வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ஒரு புளியமரத்தின் கதை

ஒரு ஊர்ல ஒரு புளியமரம் இருந்தது, அது ஒரு பெரிய மரம்...............

அந்த 150 காலப் பழமையான புளியமரத்தைப் பற்றி பேசும் போது என்னில் வரும் சொற்கள் எல்லாம் சித்திரமாக எத்தனித்து மாறி விட, அவை என்னை விட்டு விடுதலை அடைகின்றன. எஞ்சியிருக்கும் நினைவுகளில் தங்கும் கிளைகளின் வாசனையை பகுத்துப் பார்க்க ஒரு பெரிய பட்டியல் கிடைக்கிறது..
நாகலாபுரம் -பள்ளிவாசல்பட்டி-தூத்துக்குடி மாவட்டம்

# சிட்டுக்குருவி, மைனா, காடை, பச்சைக்கிளி, ஆந்தை, அணில் கூட்டங்கள்
# உடைந்துக் கொண்டிருக்கும் புளியம்பழ ஓடுகள்
# பறவையின் எச்சங்கள்
# கள்ளன் - போலீஸ் விளையாட்டின் விதிமீறல்கள்
# புளிப்போடு வாண்டுகள் தேடும் கல் உப்பும், மிளகாய் வற்றலும், கருப்பட்டியும்
# வௌவால் சப்தம்
# ஊர்ந்து செல்லும் சுள்ளெறும்பும், கட்டெறும்பும்
# பொந்தில் இருந்து வெளியே வந்து பிடறி தட்டிக் கொல்லும் பேய் ஒன்று
# மசூதியின் சாம்பிராணி வாசனை
# தேவாலயத்தின் மணிச் சப்தம்
# தவறு விழும் பொழுது தெரித்த பாண்டியின் பற்கள்
# கூட்டில் இருக்கும் முட்டையைக் குடிக்க வரும் பாம்புகள்
# ஆயிரம் காக்கைகள்
# சில பத்து மயில்கள்
# மொத்த மரத்தையும் குத்தகைக்கு எடுத்த அண்ணாச்சியின் பிரம்படி அல்லது காது திருகுதல்
# சுற்றி வந்து விளையாடும் பொண்டு பொடுசுகள்
# கீழே விழுந்த புளியங்கொட்டையின் ஒரு பக்கம் சிரைத்து விளையாடப் போகும் தாயக் கட்டங்கள்
# சூரக் காத்தில் போடும் பேயாட்டமும்
# அருகிலிருந்து விறகாகிப் போன 6 புளியமரங்களும், பஞ்சம் பிழைக்கச் சென்ற 16 குடும்பங்களும்.
# பழத்தைப் பறித்துக் கொடுத்தவுடன் கடித்தபடியே முகஞ்சுளித்து பேரழகியாய் மாறிய அவள் நினைவுகள்

நிலவுக்கு முன்னே அந்த மரத்தை வைத்து அல்லது அருகில் வைத்து பாடுவதற்கு ஆட்கள் இல்லை, மேலேறி விளையாடும் பிள்ளைகளுக்கு கிரிக்கெட்டும் வீடியொ கேமும்.. மரம் ஆடுகிறது, அசைகிறது, வாடுகிறது, நனைகிறது, காய்க்கிறது, கனிகிறது, உதிர்க்கிறது...

மரத்தைத் தழுவி முத்தம் இட இன்னும் நான்கு ஜோடி கரங்கள் வேண்டும், அவளுக்குச் செய்தி அனுப்புங்கள்!!!


-ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக