வெறும் ஒரு கிலோ அல்வாவை ஒரு கல்யாண வீட்டு கும்பலுக்கே பகிர்ந்து
கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது நான் இதுவரை பார்த்த மனிதர்களில் என் சித்தியால்
மட்டுமே முடியும்.
தாய்மாமாவின் வீட்டு கிரஹப்பிரவேசத்தில் தான் முதலில் அதனை
கவனித்தேன், அந்த வீட்டிற்கு அவள் பெயரைச் சூட்டியிருந்தார். அதற்கான காரணம் என்ன என
அம்மாவைக் கேட்டபோது அம்மா சித்தியைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள், அப்போது அவள் ஒரு
தொடர்கதை படம் பார்த்திருந்ததால் என்னால் அதை தொடர்புப்படுத்திப் பார்க்க முடிந்தது.
சித்தியைப் பார்த்தாலே, சந்தோஷ் நாராயணனின் ராக் பேண்ட் வாசிக்கும்
“நெருப்புடா…” போன்ற ஒரு ஹெவி மெட்டல் பாடல் அச்சுருத்தும். அதிகப்பட்சம் ரெண்டே வார்த்தை
தான் “ சீ… நாயே” எப்பேற்பட்ட குறும்பும் வாலைச் சுருட்டிவிடும். சிறுவர்களுக்கு தான்
என்றில்லை, சில சமயம் சித்தியோடு பேசிவிட்டு என் தங்கையிடம் “போடி உன் அம்மா எப்பவும்
இப்படியே இருக்கா” என்று அழுத அம்மாவையும் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் டெரர் மனுஷியாகவே
வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறாள்.
ஆனாலும் அம்மா மட்டுமே சித்தியை நெருப்பு காலத்திற்கு முந்தைய
சித்தியைத் தெரிந்தவள். இருவரும் குற்றாலத்தில் மலைமீது ஓட்டப்பந்தையம் வைப்பது முதல்,
சுடுகின்ற எண்ணைச் சட்டியில் கைவிட்டு வடையை எடுக்கும் சாகசங்கள் போல பல எபிஸோட்கள்
கதை சொல்லியிருக்கிறாள்.
குடும்பத்தில் எப்பேற்பட்ட சிக்கலுக்கும் அவளிடம் ஒரு தீர்வு
இருப்பதை நான் அறிந்து கொண்ட காலத்தில் சித்திக்கு காதோரம் நரைத்திருந்தது. மிக அழகானவள்.
அவளது சிரிப்புச் சத்தம் பிரத்யேகமானது. அதிக நேரம் சிரிக்க மாட்டாள் ஆனால் அவளே சிரித்துவிட்டாள்
எனில் அது குடும்பத்தின் உச்சபச்ச மகிழ்ச்சியின் விளைவாக இருக்கும். ஆனால் பட்டென்று
அழுதும் விடுவாள், அதெப்படி குடும்பத் தேரினை இழுப்பவள் இப்படி இலகுவாக இருக்கமுடியும்
என்று நினைக்காதீர்கள். அவள் தனக்கு வரும் சோதனைக்கெல்லாம் அசந்துபோவதில்லை. ஆனால்
நகைக்கடை விளம்பரத்திலோ, வாஷிங் பவுடர் விளம்பரத்திலோ வரும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கோ
கண்ணீர் வழிந்தோடும். மற்றபடி தன் கையில் இரண்டு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தும்,
வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைக்குச் சென்றாள். அந்த கையிலிருக்கும் நீண்டத்
தழும்பு, தன் வாழ்க்கையில் அவள் செய்திருக்கின்ற நிறைய தியாகங்களின் தடயமாக இருக்கிறது.
சுறுசுறுப்பு என்கிற சொல்லைப் பொதுவாக நெல்லை மாவட்ட பெண்கள்
எல்லோரிடமும் பொதுவாகக் காணலாம், அதற்கென சிறப்பு குரோம்சோமகள் இருக்குமோ என்னவோ, இன்றுவரை
அந்த ரகத்திலும் சற்று கூடுதலான பிறவியாய் அவளைப்பார்க்க முடிகிறது.
அந்த காலத்தில் 26, 27 வயதுவரை ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை
என்றால் அது குடும்பத்தின் மிகக் கடினமான நிலை தான்.
சித்தி என் அம்மாவின் முதல் தங்கை, தாத்தா ஒரு ஏட்டையா. ரொம்பவே
ஞாயவானாக இருந்ததால், அவருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்,
எங்கள் அம்மாவைத் தவிர மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் என அவர்கள் படிப்பு திருமணம் எல்லாமே
கேள்விக்குறியாகிட, பட்டப்படிப்பை முடித்த என் சித்தி குடும்பப் பொறுப்பை தனதாக்கிக்
கொண்டு வேலைக்கு சென்றிருந்தார். முதலில் ஒரு நாளிதழில் எடிட்டோரியலில் பின்னர் அரசு
வங்கியிலும் வேலை கிடைத்தது. குடும்பச்சுமை தேர்போல உயரமாகவும் பாரமாகவும் இருக்க,
அந்த தேரை தன் வேலை என்கிற வடம் கொண்டு ஒற்றை ஆளாய் பல வருடங்கள் இழுத்து வந்திருக்கிறாள்.
அதனாலேயே அவள் தனிரகமாய் வாழ வேண்டிய கட்டாயம் இருந்திருக்கலாம்.
என்னதான் சித்தியை கஞ்சாம்பட்டி என்று பலரும் கிண்டல் செய்தாலும்
அதை அவள் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்கும் அவளது மறுபக்கம் தெரியும். இருவருமே
அரசு உத்தியோகம் பார்த்தாலும் ஆடம்பரச் செலவு என்பது துளியுமற்ற அக்குடும்பத்தில்,
மற்றவர்களுக்கு உதவி என்று சொல்லும்போது மிகப்பெரிய உதவியெல்லாம் செய்திருக்கிறார்,
இதில் சித்தப்பாவும் ஜெண்டில் மேனாக ஸ்கோர் செய்துவிடுகிறார். குடும்பத்தினர், தூரத்து
சொந்தம் என்று மட்டுமல்லாது தன்னுடன் வேலை பார்க்கும் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும்
கூட இப்படி நிறைய செய்திருக்கிறார்.
தனிப்பட்ட மனுஷியாய் பார்க்கும்போது சாதாரண மனிதர்களுக்கு
மத்தியில் உலாவும் ஒரு அசாதாரணப் பெண்.
***
நடிகையர் திலகம் படம் பார்த்த களிப்பில் சில ஜெமினிகணேசன்
பாடல்களை யூட்யூபிவிட்டதில் அந்தப் பாடலைக் கேட்டேன். ஹெல்லொ மிஸ்டர் ஜமீந்தாரில் ஒரு
பாடல் “காதல் நிலவே கண்மணி ராதா” என்று ஜெமினி தெரு ஓரத்தில் நின்றபடி, மாடியிலிருந்து
பாடலை ரசிக்கும் சாவித்திரியைப் பார்த்து ஆடுவார். அருமையான மேற்கத்திய இசையின் அடிநாதத்தில்
மெல்லிசையாகி உருவான பாடல் இது..
ஒருநாள் அந்தப் பாடலை பார்த்துக்கொண்டிருக்கும் போது மெய்
மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் சித்தப்பா. சித்தப்பா ஒரு போலீஸ், ஒரு காலத்தில்
அவர் சிரிக்கவே சிரிக்காத மனிதர் என்கிற கற்பிதம் இருந்தது. நல்ல உயரம் இருந்தாலும்
தொப்பை இல்லாததால் மஃப்டியில் இருந்தால் போலீஸாகவெல்லாம் கற்பனை செய்ய முடியாது.
வேண்டுமானால் தென்காசியில் வாழும் யாரோ ஒரு கண்ணியவான் என்று
கடந்து செல்லலாம். அன்று இந்தப்பாடலை டீ வியில் லயித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில்,
“என்ன சித்தப்பா முதல் காதல் ஞாபகமா” என்று கேட்டுவிட, ஆமாம் என்று சொன்னார். வேறு
யாரோ ஒருவர் காரணமாக இருப்பார்கள் என்று ஆர்வமாக பதிலுக்கு காத்திருந்தால், ’அது வேறுயாருமில்லை
உன் சித்தி தான்’ என்றார். நீங்கள் தான் உறவினராச்சே ஏன் இப்படி ஏக்கமாக வீட்டைச் சுற்றி,
வீட்டைச் சுற்றி வந்தீங்க என்று நக்கலாகக் கேட்க, ”:எல்லாம் உன்னால தான் டா” என்றார்
ஏற்கனவே உறவினரான சித்தப்பாவோடு சில ஆண்டுகளுக்கு முன்னரே
பேசி வைத்திருந்ததால், திருமணத்திற்கான நிர்பந்தத்தை மாப்பிள்ளை வீட்டார்கள் துரிதப்படுத்த,
ஏழு ஆண்டுகளாய் காத்திருந்து பிரசவத்திற்காக வந்திருந்த அம்மாவைக் காரணம் காட்டி சற்றுத்
தள்ளிப்போட வேண்டும் என சித்தி சொல்லியிருக்கிறாள். பெரிய பூகம்பமே கிளம்பியிருந்தும்
சித்தப்பா ஒரு ஜெண்டில்மேனாக காத்திருந்திருக்கிறார். இதற்காக அவள் திருமணம் ஒரு ஆண்டுக்கும்
மேலே தள்ளிப்போயிருக்கிறது. இந்த ஜெமினிகணேசன் சாகசங்களுக்கு காரணம் நானாகிய வரலாறு
ஒன்றிருக்கிறது.
பிறப்பதற்கு முன்னாலிருந்தே பலபேரோட லவ்ஸில் குறுக்கப்புகும் பழக்கம்
இருப்பதை வரலாற்றில் பதிய முடியும் போல.
***
ஆதிச் சமூகத்திலிருந்து பெண்கள் உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
ஆனால் அந்தந்தக் காலக்கட்டத்தின் பொதுபுத்திகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு,
தளைகளைத் தாண்டி பொறுப்பேற்பவர்கள் அரிது. அப்படியானவர்கள் என்றுமே பிறரது வாழ்க்கைக்கு
முன்னுதாரணமாக வாழ்ந்து போவார்கள்.
அதே சமயம் அத்தகைய திடம் உள்ளவர்களுக்கு தான் மலை போன்ற சோதனைகளும்
வந்து சேர்கின்றன. ’அமைப்பு’ என்கிற விசித்திரம் அது.
தங்கையின் திருமணத்தின் போது தங்கைக்குச் சமமாக அவளையும்
நிறைய காமிராவில் பதிவு செய்தேன்.. கண்டமேனிக்கும் போட்டோ எடுக்கிறேன் என்று அவளே திட்டக்கூடும்,
ஆனாலும் வியூ ஃபைண்டரில் அவளது நிம்மதியை, பதட்டத்தை, சந்தோசத்தை கவனிக்கும் நொடிகளில்
பெரும்பாலும் அதை படம்பிடிக்கத் தவறினேன்.
ஏன் எனில் அவள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் கை தேர்ந்தவள்.
ஒரு நீண்ட வாழ்க்கைக்கு எத்தனை பக்குவங்கள் தேவை பாருங்கள்.
முதலாவது பல நேரங்களில் மகிழ்ச்சியாய் இருப்பது போல காட்டிக்கொண்டிருக்க வைக்கவும்
சொல்கிறது. சில நேரங்களில் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் அதையும் கட்டுப்படுத்தி
வைத்திருக்கவும் சொல்கிறது. இரண்டாவதும் ஒரு மனிதரின் வாழ்க்கையில் சாத்தியம் எனில்
வாழ்க்கை அவருக்கு அத்தனை கடினமான பயணம் செய்திருக்கிறது என்று அர்த்தம், அன்றைக்கு
சித்தியிடம் அப்படியான ஒரு அமைதி இருந்தது.
நேற்றுடன் பணி நிறைவு செய்து ரிட்டையர்ட் ஆகிறாள். அதற்கான
விழாவில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்த்தேன். அதே ப்ராண்டட் சிரிப்புடன் மாலையும்
கழுத்துமாக நின்றிருந்தாள். தனது வேலை மூலம் இன்று ஆறு குடும்பங்களாக இருக்கின்ற, அன்றைய
ஒரே குடும்பத்திற்காக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவள். எத்தனையோ வலிகளையும் சோதனைகளையும்
கடந்து தன் பணியை நிறைவு செய்துவிட்டாள். இன்றைக்கு காலை அந்த அவசர கால உப்புமா (அவளது
உப்புமா என் ஃபேவரைட்) செய்யத் தேவையில்லை என்றாலும், செய்வதற்கும் காரியங்கள் இருக்கத்தான்
செய்கின்றன. எழுதத் தெரிந்தவன் என்கிற ஒரேயொரு தகுதி மட்டும் உடையவனால் என்ன செய்ய
முடியும்.
நீ வைத்த சீனித்தண்ணிக்கு நன்றியும், நலமோடு வாழ பிரார்த்தனைகளும்.
Stay calm and long live chithi!! Love u