சனி, 8 ஜனவரி, 2011

வீர நாயக்கன் - பகுதி -4

வெள்ளியனையின் வரலாறு

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்த வெள்ளியனை எனும் சிற்றூர் இன்றும் கருவூர் மாவட்டத்தில் உள்ளது, ஆயிரம் ஆண்டுகட்கு முன்னாள் அப்பகுதி அடர்த்தி இல்லாத காட்டுப் பகுதி, அதை நாம் பாலை நிலத்திலும் சேர்க்கலாம். அன்று  கருவூருக்கு தெற்கே பாயும் அமராவதி நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிதாக குடியிருப்பு இருக்கவில்லை , ஆனால் தெற்கே உள்ள மதுரைக்கும்; கிழக்கே உள்ள உறையூருக்கும் செல்ல அக்காட்டு பகுதியை தான் உபயோகிக்க வேண்டும்.

அந்த பிராந்தியத்தில் நரி,சர்ப்பம், புலி என ஆபத்துகளும் இருந்தது, இதுபோக அவ்வனப் பிரதேசம் பல சமயம் எதிரிகளின் கூடாரமாகவும் ஆகிவிடும்.எனவே, வாணிபம், போக்குவரத்து, எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அமராவதிக்கு தெற்கில் சிறு சிறு குடியிருப்புகளை அமைக்க கரூரை ஆண்டு வந்த எல்லா அரசர்களும் முயன்று வந்தனர்.ஆனால், அந்த பகுதியில் புலியின் பயமும், சர்ப்பத்தின் எண்ணிக்கையும் இதற்கு தடையாய் இருந்து வந்தன.

.மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு பிறகு வஞ்சியை கைபற்றிய பாண்டியனும் அப்பகுதியில் சில ஊர்களை நியமித்தான், மதுரையிலிருந்து கருவூருக்கு எளிதில் வர அவை உதவும் என்பதால்.ஆனால் அங்குள்ள புலிகளின் எண்ணிக்கையை குறைக்காமல் மக்கள் அங்கே அதிகம் வரமாட்டார் என்பதை உணர்ந்து இதற்கென இரு ஆணைகளை பெயர்த்தான்.
1. புலிகளை வேட்டையாட உத்தரவிட்டு, வேட்டை ஆடுபவர்களுக்கு நிறைய சன்மானங்களும்,அவர்களுக்கு நிரந்தர இடமும் வசதியும் செய்து கொடுக்கப் படும்
2. அப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட இடங்களில் எல்லாம் கோயில் கட்டுவது அல்லது தேவை இருப்பின் புதுபிப்பது.(அப்படித் தான் புனரமைத்துக் கட்டிக் கொண்டிருந்தது இந்த கதையில் வரும் கோயில்)

அவ்வூரில் கோயிலை ஏற்படுத்தி, அதற்கென பல காத நிலங்களை வழங்கி அதில் வேளாண்மை செய்ய தேவைப் படும் தண்ணீருக்காக ஒரு குளமும் வெட்டப் பட்டுவந்தது.அந்த குளத்தை சுற்றி தான் நாயக்கன்மார்களின் குடியிருப்பு இருந்தது. அவர்கள் காஞ்சிக்கும் வடக்கே கோசல நாட்டு அரசும் சோழர்களுடன் ஏற்பட்ட உறவின்பால், அந்நிலத்து மக்கள் பலர் தெற்கு மண்டலத்திற்கு வந்தேறினர்.அப்படிப்பட்ட வந்தேறிகளில் ஒருவன் தான் நம் வீரா எனும் வீரா நாயக்கன்.

கொஞ்சம் கொஞ்சமாக அவ்வூரில் குடியிருப்பு வந்து கொண்டிருந்தது.அவ்வூரின் ஓரத்தில் சந்தை ஒன்றும் உருவானது.இப்படி வேக வேகமாக வளர்ந்து வரும் ஊரில் புலி பயம் மட்டும் குறையவே இல்லை.இரவில் தனியாக ஊரின் எல்லையோரம் கூட செல்வதை தவிர்த்து வந்தனர்.ஓரளவுக்கு அந்த இளம் வேடர்களின் (பொம்மன்,வீரன் போன்றோர்) வீரச் செயல்கள் அவ்வூர் மக்களுக்கு நிம்மதி அளித்தது.

ஆனால் அன்றோ! ஊரினுள் புகுந்த புலி ஒன்று பல நிரைகளைக் கொன்றது ,மக்கள் ஒன்று கூடி கல்லினால் அதை தாக்க வெறி கொண்ட புலி பாய்ந்து வந்து அவர்களையும் தாக்கியது. காயங்களின் வலி அதற்கு மிகவும் வெறி தூண்டியது, பாய்ந்து ஊரை விட்டு  வெளியே செல்ல நினைத்த புலி அவ்வூரின் கிழக்கு எல்லையின் புனரமைத்துக் கொண்டிருக்கும் கோயிலுக்குள் சென்றது.அங்கிருப்போர் இதைக் கண்டு சிதறி ஓடினர், ஏற்கனவே புலியினைப் பார்த்து பயந்து செய்வதறியாது நின்று கொண்டிருந்த கோதையை ஒரு கை மேலே இழுத்தது.

புலியிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள கோயிலின் உத்திரத்தில் மேல் தொற்றிக் கொண்டிருந்த நொண்டி முத்தன் தான் அது.அவள் தந்தையோ, மூலவரை கட்டி பிடித்து நின்று கொண்டிருக்க.புலி கோயில் வாசலில் எந்த காலை முதலில் வைப்பது என்ற யோசனையில் இருந்தது.இவ்வளவு திகிலிலும் தன் கையில் உள்ள கோதையை எப்படி விழுங்குவது என்பது போல் ஒரு நொண்டி புலி ஒன்றும் நினைத்துக் கொண்டிருந்தது. கோதை தன்னை தூக்கியது யார் என்று கூட பார்க்கவில்லை ஆனால் தன் மேல் விஷம் போன்ற பார்வையை ஒருவன் கக்குகிறான் என்று நினைத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

முத்தரசன், கைக்கு எட்டிய கனியை ருசி பார்க்கும் ஆவலில் அங்கிருக்கும் புலியினை மறந்து அவளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே இழுத்தான், அவள் கைகளை பற்றிய அவன் முரட்டுக் கரங்கள் அவள் இடையினை பற்ற முயற்சித்தபோது.சட்டென்று அவன் பிடியில் இருந்து நகர்ந்து கீழே விழுந்தாள்.இதெற்கென காத்துக் கொண்டிருந்த புலி ஒரு உறுமலோடு கோயிலினுள் நுழைந்தது.

கோதை கல்லாய் சமைந்தாள், அவள் தந்தையோ செய்வதறியாது பெருமாளிடம் முறையிட்டார்.முத்தரசனின் இதயமும் பல மடங்கு துடித்தது.நம்பியின் கண்கள் தன் மகளை காப்பாற்றுமாறு முதன் முதலாக முத்தரசனிடம் பணிந்து யாசகம் கேட்டது. முத்தனும் குதித்து விட துணிந்தான்,ஆனால் இந்த மாதிரி சமயத்தில் அவன் கால்கள் உதற ஆரம்பித்துவிடும்.அப்பொழுதும் முத்தரசனுக்கு அவன் நொண்டி முத்தன் என்று ஞாபகம் வந்தது.தன் கண் எதிரே அந்த கோதைக் கனி பிணமாவதை பார்க்க இயலாத முத்தன் தன் கையிலிருந்த சிறு கத்தி ஒன்றை கோதையிடம் போட்டுவிட்டு கண்களை மூடினான்.அக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளோ, 'இன்னும் சிலை வைக்கப் படாத கருடரோ ,மாருதியோ இக்கோயிலில் இருந்தால் உன்னை காப்பாற்றுவர் ஆனால் நானோ வெறும் பத்து அவதாரங்களுக்கு உட்பட்டவன், உன்னை காக்கவும் ஒருவன் வரக் கடவுக' என்று வரம் அளிப்பது போல் காட்சி தர,கோயில் மணி ஓசை ஒன்று "தங்","டங்" என்று கேட்டது.

பெருமாள் வரம் அளித்து விட்டார், நாம் எதிர் பார்த்தது போல் கோயில் நடை வாசலில் கைகளை கட்டியவாறு சிரித்தபடி நம் வீரன் நின்று கொண்டிருந்தான், அவன் கையிலே ஒரு வேல் இருந்தது.ஏற்கனவே இருந்த திகிலில் பாதி மூர்ச்சை நிலையில் இருந்த கோதை, அம்மணிச் சத்தம் கேட்டு திக்கித்து போக, புலியும் சற்றே பயந்து திரும்பியது. புலியைக் கொல்வதற்கு தயாராய் வீரனும் இருந்தான்.தனியாக புலியை எதிர்க்கும் தைரியம் கொண்ட வீரனை முத்தன் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்க, வீரன் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

வேறு எந்த பக்கமும் வழியும் இல்லாததால் புலி கண்டிப்பாக தம் மீது  பாயும் என்பதை அவன் கணக்கு போட்டிருக்கவேண்டும், புலி திரும்பி அந்த பெண்ணையும் தாக்க கூடாது, அதே சமயம் பாய்ந்து வரும் புலியை தாக்கும் போது லாவகமாக ஒதுங்க இடம் வேறு இல்லாததால், வேறு ஒரு புதிய யுக்தி ஒன்றை கையாண்டான்.அவன் தாய் மொழியில் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தது அந்த யுக்திக்கான கணக்காகத் தான் இருக்கும்.

சட்டென்று ஐந்தடி உயரத்தில் பாய்ந்து வந்து வீரனை தாக்க வந்த புலி, ஐந்தரை அடி வீரன் எட்டரை அடியில் கணப் நேரத்தில் வளர்ந்ததை கண்டு மிரண்டது.ஆம், வீரனின் தோளில்  கால் வைத்து ஈட்டியுடன் ஏறி நின்றான் பொம்மன், புலி அவனை எப்படி தாக்குவது என்று நினைக்கும் ஒரு இமைப்பொழுதில், பொம்மனின் வேல் ஒன்று புலியின் கழுத்திலும்,வீரனின் வேல் புலியின் வயிற்றிலும் ஆழமாக பாய்ந்தது.அப்புலியும் உறுமிக் கொண்டே கோதையின் காலடியில் விழுந்தது.கோதையின் கண்ணீரில் மங்கித் தெரிந்த வீரனின் முகம், இப்போது நன்கு தெரிந்தது.புலியை சற்று குழப்பம் அடையச் செய்து அந்த கணப் பொழுதில் அதை வீழ்த்தி விடவும் செய்தனர் அவ்வேட்டயர்கள்.

"யாம் காக்கும் கடவுள்" என்று மூலவரான பெருமாள் தன்னை நிரூபித்ததாய் சிரித்துக் கொண்டிருந்தார்.அவ்வூரில் ஒரு புரட்சி உருவாகும் வேளை வந்து விட்டதாய், மாலை வானத்து கதிரவன் தன் மஞ்சள் தூரிகையால்  சமைத்துக் கொண்டிருந்தது     

(தொடரும் )

2 கருத்துகள்:

  1. Nice lines with reveling new thoughts & ideas unbelievable the same 18's... Well do...

    பதிலளிநீக்கு
  2. Hey,
    Its nice man. I really much impressed on the technique to kill that tiger.

    This story is really interesting, complete the full story asap.

    I bacame ur frnd

    -Red.Indian

    பதிலளிநீக்கு