வெள்ளி, 17 நவம்பர், 2017

சீமான் தேவையா?

1. பிரபாகரனை அறிமுகப்படுத்திய சீமான் என்கிற தமிழ் சமூகக் கோமாளி 

கோமாளி என்பவன் பொதுசனத்திற்கு வித்தை காட்டும் வேலையைச் செய்பவன்.  

அரசியலில் இரண்டு பேர்களை உடனடியாகக் கோமாளி ஆக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது, ஒன்று புரட்சி பேசுபவனுக்கும் இன்னொன்று தன் தவறுகள் அம்பலப்படுத்தப்பட்டவனுக்கும். முதலாமவனை அரசியலில் இருந்து ஓரங்கட்டவும், இரண்டாமவனை தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்கவும்.

சீமான் எந்த வகையறா?

அந்த தனியார் தொலைக்காட்சி  நடத்திய நேர்காணல் காணொளியை வைத்து சமூக ஊடகம் முழுக்க கழுவி ஊற்றுகிறது சீமானை.

இதில் என்ன லாபம் இருக்கிறது?

தீவிரமாக தமிழ் தேசியம் மற்றும் ஈழத்து உணர்வுகளைப் பேசும் ஒரு அடையாளத்தினை அவமானப்படுத்துவதன் வாயிலாக
அதுவும் மாவீரர் தினம் அனுசரிக்கப்படும் நாட்களில் இப்படியான அவதூறுகள் சீமான் மீது பரப்பப்படுவது எதிரிகளைக் காட்டிலும் துரோகிகளுக்கு அல்லது திராவிடப்பிழைப்புவாதிகளுக்கும், முற்போக்கு தேசியவாதிகளும் குதூகலமடைகிறார்கள். (இதற்காக அவர்கள் பிரபாகரனைப் போற்ற வேண்டிய சடங்கினையும் செய்திருக்கிறார்கள்)
வேறு எந்த அரசியல் சித்தாந்தத்தையும் விட மொழியான் மக்களை இணைக்கும் சித்தாந்தம் மிக ஆபத்தானதாகப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகப் பார்க்கப் படுகிறது.

***

சரி அந்த காணொளியைப் பார்த்தீர்களா?

அந்தக் காணொளியின் முக்கியமான பேச்சு எதனை அடிப்படையாக வைத்து எடிட் செய்யப்பட்டிருக்கிறது?

சீமான் ஆட்சிக்கு வந்தால் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்களை எப்படிக் கையாள இயலும் என்கிற தொனியில் தான் அந்த பேட்டியின் சாரம்சம் இருக்கின்றது.  

மேற்சொன்ன ஒரு காரணம் தான் இந்த வீடியோவில், பிரபாகரனைக் கொச்சைப்படுத்தியதாக மட்டும் கவனத்தைக் குவித்து சீமானை அர்சித்துக்கொண்டிருக்கிறது சமூக ஊடகம்.

ஆனால் சீமான் பேசியவை.

  • தமிழ்நாட்டின் கடனை எப்படி அடைப்பது
  • மதுக்கடைகளை மூடிவிட்டால் எப்படி வருமானத்திற்கான மாற்று ஏற்பாடு செய்வது
  • ஆற்றுமணல் அள்ளுவது தொடர்பான நோக்கங்கள்
  • பண்ணை நிலங்கள் போன்றவற்றை அமைத்தால் என்ன பலன்கள் இருக்கும் என்பதை அண்டை மாநிலங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தல்
  • சந்திரபாபு நாயுடுவும், சீத்தாரமையாவும் செய்துகொண்டிருக்கின்ற இன அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான பணிகளை முன்வைத்தது.
  • மாநில மக்களின் உணவு நுகர்வுத்தன்மையைக் குறிப்பிட்டு பிரேசில் போன்ற நாடுகளை முன்வைத்து கால்நடை வளர்ப்பு மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது.
  • வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற காய்கறி, இரைச்சிகளுக்கு மாற்று செய்வது, பிறமாநிலங்களுக்கு இயற்கைவளத்தை காவுகொடுக்காமல் இருப்பது.
  • இப்படியான விசயங்களை மிகத்தெளிவாகப் பேசிய சீமான் தான், கோமாளியாக மட்டும் திரிக்கப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்.

ரி அவர் பேசிய விசயத்திற்கே வருவோம்.

//பிரபாகரன்னா தீவிரவாதின்னு பேசிக்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாம் அண்ணா, பெரியப்பான்னு பிரபாகரனைப் பேசுவதற்கு நான் தான் காரணம்// என்று பேசியது.

மே17, இளந்தமிழகம் போன்ற பல இயக்கங்கள் மட்டுமன்றி அவரவர் வீட்டின் தந்தைமார்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பிரபாகரன் என்பவர் யாரென்று சொல்லுவளர்க்கும் தமிழ்சமூகம் தான் என்றாலும், அரசியல் கட்சிகள் என்று பொருள்படும் விசயத்தில் சீமான் பேசியிருந்ததாக எடுத்துக்கொண்டால் மதிமுக, பாமக, விசிக,, தேமுதிக(பெயரளவிற்காவது) ஆகியக் கட்சிகளும் தங்கள் தலைவரென பிரபாகரனை முன்னிறுத்திய கட்சிகள் தான். ஆனால் எதுவரை?

மக்கள் நலக்கூட்டணி அமைத்ததும் முதல் வேலையாக மதிமுக, தேமுதிக, விசிக ஆகியக் கட்சிகள் தேர்தலின் போது தாங்கள் பேசிய எந்தப்பொதுக்கூட்டத்திலும் பிரபாகரனின் படத்தையோ, அவர் பற்றிய பேச்சினையோ தவிர்த்ததில் இவர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டன. நாளைத் தூக்கிவைத்துக் கொண்டாலும் (காங்கிரஸே கூட செய்யலாம்) இது வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று தான். பா.ம.கவைப் பொறுத்தவரை அது தன்னை சாதியகட்சியாக பாவிப்பதில், இந்தக் கட்டுரையிலும் அதற்கு இடமில்லை. ஆனால் சீமான் மட்டுமே அதைச் செய்தார்.


அதற்கென அவர் பேசிடலாமா என்றால் Ground Realityயில் அவர் பேசியது எத்தனை தூரம் உண்மை என்று பார்க்க வேண்டும் இல்லையா?


முதன்முதலாக இராமேஸ்வரத்தில் ஈழமக்களுக்காக திரையுலகினர் திரண்டுவந்து ஈழத்தில் போர்நிறுத்தத்தை முன்வைத்துப் பேசிய சீமானின் பேச்சிலிருந்து இப்போராட்டத்தை உணர்வு அடிப்படையில் பார்க்க ஆரம்பித்த மக்கள் ஏராளம். அந்த பேச்சினை யாரும் அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது. இன்று இருக்கின்ற கணிசமான இளந்தலைமுறையினர் அந்த பேச்சினைக் கேட்டு சீமானைப் பின் தொடர்ந்தவர்கள், எத்தனையோ சிறுசிறு இயக்கங்களும், மே 17 போன்ற இயக்கங்களுக்கும் இதில் முக்கியப்பங்கு இருக்கவே செய்கின்றன.

ஒரு காலத்தில் வைகோவிற்கு இந்த பங்கு இருந்தது. அதற்கு பின்னர் இன்றைய இளம்தலைமுறையினர் அநேகருக்கு தமிழ்தேசியம் குறித்தும் தலைவர் பிரபாகரன் எப்படி ஒரு இனத்தலைவனாக இருக்கிறான் என்பது குறித்தும் சீமான் செய்த மேடைப்பரப்புரையை சாதாரணமானது என்று சொல்லிவிட முடியாது. அவர் இந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தது, அதனைத்தான். அதுவும் பெருமித உணர்வில் தான். பிரபாகரனைக் குறியீடாகவும், இனத்தின் தலைவனென அடையாளப்படுத்தி தான் தமிழ்தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார். அதைக்கேட்டு சீமானுக்கு ஓட்டுப்போட்டவர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் யாருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று தீர்மாணித்தவர்கள் தான் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்தவர்கள். இதையும் மறுப்பீர்கள், இருக்கட்டுமே.

ஆனால் தமிழகத்தின் நீண்ட நெடிய அரசியல் வரலாறு மேடைப்பேச்சுகளால் மட்டுமே திருத்தி எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வரலாற்றின் கடைசிப் பேச்சாளர் சீமான்.


ஏனெனில் சீமான் ஜெயிக்கப்போவதில்லை.


தமிழரை தம்ளர் என்றும் டம்ளன் என்றும் மீம்ஸ்போட்டுக்கொண்டு விழுங்கிக்கொண்டிருக்க காவிப்பாம்பிற்கு மாற்றென சுரண்டல் மற்றும் ஊழல்களில் CORPORATE ஆக அறுபது ஆண்டுகட்கும் மேலாக வாழ்ந்து வரும் அணகோண்டா பாம்பு கணிசமாகக் குட்டிகளையிட்டு காத்துக்கொண்டிருக்கிறது. எழும்புகளை நொறுக்கிட சுற்றி வளைத்துக்கொண்டிருக்கும் உராய்வுகளை மக்கள் சுகமென நம்பியிருப்பார்கள். இதில் தமிழ்தேசியம் வெறும் மண்புழுதான்.

ஆகவே சீமான் எப்போதும் ஜெயிக்கப்போவதில்லை. ஆனால் தோல்வி சீமானுக்கானது மட்டும் இல்லை.
கடங்கநேரியான் சொன்னது மாதிரி, உணர்வுநிலையில் அரைகுறையாய் உளரும் தமிழ்தேசியவாதி எத்தனையோ மேலானவன் என்று? யாரை ஒப்பிடுகையில்………..?
 

சனி, 28 அக்டோபர், 2017

ஓர் ஓவியனின் தற்கொலை என்பது?

https://www.youtube.com/watch?v=BPq2R89o8aM&feature=share

அரசு கவின் கலைக் கல்லூரி மாணவனின் தற்கொலை என்பது பொதுவாக நடைபெறும் மற்ற தற்கொலைகளைப் போன்றது தானா? இதென்ன தற்கொலைகளில் ரேட்டிங் வைக்கிறேன் என்று கேட்கலாம்.
உலகில் அதிகம் தற்கொலைகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அனிதாவின் தற்கொலையோ, இளவரசனின் தற்கொலையோ அல்லது நெல்லையில் நடந்த தற்கொலையோ (அந்தக் குழந்தையை எரித்தது தற்கொலை அல்ல) அதற்குப் பின்னால் இருக்கின்ற உலகியல் அழுத்தங்கள், ஒரு கலைஞனுக்குப் பிரதானமாக இருக்காது. எல்லாமே விலைமதிப்பற்ற உயிர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்ற போதும், கலையை நம்பிய மாணவனின் தற்கொலை என்பது சமூகத்தின் மிகப்பெரும் தோல்வியை முன்கூட்டியே அறிவிக்கிறது.
***
பிரகாஷ் தன் நண்பர்களுக்கு அனுப்பிய வீடியோவைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியதெல்லாம். சமூகத்தின் இது போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து வெளியே பேசவேண்டிய கலைஞனையே அந்த அரசியல் கொல்கிறது எனில் அசலான தோல்வி யாருடையது?
**
வாழ்வில் பொருளாதாரத்தைத் தேடியோ, பொருண்மையை மையப்படுத்தி மட்டும் கனவு காணாதவர்கள் தான் நுண்கலையைத் தேடி அலைவார்கள், இசையோ ஓவியமோ திரைப்படமோ நடனமோ எழுத்தோ அவர்கள் கனவு தான் அவர்களின் வாழ்க்கை முறையை வடிவமைக்கிறது.
பொறியாளராகவோ, மருத்துவனாகவோ வணிக மேலாண்மை போலவோ முயற்சிக்கும் மற்ற மாணவர்களின் உந்து சக்தியோ, நோக்கமோ, வாழும் முறையோ மேற்சொன்ன நுண்கலையைத் தேடும் மாணவர்களோடு ஒப்பிட முடியாது.
பெரும்பாலும் அவர்கள் anti-realistic ஆகக் கூடச் சொல்லப்படலாம். ஆனால் அவர்கள் வறுமைக்கும், அவமானத்திற்கும் தோல்விகளுக்கும் அஞ்சுபவர்கள் அல்ல, சமீபத்தில் நான் சந்தித்த சில முன்னாள் ஓவியக்கல்லூரி மாணவர்களில் சிலர் முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்கள். இருந்த போதும் கல்வி கற்கும் போதே ஒரு கலைஞன் தற்கொலை செய்கிறான் என்பதற்கு நேரடியான காரணம் ஒன்று இருந்திருக்கும்/கலாம்.
கலை அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என்பது மற்றுமொரு உண்மை. கலை அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என்பது கலை என்று அவன் நம்பியிருப்பதன் சூழலின், அரசியலின், சந்தையின், தத்துவத்தின் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவற்றைக் கடந்து நிற்பது தான் கலையாக இருக்க முடியும். ஆனால் “தோற்கடிக்கப்பட்டிருக்கிறது”.
***
இரண்டாயிரத்திற்குப் பிறகான இந்திய வரலாற்றில் மெரினா புரட்சிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அதற்கு வித்திட்டவர்கள் ஓவியக் கல்லூரி மாணவர்கள். அவர்களில் ஒருவன் தான் தன் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறான். கலையால் மட்டும் தான் உணர்வுகளைக் கடத்திச் சென்று தகுந்த வேறு யாருக்கும் ஊட்டிட முடியும். அறிவால் செய்ய முடியாததைக் கலையால் மட்டுமே செய்ய முடியும்.
இவரது மரணம் நிச்சயமாக அரசு கலை கவின் கல்லூரியின் ஒரு செங்கலையாவது நகர்த்திடத் தான் செய்யும்.
ஆனால் இன்று கலையை அரசியல் நசுக்குகிறது, மதம் நசுக்குகிறது, அதிகாரம், பேதமை, பொருளாதாரம் நசுக்குகிறது.
இவற்றிலிருந்தெல்லாம் மீட்சி நிகழுமாயின் அதுவும் கலையால் தான் நிகழும். அதுவே நம்பிக்கை வளர்க்கும் கலை.
ஒரு கலைஞனின் இத்தகையக் கொடும்மரணம் இனத்தின் புற்றுநோயை ஊர்ஜிதம் செய்யும் பயாப்ஸி ரிப்போர்ட் மட்டுமே.
இது வெறும் ஓவியர்கள் உலகு மட்டும் என்று தனியாக அந்நியப்படுத்தும் மற்றவர்கள்......


ஜீவ கரிகாலன்

வியாழன், 14 செப்டம்பர், 2017

ட்ரங்குப்பெட்டிக் கதைகள் குறித்த ஒரு நேர்காணல்

ஜீவகரிகாலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ட்ரங்கு பெட்டிக் கதைகள், தமிழ் சூழலில் இச்சிறுகதைகளின் வடிவமும் சொல் முறையும் புதிதானது, இத்தொகுப்பை முன்வைத்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்……

(எஸ்.செந்தில்குமார்)

1 கேள்வி: ஓவியங்கள் மேலான ஈடுபாட்டின் உந்துதலில் எழுதமுனைவதாகச் சொல்கிறீர்கள். ஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வேறு வேறான வகைமை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களது கதைகளில் இந்த புரிதலை எவ்வாறு முன் வைக்க முயற்சிச் செய்கிறீர்கள்?



ஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வெவ்வேறான வகைமை என்பது மிகத்தட்டையான புரிதல் என்று நம்புகிறேன்.

அடிப்படையில் கலை ஆழ்மனதிலிருந்து விழிப்புணர்வுக்கு இடையே நடக்கின்ற தொடர்புகளினால் வெளிப்படுத்தப்பட்ட வடிவம் என்று நம்புகிறேன். எந்தக் கலையையும் புரிந்துகொள்வதற்கு இருக்கும் தடைகளை நாமாக வைத்துக்கொள்கிறோம் அவ்வளவு தான்.

அடிப்படையில் என்னால் ஒரு ஓவியம் தீட்ட இயலாததால், நான் மொழியைப் பிரயோகிக்கிறேன். ஒரு கதை சொல்ல முடிகிறது. அவ்வளவு தான்.  


2 கேள்வி: 2c பஸ்ரூட் எதார்த்தமானகதை. கிராமங்களின் சித்தமும், நகர வாழ்வின் ஆபத்தான நெடுஞ்சாலை விபத்தையும் சொல்கிறது. இந்த அன்றாட எதார்த்தத்திலிருந்து ஓமேகாவின் லீனியர் வரலாறு என்கிற கதையை எழுதுகிறீர்கள். எதார்த்தமற்ற காலமும் வெளியும் அதில் படிந்துள்ளது. இதுதான் ஓவியத்திலிருந்து நீங்கள் எடுத்து கையாளும் முறையா?

வெறுமனே இந்தக் கதைகளில் இருந்து மட்டுமே கேள்வியை குறுக்கிவிடலாகாது. இந்தக் கதையைப் பொருத்தவரையில், ஒரு ஓவியர் – தன் அரூப ஓவியம் ஒன்றிட்கு உருவாக்கிய MASKING பாணியைக் கையாண்டிருக்கிறேன். வேறு வேறு வண்ணங்கள் ஒட்டியும் ஒட்டாமலும் காட்சி தரும்.



3 கேள்வி: கோடுகளில் நெளியும் காதல் கதை ஓவியக்கல்லூரி மாணவனின் வேலை சமரசத்தையும் கூடவே கீர்த்தனாவுடனான காதலை பின்புலமாக வைத்து கதையை முழுக்க முழுக்க அரூபத்தன்மையான குறியீடுகள் மூலமும் ஓவியத்தீற்றல்களின் வண்ணத் தீட்டுகளின் அழுத்தமும் அழுத்தமின்மையைப் போலவும் கதை நகர்ந்து செல்கிறது. கூடவே இசையின் துணுக்குகளும் கலந்துள்ளன. நேரடியான மொழியிலும் வடிவத்திலும் இந்த காதலைச் சொல்ல என்ன குழப்பம்?


நேரடியான மொழி என்று ஒன்றில் எழுத ஆரம்பித்தக் கதை தான். ஆனால் இதை ஒரு சிக்கலான கோட்டுச் சித்திரம் போன்ற வடிவத்தில் இதை மறு ஆக்கம் செய்தேன். நிறைய முறை திருப்பி எழுதிய கதை இது.

ஆயினும் நேரடியாகக் கதை சொல்வது என்பது பழைய சரக்கு என்று சொல்லமாட்டேன். என் பாட்டன் சொன்ன கதைகளும், புராணங்களுமே நேரடியாகச் சொல்லப்படவில்லையே.  அது ஒரு காதல் கதை, ஓவியனின் காதல் கதை. அந்த ஓவியனை நான் சந்தித்திருக்கிறேன். அவன் வாழ்க்கையில் ஓவியங்களும் , சப்தங்களும் நிறைந்திருக்கின்றன. இங்கே மீண்டும் குறிப்பிடுகிறேன் இது இசைத் துணுக்கு அல்ல – சப்தம்.. ஓவியர் இராமானுஜனும், வான்காவுக்கும் கேட்டிருந்த சப்தங்கள்.

ஒரு விஷயம் மட்டும் உறுதி, இந்தக் கதையை நான் இந்த வடிவத்திற்கு வரும் வரை எழுதிக்கொண்டிருப்பேன்.

4 கேள்வி: ஓவியங்களுக்கான படிமம் நிறங்களாலும் அழகியல் காட்சியாகவும் மட்டுமே உள்ள சாத்தியத்தில் சிறுகதையாளராக கதைக்குள் படிமத்தை அழகியல் காட்சியை மட்டுமே உருவாக்கி சிறுகதை வடிவத்தையும் சிறுகதைத் தன்மையையும் அதன் இலக்கையடைச் செய்திட முடியுமென நம்புகிறீர்களா?


சிறுகதைக்கு என்ன இலக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் சிறுகதை ஆசிரியனாக என்னை பாவிக்கிறீர்கள் நன்றி. நான் கலைஞன் பார்க்கிறேன் சிறுகதை எனது வடிவம். அது என்ன இலக்கைக் கொண்டிருக்கிறதோ அதை நோக்கியே பயணிக்கிறது. இலக்கு எது என்பது எனக்குப் புலப்படவில்லை. பயணிப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறேன்.

5 அலெக்ஸ் கிராஸ்ன் ஓவியத்தை நீங்கள் கதையாக விவரணம் செய்த அனுபவம் எப்படி இருந்தது. இந்த கதை விவரணத்தை ஓவியப்புரிதலற்ற சிறுகதை வாசகன் புரிந்து கொள்வானா?

அந்த ஓவியம் தான் எனக்கு கதை சொல்வதற்கான புதிய வழிகளைக் கற்றுக்கொடுத்தது. அந்த ஓவியம் உருவாக்கிய மொழி தான் அது. இதுவரை இதை வாசித்துக் கருத்திட்டு அனைத்து வாசகர்களும் அதிகம் பிடித்துப்போன கதையாக இதனைச் சொல்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை தொடர்ந்து சிறுகதைகளை வாசிக்கின்ற ஒரு வாசகன் மிகத் திறமையானவன். வாசகன் புரிதலையும் கணக்கில் கொண்டு தான், அச்சிடுவதற்கு முன் சொற்கள் பயன்பாட்டில் கூடியமட்டும் எளிமையாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். கதைகளை அடுக்கிவைத்திருக்க முறையில் கூட ஒரு ஓவியக் கண்காட்சியில் எப்படி அடுக்கி வைக்க வேண்டும் என்று சொல்லப்படும் CREATIVE DISPLAY பற்றிய புரிதலும் உதவுகிறது. ஒரு பதிப்பாளனாக நாங்கள் பதிப்பிக்கும் மற்ற புத்தகங்களுக்கும் அதனையே முடிந்தமட்டும் வலியுறுத்துவேன்.

6 ஓவியத்தின் கேன்வாஸில் அதன் பார்வையாளர்கள் எங்கிருந்து வேண்டுமென்றாலும் பார்த்து கேன்வாஸின் மொத்த சித்திர உலகத்தை புரிய முயற்சிச்செய்யலாம். ஆனால் சிறுகதையை முதலிலிருந்துதானே தொடங்கவேண்டும். முதலிலிருந்துதானே வாசிக்கவேண்டும்.?

சிறுகதையை முதலிலிருந்து தானே தொடங்க வேண்டும். இந்தக் கேள்வி வாசகனுக்கானதும் கூட அல்லவா.

நான் விரும்புகின்ற சிறுகதைகளைத் தான் நான் எழுதியிருக்கிறேன். அது தான் நிதர்சனம்.

