ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ANTIDISESTABLISHMENTARIANISM (பஜ்ஜி சொஜ்ஜி -3)



ANTIDISESTABLISHMENTARIANISM

          எனது கல்லூரிக் காலத்தில், இரண்டாம் ஆண்டின் ஒரு நாள், எங்களது வேப்பங்காய் பாட வேளையான ஆங்கில வகுப்பில், எங்களை எப்பொழுதும் ஏளனமாகப் பார்க்கும் ஒரு ஆங்கிலப் பெண் விரிவுரையாளர், ஆங்கிலத்தின் மிக நீளமான இந்த வார்த்தையை எழுதி எல்லோரையும் வாசிக்கச் சொல்லி அங்கலாய்த்தார். இதை வாசித்து தற்கொலை முயற்சி பண்ணத் துணிவற்று, நாங்கள் பேசாமலேயே நின்றபடி இருந்தோம்.  வழக்கம் போல, இதை சாக்காக வைத்துக் கொண்டு சயின்ஸ் ஸ்டூடண்ட்ஸ் தான் உயர்ந்தவர்கள், ஆர்ட்ஸ் என்பதே வெத்து வேட்டுகள் என்று எங்களை வெறுப்பேற்றினார். இவர்கள் போன்ற ஆசிரியர்கள் தான் இது போன்ற ஒப்பிடுதல் மூலம் மேலும் ஒரு பிரிவினையை இந்த சமூகத்தில் உண்டாக்குகிறார்கள், அது கல்லூரியோடு நின்று விடுவதில்லை. கலை அறிவியல் கல்லூரிகளில் எல்லாம் தமிழ் இலக்கியம், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்கு இது போன்ற அனுபவங்கள் சாதாரணம்.

இதில் அந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்கும் போது அந்த விரிவுரையாளர் திணறியது வேறு கதை.

     இதே போன்ற ஒரு வேறுபாட்டை ஒரு நண்பன் தான் வேலை பார்க்கும் வங்கியில் அனுபவிப்பதாகச் சொல்கிறான். வங்கி வேலை என்பதால் கிளெரிகல் வேலைகளில் கூட எங்களுடன் போட்டிக்கு வந்து பணியில் அமரும் பொறியியல் படிப்பு படித்தவர்கள் ஒரு அணி சேர்ந்து அரசியல் செய்கின்றனர் என்று நொந்தான். பொறியியல் படிப்பிற்கும் வங்கி குமாஸ்தா வேலைக்கும் என்னடா சம்பந்தம்?, என்று உன்னுடன் அவர்கள் வந்து அமர்ந்தார்களோ? அன்றிலிருந்து They are no more Engineers அதை நீ பொருட்படுத்தாதே!! என்று சொன்னேன். கரூரில் எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார், அவர் அந்த நகரத்தின் அரசு மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர். பங்கு வர்த்தகத்தில் இருந்த ஆர்வம் காரணமாக அவர்  முழுவதுமாக பணியை விட்டு வர்த்தகத்தில் ஈடுபட, தன் பெயருக்கு முன்னால் போடும் “DR” எனும் பட்டத்தை துறந்து விட்டார். பெயருக்குப் பின்னால் ஜாதியையே தூக்கி எறிந்தாயிற்று, உபயோகப்படா(இருந்தால்) படிப்ப மட்டும் பெயரோடு சேர்த்து வைத்து என்னதான் சாதித்திட ?

வங்கி வேலை கூட பரவாயில்லை பத்தாம் வகுப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட கிராம நிர்வாக அதிகாரித் தேர்விற்கு ஆயிரக் கணக்கில் பொறியியல் படித்த இளைஞர்கள் எழுதும் நிலையை பார்க்கும் போது நம் கல்வித் தரத்தை என்ன்வென்று சொல்ல?

***********************************************************************

திரையுலகில் காணாமல் போன நடிகர் வடிவேலுவைப் பற்றிய புலம்பல்கள் இப்போது ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பிக்க, நாமும் கொஞ்சம் சீரியஸா எதாவது அவரைப் பற்றி எழுதனும் என்கிற ஆசை சில நண்பர்களோடு நடந்த உறையாடல்களில் முகிழ்ந்தது. வடிவேலுவின் பஞ்ச் வசனங்கள் சபைக்குறிப்பிற்க்கேற்ற வார்த்தைகளாகவும், மேலாண்மை யுக்திகளாகவும் பல நிறுவனங்களில் இன்று இருப்பதைக் காணலாம். அதில் ஒருவித மன இறுக்கங்கள் தளர்வதற்கும், அடுத்த வேலைக்கு நம்மை உடனேயே இட்டுச் செல்லவும் உதவுகிறது என்பது மிகையல்ல.

ஆணியப் புடுங்க வேண்டாம்எனும் வசனம் பல கார்ப்பரேட் மீட்டிங்களில் ஒலிப்பதைப் பார்க்கலாம். குறிப்பிட்ட ஒரு பணியை, செயலைத் தவிர்ப்பதற்க்கும், கைவிடுவதற்க்கும் தேவைப்படும் நீண்டதொரு காரணத்திற்கு/விளக்கத்திற்கு மாற்றாக அந்த மூன்று சொற்களைப் பயன்படுத்த, பல நேரங்களில் சுமூகமான விளைவுகளை மட்டுமே தந்திருக்கும். இது போலவே சில உயர்/மேலதிகாரிகளிடம் வாங்கும் வசவை சக ஊழியனோடு பகிர்ந்து கொள்ள “why blood, same blood என்கிற வசனத்திலோ, சேல்ஸ் டார்கெட்டிற்காக தன்னைக் கண்டபடி திட்டும் மேனஜர், அதற்கு முந்தைய நாள் தன்னோடு சேர்ந்து உற்சாக பானம் அருந்தியதை நினைக்கும் போது “அது வேற வாய்!என்று தன் மேலாளரை நினைக்கவும், “ரைட்டு விடுஎன்று தன் மீது விழும் அவமானங்களைத் துடைத்துவிட்டு அடுத்த மாத டார்கெட்டிற்கு நகர்வதும் இன்று தமிழ் கூறும் நிறுவன உலகில் சாதாரணமே. மிக முக்கியமாக எப்படிப்பட்ட இழப்போ அல்லது நஷ்டமோ நம் வியாபரத்திலோ, பணியிலோ சந்திக்க நேரிட்டாலும் “அய்யோ வடை போச்சே!” என்று சொல்லும் பொழுது அந்தக் கவலைகள் நீங்கி சாந்தி கிட்டுவதும் வழக்கம். இது போல பலரிடத்தில் இவரது மேனரிசங்கள் சோக நிலையில், காதல் பார்வையில், ஏமாற்ற நிலையில் பிரதி எடுக்கப் படுகிறது.

  மேலே சொன்ன இரு பத்தியில் நான் சொன்னவைகளோடு உடன்பட்டால் மட்டும் கீழே தரப்பட்ட இரண்டு விசயங்களைப் படியுங்கள், இல்லையெனில் இந்த பத்தியை விடுத்து அடுத்த பத்திக்கு செல்லலாம். இதன் படி சொல்வதெனில்,

1.தமிழ் சினிமா ரசிகர்களாகிய நாம் வடிவேலுவை எவ்வளவு தூரம் இழந்திருக்கிறோம்?.
2.வடிவேலுவின் வசனங்கள் நம் பணிச்சூழலில் உதவுவது உண்மை தான் என்றால், இத்தனை அறிஞர்கள், யோகிகள், மேதைகள் வாழ்ந்த நாட்டில் உருப்படியாக எந்த ஒரு முன்னேற்ற சிந்தனையும் நாம் கற்றுக் கொள்ளவில்லை, குறிப்பாக சுயமுன்னேற்ற, மேனேஜ்மெண்ட் புத்தகங்களால் நாம் வாழும் பணிச்சூழலுக்கு நமக்கு பிரயோஜனம் என்று  எதுவும் பெரிதாய் இல்லை.
            
               “அப்படி சொல்லுடா என் கன்று
****************************************************************************

கவிஞர் யவனிகா ஸ்ரீராமிடம் பேசும் வாய்ப்பு கிட்டிய போது, அவர் தன்   நண்பரான கவிஞர் ஐய்யப்ப மாதவனின் சொந்த ஊரான நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பர் அடக்கம் செய்யப்பட்ட நினைவுப் பூங்காவில் இருந்தார், ஆக கிடைத்த வாய்ப்பில் கம்பரைப் பற்றிய பேச்சை எடுத்தேன். சடையப்ப வள்ளல் ஆதரவிலும், பின்னர் சோழ மன்னனின் ஆதரவிலும் வாழ்ந்து வந்ததாகவும் சொல்லும் வரலாற்றில் அவர் இறுதிக் காலங்கள் பற்றிய குறிப்பு இல்லை என்றும்? எதற்காக இந்த ஒரு மாபெரும் கவிஞன் தன் இறுதிக் காலத்தை தன் ஊர், அரண்மனை, பரிசில், நல்வாழ்வு என எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி வாழ்ந்தான்? என்று அவர் சொல்லும் போது கம்பன் கூட சமகால கவிஞர்களின் இன்றைய நிலையில் இருந்திருக்கிறானா என்ற கேள்வி எனக்குள் வந்தது

யவனிகாவின் கட்டுரைத் தொகுப்பான “நிறுவனங்களின் கடவுள்நமக்குக் கிடைக்கப் பெற்ற மிக முக்கியமான புத்தகம். நவீனம், அதன் அரசியல், மொழியின் அதிகாரம் பற்றி அதிகப் பரிச்சயம் வேண்டி சிந்தனைத் தெளிவு தேடும் இளம் படைப்பாளுகளுக்கு அவருடைய இந்த எழுத்துகள் மிகவும் உதவும். பெரிய அளவில் இன்னும் பேசப்படாத இந்த புத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டால், புதிதாக எழுதுபவர்களுக்கு மிகவும் பயன்படும்.

வாசகனாக கவிதைகளை அனுகுதல், அதன் பிரச்சனைகள் குறித்து சின்ன சின்ன கட்டுரைகளில் மிக எளிமையான உதாரனங்களில் தன் வலைதளத்தில் சொல்கிறார் கவிஞர் வா.மணிகண்டன். இதில் கவிதைகளை, அதன் பரிமாணத்தை தன் சொந்த அனுபவத்திலும், பிறர் கேள்விகளுக்கும் பதிலாக அவருடைய தளத்தில் பார்க்கலாம் சில சுட்டிகளின் இணைப்பு நூல் கீழே!
http://www.nisaptham.com/search/label/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இந்த தளத்தில் இருக்கும் மின்னல் கதைகள் எனக்கு மிகவும் பிடித்த சுவாரஸ்யமான சிறுகதைத் தொகுப்பு
*********************************************************************** 

  மிகுந்த சிரமப்பட்டு இந்தக் கட்டுரைத் தலைப்பை வாசித்தீர்களா ? இல்லையா?? இதன் அர்த்தம் தெரியுமா? “Establishment” என்ற சொல்லை வேராக வைத்து சொல்லப்பட்ட இந்த சொல். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிருவப்பட்ட ஒரு புதிய சர்ச்சும் (Church of England), அது ப்ரிட்டீஷ் அரசின் மற்ற மாகாணங்களிலும் பரவிட எடுத்த முயற்ச்சிகளும் அந்த அமைப்பின் செயல்கள்Establismentarianism” என்றும், அதைத் தடுப்பதற்காக ஸ்காட்லேண்ட், அயர்லாண்ட் மற்றும் வேல்ஸ் ஆகிய மாகாணங்கள் எடுத்த முயற்சி, கூட்டங்கள், பேரணிகள், சதித் திட்டங்கள் என்றும் “Dis-establishment ”என்றும் புரிந்து கொண்டால், நீங்கள் அடுத்தது (Anti-disestablishment) யாரை ஆதரிக்கிறது என்று தெரியும்!??! தெளிவாக சொல்லப் போனால் இது ஒரு அதிகாரமிக்க ஒருவரின் எண்ணப்படி(Anti-disestablishment + arianism = Anti-disestablishmentarianism) எதிர்ப்புகளைக் களைவதாகும். அது நாட்டின் வலிமைமிக்க (monarch/supreme power) ஒருவரின் அரசியல் லாப நோக்குகளோடும், சூழ்ச்சிகளோடும் சாத்தியமாகிறது என்றும் தெரிகிறது.

இன்றைய சூழ்நிலையில் ஒரு வலுவான அமைப்பு எங்காவது காலூன்ற விரும்பினால் அதற்கான எதிர்ப்பை திட்டமிட்டு அதைச் சமாளித்து ஒழித்துக் கட்டும் திட்டங்களே அதிமுதற் தேவையாகிறது.

இதே போன்ற சூழ்நிலையில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதும் (establishment) அதை நாம் எதிர்ப்பதும் (disestablishment), எல்லாவற்றிற்கும்(எதிர்ப்புகளுக்கு) ஆயத்தமாக தேவையற்ற நுகர்வுப் பண்பிற்குள் நம்மை நுழைத்து, அதே சமயம் அடிப்படைத் தேவையாக இருக்கும் எல்லாப் பொருட்களின் விலையையும் பன் மடங்கு உயர்த்தி. இதன் விளைவாக போராட்டத்தை விடுத்து மக்கள் யாவரையும் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர் நோக்கியோ, பிரார்த்திக்க வைத்தோ அரசியல் செய்து; நமது எதிர்ப்பை சீர்குலைத்து;- அதை இந்த அந்நியப் படையெடுப்போடு சேர்த்து வைத்து நம்மை ஏற்றுக் கொள்ளச் செய்யும் தந்திரம் தான் Anti-disestablishmentarianism.


நேரடியாகச் சொல்ல விடாமல் இந்தக் கட்டுரையில் உறுத்தி வந்த Anti-disestablishmentarianism எவ்வளவு தேவையற்றதோ, அவ்வளவு தேவையற்றது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. (மேற்கு வங்க முதல்வர் தீதி பானர்ஜிக்கு ஜே)

“ஷப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே

குறிப்பு : இது தான் ஆங்கில வார்த்தையில் மிகப் பெரியது என்று என் கல்லூரிப் பேராசிரியர் சொன்னது தவறு, ஆங்கிலத்தின் மிக நீளமான வார்த்தை இதோ
PNEUMONOULTRAMICROSCOPICSILICOVOLOCANOCONIOSIS எனும் ஈரல் சம்பந்தப்பட்ட நோயின் பெயர். 
ஹி ஹி....ஹி ஹி



பஜ்ஜி சொஜ்ஜி
இன்னும் சுவையாக, அடுத்த பாகத்தில்
ஜீவ.கரிகாலன்

1 கருத்து:

  1. Gud one... :) :) Antidisestablishmentarinism.... Good word, but the Ironic fact is, We are suffering from that...

    But we as a human, Indian, we will show resistance against FDI...

    And You are right, Our Education system is Pathetic... Bullshit...


    Enna dhn eluthi irukra matter a padikrapa kastama irundhalum, Bajji Sojji Suvaiyo Suvai... :) :) :) Keep it going na......

    பதிலளிநீக்கு