புதன், 10 டிசம்பர், 2014

ஏனென்றால் வேல்ஸுக்குப் பிறந்தநாள்

கவிஞர் அய்யப்ப மாதவன் அண்ணனின் - ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் நிகழ்வில் தான் முதன்முதலில் வேல்ஸை சந்தித்தேன். அவரை சுருக்கமாக VELS என்று தான் அழைப்பேன், சவுத் வேல்ஸா – நார்த் வேல்ஸா என்று அவரில்லாத போது அவரை நக்கலடிப்பதுண்டு. அவரைப் பார்ப்பதற்கு முன்பே சாத்தப்பன் வேல்ஸைப் பற்றிய முன்குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். எங்கள் இரண்டாவது சந்திப்பே யாவரும்.காமிற்கான விதையூன்றியுருந்தது, நான் கொஞ்சம் முந்திரிக்கொட்டை என்பதை அன்றே உணர்ந்ததாக அவர் சொல்லி பின்னர் கேள்விப்பட்டிருக்கிறேன்.

செம்மொழிபூங்காவில் வளர்கின்ற உயிரியல் தாவரங்களோடு அவ்வப்போது தொடர்ந்து வந்த எங்கள் சந்திப்பில் ஒரு விதைக்கப்பட்ட கனவு முளை விட்டிருந்தது. பின்னர், அது பசுமையாகவும் வேகமாகவும் வளர்ந்து கொண்டுதான் இருந்தது, தண்ணீர் விட்டுவந்த கைகளில் ஒன்று காணாத நாளொன்றில் இந்த சந்திப்புகள் இனி வாய்க்காது என்று தான் தோன்றுகிறது. அத்தனை காதலர்களுக்கு மத்தியில் இலக்கியம் பேசும் ஏலியன்கள் அங்கு கூடிடும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக மீண்டும் வந்து விடப் போவதில்லை. சிவக்குமாரின் வீட்டில் அவர்களுக்குத் தெரியாத அன்பு சிவனுக்காக ஒடிந்து விழுந்த 06.2 அடி உருவம் எல்லோரையும் நிறுத்திவிடச்செய்வது தான். பின்னர் அன்பின் இறுதி யாத்திரைக்காக அவனை சுமந்து செல்லும் அதே உருவம் மற்றவர்களின் உயரத்திற்காக, சற்று தாழ்ந்து கொண்டே நடந்து கொண்டிருந்தான். அன்பிற்காக மட்டுமன்று நட்பிற்காகவும், இலக்கியத்திலும் அவன் அதை தொடர்ந்து செய்கிறான். செய்யட்டும். வெற்றி – தோல்வி பற்றிய அக்கறையுமில்லை, புரிதலுமில்லை அது அவனுக்குத் தேவையுமில்லை.

“எங்கேயும் திமிராக நான் கவிஞன்” என்று சொல்லுங்கள் என்பேன், ஆனால் அதையே சன்னமான குரலில் சொல்லி வருகிறார். அத்தனை மெஜஸ்டிக்கான உருவத்திலிருந்து வரும் கவிதைகளும் சரி, அன்பும் சரி குழைவாகத் தான் இருக்கிறது. இதுவரை அவர் எழுதிய கவிதைகளில் எனக்கு அறவே பிடிக்காத ஒரு கவிதை ஒன்றிருக்கிறது ஆனால் அவரிடம் நான் சொல்லவேயில்லை, இது தான் அவருக்கும் எனக்குமான வித்தியாசம் – இதுவே என் படைப்புகளில் இப்படி வந்தது என்றால் அவரின் தொனி வேறாக இருக்கும். அந்த வகையில், ரமேஷ் ரக்சன் சொல்வது போல் இவர் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் தான்.

இத்தனை வேறுபாடுகள் கொண்ட ஒரு மனிதரோடு இதுவரை நான் நட்பிலிருந்ததில்லை ஆன்மீகம், பகுத்தறிவு, சினிமா, இசை, கம்யுனிசம், இலக்கியம் என எல்லாவற்றிலும் இருவருக்கும் வேறுபட்ட எண்ணங்கள், கொள்கைகள். கழுத்தை நெறிக்காத குறையாக கடிந்து கொண்டே போன் இணைப்பு துண்டிக்கப்படும்.  விவாதத்திற்கு முந்தைய புள்ளியிலிருந்து மீண்டும் நாங்கள் தொடங்குவோம்.


தான் நம்புகிற சித்தாந்தத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காமல் இருப்பவர்கள், வாதங்களின் தோல்வியடைந்தாலும் அப்படியே கெட்டியாக நின்றுவிடுவதில்லை, வேல்ஸ் மாறுபடுகிறான். என் கனவும், அவன் கனவும் இன்று எங்கள் கனவாக இருக்கிறது. பிறந்தநாள் மேல் நம்பிக்கை கிடையாது அவனுக்கு என்பது எனக்குத் தெரியும்.


அவனென்றும், அவரென்றும் அழைக்கும் உரிமையும், மரியாதையும் கொண்ட நண்பன் வேல்ஸ். வீட்டிற்கு சென்றால் அள்ளி வரலாம் புத்தகங்களை, யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் இந்தக் கண்ணன் இசையை அதிகம் நேசிப்பது மட்டுமல்ல வாசிக்கவும் செய்கிறான். என்ன வாத்தியம் என்று தானே கேட்கிறீர்கள்.. கண்ணன் எந்த வாத்தியம் வாசிப்பானாம்….

இப்போது அவரை கடுப்பேத்தப் போகிறேன், உங்கள் குடும்பம், ஆரோக்கியம், பணி, இலக்கியம் நிறைவாகவும், மகிழ்வோடும் அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

பிறந்தநாள் வாழ்த்துகள் வேல்ஸ்

- ஜீவ கரிகாலன்