ஒரு நெடுஞ்சாலையின் ஏதோ ஒரு பகுதியில் நின்று கொண்டு நீங்கள் பார்ப்பதை எல்லாம் வரிசைப்படுத்தி நேர்கோட்டில் எழுதமுடியுமா? மீண்டும் மீண்டும் எழுதி அடித்தாலும் அது ஒழுங்கான வரிசையாக இருக்குமா. முதலில் இருந்து தொடங்கவேண்டும் என்பது விதியாக இருக்குமேயானால். மிக்க மகிழ்வுடனே அதை உடைப்பவனாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் ஆயிரமாண்டு பழைய வித்தை தானே.


7.எது சிறுகதையிலிருந்து ஓவியமாகவும் எது அடிப்படையில் ஓவியத்திலிருந்து சிறுகதையாகவும் உங்களது கதையில் இயங்குகிறது?

கதைகள் நான் உருவாக்குபவை தான், அதன் வடிவங்களுக்குத் தேவைப்படுகின்ற impressions வேறு ஒரு முன்னோடியின் சிறுகதையாக இருப்பதற்குப் பதிலாக. ஓவியங்களிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறேன், பனமலை தேவியின் ஓவியத்தைப் பார்க்கும் போது வசந்த மண்டபத்தின் சாபமும், சீயமங்கலம் கோபுரத்திலிருந்து காட்சியும், ஒரு மேற்கத்திய ஓவியத்தை அடிப்படையாக வைத்து மஞ்சள் பூவும் உருவாகக் காரணமாக இருந்தன. அது போல நாஞ்சில் நாடன் எனது ஆதர்ஷ எழுத்தாளராக நான் கருதிகிறேன். அவரது சாயல்களைக் கூட சில கதைகளின் கண்டதாக நண்பர்கள் சொன்னார்கள் ஒத்துக்கொண்டேன்.

8.MASKING பாணியிலான சிறுகதை தமிழில் எவ்வாறு சாத்தியமாகும்?
ஏன் சாத்தியமாகாது?


அடிப்படையில் நான் தமிழ்தேசிய உணர்வுகளை ஆதரிக்கும் அரசியலுடையவன். தமிழில் எல்லாவிதமான கலை முயற்சியும், கல்வி முயற்சியும் சாத்தியம் என்று நம்புகிறவன்.

 ஹைக்கூ என்கிற சித்திர மொழிகளுக்கான கவிதை வடிவமே தமிழில் எழுதப்படும்போது. தவிர MASKING என்று சொல்கின்ற ஒட்டியூற்றும் முறையில் ஒரு ஓவியம் எப்படி உருவாகிறது என்கிற அடிப்படையைப் புரிந்து கொண்டால், அதை சாத்தியப்படுத்த முடியும் என்று தோன்றியது. காட்சியும், ஒமேகாவும் அம்மாதிரியான முயற்சியே. தமிழில் சாத்தியமில்லாதவை வேறு எதில் சாத்தியமாகும்.  

10.அடிப்படையில் எழுத்தின் வாசிப்பால் மனதில் உருவாகும் எண்ணங்களக்கும் கண்களால் காட்சியாக மனதில் பதியும் சித்திரத்தை எவ்வாறு ஒன்றென முடிவுசெய்கிறீர்கள்?


  எண்ணங்களைப் பற்றி இப்படி வேறுபடுத்துப்பார்க்கும் நுட்பம் அறியேன். வாசிப்பால் உருவாகும் எழுத்தை விட அனுபவத்தால், பயணத்தால் கிட்டும் எண்ணங்களில் இருந்து உருவாகும் கலைப்படைப்புகள் வீரியமிக்கவையாக இருக்கும்.  உண்மையில் வாசிப்பும், காட்சியும் அவ்வாறான அனுபவத்தை வேறு வழிகளில் தான் பெறுகின்றன

அல்லது இப்படியும் சொல்லலாம் - வாசிப்பினால் உருவாகும் எண்ணங்களுக்கு ஏன் வடிவம் இருக்கக் கூடாது என்றோ, காட்சியாக மனதில் பதிந்தவை ஏன் மொழியில் சேகரித்து வைக்க முடியாது என்று இருக்கவேண்டும். கணினியின் பைனரி குறியீடுகளைப் போல் தான், எல்லாவற்றையும் மூளை சில துகள்களில் சேகரித்து வைப்பதாக நான் நம்புகிறேன்.

நான் முடிவு செய்ததாகக் கேட்பதன் ஆழ்மான அர்த்தத்தை - வாசிப்பின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க முடியுமா என்றால் - அது முடியாது தான்.  ஏனென்றால் நம்மால் தொடர்ந்து பயணிக்கவும் முடியாது எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது எல்லா அனுபவங்களும் பெற்றிடவும் முடியாது.





-நன்றி - பேசும் புதிய சக்தி - செப்டம்பர் மாத இதழ்
கேள்விகள் : எஸ்.செந்தில்குமார்

ஓவியங்கள் : நரேந்திரபாபு , அலெக்ஸ் க்ராஸ்

வியாழன், 7 செப்டம்பர், 2017

உண்மையும் மகத்தான உண்மையும்

(கதைக் கட்டுரை)

எரிக்கப்படும் நூலகங்களை விட எரிக்கப்படும் நூல் கவர்ச்சிகரமாய் இருக்கின்றது என்று ஒரு கட்டுரை எழுதுவதை விட ஆபத்தான செயல் என்னவாக இருக்க முடியும் என்கிறது யாளி? யாளியின் கேள்விகள் சற்று அசாதாரணமானவை, காலங்காலமாக எராடிக் சிற்பங்களைக் கொண்ட கற்மண்டபத் தூண்களை தாங்கிப் பிடிக்கும் வேலை செய்வதாலோ என்னமோ, எனது பதில் எத்தனைத் தாமதமாக வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அதற்கு இருக்கிறது. ஆனால் என்னால் தான் அது திருப்தியடையும் அளவிற்கான ஒரு பதிலை சொல்லிவிட முடியவில்லை.

பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் உண்மை என்பது ஒரு மகத்தான பொய்யாக மட்டுமே இருக்க முடியும் என்கிறது அது.
என் நண்பன் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கவிதை வாசிப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறான். அதில் தமிழில் யாரும் வந்து வாசிக்காததன் காரணம் அங்கே ஒன்று சொல்லப்பட்டது. நம்மைப் பொறுத்தவரை என்னவாக இருக்கும், தேசிய நீரோட்டத்தில் எப்போதுமே திராவிட நீரோட்டம் கலவாது தனித்தே இருக்கும் என்று பெருமை பேசுவோம். திராவிட அல்லது தமிழ் இருவேறு வார்த்தைகள் (அரசியல் ரீதியாக இவையிரண்டும் வெவ்வேறானது) தாண்டி என்ன காரணம் பேசிவிடக் கூடும் என்று எண்ணினால், மிகவும் அதிர்ச்சியான பதில் வருகிறது. அங்கே எழுத்தாளர்கள் எழுத முடியவில்லை என்று பரிகாசம் செய்திருக்கிறார்கள். சொந்த ஊர் மக்களே எழுத்தாளனை மிரட்டுகிறார்கள், புத்தகங்களை கிழிக்கிறார்கள், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். ஆகவே அங்கே ஒன்னும் புரட்சிகரமாக எழுதிவிட முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். மிகச்சுமாராக எழுதினால் கூட இப்படி எரித்து விடுவார்களா என்று அங்கேயே ஒருவர் கிண்டலடித்ததாகவும் தெரிவித்தார்.

அவர்கள் அந்த எழுத்தாளருக்கு எழுந்த பிரச்சினையை ஒட்டி அவருக்காக குரல் கொடுத்தவர்கள், அந்த நூலினை வாசித்தவர்கள். (கிட்டத்தட்ட முழுமையாக என்று சொல்ல முடியாவிட்டாலும், தூக்கம்வரும்வரை, அலுப்புத்தட்டும் வரை என்று பொருள்படுமாயின் – முழுமையாக என்று பொருள் கொள்ளுதலே சரி). அவர் ஒரு BEST SELLER ஆக மாறிப்போனது தான் அந்த காட்டுமிராண்டிச் சமூகத்திற்கு விழுந்த அடி என்று  சொல்லிக்கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கல்புர்கி போன்ற எழுத்தாளர்களுக்கு நேர்ந்தக் கொடுமையைக் காட்டிலும், தமிழ்தேசம் எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பற்ற தேசம் என்று பறைசாற்றியதன் விளைவு, ஈரோட்டின் புத்தகக் கண்காட்சியிலும் அல்லது ஒட்டுமொத்தமாக அந்த ஊரில் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படும் புத்தகங்களின் சந்தை தோராயமாக எட்டு கோடியாவது இருக்கும் என்று சொல்லப்படுவதன் பெருமையின் சங்கில் கால் வைத்து மிதிப்பதற்கு ஒப்பாகும். 



ஆனாலும் ஓவியர் சிவக்குமார் போன்ற ஜாம்பவான்கள் புத்தகம் வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பதற்கு அதுதான் காரணமோ என்று யாளி சொல்லும் போது எனக்கு மயிர்கூச்செரிந்தது.
அப்போது தான் கவனித்தேன், யாளிக்கு ஒரு பல் இல்லையென, எப்படி இது நிகழ்ந்தது என வினவும்போது, அந்த தூணினை SAND BLAST செய்ய வந்த ஒரு ஆலய பாதுகாப்புக் கமிட்டி ஓநாயைப் பார்த்து சற்று அதிகமாகவே கர்ஜிக்க வேண்டியிருந்ததாகவும், அப்போது பற்களில் சேதாரம் ஏற்பட்டதாகவும் சொல்லிற்று. “ஏன் நீ இன்னும் மற்ற யாளிகளைப் பார்க்கலையா” என்று என்னை வினவும் போது தான் கவனித்தேன். அந்த கோயிலின் ஒவ்வொரு தூண்களையும் தாங்கிக் கொண்டிருக்க்கும் யாளியின் பற்கள் சேதாரமடைந்திருந்தன.
இப்படி தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக கல் தூணை, மண்டபத்தின் பாரத்தை தாங்கும் யாளிகளுக்கு, பெரும் சோதனையாக இந்த தர்மகர்த்தா போர்வையில் வரும் புறம்போக்குகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்வது பெரும்பாடாகப் போயிற்று, கோயில் வேறு தோஷப்பரிகாரம் என்று Promote செய்யப்பட்டுவிட்டதால், பெருகிவரும் கூட்டத்தை நம்பவைக்க கம்பிகேட் போட்டு மக்களை மூலவரை நோக்கி மட்டும் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது நிர்வாகம், யாராவது திரும்பி தங்களையோ, அல்லது தங்கள் கீழிருக்கும் மன்மத, ரதி மற்றும் இத்யாதி சிற்பங்களைப் பார்க்க யத்தனிக்கும் மக்களைத் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.


இப்படித் தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தால் தான் மக்கட்கூட்டம் அதிகமாகும், தரிசனத்தின் நேரத்தைக் குறைத்தால் தான் தரிசனத்தின் மகிமை பெரியதாகச் சொல்லப்படும் என்று சொல்வதற்கு, எங்கிருந்தோ ஒரு குந்தவைத்து அமர்ந்திருக்கும் சேட்டன் ஸ்வாமியும், பற்றற்ற தீர்த்தங்கரனாக இருந்து பகட்டான ஆடை அணிகலன்களோடு சௌபாக்கியமாக வாழும் பெருமாளும் ஆமாம் ஆமாம் என்று சொன்னது காதில் விழுந்தது.

அந்த கவிதை வாசிப்புக் கூட்டத்தில், மக்களால் அடித்துத் துவைத்து மிரட்டப்பட்டு விரட்டப்பட்டதாக நம்பப்படும் எழுத்தாளரின் நிலை இப்போது எப்படி இருக்குமோ என்கிற பரிதாபமிருந்தது. அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல திரும்ப வந்திருக்கிறார் என்பதோ, இந்தக் கால இடைவெளியில் அவர் புத்தகங்களே எழுதிக்கொண்டிருந்தார் என்பதே தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தமட்டிலும், தமிழ்சூழலில் ஒரு கவிஞன் எப்படி வந்துவிட முடியும் என்பது தான். அது ஓரளவுக்கு உண்மையும் கூட, கவிகள் உருவாகிட முடியாமல் போனதன் காரணம் கவிகள் தானே தவிர மக்கள் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் மிக துரதிர்ஷ்டமானது.

என் மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட யாளியும் “நீ சொல்வது சரிதான்” என்றது. மேலும் அது “இங்கிருக்கும் சிலைகளை சேதாரப்படுத்தக் காரணம் யார் தெரியுமா?” என்று கேட்கும் பொழுது. அந்த தர்மகர்த்தானே என்று பதில் சொல்லும்போது. யாளி சிரித்துக்கொண்டே சொன்னது:
“அது மறைக்கப்பட்ட உண்மை, ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்பது வேறு ” என்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்பது மகத்தான ஒரு பொய்யும் கூட என்று யாளி சொன்னதைத் திரும்ப சொல்லிக்கொண்டேன்.

அப்படி என்ன தான் ஏற்றுக்கொண்டார்கள் என்று கேட்டவாறு, பதிலுக்கு காத்த்திருக்க முடியாமல், பின்னே இருந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டு செல்ல, சில தூரம் நான் நடந்து சென்றதும் மீண்டும் அந்தக் கூட்டம் நிறுத்திவைக்கப் பட்டது. எனக்கு ரகஸியம் சொல்ல வந்த யாளி தன் பக்கத்து தூணிலிருந்த யாளியிடம் ஏதோ சொன்னது. அது மெதுவாக ஒவ்வொரு யாளியாக மாற்றி மாற்றி அந்த ரகசியத்தை சொல்லிக்கொண்டே வர, அவர்கள் அசைய ஆரம்பித்ததும். விதானத்துச் சுவர்களில் வரையப்பட்டிருந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்தன. இறுதியாக என் அருகே இருக்கும் யாளிக்கு அந்த ரகசியம் சொல்லப்பட, அது தன் காலின் கீழே நின்றிருந்த நைட்டி அணிந்த தேவதையிடம் சொல்லிவிட்டது. நான் அவளருகில் சென்றேன்.

பதில் சொல்லுமாறு அவள் காதருகே சென்றால்,
“ரகசியத்தைச் சொல்கிறேன். ஆனால் பல நூறு ஆண்டுகளாய் எனக்கிருந்த சுதந்திரத்தை, இப்போது வந்த சில ராட்சதர்கள் கெடுத்துவிட்டார்கள். எல்லா தூண்களில் இருக்கின்ற தேவதைகள் மட்டுமல்ல, உற்சவத்திற்கு கிளம்பும் மூர்த்தியே என்னைக் கடக்கும்போது சற்று திரும்பி என்னைப் பார்த்தபடியே தான் செல்வார். இப்போது இந்த யாளி பய கூட என்னை மதிக்க மாட்டிங்கிறான் ” என்று அழுதது.

சரி அதற்கு நான் என்ன செய்துவிட முடியும். அந்த ரகசியம் என்னவென்று சொன்னால் தான் என்னவாம் என அவள் மீது கோபம்வந்தாலும் பொறுமையாய் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது.

இப்ப உனக்கு என்னாச்சு தேவதையே!

“இன்னுமாடா உனக்குப் புரியலை. என் நிலையைப் பார்.” என்றது எனக்குப் புரியவில்லை என்றதும் அதுவே தொடர்ந்தது. “சுமார் ஆறு மாதக்காலத்திற்கு முன்னர், எனக்கு இந்த உடையை தைத்துப் போட்டார்கள்.”

பார்ப்பதற்கு அது ஒரு நைட்டி போல இருந்தது. அற்புதமான அந்த நிர்வாண சிலையை கூட்டத்தில் வருகின்ற பெண்கள் குழந்தைகளுக்கு ஆபாசமாகத் தோன்றுவதால் அதை அகற்ற வேண்டும் என்கிற ஆலயம் செல்லும் பக்தர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைக்க, துரிதமாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்ட ஆலய நிர்வாகக் குழு, அந்த சிலைக்கு ஒரு நைட்டியைத் தைத்துப் போட்டது.

நான் அந்த ரகசியத்தை அவளிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது சொன்ன நிபந்தனையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் பேரழகி வேறு, தன் ஆடையைக் கழட்டச் சொல்லும் எந்தப் பெண்ணுமே அழகானவளாகின்றாள், இவள் பேரழகி வேறு, அதிலும் அவள் தேவதை வேறு, அதிலும் அவள் சிற்பம் வேறு. கரும்புத் தின்னக் கூலியா என்பது போல் அவளருகே நின்று அவள் காதருகே சென்று, இப்போது உன் ஆடையைக் கழட்டுகிறேன்.

கழட்டியதும் எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லு என்று அவள் முதுகில் இருந்த கொக்கியைக் கழட்டினேன். கிளர்ச்சியானது.

“Thank you” என்று சொன்னது.

மெதுவாக அவள் ஆடையைக் கீழிருந்து மேலாகத் தூக்கும் போது, என் மீது ஒரு தேங்காய் மூடி வேகமாக வந்து விழுந்தது.

அவள் சொல்லாத அந்த ரகசியத்தை….

அந்த செந்தூரமணிந்த மூன்று முரடர்களில் முதலாமவன் என் முகத்தில் ஓங்கிக் குத்துவிட, மூக்கில் ரத்தம் கொட்டியது. ஏற்கனவே காதில் அவர்கள் அறைந்ததன் விளைவாக சங்கொலி கேட்டுக் கொண்டிருந்தது. 

அவர்கள் என்னைப் பற்றி முன்முடிவு கொண்டிருந்தார்கள்

”உம் பேரென்னடா”


“காளிதாசன்னா இருக்கும், இந்த நாய் பேரும் மாலிக் கபூராதான் டா இருக்கும்”

- அகநாழிகை ஆகஸ்டு மாத இதழில்

சனி, 26 ஆகஸ்ட், 2017

போர்ஹேஸ் - கதைகள், கட்டுரைகள் & கவிதைகள்

யாவரும் வெளியீடு - 26

இந்நூலுக்கான முன்னுரை நூலில் மிக முக்கியமான ஒன்று அதிலிருந்து அவர் உதிர்க்கும் ஒரு விசயம் – ஒரு புதிய எழுத்தானது உடனடியான நிஜ வாழ்விலிருந்து சடக்கென்று வியாபங்கொள்வதில்லை, மாறாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் பல நூற்றாண்டு இலக்கியங்களின் வாயிலாக சுற்றி வளைத்துப் பயணித்த பின்னேயே உருவாகிறது என்று தொடங்கும் பிரம்மராஜனின் முன்னுரையில், இளம் தலைமுறையினர் புதிய எழுத்துகளைத் தொடங்குவதற்கு, மொழிபெயர்ப்புகள் அவசியமானது. அந்த வகையில் போர்ஹெயின் வரவு நமக்கு உற்சாகமளிக்கக் கூடியது.
இந்தத் தொகுப்பில் ஆலெஃப் என்கிற கதையோடு தொடங்கிய போர்ஹேயின் படைப்புலகத்தில் எனது முதல் நுழைவு, ஏதோ ஒரு மூலையில் ஒமேகாவைப் பற்றி எழுதியதனால் தான் சாத்தியமானதா என்ன?

சுமார் ஒன்னரை ஆண்டுகட்கும் முன்னராக – இணையத்தில் இந்த நூலினைக் கொண்டுவர ஒரு Responsible Publisher வேண்டும் என்று அவர் பொதுவில் பதிந்திருக்கும் போது எங்களுக்கு பத்தாவது நூல் கூட வந்திருக்கவில்லை. இதில் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை மட்டுமே இத்தனை கால தாமதமானாலும் அவரைப் பொறுமையாக இருக்க வைத்திருக்கிறது. யாருக்கும் வெளிப்படையாக இந்த ப்ராஜக்ட் பற்றி சொல்லவில்லை என்றாலும் நிறைய நண்பர்கள் என்னை ஆதரிப்பதைப் புரிந்து கொண்டேன்.

போர்ஹே ஏற்கனவே ஆங்காங்கு சில கதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சிறுகதைத் தொகுப்பாகவும் வெளிவந்திருக்கிறது. பின்னவீனத்துவ புனைவு உலகில் தவிர்க்க இயலாத பெயர் போர்ஹெஸ்


.

இந்த நூல் - நம்பிக்கையுள்ளோர்கள் பாதுகாக்கின்ற ஹோலி பைபிள் போல. என்னைப் போன்று சிறுகதைகள் மீதும், புனைவுகள் மீதும் காதலுள்ளவர்களுக்கும் இருக்கும் என்பது என் அசையாத நம்பிக்கை. அதனால் தான் வடிவத்திலும் இத்தனை Rich.
இதில் எடிட்டிங்கில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடம் – மிகத் தீவிரமான உழைப்பு, - ஜீ.முருகன், பிரதாப ருத்ரன் என இன்னும் சில நண்பர்களின் உழைப்பிலும் உருவாகி இருக்கிறது.

இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுடன், கவிதைகள், கட்டுரைகள் என மிக முக்கியமான பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆம். இந்த நூலுக்கான ஆக்கம் – இந்த இரண்டு வருடங்களில் அதன் விலையைச் சற்று உயர்த்தியதுபோலவே..
இதில் Illustrationsமுதற்கொண்டு மூல புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டவையே தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தியிருக்கிறோம். அவரது மிகக்கடுமையான உழைப்பும், monotonousஆக இருந்தாலும் அவரை ஒருபொழுதேனும் உற்சாகமிழக்கச் செய்யவில்லை. மாறாக அவர் எனது கடினமான நேரங்களில் உற்சாகப்படுத்தியே வந்தார். Proffessionalism, Perfectionism, எதிலும் சமரசமற்றப் போக்கு என நாம் இன்னும் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருக்கின்றன.
சில விசயங்கள் பேசுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இந்த அறிவிப்பு முன்பதிவுக்கானது.
போர்ஹேகெட்டி அட்டைராயல் சைஸ் – 320 பக்கங்கள்விலை ரூ:550/-
போர்ஹே - கதைகள், கட்டுரைகள் & கவிதைகள்
மொழிபெயர்ப்பு - பிரம்மராஜன்
முன் பதிவில் ரூ – 500 தபால் செலவு  - இலவசம்
யாவரும் பதிப்பகத்தின் வங்கிக் கணக்கு விவரம்-
A/c no.34804520231(Yaavarum Publishers) 
SBI Bank- Chinmaya Nagar Branch 
IFSC code.SBIN0007990

பணம் அனுப்பிவைத்த UTR நம்பருடன் உங்கள் செல் நம்பர் – முகவரியை அனுப்பி வைக்கவும்.


பின்னர் முக்கியமாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால் இது ஒரு limited edition. அடுத்த பதிப்பில் Paperback தான். என்னடா இது முன்பதிவிலேயே அடுத்த பதிப்பு பேசுகிறான் என்று தோன்றுகிறதா? அப்படித்தான் தோன்றும்.