ஞாயிறு, 1 ஜூலை, 2012

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்

 வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்னவனின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று நான் அப்போது உணர்ந்தேன். கி.ரா தொகுத்த கரிசல் கதைகளில் அந்த வலி மிகுந்திருந்தது. வள்ளலார் தான் வாழ்ந்து வந்த மண்ணில் வாடும் பயிரைக் கண்டு தானும் வாடியிருந்தார். அதுபோலவே நீரின்றி வற்றி போகும் பயிர்களைப் பார்ப்பது என்பது எங்கள் மண்ணிற்கு ஒரு உரிப் பொருளானது என்று சொன்னால் அது மிகை அல்ல.  இன்று வரை எத்தனையோ நூற்றாண்டுகளாய், ஒவ்வொரு வருடமும் தனது காட்டிலோ, தோட்டத்திலோ தன் விவசாயம் வீணாகிப் போனதைப் பார்க்கும் நிலைமை இம்மண்ணில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது.


     ஒவ்வொரு வருடமும் அங்கு வாடும் பயிர்களோடு அவர்கள் நம்பிக்கையும், வசந்தமும், எதிர்பார்ப்புகளும், மகிழ்ச்சியும் சேர்ந்தே வாடுகிறது. அம்மண்ணில் யாரோ ஒருவன் அவ்வப்பொழுது
அந்த துயரத்தில் தன் உயிரையும் துறந்து கொண்டு தான் இருக்கிறான். அவன் உழைப்பிற்கும், நம்பிக்கைக்கும் பதில் சொல்ல வேண்டிய இயற்கை இன்னும் கடனாளியாய் தான் இருக்கிறது. இத்தனைக்கும் இயற்கைக்கு அதிகம் மதிப்பு தரும் மண் எங்கள் மண் தான்.

   நதியோடும் வண்டல் மண்களில் இயற்கையின் கொடையை மக்கள் எப்பொழுதும் போற்றுவதில்லை, இயற்கையோடு இயைந்த வாழ்வுகொண்ட மலைவாழ் மக்கள், அவ்வளத்தில் வாழ்கிறார்களே தவிர அதன் அருமையை அவர்கள் மலைகளிலிருந்து கீழிறங்கும் வரை உணர்வதில்லை, மீனவனும் , எம்மண்ணில் வாழ்பவனும் தான் நித்தமும் இயற்கைத் தொழுகிறான். அவன் ஒவ்வொரு பொழுதும் இயற்கையின் தீர்மானத்தில் தான் விடிகிறது. இவர்களில் மட்டும் தான் கற்றறிந்த மனிதனும், கடைநிலை மனிதனும் கூட இயற்கையை முழுதுமாக ஒரே மாதிரி நேசிக்கிறான்.
       எம் மண்ணில் வாழும் மக்களைக் காட்டிலும் மழையை அதிகம் நேசிப்பது யார்?, எப்பொழுதாவது பெய்யும் மழையில் ஒரு ஊரே ஆனந்தக் குளியல் போடுவதை நீங்கள் பார்த்திருக்கீர்களா? அவனுக்கு மட்டும் தான் மழையின் கடைசித் துளி வரை தேவையாகிறது. ஆனால் அம்மழை கூட சில நேரம் கரிசல் மண்ணிற்கு கரிசனம் காட்டுவதாய் கடுமையாய் பொழிந்து மறுபடியும் அவனை ஏமாற்றிடும்,கண்மாய்கள் உடைபட்டு அவனை மறுபடியும் பழிவாங்கும், பாளம் பாளமாய் பெயர்ந்துக் கொண்டிருக்கும் நிலத்தில் அவன் கனவு கண்டிருந்த திருமணம், திருவிழா சடங்குகள், வைத்தியம், கடன், வீடு என்ற ஆசைகள் எல்லாம் பொய்த்துப் போகும். அவன் எல்லாவற்றையும் தாண்டி பல நூற்றாண்டுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான், அவன் வீரம் மிகுந்தவன், உழைக்க அஞ்சாதவன், மண்ணை நேசிப்பவன், குடும்பத்திக்காக கரைந்து கொண்டே இருப்பவன், தண்ணீருக்காக அலைந்து கொண்டே இருப்பவன்,அவன் கரை படிந்த வேட்டிக்கு நேர்மாறாய் வெண்மையான இதயம் படைத்தவன், ஆனால் எப்பொழுதும் சுரண்டப் படுபவன்.


   ஒரு குடம் நிறைக்க ஒரு மணி நேரம் நீர் இரைக்கும் நிலை, சென்ற நூற்றாண்டுவரை எல்லோர் வீட்டினிலும் இருந்தது, எங்கள் கரிசல் மண்ணின் பெண்கள் தான் மிக மென்மையான இதயமும் மிகக் கடுமையான கரங்களும் கொண்டிருப்பார்கள், அவர்களின் கரங்களை கந்தகமும், அரிவாளும், வாளிக் கயிறும் நித்தமும் கடுமையாக்கிக் கொண்டே இருக்கும். அன்று, நீர் இரைக்கும் பொழுது அறுந்து விழும் வாளிகளை எடுப்பதற்காகவே முள் சங்கிலியை வாடகைக்கு விடும் தொழில் எங்கள் வறுமைக்கும், உழைப்பிற்கும் மற்றொரு சாட்சி.

                 தேய்ந்து போன வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் உங்கள் நகரங்களில் பிழைப்பதற்காக பல இடங்களில் அண்டியிருபார்கள், அவர்கள் எந்தத் துறையிலும் இன்று நல்ல நிலையில் இருப்பார்கள் . காரணம், பல தலைமுறைகளாய் அவர்களுக்குள் மாறிக்கொண்டிருக்கும் மாபெரும் சொத்தான உழைப்பு. இயற்கை காய்ந்தாலும், பெய்தாலும் அஞ்சுகிறவன், அவனுக்கு தெரிந்தது எல்லாம் உழைப்பு மட்டுமே. இன்று இயந்திரங்களின் உதவியால் வர்கள் கடும் உழைப்பிற்கு சற்று தளர்வு கிடைத்திருந்தாலும் இன்னும் கிராமங்களில் வாழும் அவர்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் மற்றவர்களை விட.

        எம் மக்களின் கண்ணீர் துளிகளுக்கும் குறைவான தண்ணீர்த் துளிகள் கொண்ட கரிசல் மண் இதுவரை எத்தனையோ வள்ளலார்களை ஈன்றெடுத்தது, நான் கூட என் சிறுவயதில் கிணற்றில் ஏற்றம் போடும் ஒரு வள்ளலாரை எங்கள் வீட்டு அருகில் பார்த்துள்ளேன், அவர் கண்ணீரோடு எனக்கு பல கதைகள் கேட்கக் கிடைத்தன. அது, என் நகரத்தில் ஆழ்குழாய் கிணற்றில் நீர் வற்றும் நேரத்திலும், மழைத் துளி என் மீது பட்ட பொழுதிலும், யாரோ ஒருவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்த செய்தியை வாசிக்கும் பொழுதும், வள்ளலாரின் இந்த "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று கேட்கும் பொழுதும் வந்து போகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக