திங்கள், 24 அக்டோபர், 2011

எனது புத்தகப் பார்வை -பகுதி - 1 தானாய் நிரம்பும் கிணற்றடி -அய்யப்பமாதவன்

தானாய் நிரம்பும் கிணற்றடி
            -அய்யப்பமாதவன் 

இந்த யதார்த்தமான தலைப்பே அந்தப் புத்தகத்தை கண நேரத்தில் வாங்க வைத்தது. அய்யப்பமாதவன் அவர்கள் முகநூலில் மிகவும் பரிச்சயம் என்பதால் அந்தப் புத்தகத்தினை ஒரே  மூச்சாக படித்துவிடத் தீர்மானித்தேன். 

மொத்தம் 11 கதைகள், வரிசையாக சிறிதும் இடைவெளியின்றி படித்து முடித்தேன். ஆம் , கதைகளின் வெளியே என்ற ஆசிரியரின் முன்னுரை மிக கனமான ஒரு சிறுகதை தரும் உணர்வையே தந்தது. தன் கவிதைகளிலிருந்து உரைநடைக்கு மாறிய எழுத்துக்கள் மீதான விமர்சனங்கள் பற்றிப் படிக்கும் பொழுது உங்களுக்கும் அந்த உணர்வு வரும். அவ்வுணர்வு வந்ததால் தான் இந்த விமர்சனமே ஒரு நல்ல தொகுப்பிற்குக் காரணமாய் அமைந்ததை உணரலாம். இக்கவிஞர் (கதாசிரியர்) ஒவ்வொரு கதையிலும் தன் வலியினை ஏதோ ஒரு இழையில் பிரதிபலிக்கிறார். உதாரணம் முதல் கதையில் வரும் புரண்டுகொண்டிருக்கும் புத்தகப் பக்கங்களில் கூட கவிஞரின் வாசனை தெளித்திருக்கும் , பீடிக்காரனிடம் , அவன் நண்பனிடம், இரண்டாம் கதையில் வரும் சொர்க்கவாசியிடம் கூட ஆசிரியர் தமது முன்னுரை விசயங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறார்.

ஒரு கூட்டாஞ்சோறு உண்பது போல், ஒவ்வொரு கதையிலிருந்து மற்றொரு கதையின் தளமும் , சுவையும் மாறுபட்டிருக்கிறது. இருப்பினும் எல்லாக் கதையின் மையத்திலும் ஒரு சோகம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையாக ”தானாய் நிரம்பும் கிணற்றடி"யினை முதல் கதையாகத் தேர்ந்தெடுத்தமைக்கு ஒரு பாராட்டு. 

இந்தத் தலைப்பைப் பார்க்கும் போது யதார்த்த உலகிலிருந்து ஒரு கதையினை எதிர்பார்த்து பயணிக்க ஆரம்பித்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி, ஆம் இக்கதையில் தங்கையின் ஆவி (ஆவி என்று ஆசிரியர் எந்த இடத்திலும் சொல்லவில்லை) போன்ற ஒரு மாயத் தோற்றம் நமக்கு கிடைக்கிறது. ஆசிரியர், இக்கதையில் தங்கையின் மரணம் பற்றிய எந்தக் காரணமும் சொல்லாது, மரணம் ஏற்படுத்தும் விளைவு அதீத பாசம் கொண்டவர்களுக்கு ஏற்படும் ஒரு மாயையாகக் காட்டுகிறார் . மிகவும் எச்சரிக்கையாகத் தேவையற்ற கதை மாந்தர் உரையாடல்களை தவிர்த்திருக்கிறார். பூவாய்,சருகாய், நீராய் தன் தங்கையை (அவள் மாய பிம்பத்தினை ) பார்க்கும் அக்காவைப் பார்க்கும் போது நமக்கு பரிதாபம் ஏற்படுத்துகிறது.

