வியாழன், 27 அக்டோபர், 2016

ஒரு கோடரியின் கூர்பிளவில்

ஒரு கோடரியின் கூர்பிளவில்
(வரலாற்றினைப் பொய்களாக்கி வணிகம் செய்பவனின் உபவரலாறு)



ஞாயிறு அதிகாலை வரை சனியின் இரவாகவே நீண்டிருந்ததை ஹரி அழகனின் கண்களில் தெரிந்து கொள்ள முடிந்தது. கொச்சியில் நடைபெற இருக்கும் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொள்வதற்கான முஸ்தீபுகளில் இருக்கும் போதும் ஃபேஸ்புக்கில் நிலவரம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்க ஆரம்பித்தான்.

கவுச்சில் அமர்ந்தபடி லெமன் டீயும் ஆப்பிளும் ஒவ்வொரு விடியலுக்குப் பின்பும் வழக்கமான ஒன்று தான். ஆப்பிள் கடிப்பதற்கல்ல, கொறிப்பதற்கு. ஐபேடில் செய்திகளைக் கொறிப்பதற்கு முழுவதுமாக மாறியிருந்தாலும், அதற்காகச் செய்தித்தாள்கள் வாங்கப்படுவது நிறுத்தப்படவில்லை. தனது விசுவாசிகளை அதிகமாக நேசிக்கும் ஹரி, தன் விசுவாசிகளின் நிறுவனங்களையும் நேசித்துக் கொண்டிருப்பதன் குறியீடு அது.

சென்ற ஆண்டுக் கண்காட்சியில் பரிசோதனை முயற்சிக்கே கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை இந்த வருடமும் பெற வேண்டிய ஆசை வயிற்றில் கட்டியாக உருண்டுக் கொண்டு இருந்தது. இரண்டு ஹிமாலயா கேஸெக்ஸை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். வளி செல்வதற்கு வழிவிட்டு சோஃபாவின் கைப்பிடிமானத்தில் கால்களைப் போட்டுக் கொண்டான். ஐபேடினை கண்ணாடி மேஜையில் வைத்துவிட்டு, சார்ஜில் இருந்த மடிக்கணிணியை விடுவித்துத் தொடைகளில் வைத்துக் கொண்டான்.

இன்பாக்ஸில் கூடுதலான நோட்டிஃபிகேஷன்கள் இருந்தன. எம்.கே.மாயவனின் சுட்டியை மட்டும் திறந்தான்.

“அவா ரியாக்‌ஷன் இன்னும் பத்தலடா!!”

“ம்ம்”

“ஏதாச்சும் ஸ்பேஸ் வாங்கிக் கொடுக்கிறியா, இல்லாட்டி நானே நம்ம ஏரியால எழுதட்டுமா”

“Please wait. But I need your English Version Only”

“எப்படியும் என்னைத் தமிழன்னு ஒருத்தனும் ஏத்துக்கப்போறதில்ல ” 
வன்மத்தை மறைத்து வைத்திருந்த ஸ்மைலிகள் ஒன்றுடன் ஒன்று பரிமாறிக் கொண்டன.

மடிக்கணிணியின் சூடு அவன் சாய்ந்திருக்கும் கோணத்தை மாற்ற வைத்தது, எதிரேயிருந்த கண்ணாடி மேஜையில் அதனை வைத்தான். மடிக்கணிணிக்கு கீழே இரண்டு அழைப்பிதழ்கள் இருந்தன. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான அமைப்பு ஒன்றினை நிறுவும் விழாவில் இந்தியாவின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற குழுவில் இவனும் அங்கத்தினராக இணைவதற்கான அழைப்பு அது. மற்றொன்று இந்திய அளவில் பதிப்பாளர்களை ஒருங்கிணைத்துப் பதிப்புத்துறையில் அடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்வதற்கான வருடாந்திர கூட்டத்திற்கான அழைப்பு.

