செவ்வாய், 4 ஏப்ரல், 2023

நினைவோ ஒரு ஞமலி.

 
கவிதை என எப்போதாவது எழுதுவதுண்டு. அது பெரும்பாலும் மனநிலையை சமன்படுத்தும் ஒரு equalizer என்று நம்பிக்கை. மூன்று நான்கு நண்பர்களைத் தாண்டி அது வெளியே போகா வண்ணம் நீண்ட காலமாகப் பாதுகாத்து வருகிறேன்..இலக்கியம் இன்னது எனப்புலப்பட ஆரம்பிக்கையில் அந்த வடிவத்திற்காக மரியாதையுடன் செய்து கொண்ட சங்கல்பம் இது.

திரையுலகத்தைச் சார்ந்த நண்பர் ஒருவருடன் ஷூட்டிங் வீடுகள் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தேன். கோழையாய் இருந்து
மாவீரனாய் மாறும் ஹீரோ ஸ்டைலாய் இறங்குவதற்கும்
, ஹீரோவோடு காதலிப்பதை அறிந்து தன் தந்தை அடித்தவுடன் பெட்ரூமில் குப்புறப்படுத்து அழுவதற்காக மேலே ஏறுவதற்கும்,
இரட்டை வட கதாநாயகர்கள் வில்லனை துவம்சம் செய்து திருத்திய பின்னர் தத்தமது காதலிகளை மணம் முடிக்க ஜோடியாய் ஸ்லோமோஷனில் நடப்பதற்கும், வெளியே போ என ஜம்மென்று ஹீரோ சபதம் போட ஏதுவாய் நிற்பதற்கும் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஒரு பாத்திரமாகவே நடித்துள்ள சிவப்பு கம்பளம் விரித்த படிகட்டுகள் கொண்ட வீட்டைப் பற்றி கேட்கையில் தான் அந்த கலை இயக்குனர்
பற்றிய கதையை சொன்னார்.


பெரும்பாலான சினிமாக்களில் அவர் பங்கெடுத்ததன் காரணம், அவரை விரும்பி வைத்ததாலோ அல்லது அவரது பங்களிப்பாலோ அல்ல.
அப்போதிருந்த ஸ்டூடியோக்களில் பெரும்பாலான அரங்குகளை (வாஹினியோ விஜயாவோ நினைவில் இல்லை) அவர் நீண்ட கால குத்தகைக்கு எடுத்து செட் போட்டு வைத்துவிடுவார். பணக்கார வீடு, போலீஸ் ஸ்டேசன், சந்தை, நடுத்தர வீடுகள், கோர்ட், ஆஸ்பத்திரி, கோயில் என கலைக்கப்படாமல் ஆறு  மாதம் வரை கூட அப்படியே வைத்திருப்பாராம். செட் போட வேறு இடம் கிடைக்காததால் அவரையே கலை இயக்குனராக தமது படங்களுக்கு ஒப்பந்தம் செய்வார்களாம்.

கவிதை பற்றி ஆரம்பித்து இங்கே வந்து ஏன் நிற்கிறேன் என்று தெரியவில்லை.. ஆங். ஞாபகம் வந்துடுச்சு..

நேற்றிரவு தூங்கச் சொல்லும் முன் சில கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அக்கவிஞரின் எழுத்து என வெளிப்பட்ட படைப்புகளில் இருந்து இன்று வரை எழுதப்படும் கவிதைகள் இப்படித்தான் , நண்பன் சொன்ன கலை இயக்குனரின் திரைப்பட செட் போல.. அதே கோர்ட், அதே ஆஸ்பத்திரி, அதே மாடிப்படி, அதே கார்பெட், அதே சாண்டிலியர், அதே பிள்ளையார்.

எந்தக் காட்சியும் மாறவில்லை. இதில் எந்த குத்தமும் கெடையாது தான், லயித்து வாசிச்சா நல்லா இருக்குன்னு கூட தோணும். ஆனா இதே செட் ப்ராபர்டீஸ் ஏற்கனவே பார்த்தது போல உட்கட்டமைப்பில் ஒருவித அயற்சி ஏற்படும்.

என்னைய்யா இது இவ்ளோ முக்கிய கவியா பார்த்தா இப்படி சொல்ற என்று கேட்கலாம்? ஆனா நான் பாரதியை சொல்ல விரும்புறேன். மொத்த கவிதைகளிலும் எத்தனை எத்தனை புதிய கூறுமொழிகள், லயங்கள்.

இதென்ன கவிதை விமர்சனமா?..

ஐயயோ சத்தியமா கெடையாது.. என் நினைவு ஒரு ஞமலியைப் போன்றது என்று சொன்னேனா இல்லையா, அதான் அது தெங்கம்பழத்த தெருவெல்லாம் உருட்டுது போல ஒரு கன்ஸிஸ்டன்ஸி இல்லாம..

அப்போ என்ன தாம் சொல்ல வந்தே??