இரண்டாவது கதை, தங்கக் கயிறு - ஏற்கனவே சொன்னது போல் எழுத்துலகம் எப்படிப்பட்டது என்று நையாண்டித் தனமாக நமக்கு காட்டுகிறார். இதை நீங்கள் கதையின் இறுதியில் பயணிக்கும் போது தெளிவாகப் புரியும். பிரிக்க முடியாதது ,"வறுமையும் புலமையும்".  ஆசிரியர் காட்டும் சொர்க்கம் சுவாரசியமாக இருக்கிறது, அந்த எழுத்தாளன் எடுக்கும் திரைப்படத்திலும் எழுத்தாளன் கதைதான் என்பது மீண்டும் முன்னுரையினை நினைவுக்கு கொண்டு வருகிறது .

ஏழேழு ஜென்மத்திற்கும் மீனும், பாலும் வாங்கியவள் ...பூனைகளைக் குழந்தையாக, தன் குடும்பமாக வளர்க்கும் அவள் அசிங்கப்பட்ட பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்கிற சமூகத்தின் label , இக்கதையிலும் சரியாக ஒட்டப்பட்டுள்ளது. சமூகம் புறத்தோற்றதினை
வைத்துதான் மனிதர்களை எடை போடுகிறது என்பது இக்கதையில் எதேச்சையாக உருவாக்கபட்ட கதாபாத்திரத்தின் வழியே நாம் உணரலாம். ஆனால் ஆசிரியரின் முயற்சி பூனைகளோடு வாழும் அப்பெண் பூனையினைப் போன்ற தோற்றம் அவளுக்கு இருப்பதாகக் காட்டுகிறார் (அவளுக்கு முளைத்திருக்கும் லேசான மீசை மயிர் ) என்று நான் நினைக்கிறேன் .

ஊதாநிறப் புகை கிறுக்கியப் பீடிச்சுருளும் சில காலி மதுபுட்டிகளும், இலக்கியத்தில் எந்த இடம் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஒரு ரசிகனுக்கு இந்தக் கதை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மிகவும் எரிச்சலுடனும், அறுவருப்புடனும் கூடிய ஒரு குடிகாரன் ஒரு ரயில்நிலையத்திலோ, ஒரு பேருந்து நிறுத்ததிலோ நாம் பலரை பார்க்கிறோம் அல்லவா, அவர்களில் ஒருவன் குடிகாரன், புகைத்துக்கொண்டே இருப்பவன், அழுக்கு ஆடையில் மட்டுமே தோற்றமளிப்பவன், பெண்களை உரசுபவன் - ஆனால் அவன் ஒரு எழுத்தாளன்...  எப்படி இருக்கிறது ?? இதுவே அதிர்ச்சி என்றால் இவனைப் போன்றே ஒரு நண்பன் இவனுக்கு இருக்கிறான். இருவரும் தன்னைப் பிரிந்த பெண்களை மறக்க தினமும் குடிக்கின்றனர்.அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது , நட்பு இருக்கிறது, அக்கறை இருக்கிறது ...ஆக அவர்கள் ஒரு குடும்பமாக தீர்மானிக்கிறார்கள். சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?? இக்கதையில் அந்தக் குடிகாரர்களின் குடும்ப வாழ்க்கையும், அவர்கள் குழந்தையான அந்தத் தெரு நாயும் மிக அழுத்தமான பாத்திரங்கள், குடும்பத்தின் ஆணிவேரைச் சாய்த்துப் பார்க்க வைக்கும் வலிமையான பாத்திரப் படைப்பு. அன்புக்கு நிகர் எந்த உணர்வும் இல்லை - உணரலாம் இக்கதையில்.

மாறுகண்கள் கொண்ட ஒரு பெண்ணின் கதை, தூக்குப் பானை சலம்பும் புதை ரகசியம் , மரப்பாச்சியைக் காணவில்லை என்ற அழுத்தமான மூன்று கதைகளும். குறுக்குவெட்டுப் பாதைகளில் உலவும் செல் பேசி , தொந்திக் கணபதியின் வாகனம் இவ்விரண்டு கதைகளும் சுவைபட எழுதியிருக்கிறார். 

மேற் சொன்ன ஐந்து கதைகளில் மரப்பாச்சியைக் காணவில்லை என்ற கதையினைப் படிக்கும்போது அந்தத் தாயின் மீது மிகுந்த வெறுப்பை தருகிறது. இன்னும் இது மத்திய மாவட்டங்களில் சிசுக் கொலையாக நடப்பதை நினைத்தாலும், பெண்ணின் இழி நிலைக்கு பெண்களும் பெரிய காரணம் என்று உணர முடிகிறது .

மாறு கண்கள் கொண்ட ஒரு பெண்ணின் நிலை இப்படித் தான்(கதையில்) முடியும் என்று யூகம் செய்ய முடிகிறது. பெண்களைப் பற்றிய சமூகக் கதைகள், திரைப்படங்கள் ஆகட்டும், இரண்டாம் தர பத்திரிகை ஆகட்டும், ஒரு அபலைப் பெண்ணின் கதை இப்படித் தான் முடிகிறது. அபலைப் பெண்களை ஒரு insisting போதைப் பொருளாக ஆக்கியே தீரவேண்டும் என்கிற நிலை சமூகத்திற்கு இருப்பது போல் திணறுகிறது . ஆனால் கதையின் இறுதியில், அந்த முதிர்கன்னியின் , தங்கையின் ஒரு கேள்வி "ஜீரணம் செய்வது கடினம்" .

இறுதிக் கதையான, ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது ஒரு தத்துவ ரீதியினாலான தலைப்பா? ஒரு கவிதையே தலைப்பா ? கதைக்குள் சென்றால் காதலின் யதார்த்தம் பற்றி அப்பட்டமான உண்மையினை வெளிக் கொணருகிறார். ஹார்மோன்ஸ் செய்யும் லீலையாக, நீண்ட நாள் காதலிக்கும் காதலனை மறக்கச் செய்யும், தன்னைச் சுற்றிவரும் ஒரு பைத்தியக்கார stranger மீதான பரிவு. பெண்ணின் பலவீனம், ஆணின் குருட்டு மோகம் இவற்றை நேரடியாய்ச் சொல்லாமல் எளிதாய் ஒரே நாளில் நடக்கும் சம்பவமாக சொல்கிறார்.

மேலும், இந்த சிறுகதையில் அவன், அவள் ,அவர்கள் என்ற சொற்கள் அடிக்கடி வருகின்றன .. அதில் எழுத்துப் பிழைகள் நிரம்ப இருப்பது போல் தோன்றிற்று .. ஒரு வேளை, நள்ளிரவு தாண்டி படித்த அயற்சியா என்று புரியவில்லை.

உதாரணம் :-  அவள் குளக்கரையில் நின்று முகம் கழுவும் போது .... அவன் என்கிற வார்த்தை தவறாகப் பிரயோகப் படுத்தியாதாக ஒரு சந்தேகம் அதே போல், அவன் அவளுடைய பாயில் படுக்கும்போதும் அவள் மேல் படுப்பதாக நினைத்துக் கொண்டான் என்று வரும் அல்லவா ...அதுவும் அப்படித் தான் ..புனைவு என்று புலப்படுவதால் அதை எழுத்துப் பிழையாக கருதாமல் அவற்றிற்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் போது கதை ஒரு மாதிரி இடறுகிறது ... கதையின் இறுதியில் வரும் ஒரு அதிர்ச்சி இவைகளை மறந்து, ஒரு நிமிடம் அவனின் வெட்டுண்ட கையின் வலிபோல்.. புத்தகத்தினை மூட யோசிக்கிறது 

இவர் தன் கதைகளின் மூலம் எழுத்துலக வாழ்க்கையினையும், நமது நம்பிக்கைகளான காதல், குடும்பம், திருமணம் மீது தன் கதைகளின் மூலம் ஒரு நேர்மையான பரிசோதனை கண்டு என்னைக் கவர்ந்துவிட்டார் .    

நினைவிருக்கட்டும் இது வெறும் ஒரு ரசிகனின் பார்வை மட்டுமே 

1 கருத்து:

  1. //நினைவிருக்கட்டும் இது வெறும் ஒரு ரசிகனின் பார்வை மட்டுமே //
    அதுதான் கரிகாலன்....

    பதிலளிநீக்கு