மடிக்கணிணிக்கு அருகில் அருகில் அந்தக் கன்னடத்தமிழ் கவிஞரின் பழைய கவிதைத் தொகுப்பு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் மஞ்சள் ஸ்டிக்கரில் “JAN’17 - ஹரிஹரன்” என்று ஒட்டப்பட்டிருந்தது. கணிணியின் திரையில் ஸ்டிக்கி நோட்ஸ்களில் தான் செய்ய வேண்டிய பல்வேறு வேலைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.

கொச்சி கலந்தாய்வில் தமிழகத்தில் உள்ள பதிப்புத்துறையின் சவால்கள் என்கிற தலைப்பில் பேசவிருந்த தலைப்பிற்கு இவனது உரை பாதியளவு தயாராகிக் கொண்ருந்தது. மீதத்தை தட்டச்சு செய்ய ஏதும் தோன்றாததால் தனது உரையில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்துக் கொண்டிருந்தான். பேராசிரியருக்கு நேர்ந்த அவலங்களைச் சொல்லி அந்த உரையின் பெரும்பகுதி தயாரிக்கப்பட்டிருந்தது. இடையிடையே தன் தந்தையின் பெரும்பகுதி எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன. தன் சொந்த கருத்து சிலவற்றிலும் தன் தந்தையின் பெயரைச் சொல்லியிருந்தான். அவனது தந்தை இறந்த பின்னும் எழுதிக்கொண்டிருக்கும் சிலுவையைச் சுமக்காத ரட்சகர். தன் தந்தைக்குப் பின்பு கொள்ளை மகசூல் பேராசிரியர் நிலத்தில் தான் என்பது ஹரி அழகனின் கணக்கு. தற்பொழுது தான் வெள்ளாமை விதைக்கப்பட்டுள்ளது அறுவடைக்கு இன்னும் ஒரு வருடமேனும் காத்திருக்க வேண்டும். கணிணியின் முகப்பில் பேராசிரியர் பெயர் போட்டிருந்த ஃபோல்டர் இருந்தது, அதில் சப் ஃபோல்டர்களாக எம்.கே.மாயவனின் கட்டுரைகள், அண்மையில் தொடங்கப்பட்ட ஆங்கில நாளிதழின் பெயரில் ஒன்றும், தமிழ் பதிப்பில் ஒன்றும் சப்ஃபோல்டர்களாக இருந்தன, மற்றொரு ஃபோல்டரில் இந்தச் சர்ச்சைகள் குறித்துப் பிரசுரமாகியிருந்த வெவ்வேறு கட்டுரைகள்.

தொடர்ச்சியாக அடித்துக் கொண்டேயிருந்த அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அழைப்பில் இருந்தது, அந்த நாளிதழின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கிருதாகரன்.

சற்று நேரம் பார்த்துவிட்டு அந்த அழைப்பை எடுத்துப் பேச ஆரம்பித்தான்.

"சொல்லுங்க க்ருதா, எப்படி இருக்கிங்க”

“இந்த வருஷம் எத்தனை புக் கொண்டு வரப்போறிங்க, இருக்குற எல்லா விருதும் வாங்கிருவிங்க போலருக்கு.”
மிகச் சௌகரியமான நிலையில் சிரித்துக் கொண்டான்.

“பின்ன தென்னாட்டின் பீ.சாய்நாத் நீங்க தான. ம்ம் ”
“அப்படி இல்லன்னுலாம் சொல்ல முடியாது. அவாகிட்டயும் நாங்க ரைட்ஸ் வாங்க முடியல, நீங்களும் சொந்தமாத்தானே கொண்டு வற்ரீங்க”
“ஜஸ்ட் ஃபார் ஃபன், இந்த வருஷமும் உங்க புக் நம்ம ஸ்டால்ல தான், டாப் செல்லரா இருக்கும்”
எதிர்முனையின் கேள்விக்கு அவனது முகம் சற்று மாறியது.
“வாஸ்தவம் தான் ஆனா ப்ரொஃபசர்க்கு இந்த வருஷம் ஸ்லாட் கெடையாது அடுத்த வருஷம் தான் கொண்டு வரனும். அதுக்கு முன்ன ரீலாஞ்ச் பண்ண சில இவென்ட்ஸ்லாம் பண்ணனும் அதுக்கு இன்னும் அவர் ரெடியாகல ”
“சே சே… ஸ்கூல் பையன் மாதிரி. சின்ஸியரா வேலை செய்யுறார்”

எதிர்முனையின் சப்தமான சிரிப்பு. ஹரியிடம் கோபத்தைக் கொணர்ந்தது.
“ஒரு முக்கியமான வேலைல இருக்கேன், அப்புறம் பேசலாம்” எனத் துண்டித்தான்.

மலச்சிக்கலுக்காக மருந்து சாப்பிட்டிருந்தும் ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை, கழிப்பறையில் உட்கார்ந்து பதினைந்து நிமிடங்கள் ஆகியும் எந்த பலனும் இல்லை. போனில் கிருதாகரன் பேசியது ஞாபத்திற்கு வந்தது.

’சே சே… ஸ்கூல் பையன் மாதிரி. சின்ஸியரா வேலை செய்யுறார்’
’நீங்க தான் நாமக்கல் போர்டிங் ஸ்கூல விட ஸ்ட்ரிக்டான ஸ்கூல் நடத்துறிங்களே அப்புறம் கொடுத்த ஹோம்வொர்க்க செய்யலன்னா விடுவியளா’

விழுங்கிய மாத்திரைகளின் அளவிற்கே வெளியேற்றம் ஆனதில். ஆறுதல் கொள்வதா, கோபம் கொள்வதா என்று தெரியவில்லை. ஆனால் வெளியில் தொடர்ந்து அலைப்பேசி அடித்துக்கொண்டிருந்தது எரிச்சலூட்டியது. இன்னும் அரை மணி உட்கார்ந்திருந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை, கிளம்பலாம் என்று தோன்றியது. வெளியே சென்று அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான். மணிமாறன், செல்வம், அர்விந்ராஜ் என எல்லோரும் அழைத்திருந்தார்கள். அர்விந்ராஜ் குறுந்தகவலும் அனுப்பியிருந்தார்.

அன்றைய தினம் எதிர்பார்க்காத திருப்பத்தை உருவாக்கியிருந்தது.
கீழே அலுவலகத்திற்குச் சென்று புதிதாக அச்சடித்து வரப்பட்டிருந்த பிரதிகளை எடுத்து வந்தான். பச்சை வண்ண அட்டையில் ”கோடரியின் பிளவில்” என்கிற நூல். அதற்குள் அமெரிக்காவிலிருந்தும், கனடாவிலிருந்தும் அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தன. முகநூலினைத் திறந்தால் புல்லுருவிகள் பட்டியலில் இருக்கும் அத்தனைப் பதர்களும் தமது பதிப்பகத்தைக் கேலி செய்து பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தனர்.

“ஃபக்”

டீச்சரை போனில் அழைத்துக் கண்டபடித் திட்டினான். மணிமாறன், டீச்சர் உட்பட தன் பதிப்பக வேலையாட்கள் அனைவரிடமும் கடுமையாய் நடந்துக் கொண்டான். பேராசிரியரின் அழைப்புக்குப் பதில் சொல்லவும் இல்லை.

எம்.கே.மாயவன் அழைப்பில்..

ஸ்பீக்கரில் போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

“சொல்லுங்கோ”

“என்னடா அம்பி.. ப்ளர்ப இப்படியா போடுவா. இதெல்லாம் செக் பண்ண மாட்டானா அந்த மணிமாறன்.”

“ஒரேயொரு ஆள நம்பி என்ன ப்ரயோஜனம். ஹோல் டீம் சக்ஸ்”
“பழைய இதழ்களுக்கு லாகின் வைன்னு சொல்லிண்டே இருந்தேன் பாத்தியா”
“மாமா! அவாட்டா இல்லாத காசா! லாகின் பண்ணிப் படிச்சுட்டுப் பேசுவா.”
“ஆல் தெ க்ரெடிட் கோஸ் டூ ஒன், நவ் ஐ சுட் ப்ளேம் தெ ஆத்தர்”
“அவாள தான் கொன்னுட்டாய்ங்களே”
“மாமா”
“ஐ மீன் செத்துட்டாளே”
“மாமா நான் டீச்சர சொன்னேன்”
“ஹி ஹி அம்பி.. நீயே டீச்சர ஆத்தர்னு சொல்லலாமா, அவுங்களும் அதே தான சொல்றாங்க”
“இட்ஸ் நாட் அ டைம் ஃபார் ஜோகிங்”
“சாரிடா அம்பி, அவாளையே ஏதாச்சும் மறுப்பு எழுதச் சொல்லலாமே”
“நீங்க அந்த ஆர்டிகிள படிச்சிங்களா”
“ம்ம் என்னதான் புலின்னாலே வெறுப்பா இருந்தாலும், அவுங்கள க்ரிட்டிசைஸ் பண்ணா கூட பிடிக்கலடா அம்பி”
“சரி நான் அவா கிட்ட பேசிண்டு வாரேன்.”

கொச்சி அழைப்பிதழைப் பார்த்தான். மீதமிருக்கும் தனது உரையை நிறைவு செய்ய முடியுமா என்றும் அவனுக்கு சந்தேகம் எழும்பியது.
கீழேவந்திருந்த விஸ்வநாதனிடம் அவனது சக ஈழத்து ஆட்கள் யார்யாரெல்லாம் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்கிற பட்டியலைத் தயாரித்துத் தரும்படி கேட்டான். சென்னை வரை போகலாம் தயாராக இருக்க தன் டிரைவரிடம் சொல்லி வைத்திருந்தான்.

ஆனாலும், தன் மலச்சிக்கல் குணமாகாமல் பயணிக்க முடியாது என்று தெரிந்துருந்தது. சாப்பிட்ட மருந்துகள் பயணத்தின் போது வேலையைக் காண்பித்துவிடக் கூடாது அல்லவா.

அது ஒரு முன்னாள் பெண் விடுதலைப் புலியின் சுயசரிதை நூல். அந்த டீச்சர் எழுதிய நான்காண்டுகளுக்கு முன்னர்த் தன் இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி நூலட்டையின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இணையத்தில்ன் சமூக ஊடகங்களில் அது எப்படியோ அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. தனது துதிபாடிகளால் கூட பதில் சொல்லமுடியவில்லை, மற்ற நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் விசுவாசிகளும் இந்த விசயத்தில் சரியாக பதில் சொல்லமுடியாது தவித்துக் கொண்டிருந்தனர். கொச்சி பயணத்தை ரத்து செய்துவிட்டு தன் வீட்டிலேயே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தான். அதுவரை மணிமாறன், டீச்சர் ஆகியோரை மவுனம் சாதிக்கச் சொன்னான்.
பேராசிரியர் போல மற்றவர்கள் எல்லோரிடமும் பெர்ஃபெக்‌ஷனை எதிர்பார்த்தது தவறு தான் என்று தோன்றியது. அயல்நாட்டுக் ப்ளாக் கிவி பப்ளிஷர்ஸுடன் இன்னும் சில புத்தகங்கள் மொழிபெயர்த்துப் போடும் திட்டங்களுக்கு இது போன்ற அம்பலங்களால் ஊறுகள் நேருமென அவனது கவலை மலச்சிக்கலுக்கு மேலும் உதவிகள் புரிந்தன.
***
அடுத்த நாள் அலுவலகத்தில் சந்திப்பு:

டீச்சர், மாயவன், பேராசிரியர், மணிமாறன், செல்வம், விஸ்வநாதன் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். ஹரியின் வெள்ளை முகம் சிவந்திருந்தது. குளிரூட்டப்பட்டிருந்த அந்த அறையில் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியம் தெளிக்கப்பட்டிருந்தது முன்னேற்பாடாய். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்களேயொழிய பெரிதாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஹரியில் குரல் சப்தமாக ஒலித்தது?

 “ப்ளடி, இது என்ன வெறும் புக் சேல்ஸ் மட்டும்னு நெனச்சுக்கிட்டிருக்கீங்களா”

சப்தமாக ஒலித்தது ஹரியின் ஆரம்பப்பேச்சு. தனது கோபத்தில் கிவியுடன் போட்டிருக்கும் பெருத்த திட்டங்கள் பற்றியோ, தமிழ் டயாஸ்போரா அமைப்பு பற்றிய விவரங்களோ, கொழும்பு சந்திப்பில் உடன்பாடாகியிருந்த சில ஏற்பாடுகளின் சுவடுகளும் கலந்திருந்தது எம்.கே.மாயவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு 58 லட்சம் பெயிட் அப் ஷேர் கேபிடல் உள்ள நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியின் கவலையாக மட்டுமே தெரிந்தது.

 “கவுண்டருங்க மாதிரி கல்வியில் ஃபர்ஸ்ட் ஜெனரேசன், செகண்ட் ஜெனரேஷன் மக்களா இருந்தாங்கன்னா ஏதாச்சும் ரியாக்ட் பண்ணுவாங்க அத நாம யூஸ் பண்ணிக்கலாம். இவுங்க வள்ளலாரையே வம்பிழுத்த கோஷடிங்க.” என்று பேசிக் கொண்டிருந்த எம்.கே.மாயவனைப் பேராசிரியர் முறைத்துக் கொண்டிருந்தார்.

“அதோட நிறுத்துவாங்களா இந்த நாம் தம்ளர் க்ரூப்ஸ், அப்புறம் மே மாசம் காலண்டர், அவுங்கவுங்க வீட்ல தண்ணி வராததுக்கும் பாப்பான் தான் காரணம்னு சொல்ற கருப்புச்சட்டை கும்பல் எல்லாரும் கூடிருவாங்க”

“அப்போ தோழர்கள்லாம்??” பேராசிரியர் அப்பாவி என்று அவ்வப்பொழுது நிரூபிப்பதுண்டு.

“இது ஈழம் ப்ரொஃபஸர், அவா கண்டுக்கமாட்டா. நமக்கு தான் சப்போர்ட். மறுபடியும் ப்ரியாணியோட மாநாடு ஏற்பாடு செய்யனும், ஹரி கருப்பு சட்டை போடனும்” என்று சிரித்தார்.

“எல்லா தோழர்களும் ஒன்று கிடையாது” என்கிற பேராசிரியரின் பதில் யார் காதிலும் விழவில்லை.

ஹரி தனது கருப்பு கலர் பைஜாமாவை இஸ்திரி பண்ணவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

இறுதியாக டீச்சரே வாய் திறந்தார். ”நான் அந்தக் கட்டுரைய அவுங்களே என் சுயசரிதைக்கு பயன்படுத்திக்கறேன்னு சொல்லி என்னிடம் ஒப்புதல் வாங்கிதான் பயன்படுத்துனாங்கன்னு ஃபேஸ்புக்ல போட்டுடுறேன்”

எல்லோருக்கும் அதில் ஒப்புதல் இருந்தது. வேறு வழியேயில்லை.
“சரி, உங்களுக்கு சப்போர்ட்டா யாரப் பேசவைக்கலாம் க்ருதாகரன சொல்லட்டுமா” எனும் போது படபடப்பு மிகுந்திருந்தது அவன் பேச்சில்.

“வேண்டாம் சார். நானே ப்ரொஃபஸ்ர் பாஸ்கரசாமி கிட்ட பேசியிருக்கேன்.”

“குட் அப்போ மெய்மை பத்திரிக்கைல ஆர்டிகிள் ஈஸியா வரும்”

“ம்ம்ம்”

“நல்ல யோசனை அம்பி”

“விஸ்வாகிட்ட சொல்லி ஃபேஸ்புக் சாட்டிங்க்ஸ் மாதிரி ஃபோட்டோஷாப் ஃபைல்ஸ க்ரியேட் பண்ணி அனுப்பச் சொல்லுங்க. ஒரு ஃபேக் ஐடில ஒரு சாட்டிங் கிரியேட் பண்ணி, டேட்ஸ மட்டும் ஆல்டெர் பண்ணிண்டா போதும்”

எல்லோர் முகத்திலும் கொஞ்சம் தெளிவு பிறந்தது.

ஏதோ ஞாபகம் வந்தவனாக ஹரி -
”முக்கியமான ஒரு விஷயம், வேற ப்ளப் போட்டு அட்டை டிசைன் பண்ணி. அடுத்த பதிப்புன்னு சொல்லி ப்ரிண்ட் பண்ணுங்க. இந்த புத்தகங்களெல்லாம் பை பேக் பண்ணுங்க, ஆனா இந்தவாட்டி சத்தமே வராம..”

சட்டென தன் கன்னத்திலேயே அடித்துக் கொண்டார் பேராசிரியர். எல்லோரும் திடுக்கிட்டனர்.

சிரித்தபடி “கொசு” என்றார்..

”ஈழக்கொசு” என்று சன்னமான ஒலியில் எம்.கே.மாயவன் ஹரியின் காதைக் கடித்தார்.

அதே நேரம் மாத்திரை வேலை செய்ய 30 மணிநேரம் ஆகியிருக்க வேண்டும், நசுக்கிவிட்ட வளியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டான். இப்போது அவன் கழிப்பறைக்கு நம்பிக்கையுடன் தயாராகியிருந்தான். எல்லோர் முகமும் கோணிக் கொண்டிருந்தது.

எம்.கே.மாயவன் சன்னமான குரலில் “ஈழக்குசு” என்றார்.


தற்காலிகமாக ஒரு நிம்மதியுடன் மாடியில் இருந்த கழிப்பறைக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் அந்த நாளிதழ் மேஜையில் இருந்தது. ஐபேடில் செய்தி வாசிக்கும் பழக்கத்திற்கு மாறியிருந்த அவன், இன்று அந்த நாளிதழைப் பல மாதங்களுக்குப் பின்னர்க் கையில் எடுத்தான்.

உனக்கு வேலை வந்துருச்சு என்று நாளிதழைப் பார்த்து பேசியபடியே கழிவறைக்குள் எடுத்துச் சென்றான்.

            ****


-ஜீவ கரிகாலன்




புதன், 12 அக்டோபர், 2016

மோன நிலையிலே - 2

தத்தை நெஞ்சம்




இந்த இரண்டு மூன்று வருடங்களில் துருப்பிடித்து முறிந்து விழுமளவு மனம் சோர்ந்து போகும் நேரமெல்லாம் மீட்டெடுப்பு நிகழ்கிறது அம்முவால் தான். 

குறுட்டுக் கற்பிதங்களும், சீழ் பிடித்த வரலாற்று அறிவும், நுனிப்புல் கோட்பாடுகளும், 90 கீமீட்டர் ஆரமே பயண அனுபவமும் கொண்டவனின் துலாபாரத்தில் கொழுப்பு, திமிர் இரண்டும் எடைக்கு சரிநிகர். ஆனால் எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளியவள் அவள். அவள் கரிசனமிக்க அன்பு என்பது பாரபட்சமற்றது கீழத்தஞ்சையில் ஏதோ ஒரு பம்புசெட்டில் ஒற்றை நாளில் தன்னுடன் சேர்ந்து குளித்த ஒரு தோஸ்து(தோழி)க்கும் பல நாட்களாக இலக்கியம் குறித்து தீவரமாக தர்கம் புரியும் எந்த மானுடருக்கும் ஒரே அன்பு தான், அதே அளவு தான் பட்டாம்பூச்சிகளும் பறவைகளும் அவளுக்கு. செவ்வியல் இலக்கியங்களிலிருந்து, மேலை நாட்டு, மலையாள, மராட்டிய என ஏதாவது ஒரு இலக்கியத்துடன் தான் ஒரு உரையாடல் நிகழும், ஆனாலும் அவள் தன் சமையலில் மோர்க்குழம்பு வைத்த விதம் பற்றி ஒன்றொன்றாக விவரிக்கும் போதோ, வழக்கமான சுலைமானியை விடுத்து என்றாவது ஒரு ஏலக்காய் தேநீர் குடிக்கும் போதோ என்னிடம் பேசினால் என் நிலைமை உதறல் ஆகிவிடும்.

காக்கைகளற்ற ஊரில் தற்பொழுது வசிக்கிறாள் என்று சென்ற பதிவில் எழுதியிருந்தேன், அடுத்த பதிவிலும் அதே ஊர் தான் இதற்குள் கிடைத்த சில் நாட்கள் ஓய்வில் பல நூறு கி.மீட்டர்கள் அனுபவங்கள் சேர்ந்திருக்கும். காக்கைகளற்ற ஊரில் கிளிகளுக்கு பஞ்சமில்லையாம்.
போனில் பேச ஆரம்பிக்க வந்தாலே, ஒரு தத்தை அவளை பேச விடாமல் தடுக்கிறது. நான் பேசும்போது அவள் கேட்டுக்கொண்டிருக்கையில் எந்த சப்தமும் போடாமலிருக்கும் தத்தை, அவள் பேச ஆரம்பிக்கையில் சத்தம் போடுகிறது. ரொம்ப நேரம் அதே இடைஞ்சல் தான். பின்னர் அந்த தத்தைக்கு அவள் ஒரு பெயரை உச்சரிக்க சொன்னாள்.

ஆஹா டங் டிவிஸ்டரா என்று அலைவரிசையை மாற்றிவிட்டு அமைதியாக இருந்து கொண்டது. (என் பெயர் தான் அந்த டங் ட்விஸ்டர்)

அந்த தத்தைக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் தத்தை தனக்குப் பரிச்சயமில்லாத மொழியைப் பேச வேண்டும் என்று சொன்னதும் அமைதியாகி விடுகிறது. ஆனால் எனக்கு ஒரு மொழியைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதால் சத்தம் போடுகிறேன், தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நான் கூச்சல் போடுகிறேன். 50 வருடமாக எங்கள் ஊரில் எனக்கு முந்தைவர்களிடமிருந்து கற்றது இது தான், கூச்சல் போட. நான் எழுதினாலும் அது கூச்சலாகத் தான் இருக்கிறது. அந்த கூச்சலை விட உராய்ந்து போன பேனாவை காகிதங்களில் உராய்க்கும் சப்தம் மேலானது. பகுத்தறிவு என்று எழுத ஆரம்பித்த எங்கள் பேனாவின் கூச்சல் எழுத்துப்பிழையாக பார்ப்பனிய எதிர்ப்பை போதிக்க கூச்சலிட்டது.

இந்த இம்பொசிஷன் கூச்சல் ஒரு பக்கமிருக்க, இதற்குப் பழி வாங்கும் கூச்சல் இன்னொரு புறம். இடையில் அல்லேலூயா கூச்சல் வேறு.
இந்த கூச்சல் அருவருப்பாக மாற்றம் பெற்ற வரலாறு, இசையை கவின்கலையை ஒரு சமூகம் தொலைத்த வரலாற்றிட்கு இணையானது. 

ட்ராக்டர்களை எதிர்த்து பண்ணையார்களைக் கொன்றுபோட்டு மற்ற கணவான்களைத் துரத்திவிட்ட அரசியலின் வாரிசுகள் ட்ராக்டர் கடன் தள்ளுபடி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கும் மான்பு அரசியல் வரலாறுகளை உள்ளடக்கியது அந்த கூச்சலில் விளைந்தவை - கூச்சலின் மகசூல்களான இரைச்சல்கள். இரைச்சல்களாலும், கூட்டல்களாலும் கட்டியமைக்கப்பட்ட பெருங்குடும்ப கனவுக்கு அதிகாரம் இருந்தாலும் இல்லாவிடினும் எந்த பலகீனமும் ஏற்படவில்லை என்பது தாஜ்மஹால் வரை நீண்ட தூரப்பயணம் சென்று வந்த தத்தையின் கீச்ச் கீச்சு.

இப்போது தத்தைகளை அந்த கிராமம் இடைஞ்சலாகப் பார்க்கிறதாம், விவசாயத்திற்கு பெரும் எதிரியாம். இப்படித்தான் மயிலைக் கொன்று ஒரு கூறு நெல் போனஸாக வாங்கிய கரிசல் காட்டு வாழ்வியல் திரிபினை நான் சேகரித்துக் கொண்டிருந்த கதையில் அழகியலாக நினைத்துக்கொண்டிருந்தேன். உணவுச் சங்கிலியில் மனிதன் செய்கின்ற குளறுபடி தான் தத்தையினையும், மயிலையும் மனிதன் விரோதியாகப் பார்க்க வைத்திருக்கிறது.

மனிதன் முற்றிலும் இயற்கைக்கு எதிராக வாழ் ஆரம்பித்த பொழுதும், சென்னையில் நடந்திருந்த இயற்கைப் பேரிடரில் உண்மையிலேயே அரசு கொஞ்சம் மெத்தனமாய் இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும். சே!! ஒரு தொற்று நோய் கூடப் பரவவில்லை.

ஏற்கனவே நசித்துப்போன ஒரு சிறிய இனமாக ஜைனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அவர்களின் சுவடுகளைக் கூட அவர்களே மறந்து கொண்டிருக்கும் காலமிதில் ஓணம்பாக்கம் போன்ற தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மனிதநடமாட்டமுள்ள பகுதிகளில் பலநூறு அடிகள் குவாரிகள் குடைந்து கொண்டிருக்கப்படுகின்றன.

காவிரியைத் தவிர வேறு விவசாயிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று PRIMEஊடகங்களும், அவர்களது SUB PRIME ஊடகங்களும்(WATSAPP, FACEBOOK,TWITTER) ஏன் ஒரு போதும் கூவவில்லை.
சரி, “இந்த ட்விட்டரைப் பற்றி தத்தையிடமாவது கேட்டுச் சொல்” என்று அம்முவிடம் கேட்டேன். 

பாவம் அந்த தத்தை கீச்சும் ட்வீட்டுகள் உனக்குப் புரியாது போடா என்றாள்

உண்மை தான் எனக்குப் புரியாது தான். 

அவளிருக்கும் ஊருக்கு ஒரு புத்தகத்தை வாசிக்க அனுப்பலாம் என்று முகவரி கேட்டால், அந்த ஊரின் விலாசம் அவளுக்குத் தெரியவில்லை என்றாள், அவளுக்கு மட்டுமல்ல அந்த ஊரில் உள்ள மனிதர்களுக்கே அந்த விலாசம் தெரியவில்லையாம். அந்த அளவுக்கு தொடர்பற்று இருக்கும் கிராமம் என்று சொன்னாள் வெறும் காக்கைகள் இல்லாத, எருமைகள் இல்லாத ஊர் என்று நினைத்திருந்தேன் - கதவு எண், அஞ்சல் எண் கூட இல்லாத ஊராக இருக்கிறது.


ஆனால் அந்த ஊரில் 2ஜி கற்றை அலைவரிசையிலிருந்து அவளுடன் கட்செவி செயலி வழியாக மணிக்கணக்கில் பேச முடிகிறது என்பதில் எத்தனை ஆச்சரியம்? அவளுக்குத் தொலை தொடர்பு வாய்த்திருக்கிறது, ஆனால் கிட்டவே இருந்தாலும் அவள் நினைத்தால் தான் தொடர்பு கொள்ளவே முடியும். எனக்குத் தோன்றும் வியப்பு எல்லாம், அவள் அந்த ஊரை விட்டு சில மாதங்களில் கிளம்பிய பின் அந்த ஊரில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்று தான், குறிப்பாக அந்த தத்தைகளின் நிலை…