ஞாயிறு, 6 மே, 2012

என் ஊர் நாகலாபுரம்



            சொந்த ஊரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று அமர்ந்திருக்கிறேன், நமது நாடு கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுதான். கிராமத்தில் பிழைக்க வழியில்லாமல் நகரத்தை அண்டிப் பிழைக்கும் நரக வாழ்வில் நாம் இழந்துவிடுவது எத்தனையோ உள்ளன, அதில் ஒன்று நம் இயல்பு. பத்துப் பதினைந்து தலைமுறைகளாக நிலத்தில் காலூன்றி விவசாயக் கறை படிந்த கிராம வாழ்வை, மழை மீட்டும் மாலைப் பொழுதிலோ, முழு நிலவுக் காலங்களிலோ நினைத்துப் பார்ப்போம்.

            என் ஊர், இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின், விளாத்திக்குளம் தாலுகாவில் உள்ள நாகலாபுரம் என்ற தேய்ந்து போன கிராமம். கிராமியம் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கும் இவ்வூரை விழுங்குவதற்கு ரியல் எஸ்டேட் வெள்ளை உடைகள் அலைந்துக் கொண்டிருக்கும் கிராமம்.இதன் வரலாறு குறைந்தது ஆயிரம் வருடங்களாவது, எனக்குத் தெரிந்து 800 ஆண்டுகளுக்கான கதையினை தேடிப்பிடித்துள்ளேன். இந்த ஊரின் சந்தை இதன் தொன்மையை வரலாற்றில் இருந்து எடுத்துக் காண்பிக்கிறது இன்றளவும்.

             பாளையக்காரர்கள் ஆட்சி செய்தபோது, புதூர் சமஸ்தானத்தில் இருந்த இக்கிராமத்தில் பல சமுதாயங்கள் இருந்து வந்தன. இன்று பல சமுதாயங்கள் அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டன. அதற்கு மிக முக்கிய காரணம் கரிசல் மண்ணில் அடிக்கடி ஏற்பட்டுவிடும் பஞ்சம் ( மூன்று ஆண்டுகள் வரை ஒரு மழை கூட இல்லாது போகும் சாபம் கொண்ட மண் , அருகிலிருக்கும் வேம்பாறு எனும் கிராமத்தில் வருடத்திற்கு இருபதிலிருந்து - இருபத்தைந்து நாட்கள் மட்டுமே நீர் வரத்து இருக்கும் என்றால் அங்கு விவசாயம் இருக்கும் ). 

               இந்த மண்ணில் தான் தமிழ் இஸ்லாமியப் புலவர்களுள் முதல்வரான உமறு புலவர் பிறந்தார், இவர் பின்னர் எட்டயபுர சமீனில் அரசகவியாக வாழ்ந்துவந்தார். கட்டபொம்மனின் பாசறை இந்த ஊரிலே இருந்து வந்தது, அதற்கான வரலாற்றுச் சான்றுகள் சென்னை அருங்காட்சியத்திலிருக்கும் ஜக்கம்மா சிலை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஊர் என்று ஒரு குறிப்பைக்கானலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சியில், கலெக்டர் ஜாக்சன் துறையின் ஊழலை பட்டியலிட்டு சென்னை மாகணத்தில் நிரூபித்த கட்டபொம்மனின் அமைச்சர் தானாதிப் பிள்ளையின் ஊரென்றும் சொல்லுவர், இதற்கு பழிவாங்கும் பொருட்டு அடுத்த கலெக்டர் இவரைப் பிடித்து, இவ்வூர் சந்தைக்கு எதிரே உள்ள மரத்தடியில் சிரச்சேதம் செய்து உடலை மட்டும் அங்கேயே போட்டுவிட்ட வரலாறும் உண்டு ( அவர தலையை எடுத்துக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வைத்து பொது மக்கள் அனைவரையும் கட்டயாமாக பார்க்க வைத்தனர் என்றும் சொல்லுவர்)

இந்த ஊருக்கு அருகில் புகழ்பெற்ற "இருக்கன்குடி மாரியம்மன் கோவில்" உள்ளது. இந்த ஊரின் கிழக்கிலே வாழ்ந்து வந்த "ரெட்டியப்பட்டி குருநாதர்" மடம், (Tnagar ரங்கநாதன் தெருவில் உள்ள ரெட்டியப்பட்டி குருநாதர் மடம் அவர் அறவே விரும்பாத ஆடம்பரத்தை  பளிங்கு மாளிகைக்குள் அவருக்கு திணித்துக் கொண்டிருக்கிறது, அந்த ஊர் மட்டும் தேய்ந்துக் கொண்டே இருக்கிறது ).அந்தக் கரிசல் மண்ணில் வாழ்ந்து வந்த மக்களின் நம்பிக்கையில் கலந்த ஒரு விஷயம். அந்த ஊரின் தனிச் சிறப்பாய் நான் நினைப்பது ஊரின் உள்ளே பள்ளிவாசலும், சர்ச்சும் அதைச் சுற்றிப் பல கோயில்களும் அதன் நம்பிக்கைகளும் அமைதியாக வாழ்வது தான். 

     இன்று உமறுபுலவருக்கு என்று மணிமண்டபம் உள்ளது, பல கோயில்கள் உள்ளன எனினும் ஒரு கல்லூரி இல்லை, ஒரு தொழிற் கூடம் இல்லை, அடர்ந்துக் கிடக்கும் கருவேல மரங்கள் இதன் சொற்ப மண்வளத்தையும் உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. முதலிலெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் ஊர்த்திருவிழாக்களை நம்பி தான் அந்த ஊரில் பொருளாதார இயக்கமே இருந்து வந்தது, இன்றளவும் கூட அந்த ஊர் திருவிழாக்களில் பல ஊர்களில் இருந்து தம் கிராமத்தை அடைந்து , கரிசல் வாசத்தை முகர்ந்து செல்லும் குடும்பங்கள் பல உள்ளன. ஊரின் விவாசாயம் பற்றி நான் எண்ணிப்பார்க்கும் இதே வேளையில், அந்த ஊரின் கடைசி விவசாயி யாரென கேட்பாரற்று வளர்ந்து கிடக்கும் சொளத்தட்டைகள் தங்களுக்குள் விவாதம் செய்துக் கொண்டிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக