ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 4வானம்

ஜீவ கரிகாலன்


போராட்டத்தின் ஆறாவது நாள் அன்று, நாடே திரும்பிப்பார்த்துக் கொண்டிருக்கும் போராட்டம். ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் அந்த ஒழுங்கு குலைவதற்கான கணத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தது. அவர்கள் நால்வரும் அன்றைக்கு அந்த கூட்டத்தின் மையத்தில் சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்தனர். மூவர் மட்டுமே வந்திருந்தனர், இன்னுமொருவனுக்காகக் காத்துக்கொண்டிருந்த பொழுதில். மற்ற இருவரையும் கடற்கரையின் படகை ஒட்டியிருக்கும் ஒரு மூலைக்கு அழைத்துச்சென்றவன் அக்கறை மிகுந்த போராளி, அவனுக்குப் போராட்டமும் கடலும் மிகவும் பரிச்சயம். அந்தப் போராட்டத்தில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டு வந்த மற்றொரு போராளி வெளியே சென்றிருந்தான், அவனுக்குப் போராட்டம் பரிச்சயமானது, கடல் மிக்கப் பழையது. மற்ற இருவரில் ஒருவனுக்கு போராட்டம் புதுசு, மற்றவனுக்கு போராட்டம், கடல் இரண்டுமே புதுசு.

படகிற்குக் கீழே புதியவன் கொண்டுவந்திருந்த பாதாம் பருப்புகளை கடல்காற்றின் உப்பில் தோய்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

“இத்தனை லட்சம் மக்கள் எப்படி சில நாட்களில். தெருவிற்குள் வந்தார்கள் அவர்களை எது சாத்தியப்படுத்தியது என நினைக்கிறீர்கள்” என்றான். அவனுக்குத் தெரியும் அந்த லட்சோப லட்சங்களில் அரசியல் பற்றி அறவே தெரியாதவர்களில் மற்ற இருவரும் இருக்கின்றனர் என்று. இருந்தாலும் அந்த முக்கியஸ்தனுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வரை ஏதாவது பேசினால் தேவலை.

“மாரிஜுவனா”

“என்னது”

“கஞ்சா”

“எப்படித் தெரியும்”

“இங்க உக்காந்துகிட்டு நெருப்பில் மயிரைக் கருக்கவா செய்வான். போராட்டத்தில் ஒலிக்கும் இசை, ஆராவரம், விளக்கு, ஆர்பரிக்கும் கடல், நிலவொளி இதை விட என்ன வேண்டும் அவனுக்கு”

“கடல்ல கால நனச்சதில்லன்னு சொல்ற, கஞ்சாவ பத்தி பேசுற”

”சிவோகம்….”

அவனுக்கு பதில்சொல்ல ஆரம்பித்தான். புதிய போராளி. “பாப்புலர் ஆர்டோடத் தன்மை இந்த ஸ்டேட்ல இனிமே மாறப்போகுது. இதுவரைக்கும் ஆட்டமும் பாட்டமும் கேளிக்கையும் நமக்குப் பிரதானமா இருந்தது. ஆனா கொண்டாட்டங்களுக்குப் பின்னே இனி இத மாதிரியான ஒரு காரணம் இல்லாமல் போனா அது சீக்கிரமே நீர்த்துப்போகும். வெகுஜனப்படைப்புகள் என்று எந்த வடிவத்திலும் மக்களிடம் இருந்து துண்டித்து இருக்கும் படைப்புகள் எத்தனை எண்டெர்டெயின்மெண்ட் வேல்யூவோட இருந்தாலும் செல்லுபடியாகாது”

 “ஆமா தினமும் ஒருத்தன் லைட்டஹவுஸ்ல ஆரம்பிச்சு. அண்ணா சமாதிவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா பிரம்மாண்டமான பட்டம் விட்டு மொத்த மக்களையும் கவனிக்க வச்சானே. அதமாதிரி எல்லா கலைஞர்களுக்கும் தங்கள் வாழ்க்கையில் கிடைக்காத அங்கீகாரம்ல அதல்லாம் கவனிச்சிங்களா ”

 “ஆனால் கவனிச்சிங்களா, போராட்டம் முடிவ நோக்கிப்போகுதோன்னு தோனுது. நம்மளோட இப்போ நிறைய மஃபிடி மாஃபியா நுழைஞ்சுட்டாங்க. லத்திசார்ஜ் எப்பவேண்ணாலும் நடக்கலாம்”
அதுவரைப் பேசாமலிருந்தவன். பேசத்தொடங்கினான்.

“நம்மள யார் யார் எப்படிலாம் கவனிக்கிறாங்கன்னு பேசுறிங்களே, அவுங்களையும் சேர்த்து நாமயெல்லாருமே கவனிக்கப்படுறோம்னு உங்களுக்குத் தெரியுதா?”

போராட்டத்துக்கும் புதியவன், கடலுக்கும் புதியவன், தன்னை வானத்திற்குப் பழையவன் என்று சொன்னான்.

“வானத்திற்குக் கீழ எல்லாமே தான பழசு” நக்கலாகச் சிரித்தான் மற்றவன்

“வானத்துக்குக் கீழ் எல்லாமே புதுசு. ஒங்களோட நேரங்கள வச்சு பார்த்தாலும் சரி. நேரத்தை அதன் ஆரம்பச்சுழியத்துல வச்சுப்பார்த்தாலும் சரி. வானத்துக்கான இயல்பே அது மாறிக்கிட்டே இருக்கறது தான். இந்தப் போராட்டத்தை மாநில அளவில, தேசிய அளவில, சரவதேச அளவுலன்னு பார்த்தா அதன் முக்கியத்துவம் எப்படி இருக்கும்”

“நீங்க போராட்டத்த அவமதிக்கிறிய… உங்க கவித்துவத்துவமெல்லாம் மக்கட்பிரச்சினைய தவறாத்தான் அணுகுது”

“நான் அவமதிக்கல. கவித்துவம் அனுகுறது கெடையாது. புரிஞ்சுக்கறது. புரிஞ்சுக்க கிளர்ச்சுயூட்றது அவ்ளோ தான். இந்தக் கேள்விக்கு உங்ககிட்ட பதிலிருக்கா?”

“முக்கியமான போராட்டமாத்தான் இருக்கும்”

“எந்த மாதிரியான முக்கியமாக? அடுக்குகளாக வடிவரீதியில் சொல்ல முடியுமா?”

“சரி நீங்க ஆசப்பட்டது இதுதான. ஒப்புக்குறேன். ஸ்டேட்க்கு முக்கியமானது, நாட்டோட பார்வைல 26ல ஒரு பங்கு, உலகத்தோட பார்வையில் சில நூத்துல ஒரு பங்கு இல்ல அத விட அதிகமா”
இடையில் இன்னொருத்தன் தலையிட்டுப் பேசினான்.

“ஏன் இப்படிக் கூட சொல்லலாமே. மாநிலத்தின் தலையாயப் பிரச்சனை , உலத்துல நூத்துக்கு ஒன்னுல பங்கு, இந்த தேசத்துல ஆயிரத்துல ஒரு பங்கு”

மூவரும் சிரித்தனர். படகில் இருந்தும் சிர்ப்புச்சத்தம் கேட்டது. பின்னர் நால்வரும் சேர்ந்து சிரித்தார்கள்.

“அப்போ பிரபஞ்சத்துக்கு”

“என்ன இது அபத்தமாக கேக்குறிங்க”

“சரி பிரபஞ்சம் வேண்டாம். அது வடமொழிச்சொல்லா இருக்கும். அப்போ வானத்துக்கு இது எத்தனை முக்கியத்துவமானது.”

“இப்பவும் அபத்தமாத்தான் தெரியுது. ஏதாவது தோணுதுன்னா சொல்லுங்க. இதுல விளையாடாதிங்க. போராட்டம் பத்தி தெரியலன்னா. தெரிஞ்சுக்கோங்க அவ்ளோ தான். சும்மா ஆன்மீகத்தோட பேசி கொச்சப்படுத்தாதிங்க. நாங்களும் தேவாரம், திருவாசகம், பைபிள், குரான் வாசிச்சவங்க”

“இவ்ளோ கோபப்பட அவசியமில்ல. நான் என் சின்ன வயசுல இருந்து வானத்தைப் பாத்துக்கிட்டு தான் இருக்கன். அந்த அனுபவத்துல சொல்றேன்” மற்ற இருவரும் சட்டெனச் சிரித்தார்கள். மேற்குத் திசையில் கை நீட்டினான் விளக்குக் கம்பம் தெரிந்தது. சற்று மேல கையைத் தூக்கினான். ஒரு விமானம் கடந்து சென்றது.

“ஏரோபிளேனா?”

கை நீட்டியபடியே இருந்தான்.

”அது என்ன செவ்வாய் கிரகம் தான”

”அப்போ அது இன்னொரு நட்சத்திரம். மின்னாமல் இருக்குதே அது என்ன”
“அது தான் செவ்வாயா? செவ்வாய் மட்டும் தான் மின்னாதுன்னு சொன்னங்க. அப்போ பெருசா தெரியுறது தான் செவ்வாயா இருக்கும். இது இல்ல”

சிரித்தான் “நான் சொல்லுறன் அது தான் செவ்வாய். இவ்ளோ பெருசா நட்சத்திரம் பாத்துக்கிட்டு இருக்கிங்களா என்ன?”

“அப்போ என்ன அதை சொல்லுங்க நீங்க?”

“நாம கண்காணிக்கப்பட்டுக்கிட்டு இருக்கோம்.” மற்றவர்கள் திருதிருவென..
“வானம் இயல்பா இல்ல”

“ஆமா மேகமே இல்லை” சொல்லிவிட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

“ பத்து நிமிஷத்துல பதினேழு விமானம் நம்மள க்ராஸ் பண்ணிருக்கு.. நான் வானத்தை மட்டுந்தான் பாத்துக்கிட்டு இருக்கேன். வானம் இயல்பா இல்லை.”

இருவரும் பகடி செய்ய ஆரம்பித்தனர். நான்காமவன் போனில் அழைத்தான். “நல்ல வேளை போன் பண்ணினான். நம்ம கூட்டத்தை ஆரம்பிச்சுடுவோம்.” என்று எழுந்தார்கள்.

 “ நம்புறது நம்பாதது பிரச்சனையில்லை. நீங்களும் நானும் போராட்டத்திலும் இருக்கிறோம். அது அவ்வளவுதான். எல்லோருக்கும் பங்கிருக்கு”

அவன் மட்டும் எழுந்திருக்கவேயில்லை. அவர்களுக்கு கடுப்பாக இருந்துச்சு. சலிப்போடு அவனிடம் கேட்டார்கள் “சரி இந்தப் போராட்டத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்.”

“சரி நாம தான் அவுங்கள கவனிச்சுட்டமே. அவுங்க உஷாராயிருக்க மாட்டாங்க”

இரண்டாவது கேள்வியை மனதால் பொசுக்கிவிட்டு – முதலாம் கேள்விக்கு பதில் சொன்னான்.

“நீங்க சொன்னிங்களே அடுக்கு. ஒரு மாநிலம், நாடு, உலகம் என்குற பிரமிட் முக்கியத்துவம். அந்த பேட்டர்ன் அடிப்படையிலயே தப்பு. அதனால தான் வானத்தக் காமிச்சேன்”

“அப்படின்னா. வானத்துக்கு கீழ இருக்கற ஏதோ ஒரு புள்ளியின், புள்ளி தான் சூரிய மண்டலம். அந்த புள்ளியின் புள்ளியில் தான் நாம் வசிக்கும் உலகம். அதுல நீங்களும் நானுமே ஒவ்வொரு புள்ளி தான்”

“அதனால”

“இங்கே முக்கியத்துவம், முக்கியத்துவம் அற்றது என்பதே கிடையாது. அது தான் பேட்டர்ன். இது மறைக்கும் அளவுக்கு முக்கியத்துவம், மறக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் அல்லது முக்கியத்துவமற்ற எல்லாவற்றையும் போலவே இது முக்கியமானது. அதை நிரூபிக்கத்தான் சில நாட்களாக நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் அதனைப் பற்றி உங்களுக்குக் கட்டினேன். என்னைப் பைத்தியம்னே நெனச்சுக்கோங்க.”
மேலும்

“வானம் அது ஒரு எல்லையற்ற ஆனந்தத்த தரும். அதப்பார்க்க கத்துக்கிட்ட வீரியம்குன்றா புணர்ச்சியப்போல. நம்மை அச்சுருத்துற எல்லாத்தையும் பாத்து சிரிச்சிக்கிட்டே போகலாம். அங்க இருந்து தான் எழுதறேன். இதுல என் எழுத்த அல்லது பொதுவா எழுத்தையே கவிதையையே தரித்திரமா நெனச்சுப் பேசுறவுங்க. நான் என் கவிதைல வைக்காம உதாசீனப்படுத்துற புள்ளியா என்னை விட்டுப் போறவுங்க”

“எப்படியோ நீங்க நம்ம போராட்டத்துக்கு ஆதரவுங்கறது மட்டும் புரியுதுங்க” என்றான். அவன் பார்வையில் நேர்மை இருந்தது. மூவரும் சிரித்தார்கள். அதற்கு மேல் யாரும் பேசிக்கொள்ளவில்லை. சத்தமில்லாமல் கூட்டத்தின் மையத்திற்கே செல்ல ஆரம்பித்தனர்.

படகில் இருந்தவன் சற்றே எழுந்தமர்ந்து அம்மூவர்களையும் கவனித்தான். பின்னர் அந்த நட்சத்திரத்தைத் தேடினான்.

விளக்கிற்கு மேலே மிகப்பிரகாஷமாக பழுக்கச் சிவந்த பால்ரஸ் குண்டென ஒளிர்ந்துகொண்டிருந்த அந்த நட்சத்திரம். சட்டெனக் கண் சிமிட்டி கொஞ்சம் நகர்ந்துக் கொண்டது..

அதிர்ச்சியுற்றுத் தடுமாறினான்.

ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக