு மாணவி
ஒருத்தி தொடர்ந்து இரத்தம் தானம் தருவதாகவும், அதற்கு அதைப் பெற்றுத் தரும் இரத்த
வங்கி நிறுவனத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த
மருத்துவமனை வார்டன் சொல்ல, ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு அவள் கணவனின்
அலுவலகத்திற்கு சென்றாள்.
**********************************************************************
அழுதுக் கொண்டே வந்த மகாராணியின் பாதத்திற்கு அன்று பகலிலே முத்தம்
கொடுத்தவன், பணம் கேட்டு நிற்கும் அவளை ஆபாசமாக திட்ட ஆரம்பித்தான்.
தன்னைத் திட்டுவதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை. அவன் காலில் விழுந்தாள்.
தன் காலில் விழுந்த அவளைப் பற்றித் தூக்கினான், அழுகையிலும், வியர்வையிலும் அவள்
அழகாகவே அவனுக்குத் தெரிந்தாள். அவளால் அவனைத் தடுக்க முடியவில்லை, அழுதுக்
கொண்டிருக்கும் அவளைப் பொருட்படுத்தவும் இல்லை.
முதலில் ஸ்கூல் கேட்டைத் தாண்டுவது தான் ஒலிவியாவிற்கு பெரும் சிரமம். ஆனாலும்
கையில் இருக்கும் பிஸ்டல் ஒலிவியாவிற்கு ஒரு தைரியத்தைக் கொடுத்தது. தன்னைத்
தடுத்து நிறுத்திய செக்யூரிடியிடம் தன்
பிஸ்டலைக் காட்டி தன் கைகளை உயர்த்திப்
பிடித்தாள். அதிர்ச்சியுடன் அவளை உள்ளே விட்டான், அதே சமயம் அவன் செய்த எச்சரிக்கையை
அவள் சிறிதளவும் பொருட்படுத்தவில்லை.
உடையை சரிசெய்துக் கொண்டே மீண்டும் ஆட்டோவில் அமர, ஆட்டோ மருத்துவமனை
விரைந்தது. மருத்ததுவமனைக்கு அருகில் செல்லும் போது அவசரம் பொறுக்க முடியாது
ஆட்டொவை ஒரு ஓரமாக நிறுத்திய ஆட்டோ டிரைவர், அங்கு அருகில் நின்றிருந்த ஒரு
லாரிக்கு பின் சென்று மருத்துவமனை பின்வளாகச் சுவற்றில் சிறுநீர் கழித்துக்
கொண்டிருந்தான்.
யாரோடும் சண்டையிட தெம்பில்லாத மகாராணியின் கண்களில் அந்த சிறிய பெட்டிக் கடை
தென்பட்டது.
அந்தக் கடையில் சிறிய சைஸ் பொம்மைத் தண்ணீர் துப்பாக்கிகள் தொங்கப்
பட்டிருந்தன. ஆட்டோவிலிருந்து கீழிறங்கி, அந்தக் கடைக்கு சென்று அதன் விலையைக்
கேட்டாள். “முப்பது ரூவா” என்று உரத்த தொனியில் அந்தக் கடைக்காரன்
சொல்லும் பொழுதே, அவளுக்கு புரிந்தது அவனிடம் விலையைக் குறைத்துக் கேட்பதைக் கூட
அவன் அனுமதிக்கவில்லை என்று, ஆசைத்தம்பி அண்ணனிடம் அப்பொழுது கடன் வாங்கிய சில
நூறுகள் எவ்வளவு என்று கூட எண்ணிப் பார்க்கவில்லை, அதிலிருந்து ஒரு நோட்டை எடுத்து
நீட்டினாள். ஆட்டோ மருத்துவமனை உள்ளே நுழைந்து, அந்த தண்னீர் துப்பாக்கியை கையில்
வைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள், "அவள் மனதில் ராசுவுக்கு இந்நேரம் இரத்தம்
கொடுத்திருப்பார்களா? இப்போதாவது அவள் கணவன் அங்கு வந்திருப்பானா ?" என்று
அடித்துக் கொண்டிருந்தது.
*************************************************************************
ஸ்டீபனின் மகன் ஃபோர்த் ஃபார்ம் படிக்கிறான்
என்று அவளுக்கு தெரிந்திருந்தது, அவள் கொல்லத் துடிக்கும் ஸ்டீபனின் மகனுடைய முகத்தை
போட்டோவில் குறைந்தது ஆயிரம் முறையாவது பார்த்திருப்பாள். அவன் தற்பொழுது பேஸ்கட்
பால் கோர்ட்டில் இருக்கிறான் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டாள். கையில்
பிஸ்டலுடன் ஸ்கூலுக்குள் ஒரு பெண் நுழைந்துவிட்டாள் என்று செக்யூரிட்டி கொடுத்த
தகவலில், பள்ளியின் பிரின்ஸ் பால் போலீஸில் தகவல் சொல்லிவிட்டார்.
செக்யூரிட்டியின் விசில் சப்தம் அந்தப் பள்ளியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது,
சற்றைக்கெல்லாம் தெரு முனையில் போலீஸ் சைரனும் கேட்க ஆரம்பித்து விட்டது.
சைரனை ஒலிவியாவும் கேட்டுவிட்டாள், ஆகவே அவள் உடனடியாக வேலையை முடித்து விட வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள், போதையும்-வெறியும்
அவளை மைதானத்தின் உள்ளே வேகமாக நுழைய வைத்தது. கையில் துப்பாக்கியுடன் ஒரு பெண் கோபமாய் பள்ளிக்குள் வருவதைப் பார்க்கும் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுஅப்பொழுது பள்ளியின் உள்நுழைந்த போலீஸ்,
துப்பாக்கியுடன் ஒரு பெண் நுழைந்தும் அவள் எங்கே போய் இருக்கிறாள் என்று
குழம்பியது, சிலர் வகுப்பறைக்குள் என்றும், ப்ரின்ஸ்பால் அறை என்றும், க்ரவுண்டில்
போய்க் கொண்டிருக்கிறாள் என்றும் சொல்ல, வந்திருந்த போலீசார்கள் பிரிந்து
நாலாபுறமும் அவளைத் தேட ஆரம்பித்தனர். இப்பொழுது ப்ரஸ் வேன் சப்தமும் கேட்க
ஆரம்பித்தது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர், சர்வெய்லன்ஸ் சாப்பர் (ஹெலிகாப்டர்) ஒன்றை
கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குள் அந்தப் பெண் பேஸ்கட்பால் கோர்ட்டில் நுழைகிறாள்
என்று தகவல் உறுதி செய்யப்பட மொத்த போலீஸ் டீமும் உள்ளே நுழைந்தது. பேஸ்கட் பால்
கோர்ட்டில் சிவப்பு நிற ஜெர்ஸியில் ஸ்ட்டிபனின் மகன் ஹென்றி துள்ளி விளையாடிக்
கொண்டிருந்தான். அவளைக் குறிவைக்க பிஸ்டலை உயர்த்திக் கொண்டே அவளும் அந்த
கோர்ட்டில் குதிக்க, இவள் வருவதைப் பார்க்காமல் அந்த சிறுவர்கள் விளையாட்டில்
ஆர்வமாய் இருந்தனர்.
*******************************************************************************
அவள் பிஸ்டலை அழுத்தும் நேரமும், ஹென்றி கூடையில் பந்தை
போடுவதற்காக எழும்பிக் குதித்த நேரமும், அதைத் தடுத்திட இந்த இருவர்களுக்கு
மத்தியில் நீல நிற ஜெர்ஸி அணிந்த ஹாரியும் எழும்பியது யாரும் எதிர்பாராதது.
பிஸ்டல் கக்கிய குண்டு குறுக்கே குதித்த ஹாரியின் தலையில் பட்டு அவனை சில அடிகள்
தூக்கி எறிந்தது, துள்ளி விழுந்த ஹாரி தன் தாய் தான் தன்னை சுடுகிறாள் என்றறிந்தும்
அந்த அதிர்ச்சியைக் கூட முழுதும் உணர முடியாது அதற்குள் மடிந்து போனான்.
அடுத்த முறை சுட முடியாமல்
சிலையாய் நின்ற அவள், ஹாரியை இங்கே எதிர்பார்க்கவில்லை, விவாகரத்து ஆன பின்பு
ஹாரியின் படிப்பைப் பற்றியோ அவன் பள்ளியைப் பற்றியோ அவள் தெரிந்து கொள்ளவில்லை,
அவன் ஹென்றியின் வகுப்பு மாணவன் என்று தெரியாது. ஹாரியை நெருங்க முயற்சிக்கும்
முன்பே அவள் தலையில் ஒரு அடி விழவும் அவள் மூர்ச்சை அடையவும் சரியாக இருந்தது.
அடுத்த நாள் ஒரு தினசரி நாழிதளில், ஒரு திரில்லர் படம் போல்
வர்ணிக்கப்பட்டு ஒரு கவர் ஸ்டோரியில் சில கலர் படங்களுடன் மான்செஸ்டர் சம்பவமும்,
அந்த கொலைக்கான பின்னனியை ஒரு தனிக் கட்டத்தில் அச்சிட்டிருக்க, அதன் கீழே கரூரில்
நடந்த ஒரு சிறிய விபத்தாக ஒரு சிறுவனின் மரணமும் வந்திருந்தது.
ஆனால் ராசுதான் இறந்தான் என்பதும், அவன் சாவிற்கு காரணம்
என்ன என்பது எனக்கும், உங்களுக்கும், இந்த சமூகத்திற்கும் தேவையில்லாதது என்று
ஊடகங்கள் தீர்மானித்துவிட்டன
அனேகமாக இப்பொழுது மகாராணி தன் மகனின் இறுதிச் சடங்கிற்கு
ஆசைத் தம்பி அண்ணனிடம் மறுபடியும் கடன் கேட்டுக் கொண்டிருப்பாள். BBC-இல்
ஒலிவியாவிடம் சில கேள்விகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கேட்க இருக்கின்றனர் – இது
நேரடி ஒலிபரப்பு ????