புதன், 12 ஜனவரி, 2011

நிலவே நீயே சொல் - ஆட்டோகிராப் -5

         மார்ச் - 23ம் தேதி 2001, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வணிகக் கணிதம் தேர்வு என்று காலண்டரில் எழுதியிருந்தது, மனோஜின் கை எழுத்து அவ்வளவு அழகாக இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் அச்சில் வார்த்தது போல் இருக்கும். இன்றுடன் தனது பள்ளி வாழ்க்கை முடிவடைகிறது என்ற ஆவல் தன் மனதில் சுற்றிக் கொண்டிருக்க, அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். நெற்றியிலே பூசிய விபூதி மூக்கில் கொஞ்சம் விழ,தன் சேலை முந்தியால் துடைத்து அனுப்பி விட்டாள், அவன் தாய். காலண்டரில் அவன் ராசி பலனை பார்த்தான் -----

 ராசி:கடகம் --:பலன்: பொறுப்பு
                                              ----என்று இருந்தது.

              தன் அப்பாவின் ஓட்டை சைக்கிளை எடுத்துக் கொண்டு , வேக வேகமாக அழுத்திக் கொண்டே பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தான். போகும் வழியில், தனக்கு வரும் முக்கியமான தேற்றங்களையும், சமன்பாடுகளையும் சொல்லிப் பார்த்துக் கொண்டே பள்ளிக்கு வந்தடைந்தான். தேர்வறைக்கு முன் கூடியிருந்த அவன் நண்பர்களோடு கலந்து கொண்டான், தேர்வு என்பதைக் காட்டிலும் கடைசித் தேர்வு என்பதால் ஒரு வித மகிழ்ச்சி எல்லோர் முகத்திலும் இருந்தது.

பள்ளிக்கு அருகிலே, ஒரு வீட்டில் அப்பொழுது காது குத்து வைபவம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரே மேளச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. கடைசி பரிட்சை ஒழுங்காக எழுத வேண்டும் என்ற படபடப்பு எல்லோருக்கும் இருந்தது. இந்த இரண்டு வருடங்களில் பரீட்சை நடக்கும் இந்த ஆறே நாட்களில் தான் சிலர் முகம் பக்திக் கலையுடன் திருநீறு இட்டு காட்சி அளித்தது. கையிலே ஒரு காகித உறையுடன் ஒரு கண்ணாடி அணிந்த டீச்சர் வந்தார்.தேர்வறைக்குள் அனைவரும் நுழைந்து, அவரவர் இடத்திலே அமர்ந்தனர்.

"எல்லாரும் மொதல்ல, கேள்வி மற்றும் விடைத் தாளில் உங்கள் பதிவு எண்ணை சரியாக எழுதவும்" என்ற வழக்கமான குரல் ஒலித்திட, கேள்வித் தாள் அவனுக்கும் வழங்கப் பட்டது, அதை பார்த்தவுடன் ஆண்டவனை வணங்கினான்.அவன் நினைத்தது போல் அவ்வளவு கஷ்டமான கேள்விகள் கேட்கப் படவில்லை.எனவே,கேள்விகளை ஒரு முறை படித்த அவன், நிம்மதியுடன் பதில் எழுத ஆரம்பித்தான். கடைசிக் கேள்வியில் இருந்து தலை கீழாக பதில் எழுதுவது தான் அவன் வழக்கம்,ஆரம்பித்தான் .

முதல் பக்கத்தை பென்சிலால் கோடுகளிட்டு, தேற்றத்தை எழுத ஆரம்பிக்கும் போது அவ்வளவு முத்துமுத்தாய் இருந்த அவனது எழுத்து, கொஞ்சம் கொஞ்சமாய்  தேய ஆரம்பித்து .  காரணம் >>காது குத்தும் வீட்டில் ஒலித்த பாடல் 
'"ஏதோ ஒரு பாட்டு, என் காதில் கேட்கும் 
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் " .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


