சனி, 7 நவம்பர், 2015

யாருக்கான தீபாவளியைக் கொண்டாடுகிறோம் / பஜ்ஜி - சொஜ்ஜி 87






இப்படி மழையோடு தீபாவளியைப் பார்த்துப் பல வருடங்களாகி விட்டது அல்லவா? நாம் பண்ணும் அத்தனை அட்டுழியங்களையும் ஏற்றுக் கொண்டும், பொறுத்துக் கொண்டும் பருவத்தை மீண்டும் தன் சரியான கட்டங்களில் இந்த வருடம் கொண்டு சேர்த்திருக்கின்றது இயற்கை. அதைப் பயன்படுத்தத் தான் நாம் தகுதியற்று இருக்கிறோம். SEZ, SMART CITY, குவாரி, REAL ESTATE தொழில் முனைவோர்களின் கையில் இருக்கிறது.


மழை பெய்தால் மட்டும் என்ன? இயற்கை கருணை மிக்கது தான். நாம் தான் மழை பெய்யாத இந்த மூன்று வருடங்களுக்குள் பல ஏரிகளையும் குளத்தையும் விழுங்கிவிட்டோம். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை உயிர்ப்போடு இருந்த வேடந்தாங்கல் ஏரியின் கதை இன்று கவலைக்கிடம். கடந்த மூன்று வருடமாக ஒவ்வொரு சீஸனும் நானும் கண்ணதாசனும் சென்று வருகையில் ஏமாற்றத்துடன் தான் திரும்பினோம். வேடந்தாங்கலில் தேநீர் கடை வைத்திருக்கும் ஒருவர் பொங்கி வரும் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி அந்த ஏரிக்கு தண்ணீர் ஆதாரமாக இருக்கும் பல வாய்க்கால்கள் பற்றி அவர் பட்டியலிட்டார். முதலில் தூர் வாராமல் அவற்றை விட்டுவிடுவது, அப்புறம் அவ்விடத்தை ரியல் எஸ்டேட் வியாதிகளின் கைக்குள் சிக்குகின்றன. வெகு சீக்கிரமே அந்த தேநீர் கடை முதலாளி சென்னையின் மாநகரத்தெருக்களில் பாணிபூரி விற்றுக் கொண்டிருக்கலாம். கட்டட வேலைக்குச் சென்றால் அவரை அடையாளம் காண்பது கடினம்.

சென்னையின் பெருங்குடி சதுப்பு நிலம், வேகமாக வளர்ந்து வரும் தேசமென்று பீற்றிக் கொள்ளும் அத்தனை தேசிய/இனவாத குடிமகன்களுக்கும் அவமானப் படவேண்டிய விஷயம். தகவல் தொழில்நுட்பத்துறையின் அதிவேக வளர்ச்சி எனும் வீக்கத்திற்காக கொடுத்த மிகப்பெரிய விலை. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக போடப்பட்ட ரிங் ரோடுகள் உருவாக்கிய எதிர்விளைவுகள் மிகவும் நாசகரமானது. வேளச்சேரி தாம்பரம் சாலையிலிருந்து பழைய மகாபலிபுர சாலைக்கு குறுக்காகச் செல்லும் சாலையில் செல்லும் போது அதை உணர முடியும். சாலையில் அடிபட்டுக் கிடந்த ஒரு ஃபெலிக்கான் பறவையை ஆயிரக்கணக்கான வாகனங்கள் எளிதாகக் கடந்து செல்கின்றன. அந்தச் சாலையில் ஒரு VIEW POINT ஒன்று வைத்திருக்கும் அபத்தத்தை ரசித்து சிரிக்க முடியவில்லை. தினம் தினம் வளர்ந்து கொண்டிருக்கும் குப்பை மேடு சதுப்பு நிலத்தின் பெரும்பான்மையை தனதாக்கிக் கொண்டது. அங்கிருந்து பல்லாவரம் செல்லும் சாலையின் மறுபுறம் உள்ள குளத்தின் அருகே ஒரு 9 மாடிக் கட்டடம் ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது. இன்னும் எத்தனை அடுக்குமாடிக் கட்டட விபத்துகளைச் சந்திக்க இருக்கிறோமோ தெரியவில்லை.


திரும்பவும் கிடைக்கப் போகாத காட்சி -குத்தம்பாக்கம்
ராஜேஸ்வரி இஞ்சினியரிங் காலேஜ் கட்டப்பட்டிருக்கும் ஒரு நீர்த்தேக்கம் கூட இப்படித்தான், ஏரிக்கு நீரைக் கொண்டு வரும் வாய்க்கால்களிடமிருந்து துண்டிக்கப்பட்டிருக்கின்றது. மதகுகளைச் சுற்றி ரியல் எஸ்டேட் போர்டுகள் அந்த நீர்த்தேக்கத்தை மறைத்தபடி இருக்கின்றன, ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள குத்தம்பாக்கம் எனும் கிராமம், தன்னிறைவு பெற்ற கிராமமாக பிபிசி தொலைக்காட்சி வரை ஆவனப்படுத்தப்பட்ட கிராமம் ( நம்மில் பலபேருக்குத் தெரியாத மாதிரி கிராமம்). தொழிற்சாலைகளின் வரவுகள் அந்த கிராமத்தினை இன்னும் சில ஆண்டுகளில் மாற்றிவிடும். அங்கிருக்கும் விவசாயிகளுக்கு இருந்த பாசன வசதி வளர்ச்சி எனும் பெயரில் பிடுங்கப்பட்டு விட்டது.

நான் வசிக்கும் பகுதியில் இருக்கும் போரூர் ஏரி இதில் ஒரு மிகச்சிறந்த உதாரணம், மக்களின் கண்களுக்கு முன்னரே அந்த ஏரி சூறையாடப்பட்டிருக்கிறது. 

இத்தனை மழைக்குப் பின்னரும் அதில் சொல்லிக்கொள்ளும்படி நீரில்லை.  “மே 17, நாம் தமிழர்கள்” போன்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கையிலெடுத்தப் போராட்டம். உள்ளூர் மக்களின் ஆதரவைக் கூடப் பெறவில்லை. கூடிய சீக்கிரத்தில், ராமச்சந்திரா மருத்துவமனை வாகனங்களை நிறுத்துமிடம் என்கிற போர்டினைப் பார்க்கும் அவலம் ஏற்படலாம். இல்லை இலவச சிகிச்சை என்று சொல்லப்படும் பொதுநல என்.ஜீ.ஓ மூடிமறைப்பு பணிகள் நடைபெறும் இடமாக மாற்றப்படலாம். நான் வசிக்கும் வீட்டைச் சுற்றி மட்டும் 50 பேக்கெஜ்ட் வாட்டர் நிறுவனங்கள் இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும் என்பது சுவாரஸ்யமும் அபத்தமும் கலந்த ஒரு ஆவல் எனக்குள்.

இந்த மழையை , தீபாவளியை எப்படிக் கொண்டாடுவது.. மேலும் மேலும் மாசுபடுத்திக் கொண்டாடுவதா..?


  • மரங்களை வெட்டுவதில் இருந்து காப்பாற்றப் போகும் மீட்பராய் உள்ளே நுழைந்த நெகிழி எனும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதனை அசுரனாக மாற்றியிருக்கிறது. நெகிழியைக் கடிந்து கொண்டு என்னப் பயன்?



  • ஆற்று மணலைச் சுரண்டி விட்டு ஊற்றுத் தண்ணீருக்கும் வழியற்ற நிலையில் எந்த உரிமையுடன் அண்டை மாநிலங்களிடமிருந்து தண்ணீர் பெற முடியும்?


  • பருவம் பொய்த்த மழை மீண்டும் பருவமழையாகப் பெய்துக்கொண்டிருக்கிறது… டெங்கு பயத்தில் ஒதுங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களாகவாது நாம் இருந்துவிட்டுப் போகலாம், மழையில் நனைந்து, மழையைக் கொண்டாடி கவிதை எழுதும் என்னைப் போன்ற முட்டாள்கள் வாழும் தேசத்தில். இந்த உலகம் யாருக்கான உலகம்? இந்த தேசம்?இந்த மொழி? இயற்கை வளங்கள், இந்தப் பண்டிகைகள் யாருக்கானது?? என்ற கேள்வியே அபத்தமானதோ என்று என்னைப் பகடி செய்கிறது

தனது கார்களில் இன்னும் சன் கட்ரோல் பிலிமை எடுக்க அவசியமில்லை என்று கருப்புக் கண்ணாடியோடே காரில் சுற்றிக் கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களுக்கான உலகம். அவர்கள் செய்யும் தொழிலுக்கான, அரசியலுக்கான உலகம். இந்த மழை, மண், காற்று எல்லாமுமே அவர்களுக்கானது?  இந்த தீபாவளியும் அவர்களுக்கானது.




-
ஜீவ கரிகாலன்




(ஏதாவது NOSTALGIC பக்கமாகத் தான் இதை எழுதலாமென்று தான் நினைத்திருந்தேன் மன்னிக்க)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக