வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)


என்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களாகிவிட்டன. அடடா இந்த சீரிஸில் 100வது பதிவாக எழுதறோமே ஏதாவது புது விஷயமா எழுதலாமேன்னு காலைல இருந்து யோசித்துக் கொண்டிருந்தபடி, ஐந்தரை மணிக்கெல்லாம் லைட்டைப் போட்டு தம்பியை எழுப்பிவிட்டதற்கு ‘சுப்ரபாதம்’ பாடினான். இரண்டு வருடம் தான் இளையவன் என்பதால் எனக்கு அண்ணின்னு ஒருத்தி வந்தா உன்னை அண்ணன்னு கூப்பிடுறேன்னு சொல்லியிருக்கான்.

இன்று அதிகாலையே தூக்கத்திலிருந்து அவனை எழுப்பி விட்டதற்காக என்னைப் பார்த்து உதிர்த்த வார்த்தை என்னவென்றால் “ஆமா இவரு பெரிய புடுங்கி”.
என்னடா இது ஐந்தரை மணிக்கு லைட்டைப் போட்டதற்கு அண்ணனைப் பார்த்து இப்படித் திட்டலாமா என்று நீங்கள் அறச்சீற்றம் கொள்ளலாம். அவனுக்குப் பத்து மணிக்கு லைட்டைப் போட்டாலும் கோபம் வரும். இரவா பகலா என்கிறீர்களா?

சரி பகலென்று வைத்துக் கொள்வோம்:

”ஏன் டா நீயெல்லாம் பெரிய எழுத்தாளன்னு சொல்றியே!! பீரோல தேடனும்னா பகல்ல ஜன்னலத் தொறந்து தேடனும்னு தோணாதா”
என்றபடி விளக்கைப் பட்டென அணைப்பான்.

இல்லை இரவென்று வைத்துக் கொண்டால்:
 “ இந்த ரூம்ல லைட்டப் போடும் போதே அந்த ரூம்ல லைட்டை ஆஃப் பண்ணனும்னு உனக்குத் தோணுமா தோணாதா “என்றபடி விளக்கைப் பட்டென அணைப்பான். நான் மட்டுமென்ன சும்மா விடுவேனா, தங்கைகளுடன் சேர்ந்து அவனைக் கலாய்ப்போம்,
”அவனுக்கு கல்யாணம் ஆச்சுன்னா அவனோட மனைவிக்கு அவன் ஏதாவது உன்னைக் கோபப்படுத்துனா வீட்ல இருக்குற லைட்டு ஃபேனை எல்லாம் ஆன் பண்ணு வழிக்கு வந்துடுவான்னு சொல்வோம்” என்று அவனைக் கடுப்பேத்துவோம். அப்புறம் எங்க நமக்கு மரியாதைக்கான வானிலை அறிக்கை.

விஷயம் என்னவென்றால், இதுவரை நான் என் நெருங்கிய நண்பர்களுக்கே அதிகம் அறிமுகப்படுத்தாதவன் என் தம்பி. வெறுமனே மின்சார சேமிப்பு மட்டுமல்ல, தன் 24 மணி நேரத்தில் பாத்ரூம் போவதிலிருந்து, என்னைத் திட்டும் வார்த்தைகள் வரை எல்லாவற்றிலும் ஒரு அட்டவணை இருக்கும், பட்டியல் இருக்கும் முன்திட்டம் இருக்கும். காலை தினம் எழுவதிலிருந்து, அலுவலகம் முடித்து வீடு திரும்பி, தூங்கும்வரை அவனது வாரநாட்கள் ஒரு நேர்க்கோட்டில் இருக்கும். அலுவலகத்திலிருந்து வந்தவுடன், மணிப்பர்ஸை வைக்கும் செல்ஃப் ரேக், போனை சார்ஜ் செய்யும் இடம் கூட மாறாது. யாராவது மாற்றி வைத்தால். எண்ணெயில் போட்ட பீ டி கடுகாய் தெறிப்பான் (என்ன சொல்ல இந்திய அரசாங்கத்திற்கே மரபணு மாற்றப்பட்ட கடுகை ஆதரித்துவிட்டது). இப்படி வாழ்பவன், தனக்கு சற்றே சம்பந்தமில்லாதவனை எப்படி மதிப்பான்.

“பெரிய புடுங்கியா?” என்று தான் கேட்பான்.

சின்ன வயதிலிருந்து நான் படுத்திய பாடும் அப்படி கிரிக்கெட் விளையாடும்போது (நாங்களிருவர் மட்டுந்தான்). எங்காவது பந்தடித்து போய்த் தொலைந்தது என்றால் அவன் தான் போய் தேடுவான். முள்செடியோ, குப்பை மேடோ. எனது பேட்டிங் முடிந்தவுடன் நான் தோற்றுவிட்டேன்.

“நீயே ஜெயிச்சதாக வச்சுக்கோ” என்று எஸ்கேப் ஆவேன். அவனுக்குப் பேட்டிங் பிடிக்க முடியாது. ஆனால் ஜெயிச்சிட்டேன் என்று சொல்வதால். அவனுக்கு டார்ச்சராக இருக்கும் அப்போதிருந்தே கேட்பான்.
“நீயென்னப் பெரிய புடுங்கியா” என்று.

வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் அவனுக்கு உறுதியானத் தேர்வு இருக்கும். அதற்கு சில சமயம் காரணங்கள் விநோதமாக இருக்கும் இருசக்கர வாகனம் வாங்குவதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாய் சேமித்தான். அவன் கடனில் பொருள் வாங்கக் கூடாது என்கிற கொள்கை கொண்டிருந்தான். 2008 வாக்கில் எனது வேலை பறிபோனதில், இருசக்கர வாகனத்திற்கு டியூ கட்டாமல், வெளியேவும் எடுக்காமல். வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அவன் வாகனம் வாங்கும் போது முழுத்தொகைக் கட்டியே வாங்கினான். அதுவும் விக்ராந் எனும் வாகனம் ஏனென்றால் அவர் தேசியவாதியாம்.

கிரிக்கெட் பார்க்கும் போது பல முறை இன்னும் தோணி அவுட் ஆகலையா என்பேன். கிரிக்கெட் வெறும் சூதாட்டம் என்பேன்.
“இவரு பெரிய எழுத்தாளப் புடுங்கி” என்பான்.

விசயம் அவ்வளவு தான் அவனுக்கு நான் செய்யும் அநேகக் காரியங்கள் உருப்படியானவை அல்ல. ’எழுத்தாளன்’னு வீட்ல யாராவது பாராட்டுனாங்க என்றால் கூட அவனுக்குப் பிடிக்காது. நம்ம புத்தகம் வந்தபோது, அதை அவன் என் கண் முன்னே ஒரு சந்தோஷத்துக்காகக் கூடப் புரட்டிப் பார்க்கவில்லை. 'வா.மணிகண்டன்' எங்கள் குடும்பத்திலிருக்கும் பலர் அவரது வாசகர்கள், என் தம்பிக்கு ஏற்கனவே அறிமுகம், இருந்தும் புத்தக வெளியீட்டில் ஒரு மரியாதைக்குக் கூட ‘ஹல்லொ’ சொல்லாமல் பார்த்தும் பார்க்காமல், “ஒரு ஓரமாய் நின்றுக் கொண்டிருந்தார் உங்க தம்பி” என்று வா.ம சொல்லும் போது புரிந்தது. பிறகு தான் தெரிந்து கொண்டேன், அவனுக்கு வரயிஷ்டமில்லாது. அம்மாவின் வற்புறுத்தலால் தான் வந்தானென்றும் அறிந்தேன்.
‘ஏனென்றால் எழுத்தாளன்னா பெரிய புடுங்கியா என்ன.’

“பேங்க்ல உன் ஃப்யூச்சருக்குன்னு என்ன சேமிச்சிருக்க?” என்று கேட்டது ஞாபகம் வந்தது. அவனது கோபத்திலும் நியாயம் இருக்கிறது என்று அம்மாவும் அடிக்கடி சொல்லிவிட்டுப் போவார்.

அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது, பூஜைகளில் கலந்து கொள்ளமாட்டான். ஆனால் யாராவது வீட்டிற்கு மதப்பிரச்சாரம் செய்ய வந்தார்கள் என்றால் அவர்களுக்கு அர்ச்சனை நடந்தேறும்.
“ஏன்டா நம்ம சாமிங்க மீது உனக்கு தான் நம்பிக்கை இல்லையே!! அவுங்க வந்தா உனக்கு என்ன ப்ரச்சினை?”னு கேட்டா.

“நான் சாமியில்லைன்னு சொல்லல, கடவுள் இல்லைனு சொல்றேன்.” என்பான். கடவுள் மறுப்பு பேசுறவன், மயிரைப் புடுங்கு என்று சொல்றவன்.. ஏதோ சிங்க் ஆகுதுல்ல..

இப்படி எழுதிக்கொண்டிருக்கும் போது தேநீர் கோப்பையைத் தருவதற்காக வந்த அம்மாவும் இந்தத் தலைப்பைப் பார்த்து கண்டபடி ஏசினாள்.
அண்மையில் வெளியான என் சிறுகதைத் தொகுப்பில் அதிகமாக வரவேற்கப்பட்ட சிறுகதை “நீரோடை”, அவளுக்கும் கூடப் பிடித்திருந்ததாம். தொன்மத்தின் சுவடுகளை வரலாறு பதிந்து கொண்டேதானிருக்கிறது. அந்தத் தொடர்பை உணர முடியாதவர்களாக நாம் தான் மாறிப்போகின்றோம். இப்படித் தான் சில பண்பாடுகளென்ற, கலாச்சாரங்களென்ற நம்பிக்கைகளும், சடங்குகளும் தொடர்பு துண்டிக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு சிதிலமடைந்து மூடநம்பிக்கைகளாக பாவிக்கப்பட்டும் மறைந்துவிடுகிறது.
இப்படியாக மறைந்துபோனவற்றை அகழ்ந்தெடுப்பது வெறும் மண்களுக்கு அடியிலிருந்து மட்டுமல்ல, மூடநம்பிக்கை என்று கைவிட்ட சடங்குகளில் கூட சிலவற்றைத் தெரிந்து கொள்ள இடமிருக்கிறது. கெட்ட வார்த்தை என்று ஒதுக்கி விடுவதற்குள்ளும் சில வரலாற்றுத் தடயங்கள் இருக்கின்றன.

'மயிர் பிடுங்கி' எனும் சொல் ஒரு சமணத் தடயம். சமணர்களில் ஆன்மிகத்தில் தீவிரமானோர், துறவு கொண்டோர். எவ்வுயிருக்கும் இன்னா செய்யக்கூடாது என்று விரதம் இருப்பவர்கள். தன் முடியை மழிப்பதற்கு பதிலாக ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் முடியை மழித்தால் பேண் போன்ற சில உயிர்கள் இறப்பதற்கு நேரிடும் என்பதாலும், வலியைத் தாங்கிக் கொள்ளும் பழக்கமுடையவர்களாக மாறவேண்டும் என்பதாலும் தங்கள் தலை மயிர்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக்கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

பக்தியிலக்கியங்கள் காலக் கட்டத்தில் சமணர்களை எள்ளல் செய்யும் பாடல்கள் இடம்பெற்றன, சமண முனிகளை எள்ளல் செய்யும் வழக்கம் அங்கிருந்து பொது மக்களுக்குள்ளும் பரவ ஆரம்பித்திருக்க வேண்டும். ஒருவனைப் பார்த்து “நீ என்ன பெரிய மயிரைப் புடுங்கியா” என்று கேட்பது, நீ என்ன அவ்வளவு பெரிய சத்ய சீலனா, தர்ம சீலனா, ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவனா, வலிகளைத் தாங்கிக் கொள்பவனா, தர்மம் செய்து வருபவனா, கடவுள் வழிபாட்டை மறுப்பவனா, வியாக்கியானம் பேசுபவனா, விஞ்ஞானம் பேசுபவனா, மற்றவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசானா என்று கேட்பதற்கு சமானம்..

என் தம்பி நாத்திகம் பேசியும், பிற மதங்களை வெறுப்பதிலும் கூட சமணத் தடயம் இருக்கிறது, நீ என்ன பெரிய பிடுங்கியா என்பதில் கூட சமணத் தடயமிருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம் – எனக்கு நன்றாகத் தெரியும் அவன் நான் எழுதும் எல்லா ப்ளாக் போஸ்டுகள், ஃபேஸ்புக் பதிவுகள், கதைகள், ஏன் கசக்கியெறிந்த கடிதங்கள், ஒளித்து வைத்திருக்கும் காகிதங்களில் இருக்கும் அவளது பெயரைக் கூட மிச்சம் வைக்காமல் படித்துவிடுவான். ஆனால் எதையும் வெளியே காட்டாது, தன்னடக்கத்தோடு நடந்து கொள்வான்.

“பெரிய புடுங்கின்னு நெனப்பு”

ஆகவே நண்பர்களே, இந்த நூறாவது பதிவில் நான் சொல்ல வந்தது என்னவென்றால் (குறிப்பாக மயிரென்றாலே வாயிலேயே அடிக்கும் தங்கை ஒருத்திக்கு),  ‘மயிர் பிடுங்கு’ என்றால் கெட்ட வார்த்தையல்ல.. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆமாம் சந்தானம் அடிக்கடி சொல்வாரே – நீயென்ன அப்பாடக்கரா என்று இதற்கும் ஞானசம்பந்தருக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா???

எதற்கும் ஒரு வார்த்தை அகரமுதல்வனைக் கேட்டுவிடுவோம்.

ஜீவ கரிகாலன்
(பெரிய பிடுங்கி)



1 கருத்து: