வியாழன், 28 ஜனவரி, 2016

அது - 02

இன்று : 

ஜாய்ஸ்டிக்கில் பொருத்தப்பட்டிருக்கும் நேவிகேட்டரில் இருந்து சிலந்தி வலை பின்னத் துவங்கியது.


இதுவரை:


ஹார்ட்கோர் GAMERஆக அவள் பிரிவினை சகித்துக் கொள்ள இயலாமல் தன்னை மாற்றிக் கொண்ட பின், அவனது உலகத்தில் ஒரு PARADIGM SHIFT இருந்தது. அவனது மெய்மையின் தளமும் வீடியோ கேமும் ஒன்றுக்கொன்று இடம் பெயர்ந்தது. சம்பள தினத்தன்றே ஒரு பெரும்பகுதியை புதுப்புது கேம்கள் வாங்க செலவிட ஆரம்பித்தான். பீ.எஸ்கள் பல முறை மோதித் தெறித்த தடம் இன்னும் சுவற்றில் இருக்கின்றது. ஆனால் புதிய பீ.எஸ்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. எல்லாவற்றிலும் அவன் தோற்றிடவே விரும்பினான். ஆனால் அவனால் தோற்க முடியவில்லை. அவன் அலுவலக நண்பர்களிடம் தன் நிலையைச் சொன்ன போது யாரும் அவனைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.


அவன் மெய்மையை மாற்றிவிட்ட அவள் இல்லாத உலகமாக அவ்விளையாட்டுகள் அவனுக்கு நிம்மதியளித்தன, கடமைகளால் தோய்த்தெடுக்கப்பட்டு எண்ணெயில் பொறித்து எடுக்கப்பட்ட எண்ணெய் வடியும் பக்குவம் தவறிய பஜ்ஜியின் உடல் தான் அவனுடையது. களைத்திருக்கும் அவனை, வீடியோ கேம் - அவன் உடலை பிளிந்து எடுத்துச் சக்கையாக்கிப் போடும் போது பக்கத்துவீட்டில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பக்கத்து வீட்டுப் பையன் ஸ்கூலுக்குப் போகும் ஆட்டோ வரும் வரை தான் தூக்கம், அவன் நிம்மதி எல்லாமுமே. அன்றாடங்களில் நகரும் எல்லாப் பொருண்மையிலும் அவன் காணும் அவளுடைய கைரேகைகளின் படிமம் இவனை அலைகளிக்கச் செய்கின்றன. தற்கொலை தான் தப்பித்தலின் வழி என்று செய்திகளும், ஆன்மீகம் தான் ஒரே மார்கம் என்று விளம்பரங்களும் பரவிக் கிடக்கும் நகரத்தில் தானும் கோடியில் ஒரு கரப்பான்பூச்சி என்கிற அறிவில் தனக்குப் பணியில் கிடைக்கின்ற அங்கீகாரங்கள் ஒரு பொருட்டாகப் படவில்லை.

கேம்களில் தன் கட்டுப்பாட்டை எப்படி, எப்போது இழந்தான் என்று அவனாலேயே உறுதியாகச் சொல்ல முடியாது. கட்டுப்பாடை இழந்தான் என்றால் அவனது தோல்விகள் அல்ல, அவனது வெற்றியை. தன் நிஜ உலகத்தில் தான் வேண்டுவதும் கிடைப்பதும் வெவ்வேறாக இருக்க, தன் மாய உலகத்தில் தன் இச்சைகளுக்கு மாறான தோல்விகள் பெறுவதே அவனது இலக்காக மாறியது. அவனால் விபத்துகளை ஏற்படுத்த முடியவில்லை, குறி தவறிச் சுட முடியவில்லை, கால் இடறிக் கீழே விழமுடியவில்லை, எல்லா லெவல்களையும் கடந்து சென்று கொண்டேயிருந்தான். இதற்கு மாறான நிஜ உலகிலோ அதற்கு நேர்மாறான வாழ்க்கை. அவன் இயக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பயம் கொண்டிருந்தான், அவன் டூவிலர் மெக்கானிக்கின் காரைப் பற்களையே மனநல மருத்துவரும் கொண்டிருந்ததால் அவர்கள் மீது நம்பிக்கை இழந்திருந்தான். தன் அலுவலகத்தில் ஒரு சேச்சி “ஓஜோ” போர்டுகள் பற்றி அறிமுகம் செய்திருந்தாள். அவளைப் பிரிந்த கணத்திலிருந்து யாருடைய பேச்சினையும் கேளாத UNIFORM அணிந்தவன் அன்று மாற்று ஆடை அணிந்திருந்தான். ஒவ்வொரு மாதமும் சந்தைக்கு வரும் பெரும்பாலான கேம்களின் எண்ணிக்கையால், அறையிலேயே சுற்றிக் கொண்டிருந்த டிஜிட்டல் அக்ரலிக் வாசனையிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆவிகள் அவனுக்கு ஆறுதலாக அமையலாம் என்று நம்பினான். 


“சேச்சியும் ஆறுதலாக இருக்கலாம்” என்று ஒரு குரல் கேட்டது… அந்த குரல் போலிபோனிக்கா !! மோனோடோனா என்று அவதானிக்க முடியவில்லை. அதே சமயம், அந்தக் குரல் எதன் எதிரொலி என்று யோசிக்க வாய்ப்பளித்தது. தனது மனதுக்கும், அறிவுக்கும் உள்ளேயிருக்கின்ற உயிர்த்தன்மையோடு ஆழப் புதைந்திருக்கும் செல்களின் செய்தியாக தனக்குள்ளே கேட்ட குரல் அது.. 

மீண்டும் அது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக