ஞாயிறு, 27 ஜனவரி, 2013

என் அமைதி எங்கே இருக்கிறது ?

சும்மா ஒரு  கதை சொல்லலாமேன்னு தான் இந்தப் பதிவு : 

உலக வாழ்வை வெறுத்த சன்னியாசி ஒருவர் மக்களோடு இணைந்து வாழ்வதை வெறுத்தார்.
அவர் கிட்டதட்ட இருபது வருடங்களாக இமாலயத்தில் வசித்து வந்தார். அந்த வருடங்களில் அவர் அகங்காரம் அறவே அழிந்து, முற்றிலும் அமைதியடைந்து விட்டதாகத் தோன்றியது. பின்பு அவரது சீடர்கள் ஒருமுறை அவரிடம், “அடிவாரத்தில் ஒரு விழா நடக்கிறது, தாங்கள் வந்து அருளாசி தாருங்கள்” என்று விண்ணப்பம் வைக்க, அவரும் ஒப்புக் கொண்டார்.

கீழே வந்து அவர் நடத்திய யாகத்திற்கு ஏராளமான மக்கள் கூட்டம் வந்திருந்தது, அவரது சாந்தமான முகம் எல்லா மக்களுக்கும் ஒரு நிம்மதியையும், நம்பிக்கையையும் அளித்தது. ஆனால் அது அந்த யாகத்தின் போது ஒருவன் தும்மல் போடும் வரையில் தான்.

அவர் நடத்திய யாகத்தில் ஒருவன் தும்மல் போட்டு விட்டான் என்றதும் அவ்வளவு தான், அந்த சாதுவிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லாமல் போனது. யாகக் குண்டங்கள் கவிழ்ந்தன, சீடர்களுக்கு அடி விழுந்தது. கோபத்தில் மாலைகளைப் பிய்த்து எறிந்தார், பூஜை சாமான்களை எட்டி உதைத்தார், கமண்டலத்தைத் தூற எறிந்தார். மக்களைப் பார்த்து சாபமிட்டார்.மக்கள் யாரோ அசுரன் என்று பயந்து அங்கிருந்து ஓடினர்.

 பின்னர் தன் யாகம் கலைந்தது, அமைதி குலைந்தது என்று தோன்றியதும் மனம் வெதும்பினார்.தன் சீடர்களை வெளியேற்றினார்..தன் கோபம் அடங்கவில்லை, மனம் அமைதியடையவில்லை, தன்னையே நிந்தித்தார். கடைசியாக, தன்னந்தனியாக காட்டினுள்  நடந்து சென்று தன் பழைய குருநாதரைக் கண்டார்.

தன் குருவை வணங்கி விட்டு, அவரிடம்,“குருவே!! இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமாயினும் தனியாக தவமிருக்கிறேன், எனக்கு அந்த உன்னதமான அமைதி மீண்டும் கிடைக்கவேண்டும், மக்களிடம் இருந்து விலகியிருக்க இமயத்தை விட உயர்ந்த மலைப் பகுதி எங்கிருக்கிறது என்று காட்டுங்கள்”


(முன்பெல்லாம் இப்படிப்பட்ட சின்ன சின்ன கதைகள் சிறுவர் மலர் போன்ற இதழ்களில் நிறைய வரும், ஆனால் சமீபத்தில் அந்த தரம் எல்லாம் காணாமல் போய்விட்டது. அதனால் தான் இந்தக் கதை, இது எனக்காக எழுதப் பட்டது)



- ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக