வெள்ளி, 17 நவம்பர், 2017

சீமான் தேவையா?

1. பிரபாகரனை அறிமுகப்படுத்திய சீமான் என்கிற தமிழ் சமூகக் கோமாளி 

கோமாளி என்பவன் பொதுசனத்திற்கு வித்தை காட்டும் வேலையைச் செய்பவன்.  

அரசியலில் இரண்டு பேர்களை உடனடியாகக் கோமாளி ஆக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது, ஒன்று புரட்சி பேசுபவனுக்கும் இன்னொன்று தன் தவறுகள் அம்பலப்படுத்தப்பட்டவனுக்கும். முதலாமவனை அரசியலில் இருந்து ஓரங்கட்டவும், இரண்டாமவனை தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்கவும்.

சீமான் எந்த வகையறா?

அந்த தனியார் தொலைக்காட்சி  நடத்திய நேர்காணல் காணொளியை வைத்து சமூக ஊடகம் முழுக்க கழுவி ஊற்றுகிறது சீமானை.

இதில் என்ன லாபம் இருக்கிறது?

தீவிரமாக தமிழ் தேசியம் மற்றும் ஈழத்து உணர்வுகளைப் பேசும் ஒரு அடையாளத்தினை அவமானப்படுத்துவதன் வாயிலாக
அதுவும் மாவீரர் தினம் அனுசரிக்கப்படும் நாட்களில் இப்படியான அவதூறுகள் சீமான் மீது பரப்பப்படுவது எதிரிகளைக் காட்டிலும் துரோகிகளுக்கு அல்லது திராவிடப்பிழைப்புவாதிகளுக்கும், முற்போக்கு தேசியவாதிகளும் குதூகலமடைகிறார்கள். (இதற்காக அவர்கள் பிரபாகரனைப் போற்ற வேண்டிய சடங்கினையும் செய்திருக்கிறார்கள்)
வேறு எந்த அரசியல் சித்தாந்தத்தையும் விட மொழியான் மக்களை இணைக்கும் சித்தாந்தம் மிக ஆபத்தானதாகப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகப் பார்க்கப் படுகிறது.

***

சரி அந்த காணொளியைப் பார்த்தீர்களா?

அந்தக் காணொளியின் முக்கியமான பேச்சு எதனை அடிப்படையாக வைத்து எடிட் செய்யப்பட்டிருக்கிறது?

சீமான் ஆட்சிக்கு வந்தால் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்களை எப்படிக் கையாள இயலும் என்கிற தொனியில் தான் அந்த பேட்டியின் சாரம்சம் இருக்கின்றது.  

மேற்சொன்ன ஒரு காரணம் தான் இந்த வீடியோவில், பிரபாகரனைக் கொச்சைப்படுத்தியதாக மட்டும் கவனத்தைக் குவித்து சீமானை அர்சித்துக்கொண்டிருக்கிறது சமூக ஊடகம்.

ஆனால் சீமான் பேசியவை.

  • தமிழ்நாட்டின் கடனை எப்படி அடைப்பது
  • மதுக்கடைகளை மூடிவிட்டால் எப்படி வருமானத்திற்கான மாற்று ஏற்பாடு செய்வது
  • ஆற்றுமணல் அள்ளுவது தொடர்பான நோக்கங்கள்
  • பண்ணை நிலங்கள் போன்றவற்றை அமைத்தால் என்ன பலன்கள் இருக்கும் என்பதை அண்டை மாநிலங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தல்
  • சந்திரபாபு நாயுடுவும், சீத்தாரமையாவும் செய்துகொண்டிருக்கின்ற இன அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான பணிகளை முன்வைத்தது.
  • மாநில மக்களின் உணவு நுகர்வுத்தன்மையைக் குறிப்பிட்டு பிரேசில் போன்ற நாடுகளை முன்வைத்து கால்நடை வளர்ப்பு மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது.
  • வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற காய்கறி, இரைச்சிகளுக்கு மாற்று செய்வது, பிறமாநிலங்களுக்கு இயற்கைவளத்தை காவுகொடுக்காமல் இருப்பது.
  • இப்படியான விசயங்களை மிகத்தெளிவாகப் பேசிய சீமான் தான், கோமாளியாக மட்டும் திரிக்கப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்.

ரி அவர் பேசிய விசயத்திற்கே வருவோம்.

//பிரபாகரன்னா தீவிரவாதின்னு பேசிக்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாம் அண்ணா, பெரியப்பான்னு பிரபாகரனைப் பேசுவதற்கு நான் தான் காரணம்// என்று பேசியது.

மே17, இளந்தமிழகம் போன்ற பல இயக்கங்கள் மட்டுமன்றி அவரவர் வீட்டின் தந்தைமார்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பிரபாகரன் என்பவர் யாரென்று சொல்லுவளர்க்கும் தமிழ்சமூகம் தான் என்றாலும், அரசியல் கட்சிகள் என்று பொருள்படும் விசயத்தில் சீமான் பேசியிருந்ததாக எடுத்துக்கொண்டால் மதிமுக, பாமக, விசிக,, தேமுதிக(பெயரளவிற்காவது) ஆகியக் கட்சிகளும் தங்கள் தலைவரென பிரபாகரனை முன்னிறுத்திய கட்சிகள் தான். ஆனால் எதுவரை?

மக்கள் நலக்கூட்டணி அமைத்ததும் முதல் வேலையாக மதிமுக, தேமுதிக, விசிக ஆகியக் கட்சிகள் தேர்தலின் போது தாங்கள் பேசிய எந்தப்பொதுக்கூட்டத்திலும் பிரபாகரனின் படத்தையோ, அவர் பற்றிய பேச்சினையோ தவிர்த்ததில் இவர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டன. நாளைத் தூக்கிவைத்துக் கொண்டாலும் (காங்கிரஸே கூட செய்யலாம்) இது வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று தான். பா.ம.கவைப் பொறுத்தவரை அது தன்னை சாதியகட்சியாக பாவிப்பதில், இந்தக் கட்டுரையிலும் அதற்கு இடமில்லை. ஆனால் சீமான் மட்டுமே அதைச் செய்தார்.


அதற்கென அவர் பேசிடலாமா என்றால் Ground Realityயில் அவர் பேசியது எத்தனை தூரம் உண்மை என்று பார்க்க வேண்டும் இல்லையா?


முதன்முதலாக இராமேஸ்வரத்தில் ஈழமக்களுக்காக திரையுலகினர் திரண்டுவந்து ஈழத்தில் போர்நிறுத்தத்தை முன்வைத்துப் பேசிய சீமானின் பேச்சிலிருந்து இப்போராட்டத்தை உணர்வு அடிப்படையில் பார்க்க ஆரம்பித்த மக்கள் ஏராளம். அந்த பேச்சினை யாரும் அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது. இன்று இருக்கின்ற கணிசமான இளந்தலைமுறையினர் அந்த பேச்சினைக் கேட்டு சீமானைப் பின் தொடர்ந்தவர்கள், எத்தனையோ சிறுசிறு இயக்கங்களும், மே 17 போன்ற இயக்கங்களுக்கும் இதில் முக்கியப்பங்கு இருக்கவே செய்கின்றன.

ஒரு காலத்தில் வைகோவிற்கு இந்த பங்கு இருந்தது. அதற்கு பின்னர் இன்றைய இளம்தலைமுறையினர் அநேகருக்கு தமிழ்தேசியம் குறித்தும் தலைவர் பிரபாகரன் எப்படி ஒரு இனத்தலைவனாக இருக்கிறான் என்பது குறித்தும் சீமான் செய்த மேடைப்பரப்புரையை சாதாரணமானது என்று சொல்லிவிட முடியாது. அவர் இந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தது, அதனைத்தான். அதுவும் பெருமித உணர்வில் தான். பிரபாகரனைக் குறியீடாகவும், இனத்தின் தலைவனென அடையாளப்படுத்தி தான் தமிழ்தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார். அதைக்கேட்டு சீமானுக்கு ஓட்டுப்போட்டவர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் யாருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று தீர்மாணித்தவர்கள் தான் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்தவர்கள். இதையும் மறுப்பீர்கள், இருக்கட்டுமே.

ஆனால் தமிழகத்தின் நீண்ட நெடிய அரசியல் வரலாறு மேடைப்பேச்சுகளால் மட்டுமே திருத்தி எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வரலாற்றின் கடைசிப் பேச்சாளர் சீமான்.


ஏனெனில் சீமான் ஜெயிக்கப்போவதில்லை.


தமிழரை தம்ளர் என்றும் டம்ளன் என்றும் மீம்ஸ்போட்டுக்கொண்டு விழுங்கிக்கொண்டிருக்க காவிப்பாம்பிற்கு மாற்றென சுரண்டல் மற்றும் ஊழல்களில் CORPORATE ஆக அறுபது ஆண்டுகட்கும் மேலாக வாழ்ந்து வரும் அணகோண்டா பாம்பு கணிசமாகக் குட்டிகளையிட்டு காத்துக்கொண்டிருக்கிறது. எழும்புகளை நொறுக்கிட சுற்றி வளைத்துக்கொண்டிருக்கும் உராய்வுகளை மக்கள் சுகமென நம்பியிருப்பார்கள். இதில் தமிழ்தேசியம் வெறும் மண்புழுதான்.

ஆகவே சீமான் எப்போதும் ஜெயிக்கப்போவதில்லை. ஆனால் தோல்வி சீமானுக்கானது மட்டும் இல்லை.
கடங்கநேரியான் சொன்னது மாதிரி, உணர்வுநிலையில் அரைகுறையாய் உளரும் தமிழ்தேசியவாதி எத்தனையோ மேலானவன் என்று? யாரை ஒப்பிடுகையில்………..?