வியாழன், 1 டிசம்பர், 2016

TN 47

ஒரு பைக் ஸ்டோரி

இந்த குளிரும் மழையும் காக்டெயிலாகப் பொழியும் மழையில், அலுவலகம் செல்லும் வழியில் ஒரு லாரியைக் கடந்து வேகமாக ஓவர்டேக் செய்துக்கொண்டிருக்கும் போது தான் அது என் நினைவுக்கு வந்தது நான் ஓட்டிக்கொண்டிருப்பது சுரேஷை அல்ல ரமேஷை என்று. (இப்போதே footnoteஐப் படித்துவிடுங்கள்). வேகமாக எதிரில் வந்துக்கொண்டிருந்த வாகனம் கொஞ்சம் கூட வேகத்தைக் குறைக்காமல், மாறாக ஹெட்லைட்டைப் போட்டு பயமுறுத்தினான்.

ரமேஷ் அதுக்குமேல முறுக்கினா ஆக்ஸிலேட்டர் கம்பி தான் அறுந்துபோகும் எனத்தோன்றியது. சுரேஷை வீட்டிற்கு அழைத்து வந்து சில மாதங்கள் தான் ஆகிறது.

சுரேஷ் என் தம்பியின் வாகனம். கொஞ்ச நாளைக்கு நீ ஓட்டுன்னு சொன்ன நாள்லயிருந்து தொடர்ந்து பத்து பதினைந்து நாட்களாக அதைத் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். சுரேஷ் புதியவன் மற்றும் திறமைசாலி என்பதால் எடுத்த எடுப்பில் யாரையும் ஓவர் டேக் செய்துவிடலாம். ஆனால் ரமேஷ் நவதுவாரங்கள் வழியாகவும் சப்தம் எழுப்பும் கட்டெரும்பாய் தேய்ந்து போய்விட்டான். இதெல்லாம் முன்னரே தெரிந்தவன் தான் எனினும் இந்த பத்து பதினைந்து நாள் சுரேஷ் சகவாசம் என்னை, என் ஆட்டிட்யூடை மாற்றிவிட்டது எனலாம், ஏனென்றால் சில் ஆண்டுகட்கு முன்னர் என்னைக் கடந்து சென்ற ஒரு ஸ்கூட்டியை ஓவர்டேக் செய்யவில்லை என்றால் இறக்கிவிடுமாறு என்று என் அம்மாவே என்னிடம் செய்திருக்கிறார் என்றால் என் வண்டியின் வேகம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.

வேகம் எனக்குப் பொருந்தாத ஒன்று என்று நினைத்திருந்தேன். அர்விந்த் யுவ்ராஜுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒகே கண்மனியின் வேம்ப் ஷாட்டின் அவசியம் பற்றிக் கொண்டிருந்தார். அது ஒரு காலத்தின் குறியீடு, வேகம் எல்லோருக்குமே அவசியமாகிறது. அதற்குத் தகுதியானவர்களாவதில் தான் பிரச்சினை. மிகவும் நெருங்கி வருகிறது. வலது புறம் கட் பண்ணினால் கடைத்தெரு. இடது புறம் கட் பண்ணினால் லாரி தான். எப்படியோ சுரேஷின் வேகத்திற்குப் பழகியதால். ரமேஷிடம் அதை எதிர்ப்பார்த்தது என் தவறு தான். வாழ்க்கை முழுதும் அதே தவறைத் தான் திரும்பித் திரும்பி செய்கிறேன்.

அப்போது எனக்கு இன்னொரு விஷயம் கண்ணில் பட்டது என் வண்டி ஒரு லட்சம் கிலோமீட்டர் பயணம் அஃபிசியலாக போயிருப்பதையே நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.

எப்படியோ என்னுடன் 2007ல் இருந்து இன்று வரை என்னோடு இருந்து வரும் ரமேஷ் பற்றி நான் கொஞ்சம் கூட அக்கறை கொண்டதே இல்லை. என்னடா 2007க்குப் போகிறேன் காலையில் நடந்த நிகழ்வினைப் பற்றி பேசாமல் ஏதேதோ பேசுகிறேன் என்று நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஒரு லட்டத்திற்கும் அதிகமான கிலோமீட்டர் என்னோடு பயணித்த இந்த வண்டியுடன் ஒரு ஃபிளாஷ்பேக் போகலாம் என்று தோன்றுகிறது. இந்த பத்துவருடங்களின் எல்லாவற்றையும் என்னோடு இருந்து பார்த்துவருகிறது அது. நமக்காகவே என்று நாம் எழுதுவது அலாதியான உணர்வு தான். இந்த ரீவைண்டிங் கிரைண்டரைத்தான் அடிக்கடி நக்கலடித்து வந்தாலும். இது ஒரு ஆனந்தச் சொறிதல்.

முடிந்த அளவு குட்டி குட்டியாகப் பார்க்கலாம்…… ஒரு பைக்கின் கதை TN47

(தொடரும்)

*சுரேஷ் 2016 வெளியீடான 150 CC விக்ராந்த் பைக் – ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பு.

ரமேஷ் 2006 வெளியீடான 100 CC ஸ்டார் சிட்டி – டீவீஎஸ் நிறுவனத் தயாரிப்பு