வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி -சொஜ்ஜி -28, #மனிதர்கள் / முத்துக் கருப்பனும் - குட்டிச் செல்வமும்

#மனிதர்கள் -02
முத்துக் கருப்பனும் - குட்டிச் செல்வமும்

என் பால்யத்தில் எனக்கு இருந்த முதல் தோழனின் பெயர் செல்வம். எங்கள் வீட்டிற்கு எதிர் வீடு. பெயர் மட்டும் தான் செல்வம் மற்றபடி வீட்டின் நிலைமை அவனுக்கு போர்த்தியிருந்த உடையெல்லாம் ஏழ்மையாகத் தான் இருக்கும். எங்கள் வீட்டிற்கு அவன் விளையாட வருவான், என்ன தான் நான் அவனை விட வசதியாக இருந்தாலும், வீட்டில் நான் கேட்பதெல்லாம் எனக்குக் கிடைத்தாலும் அவனைப் பார்த்து ஆச்சரியப் படவே செய்வேன்.அவனுக்கு சுதந்திரம் இருந்தது, அவன் வெயிலில் நடமாடலாம், விளையாடலாம். அடுத்தவ்ர் வீட்டிற்குள் செல்லலாம். அந்த வீட்டின் பற்பசையைத் திங்கலாம், அடுத்த வீட்டில் தாராளமாக திண்பண்டம் வாங்கலாம், அவனுக்கு அவன் வீட்டில் அடி கிடைத்தாலும், அவன் சந்தோஷமாகவே இருப்பான். நானும் சந்தோசமாகத் தான் இருந்தேன், ஆனால் அவனுக்கு இருக்கும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் எனக்கு இல்லை.

செல்வத்திற்கு ஒரு அண்ணன் உண்டு அவனை விட நான்கு வயதுப் பெரியவன், எட்டு வயதிலேயே மெட்ராசுக்கு வேலைக்கு சென்றுவிட்டான் என்று செல்வம் சொல்லுவான். லீவுக்கு, திருவிழாவிற்கு அவன் வரும்பொழுது நான் பார்த்திருக்கிறேன். அவனும், அவன் நண்பர்களோடு சேர்ந்து ஏதாவது விளையாடிக் கொண்டே இருப்பான். எங்கள் வீட்டிற்கு எல்லாம் அவன் வர மாட்டான், அவன் மெட்ராசில் இருக்கிறான் அல்லவா? அந்த மிதப்பு, எங்கள் வீட்டில் ஒளியும்,ஒலியும் போட்டால் கூட அவன் வர மாட்டான். அவனைப் பார்த்தால் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கும், அவன் அடிக்கடி என் நண்பனை அடித்து அழ வைப்பான். தெருவில் கிட்டிப்புல் போல ஏதாவது விளையாடுகையில் அவன் நிறைய பேரோடு சண்டையிட்டிருக்கிறான். ஏன், என் அண்ணன் - அவனும் மெட்ராஸ் தான் ,(பெரியப்பா மகன்) அவனோடு ஒரு நாள் எங்கள் கோயில் வாசலில் கட்டிப் புரண்டு சண்டையிட்டான். என் அண்ணனும் நன்றாகத் தான் சண்டையிடுவான். ஆனால் நான் பயந்தபடி  கோயிலுக்குள் சென்று மறைந்து கொண்டேன். சொல்ல வந்த விஷயமே இது தான் செல்வத்தின் அண்ணனுடைய பெயரே செல்வம் தான்!!.

எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து திண்ணைகள் இருக்கும், மூன்று வீட்டிற்க்குள், இரண்டு வீட்டிற்கு வெளியே. பள்ளி இல்லாத் நாட்களில், ப்ரஷில் டூத் பேஸ்ட் வைத்துக் கொண்டு திண்ணையின் விளிம்பில் நின்றபடி சிறுநீர் கழித்து விட்டு, செல்வம் வீட்டை வேடிக்கை பார்ப்பது தான் என் வாடிக்கை. அவன் பால் வாங்கச் செல்வது, கடைக்கு செல்வது, அவனுடைய அம்மா பாத்திரம் கழுவுவது, கிணற்றில் தண்ணீர் எடுப்பது, செல்வம் அடி வாங்குவது என பார்த்துக் கொண்டிருப்பேன். அவங்க அம்மா வீட்டில் இரண்டு செல்வம் இருக்கும் பொழுது எப்படி அழைக்கிறாள், சமாளிக்கிறாள் என்ற சந்தேகம் வருவது உண்டு. “ச்செல்வ்வம்” என்று செல்வத்தினை “ச்”, “வ்” மாத்திரைகளைக் கூட சேர்த்துக் குறைத்து சொல்வதில் அவள் உபதேச்ங்கள், இல்லை இல்லை அவள் ஏவல்கள், வசவுகள், கூப்பாடுகள் எல்லாம் சரியான செல்வத்தைத் தேர்ந்தெடுத்து விடும். அந்த மந்திரம் எங்களுக்குப் புரியவில்லை. சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொண்டு அவள் அண்ணனை அழைத்த இடத்தில் என் நண்பன் நின்றால் , ”சொளவாலே(முறம்) ரெண்டு மாத்து மாத்து” விழும்.

ஆனால் இந்தக் குழப்பம் மற்ற சனங்களுக்கு வருவதில்லை என் நண்பனை நாங்கள் குட்டிச் செல்வம் என்று அழைத்து வந்தோம். ஆனால அவனைக் குட்டிச் செல்வம் என்று அழைப்பது கூட ஏதாவது ஆதாயம் இருந்தால் தான், கடைக்குப் போகனும், சினிமா கொட்டகையில் என்ன படம் மாத்தியிருக்காங்க என்று போய் பார்த்துச் சொல்லனும், கொஞ்சம் ஏதாவது கைவேலை ஆகணும், கோயிலில் சக்கரைப் பொங்கல் வாங்கித் தரணும் என்கிற ஆதாயங்கள் இருந்தால் மட்டுமே அவன் குட்டிச் செல்வம். மற்றபடி, அவன் பெயர் சொங்கி தான், அந்த தெரு விடுமுறை நாட்களில் நூறு தடவையாவது சொங்கி என்ற பெயரைச் சொல்லி அழைக்கும், “லே சொங்கி மரத்துல் இருந்து கீழ இறங்கு”, ”ஏ சொங்கி டவுசர, மேலே ஏத்திக் கெட்டு”, “சொங்கி!! நடமாடுற சந்துல மூத்திரம் பெய்யாதடா”என்று அவன் சொங்கியாகவே வலம் வருவான். நானும் எப்பவாவது சண்டை வந்தால் அவனை அப்படிச் சொல்லி விட்டு ஓடி விடுவேன், மற்றபடி அவனைக் குட்டிச் செல்வம் என்று அழைப்பது நானும், என் அம்மாவும் தான். ஏனென்றால் என் அம்மா நான் விரும்புவதை அறிந்திருப்பாள் என்று நம்பினேன்.

வாழ்க்கை திசை மாறிச் செல்கிறது, என்பதை அறியும் வயதில்லை அது. அந்தக் கரிசல் மண்ணின் சூழலில் குடும்பங்கள் பிழைப்பு தேடி புலம் பெயர்வது மிகச் சாதாரணம் என்று புரிய வந்த வயதில். 10,15 வருடங்களுக்குப் பின்னர் எங்கள் ஊர் திரும்பிய வலி மிகுந்த நேரம். கிராமம், தெரு, வீடு எல்லாம் சுருங்கிப் போனதாய் காட்சியளித்தது, எங்கள் குடும்பத்தில் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. நானும் எட்டு வயது வரை வாழ்ந்த ஊரில்லையா, எனக்கு இருந்த ஒரே உறவான செல்வம் வீட்டில் இருப்பதாக அவன் அம்மா கூறினார். கொஞ்சம் அனுப்பி வையுங்களேன் என்று நான் கேட்க, அவனைப் பார்த்து அதிர்ந்தேன்.

அவனும் பிழைப்பதற்காக சென்னையில் தான் குடியிருப்பதாக அவன் அம்மா என்னிடம் சொன்னார், அவன் பார்ப்பதற்கு அப்படி இல்லை 25 வயதிலேயே முதுமையாகத் தோன்றினான். அவன் ஏதோ ஒரு விபத்தினை சந்தித்திருக்க வேண்டும், பற்கள் சிலவற்றைக் காணவில்லை, சில நொருங்கியிருந்தன, முதலில் என்னோடு அவன் பேச விரும்பவில்லை, நான் சகஜமாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்ததும், மெதுவாகப் பேச ஆரம்பித்தான், அவன் கைகளில் இருந்த தழும்பைப் பார்த்தேன் அது அப்படியே இருந்தது. அவனை சொங்கி என்று சொல்லிப் பார்த்தால் என்னோடு சகஜமாகப் பேசுவானோ என்று தோன்றியது, ஆனால் அழைக்க மனம் வரவில்லை. அவனுக்கும் பேசத் தோன்றவில்லை, ஒரு வேளை நான் மறந்து போயிருக்கலாம், அல்லது அவன் தடுமாறியிருக்கலாம். அவன் அண்ணனை விசாரித்தேன் அவன் இங்கே வருவதில்லை என்றான். அதற்கு மேல் அவனோடு பேச முடியவில்லை, அவன் ஒரு திண்டில் அமர்ந்து கொண்டு எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான், (வறுமையைத் தாண்டிய ஏதோ ஒரு பாதிப்பு எவன் முகத்தில் அப்பயிருந்தது) “செல்வம்” என்று இருமுறை அழைத்திருந்த அவள் தாய். அடுத்து “சொங்கி” என்று அழைப்பாளோ என்று எதிர்பார்த்தேன். அவள் அழைக்கவில்லை அவள் விட்டு விட்டாள். எனக்குப் புரியவில்லை எதற்காக அவள் ஒரே பெயரை தன் இரு மகன்களுக்கும் வைக்க வேண்டும்?”என்று.


***********************************************************************

கடந்த வாரம் சனிக்கிழமை மாலை(27/07/2013), மா.அரங்கநாதன் 80 என்ற நிகழ்வில், அவரது சில தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் கன்னட மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா நடந்தேறியது. அதில் பல இலக்கிய ஆளுமைகளை ஒருங்கே காண முடிந்தது. எஸ்.சண்முகத்தின் உரையை கேட்பதற்காகத் தான் நான் கூட்டத்திற்கே சென்றிருந்தேன், ஏனென்றால் மா.அரங்கநாதனின் ஓரிரு சிறுகதைகள் மட்டுமே அதுவரை வாசித்திருந்தேன், நிகழ்வின் முடிவில் நாம் இன்னும் வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை என்பது போல் தோன்றியது. ஆளுமைகள் ஒவ்வொருவரும் மா.அவின் கதைகளை தாங்கள் எவ்வாறு பார்ப்பதாக வெவேறு விதமாக பேசினர். மு.தருமர், ரவிசுப்ரமணியம்(நிகழ்வின் ஏற்பாட்டாளர்), மகேந்திரன், ஜமாலன், எஸ்.சண்முகம், தேணுகா என்று ஒரு படைப்பாளரை வெவ்வேறு தளத்தில், வெவ்வேறு சிந்தனைகளில் அமர்த்திப் பேசினர்.



ஒரு உண்மையான, நல்ல படைப்பாளியை எத்தனை இடத்தில் வைத்துப் பார்க்க முடியும் என்று உணர்ந்தேன், அல்லது ஒரு படைப்பாளி ஒவ்வொருவரின் பார்வையின் கோணத்திலும் எத்தனை தூரம் வித்தியாசப் பட்டு இருக்கிறான் என்று தெரிந்தது. மா.அரங்கநாதன். மௌனியும்,சு.ராவும் இணையும் இடத்தில் ஒருவர் பார்க்கிறார், சமகாலத்தின் தலை சிறந்த சில புனைவிலக்கியத்தின் ஒப்புமையோடும், சிறுபான்மையினருக்கு எதிராக ஆதிக்கம் செய்யும் பெரும்பாண்மையினருக்கு இடையில் தன்னை சிக்கித் தவிக்கும் தனி மனிதனாக நிறுத்தியும் முத்துக்கருப்பனை பல இடங்களில் ஒவ்வொருவரும் வைத்துப் பார்த்ததை நானும் பார்த்தேன்.
***************************************************************************
 தேணுகா, இதுவரை அவர் பேச்சை நான் கேட்டது கிடையாது, ஓவியம், இசை, சிற்பம், இலக்கியம், சமூகம் என்று பரந்த நிலையில் அவர் அனுபவங்களை முத்துக்கருப்பனின் வாழ்க்கையோடு கோர்த்துச் சொன்ன விதம் மறக்க இயலாது. முத்துக்கருப்பன் என்ற பெயர் எப்படி சமூகத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் கதையில் பிரதிபலிக்கிறது என்று அன்றைய கிராமத்து மக்களின் பெயர்கள் பற்றி பேச ஆரம்பித்தார். அதில் என் நண்பன் குட்டிச் செல்வன் வீட்டில் இருந்த ரகசியமும் வெளிப்பட்டது. ஒரு காலத்தில்-  கிராமங்களில் வாழும் நம் வழக்கில் இது போன்ற ஒரே பெயர் வைக்கும் வழக்கம் இருந்ததைப் பற்றிக் கூறுகிறார்.

பிறக்கும் குழந்தையெல்லாம் வீட்டில் தங்கிப் போனால், ஆண் குழந்தை பிறந்தால் இந்தப் பெயர், பெண் குழந்தை பிறந்தால் இந்தப் பெயர் முன்னரே வேண்டிக் கொள்வார்களாம், அடுத்தடித்து வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முத்து மாரி என்றோ, அல்லது ஆண் குழந்தைகளுக்கு மாரிமுத்து என்றோ பெயரோ தொடர்ந்து வைத்து விடுவார்கள். அப்படித் தான் இந்த முத்துக் கருப்பனின் பெயரும் வெவ்வேறு சூழலுக்கும், கதைக் களத்திற்கு ஒத்து வருகிறது என்றவாறு பேசினார்.

நல்ல இலக்கியம் என்பது வாழ்வை எத்தனை அழகாகக் காட்டுகிறது?, வேறு கோணத்தைக் காட்டுகிறது?? அல்லது அத்தனை அறிவார்த்த முறையில் அல்லது உளவியல் ரீதியாக அனுகுகிறது? என்பதை விட எத்தனை தூரம் இயல்பாக, உண்மையாக பிரதிபலிக்கிறது? என்பது தான் முக்கியம் என்று என்னளவில் தோன்றியது, அது தான் மக்களுக்கான இலக்கியம். முத்துக் கருப்பன் போல, ஒரு குட்டிச் செல்வமும் வாழ்க்கையைப் பற்றி எனக்கு முக்கியப் பாடம் ஒன்றை அளித்திருக்கிறான் என்பது மட்டும் உண்மை.


தொடரும்
ஜீவ.கரிகாலன்








2 கருத்துகள்:

  1. செல்வம் சுவாரஸ்யமாக இருக்கிறது ஆனால் கடைசியில் வந்த கேள்வி தான் கிளைமாக்ஸ் என்றபோது தொய்வு வந்து விட்டது ..ஆனால் சுவராஸ்யமாக எழுதி இருகிறீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு