செவ்வாய், 1 மே, 2012

என் கனவு !! எனக்குத் தெரிந்த இறைவன்

ஊரின் துயில் 
கலையும் முன்னே
வியர்த்து வழியும் கால்கள் 
ஊரின் எல்லைக் கோட்டைக் கடந்தது.

நிற்காது ஓடிக் கொண்டிருக்கும்
கால்களுக்கு
காத தூரம் முன்னரே
களைப்பு வந்து விட்டது.

நிறுத்தாமல் இயங்கும் பயணத்தில்
தூரத்து கிழக்கின்
பரிதிக் கனியைப்
பறிப்பது தான் இலக்கு.

சிறகை விரிக்கும்
புள்ளினங்கள் கூட
என் கால்களை பார்க்கும்
ஆச்சரியமாய் !!

நீலத்தில் விழுந்த தங்கக் குளம்பாக
கதிரவன் குளித்த தண்ணீர் எச்சங்கள்
சாந்தமாய் அலை வீசும் .

தினமும் தெரியும் தூரம்
இன்றுக் குறைந்ததாய்த் தெரிய
களைப்பைக் களைந்து வேகம்
கொள்ளும் என் ஓட்டம்

கிட்ட வந்துவிட்ட கடலில் கூட
தாமதியாமால் கால்கள் வைத்து
மீண்டும் பிடித்தேன் அதே ஓட்டம்

கால்கள் படும் இடமெல்லாம்
சிதறும் உப்புத் தண்ணீர்
கால்களின் வியர்வைத் துடைத்து
ஒத்தடம் கொடுக்க
ஓட்டம் தொடர்ந்தது

ஒரு ஆமை,
இரண்டு முதலையைத்
தாண்டி திமிங்கிலத்தின்
முதுகில் கால் வைத்து
எட்டிப் பறிக்கத் தாவினேன்
கதிரவன் மீது!!

என் தலைக்கு மேல்
தூங்கிக் கொண்டிருந்த
அலாரம் , என் காதைக்
குடைந்து எழுப்பி விட்டது !!

நித்தமும் காணும் கனவில்
இன்று எட்டுமளவு சென்றுவிட்டேன்
ஆயினும் பறிக்கவில்லை !!

எனக்குத் தெரியும்
ஊர் என்பது என் உடல்
பாதை என்பது என் கர்மம்
கால்கள் என்பது என் மனம்
கடல் என்பது அவன் அருள்
இடர்கள் எல்லாம் என்
ஆசை,காமம்,மோகம்
சூரியன் என்பது என் ஏகன்
ஓட்டம் என்பது என் தியானம்

2 கருத்துகள்:

  1. அருமை!! கவிதையை மறுபடியும் ஒரு முறை முதலிலிருந்து வாசிக்க வைத்தது, தங்கள் உவமைகள்!

    பதிலளிநீக்கு