முத்தனின் வருகை
பச்சைப் பட்டாடை உடுத்தும் வயல்வெளிகள் இல்லாதிருந்தாலும், கிணற்று நீர்,கண்மாய் பாசனத்தின் மூலம் உழவு செய்யும் அச்சிற்றூரின் பூர்விகக் குடிகள், உழைப்பதற்கு என்றும் அஞ்சாதோர்.அவர்கள் வீடு கிராமத்தில் இருந்தாலும், தங்கள் வயலிலும் ஒரு குடில் அமைத்து அதில் வசிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். தங்கள் வாழ்க்கையில் அவர்கள் குழுவாகவே எந்த ஒரு நிகழ்விலும், அதாவது வயலில் நாற்று நடவது,அறுவடை, சந்தைக்கு கொண்டு செல்லுதல்,விழாக்கள் என கூட்டாக சேர்ந்து வாழும் பழக்கம் மிகுந்தவர்கள்.இன்றளவும் திண்டுக்கல் மாவட்டம் பகுதியில் வசிக்கும் சோழிய வெள்ளாளர்களை கூறலாம், அவர்கள் வாழும் குலமான 'மூன்று ஊர் எண்பத்து நான்கு மந்தை' என்று ஒரு கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருகின்றனர், இதே சாதியில் பிறந்தாலும் இந்த மூன்று ஊரை அடிப்படையாய்க் கொண்ட ஏதாவது ஒரு குடும்பத்தை தவிர வேறு ஒருவருடன் திருமண பந்தம் ஏற்படுத்த மாட்டார்கள்.
கிழக்கு வெளுக்கும் அந்த வேளையில், மங்கிய வெளிச்சத்தில், ஒரு கிழவி தன் சிறிய வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்தாள்,அவ்வழியே புதிதாக கட்டப் பட்டு வரும் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த கோதை அக்கிழவியை பார்த்துக் கொண்டே,வரப்பு மீது நடந்து வந்தாள்.அப்பொழுது அவள் கண்ட காட்சியை அவளை என்னமோ செய்தது.
அக்கிழவி தன் வயலில் நாற்று நடும் போது பக்கத்திலே ஒரு சர்ப்பம் ஒன்று தலை நிமிர்ந்து அவளை பார்த்தபடி இருக்க, அந்நாகத்திடம் தன் சொந்த கதையை பாடிக் கொன்டிருந்தாள்.
வீரம் வெளைஞ்ச மண்ணு -எவ்
வீச்சருவா சாமி நின்னு,
வில்லுக் கொடி காப்பதற்கு
வின்னுலுகம் தேடி கொண்டு
பாசம் நெறஞ்ச மண்ணு
பாண்டியன் புடிச்ச மண்ணு
நீர்நாட்டு கொடிக்காகத்தான்
நிலத்துல சாஞ்சதடி,
எம் மகன் மூச்சும் ஒஞ்சதடி.
எம்புருசன் , பெத்த மவன்
நாட்டுக்காக போரிடத்தான்;
நாசமான காலன் வந்து
என்னை நட்டாத்தில் சிக்க விட்டான்
நடவு செய்ய யாரும் இல்ல,
இந்த நாகம் தானே எம்புள்ள .....
என்று பாடிக் கொண்டிருக்க அவள் கதையை கேட்பது போல் தலையாட்டிக் கொண்டிருந்தது.
வரப்பில் வந்துக் கொண்டிருந்த கோதை சர்பத்தினைக் கண்டதால் மூர்ச்சை அடைந்தாள்.அதைப் பார்த்த அக்கிழவி வேகமாக வரப்பின் மீது ஏறி அங்கு மயங்கிய நிலையில் இருந்த கோதையை தூக்கினாள்.கிட்டத்தட்ட ௮௦ வயது இருக்கும் அக்கிழவி கோதையை மிகவும் எளிதாக தூக்கிக் கொண்டு வரப்பிலே நடந்தாள். தன் தோளினில் தொங்கிக் கொண்டிருக்கும் கோதையை எண்ணி ,"ஒரு செண்பகப்பூ மாலையை தோளில் போட்டது போல் இருக்கிறதே, இந்த பருவக்கொடியை சூடப் போகும் வஞ்சி வீரன் யாரோ??"என்று அக்கிழவி தனக்குள்ளே சொல்லிக்கொண்டு அருகில் இருந்த ஒரு வேப்பமரத்து நிழலில் அவளைக் கிடத்தினாள்.
வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த நீரில் தன் சேலை நுனியை நனைத்து வந்து கோதையின் முகத்தில் கொஞ்சம் தெளித்து விட்டு, தன் சேலையைக் கொண்டு துடைத்துவிட்டாள்,சிறிது சிறிதாக தெளிவடைந்த கோதை அக்கிழவியை பார்த்ததும் சற்று பயந்தவாறே நோக்கினாள்."ஏ - ஆயி, காலையிலே சோறு உண்ணாமல் இப்படி வெயிலில் வரலாமா ? செண்பகப்பூ வெயிலில் பட்டால் வாடிடுமே "என்று நமட்டுச் சிரிப்புடன் வருத்தப்படுவதுபோல் கூறினாள் அக்கிழவி.
அவள் கூறியதை கேளாமல் சர்ப்பத்தை பற்றே பீதியிலேயே அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தாள்."அந்த பாம்பு தானே! அப்பவே போயிடுச்சு... பாம்புக்கு இப்படி பயப்படலாமா? அதுவும் நம்மள மாதிரிதான் நாம ஏதாவது துன்புறுத்தும் வரை அது நம்மள ஒன்னும் பண்ணாது" என்று சமாதானம் பண்ண வந்த அக்கிழவியை சுட்டெரிக்குமாறு நோக்கினாள்."ஏய்- ஆத்தி, அந்தணப் பெண்ணுக்கும் இவ்வளவு கோபம் வருமா??, எனக்கு ஏன் பொல்லாப்பு, சரி தாயி!! நீயா பத்திரமாப் போய் சேர், எனக்கு இன்னும் நடவு வேலை இருக்கு நான் வரேன்" என்று அவ்விடத்தில் இருந்து கிளம்பினாள்.
கிழவி அங்கிருந்து சென்றவுடன், கோதை அவ்வூரில் புதுப்பித்துக் கட்டிக் கொண்டிருக்கும்,'பிரசன்னா வெங்கடேசப் பெருமாளின்' கோயிலுக்கு சென்றாள். அங்கே இருந்த ஒரு கற்குவியலின் மேலே அமர்ந்து, அக்கிழவி சொன்னதை நினைத்துப் பார்த்தாள்,"சர்ப்பம் என்ன செய்யும்.??." .
சர்ப்பம் என்ன செய்யும்??, பாவம் என்பதன் அர்த்தம் கூடத் தெரியாத அப்பெண்ணின் வாழ்க்கையை சூன்யமாக்கியது ஒரு சர்ப்பம் தானே!புன்னகையை இதழில் ஒட்டி வைத்திருக்கும் முகமுடைய பெண்ணின் இதயத்தில் பாரம் இருக்க காரணமும் ஒரு சர்ப்பம் தானே!தன் பெயரான கோதை லக்ஷ்மி, வெறும் கொத்தாய் ஆனதன் காரணமும் ஒரு சர்ப்பம் தானே!மனமே புரியாமல் மனதால் விதவையாகப் பட்டிருந்த கோதையை - பேதை ஆக்கியதும் ஒரு சர்ப்பம் தானே!
இப்போது உங்களுக்கு புரியும் சர்பத்தினை பார்த்தவுடன் ஏன் மூர்ச்சை அடைந்தாள் என்பது , ஆனால் இதே சர்ப்பம் தான் அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தினை ஏற்படுத்த போகிறது என்பது தெரியாமல் அவள் அன்று முழுதும் மவுனத்திலே அமர்ந்தாள்.
உடம்பெல்லாம் சந்தனம் பூசிக்கொண்டு, தனது ஒடிந்த காலினை ஒரு மூங்கில் குச்சியின் உதவியால் ஊன்றி எடுத்து, இளம்பிராயத்தைக் கடந்த ஒரு ஆஜானுபாகுவான தோற்றமுடைய முத்தன், பெருமாள் கோயிலின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.முத்தன், இவனை நொண்டி முத்தன் என்றும் ஊர் அழைக்கும்.
தொடரும்