அண்மையில் வாசித்த தொகுப்புகளில் “ஒரு ஸ்க்ரோல் தூரம்  எனும் தலைப்பு, சட்டெனத் திரும்பிப்பார்க்க வைத்தது. கவிதைகள் மீது பெரும் காதலும் வாசிப்பும் உடையவர் சோ.விஜயகுமார், அவரது முதல் தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. மேற்சொன்ன திரைச்சூழலில் தான் திடீரென இந்த செட்டெல்லாம் வேண்டாம் என்று நிலத்திற்கே கிளம்பிய பாரதிராஜா போல் என்று உதாரணம் சொல்ல முடியவில்லை என்றாலும் (பல முன்னோடிகள் இவரது படைப்புகளில் தாக்கம் செலுத்துவது போன்ற வாசிப்பைத் தருவித்தாலும்), இவர்  அனுகுகின்ற காலம் என்பதே இவரால் தனித்த ஒரு அடையாளத்தை கட்டியெழுப்பும் வெளி ஒன்று இவருக்கு காத்திருப்பதைக் காட்டும் கவிதைகள் இருக்கின்றன.. அதற்கு .கா ஒரு ஸ்க்ரோல் தூரம்' கவிதை.

மேலும் கொஞ்சம் கவிதை வரிகள்
ஒரு பூ அளவே ஆயுளுள்ள வசீகரம்
பூக்களிலிருந்து கிளைக்கு
பின் பட்டைக்கு
பிறகு அதே சகதி படிந்த வேருக்கு
எல்லா தருணங்களும் திரும்புகின்றன
உன்னை தவிர்த்துவிடவும்
உன் வாசனைகள் தீர்ந்துவிடவும்
அதுவே போதுமானதாயிருக்கிறது
 
மேலும் ஒரு கவிதை..
 
அகாலத் தனிமை
அரித்துப் போகும்
பூச்ச நாள்பட்ட நோய்
போதாத ஆகாரம்
என அத்தனையும் மறைத்து
அவர் அருகில் வரும் போது
அமைதியாய் பூக்கின்ற
அப்பாவின் தோட்டத்து செடிக்கு
அப்படியே அம்மாவின் சாயல்
 
நிச்சயமாக விஜயகுமாரின் படைப்புலகு பிரகாசமான எதிர்காலத்தில் இருக்கிறது என உணர்ந்தாலும் முன்னோர்கள் வழிவிட்டு இந்த அசல் கவிஞனை அவனது நிலத்திற்கு அனுப்பிவைக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

*

நினைவோ ஒரு ஞமலி  என ஒரு நாஸ்டால்ஜிக் தொடர் எழுதுவது போல போக்கு காட்டிவிட்டு என்னென்னமோ எழுதறியே என எனக்கே தோன்றுவதால், அதற்கும் காரணம் சொல்கிறேன். எங்க வீட்டு பழுவாக்கிங் போகுகையில் மனோகரா படத்து சிவாஜி போல என்னை அழைத்து வரச் சொல்லவில்லை இழுத்து வரச் சொன்னீர்கள்சொன்னீர்கள் என்று சொல்வது போல வளைந்து நெளிந்து இழுத்துச் செல்லும்.

கிட்டத்தட்ட என் நினைவுகளும் அப்படித்தான், இப்படியெல்லாம் ஒரு சங்கிலிப் பிணைப்பை ஏற்படுத்தி தான் ஏதையாவது வெளிக்கொணர முடியும்.

எனது அசல் பெயர் வேற காளிதாசன் இல்லையா? துணைப்பாடத்தில் கதாப்பாத்திரங்கள் பேசுவது போல கற்பனையாக எழுதுக என்று கேள்வித்தாளில் வரும் கடைசி ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து பக்கம்பக்கமாக கதையை எழுதிவிட, அதைப் பாராட்டிய தமிழம்மா கவிஞர் காளிதாசன்காளிதாசன் என்று பெயர் சூட்டினார். ஆனால் நான் எழுதியது சிறுகதை' தானே என்று அவரிடம் குறுக்கிட்டுப் பேசாமல் வேறு வழியேயில்லை ஒரு நாலு கொயர் நோட் வாங்கிட வேண்டியதுதான். என கவி வேடம் பூண்டேன்.

அப்பாவின் கவிதைகளை காபி பேஸ்ட் செய்ததிலிருந்து, நிறைய .வி கவிதைகளை வாசித்து எழுதி வைத்துவிட்டேன். (பிற்காலத்தில் இந்தப் பெயரில் எழுதாமல் இருப்பதன் காரணமும் அதுதான்). ஆனாலும் பள்ளி வாழ்க்கையிலேயே என் கவிதை பப்ளிஷ் ஆகிவிடும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

எனது +1 மற்றும் +2 தூத்துக்குடியில் (தாய்மாமன் வீட்டில் தங்கி படித்தேன்) அந்த காலம், விஜய், அஜித்திற்கான பகை உச்சத்திலிருந்த காலம். தூத்துக்குடி என்பதால் ரசிகத்தன்மைக்குள் அடிதடி என்பது சர்வசாதாரணம். நான் அந்த காலத்து தலதளபதியாக எல்லா கோஷ்டியையும் சமாளித்து வந்தேன். அப்போது ஜூலை மாதம் என நினைக்கிறேன் சிட்டிசன் வெளிவர இருந்தது. அஜித் ரசிகர் மன்றக் குஞ்சுவில் ஒன்று, “நீ தான் கவிஞனாச்சே எப்படியாச்சும் ஒரு கவிதை எழுதிக் கொடுகொடு என்று கேட்டது.

அப்போது அஜித் ரசிகர்கள் தான், கொஞ்சம் தடாலடியான ஆட்களாக இருந்ததால் அவர்களுக்காய் ஏதாவது ஒன்று செய்துக்கொடுத்தால், நமக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும் என நம்பினேன். ஏனென்றால் தூத்துக்குடி என்றால் எப்ப வேணும்னாலும் என்ன வேணும்னாலும் ஆகும் என ஒரு நம்பிக்கை. கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கவும் செய்தது. மூன்று பேருக்கு மேல் ரோட்டில் ஒன்றாக நின்றால் ரோந்து போலீஸ் விசாரிக்காமயே விரட்டுவார்கள்.. பெண்கள் பள்ளி அருகே இப்படி நின்றதால், இரண்டுமுறை நானே மயிரிழையில் தப்பி ஓடுய அனுபவம் வேறு. 

நான் தூத்துக்குடியில் வசிக்கிறேன் எனும் அச்சத்திலேயே இருந்தேன். ஆகவே அஜித் ரசிகனாக எனக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என ஒரு நம்பிக்கை இருந்தது. அப்போது தீனா படத்தில் அஜித் ஒரு தாதாவாகவே வந்துவிட்டதால் பல ரௌடி மீன்களும் அஜித் ரசிகத் தெப்பக்குளத்தில் மட்டுமே நீந்துவதாகவும் நம்பினோம். இப்படியான ஒரு காலத்தில் தான் சிட்டிசன் படத்திற்கு போஸ்டருக்கு கவிதை எழுதும் வாய்ப்பு அன்னாருக்கு வந்தது. நானும் சில எழுதித்தந்தேன் பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா போன்ற அன்பை பாலில் இருந்து கடைந்து எடுக்கும் வெண்ணெய் போன்ற வரிகள் அவை, ஆனால்?..

 இது சரியல்லலே!!
இது சரியா வராது மக்கா!!
ம்ஹூம் வேஸ்ட்லெ நீயெல்லாம்!!
என்கிற அளவுக்கு அவர்களிடம் என் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது.

அந்த நாளும் வந்தது.. அக்கவிதையை காண்பித்தேன்..

ஆசான்.... தெரெச்சுட்ட நீ... நம்ம போஸ்டர் எப்படி ஊரையே தெரைக்கும்னு பாரேன்

எனக்கோ மீண்டும் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிட்ட நிம்மதி. சைக்கிள் பஞ்சர் என்றோ ஏதோவொரு காரணத்தாலோ அன்று மாமாவோடு ஸ்கூட்டரில் போகும்போது அந்த போஸ்டரில் என் பெயரும் இருந்தது சிட்டிசன் காளிதாசன்' என்று... கூடவே கவிதையும்.

தறுதலைங்க தறுதலைங்கஎன்று பொதுவாக, சினிமாவுக்கு போஸ்டர் ஒட்டுபவர்களைத் திட்டியபடியே ஸ்கூலில் இறக்கிவிட்டு, அவர் அலுவலகத்திற்கு போய்விட்டார். எனக்கு தான் முத்தமிடும்போது காதலியின் அப்பன் பார்த்துவிட்டதைப் போன்ற திகில்.

வகுப்பறைக்குள் சென்றாள் நான் முதல் ரேங்க் வாங்கியதற்கு கூட கிடைக்காத பாராட்டுகள்..

“ச்சடு.. நீ தாம் சரக்கடிக்க மாட்டியே. இன்னிக்கு  நாம சிரோன் போகலாம் மக்காஎன்று ஒரு மில்க்‌ஷேக் பார்லருக்கு போய் கொண்டாடிவிட்டோம். அன்று தான் முதன்முதலாக ஸ்மூதீஸ் என்றால் என்னவென்றே அறிந்தேன்.. நான் முதன்முதலாக சாப்பிட்ட ஷார்ஜா ஷேக், இப்பவும் என் ஃபேவரைட்களில் ஒன்று. அது சரி, நான் இன்னும் அந்த கவிதைய சொல்லலையே..

ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
அஜித்தை எதிர்த்தா
அன்னிக்கா சாவு” (பக்கத்துல ஒரு அருவா )
 
நினைவுகள் இன்னும் குலைக்கும்...