வெள்ளி, 9 ஜூன், 2017

பறவைகளின் கனியைத் திருடியவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

அந்த மழைக்காரியை எல்லோருக்கும் பிடிக்கும். அந்த மழைக்காரியை ஒருவருக்கும் பிடிக்காது. ஆம் அவள் எப்படி மழைக்காரியாக இருக்கலாம்.
யாவரையும் போலத் தானே அவளும் ஒருத்தி, அவளும் சிரிக்கிறாள், அவளும் பாடுகிறாள், அவளும் நடனமாடுகிறாள், அவளும் அரசியல் பேசுகிறாள், அவளும் கவிதை எழுதுகிறாள், அவளும் ஓவியம் வரைகிறாள், அவளும் சமைக்கிறாள், அவளும் வாசிக்கிறாள், அவளும் ஊர் சுற்றுகிறாள், அவளும் யோகநிலையில் இருக்கிறாள் என்று கேட்கலாம். ஆம் யாவரையும் போலத்தான் என்று தான் பதிலையும் தொடங்க வேண்டும்.

ஆனால் எல்லாவற்றையும் அவள் பரிபூரணமாக தங்குகிறாள். அது அவளால் மட்டுமே முடியும். ஒரு நிம்பூ சாய் குடிக்கின்ற அதே மனநிலையில் தான், அவள் மழையைக் கொஞ்சிக்கொண்டு இருப்பாள் அல்லது ஒரு abstract paintingஐ உருவாக்கிக் கொண்டிருப்பாள், இல்லையென்றால் சமூகத்தைச் சுரண்டும் super powerஐ define செய்து ஏசிக்கொண்டிருப்பாள். பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென லயித்தபடி பாடத்தொடங்குவாள். அது அவளால் மட்டுந்தான் முடியும்.
 
அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று சொல்லவே முடியாது. ஏனென்றால் அவள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல அருகதை அற்றவர்களாக அவளைத் தெரிந்து கொண்டவர்களுக்குப் புரியும். ஆனாலும் அவள் ஒரு லூசு, பைத்தியக்காரி, யோகினி, பைரவி, யட்சி, அழகி, கோபக்காரி… இப்போது அவள் மழைக்காரியாகத் திரிந்து கொண்டிருக்கிறாள்.

அவள் விஷேசமான சிரிப்புக்காரி, சிரிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லா வேலையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு கேட்க ஆரம்பித்துவிடுவோம். கோபப்பட்டால் அவ்வளவு தான், காணாமல் போன விமானமாக தேடிக்கொண்டிருக்க வேண்டியது தான், அப்போது அவள் ஒரு பெர்மூடா முக்கோணம். அவள் ஒரு மீரா, மீனாட்சி, ஆண்டாள், காரைக்கால் அம்மையார், அவள் ஒரு சௌந்தர்யா, அவள் ஒரு பயங்கரீ….

அவளை அழகுத் தமிழச்சி என்று சொல்லவே எனக்கு ஆசை, லைட்டா மலையாள வாடை வீசினாலும் அது தான் அழகு. இங்கே மலையாள வாடை வீசுவது என்பது எப்படி ஒவ்வாமையாக்கப்பட்டது என்கிற அரசியல், அவள் கற்றுக்கொடுக்காமலேயே நான் கற்றுக்கொண்டேன். அதனால் தான் அவள் பிறந்தநாளுக்கு ஆறு நாட்கள் முன்னாடியே எம்.ஜீ.ஆர் படத்தை அட்டைப்படமாக வைத்துக்கொண்டேன்.

அவளது தியானத்தில் என் நோய் சரிப்பட்டிருக்கிறது. அவளோடு சண்டை போடுவதற்கு நல்ல ஆகிருதி வேண்டுமல்லவா?

அவள் பார்க்கும் கோணத்தில் தமிழர்களால் வாழ்க்கையைப் பார்க்கவே முடியாது. தமிழர்களைப் பொருத்த மட்டில் ஓஷோ ஒரு கிளுகிளுப்பு – கண்ணதாசன் பதிப்பகம் வாயிலாக கிட்டும் கிளுகிளுப்பு மட்டுமே. இந்த ஐம்பது ஆண்டு காலத்தில், ஓஷோவையும் கண்ணதாசனையும் இத்தனை நெருக்கமாகப் பார்த்தால், அரசியலால் துரத்தப்படுவது மட்டுமே நடக்கும் என்று நான் உணர்வது சரிதான். அவள் தான் இன்னும் புத்தகம் போடவில்லையே.

அன்றொரு நாள் அவள் பழங்களைப் பறவைகளிடமிருந்து திருடியதாகச் சொன்னாள். அது அவளால் மட்டுந்தான் முடியும். ஏன்?
அதை அப்படி சிரித்துக்கொண்டே சொல்வதற்கு அவளால் தான் மட்டுந்தான் முடியும். அவள் ஒரு treehugger, தத்தைகளின் clubல் membership வைத்திருப்பவள், மேலும் அவை அவள் தோழியின் தோட்டத்தின் செர்ரீப் பழங்கள் தான். இருந்தபோதும் ஏன் அவள் திருடியதாகச் சொன்னாள். இந்த உரைநடையை அழகாக்க பொய் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் அவள் தன் தோழி தூங்கிய பின்னர், பறவைகளற்ற சமயத்தில் திருடியிருக்கிறாள். வாட்ஸப்பில் அதை எனக்கு அனுப்பி அலிபாபாவின் 40 நபர்களைப் போல் தன்னுடைய குழுவில் சேர்த்து என்னையும் திருடனாக்கினாள்.

  • நாளையே என்னிடம் உபநிடதம் பற்றி பேசலாம்
  • அரசியல் பேசலாம்
  • வெகுநாளாய் கணக்கில் பாக்கியிருக்கும் அந்த என்னுடைய போர்ட்ரெயிட்டையோ (மற்றவர்களுக்கு அது விநாயக்) அல்லது ரெண்டு கிலோ லட்டினையோ அனுப்பி வைக்கலாம்
  • அல்லது அவளது காதலனைப் பற்றி புகழ்பாடிக் கொண்டிருக்கலாம்.
  • இல்லை கடுமையாகத் திட்டிய யாரையோ அவன் ரொம்ப நல்லவனென்று சொல்லிக்கொண்டிருக்கலாம்.

இவை யாவுமேயற்று என்னை ப்ளாக் செய்தோ, காணாமலேயோ போயிருக்கலாம். அது தான் அம்மு.


அவளை கவிதாயினி என்றோ, கோபக்காரி என்றோ ஜர்னலிஸ்ட் என்றோ வரையறுக்கமுடியாது. அவள் அம்மு. ஐ லைக் ஹெர் . ஐ லவ் ஹர்.. ஹாப்பி பர்த்டே கிறுக்கி.வெள்ளி, 26 மே, 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 11

தூக்கம்

ஷ்வரின் நடமாட்டத்தை கவனிக்கச் சொல்லியிருந்தேன். அலுவலத்தில் அவனைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம், சானுவுக்கும் கண்களால் ஒரு வருகைப்பதிவை செய்துவைப்பதை வருடக்கணக்காக செய்து கொண்டதால், இவனுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று சுபத்ரா சொல்லும் முன்னரே இவனை கவனித்தபடி இருந்து வருகிறேன். சானு மெசஞ்சரில் வந்து அவன் ஏதோ ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்திருக்கிறான், ஆனால் தொடர்ந்து ஒரு வாரமாக வெவ்வேறு நண்பர்களின் ஐடி மூலமாகப் பெற்றுவந்துள்ளான், இந்த முறை சானுவின் ஐடியைக் கேட்டுவிட்டுப் பிறகு வேண்டாம் எனச்சொல்லியிருக்கிறான். ஏதோ மறைத்தபடியும் திருதிருவென வாங்கியதாகச் சொன்னாள். அவனைப் பார்த்துவரச் சொல்லிப் பணித்தது. அவன் இருக்கும் ப்ளாக்கிற்கு விரைந்தேன். மாடிப்படிகள் வழியாக ஏறலாமா? ஒருவேளை நான்காம் மாடியிலிருந்து வரும் லிஃபிடில் அவன் வந்தால்.
4
3
2
1 அவன் தான். என்னைப் பார்த்ததும் முகம் வியர்த்தது. இருவருமே பார்க்கிங் சென்றோம். போனில் எனது அலுவலகத்தில் காரணத்தைச் சொல்லிவிட்டேன்.

என்னடா கார் எடுத்துட்டு வந்துருக்க, பைக் ல தான வருவ

“ம்ம்ம்”

ஆக்ஸிடெண்ட்டா

பதில் சொல்லவில்லை. காரை கிளப்பினான். நானும் உள்ளே அமர்ந்தேன்.
“நான் வீட்டுக்குப் போகலை”

தெரியும்

“நான் பாருக்கும் போகலை”

பின்ன

“கொஞ்சம் தனியா விடுடா”

என்ன ஷாப்பிங் பண்ணுற

முறைத்தான்.

சொல்லுடா

“சுபத்ரா கிட்ட பேசுனியா”

டாக்டர் கிட்டயே பேசினேன். அவுங்க ஏதும் மாத்திரை கூட தரலைன்னு சொல்றாங்க… நீயா என்ன பண்ணுற. ஆன்லைன்ல ரெண்டு மாத்திர தான் தருவாங்கன்னு, பத்து வெப்சைட்ல பத்து ஐடில ஆர்டர் போடுற அளவுக்கு என்ன ஆச்சு ஒனக்கு.

சிரித்தான்

எங்க தான்டா போற

”ஏதாவது ஒரு பார்க்குக்கு போறேன்”

பார்க்கா?
….
என்ன புது கேர்ள் ஃபிரண்டா

சிரித்தான்.

தூங்கறதுன்னா வீட்ல தூங்குடா, கண்ட இடத்துல போய் படுத்துக்கிட்டு, ஆன்லைன்ல ஸ்லீப்பிங் பில்ஸ் வாங்குற… என்ன ஆச்சு ஒனக்கு. எதுக்கு எல்லார் ஐடியும் வாங்கி யூஸ் பண்ணுற. நீயா நெட்ல படிச்சுக்கிட்டு மாத்திரை வாங்குறது. மடத்தனம்.. படிச்சவன் மாதிரியா பிஹேவ்.
“தற்கொலை பண்ணறேன்னு நெனச்சுயா?”

ஒரேடியா போய்ச் சேர்றது மட்டுந்தான் தற்கொலை இல்ல ஈஷ். வாழ்க்கைய தெனமும் கொன்னுக்கிட்டு இருக்கற சேடிஸ்ட் நீ. நீ சுபத்ரா கிட்ட என்ன பேசுன.

“உன்னால நான் இந்தோனேஷியான்னு சொன்னென்”

ஏன் இப்படி இறுகிப்போய்ட்ட நாயே. உன் மைண்ட் செட்க்கு கார்லாம் ஓட்டாத, நான் ஓட்டுறன், எங்கப் போவனும் சொல்லு.
“ஒரு மயிறும்…….”

பிறந்து சில நாட்களே ஆன கன்றுக்குட்டி அது. செவலை நிறத்தில். தடுமாறித் தடுமாறி சாலைக்குள் அங்குமிங்கும் ஓடியது நேராக இவன் காரில் மோதி, தூக்கி எறியப்பட்டு மெரிடியன் கம்பத்தில் பட்டு விழுந்துத் துடித்தது. சிக்னலும் அருகேயே இருப்பதால், கூட்டம் கூட ஆரம்பிக்க. வேகவேகமாக வெளியே வந்து பார்த்தோம். மூக்கு வாய் வழியாக இரத்தம் கொட்டுக்கொண்டிருந்தது. கால்கள் துடித்துக்கொண்டிருந்தன. கூட்டம் கூடியது.

என்னைக் கோபமாகப் பார்த்தான்.

இங்க ஏதும் பெட் க்ளினிக் இருக்கா சார்.

கொஞ்சம் நடந்து சென்று ட்ராஃபிக் போலிஸிடம் விசாரிக்கக் கிளம்பினேன். அவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அவர் முகம் மாறுவதை பார்க்கையில் ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதாய் தோன்றியது, திரும்பிப்பார்த்தால் ஈஷ்வரை இரண்டு பேர் அடித்துக்கொண்டிருந்தார்கள்.

நானும் போலீஸ்காரரும் அங்கே விரைந்து வருவதற்கும் அவன் மேல் சில அடிகள் விழுந்துவிட்டன.

சட்டைக் கிழிந்திருந்தது, அவன் மூக்கிலும் இரத்தம் வந்திருந்தது. அவர்களை என்னால் அடிக்க முடியாது என்று தெரியும். கன்றுக்குட்டியை வளர்த்தவள் அழுதுக்கொண்டிருந்தாள். கன்றுக்குட்டி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது.

மோடி புண்ணியத்தில் ஏடீஎம் சார்ஜினைத் தவிர்க்க எப்போதும் அஞ்சாறு பிங்க் நோட்ஸ் இருந்ததால். அவற்றில் இரண்டைக் கொடுத்துட்டு அவனை மீட்டோம். பக்கத்தில் வெட்னரி மருத்துவமனை என்று தெரிந்ததும். அந்தக் கன்றுக்குட்டியை எடுத்து வரச்சொல்லி காரின் பின் கதவைத் திறந்துவிட்டான். ஸ்லைடு கதவு அதற்குத் தக்கதாக இருந்தது.

அருகிலிருந்த டிஸ்பன்சரியில் அவனுக்கு முதலுதவி செய்தோம். மீண்டும் பார்த்துவிட்டு வருவோம் என்று வெட்னரி மருத்துவமனைக்கு செல்வதாகச் சொன்னான். எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவனுக்காகச் சென்றேன்.

அவன் மட்டும் உள்ளே சென்றான்.

அரை மணி நேரமாகியது அவன் வரவில்லை.

அவனை அடித்த ஒருவன் ஆஸ்பத்திரியிலிருந்து கீழே நேராக என்னிடம் வந்தான். நான் கொடுத்த நோட்டுகளை என் பையில் வைத்துவிட்டுச் சென்றான்.

பதட்டமடைந்த நான் மேலே சென்றேன். கன்றுக்குட்டி இறந்து போய்விட்டதாக அட்டெண்டர் சொல்ல அவனைத் தேடினேன். அவன் அழுது அழுது தூங்கிப்போய்விட்டதாக அவன் தலையைக் கோதிவிட்டபடி கண்கள் கலங்க அந்த பெண் சொன்னாள்.

சுபத்ராவை அழைத்தேன்.

"இந்தோனேஷியா - நிலைமை சீராகிவிட்டது சுபத்ரா"

ஜீவ கரிகாலன்

புதன், 24 மே, 2017

நிசப்தமாய் ஒரு புரட்சிமூன்றாம் நதி இரண்டாம் பதிப்பிற்கு செல்கிறது

லிண்ட்சே லோஹன் நான்காம் பதிப்பு , மசால் தோசை இரண்டாம் பதிப்பு ஆகியன விரைவில் வெளிவரும். 

இன்னும் சில புத்தகங்கள் இந்த ஆண்டிலேயே வரும், எல்லாவற்றையும் விட நண்பனாக இருப்பதற்கு பெருமைப்பட எத்தனையோ விசயங்கள் இருக்கிறது.

நான் வந்திருந்த சில மணி நேரங்களில் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த நபர்கள் அவரை சந்திக்க வந்திருந்தார்கள் ஒருவரோடு பள்ளிக் கல்விச் செயல்பாடு குறித்து, மற்றவரோடு சில மருத்துவ உதவிகள் குறித்து, இன்னுமொரு கட்சிக்காரரோடு சூழல் குறித்த அவரது முயற்சிகளைத் தொடர்ந்தபடி சென்றுக் கொண்டிருந்தது அவர் பேச்சு.

இதற்கிடையில் மூன்று மாணவர்களைச் சந்தித்தேன், ஒருவன் தன் தாய் தந்தையை இழந்தவன், ஒவ்வொரு வார இறுதியிலும் ஆட்டுக்கறி விற்று தனக்கும் தன் சகோதரிக்குமான பொருளைச் சம்பாதித்துக் கொள்கிறான். அவர்கள் நிசப்தம் அறக்கட்டளையின் அரவணைப்பில் இருப்பவர்கள்.

இரண்டாவது 1123 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளியில் முதலாம் மதிப்பெண் பெற்றவன். என்ன படிக்க வேண்டும் என்று கூடத் தெரியாத நிலையில் இருந்தான், அவனுக்குப் பொறியியல் கல்வி அதன் எதிர்காலம் குறித்து அவனுக்கு விளக்கிவிட்டு அவனை அனுப்பிவைத்தார். அவனும் அவனைப் போன்ற அவ்வட்டாரத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்களை அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அவர்களை ஊக்குவித்ததில் நிசப்தம் மற்றும் அதன் ஆர்வலர்களின் பங்கும் இருக்கிறது.

இடையில் ஒரு கல்லூரியின் செயலாளரைச் சந்தித்து அருகே உள்ள ஒரு குடியிறுப்பில் உள்ள மாணவர்களுக்காக அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பைக் கேட்டறிந்தார் (அவர்கள் யாவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கலை கூத்தாடிகள் எனும் தொழில் செய்தவர்கள்), சென்ற முறை அவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து, பள்ளியில் படிக்கும்போதே அவர்களைக் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் Quotaவில் சேர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதால் அதில் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அவர்களின் விளையாட்டிற்கான செலவுகளைத் தொடர்ந்து நிசப்தம் அறக்கட்டளை ஏற்பதாகச் சொன்னார்.

அடுத்ததாக சந்தித்த மாணவன் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான், Fisheries படித்துக்கொண்டிருக்கிறான். ஏற்கனவே உதவி பெறும் மாணவன். இந்த வருடம அவனே சில மாணவர்களை ஊக்குவிப்பதாகச் சொன்னான், சிலர் அதில் பலனடைந்ததாகவும். ஓய்வு நாட்களின் தானும் நிசப்தத்தின் வேலையை செய்வதாகவும் சொன்னான். அந்த ஓய்வு நாட்களில் சிவில் சர்வீஸ்க்கு தயார் செய்வியா என்று கேட்டார் வா.ம.

”ம்ம் சரி” என்றான் யோசிக்காமலேயே.

“யோசிக்காம எதையும் சொல்லாத யோசிச்சு சொல்லு உன்னால முடியுமான்னு” என்று வா.ம சொல்லும் போது எனக்கு குழப்பமாக இருந்தது. ஏன் அவன் தான் இஷ்டம்னு சொல்றானே, ஏன் டைம் கொடுக்குறிங்கன்னு அவரிடம் கேட்டதற்கு,

”அப்படி ஒருவன் யோசித்து, உழைப்பதாக மனப்பூர்வமாகச் சொன்னால், ஏனென்றால் ஒரு ஐ ஏ எஸ் பதிவியிலோ வேறு ஏதும் க்ரூப் 1 அலுவலர்கள் யாரையாவது அவனுக்கு mentor ஆக இருக்கச் சொல்லிக் கேட்கவேண்டும். அவர்களுக்கும் நேரம் என்பது எவ்வளவு முக்கியம்” என்றார்.

ஒரு மாநிலத்தின் நலன் , பிராந்தியத்தின் நலன் என்று பேசுவதோடு நின்றால் போதுமா அந்த நலனைச் செய்பவர்கள் அதிகாரம் கொண்டவர்களாகத் தானே இருக்க வேண்டும். அவர்கள் நம் மண்ணிற்கு வேண்டும் தானே என்று மணிகண்டன் என்னிடம் சொல்லும் போது அவர் கண்ணில் ஒரு பரந்த வெற்று நிலம் தெரிந்தது.. அதில் மணியின் கனவு நிச்சயம் கட்டமைக்கப்படும் நிஜமாக.

இத்தனையும் ஞாயிற்றுக்கிழமையின் ஒரு அரை நாளில் நான் கண்ட காட்சிகள், அதுவும் என் பொருட்டு மூன்றாம் நதிக்காக கல்லூரிப் பேராசிரியரைச் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த நேரத்தில் நிகழ்ந்தவை. இவற்றோடு தன் அம்மாவின் மனநிலை குறித்தும், தன் ஓய்வற்ற உடல்நிலை குறித்தும் கூட நண்பனாக சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளும் போது, இவரை Alienஆக நினைத்துக்கொள்ளக் கூடாது என்று சத்தியம் செய்து கொண்டேன்.

வார இறுதியில் மட்டும் இத்தனை வேலைகளை ஒருவன் தொடர்ச்சியாக சில வருடங்கள் செய்த சிறு சிறு முன்னெடுப்புகள் எல்லாம் எத்தனை ஆரோக்கிய விளைச்சல்களாக இருக்கின்றது எனப்பார்க்கும் போது, அப்படியே கண்ணம்மாவிடம் சொன்னேன்.

நீயுந்தான் இருக்கியே சோம்பேறி என்றாள். பாக்கெட்டிலிருந்த மாத்திரைகள் இனி எப்போதும் தேவைப்படப்போவதில்லை.

நிசப்தம் என்பதும் ஒரு புரட்சியாகத் தான் இருக்கிறது.

என்றும் மாறா ப்ரியங்கள் மணி..

திங்கள், 22 மே, 2017

திமுகவின் சாபம்

காதலும் அரசியலும் தான் ஒரு தனி மனிதனை எங்கே வேண்டுமானாலும் துரத்திவிடும், அரவணைப்பதைப் போலவே.

ஃபேஸ்புக்கில் சிறிது நாள் விலகி இருந்தாலும், சில முக்கிய அலுவல் ரீதியான வேலைகளுக்காக பதிப்பக ஐடியில் நுழைந்துப் பார்த்தேன்.

விநாயக முருகனின் அருவருக்கத்தக்கப் பதிவுக்கு எழுந்த ஒரு கண்டனத்தை மட்டும் வைத்து இதனை எழுதவில்லை. அவருக்கு சென்னை மெட்ரோவிற்காக இறந்துபட்ட தொழிலாளர்களுக்குத் தன் முதல் நாவலைச் சமர்பித்த, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு உயர்நடுத்தர வாழ்க்கையினை நாவலாகவே எழுதிச் சலித்த ஒரு மனிதநேய எழுத்தாளர் அதற்கு மேல் வற்றிவிட்டதினால், தன் பார்வைகளை மாற்றியிருக்கக்கூடும்.

நேற்றைக்கு கோபியில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது, அவரைப் பற்றி வா.மவிடம் விசாரித்தேன், ஒரு காலத்தில் தீவிரமாக ஈழ ஆதரவு போராட்டங்களில் இருந்தவர். ஒரு கட்டத்திற்குப் பின்னர் இப்போது முழுமையாக ஆசிரியராக மாணவர்களோடு இருக்கிறார் என்றார். வா.மவின் அறக்கட்டளைக்கு நிறைய உண்மைக்கே உதவி தேவைப்படும் நன்கு படிக்கக்கூடிய மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொண்டு சேர்க்க பெரும் உதவி செய்கிறார். வத்திராயிறுப்பில் ஒரு மனிதரைக் கண்டிருக்கிறேன், ஜடாமுடியோடு இருக்கிறார். அவர் யாரோடும் பேசுவதில்லை, மிக இளைய வயதிலேயே வத்திராயிறுப்பில் கேம்ப் வைத்திருந்த இயக்கத்தின் மீது கொண்ட அபிமானத்தில் ஒரு ஈழ ஆர்வலராக ஈழம் கிடைக்கும் வரை யாரிடமும் சகஜமாகப் பேசவும் கூடாது, முடி வெட்டவும் கூடாது என்று இருக்கிறார் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்கள் தலைவர் இருக்கிறார் என்றே நம்புகிறார்கள், இல்லை என்று புரிந்தால் மட்டும் என்ன செய்ய முடியும்? இப்படி நிற்கதியாய் நின்று போனவர்களும் இருக்கிறார்கள், அந்த காயம் ஆராமல் புலம்புபவர்களும், சாபமிடுபவர்களும் இருக்கிறார்கள்.

இதுபோக, ஒரு புதிய இளைஞர் கூட்டம், இந்தத் தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டிற்கும், நெடுவாசலுக்கும், டாஸ்மாகிற்கு எதிராகவும் இன்று நிற்கும் பல புதியவர்கள் அந்த வலியிலிருந்து எழுந்தவர்கள் தான். அவர்களுக்கு ஒரு தலைவன் புகுத்தப்படவில்லை, ஆனால் ஏற்கப்பட்டிருக்கிறான். அரசியல் கற்பிக்கப்படவில்லை, ஊடக ஆதரவு இல்லை, எந்த எழுத்தாளனோ கலைஞனோ விழிப்புணர்வு செய்யவில்லை. ஆனாலும் கூடுகிறார்கள் - எப்படி?

ஒரு காலத்தில் திமுக காரன் என்று சொன்ன நிறைய பிராமணர்களே இருந்திருக்கிறார்கள். அவர்களையும் அனைத்துச் செல்லுமளவுக்கு விசாலமான கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மொழிப்போர், சூழல், தொழில், சமூகக்கட்டமைப்பு, பகுத்தறிவு செயல்பாடு என நிறைய அம்சங்களால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இன்று திமுகவில் இணைவது என்பது ஊருக்கு வெளியே நிலம் வாங்கிப் போடுவது போலே. ஆட்சியைப் பிடிப்பது என்பது வாங்கி வைத்திருக்கும் நிலம் அருகே பைபாஸ் வருவது போன்ற கனவு கொண்டிருக்கும் எழுத்தாளச் சமூகத்தில் இப்படி எழுதுபவர்களை ஒத்துக்கொள்ளப்போவதேயில்லை என்றாலும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு திமுகவைத் திட்டிக்கொண்டிருக்கும் அநேக தமிழ் தேசியவாதிகள் முன்னால் திமுக தான் என்பது சந்தேகமேயில்லாத உண்மை. ஆனால், சென்ற வருடம் முதல் கவனித்து வருகிறேன் திமுகவின் சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து அல்லது கடந்த தேர்தலிலிருந்து இதுவரை காட்டாதத் தன் முகத்தை காட்டுவதாகத் தெரிகிறது. அது தன் குற்ற உணர்வை மறைத்துவிட்டு, வீழ்ந்துவிட்ட எதிரியின் கல்லறையை அவமதிப்பது. சரி நீங்கள் உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள்.

திமுகவை விமர்சிக்கும் போது பல மூத்த ஆரம்பத்திலிருந்து கட்சிக்கு உழைத்த பலர் மவுனமாக அதைக் கடந்துவருவதை இன்றளவும் பார்த்து வருகிறேன். ஏனிந்த மாற்றம், இன்றைக்கு இனப்படுகொலையின் கறைகளிலிருந்து திமுகவைப் காப்பாற்ற நினைப்பவர்களை செலுத்துகின்ற விசை எது?

அடிப்படை பிழைப்புவாதமின்றி வேறேதுமில்லை, ஒரு பகுத்தறிவு இயக்கத்தால் பரிணமிக்கப்பட்டு வேறு எங்கோ தன் சமூகப்பொருளாதார நிலையை கொண்டு சென்றிருக்க வேண்டிய சமூகம். இன்று ஆளுனரும், ஸ்திரமான முதல்வரும் கூட இல்லாத மாநிலமாக மாறுவதற்குக் காரணம் திமுகவின் bio-memoryஆக மாறிவிட்ட இந்த அடிப்படைப் பிழைப்புவாதம் தான் காரணம்.

எத்தனைக் கடுமையாகவும் கட்சியையும், தலைமையையும் விமர்சித்திருந்தும் தன் தலைவன் பிரபாகரன் என்று சொல்லும் சில ஆறுதல் தரும் நல்லுள்ளங்களும், மவுனமாக தங்கள் பக்கத் தவறைக் கடந்து வேறு பணிகளுக்குச் செல்லும் அதிகாரம் கொண்டவர்களும் கூட உங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கும் மகிழ்ச்சி இருக்கிறது.
ஆனால், ஈழ ஆதரவு நிலைப்பாட்டால் திமுகவை எதிர்ப்பது என்பது வெறும் ஈழ ஆதரவு மட்டுமல்ல, கடந்த அறுபது ஆண்டுகளாக எங்களையும் எங்கள் வளங்களையும் சுரண்டி அகபரித்துக் கொண்டிருக்கும் உங்கள் சூப்பர் குடும்பமே ஒரு இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் என்று சொல்லலாம்.

அப்படியான ஈழத்துக்குக் குரல் கொடுக்க ஒன்று கூடி நினைவேந்தலை ஆரம்பித்த மக்கள் தான், மெதுமெதுவாக தமிழகத்தின் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுக்கும் அடிப்படைத்தமிழர் உணர்வை பலப்படுத்திக்கொண்டே வருகிறது. ஆம் பலப்பட்டுவருவது யார் – இப்போது நன்கு வாசிக்கக் கூடிய எழுதக்கூடிய எழுத்தாளனாய் இருக்க வேண்டிய அவசியமற்ற, ஐடி போன்ற பெரு நிறுவனங்களில் வேலை பார்க்கக்கூடிய சாமான்யனும் என்பதில் தான் இன்றை பிழைப்புவாதப் போராளிகளுக்கும், அரிப்பெடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும், அரசியல் கனவு காணும் இரண்டாம் தர முதலாளிகளுக்குமான எரிச்சல். ஆகவே கண்டபடி குமுறுகிறார்கள்.
இன்றைக்குத் தமிழ்நாட்டின் சூழல் சார்ந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் அடிப்படையாக இருப்பது சிவப்புச் சித்தாந்தமோ, திராவிடச் சித்தாந்தமோ இல்லை அது தமிழர் நலன் என்கிற நேரடி அரசியல், அது தற்காலத்திற்கு அவசியமான அரசியல்.

இன்று விவசாயிகளுக்காகப் போராடும் திமுக ஆதரவு கோஷ்டிகளுக்கு எண்டோ சல்பைன் நுழைந்த கதையும் தெரியாது, கேரளா போன்ற மாநிலம் தடை செய்திருந்தும், ரசாயன அமைச்சகமே கையிலிருந்தும் அது குறித்துக் கிஞ்சித்தும் பரிசீலிக்காத மந்திரியைப் பெற்ற கட்சி தான், ஈழப் போர் சமயத்தில் மந்திரி பதவிக்காகவே பரிதவித்தது – 13 ஜூன் 2009 (அழகிரி மந்திரியாகப் பொறுப்பேற்ற நாள்). உண்மையில் ஸ்டாலின் அன்றே கட்சித்தலைவராக இருந்திருந்தால் கூட இந்த மாதிரி அவப்பெயரை சுமந்துவந்திருக்க மாட்டார்கள் என்று கூட நினைத்துப் பார்த்ததுண்டு. அபத்தம் – இப்படி யோசனை செய்வதில்.

இப்படியான ஒவ்வொரு துறைக்கும் தன் மகன், மகள், பெயரன், பெயர்த்திகளை வைத்துத் தனித்தனியாக நிறுவனங்கள் நடத்தி ஊடகங்களைப் பிடித்து, வளங்களைச் சூரையாடி, ஜாதிச் சண்டைகளைப் பெரிதுப்படுத்தி எல்லாவற்றையும் தன் குடும்ப நலனுக்காகவே சமரசம் செய்துகொண்ட ஒருவரை தலைவராகப் பெற்ற சமூகம்.

உங்களுக்குத் தலைவர் திரு. கருணாநிதியாக இருந்துவிட்டுப் போகட்டும், அதனால் எங்களுக்குப் பிரச்சனையேயில்லை.

ஏனெனில் நாங்கள் தமிழர்கள், எங்கள் தலைவன் – ஒரு போராட்டத்திற்காக தன் குடும்பம் மொத்தத்தையும் களத்திலேயே போரிட்டு இழந்தவன். அதனை, அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் கிடைக்கப் போகும் லாபங்களை எண்ணி மட்டுமே திமுகவை ஆதரிக்கும் ஆர்வலர்/எழுத்தாள சமூகத்திற்கு புரிந்துகொள்ளவே முடியாது.

வியாழன், 11 மே, 2017

பஜ்ஜி சொஜ்ஜி - கோடை மழை

ரமேஷ் ரக்சனும் நானும் மாலை உணவு முடித்துத் திரும்பும் பொழுது. தேநீர் குடிக்கலாம் போலிருந்தது. அவன் குல்ஃபி சாப்பிடலாம் என்று சொன்னான். உண்மையில் இரவில் வயிறு நிறைய உண்ணும் போது, டெஸ்ஸர்ட் எடுப்பது நல்லதா? அல்லது தேநீர் குடிப்பது நல்லதா எனக் குழம்பினாலும், குல்ஃபிக்கே மனம் திரும்பியது.

மழை தூறிக்கொண்டிருக்க, டாஸ் போட்டுப்பார்த்துவிட்டு அவனோடு தங்காமல் கிளம்பினேன். சரியாக ஆர்காட் ரோட் - லிபர்டி நிறுத்தம் அருகே, சினிமாவிலோ அல்லது ரேஸிலோ வருவது போல வரிசையாக ஒன்பது வாகனங்கள் சரிந்து விழுந்தன. என்னுடைய டோக்கன் நம்பர் ஆறு. ஒரே கூச்சலும் களேபரமுமாக சற்றைக்கெல்லாம் ஒரு எமர்ஜென்சி சூழலை நகரம் எதிர்கொண்டது போன்ற தோற்றம், பேருந்து நிறுத்தத்திலிருந்து volunteerஆக வந்து விழுந்தவர்களைத் தூக்கிவிட, புதிதாகப் போடப்பட்டிருக்கும் சாலையின் அதிகப்படியான வளவளப்புத்தன்மை தான் காரணம் என்று கவனித்து தொடர்ந்து வந்த மற்ற எல்லா வாகனங்களையும் தடுத்து நிறுத்தி மெதுவாகப் போகச் சொல்ல, தியேட்டரில் இல்லாத படிகளில் எட்டு வைத்து நடப்பது போல் ஒன்றன் பின் ஒன்றாக தள்ளிச்செல்ல ஆரம்பித்தார்கள்.


நம்மோடு சேர்த்து கூட ஏழு, எட்டு பேர் விழுந்திருக்கிறார்கள் என்பதாலும் அத்தனை ரணகளத்திலும் பெரிதாக ஏதும் நிகழவில்லை என்பதாலும் ஒருவரோடு சிரித்துக்கொண்டோம். காலில் லைட்ட ஒரு கீறல் தான்.

பின்னே என்ன - மாநகராட்சியின் இப்படியான மட்டமான சாலை அமைப்பைக் கண்டித்துப் போராடவா முடியும்? இதில் காலைச் செய்தியில் குப்பை லாரி வழியாக சிந்திய எண்ணெய் கசிவால் தான் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படும்போது என்ன சொல்ல.

குழிகளுக்கு நடுவே ஆங்காங்கே தெரியும் சாலைகள் மட்டுமே மழையிலும் சரி, இரவிலும் சரி நாம் பாதுகாப்பாய் கடக்க உதவுகிறது என்று உணர்ந்ததும் ஐயப்பந்தாங்கல் பகுதி கவுன்சிலருக்கு கீழிருந்து எழும்முன்பே நான் நன்றி சொல்லிக்கொண்டேன். பாக்கெட்டிலிருந்து விழுந்த செல்போனையும் இத்யாதிப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, மாநகராட்சிக்கு நன்றி சொல்லி ஒரு சுடச்சுட பதிவு ஒன்றைப் போடலாமென்று பார்த்தால், சென்னையில் மழையிரவு விபத்து ட்ரெண்டிங் ஆகிட. “இந்த சென்னைப் பசங்க அலப்பற தாங்கல”ன்னு கவிஞர் பழனிவேள் திட்டுற மாதிரி ஒரு காட்சியும் வந்து போனது.

இருந்தாலும் உணவிற்குப் பிறகு தேநீர் குடித்திருந்தால் இத்தனை மந்தமாக இருந்திருக்காது என்று தோன்றியது, இப்ப தான் ஏழாயிர ரூபாய் கொடுத்து இஞ்சின் வேலை பார்த்து வைத்த வண்டி பரிதாபமாய் இருக்க, ஒரு நபர் அதை எடுத்து சைடு ஸ்டாண்ட் போட்டார்.
வடபழனி லஷ்மன் ஷ்ருதி அருகே ஒரு தேநீர்கடை இன்னமும் திறந்திருக்கும் என்று சொல்லு ஓரத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தை சைடாக எடுக்க, இத்தனை களேபரத்தையும் சல்வார் கொள்ளாத ஒரு யுவதியொருத்தி நேராக தன் ஆக்டிவாவை என் வாகனத்தில் நேராக வந்து மோதினாள். டோக்கன் நம்பர் 10.
அப்போதும் இந்தக் களேபரத்தை எதுவுமே கவனிக்காமல் என் மீது அப்படியான ஒரு கரிசனம் அவளிடமிருந்து
“அறிவு இல்ல?”
ஓ அதுவும் கீழ விழுந்திருக்கும்

புதன், 10 மே, 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 10

ஒரே மாதிரியாக எழுதுகிறாய் என்று விமர்சித்ததற்கு பதில் சொல்வதற்கு அவனுக்கு ஒரு இடம் தேவைப்பட்டது, இது திங்கட்கிழமை என்பதால் அவன் சினிமாவுக்குச் செல்லத்திட்டமிட்டான்.

திங்கட்கிழமை காலையில் சினிமாவுக்குப் போவது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, நல்லபடம் தான் என்றில்லை மிக மோசமான, குப்பையான படமாகவோ அல்லது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் படமாகவோ இருக்கட்டும் திங்கட்கிழமை முதல் காட்சியில் கிட்டதட்ட ஒரே அளவில் தான் மக்கள் வருவார்கள். அதை அவன் முதன்முதலில் கண்டபோது அப்படியான திங்கட்கிழமையினை ஒரு உன்னத மக்கள்களின் உலகமென அவனது குருநாதர் சொன்னவை வந்து போனது.

டிக்கெட் கொடுக்கும் போதே, கவுண்ட்டரில் இருப்பவன் ஒவ்வொருவரது முகத்தையும் பார்த்து பார்த்து தான் குடுப்பான். மனித வாழ்வின் மறைவில் இருக்கின்ற உறவுகள், நட்புகள் ஆகியன அங்கே தென்படும். இப்படியாக அவன் திரை அரங்கில் நுழைந்த போது எல்லோர் முகத்திலும் ஒரு கதை இருந்தது. ஒவ்வொரு முகமும் ரகஸியமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் போது தாங்கள் வந்தக் கதை சொல்லப்பட்டது.

வாரநாட்களின் முதல் நாளே, முதல் காட்சியிலே திரைப்படம் பார்ப்பது ஏன்? அவர்களுக்கு என்ன கிட்டுகிறது இதில்?

1.        முன்சீட்டில் கால்களைப் போட்டுப் பார்க்க முடிகிறது
   எச்சில் துப்பிக்கொள்ள முடிகிறது
·         என் தலைவன் படம் அவ்ளோ நாள் ஓடாதுல்ல
·         அந்த இண்டெர்வியூ போக முடியாது
·         மத்தியானம் தான் சீரியல் ஓடும்ல அதான்
·         நாங்க எப்படியும் பாஸாகிடுவோம்
·         என்னது இன்னைக்கு திங்கட்கிழமையா?
·         மேனேஜர் கரெக்டா இண்டெர்வெல் டைம்ல தான் கூப்பிடுவான் சமாளிச்சுடலாம்
·         நேத்து படிச்ச நாவல் செம தலைவலி
·         வெயில்ல நிக்கறதுக்கு இங்க வந்து
·         மது அருந்தினாலும் துரத்தமாட்டான்
·         நான் ஒரு உதவி இயக்குனர்
·         கூட்டம் இல்லாத நாள்ல தான… (இருடி பேரை சொல்லல)
·         அடுத்து என்ன தொழில் தொடங்கலாம்னு யோசிக்க வந்தேன்
·         அவுங்க முன்னாடி ஒக்காந்துருக்காங்க, நான் துணைக்கு வந்தேன்
·         அந்த ஐடம் சாங் வரவரைக்கும் தான் தியேட்டர்ல இருப்பேன்.
·         அலாரம் வச்சு படம் முடிவதற்குள் நாங்க போய்டுவோம்
·         தூங்கும்போது எழுப்பிக்கேக்காதிங்க
·         முட்டை போண்டா
·         நான் ஒரு எழுத்தாளன்
·         நான் ஒரு உதவி இயக்குனர்
·         நான் ஒரு பிச்சைக்காரன்
   திங்கட்கிழமை பாக்குற யதார்த்த படங்கள் எப்போதுமே எனக்குஃபேண்டசியாக தோற்றமளிக்கும்


     வீணாய்ப்போனவர்களுக்கு கதை எதற்கு 

ஜீவ கரிகாலன்


வெள்ளி, 5 மே, 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 09

மெய்யுலகு


புருரவஸின் தீராத சோகம் என்று அவனால் நம்பப்பட்டது ஒருநாள் பொய்த்தது என்று காளிதாஸ் எதை வைத்து உறுதியாகச் சொன்னானோ ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால், அது இத்தனை நூற்றாண்டுகளாய் ஒவ்வொரு மனிதனும் சாகும் வரைக்குள்ளாக தீராத தேடலை அவர்களுக்குள் விதைத்து வைத்திருக்கிறது கண்ணம்மா.. சொல்வதைக் கேள் கண்ணம்மா இது அவர்களைப் பற்றியக் கதையில்லை என்று முன்குறிப்பு தருகிறேன். இருந்தபோதும் இதில் மரணத்திற்கு அப்பாலே தான் அது கிடைக்கும் என்று முடித்துக்கொள்பவர்களைப்பற்றி முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு எழுதுகிறேன். மரணம் என்கிற……….. என்ன உருவகப்படுத்த, அது வரும் வரையிலும் ஒவ்வொரு மனிதனும் தேடிக்கொண்டிருப்பது மனித நாகரிகத்திற்கான சுவடுகளில் ஒன்று. சிலருக்குக் கிடைக்கிறது, பலரும் கிடைத்திருப்பதை அறியாமலேயே மரித்துப்போகிறார்கள். ஆனால் இவர்கள் யாரைப் பற்றிய கதையும் நான் சொல்லப்போவதில்லை கண்ணம்மா. நான் உனக்கு நடந்தவற்றைக் கூறப்போகிறேன். நீ என்னை மெய்யுலகுக்கு அனுப்பி வைத்த கதையினை உனக்கே சொல்லப்போகிறேன்.

கனவுகளில் ஓங்கி உயர்ந்திருந்த கோட்டைகளும், மிதந்துக் கொண்டிருந்த மாளிகைகளும், நேர்த்தியான தெருக்களில் ஒருங்கே அமைந்த கடைத்தெருவும், குடியானர்வர்களின் இல்லங்கள் எல்லாம் அமையப்பெற்ற ஒரு திட்டமிட்ட நகரத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் சில மரங்களுக்கு நடுவே வேயப்பட்டிருக்கும் பறவைச்சப்தங்களால் மூடப்பட்டிருக்கும் குடிசையைப் போன்ற ஒரு தனியுலகம் அது. நீ தான் அனுப்பி வைத்தாய், கதவைத் திறந்ததும் அந்த உலகம் கண் முன்னே தெரிந்தது.

நீ கொடுத்தனுப்பிய முத்திரை மோதிரத்தை அவ்வூருக்குள் நுழைந்தவுடன் எதிரே நின்றிந்த யட்சியிடம் கொடுத்தேன். ஆச்சரியம் என்னவென்றால் , அந்த யட்சி நம் உலகத்திலும் யட்சி தான் கண்ணம்மா. எனக்கு ஒரு மாலைப் பொழுதின் மயக்கத்தை கலைக்கக் கொடுத்த சுலைமானித் தேநீர் போல மெய்யுலகின் தொடக்கத்திலேயே யட்சியைப் பார்த்த மகிழ்ச்சி. அந்த ஆண் தேவதை என் இரண்டாம் கதையிலிருந்து மேலெழுந்து என்னோடு பயணிப்பான் என்று ஆசிர்வாதம் செய்தாள் யட்சி.

என்னை மெய்யுலகிற்கு அனுப்புவதாய் சொல்லிவிட்டு எங்கே அனுப்பினாயோ என்று உன்மேல் கோபம் கொண்டேன் கண்ணம்மா. 

ஐயோ நான் உண்மையைச் சொன்னதற்காகக் கோபம் கொண்டு என்னை ப்ளாக் செய்யாதே. இந்தக் கதையை நான் உனக்குக் கூறியே ஆக வேண்டும்.

அது கனவா? பாதையா? ஒளியா கண்ணம்மா….

என்னை எது? எப்படி? எங்கிருந்து? எங்கு? எதற்காக இயக்குகிறது கண்ணம்மா? கூறியது கூறல் நன்றாக இருக்காது என்று புலம்பும் வாசகனைச் சாபமிடு கண்ணம்மா. அவனும் உன்னையே துதிபாடட்டும்.

ஆண் தேவதையை வழிகாட்டிட அனுப்பிய யட்சி, என்னிடம் இறுதியாக ஒன்றைக் கூறினாள் “எல்லாவற்றையும் யோசித்து முடிவெடு” என்று.

எப்படி யோசிக்க, யோசிக்க என்பது விளைவுகளைப் பற்றியா? விளைவுகளைப் பற்றி யோசிப்பவனுக்கு விடைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும், ஆனால் வினை புரிய இயலுமா. ஒரு வேளை எளிதாக ஒரே வார்த்தையில் விடை கிடைத்தாலும் கூட HENCE PROOVE என்று அடுத்த விளக்கமான பதிலுக்கான கேள்வியாக ஒரு சமன்பாட்டைக் கேட்டுவிடும் இரக்கமற்ற வாழ்க்கை. வழக்கம் போல தேர்வெழுதிவிட்டு வெளியே வந்து போட்டுப்பார்க்கும் விடையே சரியாக இருக்கும் என்பதால் நான் எதனைத்தான் நம்ப?

நல்லவேளை கண்ணம்மா, உன்னைப்போலவே அந்த இரண்டாம் கதையிலிருந்துக் கிளம்பிய ஆண் தேவதையை யட்சியும் நம்பினாள். நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம். சுவாரஸ்யம் என்னவென்றால், வேதாளம் என்றால் தான் நான் சுமந்து செல்லவேண்டும், இது தேவதை என்பதால் நான் அவனுக்கு சுமையானேன். ஆனால் நான் வேதாளமாக மாறிக் கேள்விகள் கேட்டுக்கொண்டே அவனோடு வந்தேன். அவன் நான் செல்லுமிடத்தின் காலநிலை, வெப்பநிலை, கொதிநிலை பற்றிய ஆருடங்கள், கணிதத்தேற்றங்கள், புள்ளியியல் மாதிரித் தரவுகள், அனுகூல பலன்கள் ஆகியவற்றைச் சொல்லியபடி வந்தான். நான் கொட்டாவியை மறைத்து அவனிடம் நல்லபடி நடித்து வந்தேன்.

இத்தோடு என் வேலை முடிந்தது என்று ஒரு எல்லைக்கல்லில் நின்றுவிட்டான், அதில் இருந்த எழுத்துகள் என்னால் வாசிக்கமுடியவில்லை கண்ணம்மா. இந்த மத்திய சர்கார் ஏன் இப்படி வன்மம் கொண்டு அலைகிறது கண்ணம்மா, எல்லைக் கல் என்ன சொல்கிறது என்பதை இந்த ஊரில் பயணிப்பவனது மொழியில் தானே சொல்ல வேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியாதா?

கோமாளிகள் அங்கதம் தான் செய்ய வேண்டும், ஆட்சியாளர்கள் செய்யக்கூடாது என்று நீ அவ்வப்போது சொல்வதை நினைத்துப் பார்த்தேன் கண்ணம்மா. நானே நடந்து சென்றேன், மீண்டும் ஒரு கதவு - திறந்தேன். திறந்ததும் வீசிய காற்றில் என் உறக்கத்திற்கும் முன்னரே வேலையைக் காட்டும் கனவின் நாற்றம் வீசியது.

கடந்தேன் அதை. ஒரு கேள்விக்குறியும், ஆச்சரியக்குறியும் எனது ஆழ்மனதில் பதிந்திருந்த காட்சிகளையே என் கனவில் பிரதிபலிப்பதால் அது ஷ்ருஷ்டித்திருந்த தேவதைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அம்மூ இதைத்தான் WESTERN INFLUENCE என்பாள் கண்ணம்மா. கீழைத்திய நாடுகளான சீனாவிலும், ஜப்பானிலும் கூட இப்படி மாறிவிட்டதாம் கண்ணம்மா.

நான் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு பெரிய சமவெளி, அழகிய வெள்ளை வீட்டைக்கொண்டிருந்த ஒரு பெரிய சமவெளி. உண்மையில் அது சமப்படுத்தப்பட்டிருந்த வெளி. அந்த தேவதைகளால் சமப்படுத்தப்பட்டிருந்தது.  என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தேவதைகள் இருவர் மட்டுமே என் கண்களுக்குத் தென்பட்டார்கள். நிலத்தில் உழுது வேலை பார்ப்பவர்கள் யாவருமே தேவதைகள் தான் கண்ணம்மா. ஆனால் இங்கே தேவைதைகள் உழவு செய்கின்றன. இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று சொன்னாலோ, தேவதை என்ற ஒன்றே இல்லை என்று சொன்னாலோ உன்னை அந்தக் கட்சி தன் ஆஸ்தானப்பிரச்சார பீரங்கி ஆக்கிக்கொள்ளும், ஆனால் நீ தான் பொய் சொல்லமாட்டாயே.

துளிர்த்துக்கொண்டிருந்த ஒவ்வொரு செடிகளும் அவைகளால் தொட்டுப்பார்த்த பரவசத்திலோ அல்லது பார்ப்பார்கள் என்கிற பரவசத்திலோ காத்துக்கொண்டிருந்தது. ஒரு விசயம் கவனித்தாயா கண்ணம்மா, இரண்டு பரவசமும் சமமாக இருந்தது.

நேராக மூத்த தேவதையிடம் நின்றேன், என் கண்களில் தெரிந்த யட்சியின், ஆண் தேவதையின் செய்திகளைப் புரிந்துகொண்டாள் கண்ணம்மா. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், நீ தந்த செய்திகளை ஏன் அவள் புரிந்துகொள்ளவில்லை கண்ணம்மா? ஒருவேளை அவளுக்குப் புலப்படவில்லையா அல்லது அது நமக்கான பிரத்தியேக மொழியா.
என்னை சோதித்துப்பார்க்க விரும்பும் என்று யட்சி சொல்லிவைத்திருந்தாள், அந்த ஆண் தேவதை அந்த தேவதைகளைச் சோதித்துப்பார்க்கச் சொன்னது.

நாற்றம் வாசனையாக மாறும் ரஸவாதத்தை இரண்டு பெரிய கதவுகளுக்குப் பின்னால் நின்று கொண்டும், சாவகாசமாக பன்னீர் பட்டர் மசாலா செய்துகொண்டும் நீ செய்ததை என்னால் அப்போது உணரமுடிந்தது கண்ணம்மா.

மூத்த தேவதை என்னை வீட்டிற்குள் அழைத்துச் சென்றது, அதன் கரங்களைத் தொட்டுப்பார்த்தேன், மிகப்பெரிய நிலத்தில் மேடுகளைப் பள்ளைங்களைத் திருத்தி சமப்படுத்து மண்ணின் கசடுகளைப் பிரித்தெடுத்து வளமாக்கி அவ்வப்போது முத்தங்கள் கொடுத்து நிலத்தை பசுமையாக்கிய தேவதையின் உழைப்பை ரேகைகளுக்கு இணையாக சொரசொரப்பாக்கி இருந்தது அதன் விதி.

தேவதையாதல் கூட விதி தானோ கண்ணம்மா?

யட்சியும், ஆண் தேவதையும் சொன்னது அனைத்தையும் மறந்துபோனேன் என்பதை மட்டும் மறக்காவிடில், என் நினைவுகளே என்னைத் தோற்கடித்திருக்கும். ஆனால் நான் கனவுக்குள் பயணிப்பதைப் போன்றே லகுவாக உணர்ந்தேன். அவள் நீட்டிய விரலின் நுனி ஒரு கதவினைச் சுட்டப்பட்டு இருந்தது. நேரே திறந்தேன். நான் வரும்போது உள்ளே சென்ற அந்த இன்னொரு தேவதை என்னைப் பார்க்காமல் குனிந்த படி, யாரிடமோ பேசிக்கொண்டிருந்தது. உள்ளே சென்றேன், கதவு சாத்திக்கொண்ட சப்தம் என் நினைவில் இருந்து செவிகளை அறைந்தது. திரும்பிப்பார்த்தேன் கதவு அப்படியே திறந்து தான் இருந்தது.

ஆனாலும் என் செவிகளை நம்பச்சொல்லி, அந்த மெல்லிய மல்லிகை வாசனை அறிவுறுத்த கட்டுண்டேன்.

அந்த தேவதை – மிக அழகாக இருந்தது. அழகிய தேவதை என்பது தேவதைகள் அழகிற்கு அப்பாற்பட்டவர்களா? அல்லது தேவதைகளில் சிலர்தான் அழகாக இருப்பார்கள் என்கிற உண்மையா?. இரண்டும் வேண்டாம், அவளை அழகிய தேவதை என்றே அழைப்பது சிறப்பு, அவள் குனிந்துப் பேசிக்கொண்டிருந்தது இன்னொரு தேவதையோடு.
அவளுக்கு நிறைய கடமைகள் இருப்பதால், அவள் தன் துயரத்தையே இறக்கைகளாய் கொண்டிருந்தாள். உனக்கு ஞாபகிமிருக்கிறதா, உன்னிடம் நான் சொல்லியிருக்கிறேன் – தேவதைகள் வரமளிப்பவர்கள், ஆனால் தேவதையாய் வாழ்வது சாபமென்று. அது மீண்டும் நினைவில் வந்துபோனது.

அகச்செவி அறை சாத்தப்பட்டிருப்பதாய் உணர்த்த அவளைப் படுக்கையில் கிடத்தினேன் கண்ணம்மா? அவள் அந்த சிறு தேவதைக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தாள். அந்தக் கதையில் ஒரு ஆச்சரியமிருக்கிறது, அதைச் சொன்னால் நீ கோபித்துக்கொள்ளக் கூடாது. அது உன்னைப் பற்றிய கதை ஒன்று, உன்னைப்பற்றிய கதையில் ஏதோ ஒரு பக்கத்தில் என் பெயரும் எழுதப்பட்டிருப்பதை அறிந்து அந்த தேவதை வாசிப்பதை நிறுத்து முயன்றேன் கண்ணம்மா.

அவளோடு நானும் சேர்ந்து படுக்கையில் அமர்ந்தேன். மும்முரமாகச் சொல்லிக்கொண்டிருந்த கதையைக் கேட்டபடி அந்தப் பேரழகு தேவதை தூங்கிக்கொண்டிருக்க அவள் தலையைக் கோதிவிட்டுக்கொண்டிருந்தாள்.  நான் அவள் பின்னே அமர்ந்து அவளைக் கட்டிப்பிடிக்க முயன்றபோது தான் தெரிந்து கொண்டேன், தேவதையாய் வாழ்வது எத்தனை சாபமென்று.

ஒன்று எனக்கும் இறக்கை முளைக்கவேண்டும், இல்லாவிட்டால் அவள் இறக்கைகளைப் பிய்த்து எறிய வேண்டும் என்றுத் தோன்றியது. அவள் காதுகளில் மெல்ல அவற்றைச் சொன்னேன். அவளால் அதை பிய்க்க முடியாதென்று என் உதவியை நாடினாள்.

தேவதையின் இறக்கைகள் பிய்த்தெறியப்பட்டாள் அவள் என்னைப்போன்ற மனிதராகிவிடுவாள் என்று தோன்றியது. எப்படியோ எட்டிப்பிடித்து அவள் காதுமடல்களை முத்தமிட்டபடி, ஒரு இறக்கையை பலம் கொண்டு பிய்த்து எறியத் தயாரானேன். அப்போது உன் குரல் கேட்டது. அதனால் தான் என்னவென்று கேட்க அங்கிருந்து இப்போது வந்துவிட்டேன் கண்ணம்மா.

அந்த தேவதைகள் ஒரு வனத்தை உருவாக்கப் போகிறார்கள் என்று உன்னிடம் சொல்லமறந்துவிட்டேன் கண்ணம்மா, அந்தக் குழந்தைக்குச் சொன்னக் கதையின் முடிவை நினைத்துப்பார்க்கிறேன்.


தேவதையாய் வாழ்தல் சாபம் தான் கண்ணம்மா. அவளை நான் ஒரு மனுஷியாக்கப் போகிறேன்

ஜீவ கரிகாலன்

வியாழன், 20 ஏப்ரல், 2017

23வதாக எட்டிப்பார்த்தவர்

23வதாக எட்டிப்பார்த்தவர்

ஓவியம் : கணபதி சுப்ரமணியம்
”ஹனி”

“சொல்டா”

அந்த மாலையில் அதற்கு மேல் பேசிக்கொண்டவைகளை நான் என் நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஏன் என்று கூட கேட்காதீர்கள் நினைவில் அவை யாவும் வந்துவிடக்கூடாது என்பதில் தான் என் அத்தனை பிரயர்த்தனமும் இருக்கிறது. நகரம் அந்தப் பேரிடருக்குப் பின் ஒவ்வொரு நாளும் துயிலும் காலம் நீண்டுவிட்டது போன்ற தோற்றம் மிகுந்திருக்கிறது.

லட்சம் கிலோமீட்டர் ஓடி முடித்து, மீண்டும் முதலில் இருந்து சுற்ற ஆரம்பித்த என் இருசக்கரவாகனத்தின் மீட்டர், கூடுதலாக மேலும் இருபத்தைந்தாயிரம் கிலோமீட்டர் பயணித்துவிட்டது. ஆயிரக்கணக்கில் மைல்களைக் கடந்துவிடுவதெல்லாம் பயணமாகிவிடுமா?. உண்மையில் பயணம் என்பது அச்சத்தைக் களையவேண்டும். அபயம் தருவதே பயணத்தின் இயல்பு. ஆனால் நான் பயணிக்கவில்லை, இராட்டினச் சுற்றாகச் சுற்றிக்கொண்டே இருக்கிறேன். அதைப் பயணம் என்று சொல்ல முடியாது, போதை என்றும் சொல்ல முடியாது வேண்டுமானால் மயக்கம் என்று சொல்லலாம்.
வேறு எங்கேயாவது மனதைச் செலுத்த வேண்டும். அவற்றை மறக்க இயலாது, ஆனால் கலைத்துப்போட முடியும். அன்றைய பயணத்தில் ஜீ சொன்ன வார்த்தைகளை அசை போட்டுப் பார்த்தால், அது ஒன்று தான் இப்போது என்னிடம் இருக்கும் ஒரே உபாயம். களையமுடியாதவற்றை இப்போது கலைத்துப்போட்டுவிடலாம்.
முடியுமா?

பேரிடரின் பதட்டம் தனியாத அந்த பெருநகரத்தின் மாலை கொஞ்சம் ஈரப்பதத்தையும், நிறையவே பயத்தையும் கொண்டிருந்தது. விபத்தில் முதலுதவி அளித்ததாக ஒட்டுப்போட்டிருந்த தார்ச்சாலைகள், அப்புறப்படுத்தாத முறிந்து போன மரங்கள், உடைந்து போன தடுப்புச்சுவர்கள், பறந்து சென்று விழுந்த விளம்பரத்தட்டிகளை ஒவ்வொன்றாகக் கடந்து கொண்டிருந்தேன்.

இன்றைய மாலையைத் தவிர எல்லா பொழுதுகளையும் கலைத்துப்போட்டுப் பார்க்க இயலுமா? இயலுமெனில் இந்த நகரத்தின் நம்பிக்கையைப் போல் நானும் மீண்டெழுவேன்.

”ஹனீ”

“சொல்லுடா”

“உன்கிட்ட ஒன்னு கேட்கனும்”

இல்லை மருந்துண்ணும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்கிற கதை தான். அதற்கு மேல் யோசிக்கக் கூடாது என்று தீர்கமாக முடிவு பண்ணினால் மீண்டும் மீண்டும் இதையே தான் நினைத்துப் பார்க்க வேண்டி வரும்.

“என்ன கேட்கப்போற”

“நான் கேக்குறன்னு கோச்சுக்காத பொறுமையா பதில் சொல்லு”

சிரிப்பு தான் வந்தது. சிரித்தபடியே சிக்னலைப் பார்க்காமல் கடக்க முற்பட, குறுக்கே வேகமாகப் பாய்ந்த மினிடோர் வேனில் இருந்து ஒருவர் குட் ஈவ்னிங் என்று பொருள் தரும் எதுகை மோனையுடைய இரண்டொரு சொற்களை உதிர்த்துச் சென்றார். அங்கிருந்தபடியே என்னைக் கைகாட்டித் திட்டிக்கொண்டிருந்தக் காவலரை என் கைநீட்டி வணக்கம் தெரிவித்தேன். அது என்னை உள்ளூர்க்காரன் தான் என்றும் தெரியாமல் கடந்து வந்துவிட்டேன் என்றும் காவலருக்கு உணர்த்தும் உடல்மொழி. என்னைக் கடந்து செல்ல அனுமதிப்பார் என்று தோன்றியது.

உலகில் எல்லோர் மீதும் ஒரு நம்பிக்கையும் அனுமானமும் தோன்றிவிடுகிறது. இப்படியான அனுமானங்கள் தான் உறவுகளை, பகையை, நம்பிக்கையை, குரோதத்தை, பக்தியை, காதலை உருவாக்கிறது. எல்லாமே கற்பிதங்கள் தான். ஆயிரமாயிரமாண்டுகளாக நடமாடிக்கொண்டிருக்கும் சகமனிதர்கள் மீதான அனுமானங்களின் சுவடுகளே இப்படி கற்பிதங்களாகின. என்னை அவர் தடுக்கப்போவதில்லை. ஆனால் அவள் தடுத்தாள்.

 “ச்சீ”

“ஹனீ பொறுமையா இரு முழுசா என்னப் பேசவிடு”

“ஷட் அப்”

நான் தடுக்கப்பட்டேன், அவளால்.

குறுக்கே வாகனம் எதுவும் வராமல் இருந்தாலும், சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தேன். சலசலத்துப் போன டூவீலரின் வலதுபுற இண்டிக்கேட்டர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. வாகனம் ஓட்டும் போது அது பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருக்கும், அதை ஒட்டுவதற்கோ, அறுத்தெறியவோ தோன்றவில்லை.

“ஏன்டீ இப்படி எரிஞ்சு விழுற. கொஞ்சம் பொறுமையா கேளு”

“…”

“என் நெலமைய யோசிச்சிப்பார்த்தியா”

சிக்னல் மரம் பச்சையை உமிழ்ந்தது. சிக்னலைக் கடந்து பாலத்தில் ஏறினேன். நூறு சீ சீ இஞ்சின் எட்டு வருட உழைப்பில் தன் பெரும்பான்மையான வாழ்நாளை இழந்துவிட்டேன் என்று என்னிடம் சொல்லி சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் வண்டி மாற்றிடும் எண்ணம் இப்போது இல்லை. பாலத்தில் ஏறும்போதே அன்றை இரவு நானும் ஜீயும் இந்த பாலத்தைக் கடந்து சென்றது நினைவிற்குள் வந்தது. அவளை விட ஜீயின் அண்மையை நேசித்திருக்கிறேன். இப்போது மனம் விட்டுச் சொல்லலாமே இனி யார் தான் தடுப்பார்கள். இன்றைய பொழுதில் நான் என எதை நம்பிக்கொண்டிருக்கிறேனோ அதன் வடிவத்தை அதிகம் செதுக்கியவர் ஜீ தான். இவளைப் போலவே அவரும் ஒரு புள்ளியில் என்னிடமிருந்து விலகிவிட்டார். யாரும் யாரிடமிருந்து விலகுவதற்கு காரணங்கள் தேவையில்லை அந்த காலம் அல்லது அந்த கணங்கள் மட்டும் போதும். உண்மையில் அவை சில விநாடிகளே. நானும் அவரை விட்டு விலக சில விநாடிகளே போதும். அவளை விட்டு விலகவும் அவ்விநாடிகளே போதும். பாலத்தின் மையத்தில் செல்லும் பொழுது வண்டியை ஓரங்கட்டினேன்.

“லீனியர்னு ஒன்னு இருக்காடா”

“ஏன் ஜீ அப்படி சொல்றிங்க”

“உன்னால நேர்கோட்டுல நீ பார்த்தத அப்படியே வரிசையா சொல்ல முடியுமா?”

“ஏன் ஜீ.. தாராளமா சொல்லாம்”

“எங்க இந்த நைட்டுல அப்படியே உன் கண்ணில் படுறத லீனியரா சொல்லு பார்ப்போம்”

ஒரு பயணம் முடித்து ஜீயுடன் நகருக்குள் திரும்பிக்கொண்டிருக்கையில் இதே சிக்னலைக் கடந்து இந்த பாலத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது தான் இப்படி பேசிக்கொண்டிருந்தோம். எதார்த்தவாதம் குறித்தும் நேர்கோட்டுத்தன்மை குறித்தும் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் மனதில் நிழலாடின. ஒரு ஓவியராக அவற்றை அபத்தமான கற்பிதங்கள் என்று சாடினார். அதை நிரூபித்தும் காட்டினார். கலையை கலையாக மட்டும் பார்த்தால் போதும் என்பது அவரது கோட்பாடு. மக்களுக்கான கலை என்று சொல்வது வெறும் பிரச்சாரமே என்றும் அவர் சொல்லிக்கொண்டிருப்பார். இதே பாலத்தைக் கடந்து கொண்டிருக்கையில் தான் என்னை நேர்கோட்டில் நான் கவனிப்பதைச் சொல்லச் சொன்னார்.

“பாலம், திசைகாட்டி, இலவச எமர்ஜென்சி போன் பூத், சாலைக்கு நடுவே நடப்பட்டிருக்கும் சிறு புங்க மரங்கள், குரோட்டன்கள், தார்ச்சாலையின் ஒளிரும் ஃப்ளோர்சண்ட் எல்லைக் கோடுகள், எல்.ஈ.டீ நியான் விளக்குகளில் ஒளிரும் அரசின் விளம்பரப்பலகைகள், விளக்கொளியில் தார்ச்சலையில் பதித்துவைக்கப்பட்டிருக்கும் மின்னும் உபகரணங்கள், பாலம், மஞ்சள் விளக்குகள்”

மஞ்சள் விளக்குகள்  என்று சொல்லும் போது நானும் ஜீயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஏதோ ஒன்றை கவனிக்காமல் விட்டுவிட்டதையோ அல்லது எதையோ கவனிக்காமல் போனதையோ மறந்தோம். காரினில் லதா மங்கேஷ்கரும், ஹரிஹரனும் பாட ஆரம்பித்து இருந்தார்கள்.
மீண்டும் சொல்லிப் பார்த்தேன்.

ஒளிரும் அரசின் விளம்பரப்பலகைகள், விளக்கொளியில் தார்ச்சலையில் பதித்துவைக்கப்பட்டிருக்கும் மின்னும் உபகரணங்கள், பாலம், மஞ்சள் விளக்குகள்.
சட்டென ஏதோ பொறி தட்டியது போல் உணர்ந்தோம். அடுத்ததாக வரும் இடைவெளியைப் பயன்படுத்தி வாகனம் யூ டர்ன் அடித்தது.

விளக்கொளியில் தார்ச்சலையில் பதித்துவைக்கப்பட்டிருக்கும் மின்னும் உபகரணங்கள், பாலம், மஞ்சள் விளக்குகள், காரின் விளக்கொளி (ஹை பீம்), காக்பிட், டாஷ் போர்ட், ஸ்டியரிங், கார் பெர்ஃப்யூம். சிரித்தேன். அவரும் சிரித்தார். நாங்கள் எதை கவனிக்காமல் கடந்து வந்தோம்.

அது லதா மங்கேஸ்கர் இல்லை ஆஷா போஸ்லே என்று திருத்திக்கொண்டேன். ஆஷாவின் பெங்காலி போர்ஷன் – இளையராஜாவின் பியானோ சப்தம் மட்டும். பியானோ சப்தம் மட்டும். எங்கள் கண்முன் அந்த காட்சித் தெரிந்தது.

“உன்னால் நேர்கோட்டில் எல்லாவற்றையும் சரியாகச் சொல்லிவிடமுடியுமா” என்று மறுபடியும் என்னிடம் கேட்டார்.

லீனியர் என்பது ஒரு மாயா என்றேன். இருவரும் சிரித்தோம். ஏனெனில் அது ஒரு அற்புதக் காட்சி, அதை நாங்கள் கவனிக்காமல் கடந்து வந்தோமா? இல்லை எங்கள் லீனியர் கற்பிதத்தில் அந்தக் காட்சி கியூவில் வரிசையாக வந்து நிற்கத் தாமதமாகியதா.
அந்தப் பாலத்தில் மஞ்சள் விளக்குகள் இல்லை, எல்.ஈ.டி. வெள்ளை விளக்குகள், ஏதோ மின்சார இணைப்புக் கோளாறோ அல்லது அற்புத அனுபவத்திற்கான ஒரு துளி வரமோ எங்கள் கண்களுக்கு அந்தக் காட்சி கிட்டியது. ஞாயிறு நள்ளிரவு என்பதால் எந்த வாகனமும் எங்கள் கண்ணில் தென்படவில்லை.

பாலம், எல்.ஈ.டி விளக்குகள், மின்சார இணைப்பில் ஏற்பட்டிருக்கும் ஏதோ ஒரு கோளாறு காரணமாக அடுத்தடுத்த விளக்குகள் மாற்றி மாற்றி எரிவதும் அணைவதுமாக இருக்கின்றது. அந்தக் காட்சியை நாங்கள் கவனித்திருந்தோம், ஆனால் அதை உணர்வதற்கு தாமதமாகிவிட்டது.

பாலத்தின் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு காரிலிந்து இறங்கினோம்.
அருகருகே இருக்கின்ற இரு விளக்குகளில் ஒன்று எரியும் போது மற்றொன்று அணைந்தும், மற்றொன்று அணையும் போது அடுத்தது எரிந்தும் அந்தப் பாலத்தை ஒரு மேடைக்கச்சேரியாகக் காட்டிக் கொண்டிருந்தது. மேடைக்கச்சேரி என்று நான் சொன்னதும் அவர் வேகமாகக் காரினுள் சென்று கதவைத் திறந்துவிட்டார். அந்தப் பாடலை மறுபடியும் ஒலிபரப்பினார். அதிகப்பட்ச ஓசையுடன், அந்தி பியானோ இசை மெய்சிலிர்க்க ஒலித்தது.

“நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” அப்போது தான் அவளோடு பழக ஆரம்பித்து இருந்தேன். அவள் பாடுவாளா என்று நினைத்துப் பார்த்தேன். இளையராஜாவின் அந்த பாடல் இப்படி தான் ஏகாந்தமான சூழலில் இசைக்கப்பட்டிருக்குமா?

அதில் வரும் பியானோ போர்ஷன் இப்படி தான் இருந்திருக்கும் எனத் தோன்றியது. அது அந்த பாலத்தில் நிகழ்ந்த இசைக் கச்சேரியாகவே தோன்றியது.

நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்கவேடம் இனி போதும் கண்ணே.

ரசனையான வாழ்வு அத்தனை எளிதானதா என்றால் அது மிக எளிதானது. ஆனால் என் நண்பர் சொல்வது தான் சரி, BEING SIMPLE IS THE TOUGHEST THING.

என் மனம் பதிவு செய்ததைச்சொல்லும் பாணியிலும், தடுமாற்றத்திலும், வேட்கையிலும், தொந்தரவிலும், அயற்சியிலும், அதை வெளிப்படுத்தும் ஆசையிலும், அற்பணிப்பிலும் உணர்ந்து கொண்டதும் இதுதான். EXPRESSIONISM என்றும் IMPRESSIONISM என்றும் அவர் சொல்லிக்கொடுத்தவை அன்று தான், இதே இடத்தில் தன் எனக்குப் புரிய ஆரம்பித்தது அல்லது உணர ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் நான் அந்த பியானோவில் தான் நிற்கிறேனோ என்று தோன்றியது. என் முன்னே இருக்கின்ற விளக்கு அணையும் போது, நானும் தடுமாறினேன். அவர் என்னை விட்டுத் தள்ளிச்சென்று சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். எனக்கும் எதுவோ தேவையாக இருந்தது. ஏனோ அவளை நிணைக்கலானேன். அவள் வசீகரமானவள் தான். ஆனாலும் வேறு என்னவோ ஒரு காரனம் இருந்தது. அதையும் தாண்டி அவளை நான் மோகித்த கணம் அங்கிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். அந்த விநாடிகளை நான் இந்த பாலத்திலிருந்து தான் எடுத்துக் கொண்டேன்.

இப்போதும் இதே பாலம் தான், இன்று அதற்கு நேர் மாறான எண்ணம். அவர் உடைத்துப் போட்ட நேர்கோட்டுப் பார்வையைக் கொண்டு இவற்றை உணர்கிறேன்:
இன்று மாலை அவள் என்னைப் பிரியவில்லை. எப்போதோ பிரியத் தயாராக இருந்திருக்கிறாள். அதற்கான விநாடியைக் காரணமாக நான் தான் தாமதமாகக் கொண்டு வந்திருக்கிறேன்.

அன்று நிறுத்திய அதே இடத்திற்கு எதிர்புறம் என் டூவீலரை நிறுத்திவிட்டு, அந்த பாலத்தின் விளிம்பில் நின்றபடி எட்டிப்பார்க்கலானேன். நகரம் இருளை நைட்டியாக அணிந்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லிப்பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. இந்த உவமை எக்ஸ்ப்ரெஸனிசமா? இம்ப்ரெசனிஸமா? கலை, காதல் இரண்டும் மயக்குகிறது, போதையை விட மோசமானது, வீரியமானது. அப்படியே குதித்து விடலாமா என்றும் தோன்றியது. திடீரென்று அந்த புறநகர்பகுதியில் ஓங்கியிருந்த சில கட்டடங்களில் நியான் விளம்பரப்பலகைகள் எரிய ஆரம்பித்தன. ஒருவாரம் கழித்து இந்த புறநகர் பகுதிக்கு மின்சார இணைப்புக் கிடைத்திருக்கிறது. நகரம் தன்னை மீண்டுவிட்டதாய் புறநகர் வரை அறிவித்துவிட்டது. எனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? புதிதாய் எழ முடியுமா? குதிப்பதற்கு அஞ்சி பிதற்றுகிறேனா? மீண்டும் சிரிப்பு வந்தது.

கடற்காற்று வீசும் அந்த மாலையில் பாலத்திற்குக் கீழே ஒரு தண்டவாளத்திற்கு இணையாக புதிதாகப்போடப்பட்ட சேதமடையாத தார்ச்சாலையும் நீண்டுச் சென்றது, எல் வடிவ வாய்க்கால் சாக்கடையாக இருந்தாலும். சில நாரைகளும், சில அன்றில் பறவைகள் அமர்ந்திருந்தன, தங்கள் சாபத்திற்குப்பின்னும் நீரை சாக்கடையாக்கிய அந்த நகரம் உயிர்த்தெழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தன.

திடீரென்று மற்றொரு தலையும் பாலத்தின் கீழே எட்டிப்பார்த்தது. நான் பார்த்துக்கொண்டிருப்பது அவனைத் தொந்தரவு செய்திருக்கும் போல, நான் எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று அங்குமிங்கும் துலாவிக்கொண்டிருந்தான். நான் அவனைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை, அவனாக எதையோ கண்டதைப்போல புருவத்தை உயர்த்தினான். அப்படியென்ன இருக்கிறது என்று நானும் திரும்பி நோக்கினேன். எங்கள் பின்னால் ஒரு கார் வந்து நின்றது.

அன்று நாங்கள் வந்த காரைப் போன்றே மற்றொரு காரிலிருந்து இறங்கிய ஓட்டுனர் வேகமாக இறங்கி வந்து எட்டிப்பார்க்கலானான். எதையோ கண்டு திருப்தியடைந்தவன் போல் மீண்டும் காருக்குச் சென்றான். ஆனால் வண்டியில் ஏறுவதற்கு பதிலாக, கதவைத் திறந்துவிட்டான்.

அவளை எங்கோ பார்த்திருக்கிறேன். பெரிய கண்ணாடியும், வயலெட் நிறத்தில் ஒரு காட்டன் புடவையும் அணிந்திருந்தாள், எங்கள் இருவரையும் பொருட்படுத்தப்போவதில்லை என்கிற யூகம் அவளைத் திமிர்ப்பிடித்தவளாக காட்டியது நேராக அருகில் வந்து அவளும் பாலத்தில் இருந்து எட்டிப்பார்க்கலானாள். என்னிடம் அவள் என்ன பார்க்கிறேன் என்று கேட்பாளோ என்று ஆவலோடு இருந்தேன். கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதில் சொல்ல வேண்டும். அவள் எதுவும் கேட்கவில்லை, என் வலதுபுறத்தில் பாலத்தின் சுவரைப் பிடித்தபடி கீழே பார்க்கலானாள். அந்த சேலையை எப்படி இத்தனை லாவகமாகவும், இறுக்கமாகவும் கட்டியிருக்க முடியும் என்று வியந்தேன். அவளுக்கு எப்படியும் 35 வயது இருக்கலாம் குறிப்பிடத்தகுந்த அழகு என்று சொல்லமுடியாது, அவள் என்னிடம் பேசினால் அவளை மானசீகமாகப் பேரழகி என்றும் சொல்லலாம்.

அந்த ட்ரைவர் அவளுக்கு மிக அருகில் நெருக்கமாக நின்று கீழே பார்த்தபடி அவள் காதருகில் சென்று ஏதோ சொன்னான். என்னால் இதற்குமேல் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.


அதற்குள் முதுகில் ஒரு நகைக்கடை போர்டைச் சுமந்து நடந்து கொண்டிருக்கும் நவீன சுமைத்தூக்கி, அந்த பலகையைக் கழட்டிவிட்டபடி வேடிக்கை பார்க்கும் கூட்டத்திற்குள் கலந்தான். மற்றவர்களுக்கு காட்சிப்பொருளாய் நடமாடும் இவன் குறைந்தபட்சம் ஒரு டிகிரியாவது முடித்திருக்க வேண்டும், கையால் இழுக்கப்படும் ரிக்சாக்களை ஒழித்ததை இன்னமும் பெருமை பேசிக்கொள்பவர்கள் பேதியில் போக. அவனும் எட்டிப்பார்க்கலானான். இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அவனையும் எங்கேயோ பார்த்திருக்கிறேன். சூரியன் மறைந்தாலும் இன்னும் வெளிச்சத்தடங்கள் வானில் இருப்பதால் அப்படி ஒன்னும் இருட்டாகவில்லை. பல நாட்களுக்குப் பின்னர் இன்று தான் நகரம் வெயிலில் தன்னை உலர்த்திக் கொண்டிருக்கிறது.

ஆறாவதாக ஏழாவதாக எட்டாவதாக வாக்கிங் சென்று கொண்டிருந்த அரை நிக்கர் அணிந்திருக்கும் மேட்டுக்குடி, குறுந்தாடி அங்கிள்கள் கலந்து கொண்டனர். பேசிக்கொண்டே வந்தவர்கள் பாலத்திலிருந்து எட்டிப் பார்க்க ஆரம்பித்ததும் நிசப்தமானார்கள். ஒருவர் மட்டும் கையை நீட்டிச் சுட்டிக் கொண்டிருந்தார். அப்படி என்ன தான் பார்க்கிறார்கள் என்று நானும் குனிந்தேன். அன்றில் பறவைகள் எங்களை ஆச்சரியமாகப் பார்க்க ஆரம்பித்தன.

ஒன்பதாவதாக டீஷர்ட்டும், ஜீன்ஸும் அணிந்த ஒரு பெண், பத்தாவதாக குள்ள உருவமுடைய ஒரு மனிதன், பதினோரவதாக, குறுக்கே பையை அணிந்திருந்த தன்னை 24 மணிநேர உத்தியோகஸ்தராகக் காட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் வேடிக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கம் இருப்பதாலேயே தானும் கலந்து கொள்வதாக நவீன பூணூலாக மாறியிருக்கும் ஹெட்போனில் யாரிடமோ காரணம் சொல்லிக்கொண்டு இந்த கூட்டத்திற்குள் கலந்தான்.

வேகமாக சென்று கொண்டிருந்த கே.டீ.எம் பைக் ஒன்றும் நின்றது. ஓட்டிக்கொண்டிருப்பவன் மேல் விகரமாதித்யனின் வேதாளம் போல் அமர்ந்திருந்த ஒருத்தியும், ஓட்டிவந்தவனும் இறங்கிவந்தார்கள் அத்தனை முக்கியமானதா இது? அவள் தோளில் கைபோட்ட படி இடைவெளி இல்லாதபடி இடையோடு இணைத்தபடி இருவரும் கீழே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் எல்லோரையும் நான் ஏற்கனவே சந்தித்தது போல் இருக்கிறது, அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் எல்லோருமே எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நோக்கும் திசையில் ஒவ்வொருவரும் வேறுவேறு விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிகிறது. ஏன் இந்த பாலம் இத்தனை விசித்திரமாக இருக்கிறது.

இன்னொரு பழைய பத்மினி கார் ஒன்றும் நின்றது, அதைத் தொடர்ந்து ஒரு புல்லட்டும் – தொப்புளுக்கும் மேலே பேண்ட்டினை டக் செய்திருந்த ஆங்கிலோ இந்திய பாணியில் இருக்கும் ஒருவர் காரிலிருந்தும், என்னைப் போல இரண்டு மடங்கு பருமனான ஒருத்தன் புல்லட்டிலிருந்தும் இறங்கினார்கள். புல்லட்டிலிருந்து பாலத்திற்கு வருவதற்குள் இருவருக்கும் மூச்சு வாங்கியது.

நகரம் அதற்குள் அத்தனை இயல்பு நிலைக்கு மாறிவிட்டதா. எல்லோரும் மிக இயல்பாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவள் மட்டும் இன்று மாலை அப்படி என்னிடம் பேசாமல் இருந்திருந்தால், நான் ஏன் இங்கே வந்து நிற்கப்போகிறேன். நான் நிற்பதனால் தானே இவர்களும். அதற்குள் மூன்று சைக்கிள் பாலத்தின் மேலேறிக் கொண்டிருந்தது எங்கள் எதிர்புறம், சைக்கிள் ஓட்டுவது ஏன் இத்தனை லக்ஸுரியாக மாறிவிட்டது. மிகவும் நவீன சைக்கிள், ஆரஞ்சு வண்ண ஹெல்மெட், சைக்ளிங் டீஷர்ட், ட்ரவுசர்ஸ், கைகளில் க்ளவுஸ், சைக்கிளின் தண்டில் ஒரு தண்ணீர் புட்டி, ஸ்போர்ட்ஸ் வாட்ச், ஷூக்கள் இந்த மாலையிலும் கூலிங்கிளாஸ் என இரண்டு ஆண்களும் ஒரு யுவதியும். சைக்கிளை நிறுத்திவிட்டு, எங்கள் கூட்டத்தில் ஐக்கியமானார்கள். இப்படி சைக்கிள் ஓட்டுவது லக்ஸுரியாகவும், மேட்டிமையானதாலும் தான் சைக்கிள் வியாபாரம் இன்னும் நிலைத்திருக்கிறது. ஒரு சாம்பல் நிற பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டரினை நிறுத்திய சிவப்பு நிற சேலை கட்டியிருக்கும் மற்றொரு பெண் ஒருத்தியும் கலந்து கொண்டாள். அவளது அடர்த்தியான சிகையும் கண்களும் எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்தது, என்னைப் பார்த்தபடியே என்னருகே வந்து அவளும் கீழே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த வாகனத்தை ஒட்டியே மற்றொரு பல்சர் வந்து நின்றது இருவரும் கண்ணாடி அணிந்திருந்த மாணவர்கள் பார்ப்பதற்கு எங்கேயோ ட்யூசன் சென்று வருவது போன்ற தோற்றம். ஊர்ந்து வரும் எம்80 வாகனம் ஒட்டி வந்த வீரபத்ரன் அண்ணாச்சி அப்பளப் பாக்கெட் புதரிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஆயிரஞ்சோலிய வச்சுக்கிட்டு அவரும் அக்கறையோடு பாலத்திலிருந்து எட்டிப்பார்க்க ஆரம்பித்தார். எதைப் பார்க்கிறார் என்று தான் தெரியவில்லை.

வௌவால்களும், சிறு பறவைகளும் சற்று அதிகமாகவே பறப்பது போன்ற உணர்வு, இன்றைக்கு தானே இவற்றை கவனிக்கிறாய் என்று மனதிற்குள்ளிருந்து மற்றொரு முரண்படும் குரல். இந்த மனதிற்குள் ஒலிக்கும் குரல் மட்டும் பெண் குரலாக இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும், எந்த ஏமாற்றத்தையும் சகித்துக்கொண்டு வாழமுடியும் அல்லவா. “பைத்தியக்காரத்தனமான ஆசை” என்று மறுபடியும் முரண்படும் அந்தக் குரல்.

‘அது பெண்குரல் அல்லவா?’

என் முதுக்குக்குப் பின்னால் ஒரு ஆண் மிக நெருங்கி நிற்பது போன்ற உணர்வு. “தள்ளிவிட்டுறப் போறான் ஜாக்கிரதை”

மீண்டும் ஒரு பெண்குரல் – அது அவளின் குரலா – இல்லை.

பின்னாடி நிற்பவனைத் திரும்பிப்பார்த்தேன். அவன் எனக்கு மிகப்பரிச்சயமானவன் ஆனால் என்னால் சுட்டிக்காட்ட இயலவில்லை, தொண்டைவரை வந்து விட்டது. ஏதாவது பேசலாமா என்று முயன்றேன். ஆனால் அவன் கண்கள் சிவந்திருந்தன, முகத்தில் ஏமாற்றம், விரக்தி, வெறுப்பு, அவமானம் என எல்லாமும் வெளிப்பட்டது. என்னைப்பார்த்ததும் அவன் உடைந்து போனவனாய்க் குமுறினான். அப்போதும் மற்றவர்கள் கீழேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்குள் அப்போது தான் ஒரு புரிதல் ஏற்பட்டது. ஆனால் அது விபரீதமல்லவா. அவனைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

“வேண்டம்டா அது உன்னால முடியாது.. நீ தியரிய தப்பா யூஸ் பண்ணுற”மறுபடியும் என்னுள்ளேயிருந்து முரண்படும் குரல் ஆனால் இப்போது ஜீயின் குரல்.

அந்தக் குரல் ஒலித்தது தான் தாமதம், நான் அவனிடமிருந்து சற்று விலகிக்கொண்டேன். அது புரிந்தவனாக நேரடியாக அந்தச் சுவற்றில் ஏறிக் கீழே குதித்தான். தொப்பென்று சப்தம் கேட்டது, புள்ளினங்கள் கரைந்து கொண்டு மேலெழும்பின, அங்கங்கு வேறு வேறு இடங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவன் விழுந்த இடத்தைப் பார்த்தார்கள்.
நான் திரும்பவில்லை, கீழிருந்தப் பறவைகள் இப்போது என் தலைக்கும் மேலே வட்டமடித்துக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அது மறுபடியும் கீழ் நோக்கி இறங்கத் தொடங்கியது. எந்தவித சப்தமும் இல்லாமல் மனிதர்கள் அவரவர் வாகனங்களை எடுத்துக்கொண்டு கிளம்பலானார்கள். சில நிமிடங்களில் அந்தப்பாலம் வெறுமையாகியது. மின்சாரம் வந்துவிட்டதால் பாலத்தின் விளக்குகள் எறிய ஆரம்பித்துவிட்டன. ஆனால் அதில் ஒன்று விட்ட அடுத்த விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன, நான் என் டூவீலரை எடுத்துக்கொண்டு இயக்காமல் இறக்கத்தில் அப்படியே உருட்டியபடி இறங்கலானேன். மறுபடியும் பியானோ சப்தம் ஒலிக்க ஆரம்பித்தது.

அந்த பாலத்தில் சோகமான கீதம் ஒன்று இசைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.- ஜீவ கரிகாலன்
  ( நன்றி:ஏப்ரல் மாதக் காக்கைச் சிறகினிலே இதழ்)