வியாழன், 25 அக்டோபர், 2012

குமாரின் குடும்பச் சித்திரங்கள் (மினி தொடர்கதை)
அந்தக் காம்பவுண்ட் வீட்டில் - குமாரின் பக்கத்து போர்ஷனில் குடியிருக்கும் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் கல்யாணம் ஆகாத பிரம்மசாரி, தாடியும், ருத்திராட்சமுமாய் இருக்கும் அவர் எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு பேசுவார். அந்த தெருவில் இருந்த எல்லா இளசுகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டதால், கிராமத்துப் பெண்கள் புரளி பேச ஆட்களே இல்லாமல், அந்த ஆசிரியரைத் தான் இரண்டு, மூன்று மாதமாக பாடுபொருளாக்கியுள்ளனர். அந்த கூட்டத்தின் தலைவியே குமாரின் மனைவி கமலா தான்.

இரண்டு வாரம் முன்பு எதிர்த்த வீட்டு லெட்சுமியக்கா, வயிறு சரியில்லாமல் அதிகாலை மூனுமணிக்கும் முன்பே வெளியே கிளம்பும்போது தான், குமார் தங்கியிருக்கும் காம்பவுண்டிற்கு வெளியே உள்ள மாட்டுக் கொட்டகை வழியே யாரோ போவது போல இருந்ததைப் பார்த்துள்ளார், அதனால் வந்த சந்தேகத்தை ஊர்ஜீதப் படுத்த அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று மறைந்திருந்து பார்க்கும் போது தான் அப்படிப் போவது ஒரு பெண் என்றுத் தெரிய வர, அது வாத்தியாரைப் பார்க்கத் தான் ரகசியமாக அந்த நேரத்தில் பார்க்க வருகிறது என்று தீர்மானித்தனர். வாத்தியாரைப் பற்றிய புரளிக் கதையில் மேலும் ஒரு அத்தியாயம் உருவாகியது. அவர்களை எப்படியாவது கைய்யும் களவுமாய் பிடிக்க ஒரு ஐந்தாறு பெண்கள் கூடி திட்டம் வகுத்தனர். அதன் படி, ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அந்தத் தெருவின் வீரமான ஆண்மகன்  குமார், அடுத்த நாள் அந்தப் பெண் உள்ளே நுழைந்த சற்ற நேரத்தில் இவனும் பின் தொடர்ந்து சென்று வத்தியாரின் ரகசியத்தை வெளியே அம்பலப் படுத்துவதென்று.

அன்றிரவு குமாருக்கும் மட்டுமல்லாது, அந்த ஐந்தாறுப் பெண்களுக்குமே தூக்கம் வரவில்லை, குறிப்பாக குமாரின் மனைவி கமலாவிற்கு தான் அதிக சந்தோசம், தன் கண்வன் மூலம் தனது மதிப்பு கூடி விடும். அதுமட்டுமில்லாமல், அந்தப் பெண்ணும் யாரென்றும் தெரிந்துவிடும். குமார் இரண்டரைக்கெல்லாம் எழுந்தாயிவிட்டது ஒரு ஸ்வெட்டரும், குரங்குக் குல்லாவும், கையில் ஒரு டார்ச் லைட்டும் சகிதமாய் அவன் காத்திருக்க மாட்டுக் கொட்டகை கதவு கிறீச்சிடும் ஓசை கேட்டது. அவன் வேக, வேகமாய் வீட்டை விட்டுக் கிளம்பினான். காம்பவுண்ட் கேட்டைத் தாண்டி, காம்பவுண்டிற்கு பக்கவாட்டில் உள்ள புங்கை மரத்தோடு கட்டி வைத்துள்ள தகரக் கதவை சப்தமில்லாமல் திறந்து மாட்டுக் கொட்டகை வழியாக நுழைந்து அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பது தான் திட்டம்.

பயத்தில் அந்த இளம்பனிக்காற்றிலும் அவனுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. குமார், கொஞ்சம் குனிந்த வாறே அந்தக் கதவைத் தள்ளினான், அவ்வாறு குனிந்து கொண்டே தள்ளும் போது டார்ச் லைட்டை தன் குரங்குக் குல்லாவில் சொறுகியிருந்தான். அதுவரை மெல்லத் திறந்துக் கொண்டிருந்த கதவு திடுமென இரைச்சலுடன் வேகமாக திறக்கவும், அவன் எதிரே அந்தப் பெண் உறுவம் கம்பீரமாய் நிற்கவும் சரியாய் இருந்தது. தீடிரென்று தன் கண் முன்னே வந்த அந்த பெண் உருவத்தைப் பார்க்க தலையினைத் தூக்க, அதில் சொருகியிருந்த டார்ச் வெளிச்சத்தில் அந்த டைலர் பொண்டாட்டி சாந்தியின் தெத்துப் பற்கள் அகோரமாய்த் தெரிந்தது. குரங்குக் குல்லாவோடு வந்த குமாரும் எதிர்பாராமல் அலற அவளைப் பார்த்த சாந்தியும் ஓவென்று அலறினாள். அடுத்த நொடி எழும்பிய “பளார், பளார் என்ற சப்தம் எல்லா திட்டத்தையும் தவிடுபொடி ஆக்கிட. இந்த எதிர்பாராத திருப்பம் அவர்கள் புரளிக்கு ஒரு முற்றுபுள்ளியை வைத்தது. பின்னர், குமார் இரண்டு நாள் குளிர் ஜுரம் வந்து அவதிப்பட்ட கதையும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அன்று முதல் சாணித் திருடி சாந்தி என்று இப்போது அந்த தெருவில் உள்ள யாவரும் அவளைக் கிண்டலடித்தாலும், சாணியைத் திருடியதால் பல பெண்கள் அவளை வசவு பாடி தங்கள் வெறியைத் தீர்த்துக் கொண்டாலும், கமலாவைத் தவிர்த்த மற்ற பெண்களின் கூட்டத்தில்சாணிக் கையால அடி வாங்குனவன் பொண்டாட்டிஎன்று அவளை அழைப்பது கமலாவிற்கு இன்னும் தெரியவில்லை.

பாவம், நம் குமார் - ஒரு நாள் அந்த ஆசிரியரோடு தண்ணியடிக்கும் வாய்ப்பு கிட்டிய போது அழுதுக் கொண்டே இந்த விசயத்தைப் பற்றி அவரிடம் சொன்னான். அந்த ஆசிரியர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், அவனைப் ஆறுதல் படுத்த சில வார்த்தைகள் சொன்னார் , ஆனல் மனதிற்குள்  “அப்பாடா!! தப்பித்தேன்!! நம் திட்டம் பலித்தது என்று தன் தாடியை தடவிக் கொண்டே நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஒன்றும் அறியாத குமார் வாத்தியாரிடம் மன்னிப்பு கேட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக