திங்கள், 24 மே, 2021

எண்ணும்மை - 02 வாய்ப்பும் இழப்பும்

 

“ஜே.கே.. அவனை ப்ளூக்ராஸ்ல புடிச்சுக்கொடுக்கனும் ஜே.கே...” என்று தான் அன்றைய பொழுதின் முதல் பேச்சாக இருந்தது. நாகலாபுரத்தில் ஆறு ஏழு நாய்கள் வளர்த்த பந்தம் இன்று வரை எங்கு சென்றாலும் அவர்களுடன் தொடர்ந்து வருகிறது. முதன்முறை எங்களோடு சதுரகிரிக்கு மலையேற துணைவந்த சொக்கநாதன், அடுத்த முறை சில ஆண்டுகள் கழித்து வந்த போதும் சொக்கநாதன் எங்களைக் கண்டுகொண்டது என்பது முன்னர் சொன்ன பந்தத்தின் உச்சபட்ச உதாரணம். 

 இப்போது வசிக்கும் ஏரியாவில் உள்ள பசங்களுடன் நான்காண்டு கால சகவாசம்.. ஏரியாவில் மூத்த பையன், எல்லோருக்கும் காட் ஃபாதர் கவர் பாய் தான்.. முன்னோடி, மூத்தவரென்றாலும் அன்பு காட்டுவதிலும் பொஸஸிவிலும் இவர் எல்லோரையும் விட அதிகம். இப்போது பழு வந்த காரணத்தினோலோ காயம்பட்டபோது மருந்து போட்டதன் எரிச்சல் காரணமாகவோ என் மீது கோபமிருக்கலாம். 

அகிலா தோழர் என்னை விட ஒரு படி மேல்.. எத்தனை நோய்மையுற்றாலும் அவர்களை ஆறுதலாய் தடவிக்கொடுக்கத் தவறுவதேயில்லை. அதுவும் கொரோனா காலத்திலிருந்து கவர் பாய் என்னிடம் முழுமையாக நட்பை துண்டித்துவிட்டான்.. இத்தனைக்கும் அன்றாடம் பிஸ்கட் பாக்கெட் முழுமையாக அவனுக்கு என்றே போட்டாலும், நான் அங்கே இருந்தால் உண்ண மாட்டான். எழுந்து திரும்பிப் படுத்துக் கொள்வான். நாங்கள் வசிக்கும் மூன்றாம் தெரிவிலிருந்து முழுமையாக அவனது இருப்பிடமான இரண்டாம் தெருவிலேயே தங்கிவிட்டான். அங்கிருக்கும் அம்மு அவனை ஏற்கனவே கடித்துவைத்துவிட்டதால் ஏற்பட்ட காயம் முழுமையாக ஆறிவிடும் முன், புதிதாக அவனுக்கு கழுத்தில் ஒரு காயம் ஏற்பட்டிருந்தது. அப்போதும் அவன் என்னைக் கண்டால் விலகிப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். 

எங்கள் தெருவில் தப்பி பிழைத்த குட்டியொன்று பழுவோடு மிக நெருக்கமாய் பழக ஆரம்பிக்க அவன் இங்கே செட்டிலாகிவிட்டான். அது போல கொரோனா காலத்தில் புதிதாக இருவர்  உள்ளே நுழைந்து குட்டியோடு உணவுக்காக சண்டையிட, இப்போது அவர்களுக்கும் தனிப்பங்கு கிடைக்க அவர்களும் சற்றுத் தள்ளி அவர்களுக்கான இடத்தை பிடித்துக் கொண்டு எங்கள் தெரிவிலேயே செட்டிலாகிவிட்டார்கள்.

கவர்பாய் நன்றாக துருதுருவாக போக்கிரியாக சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் அவனை யாராலும் எதிர்க்க முடியாது, சேர்ந்தார் போல் இரண்டு அல்லது மூன்று குத்தாவாலாக்களை கூட அவன் துரத்திவிடுவான். அவன் தனித்த குரலில் குரைப்பதற்கு பதிலாய் ஒரு ஸ்வரமொன்றை எழுப்புவான். எப்படியாகினும் மூன்றாம் தெருவை முழுமையாக ராஜ்ஜியம் செய்தவன் அவன். திடிரென பாதி வளர்ந்த குட்டியாகத்தான் ஒரு கருப்பு வெள்ளை துள்ளல் பயலைக் கண்டேன்.. வாலை ஆட்டும் வேகத்திலிருந்து அவன் நல்ல ஆரோக்கியமானவன் என்று உணர்ந்தோம். முதன்முதலாக ரௌடிக்கு அஞ்சாமல் அவனை மீறி எங்கள் அலுவலகம் அருகே வந்து உட்கார்ந்து வாங்கித் தின்றுவிட்டுக் கிளம்பிவிடுவான். அவனது ரவுடி ரதோர் ஆனது. ”ரவுடிப்பயலே” என்று கொஞ்சுவதை அவன் அங்கீகரித்தான். போடும் பிஸ்கட்டை அவன் சாப்பிடாமல் அவனது கேர்ள் ஃப்ரண்டை அழைத்து வந்து சாப்பிட வைத்து உடன் செல்வான். இந்த மாதிரி நடவடிக்கையை இதற்கு முன் எந்த பயல்களிடமும் கண்டதில்லை. 

நாங்கள் வசிக்கும் பகுதியில் நிலத்தில் குடில் போட்டு தங்கி வேலை செய்து பிழைப்பவர்கள் ஆண் நாயை வளர்ப்பதில்லை, அவர்கள் நாய்க்குட்டியை சிட்டியில் விற்பனை செய்ய முடியும் என்பதும் ஒரு காரணம். ஏற்கனவே ரவுடியின் கேர்ள் ஃப்ரண்ட் கடந்த ஆண்டு போட்ட குட்டியில் பிழைத்தவை விற்கப்பட்டன. குட்டியை இழந்த அது மிகவும் மூர்க்கமானது. அதற்குள் கார்ப்பரேஷன் ஆட்கள் ரவுடிக்கு அறுவைசிகிச்சை செய்து திருப்பி அனுப்பிவிட்டனர். அதற்கு பின்னர் அவன் பழைய சுறுசுறுப்பை இழந்துவிட்ட போதிலும் நம் மீது இருந்த பிணைப்பை 1% கூட இழக்காமல் இருந்தான். இப்போது அவன் முழுமையாக முதல் தெருவில் வசித்து வந்தான். பழைய பேப்பர் கடை அண்ணாச்சி அதே தெருவில் கிட்டத்தட்ட ஐந்தாறு பேருக்கு மேலாக கவனித்து வந்தார்.  ஆனால் ரவுடி அவர்களிடமிருந்து தனித்தே இருந்தான். ஆப்ரேஷன் செய்த பின்னர் அவன் மனிதர்களிடம் நெருங்குவதில்லை. அண்ணாச்சி, என்னைத் தவிர, அகிலா, இளங்கோவிடம் மட்டும் வாலாட்டுவான். என்னிடம் மட்டும் கையிலிருந்து எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை அவன் விடவேயில்லை. 

இரண்டாம் தெருவில் கவர் பாய் மற்றும் அம்முவும், குறுக்குத் தெருவில் இரட்டையர்களில் ஒருவன் கார்ப்பரேஷன் பண்ண அறுவை சிகிச்சையில் சீழ் வடிந்து செத்துப்போக. கருப்பு வெள்ளை சங்கரி மட்டுமே வசித்து வந்தாள். அது ஒரு ப்ளாட் மட்டுமே, தற்காலிகமாக சென்னை சில்க்ஸ் பார்க்கிங் வைத்துள்ளது. முதல் தெரு வாசிகளாக கைவிடப்பட்ட கலப்பினத்தான் ஒருத்தனும், ஒரு சோம்பேறி வெள்ளையன், இரண்டு கருப்பர்கள், இட்லிக்கடை கருப்பன் போக ஒரு திருட்டு வெள்ளையன் (வீடு புகுந்து திருடி நிறைய அடி வாங்கியிருக்கிறான்) தான் இருந்தார்கள். பின்னர் ரவுடி ரத்தோர் குழுவோடு இல்லாமல் தனியாய் இருப்பான். நாய்கள் ஒரு Pack animal தான் எத்தனை சண்டையிட்டாலும் அவர்களுக்குள்ளே ஒரு குழு இருக்கும். பார்க் தாண்டி ஒரு இடத்தில் ஏழெட்டு பேர்கள் இருப்பார்கள் அவர்கள் கதையே தனி. அருகிலிருந்த வீட்டு விலங்குகள் காப்பகம் (PET Boarding) திடீரென இடம்பெயர, திரும்ப அழைக்கப்படாத விலங்குகளை ஒரே இடத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் ஒருகுழுவாக இருப்பதால் அவர்கள் அங்கேயே வாழ்ந்துவருகிறார்கள். எந்த குழுவிலிருந்து பிரிந்துவந்தவனோ அல்லது கைவிடப்பட்டவனோ தெரியாது ரவுடி தனித்தே இருந்தான். ஒரு சீஸனில் உடனிருந்த சங்கரியும் இப்போது அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அருகே வருவதில்லை. தவிர உடம்பும் தடிமனாக போய்விட்டது.

***

அன்று காலை என்னை எழுப்பியது ரவுடியைப் பற்றி சொல்லத்தான். திடீரென அதற்கு முந்தைய நாள் எங்கள் தெருவிலிருந்தவர்களை விரட்டிவிட்டு எங்கள் வீட்டுக்கருகே வந்து உட்கார்ந்துவிட்டான். பழுவைப் பார்த்து குறைத்தபடியே இருந்தான். உணவு கொடுத்து கொஞ்சம் அவனை சாந்தப்படுத்திவிட்டுப் போ என்று அதட்டியதும் போய்விட்டான். அன்றிரவு முழுதுமே பெருஞ்சப்தங்கள் சொல்லப்போனால் அந்த வாரம் முழுக்கவே சண்டை சச்சரவுகளோடே இருந்தது. குட்டி, பழு, ரவுடி உள்ளிட்ட எல்லோருக்கும் காயமிருந்தது. 

ஆனால் பிரச்சனை எல்லா நாய்களிடையே அல்ல ஒரேயொருத்தனால் தான்.

அகிலா அந்த சம்பவத்தை சொல்லும்போதே நடுங்கிதான் விட்டார். “நம்ம ரவுடி பத்தி சந்தேகப்பட்டது சரிதான். அவன் காலைல சங்கரியோட எல்லா குட்டிங்களையும் கடிச்சிட்டான்... நாங்க விரட்டினாலும் போகலை”

மிகமோசமாக மூன்று குட்டிகளையும் கடித்து குதற, எப்படியோ அகிலாவும் வேறொரு பெண்மணியும் சேர்ந்து அவனை விரட்டிவிட்டு படுகாயம்பட்ட குட்டிகளைத் தூக்கி சென்னை சில்க்ஸ் கதவருகே கொண்டு ஒளித்து வைத்தார்கள். குட்டிகளைக் கடித்து குதறிய இடம் சென்னை சில்க்ஸ் பார்க்கிங். காலையிலேயே அவன் மூர்கமாக சுற்றிக் கொண்டிருந்தான். மெயின்ரோடு உட்பட மூன்று தெருவிலும் எங்கெங்கெல்லாமோ சென்று வெவ்வேறு நாய்களைக் கடித்துக் கொண்டிருந்தான்.

கோவிட்காலத்தில் சோறு வைப்பவர்கள் அநேகர் வெளிவருவதில்லை, சிலர் ஊர் சென்றுவிட்டார்கள், சிலருக்கு இயலவில்லை. பழையபேப்பர் கடை அண்ணாச்சியும் அவ்வப்போது வந்து சோறு போட்டுவிட்டுச் செல்வார். ஆனாலும் நான் உட்பட ஏதோ ஒருநாள் அல்லது ஞாயிறு உணவு போடாமலேயே விட்டுவிடுவதுண்டு. கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலே இந்த அசாதாரணச்சூழல் தொடங்கிவிட்டது அல்லவா? ஏன் என்றே புரியாத வண்ணம் ரவுடி மூர்கமாக ஆகியிருந்தான். ஆனால் அவன் உண்ணாமல் இருந்தால் மூர்கமாகிவிடுவான் என்று தோன்றியதால் ப்ளூ க்ராஸ் வரும்வரை அவனுக்கு உணவு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். அவன் அப்போது வசிக்குமிடம், உயர்த்திக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மூன்றடுக்கு வீட்டுப்புறம். அங்கு போய் நான் நின்றால் போதும் என் கூடவே வந்துவிடுவான், நேராக என் வீட்டருகே வந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, கொஞ்சம் சாப்பாடோ பிஸ்கட்டோ சாப்பிட்டு மீதம் வைத்துவிட்டு சென்றிடுவான். இவ்வாறு முந்தின நாளிலிருந்து நான்கைந்து முறை செய்துவிட்டேன். 

காலையில் பதிவு செய்த ப்ளூகராஸ், சுமார் இரண்டு மணிக்கு வந்தது. சென்னை சில்க்ஸ் பின்கதவருகே வைத்திருந்த குட்டிகள் இல்லை என்றதும் அவர்கள் கிளம்பிப்போவதாக போனில் சொல்ல, மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு அவர்களைக் கூட்டி வந்தோம். ப்ளூ கிராஸைப் பொறுத்தமட்டிலும் புகார் செய்யப்படாத எந்த ஒரு உயிரையும் அல்லது volunteer இல்லாத எந்த ஒரு பிராணையையும் எடுத்துவருவதில்லை. அதற்கு வேறு ஒரு வழக்கு காரணம். இதைக் காரணம் சொல்லி அவர்கள் வெறி பிடித்து கடிக்க வரும் ரவுடியைக் கொண்டு செல்ல மறுத்துவிட்டனர்.

பின்னர் ஒரு பணியாளரை எனது வாகனத்தில் வைத்துக் கூட்டிச் சென்று காண்பித்தேன். கண் முன்னே ஒரு வெள்ளையனை ரவுடி கடித்துத் துரத்திக்கொண்டு இருந்தான். வாகனத்தை அழைத்துவரச் சொன்னார் அதற்குள் அப்பகுதி மக்களும் அங்கே கூட அவர்கள் முதலாவதாக அந்த சங்கரியைப் பிடிக்கச்சொன்னார்கள். சென்ற வருடமே அது ஒரு பெண்ணைக் கடித்துவிட்டிருந்தது. அது தன் குட்டிகளைப் காப்பதற்காகத் தான் அப்படிச் செய்தது என்று ஒருபுறம் சொல்லி அதனை விட்டுவிடச் சொல்லி பேசினார்கள். 

எல்லா நாய்களையும் பிடிக்க வேண்டுமெனில் 195க்கு(கார்ப்பரேஷன்) அழையுங்கள் என்று அவர்கள் கிளம்பத்தயாராக. இல்லை ஏதோ ஒன்றையாவது பிடிச்சிடுங்க என்று பேசி, ரவுடி அமரும் இடத்தைக் காண்பித்தேன். அவன் தொந்தரவில்லாதவன் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அவன் மூன்று நாட்களாய் பலரையும் கடித்துவருவதை நானே அறிவேன், ஆகவே அவர்கள் ரவுடியை தான் பிடிக்கவேண்டும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டேன். வீட்டருகே சென்ற அடுத்த நிமிடமே சுருக்கைக் கொண்டு இழுத்து வந்தார்கள். கயிறைக் கட்டி இழுத்து வந்துவிட்டார்கள், ஆரம்பத்தில் அவர்களோடு நடந்த வந்த ரௌடி என்னைப்பார்த்ததும், முரண்டு பிடிக்க ஆரம்பித்தான்.. தரையில் படுத்து அப்படி உருண்டும் எந்த சப்தமும் வரவில்லை. அதற்குப் பின்னர் தான் அவன் மீது வலை போட்டி இழுத்து வந்தனர். சட்டென அவனைக் கூண்டினுள் அடைத்தனர். அதற்குள் அங்கிருப்போர்கள் அந்த தாய் நாயையும் இழுத்துப்போக சொல்ல, இன்னொரு புகாரை ப்ளூ க்ராஸிற்கு அனுப்பினால் இப்போதே பிடித்துச் செல்கிறோம் என்றார்கள். 

ஏற்கனவே அது வருவோர் போவோரையெல்லாம் குரைத்து விரட்டிக் கொண்டே இருந்தது. பொதுவாக குட்டியிடும் எல்லா நாய்களும் இப்படித்தான் நடந்துகொள்ளும் என்பதால் இதைவிட்டுவிடுவோமா என்று தோன்றியது. இத்தனைக்கும் சங்கரி கைக்கெட்டும் தூரத்தில் தான் இருந்தாள். ரவுடியைப் பிடித்து போட்டதை நேரிலும் பார்த்தாள். அந்த குட்டிகளை மீட்டுத் தருவதற்கோ என்னவோ அந்த தெருவில் நின்றிருந்த ஒவ்வொருவர் முன்னரும் நின்று முகத்தை நேரிட்டுக்கொண்டிருந்தாள். 

குட்டியைக் காணாத விஷயத்தை சொன்னபோது,  “அந்த மூன்றுமே செத்துப்போச்சு நாந்தான் குப்பைல போட்டுட்டு கார்ப்பரேஷன்காரங்க கிட்ட அள்ளிட்டுப்போகச் சொன்னேன்” என்றார். கடந்த ஒருவாரமாக அகிலாவும் நானும் தினமும் சத்துமாவு, பிரெட் என எதாவது ஒன்றை வைத்துவிட்டு வருவோம். எல்லோரையும் விரட்டும் சங்கரி, எங்களை ஒருமுறை கூட சந்தேகித்ததில்லை. எப்படியிருந்தாலும் நமக்காக அதனை விட்டுவிடுவது நல்லதா அல்லது அதற்கும் ஒரு புகார் பதிவு செய்வமா என யோசிக்கையில், அதனிடம் கடிவாங்கிய பெண்மணியும் அவ்விடம் வந்து சேர்ந்தார். 

“ அதோட குட்டிங்கள தூக்கிடுவாங்கன்னு பயத்துல தான கட்ச்சிது, நாம காசுக்கு விக்கிறோம்னு தெர்ஞ்சா இப்படியா நம்பளாண்ட வந்து வாலாட்டிகினு நிக்கும்”

ப்ளூக்ராஸ் வாகனத்தை அனுப்பிவைத்தேன். ரவுடிக்கு எப்ப இருந்து கிறுக்கு பிடிச்சது என்று விசாரிக்கையில், ரவுடிக்கு இவ்வாறு ஆனதற்கு நானும் ஒரு காரணமெனத் தெரிந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக டைகர் பிஸ்கட்டிற்கு பதிலாய் (3ஆம் தெருவில் கருப்பன், ரவுடியத் தவிர பெரும்பாலும் அங்கிருக்கும் நான்கைந்து பேருக்கும் எதுவும் போடுவதில்லை, எப்போதாவது ஒரு சோம்பேறி வெள்ளையன் மட்டும் முழுப்பாக்கெட் பிஸ்கட் போடு என வாலாட்டுவான்). ரஸ்க் வாங்கி (பட்ஜெட் காரணமாய்) இவனுக்கும் கொஞ்சம் மற்றவர்களுக்கு ஒன்னொன்றாகப் போட்டுக்கொண்டே குட்டிங்களுக்கும் மீதத்தைப் போட்டு வர, பின்தொடர்ந்து வந்த கருப்பனையும் ரவுடியையும் சங்கரி குரைத்தது. கருப்பன் ஓடிவிடுவான், ரவுடி அந்த காரெக்டரில்லை என்பதால் நிறையவே கடிவாங்கினான். அன்றிரவிலிருந்து தான் ரவுடி மற்ற எல்லா நாய்களையும் கடிக்க ஆரம்பித்தான் என்று புரிந்தது. ஆரம்பத்திலிருந்தே ரவுடிக்கு பிஸ்கட் வைத்தால் கவர்பாய்க்கு கடுமையான கோபம் வரும்.. ஆனால் அன்றோ கவர்பாயின் கழுத்தில் கடித்துவைத்திருக்கிறான். கவர்பாய் பேசாத காரணம் புரிந்தது. ரவுடி கடிபட்ட காரணம் தெரிந்தது. ரவுடி கடிப்பதைக் கண்டு ஓடிப்போன குட்டி உள்ளிட்ட மற்றவர்கள் அவர்களிடத்தில் வந்து சேர்ந்தனர். சங்கரி பார்க்கிங்கிற்குள் அங்குமிங்குமாய் நடந்துக்கொண்டிருந்தது, துயரமிக்க ஒரு கழுதைப்புலியின் ரௌத்திரத்துடன் தென்பட்டது. முழுமையாக ரவுடியை மறக்க விரும்பினேன்.

ரவுடி மனிதத் தொடுதலை விரும்பியவன் மற்றவர்களைப் போல் எந்த மனிதரையும் அவன் குரைத்ததில்லை. தழுவிக்கொள்வான். கால்களைப் பிடித்துக் கொள்வான். இரண்டு கால்களிலேயே சில நொடிகள் வரை நிற்பான். வேகவேகமாக வாலாடும். இந்த ஊரடங்கு காலத்தில் மனிதர்களுக்கு மட்டும் இவை நடக்கவில்லை என்பதை மட்டும் உணர முடிகிறது. ஒருவேளை என்னை அல்லது அண்ணாச்சியைத் தவிர, இவனை அத்தனை எளிதாகப் பிடித்துக் கொடுக்க முடியாது. 

இருந்தாலும் குழந்தைகள் நடமாடும் தெருவில் என்று எத்தனை குரல்கள் ஒலித்தன. நாய்களற்ற தெருவிலும் குழந்தைகள் ஒருபோதும் வந்து விளையாடப்போவதில்லை. தொற்று முடிந்தாலும். நமக்கு விலங்குகளை விட மனிதர்களிடம் நிறையவே பயமிருக்கிறது. இருப்பினும் மனிதர்களைக் கடித்த விரட்டுகின்ற சங்கரி தப்பித்துக் கொண்டது. ரவுடி பிடிபட்டான். என்னைப் பொறுத்தவரை இந்த குழப்பம் தான் நிதர்சனம், இந்த குழப்பம் தான் பெரு வெடிப்பு. இந்த குழப்பத்திலிருந்து ஒரு ஒழுங்கை உருவாக்குவது தான் உயிர்வளி, இந்த ஒழுங்கு தான் புவியீர்ப்புவிசை. இந்த குழப்பமும் ஒழுங்கும் எண் 8 ஐப் போன்றது, தொடக்கம் முடிவு புலனாகாது.

விரல்களைப் பிடித்தபடி இருக்கும் டிஜிட்டல் உயிர்வளிமானி தரும் வாய்ப்பில் யார்யாரெல்லாம் எங்கெல்லாமோ உயிரைக் கையில் பிடித்தபடி இருப்பதைக் காண்கிறோம். ரவுடிக்கு மட்டுமல்ல நிச்சயமற்ற வாழ்க்கை. பிரியமான ஒன்றை, நாம் மிகவும் நேசிக்கின்ற ஒன்றை தூக்கிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இன்றைய உலகம் எல்லோரு முன்பும் உருவாக்கி வைத்திருக்கிறது. வாய்ப்புகள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. சிலருக்கு தாயம் விழுந்து ஆட்டம் தொடங்கும் முன்னர் பலர் வீடு சேர்ந்துவிட்டார்கள். சிலர் வெட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சோழியை சுழற்றுவது தான் இருப்பா? அல்லது அபத்தமா? அல்லது இரண்டுமா. 

இந்த நிச்சயமற்ற தன்மை கொரோனாவிற்கு பின்னர் தான் வந்துள்ளது என்று என்னை நம்பவைப்பது புள்ளிவிவரங்களா? உடல்நிலையா? தலைப்புச் செய்திகளா? மெஸெஞ்செர்களா? அரசியல் தலைவர்களா? மருத்துவர்களா? தொழில்முனைவோர்களா? மதமா?

அகிலா ப்ளூ கிராஸில் சிலரைத் தெரிந்து வைத்துள்ளார். கோவிட்காலம் முடிந்ததும் ரவுடியைப் பார்க்கச்செல்லலாம் என்கிற நிம்மதியுடன் அன்று உறங்கியிருப்பேன். இரண்டு நாள் கழித்து பால் வாங்கச் செல்கையில் முகம் முழுக்க காயங்களோடு ஒன்றும் அந்த அளவிற்கு காயமில்லாத மற்றொன்றுமாக இரண்டு குட்டிகள் உயிர் பிழைத்து விளையாண்டு கொண்டிருந்ததைக் கண்டேன். கடைக்குச் சென்று பிஸ்கட் வாங்கிப் போடுகையில் ஒரு கருப்பு குட்டி ரவுடியைப் போன்றே ரெண்டு கால்களையும் தூக்கி நிற்க முயன்றான். 

என் காதுக்குள் யாரோ சோழியை உருட்டும் சத்தம் பலமாகக் கேட்டது. இளங்கோவுடன் தேனீர் அருந்த செல்லும் முன் இந்த செய்தியைப் பகிர வேண்டும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக