திங்கள், 21 ஜனவரி, 2013

பஜ்ஜி -சொஜ்ஜி - 12/ Life After Death


   ஒரு மாமனிதரின் நினைவுப் பதிவு

கரூரிலிருந்து விசுவானதன் சார் என்னை இன்று அழைக்கும் பொழுது நானும் அந்த செய்தியை அறிந்திருந்தேன். அந்த இரவு என் நினைவில் வந்தது.

அவரை சந்திக்க ஏற்பாடு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை, அப்பொழுது அவர் தன் ஆன்மீக பயணத்தில் கரூர் வந்திருந்தார். வாழ்க்கையின் இறுதிப் பயணமாக அவர் ஆன்மீகத் தேடுதலில் இருந்த காலம் அது. எங்கள் கண்களின் தேங்கியிருந்த கற்பனைகள் யாவும், கனவுகள் ஆகவும் பின்னர் எண்ணங்களாகவும் வலிமை கொடுத்தவர் அவர். அவரைப் பார்ப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பம் அது விசு சார் தான் ஏற்படுத்திக் கொடுத்தார். அது 2005, கல்லூரியில் நான் இறுதியாண்டு, கிட்டதட்ட பத்து பேருக்காவது அவர் எழுதிய “எண்ணங்கள்ஐ வாங்கி கொடுத்திருப்பேன். நாங்கள் எதிர்பார்த்தது எல்லாம் அவரைப் பார்க்க வேண்டும் என்பது தான்.

நான், என் சீனியர் ஜெகன், எனது நண்பர் நந்தகுமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்றார் விசு சார். தளர்வான உடையில், மெல்லிய உடல் கொண்ட அந்த மாமனிதர் எங்களை புன்னகைத்தார். “என்னால் எதுவும் பேச முடியாது, எனக்கு உடல்நிலை சரியில்லை, அது போல நான் இப்போழுது பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஆன்மீக நிமித்தம் வந்துள்ளேன்என்று தன் அறைக்கு செல்ல விரும்பினார். அவரை சந்தித்ததே பெரிய விஷயம் தான், அப்பொழுது என் நண்பர் ஒரு கேள்வியை அவருக்கு கேட்டார், “எண்ணங்களின் வலிமையை பற்றி எத்தனையோ பாமரர்களும் இன்று உங்கள் எழுத்துகளைப் பார்த்து வாழ்ந்து வருகின்றனர்,எப்படி எண்ணங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று ஆரம்பித்த நீங்கள் ஆத்ம தரிசனம் என்று முடிக்கிறீர்கள் ??(அது அவருடைய கடைசி புத்தகம்) என்று கேள்வியை முன்வைக்க. அவர் எங்களோடு பேச தன் அறைக்கு அழைத்தார்.

மீப்பெரும் வாழ்வின் போராட்டங்களின் இறுதியில், எல்லா வெற்றிக்கும், எல்லா தோல்விக்கும் பின்னர் தன்னையறிதலில் செலவிடும் நேரம் தான் முழுமையான வாழ்ந்த கனங்களாக இருக்கும் என்பது அவரது வாழ்வைப் பற்றிய அவரது உரையாடலில் தெரிந்தது. எங்களைப் போன்ற ஒரு இளைஞனாக அவர் கனவில் இருந்து, இமயமலை பற்றிய அவர் சிந்தனை வரை சில வார்த்தைகள் கேட்டோம். வெறும் ஜேம்ஸ் ஆலனின் மொழி பெயர்ப்பாக மட்டுமே அவர் வார்த்தைகள் இருக்கவில்லை, இந்தியச் சூழலில் அரசியல், மதம், பிரிவு, கலாச்சரம் என எல்லாவற்றையும் தாண்டியும் அவர் பல மனிதர்களின் சுயமுன்னேற்ற தூண்டுகோலாய் இருக்கிறார். அந்த காலங்களில் அவர் “முடியும்(possible)” என்கிற வார்த்தையை எவ்வளவு அழுத்தமாக அரசியல், சாதி, சமய பாகுபாடின்றி இளைஞர்களின் மனதில் பதித்திருந்தார், கரூரை ஒட்டிய, நாமக்கல்லை ஒட்டிய சில கிராமங்களில் அவர் பெயரில் கல்வி நிறுவனங்களும், அரசியல் அமைப்பு கலைந்த பின்னும் செயல் பட்டு வரும் எண்ணற்ற இளைஞர் நற்பணி மன்றங்கள், கல்வி நிற்வனங்கள், தொழிற்சாலைகள் என பெரிய பட்டியல் ஒன்று நம் நாட்டின் சுதந்திரத்திற்கு பின் வாழ்ந்த நல்ல மனிதர்களின் பட்டியலில் இருக்கிறது !!!

இன்று நாம் சாப்பிடும் பீட்ஸாவில் அவர் ஏற்படுத்திய மாற்றம் அதை உலக அளவில் பிரபலமாக்கியது என்ற ஆச்சரியமும், கரூர் போன்ற தொழில் நகரங்களில் அவர் எழுத்தால் தூண்டப்பட்டு வாழ்வில் சாதித்த பலரின் பிம்பங்கள் வந்து போயின,  “உன்னால் முடியும் தம்பி என்ற பாடல் மெல்லிதாய் மனதில் ஒலித்தது. பாரதிக்குப் பின் நதி நீர் இணைப்பின் சாத்தியத்தை எடுத்துச் சொல்லி சலித்த தேய்ந்து போன உடல், தேயாத சொற்கள் எங்களுக்கும் சமூகத்தின் பாதையில் ஒரு முள்ளையாவது அகற்றும் சிந்தனையை விதைத்தது. அதற்கு சுயமுன்னேற்றம் என்ற ஒன்று மிக அவசியம் என வலியுறுத்தியது. அவர் அமெரிக்காவின் தெருக்களில் நடந்து சென்று மருந்து விற்றதும் பின்னர் அவரது மருந்து நிறுவனம் நாஸ்டக்கில் லிஸ்டிங் ஆனதும் என , சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலே பேசிய ஞாபகம்.. அன்று, அவர் சில விளக்குகளின் திரிகளை அன்று தூண்டியது ஞாபகம் இருக்கிறது, பிரகாசிப்பது விளக்கின் கைகளில்......

#இன்று அந்த மனிதர் உலக வாழ்க்கையை விடுத்துவிட்டார், ஆத்ம தரிசனத்திலிருந்து சில பக்கங்களை புரட்ட விரும்புகிறேன்.

#Life After Death அவரைப் பின்பற்றும் இன்னும் எத்தனையோ மனிதர்களின் நம்பிக்கையில், நல்லெண்ணங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.



3 கருத்துகள்: