ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

எலியின் வாட்டமும் பூனையின் கவலையும்

சுதேசிச் செய்தி இதழில்(அக்டோபர்) மாதம் வெளிவந்த கட்டுரை

நம் வழக்கில் ஒரு பழமொழி ஒன்று உள்ளது “எலி ரொம்ப வாடுதேன்னு பூனை கவலை கொண்டதாம். ஆம், பெண்கள மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கிரிஷ்ண திராத் வெளியிட்ட ஒரு அறிக்கை தான் மத்திய அரசை இந்த பழமொழியோடு ஒப்பீட்டு பார்க்க வைக்கிறது. இதன்படி “இனி குடும்பத் தலைவிகள் செய்யும் பணிகளுக்கு சம்பளமாக அவர்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு ஒன்றை நிறுவி அதில் 10-20 சதவீதம் மாத வருமானத்தை அவர்கள் பெயரில் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அடுத்த கவர்ச்சிகரமான மற்றுமொரு பல்நோக்கு திட்டம் தான் அது.  


இந்த அதிநவீன சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசிற்கு காரணங்களா இல்லை? வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வளவு வேலை பார்க்கின்றனர், வீட்டினை சுத்தமாக வைப்பது, சமைப்பது, குழந்தைகளை கவனிப்பது, துனி துவைப்பது என நீண்டு செல்லும் உழைப்பிற்கு கூலி கொடுப்பதாகும் என்று முதலில் சொன்ன அமைச்சகம், பின்னர் “இந்த தொகையை ஒரு பெண்ணிற்கு விவாகரத்து ஆனாலோ, கணவனை இழந்தாலோ அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு ஆக இதை சம்பளமாக கருதாமல் அவர்களுடைய சேவைக்கு இதை ஒரு கௌரவப் பரிசாகவோ, நன்கொடையாகவோ கருதி கொடுக்க வேண்டும் என்று இதற்கு கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு சம்பளம் என்ற வார்த்தையை அதில் இருந்து நீக்கியது.

அடிப்படையில் குடும்பப் பொருளாதாரமே நம் சமுதாயத்தின் தனிப் பெரும் பலம் என்பதை உணராத அரசு இது போன்ற சட்டங்களை இயற்றுவதில் ஒன்னும் ஆச்சரியம் இல்லை தான். ஆனால் இதைப் பெண்கள் நலன், சமூக
நலன் என்ற விகிதாச்சாரத்தில் மத்திய அரசு பிரச்சாரம் செய்யும் விதம் தான் மிகவும் கண்டிக்கதக்கது. அவர்கள் கூற்றுப்படியே பார்ப்போம், அவர்கள் முன் வைக்கும் காரணங்கள் விவாகரத்து ஆனாலோ இல்லை கணவனை இழந்தாலோ அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும், உழைக்கும் பணத்தை வீட்டிற்கு தராமல் குடித்திடும் ஆண்களிடமிருந்து காப்பதற்க்கும் என்றும் காரணம் சொல்கிறது. பணி செய்து ஈட்டும் பணத்தை குடும்பத்திற்கு நூரொ சதவீதம் தராதவன், இருபது சதவீதம் தந்தால் போகும் என்கிறதா அரசு?

இந்த சட்டம் சமீபத்தில் பல நாடுகளில் (அமெரிக்கா, ஐரோப்பா) கொண்டு வரப்பட்டதற்கு காரணமும், நம் நாட்டில் கொண்டு வரப்பட்டதற்கு காரணமும் ஒன்று தான். ஆனால் அழகாக அரசு சொல்லும் சந்தர்ப்பவாதம் பெண்கள் நலன் என்ற பொய். இந்த திட்டம் 2011ல் நடைபெற்ற OECDநாடுகள் கூட்டத்தில், அந்த அமைப்பின் 28 நாடுகளிலும், மேலும் வளரும் பொருளாதார சக்தியான சீனா, இந்தியா, தென் அமெரிக்க நாடுகளிலும் ஒரு ஆராய்ச்சியை நிகழ்த்தியிருந்தது. இந்த உறுப்பினர் நாடுகளோடு இந்தியா, சீனாவை சேர்த்துக் கொண்டமைக்கு காரணம் அவர்களின் வளர்ச்சிப் பொருளாதாரம் மட்டுமல்ல அவர்களுடைய குடும்ப அமைப்பு தான் முக்கிய காரணம், இதன் படி இங்கிருக்கும் குடும்பத் தலைவிகளின் வேலைகளை சம்பளமற்ற பணி என்று எடுத்துக் கொண்டால் சராசரியாக தினமும் நாலரை மணி நேரம் ஆகிறது, ஆக இதை ஒரு வலுவான காரணமாகக் கொண்டு புதிய திட்டம் ஒன்றை அரசாங்கங்கள் உருவாக்குகின்றன.


இதற்கு இந்தியப் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், ஜோசெப் ஸ்டிக்லிட்ஜ் போன்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதாரக் குழு ஒரு அறிக்கையை சமர்பிக்கிறது, இதன்படி உலகமயமாக்கலில் சரிந்து போய் சம்மனமிட்டு அமர்ந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்காவின் குடும்பங்களில் நடைபெறும் மொத்த உற்பத்திகளையும் சேவைகளையும் கணக்கிட்டால் (household production) அமெரிக்க கூலி விகிதப் படி (wage rate) 3.8 ட்ரில்லியன் டாலர்கள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் அதாவது மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product-il) சேரும் என்று சொல்கிறது. அவர்கள் சொன்னது தான் தாமதம் என்று எல்லா OECDநாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டின. இங்கிலாந்தோ தங்கள் குடும்பப் பெண்மனிகளின் மணி நேரக் கூலி எட்டு பவுண்டுகள் என்றும் ஆண்டுக்கு கிட்டதட்ட 30000 பவுண்டுகள் என்றும் சொல்லிட எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் மொத்த உற்பத்தியை உயர்த்திக் காட்ட களத்தில் இறங்கின.


மக்களுக்காக சிறப்பான ஆட்சியை நடத்துவதற்கு கங்கனம் கட்டி அமர்ந்திருக்கும் நம் மத்திய அரசு இதைப் பார்த்து சும்மா இருக்குமா? ஏற்கனவே இந்த திட்டம் ஆரம்பிப்பதற்கு இந்தியப் பெண்களின் உழைப்பை முன்னுதாரனமாகக் கணக்கிட்டனர் தானே, ஆக அடுத்த திட்டம் தயாரானது. ஆனால் மிக விழிப்போடும், தந்திரத்தோடும் நம் மத்திய அரசு இதை அறிவிக்கும் போதே நம் நாட்டில் இருக்கும் பெண்களின் பிரச்சனையை கணக்கிட்டு அதற்கு சாயம் போட்டுக் காட்டியது. பிரிட்டீஷ் நாட்டு சர்வேயினை வைத்துப் பார்க்கும் போது நம் நாட்டில் இனி எல்லா தாய்மார்களையும் தாதிப் பெண்களாக மாற்றும் நம் அரசின் லட்சனமாக இதைக் கண்டிக்கத் தோன்றுகிறது. உற்பத்தி என்று நம் குடும்பத் தலைவிகளின் எத்தனை சேவைகளை இவர்களால் GDPயில் சேர்க்க முடியும், மற்ற நாட்டுப் பெண்கள் போல சமையல், வீட்டை, குழந்தைகளைப் பராமரித்தல் என்று முடிந்துவிடுகிறதா, இன்னும் நம்மிடம் இருக்கும் கூட்டுக் குடும்ப வாழ்வில் அவர்களின் பணி எத்தகையது? இது போன்ற சட்டங்கள் முதலில் உடைப்பதே கூட்டுக் குடும்பங்களின் அமைப்பைத் தான். இல்லை சில பொறுப்பற்ற கணவன்மார்களின் பணி 20 சதவீதம் கொடுப்பது மட்டுமே சட்டம் என்றால் அத்தோடு அந்த குடும்பங்களின் நிலை? பின்னாளில் தாலாட்டிற்கும்? தாம்பத்தியத்திற்கும் ஆராய்ச்சியையும் யாராவது தொடங்கி விட்டால் அதற்கும் செவி சாய்க்குமா நம் அரசு?

உலகமே பொருளாதார மந்தத்தில் ஸ்தம்பித்துப் போய் நிற்க, நம் குடும்பங்களை நிர்வாகிக்கும் பொறுப்பு (முக்கியமாக மத்திய தர வர்க குடும்பங்களில்) பெண்களிடம் இருப்பதாலேயே நாம் இன்னும் இந்த விலைவாசியுயர்வு, கலாச்சார மற்றும் அரசியல் சுரண்டல்கள் போன்ற எல்லாவற்றையும் தாண்டி ஒரு சேமிக்கும் பொருளாதாரமாகவே நம்மை இன்னும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சேமிப்பிலும் கூட இன்னும் பங்கு வர்த்தகம் போன்ற குப்பைகளில் வீழ்ந்துவிடாமல் தங்க ஆபரணங்களாக மாற்றி அதையும் நம் கலாச்சாரத்தில் வடித்து வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளை, அனேக நடுத்தர வர்கத்தில் முழுச் சம்பளமும் முதலில் தாயிடமோ அல்லது மனைவியிடமோ தான் கொடுக்கப் படுகிறது, அதில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க சொல்வது முட்டாள்தனம் மட்டுமல்ல கயமைத் தனமும் கூட.

     ஆம், மாதம் பதினைந்தாயிரம்(15000) வாங்கும் கணவன் மொத்தமாக தன் மனைவியிடம் கொடுக்கும் சம்பளத்தில் ஒரு மூவாயிரம்(3000) ரூபாய் தன் மனைவியின் பணிவிடைக்கென்று கொடுக்கும் பட்சத்தில் மொத்தம் பதினெட்டாயிரம் (18000)ரூபாயாக அரசு கணக்கெடுத்துக் கொள்ளும் இதில் நம் பொருளாதரம் திடீர் 20 சதவீத உயர்வைக் காணும். பிற்காலத்தில் இந்த கூடுதல் 3000 ரூபாய்க்கு வருமான வரியும் விதிக்கலாம், அல்லது சேவை வரியையும் விதிக்கலாம். எப்படியோ இது போன்ற சட்டத்தின் மூலம் குடும்பம் என்கிற அமைப்பு உடைவது மட்டும் நிச்சயம். இந்த சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பதோடு நின்றுவிடாமல் , ஆடம் ஸ்மித் சொன்ன தேசங்களின் சொத்துகள் (wealth of nations) இப்படித் தான் எல்லாவற்றையும் சந்தைப் பொருளாக பணத்தின் அளவு கொண்டு பார்த்து வரும் (monetary measures) என்று சொன்னால் அவற்றை நம் பாடத் திட்டங்களில் இருந்து நீக்கிவிட்டு, நமது தத்துவயியல் சார்ந்த மரபின் அடிப்படையில் புதிய பாடத் திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையும் அவசியம் வேண்டும்.
 
பின்குறிப்பு:
மனைவியின் பெயரில் வங்கிக் கணக்கு வைத்து அதில் சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை சேர்க்க வேண்டும் என்று சொன்ன அரசு வங்கிக் கணக்கிற்கு கொடுக்கும் ATM கார்டுகளை யார் வைத்திருக்கலாம் என்று எந்த தீர்மானமும் சொல்லவில்லை என்பதை வைத்து சற்று ஆறுதல் கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக