வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி - சொஜ்ஜி - 34 / ஒரு தொண்டனின் கதை

ஒரு தொண்டனின் கதை

(எப்படி எழுகிறது பிரிவினை கோரிக்கை?? )


 நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பிரதான தொழில் அரசு இலாகவோடு தொடர்புடையது தான். ஆனால், அதில் நமக்கு பைசா தேறாது என்றாலும், இந்த நாட்டின் ரியலெஸ்டேட் தொழில் போன்ற கருப்பு விவாகரங்களுக்கு ஆதாரமான தரகினை செய்து சுபிட்சமான நாடாக மாற்றும் பணி தான் எங்களுக்குத் தலையானது. எங்களுக்கும், நான் சொல்லப் போகும் அதிகாரிகளுக்கும் இடையே அரசாங்க வேலை என்கிற அந்தஸ்து மட்டும் தான் வித்தியாசம். ஆனால் அதை அதிகாரம் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் போடும் ஆட்டம், தினமும் ஈட்டும் வருவாயோடு தாராளமாக சாபத்தையும் கொண்டு செல்லும் அளவுக்கு அதி உன்னதமானது. ஒரு முதுகலைப் பட்டம் பெற்ற 50 வயதுள்ள நபர் கூட 25-28 வயது சிப்பாய் மற்றும் office assistant ஆகியோரை சார்!! சார்!! என்று அழைத்துச் செல்லும் அவலங்களை கண் கூடப் பார்த்திருக்கிறேன்.

பொது அறிவு என்பது துளியும் இல்லாத நான்காம் கிரேடு ஆஃபிசர்கள் கூட தினமும் 1000 முதல் 2000 வரை சம்பாதிக்கும் நிலையை இந்தியாவிலேயே இந்தத் துறையில் மட்டுமே பார்க்கலாம், அது போன்ற பொறம்போக்கிடம் தமது அடையாள அட்டை வாங்குவதற்காக, MNCயில் வேலை பார்க்கிறேன் என்று சொல்லி தினமும் டூவிலரை ஸ்டார்ட் செய்யும் இளைஞனின் பொழுது, அவன் நம்பிக்கையைப் போலே இழுத்து அடிக்கும் இது போன்ற லஞ்சப் பேய்களிடம்.

லஞ்சம் என்ற வார்த்தையை எல்லாம் இப்பொது பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதையும் கூட இப்பொழுது கௌரவமான மாடர்ன் பெயர்களில்  ஸ்பீட் மணி, எக்ஷ்ட்ராடினரி மணி, பெட்டி காஷ், Annexure என்று வெவ்வேறு அரசு இயந்திரங்களை தொய்வு இல்லாமல் இயங்க வைக்கும் க்ரீஸ் டப்பாவாக லஞ்சப் பணமானது செயல்பட்டு வருகிறது. இன்னும் எழுதினால் ஏதாவது ஷங்கர் படம் வசனம் போல் ஆகிவிடும்.

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில்  தணிக்கை சம்பந்தமாக ஒரு அந்த இலாகாவைச் சேர்ந்த ஒரு அதிகாரியை அழைத்து வந்தோம், என்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்த நண்பர் அந்த அதிகாரியை அழைத்து வரச் சென்றார். அந்த அதிகாரியோ வயது மிகவும் குறைந்த ஒரு வடநாட்டு அதிகாரி (பெண்). அவரை அந்த அதிகாரி பின்னர் பயந்தவாறே தொடர்ந்து வந்தது மிகவும் கடினமாக இருந்தது. (அவர் பெண் என்பதால் அல்ல).ஏனென்றால் அவர் எங்கள் அலுவலகம் வந்து சில நிமிடங்களில் புரிந்து கொண்டேன் அவருக்கு பொது விஷயம் என்று ஒரு இழவும் தெரிந்து கொள்ளவில்லை என்று, அது அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

மத்திய அரசில் வேலைக்கு சேர்வதற்கு இந்தி தெரிந்தவர்களுக்கு ஒரு கூடுதல் Advantage ஆகவோ, அவர்கள் ஆங்கிலத்தில் தேர்வு எழுதவோ அல்லது வல்லுனராகவோ இருக்கத் தேவையில்லை. பாம்பேயிலோ, டெல்லியிலோ இருக்கும் எங்கள் கூட்டு நிறுவனங்களில் இருக்கும் பெரிய அதிகாரிகள் கூட சாதாரணமாக ஹிந்தியில் உரையாட, நாம் தான் ஆங்கிலத்தைப் பிடித்து தொங்கி, ஊசலாடி, பாடை கெட்டி வாழ்கிறோம். போதாதைக்கு Spoken English வகுப்புகளிலும் Repidex வாங்கிப் புரட்டி எடுத்தாலும், First in First out methodஇல் நாம் இன்று புதிதாகக் கற்கும் ஒரு ஆங்கிலச் சொல்லிற்கு இணையாக ஒரு சொல்லை மறந்தும் போகிறோம்... இதை எல்லாம் நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு மைனாரிட்டி - மைனாரிட்டியாய் இருந்த போதும் நீங்கள் தான்  இந்த சமூகத்தின்(Working Class People) ஆதிக்க சாதியாகவும் இருக்கிறீர்கள்.

இது மத்திய அரசு நிறுவனம் என்பதால்  வடநாட்டு ஆஃபிஸர்களை நிறையவே  பார்க்கலாம், அதுவும் சென்னையென்றால் - பாதுகாப்பு மற்றும் நிறைய ஸ்பீடு மணி என்கிற இரண்டு லட்டுகள் இருப்பதால், அருணாச்சல் பிரதேசத்தில் கால் வைக்கும் சீனர்கள் போல, அரசு அதிகாரிகள் சென்னையில்  இடம் மாற்றம் கேட்டு வந்து குவிகிறார்கள். நான் வந்த ஆறு வருடத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு நானும் கூட ஒரு சாட்சி தான்.

சம்பவம் நடந்த அன்றும் அப்படித் தான் அந்த அதிகாரி, எங்கள் அலுவலகம் நோக்கி காரினுள் நுழைவதற்குள்ளேயே ஆயிரம் கேள்விகள் கேட்டு துளைத்தெடுக்கிறார் என்று என் நண்பர் என்னிடம் சொன்னார். அவர் வரும் தோரணையிலும், நம்மை சட்டை செய்யாத அலட்சியப் போக்குமே “சரி!! இது வேலைக்கு ஆகாத கேஸ்” என்று முடிவு செய்து விட்டேன். நினைத்தது போலவே என்னிடம் துருவித் துருவிக் கேட்க ஆரம்பித்தார். என் நண்பர் ஒரு B.A. Tamil (நல்லவேளை அவர் MA தமிழ் படிக்கவில்லை).
அவர் கேள்விக்கு நான் பதில் சொல்லும் போது கிடைக்கும் CLUEவைக் கொண்டு அடுத்த கேள்விக்கான கொக்கி போட்டார், நானும் அவருக்குத் தகுந்தார் போல் கொஞ்சம் அதிகமான தகவல்களைச் சொல்லி முடித்து எப்படியோ சரி கட்டினேன். ஆனால் என்னாலே அவரை ஏதாவது குத்திக் காண்பிக்க வேண்டும் எனப்து போல் இருக்க, அவருக்கு தேவையான பதிலைச் சொல்லிவிட்டு “It's very common and fundamental thing, usually ignored in such inspections”என்று சொல்லிவிட்டு அந்த அம்மையாரின் ஈகோவைக் கீரிவிட்டேன். அந்நேரம் பார்த்து அவர் அதிர்ஷ்டம் என்னைப் பழி வாங்கும் சந்தர்பத்தினைக் கொடுத்தது, அவரும் எங்கள் அலுவலக முகவரியில் இருந்த ஒரு சிறிய தவறினை கண்டுபிடித்து, ஊதி ஹைட்ரஜன் பலூனாகப் பெரிதாக்கினார். நம்மிடம் எல்லாமும் சரியாக இருக்கிறது என்றாலும்,  இதைச் சொல்லி மட்டும் அவரை அவ்வளவு எளிதாகச் சரிபடுத்த முடியாது என்று தோன்றியது. எங்கேயோ போற மாரியாத்தா என்மேல வந்து ஏறு ஆத்தா” என்கிற கதையாகிவிட்டது

நம்மிடம் பிரச்சினை என்பதை உணர்தவுடன் பதட்டம் ஆகிவிட்டது. எனக்கு டென்சன் கிட்ட வந்தால் ஆங்கிலம் ஊருக்குப் போயிரும், அப்படியே செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்க, திடீரென்று உள்ளே நுழைந்த என் சீனயர்.. திஸ், தட் என்று சைகை சொல்ல ஆரம்பிக்க, “பாப்ரே!! பாப்ரே ..டுமாரோ மீட் மீ இன் மை ஆஃபிஸ்” என்று ஆய்வினை முடித்து விட்டுக் கையெழுத்திட்டார். அடக்கி வைத்திருந்த யூரினை எல்லாம் கியூவில் நின்று டிஸ்போஸ் செய்து விட்டு, டீக் கடைக்குச் சென்றோம்.

அவர் என்னிடம் கேட்டார்,  “ஆமா அவங்க ஏதோ நம்ம ஆஃபிஸ் ரெஸிடன்ஸ் என்றெல்லாம் பேசினாங்களே அதுக்கு என்ன அர்த்தம்??” என்றார்.

“ நம் அலுவலகத்தை வணிக கட்டடத்தில் வைக்காது, ஒரு குடியிருப்பில் ஏன் வைத்திருக்கிறீர்கள் ??” என்று அவர் கேட்டதற்கான அர்த்தம் சொன்னேன்.

“ஓஹோ அதனால தான் நான் கடைசியாகப் பேசும் போது போதும்டா சாமி என்று ஓடிட்டாங்க போலிருக்கு??” என்று சொன்னார்.

அப்பொழுது தான் விளங்கியது அந்த அதிகாரி போனதற்கு என் நண்பர் தான் காரணமாக இருக்கும் என்று , ஆனால் அது எப்படி??.. அப்படி என்ன பதில் சொல்லியிருப்பார் என்று அறியும் பொருட்டு “நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?” என்று ஆர்வத்துடன் நான் கேட்டேன்.

 “அதற்கு நான் சொன்னேன் ஆஃபிஸ் இன்னும் அஞ்சு நிமிஷத்துல் வந்துடும், ரெசிடன்ஸ் இன்னும் பத்து கிலோமீட்டர் ஆகும்”.என்றார் அவர்.

 சத்தியமே வெல்லும் என்று பல சோக காலங்களில் ஒரு ஆறுதல் Dialogue சொல்வோம். இப்போது இப்படிச் சொன்னால் Better ஆக இருக்கும்- “ சாமர்த்தியமான சத்தியமே வெல்லும்”.

”ஆஹா எப்படியோ பிராப்ளம் சரியான ஓகே!! எப்படியும் காசு வாங்கத் தானே போகிறார்கள், நீங்களும் தயவு செய்து இங்க்லீஷ் கத்துக்கிறேன்னு செலவு செய்ய வேண்டாம், கத்துக் கிட்டாலும் வெளிய காட்டாதிங்க, இது தான் நமக்கு இருக்கும் ப்ளஸ் பாயிண்டே” என்றேன். சென்னையில் இந்தத் துறையில் இருக்கும் அநேக முகவர்களின் அலுவலகத்தில் இதே நிலைமை தான்..

“எம் பையன இதே துறையில ஆணையர் ஆக்கனும்னு நினைச்சேன் ஆனா அது மட்டும் பத்தாது , உண்மையிலேயே இந்த மாதிரி ஆஃபிசர்களிடம் இருந்து இதற்கு ஒரு அரசியல் தீர்வும் காண வேண்டும் என்று எனக்குத் தோணுது” என்றார்.

“அப்போ இதற்குத் தீர்வு??” - இது நான்

“தமிழ்நாடு தமிழருக்கே என்கிற நிலை வரணும்!!” , இது வரை அவர் தி.மு.க அனுதாபி, இப்பொது அவர் சீமானின் பேச்சுகளைத் தான் விரும்பிக் கேட்கிறார் - ஆனால் இவரா பிரிவினைவாதி ???

நம் வாழ்வில் எதிர்பாராத சில அபத்தமான தருணங்களில் இருந்து கிடைக்கப்பெறும் பாடம் மிக முக்கியமானதாய் இருக்கும். ஒரு கட்டுரைக்குத் தேவையான வழக்கமான நீதி சொல்லம் முடிவுரை தான் என்றாலும், போகிற போக்கில் நாம் உதறித் தள்ளுகிற, அசட்டை பண்ணாத, சாதாரண்மாய்த் தோன்றும் விஷயங்களை ஆராய்ந்தால் ஒரு பெரிய System பற்றிய அல்லது நம்மை நிர்பந்திக்கும் - நம்மால் கட்டுப்படுத்த முடியாத Patterns பற்றியும் நாம் விவாதிக்க வேண்டிய பெரிய வெளி (Space) இருப்பது தெரியும்.

A true patriot save his nation from the government - எட்வர்ட் அபி


--
தொடரும்
ஜீவ.கரிகாலன்

1 கருத்து: