வெள்ளி, 9 ஜூன், 2017

பறவைகளின் கனியைத் திருடியவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

அந்த மழைக்காரியை எல்லோருக்கும் பிடிக்கும். அந்த மழைக்காரியை ஒருவருக்கும் பிடிக்காது. ஆம் அவள் எப்படி மழைக்காரியாக இருக்கலாம்.
யாவரையும் போலத் தானே அவளும் ஒருத்தி, அவளும் சிரிக்கிறாள், அவளும் பாடுகிறாள், அவளும் நடனமாடுகிறாள், அவளும் அரசியல் பேசுகிறாள், அவளும் கவிதை எழுதுகிறாள், அவளும் ஓவியம் வரைகிறாள், அவளும் சமைக்கிறாள், அவளும் வாசிக்கிறாள், அவளும் ஊர் சுற்றுகிறாள், அவளும் யோகநிலையில் இருக்கிறாள் என்று கேட்கலாம். ஆம் யாவரையும் போலத்தான் என்று தான் பதிலையும் தொடங்க வேண்டும்.

ஆனால் எல்லாவற்றையும் அவள் பரிபூரணமாக தங்குகிறாள். அது அவளால் மட்டுமே முடியும். ஒரு நிம்பூ சாய் குடிக்கின்ற அதே மனநிலையில் தான், அவள் மழையைக் கொஞ்சிக்கொண்டு இருப்பாள் அல்லது ஒரு abstract paintingஐ உருவாக்கிக் கொண்டிருப்பாள், இல்லையென்றால் சமூகத்தைச் சுரண்டும் super powerஐ define செய்து ஏசிக்கொண்டிருப்பாள். பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென லயித்தபடி பாடத்தொடங்குவாள். அது அவளால் மட்டுந்தான் முடியும்.
 
அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று சொல்லவே முடியாது. ஏனென்றால் அவள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல அருகதை அற்றவர்களாக அவளைத் தெரிந்து கொண்டவர்களுக்குப் புரியும். ஆனாலும் அவள் ஒரு லூசு, பைத்தியக்காரி, யோகினி, பைரவி, யட்சி, அழகி, கோபக்காரி… இப்போது அவள் மழைக்காரியாகத் திரிந்து கொண்டிருக்கிறாள்.

அவள் விஷேசமான சிரிப்புக்காரி, சிரிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லா வேலையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு கேட்க ஆரம்பித்துவிடுவோம். கோபப்பட்டால் அவ்வளவு தான், காணாமல் போன விமானமாக தேடிக்கொண்டிருக்க வேண்டியது தான், அப்போது அவள் ஒரு பெர்மூடா முக்கோணம். அவள் ஒரு மீரா, மீனாட்சி, ஆண்டாள், காரைக்கால் அம்மையார், அவள் ஒரு சௌந்தர்யா, அவள் ஒரு பயங்கரீ….

அவளை அழகுத் தமிழச்சி என்று சொல்லவே எனக்கு ஆசை, லைட்டா மலையாள வாடை வீசினாலும் அது தான் அழகு. இங்கே மலையாள வாடை வீசுவது என்பது எப்படி ஒவ்வாமையாக்கப்பட்டது என்கிற அரசியல், அவள் கற்றுக்கொடுக்காமலேயே நான் கற்றுக்கொண்டேன். அதனால் தான் அவள் பிறந்தநாளுக்கு ஆறு நாட்கள் முன்னாடியே எம்.ஜீ.ஆர் படத்தை அட்டைப்படமாக வைத்துக்கொண்டேன்.

அவளது தியானத்தில் என் நோய் சரிப்பட்டிருக்கிறது. அவளோடு சண்டை போடுவதற்கு நல்ல ஆகிருதி வேண்டுமல்லவா?

அவள் பார்க்கும் கோணத்தில் தமிழர்களால் வாழ்க்கையைப் பார்க்கவே முடியாது. தமிழர்களைப் பொருத்த மட்டில் ஓஷோ ஒரு கிளுகிளுப்பு – கண்ணதாசன் பதிப்பகம் வாயிலாக கிட்டும் கிளுகிளுப்பு மட்டுமே. இந்த ஐம்பது ஆண்டு காலத்தில், ஓஷோவையும் கண்ணதாசனையும் இத்தனை நெருக்கமாகப் பார்த்தால், அரசியலால் துரத்தப்படுவது மட்டுமே நடக்கும் என்று நான் உணர்வது சரிதான். அவள் தான் இன்னும் புத்தகம் போடவில்லையே.

அன்றொரு நாள் அவள் பழங்களைப் பறவைகளிடமிருந்து திருடியதாகச் சொன்னாள். அது அவளால் மட்டுந்தான் முடியும். ஏன்?
அதை அப்படி சிரித்துக்கொண்டே சொல்வதற்கு அவளால் தான் மட்டுந்தான் முடியும். அவள் ஒரு treehugger, தத்தைகளின் clubல் membership வைத்திருப்பவள், மேலும் அவை அவள் தோழியின் தோட்டத்தின் செர்ரீப் பழங்கள் தான். இருந்தபோதும் ஏன் அவள் திருடியதாகச் சொன்னாள். இந்த உரைநடையை அழகாக்க பொய் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் அவள் தன் தோழி தூங்கிய பின்னர், பறவைகளற்ற சமயத்தில் திருடியிருக்கிறாள். வாட்ஸப்பில் அதை எனக்கு அனுப்பி அலிபாபாவின் 40 நபர்களைப் போல் தன்னுடைய குழுவில் சேர்த்து என்னையும் திருடனாக்கினாள்.

  • நாளையே என்னிடம் உபநிடதம் பற்றி பேசலாம்
  • அரசியல் பேசலாம்
  • வெகுநாளாய் கணக்கில் பாக்கியிருக்கும் அந்த என்னுடைய போர்ட்ரெயிட்டையோ (மற்றவர்களுக்கு அது விநாயக்) அல்லது ரெண்டு கிலோ லட்டினையோ அனுப்பி வைக்கலாம்
  • அல்லது அவளது காதலனைப் பற்றி புகழ்பாடிக் கொண்டிருக்கலாம்.
  • இல்லை கடுமையாகத் திட்டிய யாரையோ அவன் ரொம்ப நல்லவனென்று சொல்லிக்கொண்டிருக்கலாம்.

இவை யாவுமேயற்று என்னை ப்ளாக் செய்தோ, காணாமலேயோ போயிருக்கலாம். அது தான் அம்மு.


அவளை கவிதாயினி என்றோ, கோபக்காரி என்றோ ஜர்னலிஸ்ட் என்றோ வரையறுக்கமுடியாது. அவள் அம்மு. ஐ லைக் ஹெர் . ஐ லவ் ஹர்.. ஹாப்பி பர்த்டே கிறுக்கி.