"மனோஜ் !! நீ எப்படியும் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆயுடுவ, ஆனா எனக்கும் கணக்கு பாடத்துக்கும் ஏனி வச்சாக் கூட எட்டாது !!. .அப்புறம் நீ ஏதாவது ஒரு நல்ல காலேஜுக்கு போயிடுவ, உன் வாழ்க்கையே ரொம்ப ஜாலியா போகும் . ஆனா , நான் தான் இங்கயே கெடக்கனும்னு என் விதி!! எனக்கு இருக்கிற ஒரே பிரண்டு நீயும் என்னை ஒரு 2 மாசத்துல பிரிஞ்சிடுவ......." என்று சொல்ல வந்த வாக்கியம் நிறைவடையும் முன் அவள் கண்களில் கண்ணீர் குளமாக தேங்கியது, அணிச்சையாய் அன்று அவள் கண்ணீரை துடைக்க முற்பட்டு, அவள் கன்னங்களில் அவன் விரல் பட்டதே,அக்கணம் -ஏதோ ஒரு விசை அவனை திடீரென்று ஈர்த்தது போல் இருந்திட - சட்டென்று அவ்விடம் விட்டு அகன்றான்.


                            அன்று அவளோடு மிக நெருங்கிப் பழகியதால் வந்த வினை இது என்று அவனுக்கு புரிந்தது  , சும்மாவே எல்லாப் பசங்களும் அந்த இருவரையும் ஒன்றிணைத்து கிண்டல் செய்து வந்தாலும் ,  அவன் அதை சட்டை செய்யாமல், சாதரணமாகப்  பழகி வந்தான். ஆனால் அவள் கண்ணீரை துடைத்த உடன்  அவன் கொஞ்சம் சலனப் பட்டு இருந்தான். அன்று வரை, அவள் அவனது தோழியாக மட்டுமே அவனுக்கு தெரிந்திருக்க, அப்பொழுது தான் அவள் அவனுக்கு பெண்ணாகவே தோன்றியது, அது மட்டும் இல்லை அவன் அன்றிலிருந்து தான் ஒரு பையன் இல்லை ஒரு மனிதன் என்று தன்னை உருவகப் படுத்திக் கொண்டான்.


                                            அன்று தான் அவன் அந்த கார்த்திக் பாடும், "ஏதோ ஒரு பாட்டு பாடலை " கேட்டான். அன்றிரவு, தன் கனவில் -அந்த கிராமத்திலிருந்து ஊட்டிக்கு டூயட் பாட்டு பாட அவசரமாக சென்றான், உடன் அந்த தாமரையும் சென்றாள். காதலிக்க ஆரம்பித்ததால் தன்னை ஒரு பக்குவமடைந்த ஆளாக, குடும்பத் தலைவனாக கற்பனை பண்ணிக் கொண்டான்.


                        அவன் பெற்றோர்கள் இவனுக்கு பரிபூர்ண சுதந்திரம் கொடுத்து வந்தனர், அவன் ஓரளவுக்கு நன்றாகவே படிப்பதால் அவனை நல்ல பையன் என்று நம்பினார்கள். அந்த தாமரையோட வீடு இவன் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி இருக்கும், இவுங்க ரெண்டு பேரும் தூரத்து சொந்தம் என்பதனால் இந்த இரண்டு குயில்களின் அறிமுகக் காட்சி பற்றி விளக்க வேண்டிய தேவை இல்லை.அதிலும் நம்ம மனோஜ், நெற்றியில் விபூதியும் , பாக்கட்டில் ஹீரோ பேனாவும் கர்சீப்பும், எப்போதும் இஸ்த்திரி பண்ண சட்டையும் அணிந்திருப்பதால் - படிக்கிற பிள்ளை என்று எல்லாரும் சொல்வார்கள். தாமரை - சினிமா நடிகை ரேவதி மாதிரி குட்டையாகவும், முகப் பொலிவுடனும் இருந்தாலும் ,  மக்கு பொண்ணு மாதிரியே ஒரு லட்சணமும் அவளிடம் தெரியும்.


               ஏற்கனவே ஒருமுறை ,அரையாண்டுத் தேர்வு விடுமறை முடிந்து தேர்வுத் தாள் வழங்கப் பட்டது. வழக்கம் போல் மொழிப் பாடங்களை தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்ற மனோஜ் சந்தோசமாக தாமரை வீட்டுக்குள் நுழைய,  தாமரையின் கன்னங்கள் வீங்கியிருபதைக் கண்டான்.  உள்ளே சென்ற மனோஜ்ஜிடம் தாமரையின் தாய் அவன் பெற்ற மதிப்பெண்களை பற்றி விசாரித்தாள். அவன் மதிப்பெண்ணை கேட்டவுடன், மறுபடியும் தாமரையின் மண்டையில் ரெண்டு கொட்டு வைத்து, "உன்னை எல்லாம் படிக்க வச்சு தெண்டச் செலவு செய்யுறதுக்கு எவன் கையிலயாவது புடிச்சு கொடுத்துட்டு நான் நிம்மதியாய் இருக்கலாம் " என்று கடுகடுத்தாள்.


        தாமரையை அடிக்க வந்த அவள் தாயை மனோஜ் தடுத்து," ஏன் அத்தை!! கோபப் படுரிங்க.. கணக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லை - நான் தாமரைக்கு சொல்லித் தாரேன் , அவள் கண்டிப்பா பாஸ் ஆகிடுவா " என்று சமாதானம் செய்தான்.  தன் வேலையை ஒழுங்காக பார்த்து வந்த மனோஜுக்கு அன்றிலிருந்து தான் அந்தக் கண்டம் ஆரம்பித்தது. அவளுக்கு அன்றிலிருந்தே பாடம் எடுக்க ஆரம்பித்தான் , அவன் சொல்லிக்க்கொடுக்கும் எதுவுமே புரியாத அவள் ,அழுது கொண்டே சொன்ன வார்த்தைகள் தான் அவள் கண்ணீரை துடைக்க வைத்து...காதல் கசிய ஆரம்பித்தது அவனை அறியாமலே.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
      அவளை பற்றிய நினைவுகளை களைத்துவிட்டு, தன் பரீட்சை விடைத்தாளினை பார்த்தான்.எப்போதும் அச்சடித்தது போல் இருந்த எழுத்து அப்பொழுது கிறுக்கலாய் இருந்தது. கேள்வித்தாளை ஒரு ஏளனப் பார்வையில் பார்த்து சிரித்து கொண்டு, ஒரு முடிவுக்கு வந்து விட்டான். அதற்கு மேல் அவன் ஒரு பக்கத்திற்கு கூட எழுதவில்லை.
தாமரையுடன் சேர்ந்து எந்த டுடோரியல் காலேஜுக்கு செல்லலாம் என்று யோசித்துக் கொண்டே, பரீட்சை ஹாலில் இருந்து வெளியேறினான், தான் பெயில் தான் என்று தீர்மானித்துக் கொண்டே.

    கடைசி மணி அடிக்கும் வரை எழுதும் மனோஜ்ஜா? இன்று ஒன்றரை மணிநேரத்தில் எழுந்து செல்வது என்றது போல் எல்லோரும் அவனை பார்க்க, எதையும் சட்டை செய்யாமல், பள்ளியிலிருந்து வெளியேறினான்.வாசலில் ஒருவன் கையில் சில காகித நோட்டிசுடன் இவனுக்காகவே காத்திருந்தது போல் அவனிடம் நீட்ட, மனோஜ் சந்தோசமாக பெற்றுக் கொண்டான்.

     வெற்றி - ஆல் பாஸ் டுட்டோரியல் என்று கொட்டை எழுத்துடன், ஒரு மொக்கை வாத்தியார் கை உயர்த்தி வாழ்த்து சொன்னார். அதை அவன் பார்க்கும் போது அவ்வளவு சந்தோசப் பட்டான். ரிசல்ட் வந்தவுடன், "நேராக போய் அந்தக் கல்லூரியில் ரெண்டு பெரும் சேர்ந்துவிடனும், இனி ஒரு வருசத்துக்கு என்னையும் தாமரையையும் யாராலும் பிரிக்க முடியாது "என்று சந்தோசமாக அவளுக்கு காத்துக் கொண்டிருந்தான்.

          தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த தாமாரை, மிகவும் வாடிய தாமரையாக இருந்தாள். அவன் கையிலே இருந்த நோட்டீசை பார்த்தவுடன், கெட்ட சகுனமாய் நினைத்து,அவனை முறைத்து பார்த்தாள். "தேர்வு எப்படி எழுதினாய் ?" என்று நகைத்துக் கொண்டே கேட்க , அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

                           அவன் யோசித்தான் ,  அவளுக்காகத் தான் வேண்டுமென்றே எழுதாமல் விட்டேன் என்று சொன்னால், அவள் அதை நினைத்து வருந்துவாள் . அதுவே, ரிசல்ட் வந்ததும் -அவன் பெயில் ஆனா காரணத்தினை கேட்கும் போது,"உனக்காகவே நான் இந்த ஒரு வருடம் கடன் வாங்கிக் கொண்டேன்" என்று சொன்னால் - அவள் தன காதலை புரிந்து கொள்வாள், அதற்குப் பின் அவர்களை இனி  யாராலும் பிரிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டான்.

               தன் வீட்டிற்கு சென்று தான் நன்றாக எழுதி இருப்பதாய் பொய் சொல்லி மகிழ்ந்தான். ஊரில் தன் நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்தான், அப்பொழுது தாமரையின் வீட்டிற்குச் சென்று அவளைப் பார்ப்பான்.தேர்வு முடிவை நினைத்து அவள் வருந்தும் போதெல்லாம், அவளுக்காக தன செய்திருக்கும் தியாகத்தினை நினைத்துப் பெருமை கொள்வான்.

               நாட்கள், அவன் விளையாடிய மண்ணின் புழுதி போல்,கரைந்து,மறைந்தது வெகு வேகமாக. அடுத்த நாள் தேர்வு முடிவு, எவ்வளவு பெரிய மைனரும் கூட அடுத்த நாள் ரிசல்ட் என்றால் கோயிலுக்கு சென்று ,அர்ச்சனை செய்து, வீட்டிலே அடைந்துக் கிடந்து, பெற்றோரின் பேச்சைக் கேட்டு நல்ல பிள்ளையாய் நடந்து கொள்வான்,தாமரையும் கூட அப்படித்தான். ஆனால், மனோஜ் - கையில் ஒரு பாட்டு புத்தகத்தினை வைத்து பாட்டு படித்து கொண்டிருந்தான்.

         "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ......", இவன் குரலும் அப்படிதான் கொஞ்சம் இனிமையான இளையராஜா போல இருக்கும். இவன் பாடிக் கொண்டிருப்பதை ஆச்சரியமாய் அவன் அக்கா பார்த்து வியந்தாள். தனக்கெல்லாம் அடுத்த நாள் ரிசல்ட் என்றபோது காய்ச்சலே வந்ததை நினைத்துப் பார்த்தாள். மனோஜுக்கு நாளை ஒரு சைக்கிள் வாங்கி வந்து பரிசாக கொடுக்க வேண்டும் என்று தன் வீட்டுப் பாத்திரங்களிலும், அரிசி டப்பா போன்றவைகளிலும் சேர்த்து வைத்தப் பணத்தை தன் தந்தைக்கு அவள் தாய் கொடுத்ததையும் எண்ணி, ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு மனோஜ்ஜை பார்த்தாள்.

         தன் வாழ்க்கையில் முக்கியமான கனவுக்கென ஏற்பாடுகளை பண்ணிக் கொண்டே உறங்க ஆரம்பித்தான்.

                   கனவில் - தானும் தாமரையும் டுட்டோரியல் காலேஜுக்குப் போக தன் புது சைக்கிளை எடுத்து நேராக அவள் வீட்டுக்கு சென்றான், இப்பொழுது அவன் டீசர்ட்டும்,ஜீன்சும் அணிந்திருந்தான்,கையிலே ஒரு ஸ்போர்ட்ஸ் வாட்ச் ..இல்லை இல்லை அது இப்போது ஒரு கோல்ட் வாட்சாகியது. அவள் வீட்டிற்கு சென்று, மணி அடித்தவுடன் சிகப்பு சுடிதார் அணிந்த தேவதையாய் வந்தாள். அவள் வீட்டினிலும் ஒரு லேடீஸ் bird சைக்கிள் இருந்தது. ஆனால், அவளோ அவன் சைக்கிளில் முன்புறம் அமர்ந்தாள். டுட்டோரியல் காலேஜுக்கு பயணம் புறப்பட்டது, இளஞ்சிவப்பு வெயில் - காலை நேர பனியைக் கரைக்கும் முக்கியப் பணியில் இருந்தது, சாலைக்கு மிக அருகிலே ஒரு ஓடை சலசலத்துக்  கொண்டே இருக்க, அதில் கூட்டம் கூடமாய் நீந்தும் வாத்துகளும் , ஆங்காங்கே நிற்கும் பறவைகளும், சைக்கிளில் போகும் தங்களைக் கூர்ந்து கவனிப்பதை உணர்ந்து கொண்ட மனோஜ். சைக்கிளை மிக  வேகமாகச்  செலுத்தினான். குன்றின் மீது வளைந்து வளைந்து செல்லும் பாதை காரணமாக அவனுக்கு நிரம்ப மூச்சு வாங்க, அவள் தன் மெல்லிய கையினால் அவன் நெஞ்சினில் கை வைத்தாள்.. உடனே மனோஜ்ஜின் வேகம் அதிகரித்தது. ஒரு வழியாக அந்த டுடோரியல் காலேஜ்ஜில் நுழைந்து  , இருவரும் ஜோடியாக அந்த வகுப்பறைக்குச் செல்ல, அங்கே அவன் கணித வாத்தியார் பிரம்புடன் காத்திருந்தார் ,"ரெண்டு பேரும் ஜோடி போட்டு ஊர் சுத்துறதுக்கு தான் என் பாடத்துல பெயிலாயிட்டின்களா ?? உருப்புடாத கழுதைகளா !! " , என்று அடிக்க வந்தார்; அடித்தார்; அவன் கனவினையும் களைத்தார்.

  
               பின்னர் அவனுக்கு தூக்கம் வரவில்லை, இருப்பினும் தன் மனைவி ஆகப்போகும் -தாமரைக்கு என்ன என்னப் பரிசுகள் எல்லாம் கொடுக்கலாம் என்று பட்டியலிட்டான். சுவற்றில் இரவு மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த பச்சை விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில்.அவன் பெற்றோரின் திருமண நிழற்படத்தின்  போட்டோவில் தாமரையும், தானும் நிற்பதாக பார்த்துக் கொண்டே தூங்கிப் போனான்.




           தனது ரிசல்ட் இப்படி தான் இருக்கும் என்று தெரிந்தாலும், தெரியாமல் பாஸ் போட்டு விட்டால் என்ன செய்வது என்றும் யோசித்துக் கொண்டிருந்தான். மாலை, அவன் வீட்டிற்குள் ஏக களேபரம்," இந்த படுபாவிங்க நல்லா இருக்கமாட்டாங்க, யார் கண்ணு பட்டதோ எம் பயனுக்கு "...என்று ஒரு கோர்வையே இல்லாமல் புலம்பிக்க் கொண்டிருந்தார்கள். ஏதாவது பிரிண்டிங் கோளாரா இருக்கும் என்று கூட யோசித்துக் கொண்டிருந்தார்கள். மனோஜ் பெயில் ஆனதை, அவர்கள் வீட்டு நாய் கூட நம்பாமல் தட்டில் வைத்திருக்கும் சோற்றை உண்ணாது கவலையில் படுத்திருந்தது. என்னதான் காதலாய் இருந்தாலும் , தன் அம்மாவும் , அப்பாவும் துடித்துப் போவதைப் பார்த்து மிகவும் துவண்டு போனான் மனோஜ். நாம் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தினாலும் , அடுத்த நொடியே தாமரை அவன் கண் முன்னே தோன்றி மறைந்தாள், ஒரு வழியாக அன்றைய பாடு அத்துடன் முடிந்தது.. மிகவும் சோகத்தில் தூங்குவதுபோல் தூங்கிப் போனான்.


         தேர்வு முடிவில் ஏமாற்றமடைந்திருக்கும் தன் மகன் எதுவும் தவறாக செய்து கொள்ளக் கூடாது என்று அடிக்கடி அவன் அறைக்கு சென்று பார்த்து வந்தாள் அவன் தாய். யாரும் அவனை ஏன் என்று கேட்கவோ கிண்டல் செய்யவோ கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார் அவன் தந்தை. தன் தம்பி பெயிலாய் போனதை நினைத்து அந்த குடும்பத்திலேயே மிகவும் அழுதவள் அவன் அக்கா தான். ஆண் பிள்ளை, ஆண் பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்தாலும், பொறுப்பை வளர்ந்த தன் தம்பிக்கு இந்த நிலை நேர்ந்துவிட்டதே என்று தன் குலசாமியை கடிந்து கொண்டிருந்தாள். மனோஜ் மட்டும் நிம்மதியாய் தன் கனவில் தாமரையின் கூந்தலுக்கு மல்லிகைச் சூடிக் கொண்டிருந்தான்.

   அடுத்த நாள் காலை,  வேகமாக எழுந்து , குளித்து, சிற்றுண்டியை முடித்துவிட்டு டுடோரியல் காலேஜ் செல்ல தன் அனுமதி வாங்கி, கிளம்பும்   பொழுது தன் ராசிபலனைப்  பார்த்தான் 
  ராசி:கடகம் --:பலன்: பரிசு 
                                              ----என்று இருந்தது.. தாமரையின் வீடு நோக்கி தன் ஓட்டை சைக்கிளை வெகு விரைவாக செலுத்தினான். 'தாமரையின் அம்மாவிடம் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?, இன்றே அவளை டோடோரியால் காலேஜுக்கு அழைத்து செல்லலாமா?'  என்று யோசித்தவாறே அவள் வீட்டினுள் நுழைந்தான். 

            "தன்னைப் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்பவன், வெகு சீக்கிரம் முட்டாளாக உணர்வான்"  -தத்துவம் , 
இந்த வாழ்க்கையில் பேருண்மை பொதிந்த தத்துவத்தை யாரும் சொல்லவில்லை, நம் மனோஜ் தான் உணர்ந்தான். தான் ஒரு முட்டாள் என்பதை. தாமரை பாஸ், மனோஜ் பெயில் .... அவள் கொடுத்த இனிப்பு மிகவும் கசந்தது, ஏனோ அவள் பெண் என்றும் பார்க்காமல், அவள் முன்பு கண்ணீர் சிந்தினான். அவளின் தாய் அவனை ஆறுதல்படுத்துவதாக வெறுப்பேற்றினாள். விருட்டென்று தன் வீடு திரும்பிய மனோஜ் முதலில் கலங்காமல் தான் இருந்தான், ஆனால், பெயிலானாலும் பரவாயில்லை, தன் மகன் தளர்ந்து போகக்கூடாது என்று தன் தந்தை வாங்கி வந்த, கவிழும் வந்த அதே புதிய சைக்கிள் தன் வீட்டில் இருப்பதைக் கண்டு ஏங்கி ஏங்கி அழுதான்.

  ஒரே பேருந்தில் தான் டுடோரியல் காலேஜு போவதையும் , அவள் கல்லூரி செல்வதையும்  பார்த்த அவன், தன்னை எத்தனை நாட்கள் தான் திட்டிக் கொண்டிருப்பான் ?? வரும் அக்டோபர் 31 -ம் தேதி வரை ??  ஏனென்றால் அன்று இவனுக்கு திருமணம் பெண்ணின் பெயர் "செந்தாமரை ".


நன்றியுடன்
கரிகாலன் 

        



6 கருத்துகள்:

  1. HI,

    I m been following ur blog couple of few months. All the stories are really making excellent. But i can assure it's not only a story firstafall.

    Because it's making everybody to feel their past.

    So, could pls get complete the story asap with no more suspense if u don't mind.

    Awaiting for the second episode.

    பதிலளிநீக்கு
  2. @MANOJ : tHANK YOU VERY MUCH MACHI

    @maya : VERY HAPPY TO SEE YOUR COMMENTS

    I WILL COMPLETE IT SOON

    கலை என்பது ரசனையின் எதிர்வினை தான்.
    ரசனை இன்றி கவி இல்லை , இசை இல்லை , காவியம் இல்லை, சுவை இல்லை , மனம் இல்லை

    பதிலளிநீக்கு