செவ்வாய், 8 செப்டம்பர், 2015

பஜ்ஜி - சொஜ்ஜி 83 / நேர்கோட்டில் இருக்கும் இரண்டு வருடத்துக் குழப்பங்கள்



ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு நீட்டித்த பயணத்தில் லீனியர், நான் லீனியர் வடிவமைப்பைப் பற்றி பேசுவதால் சுவாரஸ்யமற்ற விவாதமாகத்தான் போய்விடுமோ என்று மனதில் இருந்த அச்சம், இருந்த தடயமே இல்லாமல் போனதுக்கு காரணம் கிருஷ்ணப் பிரபுவின் பதிலிலிருந்து கிடைத்த சந்தோஷம், பின்னர் சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டாடும் எங்களின் பழக்க தோஷத்தை ப்ளூடூத் வழியாக ஸ்பீக்கரில் போட்டு அனுபவித்துக் கொண்டிருந்தோம். தன்னை விட்டுச் சென்ற கி.பி மற்றும் ஜீயோடு என்னையும் அவன் திட்ட வேண்டியிருந்தது என்ன மாதிரியான DESIGN என்கிற கேள்விக்கு அடிகோலியது. ஏனென்றால் சிவப்புக் கார் தோழர்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் என்று ஜீ செய்த சத்தியம் தான். அதுவும் அச்சத்தியமும் மேடையிலேயே உணர்ச்சிவயப்பட்டு பேசிய தோழரின் நாமத்தில் என்பதால் நானும் நம்பியிருந்தேன், அவர் என்னை அழைக்கப்போவதில்லை அந்த மர்மப் பயணத்திலிருந்து என. வேடியப்பன் அப்பயணத்தில் இல்லாது போனது பல ரகஸியங்களைத் தவற விட்ட உளவுத்துறையின் கதியாக ஆனது.

இடைவிடாமல் இந்த ஒரு மாதத்திற்குள் தனித்தனியாக, வேறு வேறு காம்பினேஷன்களில், எல்லோருமாக என்று அந்த மனிதனை ஒரு மாதமாக நாங்கள் பாடாய்ப் படுத்தியிருந்தோம். தூக்கத்தைக் கெடுப்பதோடு, நீண்ட தூரப்பிரயாணங்கள், வகைவகையான உணவுகள் என இவற்றோடு திரவமாக திரவியமும் கரைந்து கொண்டிருப்பதும் ஒரு புறம். ஒரு சமயம் விமர்சங்களை மெய்யாக்கும் குழப்பங்களோடு அதே தயக்கத்தில் நிற்கும் போதெல்லாம், கலைக்கான கலை மற்றும் மக்களுக்கான கலை என வேறு நோக்கில் விவாதமாகியிருக்கும். கலைஞனின் வாழ்வு சமகாலச் சூழலில் எத்தனை முக்கியமானது என்று ஒரு மையத்தை காண்பித்தபடி, எம்மை யோசிக்கத் தூண்டிய கற்பிதங்களால் ஆன வாழ்வு எத்தனை அற்பமானதாக ஒரு அளவுகோலை வைத்திருக்கிறது என்கிற கேள்விதான் நாங்கள் திருப்பதியில் இருக்கும் பொழுது முடிவுக்கு வந்த விவாதத்துளி.

ஏஸியின் குளிர்மையால் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் துளிகளை வைப்பரால் துடைக்காமலேயே சாலையில் என்ன தெரிகிறது என்று கேட்டதால்,  என் மனம் ஒழுங்கு என்று நினைத்துக் கொண்ட கற்பிதத்தை நம்பி சாலையை வர்ணிக்கிறேன். சாலை, விளக்குக் கம்பம், ஒளி, பச்சை வண்ண போர்டுகள், கூடவே வரும் மெரிடியன் என்று என்னை நானே மிகவும் நேர்த்தியானவனாகவே நினைத்துக் கொள்ள முடிந்தது. இப்படித் தான் நான் தினமும் எழுதுபவனாக, தினமும் வாசிப்பவனாக, அசலானவனாக என்னைக் கற்பிதம் செய்து கொள்கின்றேனோ??.

சலானவை என்று நான் நினைப்பவைகள் எப்படி இருக்கிறது? யாரோ ஒருத்தி எங்கிருந்தோ எழுதும் கவிதைகள் 1400 கிலோ மீட்டர் பயணம் செய்து எனக்காக எழுதப்பட்ட கவிதையாக உணரும் வேளை, நான் அந்தக் கலையரசியின் மீட்டும் விரல்களைத் தொட்டுப் பார்த்த உணர்வாக அவள் கவிதைகளை சிலாகித்த போதோ அல்லது சமணப்படுக்கையில் நமச்சிவாய என்று சொல்லியதாலோ என்னவோ இறங்கும் வழி தெரியாது நானும் யுவபாரதியும் திக்குத்தெரியாது நிற்க எழுந்து நின்ற யானையாக இன்னும் உயரமானது குன்று அப்படியே புத்தகக் கண்காட்சிக்கு சென்று பாண்டியர்களை கபளீகரம் செய்துவிடுவோமா என்றேன். LAW OF DIMINISHING MARGINAL UTILITY எனும் கோட்பாடு உனக்குப் பொருந்தவே பொருந்தாதோ என்று எனக்குள் சொல்லியபடி உண்ட, அத்தனை கவளச் சோறுக்குப் பின்னும் நன்னாரி சர்பத் மிச்சமிருக்கிறது என்கிற கணம், அதே நிறத்தில் குங்குமம் வைத்து ஆசிர்வாதித்த மணியின் தாயார் செய்த ஆசிர்வாதம் தான் என்று முழு சர்பத்தையும் குடித்தேன். இது நேர்மையான பதிவு தானே தோழா!!

ஒரு நாளில் ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் கேமிராமேனாக மாறிய க்ருஷ்ணப் பிரபுவோடு நான் இத்தனை நெருக்கமானேன் என்பது என்னாலேயே நம்ப முடியாமல் இருக்கும் ஆச்சரியங்களில் ஒன்று, “ஜீவ கரிகாலனுக்கு இப்படியொரு நண்பரா ஆச்சரியமாக இருக்கிறதே”, “இந்த மனுஷன் எத்தனை நாளாய் எங்கிருந்தான்” என்று என்னை நோக்கியும் ஆச்சரியங்கள் இருக்கத்தான் செய்கிறது, ஆச்சரியத்துக்குக் காரணம் பாலசுப்ரமணியம் பொன்ராஜ் அவரோடு குறைந்தபட்சம் ஒரு பயணமாவது திட்டமிட வேண்டும் என்று காவு கேட்கும் முனியாண்டியாக மாறிய சமணத் துறவினை வணங்கி விட்டுத்தான் வந்திருக்கிறேன்.

வா.மணிகண்டனைத் தவிர வேறெந்தக் காரணமும் பிரதானமானதாக இல்லை நான் மூன்று வருடங்களாகப் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதற்கு, அங்கேயிருந்த பத்து புத்தகங்களையும் ஒரே விலை கொடுத்துவாங்கத் துணிந்து அதற்கு மேல் ஸ்டாக் இல்லாததால், ஒன்று மட்டும் வாங்கியதாய் சொல்லும் வாசகர்கள் உருவாகுவது எப்படி, தீவிர வாசிப்புக்கான தேவை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம், வாசிப்பு என்னும் பழக்கத்திற்கான முகாந்திரம் என்ன என்கிற நோக்கில் தான் என்னுடைய கவனம் குவிந்த வண்ணம் இருக்கின்றன என்று நான் நினைப்பது சரியா தவறா??

எப்படி திட்டமேயிடாமல் அற்புதமான தடாலடி விருந்து தயாராகிறது? சித்தரஞ்சன் பரவாயில்லை, பச்சை லைட்டு ஹோட்டல், கிழங்கு மாவில் செய்யப்படும் மிக்சர் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாத அளவுக்கு எங்கள் வாசிப்பும், எங்களை வாசிக்க வைத்தக் கல்வியின் தரமும் இருக்கும் நிலையை, யாரோட தவறாகச் சொல்ல முடியும். அரசியல் என்றால் என்ன ? என்று உங்களுக்குச் சொல்லத் தெரிந்தால் தான் COFFEE TABLE புத்தகங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுத முடியும் என்று உணர்ந்தேன்.

புத்தகங்களை மாற்றி மாற்றி அடுக்கும் போது, அரசியலும், வியாபாரமும், ஆன்மீகமும் தந்திரங்களாய் மாறிக் கொண்டிருப்பதாய் நான் எண்ணிக் கொண்டிருந்த வேளை, கை குவித்து காதுகளைச் சுருட்டிக் கேட்டது ஓசையா, மந்திரமா என்று நான் அறியேன். ஆனால் நேர்த்தியாக 630 என்கிற எண்ணைத் தேடிக் கொண்டு நீண்டு செல்லும் பாம்பு, சைரன் விளக்கொளியில் ஸ்தம்பித்த சர்பத்தின் நிலையல்ல, “WHY NOT” என்று என்னைப் பார்த்துக் கேட்ட EROTIC TANKன் சர்ப்பம். அந்த சர்ப்பம் தீண்டி நேற்றோடு இரண்டு வருடம் ஆகிவிட்டது. சர்பத்தை ஈஷாவஸ்ய உபநிடதம் கேட்காமலேயே கேட்டவர்கள் போலானவர்கள், தங்கள் கணையாழியில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தச் சர்ப்பம் – என்னைக் கணையாழியில்...

நான் லீனியரோ, லீனியரோ – என் மீது நம்பிக்கை வைத்திருந்தும் நான் பொறுமையாய் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கக் கூடும், நான் சில நூறுகளைச் சொல்லக்கூடும், சில பத்து காரணங்களை அவர் நம்பக் கூடும். ஆனால் அந்த ஒற்றை உண்மையான காரணம் எனக்கே தெரியாதது என்று அவர் தெரிந்து வைத்திருப்பார் என்றும் நான் புரிந்து கொண்டதற்கு. “யார் ரஸிகன், யார் சிறந்த ரசிகன்” என்று கேட்டக் கேள்விக்கு சொன்ன பதிலும், பின்னர் ஒரு உதாரணமும், அந்தக் கோட்பாடும். ரசனையின் மறுபக்கம் எத்தனை ஆற்றலிருக்கிறது என்று உணரச்செய்வதைத் தான் அந்த ஒரு உண்மை காரணத்தை அவர் தெரிந்திருப்பார் என்று நம்புகிறேன்.

நான் மட்டுமே திட்டமிட்டப் பயணத்தில், திரும்பி வரும் போது மூவராக வந்ததைப் போலே, நான் சென்ற இரயில் பயணமே இந்த விவாதங்களின் முன்விளைவாகத் தோன்றியது என்ன Pattern. ஏனென்றால் அந்த இரயில் தான் என் ட்ரெங்குப் பெட்டி.

ஜீவ கரிகாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக